ஃபோர்டு சார்லூயிஸ் ஆலையை மூடுவதை நிறுத்து! தொழிற்சாலை தொழிற்சங்க குழு சூழ்ச்சிகளை நிறுத்து! படிப்படியான வேலை குறைப்பு இல்லை! அனைத்து வேலைகளையும் பாதுகாக்க அனைத்து ஃபோர்டு தொழிலாளர்களின் சர்வதேச ஐக்கியத்திற்காக!

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அன்பான சகோதர சகோதரிகளே,

2025 ஆம் ஆண்டிற்குள் சார்லூயிஸில் உள்ள ஃபோர்டு ஆலையை மூடுவது மற்றும் எங்கள் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை அழிப்பது என்ற முடிவு எங்கள் போராட்டத்தில் ஒரு புதிய கட்டத்தை முன்வைக்கிறது. இப்போது பங்கு எடுத்து தேவையான முடிவுகளை எடுக்க வேண்டிய நேரம் இது.

ஆறு மாதங்களாக நாம் எச்சரித்தது நடந்துள்ளது. ஜனவரி இறுதியில் கொலோனில் உள்ள ஃபோர்டு ஐரோப்பிய தலைமையகத்திற்கு வெட்டுத் திட்டங்கள் சமர்ப்பிக்கப்பட்ட சில நாட்களுக்குப் பின்னர், நாங்கள் எழுதினோம்:

சலுகைகள் வேலைகளை காப்பாற்றாது! கடந்த காலத்தில் நாம் செய்த தியாகங்கள் மற்றும் அனைத்து ஃபோர்டு இடங்களிலும் ஏற்கனவே வழங்கப்பட்ட அனைத்து சலுகைகளும் இன்று ஒரு சதத்திற்கும் மதிப்பில்லை.

கொள்கையளவில், மற்ற ஆலைகளில் எங்களுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையே தூண்டிவிடப்படும் மிரட்டல் மற்றும் மிருகத்தனமான போட்டியை நாங்கள் நிராகரிக்கிறோம். ஒருவருக்கு எதிராக மற்றொருவரை தூண்டிவிடுவது பேரழிவிற்கு வழிவகுக்கிறது.

அனைத்து தளங்களிலும் தொழிற்சாலை தொழிற்சங்க குழுக்களுக்கும் (Betriebsräten) மற்றும் நிறுவன நிர்வாகத்திற்கும் இடையேயான இரகசிய பேச்சுவார்த்தைகளை உடனடியாக முடிவுக்கு கொண்டுவருமாறு நாங்கள் ஏற்கனவே அழைப்பு விடுத்திருந்தோம்.

ஃபோர்டு சார்லூயிஸில் வேலை மாற்ற வேளை (புகைப்படம்: WSWS)

நாங்கள் பேசும் பல சக ஊழியர்களும், உள்-நிறுவன ஏலப் போட்டியில் பங்கேற்பு இருந்திருக்கக் கூடாது என்று நினைக்கிறார்கள். ஆனால் மார்குஸ் தால் (Markus Thal) இன் கீழ் சார்லூயிஸில் உள்ள எங்கள் தொழிற்சாலை தொழிற்சங்க குழு மற்றும் ஹோஸே லூயிஸ் பார்ராவின் கீழ் ஸ்பானிய தொழிற்சாலை தொழிற்சங்க குழு இரண்டுமே அதை வலியுறுத்தின.

'தங்கள் பணியாளர்களிடம்' இருந்து அதிக தியாகங்களை கோர முடியும் என்றும், அதன் மூலம் ஒப்பந்தத்தை வெல்ல முடியும் என்றும் இருவரும் உறுதியாக நம்பினர். இன்றுவரை, தாலும் அவரின் கூட்டாளிகளும் அவர்கள் என்ன வெட்டுக்களைச் செய்தார்கள் என்பதைப் பற்றி பற்றி மௌனம் சாதிக்கின்றனர். அவர்கள் கையொப்பமிட்ட இரகசிய ஒப்பந்தம் முக்கியமாக தொழிலாளர்களிடம் எதையும் கூறுவதைத் தவிர்ப்பதற்காக இருந்தது, ஏனென்றால் நம்மில் பெரும்பாலோர் நிச்சயமாக ஒப்புக்கொண்டிருக்க மாட்டார்கள்.

தாலும் அவரது தொழிற்சாலை தொழிற்சங்க குழு பிரதிநிதிகளும் தாங்கள் சண்டையிடுவதாக தொடர்ந்து கூறுகின்றனர். அதன் சமீபத்திய துண்டுப் பிரசுரத்தில் கூட, தொழிற்சாலை தொழிற்சங்க குழு அறிவிக்கிறது: 'இப்போது எங்கள் தளத்தைப் பாதுகாப்பதற்கும், முடிந்தவரை பல வேலைகளுக்காகவும் நாம் முழு பலத்துடன் போராட வேண்டும்.' ஆனால் போராட, 'எங்களுக்கு ஃபோர்டிடமிருந்து நம்பகமான பதில்கள் தேவை.' வேறு வார்த்தைகளில் கூறுவதானால், என்ன எதிர்பார்க்க வேண்டும் என்று ஃபோர்டு சொல்லவில்லை என்றால், நாம் போராட முடியாது.

தொழிற்சாலை தொழிற்சங்க குழுவைப் பொறுத்தவரை, போராட இது ஒருபோதும் சரியான நேரம் அல்ல! இதன் மூலம் தொழிற்சாலை தொழிற்சங்க குழு பிரதிநிதிகள் புரிந்து கொள்ளும் ஒரே விஷயம், நிறுவனத்தின் முன் கூக்குரலிடுவதும், கையூட்டுக்காக பிச்சை எடுப்பதும் மட்டுமே. எங்கள் முழங்கால்களுக்கு இந்த 'சண்டை' ஆல் ஆபத்து ஏற்படாமல் இருக்க நாங்கள் அமைதியாக இருக்க வேண்டும்.

IG Metall தொழிற்சங்கம் மற்றும் தொழிற்சாலை தொழிற்சங்க குழுவின் ஒரே நோக்கம், ஒரு உண்மையான போராட்டத்திலிருந்து நம்மைத் தடுப்பது மட்டுமே. கடந்த புதன் கிழமையன்று நடந்த எதிர்ப்புப் பேரணி வேண்டுமென்றே நிறுவன வளாகத்திலிருந்து வெகு தொலைவில் நடத்தப்பட்டது - கோபமடைந்த சக தொழிலாளர்கள் இந்த முயற்சியை கையிலெடுத்து, நிறுவனத்தின் வாயில்களை தன்னிச்சையாக ஆக்கிரமித்து வேலைநிறுத்தத்தைத் தொடங்குவார்கள் என்ற அச்சத்தில்.

ஒரு தொழிலாளி பரவலான உணர்வை சுருக்கமாகக் கூறினார்: 'அவர்கள் உடனடியாக நுழைவாயில் மற்றும் அனைத்து வாயில்களையும் அடைத்திருக்க வேண்டும், எவரையும் உள்ளே அல்லது வெளியே விடக்கூடாது.' மற்றொருவர், “ஒரு வாகனத்தையும் வெளியே அனுமதிக்கக் கூடாது” என்றார்.

தற்போது ஒழுங்கமைக்கப்பட்ட கேள்வி நேரங்கள் மற்றும் துறைசார் கூட்டங்கள் தொழில்துறை நடவடிக்கைக்கு சமமானவை அல்ல. அத்தகைய நடவடிக்கையைத் தடுப்பதே அவர்களின் நோக்கம். இந்த கேள்வி-பதில் அமர்வுகளால் இழந்த சிறிய அளவு நேரம் வரும் வாரங்களில் எளிதாக ஈடுசெய்யப்படும். எல்லாவற்றிற்கும் மேலாக, தொழிற்சாலை தொழிற்சங்க குழு குறுகிய கால வேலையை நிராகரித்தது. தொழிற்சாலை விடுமுறை நாட்களில் கூட வேலை செய்வது நிறுத்தப்படாது. மற்ற தொழிற்சாலைகளுக்கான உதிரிப்பாகங்கள் அழுத்தும் ஆலையில் உள்ள உற்பத்தி வரிசையில் இருந்து வர வேண்டும்.

பணிகள் அரசியலமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள 'நம்பகமான ஒத்துழைப்பை' நிறுவனம் உடைத்துவிட்டதாக தொழிற்சாலை தொழிற்சங்க குழு பிரதிநிதிகள் குற்றம் சாட்டுகின்றனர். இருப்பினும், அவர்கள் வேலைகள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு அடிமைத்தனமாக அடிபணிந்தவர்கள் என்பதை தொடர்ந்து உறுதிப்படுத்துகிறார்கள்.

தொழிற்சாலை தொழிற்சங்க குழு மற்றும் IG Metall ஆகியவை ஃபோர்டு குழுவால் காட்டிக் கொடுக்கப்படவில்லை. உயர் நிர்வாகத்துடன் சேர்ந்து எங்களை ஏமாற்றிவிட்டனர். மேலும் இந்த மோசடி தொடரும். கசாப்புக் கூடத்திற்குச் செல்லும் ஆடுகளைப் போல, நாம் நம் தலைவிதிக்கு சரணடைய வேண்டும். 'எங்கள் ஆலையைப் பாதுகாப்பதற்கும், முடிந்தவரை பல வேலைகளுக்கும்' பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக தொழிற்சாலை தொழிற்சங்க குழுவின் அறிவிப்பு, அது ஏற்கனவே வேலை வெட்டுக்களுக்கு அதன் ஆசீர்வாதத்தைக் கொடுத்துள்ளது என்பதைக் காட்டுகிறது.

தொழிற்சாலை தொழிற்சங்க குழுவின் யோசனைகளின்படி சென்றால் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பது தெளிவாகிறது. தற்போது வாட்ஸ்அப் வழியாக ஒரு ஆடியோ நம்மிடையே விநியோகிக்கப்படுகிறது, இதில் ஜேர்மனியின் பிரான்சின் லுக்செம்பேர்க்கின் எல்லை முக்கோணத்தில் உள்ள நாடுகடந்த வாகனத் துறையின் சங்கமான ஆட்டோரேஜியனின் நிர்வாக இயக்குனர் அர்மின் கெஹ்ல் (Armin Gehl), நிறுவனங்கள் அடுத்த மூன்று ஆண்டுகளை எவ்வாறு கற்பனை செய்கின்றன என்பதை விளக்குகிறது.

சார்லூயிஸ் அழுத்தும் ஆலைக்கு ஒரு சிறந்த வாய்ப்பை அவர் காண்கிறார், அதன் பின்னர் கொலோன், க்ரையோவா (ருமேனியா) மற்றும் வலென்சியாவில் உள்ள ஆலைகள் மற்ற ஐரோப்பிய ஃபோர்டு ஆலைகளுடன் இணைந்து வேலை செய்ய சுமார் 1,200 பேர் பணியமர்த்தப்படுவார்கள். மூன்று ஆண்டுகளில் எஞ்சியிருக்கும் 4,200 ஊழியர்களில் சுமார் 3,000 பேர் 'மட்டுமே' வேலை இழப்பார்கள் என்று அர்த்தம். சப்ளையர் பார்க்கில் உள்ள 1,500க்கும் மேற்பட்ட ஊழியர்களில், 1,000 பேர் “மட்டுமே” 'பணிநீக்கம்' செய்யப்பட வேண்டும்.

வேலை இழக்கும் 3,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்களில் பெரும்பாலானோர் ஒரு தொகையுடன் தாமாகவே வெளியேறும் திட்டத்தின் மூலம் வெளியே செல்வார்கள் என்று ஃபோர்டிடம் இருந்து கேள்விப்பட்டதாக கெஹ்ல் கூறினார். இதைத்தான் IG Metall தற்போது தொழிற்சாலை தொழிற்சங்க குழுவின் நெருக்கமான ஒத்துழைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது: அழுத்தும் ஆலை தளத்தையும் மற்றும் 'முடிந்தவரை பல வேலைகயும்' பாதுகாக்கும்.

நாங்கள் மீண்டும் சொல்கிறோம்: IG Metall மற்றும் அதன் தொழிற்சாலை தொழிற்சங்க குழு பிரதிநிதிகளுக்கு எதிரான போராட்டத்தில் மட்டுமே எங்கள் ஆலை மற்றும் எங்கள் வேலைகளைப் பாதுகாப்பது சாத்தியமாகும், அவர்களுடன் அல்ல!

இப்போது நடவடிக்கை எடுக்காவிட்டால், 50 ஆண்டுகளுக்கும் மேலாக எங்கள் தந்தைகள் மற்றும் தாத்தாக்கள் கட்டியெழுப்பிய ஆலை மூடப்படும்.

போராட்டத்தின் உண்மையான நடவடிக்கைகளைத் தயாரிக்க நாங்கள் முன்மொழிகிறோம்: வேலைநிறுத்தங்கள், இயந்திரங்களை கழற்றுவதையும் அகற்றுவதையும் தடுப்பதற்கான நடவடிக்கைகள், பிற தளங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு பிரதிநிதிகளை அனுப்புதல். வலென்சியா (ஸ்பெயின்), கொலோன் (ஜேர்மனி), கிரயோவா (ருமேனியா), துருக்கி, அமெரிக்கா மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக இந்தியாவில் உள்ள ஃபோர்டு சகோதர சகோதரிகள் எங்கள் நெருங்கிய கூட்டாளிகள்.

வலென்சியாவில் உள்ள எங்கள் சகாக்கள் பாரிய ஊதிய வெட்டுக்கள், வேலை இழப்புகள் மற்றும் அவர்களின் வேலை நிலைமைகளின் சரிவு ஆகியவற்றுடன் உற்பத்தியைத் தொடர்வதற்கான அர்ப்பணிப்புக்கு பணம் செலுத்துகின்றனர். கொலோன், ருமேனியா மற்றும் துருக்கியில் உள்ள தொழிலாளர்களும் புதுப்பிக்கப்பட்ட தாக்குதல்களை எதிர்பார்க்க வேண்டும். ஃபோர்டு குழுமத்தை எரிப்பு இயந்திரப் பிரிவாகவும் (combustion engine division) மின் பிரிவாகவும் (e-division) பிரிப்பது 10 சதவீத இலாப வரம்புக்கான கோரிக்கைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது!

இந்தியாவில் இரண்டு ஆலைகளை மூடப்போவதாக ஃபோர்டு அறிவித்துள்ளது. ஒரு ஆலை டாட்டா மோட்டார்ஸுக்கு விற்கப்பட்டுள்ளது, மற்றொன்று வெள்ளிக்கிழமை அதன் கதவுகளை எப்போதைக்கும் மூட வேண்டும். ஆனால் இந்தியாவில் உள்ள எங்கள் சகாக்கள் நான்கு வாரங்களுக்கு முன்பே வேலைநிறுத்தம் செய்து தொழிற்சாலை வாயில்களை ஆக்கிரமிக்கத் தொடங்கினர்.

முதலில், ஃபோர்டு தொழில்துறை நடவடிக்கைக்கு எதிராக கருங்காலிகளை பயன்படுத்தி மீண்டும் போராட முயன்றது, ஆனால் பின்னர் அதன் இழப்பீட்டு சலுகைகளை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தொழிற்சாலையில் கிட்டத்தட்ட முடிக்கப்பட்ட 1,400 கார்களை இன்னும் விற்க விரும்புவதால், இப்போது மூடுதலை ஒரு மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளது.

எங்கள் இந்திய சகாக்கள் ஃபோர்டின் சலுகைகளை தொடர்ந்து நிராகரிக்கின்றனர். சிலர் எங்களைத் தொடர்பு கொண்டு எங்களுடனான கருத்துப் பரிமாற்றத்தில் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.

உலகெங்கிலும் உள்ள ஃபோர்டு சகாக்கள் மட்டுமல்ல, மற்ற தொழிலாளர்களும் ஆலை மூடலுக்கு எதிராக போராடுவதற்கான முயற்சியை வரவேற்பார்கள். ஏனெனில், உலகெங்கிலும் ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் அதிகரித்து வருகின்றன, குறிப்பாக விலைவாசி உயர்வினால்.

கடந்த சில நாட்களாக, தொழிலாளர்களின் போராட்ட விருப்பம் அதிகமாக இருப்பதைக் கண்டோம். ஆனால், தொழிற்சாலையைக் காக்க கொள்கை ரீதியான போராட்டத்தை நடத்துவதில் மிக முக்கியமான நடவடிக்கை, நமது சாமானிய தொழிலாளர்களின் நடவடிக்கைக் குழுவை உருவாக்குவதுதான்.

தொழிற்சாலை தொழிற்சங்க குழுவுக்கு ஒரு பரவலான எதிர்ப்பை, அமைப்பு ரீதியான அரசியல் ரீதியான வெளிப்பாட்டைக் கொடுக்க! பின்வரும் எண்ணிற்கு வாட்ஸ்அப் செய்தியை அனுப்பவும்: +491633378340

இந்த போராட்ட நடவடிக்கைகளைப் பற்றி எங்களுடன் கலந்துரையாடுங்கள்:

  • இப்போதே வேலைநிறுத்தம் செய்யுங்கள், ஏனென்றால் 2025 வரை நாம் காத்திருக்கக்கூடாது! அது தவணை முறை மரணமாக இருக்கும்.
  • முதலில் ஸ்பெயின் மற்றும் இந்தியா, ஆனால் கொலோன், ருமேனியா, துருக்கி மற்றும் அமெரிக்காவிலும் உள்ள நமது சகோதர, சகோதரிகளுடன் ஐக்கியப்படுங்கள்.
  • ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் உலகெங்கிலும் உள்ள மற்ற தொழிலாளர்களுடன் தொடர்பு கொள்ளுங்கள், அவர்கள் அனைவரும் பங்குதாரர்கள் மற்றும் நிர்வாகிகளின் செழுமைக்காகவும், போர் மற்றும் இராணுவவாதத்திற்காகவும் தங்கள் வாழ்வாதாரத்தை செலுத்துவதை எதிர்க்கின்றனர்!
Loading