தமிழ்நாடு மாநில அரசாங்கம் தனது தொழிற்சாலைகள் திருத்தச் சட்டத்தை ரத்து செய்கிறது – ஒரு அரசியல் மோசடி

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம் 

மே 1 இல், தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டின் முதல்வர் மு.க. ஸ்டாலின், தொழிற்சாலைகள் (தமிழ்நாடு திருத்தம்) சட்டம், 2023-ஐ திரும்பப் பெறுவதாக அறிவித்தார் —அவரது சொந்த அரசாங்கம் அறிமுகப்படுத்திய இந்த தொழிலாளர் விரோதச் சட்டத்தை சில வாரங்களுக்கு முன்பு மாநில சட்டமன்றம் நிறைவேற்றியது.

தொழிற்சாலைகள் திருத்தச் சட்டம், மற்ற நடவடிக்கைகளுடன், தினசரி வேலை நேரத்தை கூடுதல் நேர ஊதியம் இல்லாமல் 8 இலிருந்து 12 ஆக நீட்டிக்க அனுமதித்தது. இந்த செயல் தொழிலாள வர்க்கத்தை ஒரு நூற்றாண்டு பின்னோக்கி தூக்கி வீசும். தமிழ்நாட்டின் திமுக (திராவிட முன்னேற்றக் கழகம்) அரசாங்கத்தின் வணிகச் சார்பு, தொழிலாள வர்க்க விரோதப் பதிவைக் கருத்தில் கொண்டு பார்க்கையில் சட்டத்தை திரும்பப் பெறுவது என்பது தெளிவாகவே ஒரு தற்காலிக சூழ்ச்சி மற்றும் ஒரு மோசடியாகும். 

சென்னையில் நடைபெற்ற கட்சியின் மே தினக் கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “மற்றவர்களின் நலன்களுக்கு இடம் விட்டுக்கொடுப்பதை நான் ஒருபோதும் ஒரு அவமதிப்பதாகக் கருதவில்லை” என்று அறிவித்தார். மேலும் 'சட்டத்தை இயற்றுவது ஒரு துணிச்சலான நடவடிக்கை என்றால், மற்றவர்களின் கருத்துக்களின் அடிப்படையில் உடனடியாக அதை திரும்பப் பெறுவதும் ஒரு துணிச்சலான நடவடிக்கை தான்' என்று அவர் கூறினார். 

முதலீட்டாளர்களுக்கு ஆதரவான சட்டத்தை இயற்றுவதற்கான தனது அசல்   'துணிச்சலான' நடவடிக்கை குறித்து திமுக தலைவரும், மாநில முதல்வரும் எள்ளளவும் மறைக்கவில்லை. நீண்ட வேலை நாள் என்பது முதலீட்டாளர்களுக்கு லாபத்தை அதிகரிக்கும் என்று ஒப்புக்கொண்ட ஸ்டாலின், “இந்த மசோதா தமிழ்நாட்டிற்கு பெரும் முதலீடுகளை ஈர்க்கவும், ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் நிறைவேற்றப்பட்டது” என்றார்.

தி.மு.க அரசாங்கத்தின் தொழிலாளர் விரோத தொழிற்சாலைகள் திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஸ்ராலினிஸ்ட்டுக்கள் தலைமையிலான இந்திய தொழிற்சங்கங்களின் மையம் (சிஐடியு) கோயம்புத்தூரில் நடத்திய  போராட்டத்தில் கலந்து கொண்ட தொழிலாளர்கள். [Photo: CITU]

இந்த மசோதா மாநிலங்கள் அவையில் ஏப்ரல் 12ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டு, ஒன்பது நாட்களுக்குப் பிறகு ஏப்ரல் 21ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. பெரும் மக்கள் எதிர்ப்பைத் தொடர்ந்து, தி.மு.க.வின் சில கூட்டணிக் கட்சிகள் இந்த சட்டம் குறித்து சில விமர்சனங்களைச் செய்யும்படி கட்டாயப்படுத்தியதைத் தொடர்ந்து, அதன் அமுலாக்கம் ஏப்ரல் 24 அன்று நிறுத்தி வைக்கப்பட்டது.

ஸ்ராலினிச இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அல்லது CPM - வலதுசாரி, சிறு இனக்குழு-தேசியவாத திமுகவிற்கு 'இடது' அரசியல் மூடுதிரையை சமீபத்திய தேர்தல்களில் வழங்குவதில் முக்கிய பங்கு வகித்தது – அது ஒரு வணிக சார்பு மசோதாவை தாக்க நிர்பந்திக்கப்பட்டது, அதன் மூலம் தொழிலாள வர்க்கத்திற்குள் ஏற்கனவே  அது இழந்து வரும்  ஆதரவைத் தக்க வைத்துக் கொள்ள முயற்சிக்கிறது. 'தொழிலாளர்களை அடிமைகள் போல் நடத்துவதற்கு இது வழி வகுக்கிறது' என்று கூறிய CPM, புதிய சட்டம் நடைமுறைக்கு வந்தால், தொழிலாளர்கள் எத்தனை மணிநேரம் வேண்டுமானாலும் வரம்பின்றி வேலை செய்யும்படி மற்றும் கூடுதல் நேர ஊதியம் மற்றும் இடைவேளை இன்றி வேலை செய்யும்படி  நிர்பந்திக்கப்படுவார்கள் என்று எச்சரித்தது. அவர்களின் விமர்சனங்கள் என்னவாக இருந்தாலும், ஸ்ராலினிஸ்டுகள் இந்த தொழிலாளர் விரோதச் சட்டம் தொடர்பாக, திமுக தலைமையிலான தேர்தல் கூட்டணியை விட்டு விலகுவதாக ஒருபோதும் அச்சுறுத்தவில்லை.

மாநில சட்டமன்றம் இந்த மசோதாவை நிறைவேற்றிய உடனேயே, மாநில தொழிலாளர் அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழகத்தில் முதலீடு செய்ய அதிகமான பூகோள முதலீட்டாளர்கள் வருவதாகவும், அவர்கள் 'தொழிலாளர் குறித்து நெகிழ்வுத்தன்மையை' விரும்புவதாகவும் கூறினார். அதன் மூலம், ஃபாக்ஸ்கான் மற்றும் ரெனால்ட்-நிசான் போன்ற நாடுகடந்த நிறுவனங்கள் உள்ளிட்ட பூகோள மூலதனத்தால் தொழிலாள வர்க்கம் கட்டுப்பாடின்றி  சுரண்டப்படும் என்று அவர் அர்த்தப்படுத்துகிறார். மாநிலத் தொழில்துறை அமைச்சர் கணேசன், தொழிலாளர்கள் மேல் ஆதரவு காட்டுவதாக பாவனை செய்யும் ஏமாற்றும் மொழியைப் பயன்படுத்தினார். ”(அவர்களின்) சம்மதத்துடன் மட்டுமே” சட்டம் செயல்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.

திமுக அரசாங்கம் தனது தொழிற்சாலைகள் திருத்தச் சட்டம் 2023ஐ திரும்பப் பெறுவதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன.

முதலாவதாக, மாநிலம் முழுவதும் 40,000 க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழில்துறை தொழிலாளர்கள் மத்தியில் அது பெரும் எதிர்ப்பை எதிர்கொண்டது. இந்த அழுத்தத்தின் கீழ், ஸ்ராலினிசக் கட்சிகளுடன் இணைந்த தொழிற்சங்கங்களும் மற்றும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் (SPA) உள்ள மற்ற கூட்டாளிகளும் மாநிலம் தழுவிய போராட்டங்களுக்கும் மற்றும் மே 12 அன்று மாநிலம் தழுவிய பொது வேலைநிறுத்தத்திற்கும் அழைப்பு விடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பெருகிவரும் தொழிலாளர்களின் எதிர்ப்பைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடனேயே அவர்கள் ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்பு விடுத்தனர். 

இந்த ஆர்ப்பாட்டத்துக்கான அழைப்பு, மாநில அரசாங்கத்தின் தொழிலாள வர்க்க விரோதச் சட்டத்தைத் தோற்கடிக்க தொழிலாளர்களை அணிதிரட்டுவதற்கோ, அல்லது தீவிர வலதுசாரி நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசாங்கத்திற்கு எதிரான அகில இந்திய தொழிலாள வர்க்கத்தின் எதிர்த்தாக்குதலை தொடங்குவதற்கான தொடக்கப் பாதையாக  ஆக்குவதற்கோ, அல்லது அரசாங்கம் மற்றும் ஆளும் வர்க்கத்தின் சிக்கன நடவடிக்கை, தனியார்மயமாக்கல் மற்றும் வேலையை தற்காலிகமானதாக்குதல் ஆகியவற்றிற்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் எதிர் தாக்குதலை அணி திரட்டுவதற்காகவோ அல்ல. பல்வேறு நகரங்களில் வெவ்வேறு நாட்களில் ஆங்காங்கே போராட்டங்கள் நடத்தப்பட்டன. சட்டத்தை திரும்ப பெறுவதாக திமுக கூறியவுடனேயே, தொழிற்சங்கங்கள் போராட்டங்களையும், மே 12 இல் நடத்த திட்டமிட்ட பொது வேலைநிறுத்தத்தையும் கைவிட்டன.

திமுக அரசாங்கம் தனது தொழிற்சாலைகள் திருத்தச் சட்டம் 2023ஐ திரும்பப் பெறுவதற்கான இரண்டாவது காரணம், தொழிற்சாலைகள் சட்டத்திற்கு எதிரான மக்களின் எதிர்ப்பானது, அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறவிருக்கும் தேசிய நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான SPA கூட்டணிக்கு கடுமையான தேர்தல் பின்னடைவை ஏற்படுத்தலாம், அதேசமயத்தில் அதன் கூட்டாளிகளுடன் தேவையற்ற உரசலையும் ஏற்படுத்தலாம் என்ற அச்சமுமாகும். 

திமுக தலைமையிலான SPA கூட்டணியில், சிபிஎம், அதன் சிறிய ஸ்ராலினிச கூட்டாளியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI), காங்கிரஸ் கட்சி, அது சமீப காலம் வரை இந்திய ஆளும் வர்க்கத்தின் விருப்பமான தேசிய அரசாங்கத்தின் கட்சியாக இருந்தது, மற்றும்  சாதிய வாத VCK மற்றும்  பிராந்திய பேரினவாத MDMK மற்றும் பல சிறிய 'திராவிட' கட்சிகள் ஆகியவை உள்ளன.

திமுக அரசாங்கம் தனது தொழிற்சாலை சட்டத்தை திரும்பப் பெற்றது என்பது தொழிலாளர்களின் கண்களின் மேல் ஒரு கம்பளியை இழுக்கும் ஒரு சூழ்ச்சியாகும். அடுத்த ஆண்டு பொதுத் தேர்தலைத் தொடர்ந்து, கிடைக்கக்கூடிய முதல் வாய்ப்பில் அது புத்துயிர் பெறும்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பாரதிய ஜனதா கட்சி (BJP) தலைமையிலான மத்திய அரசாங்கம் நான்கு புதிய தொழிலாளர் குறியீடுகளை இயற்றியதை திமுக அமர்க்களமாக ஆர்ப்பாட்டம் செய்து 'எதிர்த்தது'. இந்த கொடூரமான சட்டங்கள் மாநில அரசாங்கங்கள் தொழில் துறைகளில் தினசரி வேலை நேரத்தை 8 முதல் 12 வரை நீட்டிக்க அனுமதிக்கின்றன. ஸ்டாலினும் அவரது திமுகவும் உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் குஜராத்தில் பாஜக மாநில அரசாங்கங்கள் வேலை நாளை நீட்டிக்கும் மசோதாக்களை அறிமுகப்படுத்தியபோது கண்டனம் தெரிவித்தன.

ஆனால் தமிழகத்தில் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், அண்டை மாநிலமான கர்நாடகாவில் பாஜக அரசாங்கத்தின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, அது இந்த ஆண்டின் தொடக்கத்தில் வேலை நேரத்தை நீட்டிக்கும் சட்டத்தை இயற்றியது, உலகளாவிய முதலீட்டாளர்களை ஈர்க்கும் உந்துதலின் ஒரு பகுதியாக அதன் தொழிற்சாலைகள் திருத்தச் சட்டத்தை இயற்ற திமுக முடிவு செய்தது. 

தற்போது, இந்தியாவின் ஏழாவது அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமான தமிழ்நாடு, FDI ஐ (அந்நிய நேரடி முதலீட்டை) ஈர்ப்பதில் ஐந்தாவது இடத்தில் உள்ளது, மஹாராஷ்டிரா முதலிடத்திலும், குஜராத், கர்நாடகா மற்றும் டெல்லியைத் தொடர்ந்து இந்த மாநிலம் உள்ளது. 

திமுக அரசாங்கத்தின் மீதான மாயைகளை வலுப்படுத்த முயல்வதோடு, பொதுவாக மோடி மற்றும் அவரது பிஜேபிக்கு மாற்றாக காத்திருக்கும் ஒரு வலதுசாரி மாற்று அரசாங்கத்தை ஒன்றாக சேர்க்கும் முயற்சியில்,  ஸ்ராலினிச CPM இன் தமிழ்நாடு மாநில செயலாளர் K. பால கிருஷ்ணன், அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்தார். தொழிற்சாலைகள் திருத்தச் சட்டத்தை ரத்து செய்த திமுக முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

ஸ்ராலினிஸ்டுகள் காங்கிரஸுடனும், திமுக போன்ற பல்வேறு பிராந்திய முதலாளித்துவக் கட்சிகளுடனும் தங்கள் பிற்போக்குத்தனமான கூட்டணியை வளர்க்க தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் இந்தக் கொள்கையை அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல்களைக் குறிப்பிட்டு நியாயப்படுத்துகிறார்கள், அங்கு அவர்கள் இந்து மேலாதிக்க பிஜேபியை 'தோற்கடிப்போம்' என்ற பதாகையின் கீழ் பிரச்சாரம் செய்வார்கள். மே 16 அன்று, சென்னையில் திமுக தலைவர் ஸ்டாலினுடன் சிபிஎம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய யெச்சூரி, “பாஜகவை தோற்கடிக்கவும், சிறந்த இந்தியாவை உருவாக்கவும் பரஸ்பரம் ஒத்துழைக்கத் தயாராக உள்ள பல்வேறு கட்சிகளிடையே பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. வகுப்புவாத பாசிச சக்திகள் தோற்கடிக்கப்பட வேண்டும்” என்று கூறினார்.

சீனாவிற்கு எதிரான அமெரிக்க ஏகாதிபத்திய போர் உந்துதலில் இந்தியாவை ஒரு முன்னணி நாடாக மாற்றும் அதே வேளையில், மோடி அரசாங்கம் உள்நாட்டில் தொழிலாளர்களின் உரிமைகள் மீது மிருகத்தனமான தாக்குதலைத் தொடுத்துள்ளது. அதன் 2020 தொழிலாளர் சட்டம் “சீர்திருத்தம்” மூலம் 44 தேசிய தொழிலாளர் சட்டங்களில் 15ஐ ஒரே அடியோடு நீக்கியது. மீதமுள்ள 29,  நான்கு தொழிலாளர் குறியீடுகளாக இணைக்கப்பட்டன. இந்த திருத்தப்பட்ட தொழிலாளர் சட்டங்கள் தொழிலாள வர்க்கத்தின் மீது முன் கண்டிராத தாக்குதலை தொடுப்பதாக இருக்கும், இது பூகோள மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்கள் தொழிலாளர்கள் மீதான சுரண்டலைத் தீவிரப்படுத்துவதற்கு கதவைத் திறந்து  விடுகின்றன. கூடுதல் நேர ஊதியம் இல்லாமல் வேலை நாள் நிரந்தரமாக நீட்டிக்கப்படுவதைத் தவிர, BJP இன் 'சீர்திருத்தம்' பெரும்பாலான சந்தர்ப்பங்களில் வேலைநிறுத்தத்தை தடை செய்கிறது, தொழிற்சங்கங்களை அமைப்பதற்கான தொழிலாளர்களின் உரிமையை நீக்குகிறது மற்றும் பெண் தொழிலாளர்களை இரவு வேலை செய்ய கட்டாயப்படுத்த முதலாளிகளுக்கு அதிகாரம் அளிக்கிறது.

ஏகாதிபத்திய சக்திகள் சீனாவிற்கு எதிராக பேரழிவுகரமான போரை நடத்தத் தயாராகி வரும் நிலையில், அவர்களின் சொந்த நாடுகளான முதன்மையாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் பெரும் அழுத்தத்தின் கீழ் சீனாவை விட்டு வெளியேறும் உலக முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக இந்த கொடூரமான 'தொழிலாளர் சீர்திருத்தம்' இயற்றப்பட்டது.

ஹிந்துஸ்தான் டைம்ஸின் கூற்றுப்படி, மத்திய அரசாங்கத்தின் தொழிலாளர் “சீர்திருத்தம்” “நாட்டின் தொழிலாளர் சந்தைகளில் உள்ள இறுக்கங்களை நீக்குவதற்கான ஒரு பரிசோதனையின் தொடக்கத்தை அடையாளம் காட்டியது மற்றும் பணியமர்த்தல் மற்றும் பணிநீக்கம் செய்வதற்கான கடுமையான விதிகள் குறித்து, அதேசமயம் உலக நிறுவனங்கள் சீனாவிலிருந்து தங்கள் விநியோகச் சங்கிலிகளை மாற்றத் தொடங்குகின்றன மற்றும் அங்குள்ள தொழிற்சாலைகளில் சார்ந்து இருப்பதை குறைக்கின்றன.'

எட்டு மணி நேர வேலை மற்றும் வேலைப் பாதுகாப்புகள் அதேபோல்  ஜனநாயக உரிமைகள் உள்ளிட்ட, தொழிலாள வர்க்கத்தின் கடந்தகால வெற்றிகளைப் பாதுகாப்பது என்பது இந்தியத் தொழிலாளர்களை, அவர்களின் வர்க்க சகோதரர்களுடன் ஒற்றுமையாகவும், கூட்டு நடவடிக்கையாகவும் ஒன்றிணைத்து, ஒரு சர்வதேசப் போராட்டமாக மட்டுமே முன்னெடுத்துச் செல்ல முடியும்.  ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் உலகெங்கிலும் உள்ள வர்க்க சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுடன் பொது எதிரியான இலாப உந்துதலை குறிக்கோளாக கொண்ட முதலாளித்துவ அமைப்புக்கு எதிராக இந்தப் போராட்டம் அணிதிரட்டப்பட வேண்டும். இந்த போராட்டம் ஏகாதிபத்திய போருக்கு எதிராக மற்றும் உலக சோசலிசத்திற்கான போராட்டத்துடன் இணைக்கப்பட வேண்டும்.

Loading