இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கை தளமாகக் கொண்ட தமிழ் முதலாளித்துவக் கட்சிகள், செப்டம்பர் 21 அன்று நடைபெறவிருக்கும் நாட்டின் ஜனாதிபதித் தேர்தலில், தங்களின் நிலைப்பாடு குறித்து ஆழமாக பிளவுபட்டுள்ளன. எவ்வாறாயினும், அவர்களுக்கிடையிலான தந்திரோபாய வேறுபாடுகள் எதுவாக இருந்தாலும், தமிழ் வெகுஜனங்களின் இழப்பில், தமிழ் முதலாளித்துவத்திற்கு அதிக அதிகாரங்கள் மற்றும் சலுகைகளைப் பெற்றுக் கொள்வதற்காக அடுத்த அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதும் பேரம் பேசுவதுமே அவர்களின் பொதுவான நோக்கமாகும்.
சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.) அதன் ஜனாதிபதி வேட்பாளர் பாணி விஜேசிறிவர்தனவும், பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான 26 ஆண்டுகால அழிவுகரமான உள்நாட்டுப் போரில் நாட்டை மூழ்கடித்த கொழும்பு உயரடுக்கின் சிங்களப் பேரினவாத அரசியலையும் தமிழ் முதலாளித்துவ கட்சிகளின் இனவாத அரசியலையும் உறுதியாக நிராகரிக்கின்றனர். சோசலிச சமத்துவக் கட்சியும் அதன் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும் (பு.க.க.), தொடக்கத்தில் இருந்தே தமிழர்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் ஒட்டுமொத்த தொழிலாளர்களின் பொதுவான நலன்களை முன்னேற்றுவதற்கான ஒரே வழிமுறையாக, சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாளர்களின் ஐக்கியத்தை கட்டியெழுப்பவும் போராடி வருகின்றது.
தமிழ்க் கட்சிகள், தேர்தல் தொடர்பில் மூன்று வெவ்வேறு நிலைப்பாடுகளை கொண்டுள்ளன.
* இலங்கைத் தமிழ் அரசு கட்சி, ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பிரிந்த வலதுசாரி எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கிறது. இனவாதப் போரின் தொடக்கத்தைக் குறிக்கும் 1983 தமிழர் விரோதப் படுகொலைகளுக்குப் பொறுப்பான ஐக்கிய தேசியக் கட்சியைப் போலவே, ஐக்கிய மக்கள் சக்தியும் சிங்கள மேலாதிக்கவாத அரசியலில் மூழ்கியுள்ளது.
[Photo] https://www.wsws.org/asset/69fb8a2a-05b5-4853-80bc-7e5d865ad91e?rendition=image1280
இடமிருந்து வலமாக, இலங்கை தமிழரசுக் கட்சித் தலைவர் எஸ். சிறிதரன், தமிழ் முற்போக்கு கூட்டணித் தலைவர் மனோ கணேசன், இலங்கை தமிழரசுக் கட்சி முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எஸ். சிவமோகன் ஆகியோர், 2024 மே தினக் கூட்டத்தில் காணப்படுகின்றனர்.[/Photo]
தமிழ் கட்சிகளின் கூட்டமைப்பாக இருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பில் (TNA), எஞ்சியிருக்கும் ஒரே கட்சி தமிழரசுக் கட்சி மட்டுமே. தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அல்லது மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் அனுரகுமார திசாநாயக்கவை ஆதரிப்பது உட்பட, சமமான பிற்போக்கு மாற்றீடுகளை பரிசீலித்த பின்னர், பிரேமதாசாவை ஆதரிப்பதில் உறுதியாக இருக்கின்றது.
தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (புளொட்), தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ), ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எஃப்.), தமிழ் மக்கள் தேசியக் கூட்டமைப்பு (டிபிஎன்ஏ) மற்றும் பலர் “பொதுத் தமிழ் வேட்பாளராக” பாக்கியசெல்வம் அரியநேந்திரனை நிறுத்தியுள்ளன.
புளொட், டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எஃப். ஆகியவை தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்தன. 2017 இல் ஈ.பி.ஆர்.எல்.எஃப் வெளியேறிச் சென்றதையடுத்து, ஏனைய கட்சிகளும் அதைப் பின்பற்றின. 2018 இல், வட மாகாணசபை முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகி, தமிழ் மக்கள் கூட்டமைப்பை (TPA) உருவாக்கினார். அது பின்னர் TPNA ஆனது.
ஏப்ரலில், விக்னேஸ்வரன், ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவது, தமிழ் கட்சிகளுக்கு 'அரசியல் ரீதியாக என்ன வேண்டும் என்பதை அறிய வடக்கு மற்றும் கிழக்கில் பொதுவாக்கெடுப்பு நடத்துவதற்கான எங்களின் நியாயமான கோரிக்கையை முன்வைக்க ஒரு வாய்ப்பை வழங்கும்' என்று அறிவித்தார். உண்மையில், பொதுவாக்கெடுப்புக்கான அறைகூவல் என்பது, தமிழ் உயரடுக்கிற்கு அதிக அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பது தொடர்பான ஒப்பந்தத்தை எட்டுவதற்கான ஒரு வழிமுறையாகும்.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (ACTC) முக்கிய அங்கமாக இருக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி (TNPF), தேர்தலைப் புறக்கணிக்க அழைப்பு விடுத்துள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் தேசியவாதத்தின் மிகவும் கடுமையான ஆதரவாளர்களாக காட்டிக் கொள்ளும் அதே வேளை, அதன் நோக்கங்களும் அதன் போட்டியாளர்களைப் போலவே, கொழும்பு ஸ்தாபனத்துடன் இணக்கத்தை அடைவதாகவே உள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் பகிஷ்கரிப்பின் உண்மையான நோக்கத்தை ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தி, தமிழர் பிரச்சினையை பரிசீலிக்க அடுத்த அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கலாம் என்று அறிவித்தார்.
தமிழ் கட்சிகளுக்கிடையிலான பிளவுகள் மற்றும் பிரிவுகள், பரந்தளவிலான தமிழ் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற உழைப்பாளிகள் மத்தியில் அவற்றின் மோசமான சூழ்ச்சிகள் மற்றும் வாக்குறுதி மீறல்களால் ஏற்பட்ட பரவலான விரோதத்தையும் வெறுப்பையும் பிரதிபலிக்கிறன. 2020 தேர்தல் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சமூக அடித்தளத்தின் சரிவை வெளிப்படுத்தியது. அதன் வாக்குகள் 200,000 ஆக சரிந்ததுடன் அதன் ஆசன எண்ணிக்கை 16 இலிருந்து 10 ஆக குறைந்தது.
2009 இல் இனவாத யுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் உழைக்கும் மக்கள் எதிர்கொள்ளும் பாரிய சமூக நெருக்கடிக்கு இந்தக் கட்சிகள் எதுவும் தீர்வு காணவில்லை. போரின் இறுதி மாதங்களில், இலங்கை இராணுவம், குறிப்பாக அமெரிக்கா மற்றும் இந்தியாவின் ஆதரவுடன் மருத்துவமனைகள் மற்றும் “பாதுகாப்பு வலயங்கள்” மீதும் கண்மூடித்தனமாக குண்டுகளை வீசி, சுமார் 40,000 பொதுமக்கள் படுகொலை செய்தது. சுமார் 300,000 பேர் இராணுவ தடுப்பு முகாம்களுக்குள் அடைக்கப்பட்டனர் மற்றும் ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் சித்திரவதை மற்றும் மூளைச்சலவை செய்வதற்காக 'புனர்வாழ்வு முகாம்களுக்கு' இழுத்துச் செல்லப்பட்டனர். இன்னும் நூற்றுக்கும் அதகமானோர் போரின் போதும் அதற்குப் பின்னரும், இராணுவத்துடன் தொடர்புடைய கொலைப் படைகளால் 'காணாமல் ஆக்கப்பட்டனர்'.
தீவின் வடக்கு மற்றும் கிழக்கின் பெரும்பகுதிகள் போரினால் அழிக்கப்பட்டுள்ளன, ஆனால் அவை முழுமையாக மீளக்கட்டியெழுப்படவில்லை. பல்லாயிரக்கணக்கான துருப்புக்களின் இராணுவ ஆக்கிரமிப்பு தொடர்கிறது. இவற்றினால் தமிழர்கள் துன்புறுத்தப்படுவது வழமையாக உள்ளது. விக்கிரமசிங்க அரசாங்கத்தின் கீழ், சிப்பாய்களால் கடத்தப்பட்டதாக மற்றும் சித்திரவதை செய்யப்பட்டதாக கூறும் ஆவணப்படுத்தப்பட்ட வழக்குகள் குறைந்தது 11 உள்ளன. இராணுவம் நிலத்தின் பெரும் பகுதிகளை ஆக்கிரமித்துள்ளது மற்றும் அதில் நிறுவிய வணிகங்களில் இருந்து அது இலாபம் ஈட்டுகிறது.
நாடு 2022இல் கடன் தவனைத் தவறியதை அடுத்து, வின்னை முட்டும் விலைவாசி உயர்வு மற்றும் கடுமையான தட்டுப்பாடுகளால் முழு தொழிலாள வர்க்கமும் பாதிக்கப்பட்டபோது, பல தமிழர்கள் எதிர்கொள்ளும் சமூகப் பேரழிவு இன்னும் மோசமாகியது. மத்திய வங்கியின் கூற்றுப்படி, வடக்கு நகரமான யாழ்ப்பாணத்தில் வேலையின்மை 2022 இல் கிட்டத்தட்ட மூன்று மடங்காக 21 சதவீதமாக இருந்தது.
2022-23 ஆம் ஆண்டிற்கான ஐக்கிய தேசிய அபிவிருத்தி திட்ட அறிக்கையானது, வருமானம், கடன் மற்றும் அடிப்படை சேவைகள் கிடைக்கப் பெறுதலைக் கொண்டு தீர்மானிக்கப்படும் பல பரிமாண பாதிப்புகளின் மிக அதிகமான நிகழ்வுகளை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் கொண்டுள்ளது என்பதைக் காட்டுகிறது. “முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் பிரதானமானதாக இருப்பது குடும்பக் கடன் அல்ல, மாறாக சுத்தமான நீர் ஆதாரம் கிடைக்காமைதான்” என்று அந்த அறிக்கை கூறுகிறது.
தமிழ் முதலாளித்துவக் கட்சிகள் எப்போதாவது நிலங்களைத் திரும்பக் கோரும் போது அல்லது 'காணாமல் போனவர்களுக்கு' நீதி வழங்கப்பட வேண்டும் என்று முறையிடும் போதும், கொடூரமான யுத்தத்தை நடத்திய மற்றும் யுத்தக் குற்றங்களில் ஈடுபட்ட இராணுவத்தினையும் மற்றும் தொடர்ந்து ஆட்சி செய்து வரும் அரசாங்கங்களையும் பாதுகாக்கும் ஒவ்வொரு கட்சிகளுடனும் ஒப்பந்தங்களை செய்வதிலேயே அதீத அக்கறையுடன் செயற்படுகின்றன. அரசியல்வாதிகளும், இராணுவ உயர் அதிகாரிகளும் தங்கள் கைகளில் இரத்தம் தோய்ந்த ஹீரோக்களாக நடத்தப்படும் அதே வேளை, ஒருசில இராணுவத்தினர் மட்டுமே இதுவரை வழக்குத் தொடரப்பட்டு தண்டிக்கப்பட்டனர்.
முன்னணி ஜனாதிபதி வேட்பாளர்களான விக்கிரமசிங்க, பிரேமதாச மற்றும் திசாநாயக்கவுமாக அனைவரும் தமிழ் அரசியல்வாதிகளையும் அவர்கள் மூலம் தமிழ் வாக்காளர்களையும் கவரும் முயற்சியில் வடக்கிற்கு விஜயம் செய்துள்ளனர். குறிப்பாக, தமிழீழ விடுதலைப் புலிகளை நிராயுதபாணியாக்க இந்திய 'அமைதி காக்கும்' துருப்புக்களை வடக்கிற்குள் கொண்டு வந்து, மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரப் பகிர்வை வழங்கிய 1987 இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் ஒரு பகுதியான, வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைப்பது உட்பட, 13வது அரசியலமைப்புத் திருத்தத்தை, அமுல்படுத்துவதை மையமாகக் கொண்ட கலந்துரையாடல்கள் நடத்தப்படுகின்றன.
13வது திருத்தம், மாகாண மட்டத்தில் தமிழ் முதலாளித்துவத்தின் அதிகாரங்களை விரிவுபடுத்துடன், தொழிலாள வர்க்கத்தை சுரண்டுவதற்கு வசதியளிப்பதாக இருப்பதால், அது தமிழ் முதலாளித்துவத்தின் அரசியல் உரைகல்லாக உள்ளது. இது தீவை பிளவுபடுத்துவதற்கு சமம் என்று சிங்கள பேரினவாத தீவிரவாதிகளின் ஆவேசமான எதிர்ப்பின் காரணமாக. ஆரம்பத்திலிருந்தே, ஆட்சிக்கு வந்த கொழும்பு அரசாங்கங்கள் அதிகாரப் பகிர்வை, குறிப்பாக பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை முழுமையாக அமுல்படுத்த மறுத்து வந்தன.
ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் பிரேமதாசாவிற்கு தமிழரசுக் கட்சி சந்தேகத்திற்கு இடமின்றிய ஆதரவு வழங்குவது, அவர் ஜூன் மாதம் வடக்கு நகரான கிளிநொச்சிக்கு விஜயம் செய்த போது, 13வது திருத்தத்தை அமுல்படுத்துவதாக அறிவித்தார், என்ற உண்மையுடன் பிணைந்துள்ளது. கொலைப் படையினரால் அழைத்துச் செல்லப்பட்டவர்களை பற்றி விசாரிக்க காணாமல் போனோர் அலுவலகத்துக்கு புத்துயிர் அளிப்பதாகவும் ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. கடந்த காலங்களைப் போலவே, இந்த வாக்குறுதிகள் அர்த்தமற்ற சைகைகளாகும். அவற்றுக்கும் தமிழர்களின் ஜனநாயக உரிமைகள் திட்டமிட்டு நசுக்கப்படுவதற்கு தீர்வு காணுவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கமும் எதிர்கொள்ளும் மோசமான சமூக நெருக்கடியைப் பொறுத்தவரை, விக்கிரமசிங்க, பிரேமதாச மற்றும் திசாநாயக்கவும், அனைத்து தமிழ் கட்சிகளுடன் சேர்ந்து, முழு தொழிலாள வர்க்கத்தையும் பாதிக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் கொடூரமான சிக்கன நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த உறுதிபூண்டுள்ளனர். சர்வதேச நாணய நிதியத்திற்கான தமிழ் கட்சிகளின் ஆதரவு, சீனாவிற்கு எதிரான போருக்கான உந்துதலில் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் அதன் மூலோபாய பங்காளியான இந்தியாவிற்கும் அவர்களின் ஆதரவுடன் பிணைந்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாப இராஜபக்ஷவை நாட்டை விட்டு வெளியேறவும் ராஜினாமா செய்யவும் நிர்ப்பந்தித்த வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களுடன் கூடிய 2022 வெகுஜன எழுச்சி, இலங்கை ஆளும் வர்க்கத்தின் அனைத்துப் பிரிவினராலும் வளர்க்கப்பட்ட இனவாத பிளவுகளைத் கடந்து சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லீம் தொழிலாளர்களை ஒரு பொதுவான போராட்டத்தில் அவர்களின் வர்க்க நலன்களில் ஒன்றிணைத்தது. அந்த இயக்கம் தொழிற்சங்கங்கள், முன்னிலை சோசலிஸ்ட் கட்சி போன்ற போலி இடதுகள் மற்றும் பல்வேறு தமிழ் கட்சிகளாலும் காட்டிக் கொடுக்கப்பட்டது. அவை இந்தப் போராட்டத்தை மட்டுப்படுத்தவும் தடுக்கவும் அதை பாராளுமன்ற அரசியல் முட்டுச்சந்துக்குள் திசை திருப்பவும் வேலைசெய்தன. இதன் விளைவு, விக்கிரமசிங்க ஜனநாயக விரோதமாக ஜனாதிபதி பதவியில் அமர்த்தப்பட்டதுடன், உழைக்கும் மக்களின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலையும் அதிகப்படுத்தியது.
சோசலிச சமத்துவக் கட்சியும் அதன் வேட்பாளர் பாணி விஜேசிறிவர்தனவும் அனைத்து வகையான இனவாதம் மற்றும் தேசியவாதத்தையும் நிராகரித்து, போர் மற்றும் அனைத்து வகையான சுரண்டல் மற்றும் ஒடுக்குமுறைகளின் தோற்றுவாயான முதலாளித்துவத்தை தூக்கியெறிவதற்கான போராட்டத்தில், தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்தப் போராடுகிறார்கள். வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து அனைத்துப் படைகளையும் திரும்பப் பெறுமாறு கோரி, தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான திட்டமிட்ட பாகுபாடுகளையும், 26 ஆண்டுகால இனவாதப் போரையும் எதிர்ப்பதில் பல தசாப்த கால வரலாறு எமக்கு உள்ளது.
சோசலிச சமத்துவக் கட்சியானது, வடக்கு மற்றும் கிழக்கு உட்பட அனைத்து முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் அவற்றின் தொழிற்சங்கங்களிலிருந்து சுயாதீனமாக ஒவ்வொரு வேலைத் தளத்திலும், பெருந்தோட்டங்களிலும் மற்றும் உள்ளூரிலும் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நடவடிக்கைக் குழுக்களை அமைக்க பரிந்துரைக்கிறது. இது தொழிலாளர்களின் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளுக்கான போராட்டத்தில் இனவாத எல்லைகளுக்கு அப்பால், தொழிலாளர்களை ஒன்றிணைப்பதற்கான அடிப்படையை வழங்கும். போர், சிக்கன வெட்டுக்கள், சர்வாதிகார ஆட்சி வடிவங்கள் ஆகிய முதலாளித்துவ வேலைத்திட்டத்தை எதிர்ப்பதற்கான ஒரு மூலோபாயத்தை உருவாக்குவதற்கும், போராடுவதற்கும் நடவடிக்கைக் குழுக்களின் பிரதிநிதிகளை அடிப்படையாகக் கொண்ட தொழிலாளர்களதும் கிராமப்புற வெகுஜனங்களதும் ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான மாநாட்டை கட்டியெழுப்புவதற்கு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.
தமிழ் மற்றும் முஸ்லிம்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்காக, பின்வரும் கோரிக்கைகளை முன்னெடுப்பதற்கு நாடளாவிய ரீதியில் நடவடிக்கை குழுக்களை அமைக்க நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம்.
- இராணுவ ஆக்கிரமிப்பை நிறுத்து: வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து அனைத்துப் படைகளையும் விலக்கிக்கொள்!
- சகல அரசியல் கைதிகளையும் விடுதலை செய்!
- தமிழ் மற்றும் முஸ்லீம்களுக்கு எதிரான சகல பாரபட்சங்களையும் நிறுத்து!
- பௌத்த மத்துக்கும் சிங்கள மொழிக்கும் விசேட அந்தஸ்தினை வழங்கும் இனவாத அரசியலைப்பை நிராகரி!
- வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவத்தினால் ஆக்கிரமிக்கப்பட்ட சகல நிலங்களையும் விடுவித்திடு!
இந்த அடிப்படை ஜனநாயகக் கோரிக்கைகளுக்கான போராட்டம், அனைத்து வெளிநாட்டுக் கடன்களையும் நிராகரிப்பதற்கும், தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் பெரும் பெருநிறுவனங்கள், பெருந்தோட்டங்கள் மற்றும் வங்கிகளை தேசியமயமாக்குவதற்கும், சோசலிச வழிகளில் சமூகத்தை மறுசீரமைப்பதற்கும், ஒரு தொழிலாளர்-விவசாயிகளின் அரசாங்கத்தை நிறுவுவதற்கான போராட்டத்துடன் பிணைந்துள்ளது. சோசலிச சமத்துவக் கட்சி, தெற்காசியா மற்றும் சர்வதேச ரீதியில் சோசலிசத்திற்கான போராட்டத்தின் ஒரு ஒருங்கிணைந்த அங்கமாக ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசை ஸ்தாபிக்க அழைப்பு விடுக்கிறது.