இந்திய சாம்சங் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் பெருகிவரும் அரசு அடக்குமுறைக்கு மத்தியில் தொடர்கின்றது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இந்தியா, சென்னையில் உள்ள தென்கொரியாவை தளமாகக் கொண்ட சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் வேலைத் தளத்தில் 1,500க்கும் அதிகமான தொழிலாளர்கள் பத்து நாட்களுக்கு மேலாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் தொழிற்சங்க அங்கீகாரம், சம்பள அதிகரிப்பு மற்றும் சிறந்த வேலை நிலைமைகளை கோருகின்றனர். அவர்களின் திடீர் வேலைநிறுத்தம் தொழிற்சாலையின் உற்பத்தியை மோசமாக பாதித்துள்ளது.

எவ்வாறாயினும், வேலை நிறுத்தம் செய்யும் சாம்சங் தொழிலாளர்களின் தொழிற்சங்கமான சாம்சங் இந்திய தொழிலாளர் சங்கம் இணைந்திருக்கின்ற, ஸ்ராலினிச தலைமையிலான இந்திய தொழிற்சங்க மையம் (CITU), முதலீட்டாளர்-சார்பு திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான தமிழ்நாடு அரசாங்கத்தை, இந்த வேலை நிறுத்தத்தில் தலையிட்டு தீர்த்து வைக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது. செப்டெம்பர் 9 அன்று இந்த வேலை நிறுத்தம் தொடங்கிய பின்னர், தொழிலாளர் ஆணையகத்திற்கும் தொழிங்சங்கத் தலைவர்களுக்கும் இடையிலான மூன்று கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்தே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ள 1,700 ஊழியர்களில் 1,500 நிரந்தரத் தொழிலாளர்கள் வெளிநடப்பு செய்த போது, நிர்வாகம், வேலை நிறுத்தத்தை குழப்புவதற்காக 1,000 ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பயன்படுத்தி உற்பத்தியை தொடர முயன்றாலும், தொழிற்சாலையில் உற்பத்தி முற்றிலும் பாதிப்படைந்துள்ளது.

வேலைநிறுத்தம் செய்யும் இந்திய சாமசங் தொழிலாளர்கள். அவர்கள் வேலைநிறுத்தம் செய்யும் ஆலையில் இருந்து 500 மீட்டருக்குள் நடமாடுவதை தடைசெய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேலைநிறுத்தம் நடக்கும் ஆலை, இந்தியாவில் உள்ள இரு சாம்சங் தொழிற்சாலைகளில் ஒன்றாகும். இது இந்தியாவின் தென் மாநிலமான தமிழ் நாட்டின் தலைநகரான சென்னையில் இருந்து, 56 கிலோ மீட்டர் துாரத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதுாருக்கு அருகில் சுங்குவார்சத்திரத்தில் அமைந்துள்ளது. மற்றொரு தொழிற்சாலை, டெல்லிக்கு வெளியே வட இந்திய உத்திர பிரதேசத்தில் உள்ள நவீன தொழிற்சாலை நகரமான நொய்டாவில் அமைந்துள்ளது.

சுங்குவார்சத்திரத்தில் அமைந்துள்ள ஆலையில் தொலைக்காட்சிகள், குளிர்சாதனப்பெட்டிகள், சலவை இயந்திரங்கள் மற்றும் வாயுசீராக்கிகள் போன்றவை உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த ஆலையானது நிறுவனத்திற்கான பிரதான வளர்ந்த சந்தையான இந்தியாவில், அதன் ஆண்டு வருமானமான 12 பில்லியன் அமெரக்க டாலர்களில் 30 சதவீத அளவு பங்களிப்பு செய்கின்றது.

எவ்வாறெனினும், சாம்சங் நிறுவனத்திற்கு இந்தளவு பாரிய இலாபத்தை தொழிலாளர்கள் ஈட்டிக்கொடுத்தாலும், அவர்களுக்கு கிடைப்பதோ குறைந்த சம்பளமும் மோசமாக சுரண்டப்படும் தொழில் நிலைமைகளுமே ஆகும். இந்த வேலைநிறுத்தமானது 2007 இல் இந்தியாவில் நிறுவனம் அதன் செயற்பாடுகளை தொடங்கியதில் இருந்து இந்தியாவில் உள்ள சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் தொழிலாளர்களின் முதலாவது வேலைநிறுத்தம் ஆகும். ஜூலையில் தென்கொரியாவில் தொடங்கிய 30,000க்கும் அதிகமான சாம்சங் தொழிலாளர்களின் ஒரு தொடர் வேலை நிறுத்ததை அடுத்து இந்தியாவில் இந்த வேலைநிறுத்தம் தொடங்கியது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் அவரது அதி-வலதுசாரி இந்து மேலாதிக்கவாத அரசாங்கமும், சீனாவை விட மிகக் குறைந்த-செலவுடைய மாற்றீடு என இந்தியாவை சித்தரித்து, சர்வதேச உற்பத்தி முதலீட்டை கவர முயற்சிக்கின்றன.

2024 மே மாதம், சென்னையில் சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் தொழிலாளர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட ஆண்டு சம்பள உயர்வு 29.83 டாலராகும் (2,500 ரூபா). இது இந்தத் தொழிலாளர்கள் உருவாக்கும் பாரிய இலாபங்களுடன் ஒப்பிட்டால் மிக அற்ப தொகையாகும். அத்துடன் அருகில் உள்ள தொழிற்சாலைத் தொழிலாளர்கள் ஈட்டும் வருமானத்தை விட குறைவானதாகும். 2023 இல் வருடாந்த சம்பளத் தொகை அதிகரிப்பு 41.76 டாலர் ஆகும்.

தொழிற்சாலை நிர்வாகத்தால் “ஏ”, “பி” மற்றும் “சி” தர தொழிலாளர்கள் என வகைப்படுத்தப்பட்ட குறைந்த எண்ணிக்கையிலான தொழிலாளர்களே 2024 ஆண்டுக்கான முழு ஊதிய அதிகரிப்பைப் பெற்றுள்ளனர். கிட்டத்தட்ட 5 முதல் 10 பேர்வரை இருக்கும் “ஏ” தர தொழிலாளர்கள், ஆண்டுக்கு 29.3 டாலர் (2,500 ரூபா) அதிகரிப்புக்கு உரித்தானவர்கள். அதே நேரம், பி மற்றும் சி தர ஊழியர்கள் ஆண்டுக்கு முறையே 11.93 டாலர் (1,000 ரூபா) மற்றும் 10.74 டாலர் (900 ரூபா) அதிகரிப்புக்கு உரித்துடையவர்கள் ஆவர். ஆண்டுக்கு 596.58 டாலரில் (சுமார் 50,000 ரூபாய்) இருந்து 656.23 டாலர் (சுமார் 55,000 ரூபா) வரை ஊதியம் பெறும் தொழிலாளர்களுக்கு, கிட்டத்தட்ட 35.79 டாலர் (3,000 ரூபா) ஊழியர் சேமலாப நிதி உள்ளடக்கப்படவில்லை.

உலக சோசலிச வலைத் தளத்துடன் பேசிய ஒரு தொழிலாளி, தான் சாம்சங்கில் பத்து ஆண்டுகள் வேலை செய்த பின்னர் தற்போதும் வெறும் 30,000 ரூபா (சுமார் 370 டாலர்) மட்டுமே பெறுவதாகவும் வீட்டுக்கு 28.000 ரூபா மட்டுமே கொண்டு செல்வதாகவும் குறிப்பிட்டார்.

இந்த தொழிற்சாலை, இரு ஒன்பது மணித்தியால வேலை நேர சுற்றுக்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொன்றிலும் 800 தொழிலாளர்கள் உள்ளனர். முதல் சுற்று காலை 8 மணியில் இருந்து மாலை 5 மணி வரைக்கும். மற்றைய சுற்று இரவு 8 மணியில் இருந்து மறுநாள் காலை 5 மணி வரைக்கும் நடைபெறுகின்றது. ஆனால், தொழிலாளர்கள் நாளொன்றுக்கு 11 மணித்தியாலங்களும் வாரத்திற்கு நான்கு நாட்களும் வேலை செய்ய வேண்டும் என்ற கட்டாயம் உள்ளதால், இந்த சுற்றுமுறைகள் பெயரளவில் மாத்திரமே உள்ளன. அவை மேலதிக நேரமாக கருதப்படுகின்றது.

சில தொழிலாளர்கள் தமது வேலை நாட்களை பாதி வெளிச்ச பிரதேசங்களில் கழிப்பதோடு, நாலு அல்லது ஐந்து மணித்தியாலங்களாக இடைவெளியின்றி வேலை செய்து, உடல் உள களைப்பை எதிர்கொள்கின்றனர். தொழிற்சங்கம் குறிப்பிடுவது போல சித்திரவதைக்கு சமமான இந்த நிலைமை, மனித உரிமைகளின் அப்பட்டமான மீறல் ஆகும்.

இந்த துஷ்பிரயோக நிலைமைகள் மற்றும் குறைந்த ஊதியங்கள் காரணமாக, தொழிலாளர்கள் தமது அடிப்படை உரிமைகள் மீதான சாம்சங் நிறுவனத்தின் மீறலுக்கு எதிராகப் போராடுவதற்கு, ஒரு தொழிற்சங்கத்தை அமைக்க ஒன்றிணைந்துள்ளனர்.

சாம்சங் இந்திய தொழிலாளர் சங்கம் (SIWU) 2024 ஜூனில் சாம்சங் ஊழியர்களால் ஸ்தாபிக்கபட்டது. அரசு அங்கீகாரம் பெறும் முயற்சியுடனும், சாம்சங் ஒரு பகுதியாக இருக்கும் ஸ்ரீபெரும்புதுார் தொழிற்துறை பேட்டையில், பல தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ராலினிச-தலைமையிலான இந்திய தொழிற்சங்கங்களின் மையத்துடன் (CITU) இணைப்பை ஸ்தாபிப்பதற்குமான முயற்சியுடனும் தொழிலாளர்கள் இதை ஸ்தாபித்தனர்.

SWIU இன் உருவாக்கத்தை தடுக்கும் வகையில், சாம்சங் நிர்வாகம் அப்போது “தொழிலாளர்களின் குழுவொன்றை ஏற்பாடு செய்து அதில் இணையுமாறு ஊழியர்களை ஊக்குவித்தது. மேலதிகமாக, நிர்வாகம் தேந்தெடுக்கபட்ட தொழிற்சங்க அதிகாரிகளை வேலை நீக்கம் செய்ய அச்சுறுத்துவது மற்றும் உள்ளக இட மாற்றங்களைத் தடுப்பது உட்பட பல்வேறுபட்ட அடக்குறை தந்திரோபாயங்களையும் பயன்படுத்தியது.

CITU அதன் துரோக, நிர்வாக-சார்பு பாத்திரத்திற்கு பேர்போனது என்றாலும், சாம்சங் இந்தியா நிறுவனமானது தொழிலாளர்கள் மீது அதன் கட்டுபாடற்ற சர்வதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதன் பேரில், இருங்காட்டுக்கோட்டையில் உள்ள தொழிலாளர் ஆணையாளரிடம் அதிகாரப்பூர்வமாக தொழிற்சங்கத்தை பதிவுசெய்வதைத் தடுத்தது.

பதிலிறுப்பாக, தொழிலாளர்கள் உற்பத்தியை நிறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடத் தீர்மானித்தனர். இதற்கிடையில், நிறுவனத்தின் வளாகத்தில் இருந்து 500 மீட்டருக்குள் மறியல் போராட்டங்களைச் செய்வதைத் தடுக்கும் நீதிமன்றத் தடையை நிர்வாகம் பெற்றது. CITU இந்தத் தீர்மானத்தை அமுல்படுத்த வெளிப்படையாவே ஒப்புக்கொண்டது. வேலைநிறுத்தத்தை தனிமைப்படுத்தவும், நசுக்கவும் மேற்கொண்டு ஒரு பிற்போக்கு நகர்வில், தொழிலாளர்கள் ஊடகங்கள் மற்றும் யூடியூப் தளங்களுடன் பேசுவதைத் தவிர்க்கவேண்டும் என CITU கோரியது. சாம்சங் தொழிலாளர் பரந்த ஆதரவை பெறுகின்றமை தொடர்பாக பீதியடைந்த CITU, “வெளிநபர்கள் இதில் தலையிடக் கூடாது, CITU தொழிலாளர்களின் அனைத்துப் பிரச்சினையையும் தீர்க்கும்” என அறிவித்து, இந்த வேலைநிறுத்தத்தைப் பற்றி யாரிடமும் பேச வேண்டாம் என தொழிலாளர்களிடம் கூறியது.

இந்த ஜனநாயக விரோத வாயடைப்புக் கட்டுப்பாடு இருந்தபோதிலும், உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் தொழிலாளர்களிடம் அவர்களின் போராட்டம் தொடர்பாக தொடர்ந்து பேசி வருகின்றனர்.

நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கள் சொந்த வாகனங்கள் மற்றும் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தி, செப்டெம்பர் 16 அன்று மாவட்ட ஆட்சியாளரிடம் தமது கோரிக்கைகளை முன்வைக்க காஞ்சிபுரத்துக்கு சென்றபோது, அவர்களையும், CITU மாநில செயலாளர் இ. முத்துக்குமாரையும் பொலிஸ் “தடுப்பு கைதில்” வைத்தது. அவரகள் இரவு 9 மணிவரை திருமண மண்டபமொன்றில் தடுத்து வைக்கப்பட்டனர். இந்த வெட்கக் கேடான ஜனநாயக-விரோத நடவடிக்கைக்கு ஒரு சாக்குப்போக்காக, பாடசாலைகள் மற்றும் மருத்துவமனைகள் உள்ள ஒரு பரபரப்பான பகுதியில் அணிதிரள அவசியமான அனுமதி தொழிலாளர்களிடம் இல்லை எனவும், இந்த போராட்டம் “தொந்தரவை“ ஏற்படுத்தும் எனவும் பொலிசார் கூறினர்.

செப்டம்பர் 18 அன்று, சாம்சங் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாகவும் செப்டம்பர் 16 அன்று பொலிசாரின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் 12 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அதிகாரிகளை போராட்டம் நடத்த விடாமல் திராவிட முன்னேற்றக் கழக அரசாங்கம் தடுத்தது. தங்கள் அரசாங்கத்தின் நடவடிக்கையை மூடிமறைக்கும் முயற்சியில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொழிலாளர் முன்னேற்ற கூட்டமைப்பைச் சேர்ந்த அதிகாரிகள் இந்த தடுக்கப்பட்ட போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

CITU இன் துரோகப் பாத்திரம், அதனுடன் இணைத்திருக்கும் அரசியல் கட்சிகளின் பிறபோக்கு அரசியலில் இருந்து ஊற்றெடுக்கின்றது. இந்திய தொழிற்சங்கங்களின் மையம் (CITU), அனைத்து இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (AITUC) ஆகிய இரண்டினதும் தாய்க் கட்சிகள், முறையே இந்திய ஸ்ராலினிச நாடாளுமன்ற கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியும் (CPM) இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் (CPI) ஆகும். இந்தியாவின் முதலாளித்துவ சார்பு தொழிலாளர் உறவுமுறை அமைப்பில் தொழிலாளர்களை சிறை வைத்து, தொழிலாள வர்க்கத்தை திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் கட்சி மற்றும் பிற “முற்போக்கு” முதலாளித்துவக் கட்சிகள் என்று கூறப்படுவதற்கு அரசியல்ரீதியாக அடிபணியச் செய்வதன் மூலம், ஸ்ராலினிசமும் அவர்களது தொழிற்சங்கங்களும் பல தசாப்தங்களாக இந்தியாவின் முதலாளித்துவ ஆட்சிக்கு பிரதான சமூக முட்டுக்கொடுப்பாளர்களாக செயல்பட்டு வருகின்றன.

வகுப்புவாதத்துடன் ஒத்துழைப்பதில் நீண்ட வரலாற்றை அவர்கள் கொண்டிருந்தாலும், காங்கிரஸ் கட்சியும் திராவிட முன்னேற்றக் கழகம் போன்ற மாநில முதலாளித்துவ கட்சிகளும், இந்து மேலாதிக்கவாத பாரதீய ஜனதா கட்சிக்கு தாம் ஒரு “மதசார்பற்ற” மாற்றீடு என்று கூறிக்கொள்கின்றன. அதே நேரத்தில், ஸ்ராலினிசக் கட்சிகள், திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிற்போக்கு வர்க்கத் தன்மையையும், அதன் தொழிலாள வர்க்க விரோத பதிவேடுகளையும் வேலைத்திட்டத்தையும் நனவுடன் மறைத்துவிட்டன.

ஃபோர்ட், ரெனால்ட்-நிஷான், யமகா மோட்டார்ஸ், ஃபொக்ஸ்கோன் மற்றும் பி.வை.டி. ஆலைகளில் உள்ள தொழிலாளர்கள் சமீபத்திய ஆண்டுகளில் அடைந்த தோல்விகளால் அவர்களின் துரோக பாத்திரங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன.

உதாரணமாக, ஊதிய உயர்வு, வேலை நிலைமைகள், ஒப்பந்தத் தொழிலாளர்களை முறைப்படுத்துதல் மற்றும் தொழிற்சங்க அங்கீகாரம் உட்பட இதே போன்ற கோரிக்கைகளுக்காக, 2010இல் போராடிய 7,000 பொக்ஸ்கோன் மற்றும் 3,000 பி.வை.டி. தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை CITU காட்டிக்கொடுத்தது. இரண்டு வேலை நிறுத்தங்களும் தமிழ்நாடு திராவிட முன்னேற்றக் கழக அரசாங்கத்தால் ஒழுங்கமைக்கபட்ட கொடூரமான பொலிஸ் அடக்குமறையை எதிர்கொண்டன.

CITU மற்றும் CPM ஆகியன ஸ்ரீபெரும்புதுார்-ஒரகடம் சிறப்புப் பொருளாதார வலயங்களில் உள்ள பல்வேறு தொழிலாளர்களின் போராட்டங்களை இறுக்கமாக கட்டுப்படுத்தியதோடு, ஒருவரையொருவர் தனிமைப்படுத்தி பரந்த நகர்ப்புற மற்றும் கிராமப்புற தொழிலாளர்களில் இருந்து அவர்களைப் பிரித்து, ஒவ்வொரு தொழிலாளர் குழுவையும் தங்கள் அரசாங்க ஆதரவு பெற்ற நாடுகடந்த முதலாளிகளுக்கு எதிராக தாங்களாகவே தனித்துப் போராட விட்டுவிட்டன.

2022 செப்டம்பரில், சென்னையில் உள்ள ஆலையை மூடி, 4,000 தொழில்களை அழித்து இந்தியாவில் தனது செயற்பாடுகளை நிறுத்துவதாக ஃபோர்ட் அறிவித்த போது, ஸ்ராலினிச CPM அரசியல் ரீதியில் கூட்டணி சேர்ந்துள்ள திராவிட முன்னேற்றக் கழக அரசாங்கம், இந்த ஆலை மூடுதலை நடைமுறைப்படுத்த ஃபோர்ட் நிர்வாகத்தின் பக்கம் நின்றது.

அதன் உண்மையான வர்க்கத் தன்மையை மேலும் வெளிப்படுத்தும் வகையில், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் தமிழ் நாடு முதலமைச்சருமான ஸ்ராலின், 2024 செப்டம்பர் 10 அன்று, மிச்சிகனில் உள்ள ஃபோர்ட் தலைமயகத்தில் உள்ள உயர்மட்ட நிர்வாகத்தை சந்தித்து, அதன் உற்பத்திச் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிக்குமாறு வலியுறுத்தினார். மூடிய ஆலையை உலக சந்தைக்கான மலிவு-உழைப்பு வாகனங்களின் சாத்தியமான உற்பத்தியாளர் என அவர் புகழ்ந்தார். இந்தச் சுற்றுப்பணத்தின் போது, சான் பிரான்ஸ்கோ மற்றும் சிக்காகோவில் உள்ள உலகின் மிக மதிப்புமிக்க பதினாறு பெரும் நிறுவனங்களுடன் மொத்தமாக 7,016 கோடி (835 மில்லியன் டாலர்) பெறுமதியான உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன.

தேசிய பா.ஜ.க. அரசாங்கத்தின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான தமிழ் நாடு அரசாங்கம், சர்வதேச முதலீட்டாளர்களை கவரும் முயற்சியின் ஒரு பாகமாக, வேலை நாளை 12 மணித்தியாலங்களாக நீடிக்கும் வகையில் 2023 ஏப்ரல் 23 அன்று தொழிற்சாலைகள் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியது. நீண்ட நேர வேலைநாள், தமது இலாபங்களை அதிகரிக்க ஆர்வமுள்ள முதலீட்டாளர்களை ஈர்க்கும் என்று ஒப்புக்கொண்ட ஸ்ராலின், “இந்த சட்டமானது தமிழகத்தில் பாரிய முதலீட்டாளர்களை ஈர்ப்பதோடு ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்ற பார்வையிலேயே ஏற்றுக்கொள்ளப்பட்டது” எனக் கூறினார்.

மாநிலம் முழுவதிலும் உள்ள 40,000க்கும் அதிகமான தொழிற்சாலைகளில் வேலை செய்யும் தொழிற்துறை ஊழியர்களின் பாரிய எதிர்ப்புக்கு மத்தியில், திராவிட முன்னேற்றக் கழக அரசாங்கம் அதன் தொழிற்சாலைகள் திருத்தச் சட்டம் 2023ஐ திரும்பப் பெற முடிவுசெய்தது. இந்தச் சட்டத்தை தற்காலிகமாக திரும்பப் பெறுவதானது எதிர்ப்பை கலைப்பதற்காகவும் இந்த சட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்துவதற்கு அல்லது சாதகமான தருணத்தில் இதே போன்ற விதிகளை அறிமுகப்படுத்துவதற்குத் தேவையான நேரத்தை எடுத்துக்கொள்வற்கு மட்டுமே ஆகும்.

இதுவே ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தேசிய, முதலாளித்துவ-சார்பு தொழிற்சங்கங்கள் ஆற்றும் பாத்திரமாகும். இந்த ஆண்டு கோடைப்பருவத்தில் தென்கொரியாவில் உள்ள சாம்சங் இலத்திரனியல் தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்களில், தேசிய சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் சங்கம் (NSEU) , தொழிலாளர்களின் போராட்டங்களைத் தடுக்கும் நிறுவனத்தின் பொலிசாக செயற்பட்டதுடன், ஒரு பரந்த போராட்டத்தை தொடங்குவதில் இருந்து அவர்களைத் தடுத்தது.

நிரந்தரமான வேலைகள், கண்ணியமான ஊதியங்கள், நவீனமயமாக்கப்பட்ட வேலை நிலைமைகள் மற்றும் அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டத்தை முதலாளித்துவ அமைப்புமுறையையும் அதன் அரசியல் முகவர்களையும் சாவல் செய்வதன் மூலமாக மட்டுமே முன்னெடுக்க முடியும். இதற்கு அனைத்து ஸ்ராலினிச-மாவோவாத கட்டுப்பாட்டில் உள்ள முதலாளித்துவ சார்பு தொழிற்சங்கங்களில் இருந்து முழுமையாக முறித்துக்கொள்வதும், நேர்மையான சுயாதீனமான சாமானியத் தொழிலாளர் நடவடிக்கை குழுக்களை அமைப்பதும் அவசியமாகும்.

சாம்சங் போன்ற நாடுகடந்த நிறுவனங்களை எதிர்த்துப் போராட, தமிழ் நாடு மட்டுமன்றி இந்தியா முழுவதும் மற்றும் முக்கியமாக தென்கொரியாவில் உள்ள சாம்சங் தொழிலாளர்கள் உட்பட, உலகம் முழுவதிலும் உள்ள ஏனைய தொழிலாளர்களையும் இணைக்கும் மூலோபாயம் அவசியமாகும்.

இந்திய சாம்சங் நிறுவனத்தில் உள்ள தொழிலாளர்கள், ஏனைய தொழிற்சாலைகள் மற்றும் நாடுகளில் உள்ள தமது வர்க்க சகோதரர்களைப் பின்பற்றி, தொழிலாளர் நடவடிக்கை குழுக்களின் சர்வதேச கூட்டணியை (IWA-RFC) கட்டியெழுப்ப வேண்டும். அதன் மூலம் தொழிலாளர்கள் தமது போராட்டங்களை ஒழுங்கமைக்கவும் அனைத்து ஒடுக்கப்பட்டவர்களுக்கான சிறந்த எதிர்காலத்திற்காக போராடவும் சர்வதேச அளவில் இணைப்பை ஏற்படுத்திக்கொள்ள முடியும்.

மேலும் படிக்க

Loading