சென்னையில் ரெனால்ட்-நிசான் தொழிலாளர்கள் இந்தியாவின் முதல் சாமானிய தொழிலாளர்களின் வாகன தொழிலாளர் குழுவை உருவாக்குகிறார்கள்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இந்தியாவின் நான்காவது பெரிய நகரமும்,தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையின் புறநகரில் உள்ள உலகளாவிய வாகன உற்பத்தி நிறுவனங்களின் கார் பொருத்தும் ஆலையில் புதிதாக உருவாக்கப்பட்ட ரெனால்ட்-நிசான் வாகன தொழிலாளர் நடவடிக்கை குழுவானது, பின்வரும் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

உலகின் இரு பெரிய வாகன உற்பத்தியாளர்களின் கூட்டணியான ரெனால்ட்-நிசான்,அதன் சென்னை ஆலையில் சுமார் 6,000 தொழிலாளர்களைக் கொண்டுள்ளது. தொழிலாளர்களில் குறைந்தபட்சம் பாதிப் பேர் ஒப்பந்த ஊழியர்கள் அல்லது பயிற்சிபெறும் தொழிலாளர்கள் ஆவர். அதாவது அவர்களுக்கு நிரந்தர அந்தஸ்து மறுக்கப்பட்டு மிகக் குறைந்த ஊதியம் வழங்கப்படுகிறது..

* * *

நாங்கள் தமிழ்நாட்டில் உள்ள ஸ்ரீபெரம்பத்தூர்-ஒரகடம் தொழிற்பேட்டையில் உள்ள ரெனால்ட்-நிசான் வாகன பொருத்தும் ஆலையில் உள்ள தொழிலாளர்கள் குழுவினராவோம். நிர்வாகத்தின் இடைவிடாத தாக்குதல்கள் மற்றும் எங்களுக்காகப் பேசுவதாகக் கூறிக்கொள்ளும் தொழிற்சங்கங்களின் தொடர்ச்சியான காட்டிக்கொடுப்புகளுக்கு எதிராக, நம்மை தற்காத்துக் கொள்ள தொழிலாள வர்க்கப் போராட்டத்தின் புதிய அமைப்புகளை நாம் கட்டியெழுப்ப வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். தொழிற்சங்க கூட்டமைப்புகள் தொழிலாளர் போராட்டங்களை தனிமைப்படுத்தி விற்றுத்தள்ளுவதோடு எப்போதும் மோசமாகி வரும் ஊதிய நிலைமைகள் மற்றும் வேலை நிலைமைகளை திணிப்பதற்கான நிர்வாகத்தின் கோரிக்கைகளை ஏற்று செயல்படுகின்றன என்பதையும் எங்கள் அனுபவங்கள் நம்ப வைத்துள்ளன.

அதனால்தான் ரெனால்ட்-நிசான் வாகன தொழிலாளர்கள் நடவடிக்கைக் குழுவை (Renault- Nissan auto workers Rank and File Committee -RNRFC-Chennai) உருவாக்க நாங்கள் ஒன்றிணைந்துள்ளோம். இந்தக் குழுவின் ஊடாக, போராட்டத்தை நமது கைகளில் எடுத்துக்கொண்டு, ஜனநாயக ரீதியாக நமது கோரிக்கைகளை சூத்திரப்படுத்தி, மூலோபாயத்தை வகுப்பதுடன் அவற்றை வெற்றி பெறுவதற்கான போராட்டத்தை ஏற்பாடு செய்து நடத்த முடியும். இந்தப் புதிய அமைப்பைக் கட்டியெழுப்புவதன் மூலம், மாநில மற்றும் தேசிய அரசாங்கங்களுடன் பங்காண்மையில் செயல்படும் பெருநிறுவனங்களின் தாக்குதல்களுக்கு எதிராக, நாம் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்த் தாக்குதலை முன்னெடுப்பதற்கு ஒரு முற்போக்கான வழி உள்ளது என்பதை, இந்தத் தொழிற்துறைப் பகுதியில் உள்ள நமது சகோதர, சகோதரி தொழிலாளர்களுக்கு நிரூபிப்போம்.

நிரந்தரமாக மூடப்பட்டுள்ள சென்னை ஃபோர்டு கார் பொருத்தும் ஆலை தொழிலாளர்கள் கடந்த செப். 30ம் தேதி பிரதான சாலையை மறித்து தமிழக முதல்வரிடம் தங்களது கோரிக்கைகளை நேரடியாக கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். [Photo by RP, a Ford worker]

நிரந்தரத் தொழிலாளர்களுக்கு மட்டுமே திறந்திருக்கும் தொழிற்சங்கங்களைப் போலன்றி, RNRFC-சென்னை நிரந்தர, ஒப்பந்த மற்றும் தற்காலிகத் தொழிலாளர்களிடையே உடைக்க முடியாத ஒற்றுமையை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த எதேச்சதிகாரமான தொழில் வகைப்படுத்தல்கள், தொழிலாளர்கள் சுரண்டலை அதிகரிக்கவும், வேலைநிறுத்தங்களைத் தோற்கடிக்கவும், நம்மைப் பிளவுபடுத்தவும், இந்தியா முழுவதும் உள்ள தனியார் மற்றும் பொதுத்துறை முதலாளிகளால் ஒரே மாதிரியாகப் பயன்படுத்தப்படுகின்றன. RNRFC-சென்னை சம வேலைக்கு சம ஊதியம் என்ற கொள்கைக்காகவும், ஒப்பந்த மற்றும் தற்காலிக தொழிலாளர் முறையை முற்றாக நீக்குவதற்கும் போராடுகிறது.

சகோதர சகோதரிகளே, நாங்கள் ஏப்ரல் 2018 முதல் -அதாவது முன்னெப்போதும் இல்லாத வகையில் நான்கரை ஆண்டுகளாக- ஒரு ஒப்பந்தம் இல்லாமல் வேலை செய்து வருகிறோம் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். எங்கள் ஒப்பந்தங்கள் பொதுவாக மூன்று வருட காலத்திற்கு ஒரு முறை பேச்சுவார்த்தை நடத்தப்படவேண்டும்.

இந்திய ரெனால்ட்-நிசான் தொழிலாளர் சங்கமும் (Renault Nissan India Thozhilalar Sangam-RNITS), அது நெருக்கமாக ஒத்துழைக்கும் ஐக்கிய தொழிலாளர் சம்மேளனமும் (United Labour Federation-ULF) உறுப்பினர்களின் எந்த அங்கீகாரமும் இல்லாமல், நடுவர் மன்றத்தில் நுழைந்துகொண்டு, எங்களது புதிய ஒப்பந்தம் 2021 மார்சில் காலாவதியாகிவிட்ட பின்னரும் இந்த மோசடி செயல்பாட்டில் தொடர்ந்து பங்கேற்பதன் மூலம், தங்களது முழு திவாலான நிலையைக் காட்டியுள்ளன. இந்த நடுவர்மன்ற செயல்பாடு 2020 முதல் காலாண்டில் தொடங்கியது. அதாவது கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு முன்பு! மேலும், 2021 ஏப்ரல் முதல் 2024 மார்ச் வரை அமலில் இருக்க வேண்டிய 3 ஆண்டுகால ஒப்பந்தத்திற்கான போராட்டத்தை ஏற்பாடு செய்ய தொழிற்சங்கத் தலைமைத்துவம் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

நீதிமன்றங்களின் உதவியுடன், நடுவர்மன்ற/பேச்சுவார்த்தை செயல்முறையை முடிவில்லாமல் இழுத்தடித்து, தொழிலாளர்களை கடும் வறுமையில் தள்ளிவிட ரெனால்ட்-நிசான் நிறுவனத்தை அனுமதிப்பதன் மூலம், நாங்கள் வேலைநிறுத்தம் செய்வதையோ அல்லது பிற பயனுள்ள தொழிற்துறை நடவடிக்கைகளை எடுப்பதையோ தொழிற்சங்கங்கள் இன்னும் கடினமாக்குகின்றன.

2018 ஒப்பந்தம் காலாவதியான பின்னர், தொழிற்சங்கம் ரெனால்ட்-நிசான் நிர்வாகத்திடம் உரிமை கோரிக்கை பட்டியல் ஒன்றை முன்வைத்தது. நிர்வாகம் அவமானப்படுத்தும் வகையில் ரூபா 5,000 ஊதிய உயர்வு கொடுத்து அதற்கு பதிலளித்தது. வாழ்க்கைச் செலவு அதிகரிப்போடு பார்க்கும் போது, இது ஒரு பாரிய ஊதிய வெட்டுக்கு சமமாகும். 2019 இறுதி வரை பேச்சுவார்த்தைகள் இழுத்தடிக்கப்பட்டன. நிறுவனத்தின் விடாமுயற்சியால் கோபமடைந்த நிரந்தரத் தொழிலாளர்கள் அனைவரும் 2019 இறுதியில் வேலைநிறுத்தம் செய்ய ஒருமனதாக உணர்வை வெளிப்படுத்தினர். ஒவ்வொரு உறுப்பினரும் வேலைநிறுத்த நிதிக்கு ரூபா 1,000 வழங்க முன்வந்தனர்.

தொழிற்சங்கம் நிர்வாகத்திடம் வேலைநிறுத்த அறிவிப்பை வழங்கிய பின்னர், நிறுவனம் 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நடுவர் மன்றத்திற்கு தாக்கல் செய்தது. RNITS மற்றும் ULF ஒருதலைப்பட்சமாக நிர்வாகத்தால் தொடங்கப்பட்ட நடுவர் மன்ற விசாரணையில் பங்கேற்க முடிவு செய்தன. வேலைநிறுத்தம் நடந்தால், 3,000 நிரந்தரத் தொழிலாளர்களும் ஒட்டுமொத்தமாக வெளிநடப்பு செய்யத் தயாராக இருந்த போதிலும், எங்களில் சிலரை வேலை நீக்கம் செய்வதன் மூலம் அல்லது இடமாற்றம் செய்வதன் மூலம் நிறுவனம் தொழிலாளர்களை பலிவாங்கும் என்று கூறி, தொழிற்சங்கங்கள் இதை நியாயப்படுத்தின.

ரெனால்ட்-நிசானின் அச்சுறுத்தல்களைத் தோற்கடிக்க ஒரு மூலோபாயத்தை அபிவிருத்தி செய்வதற்குப் பதிலாக, தொழிற்சங்கம் அதன் சரணடைவையும் நிர்வாகத்துடனான அதன் ஒத்துழைப்பையும் நியாயப்படுத்த அவற்றை மீண்டும் கூறி வருகிறது.

எந்தவொரு முதலாளித்துவ தொழில்வழங்குனரையும் போலவே, ரெனால்ட்-நிசான் நிறுவனமும் தனது இலாபத்தைப் பாதுகாக்கவும், பெருக்கவும் இரக்கமின்றி செயல்படுவதுடன் காவல்துறை, நீதிமன்றங்கள் மற்றும் வலதுசாரி திமுக அரசாங்கத்தின் ஆதரவைப் பெறும். ஆனால், சமூகத்தின் அனைத்து செல்வங்களையும் உற்பத்தி செய்வது தொழிலாள வர்க்கமே ஆகையால், ஸ்ரீபரம்பத்தூர்-ஒரகடம் தொழிற்பேட்டையில் தொழிலாளர்களாகிய எங்களுக்கு இந்தியா மற்றும் சர்வதேச அளவில் இன்னும் சக்திவாய்ந்த கூட்டாளிகள் உள்ளனர்.

வறிய மட்ட ஊதியம், வேலை வேகப்படுத்தல் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர் முறைக்கு முடிவுகட்டுவது போன்ற நாங்கள் போராடிக்கொண்டிருக்கும் பிரச்சனைகள், அனைத்து தொழிலாளர்களுக்கும் தீர்க்கமாக முக்கியத்துவம் வாய்ந்தவை. அதனால்தான், பரந்த தொழிலாள வர்க்க ஆதரவுக்கு அழைப்பு விடுப்பதன் மூலமும் அணிதிரட்டுவதன் மூலமும் நிர்வாக அச்சுறுத்தல்களை நாம் எதிர்க்க முடியும் மற்றும் எதிர்க்க வேண்டும்.

தொழிற்சங்கங்களின் திவாலான மூலோபாயம் மற்றும் கோழைத்தனத்தால் பாதிக்கப்படுவது, ரெனால்ட்-நிசான் தொழிலாளர்கள் மட்டுமல்ல. ஃபோர்டு மோட்டார்ஸ் தொழிலாளர்கள் சென்னை ஃபோர்டு ஊழியர் சங்கத்தால் (CFEU) மிகவும் கொடூரமான முறையில் முதுகில் குத்தப்பட்டுள்ளனர். ஆலை மூடப்பட்டதால் 2,600க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் தங்கள் குடும்பங்களுக்காக தனியாக உழைப்பவர்கள்.

கடந்த ஜூலை 2 அன்று, ஃபோர்டு நிர்வாகம் மற்றும் தமிழ்நாட்டின் திமுக அரசாங்கத்துடன் நெருக்கமாக செயல்படும் CFEU, ஆலையை மூடுவதற்கும் தொழிலாளர்களை வெளியேற்றுவதற்கும் ஃபோர்ட் கொண்டிருக்கும் 'உரிமைக்கு' எதிராக சவால் விடுத்து, இளம் தொழிலாளர்களால் நடத்தப்பட்ட போர்க்குணமிக்க ஐந்து வார வேலைநிறுத்தத்தை விலக்கிக்கொண்டது. உறுப்பினர் வாக்கெடுப்பு ஒருபுறம் இருக்க, CFEU, வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களுடன் எந்த ஆலோசனையும் நடத்தாமலேயே இதை செய்தது.

'இடதுசாரிகள்' என்று காட்டிக் கொள்ளும் CITU, LTUC மற்றும் AITUC உட்பட, தொழிற்சங்கக் கூட்டமைப்புகள் எதுவும் ஸ்ரீபரம்பத்தூர்-ஒரகடம் தொழில்துறை மண்டலத்தில் கணிசமான உறுப்பினர்களைக் கொண்டிருந்த போதிலும், ஃபோர்டு தொழிலாளர்களுக்கு சார்பாக உண்மையான ஆதரவைத் திரட்டவில்லை. CITU மற்றும் AITUC இன் தாய்க் கட்சிகளான சிபிஎம், சிபிஐ ஆகிய இரண்டும், பெரும் வணிகர்களுக்கு ஆதரவான திமுக தலைமையிலான தமிழக அரசை நடைமுறையில் ஆதரிக்கின்றன.

கடந்த தசாப்தத்தில், இந்தத் தொழில்துறை மண்டலத்திலும் இந்தியா முழுவதும் பல்வேறு தொழில்களில் ஏராளமான போராட்டங்கள் வெடித்துள்ளன. தொழிலாளர்களின் போர்க்குணம் மற்றும் துணிச்சல் இருந்தபோதிலும், தொழிற்சங்கங்கள் இந்த போராட்டங்களை மீண்டும் மீண்டும் தனிமைப்படுத்தி அவற்றின் தோல்விக்கு வழிவகுத்தன. யமஹா, ராயல் என்ஃபீல்ட், மதர்சன் தொழிற்சாலை மற்றும் ஜேபிஎம் ஆகியவற்றில் நடந்த தொழிலாளர்களின் போராட்டங்களும் இதில் அடங்கும்.

உலகம் முழுவதும், தொழிலாளர் போராட்டங்கள் அந்தந்த நாட்டு முதலாளித்துவ சார்பு தொழிற்சங்கங்களால் நாசமாக்கப்படுகின்றன. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) அங்கமான உலக சோசலிச வலைத் தளமாக (WSWS) விளக்கியுள்ளவாறு, நடவடிக்கை குழுக்களை உருவாக்குவதானது, 'வர்க்கப் போராட்டத்திற்கு ஒரு புதிய பாதையைத் திறக்கும், அதில் தொழிலாள வர்க்கத்தின் நம்பிக்கைக்குரிய பிரதிநிதிகள் தலைமை வகிப்பதோடு ஒவ்வொரு போராட்டத்தையும் குழப்புவதற்கு தொழிற்சங்க அதிகாரத்துவம் மேற்கொள்ளும் முயற்சிகளை தோற்கடிப்பார்கள்.'

உலகளவில் செயல்படும் ரெனால்ட்-நிசான் போன்ற நிறுவனங்களை வெற்றிகரமாக எதிர்த்துப் போராடுவதற்கும், உலகளாவிய மூலோபாயத்தை செயல்படுத்துவதற்கும், தமிழ்நாட்டில் மட்டுமன்றி இந்தியா முழுவதும் மற்றும் சரவதேச ரீதியிலும் உள்ள வாகன தொழிலாளர்கள் மட்டுமன்றி ஏனைய தொழிலாளர்களுடனும் இணைப்பை ஏற்படுத்திக்கொள்வதற்கு தொழிலாளர்கள் தங்கள் சொந்த உலகளாவிய மூலோபாயத்தை உருவாக்க வேண்டும். உலகெங்கிலும் உள்ள ரெனால்ட்-நிசான் தொழிலாளர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்துவது மிகவும் முக்கியமானது. RNRFC-சென்னை, நடவடிக்கை குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியை (IWA-RFC) கட்டியெழுப் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு தற்போது முன்னெடுக்கும் முயற்சியை ஆதரிக்கிறது. இதன் மூலம், தொழிலாளர்கள் சர்வதேச அளவில் தங்கள் போராட்டங்களை ஒருங்கிணைத்து, உழைக்கும் அனைவருக்கும் சிறந்த எதிர்காலத்திற்காகப் போராட முடியும்.

RNCRFC பின்வரும் ஆரம்ப கோரிக்கைகளை முன்வைக்கின்றது:

  • RNITS மற்றும் ULF, ரெனால்ட்-நிசான் நிர்வாகத்துடனும் மற்றும் நடுவர்மன்றத்திலும் ஈடுபட்டு வரும் நான்கரை ஆண்டுகால பலனளிக்காத பேச்சுவார்த்தைகள் உடனடியாக முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும்.
  • அதற்கு பதிலாக, 'ஒப்பந்தம் இல்லையெனில், வேலை செய்ய மாட்டோம்' என்ற கொள்கையை நாம் பின்பற்ற வேண்டும். எங்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்த தயாராக வேண்டும்.
  • சாமானிய தொழிலாளர்களால் ஒரு புதிய பேச்சுவார்த்தைக் குழு ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இதன் மூலம் பெரும் பணவீக்கத்தால் மதிப்பிழந்து போயுள்ள ஊதியத்துக்கு மாறாக சிறந்த ஊதியத்திற்காகவும் பாதுகாப்பான வேலை நிலைமைகளுக்காகவும் போராட மிகவும் நம்பகமான தொழிலாளர்கள் முன்னணி வகிக்க முடியும்.
  • தொழிலாளர்களின் முதுகுக்குப் பின்னால் இரகசியப் பேச்சுவார்த்தைகள் இருக்கக்கூடாது. இப்போது முதல், நிர்வாகம் மற்றும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தொழிலாளர்-பிரதிநிதிகள் இடையே என்ன கலந்துரையாடப்பட்டாலும். அது அனைத்து தொழிலாளர்களுக்கும் பேச்சுவார்த்தைக் குழுவால் உடனடியாகவும் முழுமையாகவும் தெரிவிக்கப்பட வேண்டும்.
  • வகைப்படுத்தலை கருத்தில்கொள்ளாமல், அனைத்து தொழிலாளர்களுக்கும் சம ஊதியம் வேண்டும். சாதி மற்றும் வகுப்பு வேறுபாடுகளைக் கடந்து அனைத்து தொழிலாளர்களையும் ஒன்றுபடுத்துங்கள்.

சகோதர சகோதரிகளே, இந்த ஆவணத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள முன்நோக்குடன் நீங்கள் உடன்படுவீர்கள் என்று நம்புகிறோம். எங்களிடம் மிகப்பெரிய வலிமை உள்ளது. COVID-19 தொற்றுநோய்களின் போது பாதுகாப்பற்ற வேலை நிலைமைகள் காரணமாக 2020 நடுப்பகுதியில் நாங்கள் அனைவரும் வெளிநடப்பு செய்ய இருந்தபோது இது நிரூபிக்கப்பட்டது. இதன் விளைவாக நிர்வாகம் இரண்டு வாரங்களுக்கு சம்பளத்துடன் ஆலையை மூடி வைக்க நிர்ப்பந்திக்கப்பட்டது. எங்களின் சொந்த அனுபவங்களிலிருந்து பாடங்களைக் கற்று, இந்தப் புதிய போராட்ட அமைப்பைக் கட்டியெழுப்ப உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம். தயவுசெய்து எங்களை rnrfc_chennai@yahoo.com என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும். எங்களுடைய ஃபேஸ்புக் பக்கம் Rnrfc-chennai ஆகும்.

மேலும் படிக்க

Loading