மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
தமிழ்நாட்டின் முதலீட்டாளர் ஆதரவு திமுக மாநில அரசாங்கம், சென்னையின் புறநகர்ப் பகுதியில் உள்ள உலகளாவிய தொழில்நுட்ப உற்பத்தியாளரான சாம்சங்கிற்குச் சொந்தமான, அங்கே இயங்கிவரும் ஆலையில் சுமார் 1,500 தொழிலாளர்களின் போர்க்குணமிக்க வேலைநிறுத்தத்தை நசுக்க முயல்கிறது.
அரசாங்கம்; செவ்வாய், புதன் கிழமைகளில் தொழிலாளர்களையும், அவர்கள் சமீபத்தில் ஸ்தாபித்த தொழிற்சங்கத்தையும் தாக்குவதற்கு பொலிஸை நிறுத்தியது. செவ்வாய்கிழமை மாலை, பொலிசார் தன்னிச்சையாகவும் சட்டவிரோதமாகவும் தொழிற்சங்கத்தில் உள்ள பத்து அலுவலக பணியாளர்களை கைது செய்தனர், அதற்கு முன் புதன்கிழமை ஒரு தனிச் சம்பவத்தில் வேலைநிறுத்தம் செய்த பல தொழிலாளர்களை கைது செய்தனர். தமிழ்நாடு மாநில அரசாங்கம் வேலை நிறுத்த நடவடிக்கையை விரைவாக முடிக்க வேண்டுமென இந்து மேலாதிக்க பாரதீய ஜனதா கட்சி அல்லது பிஜேபி தலைமையிலான இந்திய தேசிய அரசாங்கத்தின் கோரிக்கைகளை அடுத்து இந்த கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சென்னையிலிருந்து 45 கிமீ தொலைவில் உள்ள சாம்சங் இந்தியாவின் ஸ்ரீபெரும்புதூர் அசெம்பிளி ஆலையில் வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. கடந்த செப்டம்பர் 9ம் தேதி முதல் ஊதியம் இல்லாமல் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மிருகத்தனமான வேலை நிலைமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், தங்கள் நீண்ட கட்டாய வேலை நேரத்தைக் குறைக்க வேண்டும் மற்றும் அதிக ஊதியத்தை கோருகின்றனர். புதிதாக உருவாக்கப்பட்ட சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தின் (SIWU) அதிகாரப்பூர்வ பதிவு மற்றும் ஆலை நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோருகின்றனர். இந்த ஆண்டு ஜூலையில் தொழிலாளர்களால் உருவாக்கப்பட்ட SIWU ஆனது ஸ்ராலினிச CPM (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட்) தலைமையிலான தொழிற்சங்க கூட்டமைப்பான இந்திய தொழிற்சங்கங்களின் மையத்துடன் (CITU) இணைந்துள்ளது, இது வணிக சார்பு தி.மு.கவுக்கு நெருங்கிய கூட்டாளியாகவும் தேர்தல் பங்காளியாகவும் உள்ளது.
ஆலை நிர்வாகத்துடன் நெருங்கிய ஒத்துழைப்பில் செயல்படும் திமுக அரசாங்கம் SIWU பதிவை மறுத்துவிட்டது, ஆலை நிர்வாகம் அதன் ஆலையில் தொழிற்சங்கம் இருப்பதை கடுமையாக எதிர்க்கிறது. 45 நாட்களுக்குள் தொழிற்சங்கப் பதிவு செய்வதற்கான சட்டப்பூர்வ உரிமை இருந்தபோதிலும், தொழிலாளர்கள் தங்கள் சொந்த தொழிற்சங்கத்தை உருவாக்குவதற்கான அரசியலமைப்பு உரிமை இருந்தபோதிலும், இது இந்தியா முழுவதும் மேலும் தமிழ்நாட்டிலும் ஒருபோதும் அல்லது நடைமுறையில் செயல்படுத்தப்படவில்லை.
அப்பட்டமான சாம்சங் சார்பு திமுக அரசாங்கத்தின் வெளிப்படையான மிரட்டல் நடவடிக்கையில், செவ்வாய்க்கிழமை இரவு பத்து தொழிற்சங்க நிர்வாகிகளின் கதவுகளைத் தட்டி, அவர்களை 'தடுப்புக் காவலில்' எடுக்க போலீஸார் அனுப்பப்பட்டனர். வேலைநிறுத்தத்திற்கு தலைமை தாங்கும் சிஐடியு, மிகக் குறைந்த அளவிலான அமைதியான போராட்ட வடிவங்களில் கவனமாக ஒட்டிக்கொண்ட போதிலும் இந்த சட்டவிரோத கைதுகள் செய்யப்பட்டன. சாம்சங் ஆலை அமைந்துள்ள தொழில்துறை மண்டலத்தில் அமைந்துள்ள பல பன்னாட்டு நிறுவனங்களில் பிரதிநிதித்துவப்படுத்தும் CITU பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை வேண்டுமென்றே அணிதிரட்டாமல் சாம்சங் தொழிலாளர்களின் போராட்டத்தை முற்றிலும் தனிமைப்படுத்தியுள்ளது.
அக்டோபர் 8 அன்று நடந்த ஒரு தனி சம்பவத்தில், சாம்சங் தொழிலாளர்ளை ஏற்றிச் சென்ற ஒரு வேன் கவிழ்ந்தது, வேனில் இருந்த தொழிலாளர்கள் அதைத் தொடர்ந்து வேலைநிறுத்தத்திற்கு விரோதமான சக்திகளால் நாசப்படுத்தப்பட்டதாகக் கூறினர். ஐந்து தொழிலாளர்கள் காயமடைந்தனர். தொழிலாளர்களின் உதவிக்கு வருவதற்குப் பதிலாக, ஒரு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அவர்களைத் துன்புறுத்தினார், இதன் விளைவாக ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் அவரை தரையில் தள்ளினார்கள்.
இதைப் பயன்படுத்திக்கொண்ட போலீசார், 8 தொழிலாளர்களை கைது செய்து, 'அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுக்கும் வகையில் காயப்படுத்தியது' உள்ளிட்ட பல்வேறு கிரிமினல் குற்றங்களின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். SIWU தலைவரும் CITU தலைவருமான முத்துக்குமாரால் ஹேபியஸ் கார்பஸ் ரிட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர், காவல்துறை அனைத்து தொழிலாளர்களையும் விடுவித்தது, ஆனால் முதலில் உத்தரவாதப் பத்திரங்களை வழங்க அவர்களை கட்டாயப்படுத்தாமல் இல்லை. பொய் ஜோடிப்புகளின் கீழ் கைது செய்து தொழிலாளர்களின் பாதுகாப்பிற்கான உரிமையை கடுமையாக மீறியதற்காக காவல்துறையைக் கடுமையாகக் கண்டிப்பதற்குப் பதிலாக, சென்னை உயர்நீதிமன்றம் வெறுமனே வழக்கை முடித்து வைத்தது.
வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களின் அடையாளங்களைச் சரிபார்க்க காவல்துறை தன்னிச்சையான சோதனைச் சாவடிகளையும் அமைத்தது. காவல்துறையினரின் கைவரிசை எவ்வளவு அதிகமாக இருந்தது என்றால், அவர்களில் ஒருவர் பொதுப் பேருந்தில் ஏறி, மற்ற பயணிகளும் சீற்றங்கொள்ளும்படி, சீருடை அணிந்திருந்த சாம்சங் தொழிலாளர்களிடம் நிறுவனத்தின் அடையாள அட்டையைப் பார்க்குமாறு கோரினார்.
கூடுதலாக, ஆலையில் இருந்து சுமார் 1.5 கிமீ தொலைவில் அமைந்துள்ள போராட்டத் தளத்திற்கு புதன்கிழமை பொலிசார் நுழைந்து, வெப்பம் மற்றும் மழையில் இருந்து தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள தொழிலாளர்கள் எழுப்பியிருந்த பெரிய கூடாரத்தை வன்முறையில் அகற்றினர். பொலீசார் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களைத் தன்னிச்சையாக எந்தவித குற்றச்சாட்டும் இன்றி கைதுசெய்து பல்வேறு திருமண மண்டபங்களில் அடைத்துப் பின்னர் விடுவித்தனர்.
இந்த வன்முறை நடவடிக்கைகள் தமிழக முதல்வர் ஸ்டாலினின் வெளிநாட்டு மூலதனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. தொடர்ந்து வந்த திமுக ஆட்சியில், சாம்சங், ஃபாக்ஸ்கான் மற்றும் பல்வேறு உலகளாவிய நிறுவனங்களின் தேர்வு இடமாக தமிழ்நாடு மாறியுள்ளது. இந்த நிறுவனங்களை ஈர்க்க, தாராளமான வரிச்சலுகைகள், பொது நிதியைப் பயன்படுத்தி உள்கட்டமைப்புகளை உருவாக்குதல் மற்றும் மலிவு நிலம் உள்ளிட்ட அனைத்து வகையான சலுகைகளையும் அரசு வழங்கியுள்ளது. எவ்வாறாயினும், மிக முக்கியமாக, இந்த நிறுவனங்களுக்கு மலிவு கூலி புகலிடமாக அரசு செயல்ப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் மாதம், ஸ்டாலின் அமெரிக்காவிற்கு 17 நாள் பயணத்தை மேற்கொண்டார், அங்கு அவர் உயர்மட்ட நாடுகடந்த நிறுவனங்களின் பல்வேறு நிர்வாகிகளை சந்தித்தார். மலிவு-தொழிலாளர் புகலிடமாகத் திகழும் தமிழ்நாட்டின் நன்மைகளைப் பற்றிக் கூறி, எல்லாவிதமான நிதிச் சலுகைகளையும் அளித்து அவர்களை முதலீட்டில் இழுக்க முயன்றார். அவர் மொத்தம் 75 பில்லியன் ரூபாய் ($893 மில்லியன்) முதலீட்டு உறுதிமொழிகளை அவரால் திரட்ட முடிந்தது என்று கூறப்படுகிறது.
இந்த வேலைநிறுத்தம் இந்தியாவின் பாஜக அரசாங்கத்தில் கவலையை ஏற்படுத்தியுள்ளது, ஏனெனில் இது பிரதமர் நரேந்திர மோடியின் 'மேக் இன் இந்தியா' முன்முயற்சியை களங்கப்படுத்துவதாகக் கருதப்படுகிறது. இது வணிக விதிமுறைகளை தளர்த்துவதன் மூலமும், தொழிலாளர்கள் மீது இரக்கமற்ற அரசு அடக்குமுறை மூலம் குறைந்த ஊதியத்தை பராமரிப்பதன் மூலமும் இந்தியாவை சீனாவிற்கு மாற்று உற்பத்தி மையமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தியாவின் தொழிலாளர் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில், 'விரைவான மற்றும் இணக்கமான' தீர்வைக் கொண்டுவர தமிழக அரசு தலையிட வேண்டும் என்று கோரினார் என்று ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
வேலைநிறுத்தத்தை உடைக்க ஸ்டாலினின் அமைச்சர்கள் சர்வாதிகார சாம்சங் இந்தியா நிர்வாகத்துடன் சதி செய்துள்ளனர். இது நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் கூறியது: 'சட்டவிரோத வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தமிழக அரசின் முயற்சிகளை நாங்கள் அறிவோம், மேலும் தொடர்ந்து ஆதரவளிக்கும் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவிக்கிறோம்.'
இதற்கு நேர்மாறாக, SIWU தலைவரும் CITU தலைவருமான முத்துக்குமார் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழிடம் கூறியதாவது: “நாங்கள் அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். ஆனால் அவர்கள் எங்களின் முக்கிய கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளவில்லை.”
தி.மு.க., அரசாங்கத்தின் பல்வேறு அமைச்சர்கள், தொழிற்சங்க மற்றும் நிறுவன அதிகாரிகளுடன், பல கட்ட பேச்சு வார்த்தைகளை நடத்தி, வேலைநிறுத்தத்தை நாசமாக்கி, தொழிலாளர்களை மீண்டும் பணிக்குத் திரும்பச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் உள்ளனர். தொழிற்துறை அமைச்சர் ராஜா, தொழிலாளர்கள் மீதான திமுக அரசாங்கத்தின் விரோதப் போக்குக்கு எடுத்துக்காட்டாக, சமீபத்தில் ஓர் உரை நிகழ்த்தினார். அப்போது “போட்டியாளர்கள் வேலைநிறுத்தத்தைப் பயன்படுத்தி, உண்மையான பிரச்சினைகளிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பலாம். அரசாங்கமும், முதலமைச்சரும் உங்களுக்கு துணை நிற்கிறார்கள். இளைஞர்களுக்கான வேலைகள் மற்றும் மாநிலத்தில் வேலை வாய்ப்புகளை கருத்தில் கொண்டு வேலைக்குத் திரும்புங்கள்” என்றார்.
தொழிலாளர்களை பிளவுபடுத்துவதற்காக, சாம்சங் நிர்வாகம் சமீபத்தில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) ‘தொழிலாளர் குழு” வுடன் கையெழுத்திட்டதாக அறிவித்தது. அதாவது ஒரு சில தொழிலாளர்களை மிரட்டி அல்லது விலைக்கு வாங்கி சாம்சங் நிர்வாகம் உருவாக்கிய குழுவுடன் இவ்வொப்பந்தம் போடப்பட்டது.
நிறுவனம் அக்டோபர் 1 முதல் மார்ச் 2025 வரை 5,000 ரூபாய் ($60) மாதாந்திர அதிகரிப்பை செலுத்துவதாகக் கூறியது. மேலும் தொழிலாளர்களை ஏற்றிச் செல்வதற்காக குளிரூட்டப்பட்ட பேருந்துகளைச் சேர்ப்பதாகவும், உணவு விடுதியில் உணவின் தரத்தை மேம்படுத்தவும் உறுதியளித்தது. ஆலையில் ஒரு தொழிலாளி இறந்தால், சாம்சங் இந்தியா நிறுவனம் தொழிலாளியின் குடும்பத்திற்கு 100,000 ரூயாய் ($1190) தருவதாகவும் கூறியது.
குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் சலவை இயந்திரங்கள் போன்ற வீட்டு உபயோகப் பொருட்களைத் தயாரிக்கும் இந்த ஆலை, கடந்த ஆண்டு சாம்சங்கின் 12 பில்லியன் டாலர் வருவாயில் 20 சதவீதத்தை வழங்கியுள்ளது. மீதமுள்ள வருவாய், வட மாநிலமான உத்தரபிரதேசத்தில் உள்ள நொய்டாவில் உள்ள அதன் ஆலையில், நிறுவனம் அசெம்பிள் செய்யும் செல்போன்களின் விற்பனையிலிருந்து வந்தது.
வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களோ புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நிராகரித்தனர். எவ்வாறாயினும், அதே நேரத்தில், வணிக சார்பு திமுக அரசாங்கத்தை 'நியாயமாக' இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கும் CITU, SIWU தொழிற்சங்கம் பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்டால் வேலைநிறுத்தத்தை நிறுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், குறைந்த ஊதியம், நீண்ட நேரம் வேலை மற்றும் வேலை நிலைமைகள் பற்றி ஆலை நிர்வாகத்துடன் சில அழுகிய சமரசங்களை செய்ய CITU தயாராக உள்ளது. தற்போது, சாம்சங் தொழிலாளர்கள் வாரத்தில் 4 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 11 மணிநேரம் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர், அதாவது 3 மணிநேரம் சாதாரண மணிநேர விகிதத்தில் இரட்டிப்பு ஊதியத்துடன் இதனைச் செய்கின்றனர்.
சிஐடியு தலைவர்கள் எடுத்துள்ள நிலைப்பாடு, சிஐடியு நிர்வாகம் மற்றும் அரசுக்கு முற்றிலும் இணக்கமானதாகச் செயல்படும் என்பதைக் காட்டுகிறது. தொழிலாளர்கள் மிகுந்த துணிச்சலையும் போர்க்குணத்தையும் காட்டினாலும், சிஐடியு தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்களை தோல்விக்கு வழிநடத்திய நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. உதாரணமாக, 2010 இல், CITU, Foxconn மற்றும் BYD இல் உள்ள தொழிலாளர்களை இரண்டு மாதங்களுக்கும் மேலாக சிறந்த ஊதியம் மற்றும் வேலை நிலைமைகளுக்காக கசப்பான மற்றும் உறுதியான போராட்டத்தை நடத்திய பின்னர், அவர்களை நிர்வாகத்திடம் முழுமையாக சரணடையச் செய்தது.
இது முழுக்க முழுக்க அதன் தாய்க் கட்சியான ஸ்ராலினிச CPM இன் அழுகிய அரசியலுடன் ஒத்துப் போகிறது. இது நீண்டகாலமாக திமுகவுடன் அரசியல் கூட்டணியில் இருந்து தேசிய அளவில் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து பல தசாப்தங்களாக இந்திய முதலாளித்துவத்தின் விருப்பமான அரசாங்கக் கட்சியாக உள்ளது. சிபிஎம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் (விடுதலை) உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகளுடன் சேர்ந்து நீண்டகாலமாக திமுகவை தொழிலாள வர்க்கத்தின் முற்போக்கான நண்பராக வளர்த்து வருகிறது. உண்மையில், முதல்வர் ஸ்டாலின், வேலைநிறுத்தத்தை உடைக்க காவல்துறையின் வன்முறையைப் பயன்படுத்தப்படும் தனது முயற்சியின் மூலம் காட்டுவதைப்போல், வணிகங்களுக்கு நட்பான மாநிலம் தமிழகம் என்ற நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் எந்தத் தடையையும் முறியடிப்பதில் உறுதியாக இருக்கிறார்.
மேலும் படிக்க
- இந்திய சாம்சங் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் பெருகிவரும் அரசு அடக்குமுறைக்கு மத்தியில் தொடர்கின்றது
- ஃபோர்டு சார்லூயிஸ் ஆலையை மூடுவதை நிறுத்து! தொழிற்சாலை தொழிற்சங்க குழு சூழ்ச்சிகளை நிறுத்து! படிப்படியான வேலை குறைப்பு இல்லை! அனைத்து வேலைகளையும் பாதுகாக்க அனைத்து ஃபோர்டு தொழிலாளர்களின் சர்வதேச ஐக்கியத்திற்காக!
- சென்னையில் ரெனால்ட்-நிசான் தொழிலாளர்கள் இந்தியாவின் முதல் சாமானிய தொழிலாளர்களின் வாகன தொழிலாளர் குழுவை உருவாக்குகிறார்கள்
- தமிழ்நாடு மாநில அரசாங்கம் தனது தொழிற்சாலைகள் திருத்தச் சட்டத்தை ரத்து செய்கிறது – ஒரு அரசியல் மோசடி
- தொழிற்சங்கம் போலி வாக்கெடுப்பு மூலம் ரெனோல்ட்-நிசான் இந்திய தொழிலாளர்கள் மீது காட்டிக்கொடுப்பு ஒப்பந்தத்தை திணிக்கின்றது