இலங்கைத் தமிழ்க் கட்சிகள் ஜனாதிபதித் தேர்தலில் தந்திரோபாயங்கள் பற்றி விவாதிக்கின்றன

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கை கிளிநொச்சியில் நடைபெற்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் மேதினக் கூட்டத்தில், இடமிருந்து, தமிழரசுக் கட்சி தலைவர் எஸ். சிறிதரன், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், தமிழரசுக் கட்சியின் செயலாளர் மாவை சேனாதிராசா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிவமோகன் ஆகியோர் அமர்ந்திருக்கின்றனர். [Photo: Facebook/Ruban Ruban]

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கைத் தளமாகக் கொண்ட தமிழ் தேசியவாதக் கட்சிகள், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு எவ்வாறு முகம்கொடுப்பது மற்றும் கொழும்பு அரசாங்கத்துடன் இணைந்து, தமிழ் உயரடுக்கின் நலன்களை எவ்வாறு தக்கவைத்துக்கொள்வது என்பது பற்றி விவாதித்து வருகின்றன. ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் அல்லது அக்டோபரில் நடைபெற உள்ளது.

முன்னர், தமிழ் முதலாளித்துவக் கட்சிகள், தங்கள் குறிப்பிட்ட கோரிக்கைகளை யார் சிறப்பாக ஆதரிப்பார்கள் என்பதைக் கணக்கிட்டு, இலங்கையின் தெற்கில் உள்ள ஏதோ ஒரு சிங்களப் பெரும்பான்மைக் கட்சிகளின் பக்கம் சாய்ந்தனர்.

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி (TPNA), இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி மற்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (DTNA) ஆகிய பல குழுக்களைக் கொண்ட கூட்டணிகள், தற்போது, ஜனாதிபதித் தேர்தலில் “பொதுத் தமிழ் வேட்பாளரை” நிறுத்துவது குறித்து வாதிடுகின்றன. அதேவேளை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (TNPF) தேர்தலைப் புறக்கணிக்குமாறு தமிழர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

எவ்வாறாயினும், இந்த முதலாளித்துவக் கட்சிகள், சாதாரண தொழிலாளர்கள் மற்றும் ஏழை மக்களின் நலன்களை அன்றி, தமிழ் உயரடுக்கின் நலன்களில் மட்டுமே அக்கறை கொண்டுள்ள என்பதையும் தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வந்துள்ளதால், தமிழ் வெகுஜனங்கள் மத்தியில் பரவலாக மதிப்பிழந்துள்ளன.

பல தசாப்தங்களாக, தொழிலாள வர்க்கத்தை இனரீதியாக பிளவுபடுத்துவதற்காக தமிழர்-விரோத இனவாதத்தை தூண்டிவிட்டு வந்துள்ள, அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த கொழும்பு அரசாங்கங்களால் முன்னெடுக்கப்பட்ட சட்டரீதியான மற்றும் அரசியல் ரீதியான பாரபட்சங்களை இலங்கையின் தமிழ் சிறுபான்மையினர் எதிர்கொண்டுள்ளனர்.

1983 இல், தீவின் ஆளும் உயரடுக்கின் சார்பாக, அப்போதைய ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி, பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக, அதன் இரத்தக்களரி இனவாத யுத்தத்தை ஆரம்பித்தது. 26 ஆண்டுகால அந்த இனவாதப் போரில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன், பலர் “காணாமல் ஆக்கப்பட்டனர்”, பத்தாயிரக் கணக்கானோர் காயமடைந்தனர், எண்ணுக் கணக்கற்ற சொத்துக்கள் அழிக்கப்பட்டன.

மே 2009 இல், போர் முடிவடைந்த போதிலும், சில அரசியல் கைதிகள் இன்னமும் சிறையில் இருப்பதுடன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தொடர்ந்தும் இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ளதோடு போரின் போது பலவந்தமாக கைப்பற்றப்பட்ட நிலங்களின் குறிப்பிட்ட பகுதி தொடர்ந்தும் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ளன. தமிழ் மக்கள் யுத்த அழிவிலிருந்து முற்றாக மீளவில்லை.

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் வட மாகாண சபை முதலமைச்சருமான சி.வி. விக்னேஸ்வரன், தமிழ்க் கட்சிகள் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என முன்மொழிந்துள்ளதோடு, தகுந்த வேட்பாளராக தன்னையும் பிரேரித்துக்கொண்டுள்ளார்.

கொழும்பில் ஆட்சிக்கு வந்த கட்சிகள், தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்த்து வைக்கவில்லை என்று கூறும் விக்னேஸ்வரன், “அவர்களை ஆதரித்து, தமிழர்கள் என்ன சாதிக்க முடியும்?” என்று கேட்கிறார். எங்களுடைய சொந்த வேட்பாளரை நிறுத்துவதன் மூலம், “தமிழ் மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்த முடியும்” என்றும் கொழும்புடனான பேச்சுவார்த்தைகளில் அதிக அழுத்தங்களைப் பிரயோகிக்கலாம் என்றும், அவர் கூறுகிறார்.

இதே நிலைப்பாட்டையே, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனநாயக தமிழ் கூட்டமைப்பின் தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரனும் எதிரொலித்துள்ளார். “தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதை, தமிழ் மக்கள் சிங்களவர்களிடம் வலியுறுத்த முடியும்” என்று அவர் கூறினார்.

தமிழ் ஜனாதிபதி வேட்பாளரை நிறுத்துவதா இல்லையா என்பதில், பிரதான தமிழ் பாராளுமன்ற கட்சியான தமிழரசுக் கட்சி பிளவுபட்டுள்ளது. புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழரசுக் கட்சித் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன், தமிழ் பொது வேட்பாளரை முன்னிறுத்துவதை ஆதரிக்கின்றார்.

ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களும், தமிழரசுக் கட்சித் தலைவர்களுமான ஆர். சம்பந்தன், எம்.ஏ. சுமந்திரன் போன்றவர்கள், இந்த முன்மொழிவை எதிர்க்கின்றனர். இது, கொழும்பு அரசியல் ஸ்தாபனத்துடன், குறிப்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நேரடியான ஒத்துழைப்பை பாதிக்கும் என அவர்கள் நம்புகின்றனர்.

தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தினால், “அது ஐக்கிய இலங்கைக்குள் பயணிப்பதில் நெருக்கடியை ஏற்படுத்தும்” என சம்பந்தன் தெரிவித்துள்ளார். இதன் மூலம், சிங்களப் பேரினவாதக் குழுக்கள் தமிழ் மக்களைப் பழிவாங்கும், என்று அவர் குறிப்பிடுகிறார். இந்த நிலைப்பாட்டையே சுமந்திரனும் ஆமோதித்துள்ளார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் ஊடகங்களுக்கு பேசும்போது, தேர்தலைப் புறக்கணிப்பதன் மூலம் “தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளை” ஏற்றுக்கொள்ளுமாறு சிங்களத் தலைமைகளுக்கு அழுத்தம் கொடுக்க முடியும் என்றார். இந்த நிலைப்பாட்டை எடுப்பதன் மூலம், “அமெரிக்கா, இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளும் எங்கள் கோரிக்கைகளை ஏற்கும்” என்று அவர் கூறினார். அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் என முன்னர் அறியப்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணி 2009 ஆம் ஆண்டு முதல் ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணித்து வந்துள்ளது.

தமிழ் மக்களின் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளை நிவர்த்தி செய்வதற்கான ஒரு வழிமுறை எனக் கூறி, ஜனாதிபதித் தேர்தலுக்கு எவ்வாறு முகம்கொடுப்பது என்பது பற்றி இந்த தமிழ் முதலாளித்துவக் கட்சிகள் நடத்தும் பகிரங்க விவாதம் முழுமையான ஒரு மோசடியாகும்.

ஜனாதிபதித் தேர்தல் குறித்த தந்திரோபாய ரீதியிலான கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும் கூட, இந்த முதலாளித்துவ கட்சிகளுக்கிடையில் அடிப்படை வேறுபாடுகள் எதுவும் கிடையாது. அவை அனைத்தும் இலாப அமைப்பைப் பாதுகாப்பதுடன் விக்கிரமசிங்க அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தினால் கட்டளையிடப்பட்ட சிக்கன நடவடிக்கைகளை ஈவிரக்கமற்று நடைமுறைப்படுத்துவதை ஆதரிப்பதில் ஐக்கியப்பட்டு உறுதியுடன் இருக்கின்றன.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை நிர்வகிப்பதற்காக அதிகபட்ச அதிகாரப் பகிர்வைப் பெறுவதற்கு கொழும்பு ஆளும் உயரடுக்கிற்கு எவ்வாறு அழுத்தம் கொடுப்பது என்பதையே அவர்களின் கணக்கீடுகள் மையமாகக் கொண்டுள்ளன. விதிவிலக்கு இல்லாமல், அவர்கள் அனைவரும் தமிழ் உயரடுக்கிற்கான, சாதகமான அரசியல் மற்றும் பொருளாதார சலுகைகளை வழங்குமாறு கேட்டு இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்காக, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளதும் இந்தியாவினதும் ஆதரவை நாடுகின்றனர்.

இந்தக் கட்சிகள், சீனாவிற்கு எதிரான அமெரிக்க மற்றும் இந்திய இராணுவக் கட்டியெழுப்பல்களை ஆதரிக்கின்ற அதேவேளை, வாஷிங்டனின் ஆதரவுடன் இஸ்ரேலிய இராணுவத்தால் முன்னெடுக்கப்படும் காஸா மீதான இனப்படுகொலை ஆக்கிரமிப்பு சம்பந்தமாக வேண்டுமென்றே மௌனம் காக்கின்றன.

விடுதலைப் புலிகள் உட்பட இந்தத் தமிழ் அமைப்புக்கள் அனைத்தினதும் வரலாற்றுப் பதிவும், ஏகாதிபத்திய சக்திகளுக்கு, பிரதானமாக அமெரிக்காவிடமும் மற்றும் இந்தியாவிடமும் தொடர்ச்சியான வேண்டுகோள்கள் விடுப்பதுடன் இணைந்து, ஒவ்வொரு இலங்கை அரசாங்கத்துடனும் ஏதாவது ஒரு இழிவான சூழ்ச்சிகள் மற்றும் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுவதையே காட்டுகின்றது.

1994 இல், பிரிவினைவாத விடுதலைப் புலிகள், சமாதானப் பேச்சுக்கள் மற்றும் அதிகாரப் பகிர்வு ஏற்பாட்டை எதிர்பார்த்து, ஜனாதிபதி வேட்பாளரான சந்திரிகா குமாரதுங்கவை ஆதரித்தனர். இருப்பினும், பல்வேறு அரசியல் சூழ்ச்சிகளுக்குப் பிறகு, அவர் 1995 இல் போரை மீண்டும் தொடங்கி, அதை தீவிரப்படுத்தினார்.

தங்கள் பாராளுமன்ற ஊதுகுழலாக செயற்படுவதற்காக விடுதலைப் புலிகளின் அழுத்தத்த்திற்கமைவாக 2001 ஒக்டோபரில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. 2001 டிசம்பரில் ஆட்சிக்கு வந்த பிரதமர் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்துடன், அமெரிக்க ஆதரவுடன் சமாதானப் பேச்சு வார்த்தைகளை நடத்துவதற்கான தயாரிப்பின் ஒரு பாகமாக இந்த சூழ்ச்சி திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இராணுவம் மற்றும் சிங்கள பேரினவாத குழுக்களதும், பிரதானமாக மக்கள் விடுதலை முன்னணியினதும் (ஜே.வி.பி.) எதிர்ப்பினால் அந்த சமாதானப் பேச்சுவார்த்தைகள் முறிவடைந்தன. 2003 இன் பிற்பகுதியில், இந்தக் குழுக்களின் ஆதரவுடன் ஜனாதிபதி குமாரதுங்க, பிரதமர் விக்கிரமசிங்கவின் ஆட்சியில் இருந்த பல்வேறு அமைச்சுக்களை தன்னுடைய கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டார். பின்னர், 2004 இல் விக்ரமசிங்க அரசாங்கத்தை பதவி நீக்கம் செய்தார்.

2005 இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலை, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பகிஷ்கரித்ததன் மூலம், மஹிந்த இராஜபக்ஷ ஆட்சிக்கு வருவதற்கு புலிகள் உதவினர். இராஜபக்ஷ தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் அப்போதைய போர் நிறுத்தத்தை முறித்துக் கொண்டு, மீண்டும் யுத்தத்தைத் தொடங்கினார்.

2009 மே மாதம் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர், ஏகாதிபத்திய சார்பு தமிழ் கூட்டமைப்பு சிதறத் தொடங்கியது. 2010 இல், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து பிரிந்தது. அந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இரத்தக் களரி யுத்தத்துக்கு அதன் இறுதி ஆண்டுகளில் தலைமை வகித்த இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரித்தது.

அதன்பிறகு, இராஜபக்ஷவின் ஆட்சியை சீனாவிடம் இருந்து விலக்கி வைப்பதற்காக, அவருக்கு அழுத்தம் கொடுப்பதற்கு, அமெரிக்கா தலைமையில் அவருக்கு கொடுக்கப்பட்ட அழுத்தத்தின் பின்னால் தமிழ் கூட்டமைப்பு அணிசேர்ந்தது. இராஜபக்ஷ பெய்ஜிங்கிடம் இருந்து நிதி மற்றும் இராணுவ உதவிகளைப் பெற்று நெருங்கிய உறவுகளை வளர்த்துக் கொண்டிருந்தார். வாஷிங்டன் இராஜபக்ஷவின் போர் நடவடிக்கைகளை ஆதரித்தாலும், சீனாவை இராஜதந்திர ரீதியாக தனிமைப்படுத்தவும், இராணுவ ரீதியாக சுற்றி வளைக்கவும் அதன் “ஆசியாவை நோக்கிய திருப்பத்தை” தீவிரப்படுத்திக் கொண்டிருந்தது.

இராஜபக்ஷ மீது தனது பூகோள மூலோபாய கோரிக்கைகளை தீவிரப்படுத்துவதற்காக, போரின் போது இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்த தீர்மானங்கள் வாஷிங்டனின் அனுசரணையுடன் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் பல தடவைகள் முன்வைக்கப்பட்ட போது, அவற்றை தமிழ் கூட்டமைப்பு ஆதரித்தது. 2015 ஜனாதிபதித் தேர்தலில், இராஜபக்ஷவை வெளியேற்றி மைத்திரிபால சிறிசேனவை ஆட்சிக்குக் கொண்டுவருவதற்காக, வாஷிங்டனின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்ட ஆட்சி மாற்ற நடவடிக்கையை ஆதரிப்பதில் தமிழ் கூட்டமைப்பு முக்கிய பங்கைக் கொண்டிருந்தது.

சமீப ஆண்டுகளில், இந்தக் கூட்டமைப்பில் இருந்த மற்ற குழுக்களான ஈழ மக்கள் புரட்சிகர முன்னணி (EPRLF), தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (புளொட்) மற்றும் தமிழீழ விடுதலை இயக்கம் (TELO) என்பன, தமிழ் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்கியுள்ளன.

விக்கிரமசிங்கவின் ஐ.தே.க. மற்றும் அதில் இருந்து பிரிந்து சென்று அமைக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தி, அத்துடன் ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தி (தே.ம.ச.) உட்பட கொழும்பை தளமாகக் கொண்ட முதலாளித்துவக் கட்சிகள், ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து வாக்குகளைப் பெறுவதற்கு ஆர்வமாக உள்ளன. எவ்வாறாயினும், இந்தக் கட்சிகள், தமிழர்-விரோத இனவாதம், போர் மற்றும் அடக்குமுறையைத் தூண்டுவதில் நீண்ட மற்றும் இரத்தம் தோய்ந்த வரலாற்றைக் கொண்டுள்ளதுடன், மேலும் அவை சிங்களம் மற்றும் தமிழர்களுமாக தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளால் வெறுக்கப்படுகின்றன.

வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் தொழிலாள வர்க்கமும், ஏழைகளும் தமிழ் கட்சிகளின் இந்த இழிவான சூழ்ச்சிகளையும் சதித்திட்டங்களையும் நிராகரிக்க வேண்டும். இந்த அமைப்புகள் அனைத்தும் முதலாளித்துவ இலாப முறைமையைப் பாதுகாக்கின்றன. இலங்கையில் உள்ள ஏனைய ஆளும் உயரடுக்கினரைப் போலவே, இவர்களும் ஒடுக்கப்பட்ட மக்களின் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகள் பற்றி அக்கறை கொண்டவர்களல்ல, மாறாக அவர்கள் தங்களின் வர்க்க சலுகைகளைப் பாதுகாப்பதிலும் வலுப்படுத்துவதிலுமே அக்கறை கொண்டுள்ளார்கள்.

தமிழ் தேசியவாத குழுக்கள் தொடக்கம், ஐ.தே.க., ஐ.ம.ச., ஜே.வி.பி மற்றும் ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஆட்சி வரை, இந்த சகல முதலாளித்துவக் கட்சிகளும், 2022 ஏப்ரல் மற்றும் ஜூலைக்கு இடையே வெடித்த, ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவையும் அவரது அரசாங்கத்தையும் வீழ்த்திய பாரிய வெகுஜன எழுச்சியில் காணப்பட்ட தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் தொழிலாளர்களின் புறநிலையான ஐக்கியத்துக்கு விரோதமாக உள்ளன..

அதேபோல், சர்வதேச நாணய நிதியம் மற்றும் நிதி மூலதனத்தின் சார்பாக விக்கிரமசிங்க ஆட்சியால் சுமத்தப்படும் கொடூரமான சமூகத் தாக்குதல்களுக்கு, தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பு அதிகரித்து வருவது குறித்து அவர்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளனர்.

அதிகரித்து வரும் அரசாங்கத்தின் தாக்குதல்களைத் தோற்கடிப்பதற்கான ஒரே வழி, சோசலிச சர்வதேசியத்திற்கான மற்றும் முதலாளித்துவ இலாப முறைமைக்கு எதிரான ஒரு ஐக்கியப்பட்ட போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டுவதே ஆகும். ஒன்றுபடுவதற்காக, தொழிலாளர்கள்’ தமிழர்விரோத மற்றும் முஸ்லீம் விரோத பாகுபாடுகள் உட்பட, அனைத்து வகையான தேசியவாதம் மற்றும் வகுப்புவாதத்தை எதிர்க்க வேண்டும்.

இந்த முன்னோக்கிற்காக போராடும் ஒரே கட்சி சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மட்டுமே. விக்கிரமசிங்க ஆட்சியை வீழ்த்தவும், அனைத்து வெளிநாட்டு கடன்களையும் தள்ளுபடி செய்யவும், வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து இராணுவத்தை உடனடியாக திரும்பப் பெறவும், இனவாத பாகுபாடு மற்றும் அடக்குமுறையை உள்ளடக்கிய இலங்கையின் ஒற்றையாட்சி அரசியலமைப்பை அகற்றவும் நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.

இத்தகைய போராட்டம், தெற்காசியா மற்றும் சர்வதேச சோசலிச குடியரசுகளின் ஒன்றியத்தின் ஒரு பகுதியாக ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசின் வடிவில் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்கான போராட்டத்தை உள்ளடக்கியதாகும். இந்தப் போராட்டத்தின் ஒரு அங்கமாகவே தமிழ், முஸ்லிம் மக்களின் ஜனநாயக உரிமை பிரச்சினைகள் தீர்க்கப்பட முடியும்.

Loading