இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
போலி-இடது முன்னிலை சோசலிசக் கட்சி, இலங்கையில் செப்டம்பர் 21 அன்று நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் ஒரு வேட்பாளரை நிறுத்தியுள்ளது. அதன் அனைத்து தீவிர தோரணைகள் ஒருபுறம் இருக்க, முன்னிலை சோசலிசக் கட்சியானது மூன்றாம் உலகப் போரை நோக்கிய அமெரிக்காவின் வேகமான உந்துதலைப் பற்றி எதுவும் குறிப்பிடாததோடு, ஜனநாயக மற்றும் சமூக உரிமைகள் மீதான கடுமையான தாக்குதல்களுக்கு முதலாளித்துவ அமைப்பு முறை மற்றும் மதிப்பிழந்த தேர்தல் அரசியல் கட்டமைப்புக்குள் தீர்வு காண முடியும் என உழைக்கும் மக்களை ஏமாற்ற முயற்சிக்கின்றது.
முன்னிலை சோசலிசக் கட்சிக்கு எதிராக, சோசலிச சமத்துவக் கட்சியானது போர், சிக்கன வெட்டுக்கள் மற்றும் எதேச்சதிகார ஆட்சி முறைகளுக்கு எதிராக, சோசலிச சர்வதேச வேலைத்திட்டத்திற்கு தொழிலாளர்களை வென்றெடுக்க போராடிக்கொண்டிருக்கின்றது. நாம், எங்கள் வேலைத்திட்டத்திற்கு தமது ஆதரவை வெளிக்காட்ட எங்கள் வேட்பாளர் பானி விஜேசிறிவர்தனவுக்கு வாக்களிக்குமாறு தொழிலராளர்களை கேட்டுக்கொள்ளும் அதேவேளை, எல்லாவற்றுக்கும் மேலாக உழைக்கும் மக்கள் முகங்கொடுக்கும் பாரிய சமூக நெருக்கடிக்கு முடிவுகட்டுவதற்காக, சோசலிசக் கொள்கைகளுக்காகப் போரடுவதற்கு, சகல முதலாளித்துவ கட்சிகள் மற்றும் அவற்றின் தொழிற்சங்கங்களில் இருந்து விலகி, சுயாதீனமாக அணிதிரளுமாறும், ஐக்கியப்பட்ட சர்வதேச போர்-எதிர்ப்பு இயக்கத்தில் இணைந்துகொள்ளுமாறும் அழைப்பு விடுக்கின்றோம்.
முன்னிலை சோசலிசக் கட்சி, முதலாளித்துவ ஆட்சியை அச்சுறுத்தும் தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு சுயாதீன இயக்கத்திற்கும் அரசியல்ரீதியாக விரோதமானது. ஜனாதிபதி கோடாபய இராஜபக்ஷவை நாட்டைவிட்டு தப்பியோடவும் பதவியில் இருந்து விலகவும் நிர்ப்பந்தித்த 2022 வெகுஜன எழுச்சியின் தொடர்ச்சியாக அது தன்னைக் காட்டிக்கொள்கிறது. முன்னிலை சோசலிசக் கட்சி, கொழும்பில் நடந்த பாரிய போராட்டங்களில் முன்னணி வகித்த மக்கள் போராட்ட கூட்டணி என்றழைக்கப்படும், ஏனைய குட்டி-முதலாளித்துவ அமைப்புகளுடனான கூட்டணியை உருவாக்கியது. மக்கள் போராட்ட கூட்டணிக்கு உத்தியோகபூர்வ அங்கீகாரம் இல்லாததால், சோசலிச மக்கள் முன்னணி என்ற அதன் கூட்டணி ஒன்றின் பெயரின் கீழ் முன்னிலை சோசலிசக் கட்சியின் வேட்பாளர் நுவான் போபகே தேர்தலில் போட்டியிடுகின்றார்.
2022 வெகுஜன இயக்கத்தின் அபிலாஷைகளையே கொண்டுள்ளதாக முன்னிலை சோசலிசக் கட்சி கூறிக்கொள்வது உழைக்கும் மக்களுக்கு ஒரு எச்சரிக்கை ஆகும். நாட்டின் கடன் நெருக்கடியைத் தொடர்ந்து கட்டவிழ்த்து விடப்பட்ட சமூக பேரழிவுக்கு எதிராக வீதிகளில் இறங்கிய மில்லியன் கணக்கான தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஏழைகளின் நலன்களை அது பிரதிநிதித்துவம் செய்யவில்லை, மாறாக அந்த எழுச்சியை ஆளுமை செய்து காட்டிக் கொடுத்த அரசியல் சக்திகளையே அது பிரிதிநிதித்துவம் செய்கின்றது.
2022 எழுச்சியின் மத்தியில், முன்னிலை சோசலிசக் கட்சி, அதன் கூட்டணிகள் மற்றும் துரோகத் தொழிற்சங்கங்கள் குறிப்பாக தொழிலாள வர்க்கத்தின் வேலை நிறுத்தங்கள் உட்பட வெகுஜன இயக்கத்தை கட்டுப்படுத்த முழு மூச்சுடன் வேலை செய்ததோடு, அதை எதிர்க் கட்சிகளான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) பிரேரித்த, “இடைக்கால அரசாங்கத்திற்கு”, அதாவது ஒரு முதலாளித்துவ அரசாங்கத்தை அமைப்பதற்கான அழைப்புக்கு அதை அடிபணியச் செய்தன. தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு சுயாதீன இயக்கத்தையும் தடுத்த, முன்னிலை சோசலிசக் கட்சி, பாராளுமன்ற உபாய சூழ்ச்சிகளுக்கு வசதி ஏற்படுத்திக் கொடுத்ததால், அதன் விளைவாக, பரந்துபட்ட மக்களின் வெறுப்புக்குள்ளான ரணில் விக்கிரமசிங்க பலம்மிக்க நிறைவேற்று ஜனாதிபதியாக ஜனநாயக விரோதமாக அமர்வதற்கு வழிவகுத்தது.
அதன் விளைவாக, பிணையெடுப்பு கடனை மீளச் செலுத்துதவற்கு சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைகளை விக்கிரமசிங்க அமுல்படுத்தியதால், உழைக்கும் மக்களின் பரந்த தட்டினருக்கு சமுக பேரழிவே ஏற்பட்டது. மானியங்கள் வெட்டப்பட்ட அதேவேளை விலைவாசி வானளாவ உயர்ந்தது. அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களை துரிதமாக விற்றுத் தள்ளுவதற்கு தொழில்கள் மற்றும் வேலை நிலைமைகள் அழிக்கப்பட்டன. அத்தியவசிய சேவைகளான கல்வி, சுகாதாரம் மற்றும் நலன்புரித்திட்டங்கள் திட்டமிட்டவகையில் கீழறுக்கப்பட்டன. விக்கிரமசிங்க தனது சிக்கன வேலைத்திட்டத்திற்கு எதிரான எந்தவொரு எதிர்ப்புக்கும் எதிராக கொடூரமான பொலிஸ்-அரச அடக்குமுறைகளை மீளவும் செயற்படுத்தியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தியும் இடைக்கால அராசாங்கத்தின் பாகமாக இருந்திருப்பின், அவையும் முற்றுமுழுதாக விக்கிரமசிங்கவை போலவே செயற்பட்டிருக்கும். இந்த இரு கட்சிகளும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளதோடு உண்மையில் அவர்கள் முன்னிலையில் உள்ளனர். இவற்றின் வேட்பாளர்கள் இருவரும் சர்வதேச நாணய நிதியத்தின் திட்ட நிரலை நடைமுறைப்படுத்துவதற்கு உறுதியளித்துள்ளதுடன், வேலை நிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களை ஒடுக்குவதில் விக்கிரமசிங்கவை போலவே ஈவிரக்கமற்றவர்களாக இருப்பர்.
கடுமையாக சர்வதேச நாணய நிதிய திட்ட நிரலுக்கு எதிரான பாரிய எதிர்ப்பை பற்றி நன்கறிந்த முன்னிலை சோசலிசக் கட்சி, தானும் அதை எதிர்ப்பதாக காட்டிக்கொள்ள முயற்சிக்கின்றது. அதன் மக்கள் விஞ்ஞாபனம் “சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து வெளியேறும் மூலோபாயத்தை” ஊக்குவிக்கின்றது. சர்வதேச நாணய நிதியத்துடன் பேசுவதற்குப் பதிலாக, கடன் மீள் கொடுப்னவுகளில் சலுகைகளைப் பெறுவதன் பேரில், “கடன் வழங்குனர்களுடன் நேரடியான பேச்சுவார்த்தைகள்” நடத்தவும் “சர்வதேச-அளவில் அங்கீகரிக்கப்பட்ட கடன் சரிபார்க்கும் மற்றும் தர நிர்ணய முகவர் அமைப்பு ஒன்றின் ஊடாக இலங்கையின் நிலைமையை ஆராய்வதன் மூலம், ஒரு சட்டரீதியான ஆய்வு அறிக்கைகையை” கோருகின்றது.
இது உண்மையில் சட்டியில் இருந்து அடுப்புக்குள் விழும் நிலையாக இருக்கும். தனது கோரிக்கைகள் துல்லியமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்துகின்ற சர்வதேச நாணய நிதியத்துடன் பேசுவதற்கு முயற்சிப்பதற்கு மாறாக, சர்வதேச நாணய நிதியம் பிரதிநிதித்துவம் செய்கின்ற அதன் கடன் வழங்குனர்களை நோக்கி திருவோடை ஏந்திச் செல்வதற்கு முன்னிலை சோசலிசக் கட்சி முன்மொழிகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, சர்வதேச நிதி மூலதனத்தின் சார்பாகச் செயற்படும் PricewaterhouseCooper அல்லது கே.பி.எம்.ஜி. போன்ற பல பில்லியன் டாலர் மதிப்பைக் கொண்ட ஆய்வு முகவர் நிறுவனங்களில் ஒன்றிற்கு பணம் செலுத்த விரும்புகின்றது.
சர்வதேச வங்கியாளர்களுக்கு பயனற்ற வேண்டுகோள்களை விடுக்கும் முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரேரனைகள், உலக நிதி மூலதனத்தின் அதிகாரத்தை ஏற்றுக்கொள்ளும் கொள்கை ஆகும். இந்த கேலிக்கூத்து பயிற்சியின் முடிவை நாம் முன்கூட்டியே கணிக்க முடியும். என்ன சலுகைகள் வழங்கப்பட்டாலும், அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த கொழும்பு அரசாங்கங்களால் தமிழ் சிறுபான்மையினருக்கு எதிராக மேற்கொள்ப்பட்ட கொடூரமான 30 ஆண்டுகான இனவாத யுத்தத்திற்காகவும் வாங்கி குவிக்கப்பட்ட கடன்களை செலுத்தவும், ஏதாவதொரு வழியில் பெரும் நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் இலாபத்தை பெருக்குவதற்கும் உழைக்கும் மக்களே விலை கொடுக்கவுள்ளனர் என்ற உண்மையை இருட்டடிப்பு செய்ய முயற்சிப்பதாக இது இருக்கும்.
தொழிலாளர்கள், கிரேக்கத்தில் போலி-இடது சிரிசா அரசாங்கம் ஆற்றிய துரோகத்தனமான பாத்திரத்தில் இருந்து அனுபங்களைப் பெற வேண்டும். முன்னிலை சோசலிசக் கட்சியைப் போலவே ”தீவிர-இடதுகளின் கூட்டணி” அல்லது சிரிசா 2015 தேர்தலுக்கு முன்னர் ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கனக் கோரிக்கையை முழுமையாக நிராகரிப்பதாக மீண்டும் மீண்டும் அறிவித்தது. முன்னிலை சோசலிசக் கட்சியைப் போலவே போலவே சிரிசாவும் கிரேக்கத்தின் பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகளை முதலாளித்துவ கட்டமைப்பினுள் தீர்க்க முடியும் எனக் கூறியது. எவ்வாறாயினும், சிரிசா ஆட்சிக்கு வந்ததும், உடனடியாக அதன் தேர்தல் வாக்குறுதிகளை துாக்கியெறிந்துவிட்டு, சர்வதேச நிதி மூலதனத்தின் கோரிக்கைகளுக்கு தலைசாய்த்ததோடு, அடுத்த நான்கு ஆண்டுகளில் கிரேக்கத் தொழிலாள வர்க்கத்தின் அத்தியவசிய சேவைகள், ஓய்வுதியங்கள், தொழில்கள், வேலை நிலைமைகள் மற்றும் ஊதியங்களை நாசம் செய்தது.
சோசலிச சமத்துவக் கட்சி, சர்வதேச நிதி மூலதனத்தின் தனிச் சிறப்புகளை சவால் செய்கின்ற, முதலாளித்துவ அமைப்பு முறையை தூக்கி வீச முயற்சிக்கின்ற ஒரு வேலைத்திட்டத்தின் அடிப்படையில் மட்டுமே, தொழலாள வர்க்கம் அதன் நலன்களைப் பாதுகாக்க முடியும் என வலியுறுத்துகின்றது. நாம் பாரிய கடன் மீதான பேச்சுவார்தைக்கு அல்லாமல் அதை முழுமையாக தள்ளுபடி செய்யவே கோரூகின்றோம். அந்தக் கொள்கைக்காகப் போராட, நாம் சுயாதீன தொழிலாளர் நடவடிக்கை குழுக்களைக் கட்டியெழுப்பவும், சோசலிச கொள்கைகளின் அடிப்படையில் சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைகளை எதிர்ப்பதற்கான மூலோபாயத்தை கலந்துரையாடவும் அதை நடைமுறைப்படுத்தவும், நடவடிக்கை குழுக்களின் பிரதிநிதிகளை அடிப்படையாகக் கொண்ட ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான தொழிலாளர்களதும் கிராமப்புற வெகுஜனங்களதும் மாநாட்டை கூட்டுவதற்கு அழைப்பு விடுக்கின்றோம்.
சர்வதேச நிதி மூலதனம் மற்றும் உலகலாவிய இராட்சத கூட்டுத்தாபனங்களை எதிர்த்துப் போராட, இலங்கையில் உள்ள தொழிலாளர்கள், தமது வாழ்க்கை நிலைமகள் மீது இதேபோன்ற தாக்குதல்களுக்கு முகங்கொடுக்கும் உலகம் முழுவதிலும் உள்ள தமது வர்க்க சகோதர சகோரிகளுடன் இணைவது அவசியம் ஆகும்.
2022 இலும், தற்போதும் முன்னிலை சோசலிசக் கட்சியின் கொள்கைகள் சாதாரணமான அரசியல் தவறுகள் கிடையாது, மாறாக அது அதன் வர்க்க நோக்குநிலையில் இருந்தும் அதன் வேலைத்திட்டத்தில் இருந்தும் நேரடியாக ஊற்றெடுக்கின்றது. அது உயர் மத்திய வர்க்கதின் பிரிவுகளுக்காக பேசுகின்றதே தவிர, தொழிலாள வர்க்கத்திற்காக அல்ல. அதன் விளைவாக, இதன் தேர்தல் விஞ்ஞாபனம் இடைவிடாமல் தொழிலாளர்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தை அல்லாமல் “மக்களையே” குறிக்கின்றது. ”மக்கள் முன்னணிக்கான” அதன் அழைப்பானது தொழிலாள வர்க்கத்தை மத்திய வர்க்கம், முதலாளித்துவ கட்சிகள் மற்றும் அமைப்புகளுக்கு அடிபணிய வைக்கும் முயற்சியே ஆகும்.
2011ல் ஜே.வி.பி.யில் இருந்து பிரிந்த முன்னிலை சோசலிசக் கட்சி, ஜே.வி.பி.யின் மாவோவாத, காஸ்ட்ரோவாத, சிங்கள ஜனரஞ்சகவாத கருத்தியல் கலவையில், குறிப்பாக ஸ்ராலினிச-மாவாவாத இரண்டு-கட்ட தத்துவத்திலேயே வேர் ஊன்றியுள்ளது. உடனடியான பணிகளும் குறுகிய கால வேலைத் திட்டமும் “எமது சோசலிச கொள்கை அடித்தளமும்” என்றவாறு அதன் தேர்தல் அறிக்கையின் இரு பகுதிகளும், இதை தெளிவாக முன்வைக்கின்றன.
முதல் கட்டமானது உடனடியான முதலாளித்துவ ஜனநாயகப் பணிகளை மேற்கொள்வதற்கு, பெரும்பாலும் தொழிலாள வர்க்கத்தின் பெரும் துன்பங்களை குறைப்பதற்கு எனக் கூறிக்கொண்டு, தொழிலாளர்களை “முற்போக்கு” முதலாளித்துவத்துவ கூட்டணிக்கு அடிபணிய வைக்கும் அதே நேரம், சோசலிசம் தொலைதுார இரண்டாம் கட்டத்துக்கு தள்ளப்படுகின்றது. உண்மையில், 20ம் நுாற்றாண்டின் வரலாறு மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டியதைப் போல், தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு புரட்சிகர இயத்தையும் கண்டு பீதியடைந்த “முற்போக்கு” முதலாளித்துவம், மோசமான விளைவுகளுடன் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளுக்கு எதிராகத் திரும்பும்.
இந்த இரண்டு கட்ட தத்துவத்திற்கு இணங்க, முன்னிலை சோசலிசக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனமானது, அதன் குறுகிய-கால வேலைத்திட்டத்தின் ஒரு பாகமாக அரசு கட்டமைப்பின் “ஜனநாயகமயமாக்கலுக்கு” அழைப்புவிடுத்து, “இது சோசலிச அரசு அமைப்பு கிடையாது என்பதை வெளிப்படையாக அறிவிக்கிறது. எவ்வாறாயினும் முதலாளித்துவ அரசின் ஜனநாயகமயமாக்கல் என்பது பிற்போக்கு கற்பனாவாதம் ஆகும்.
1948 இல் உத்தியோகபூர்வ சுதந்திரம் பெற்றதில் இருந்து, இலங்கை முதலாளித்துவமானது அதன் ஆட்சியை தக்கவைக்க ஜனநாயக விரோத வழிமுறைகளையும் பொலிஸ்-அரசு அடக்குமுறையையும் நாடியுள்ளது. முதல் அரசாங்கம் தமிழ் பேசும் பெருந்தோட்ட தொழிலாளர்களின் பிரஜா உரிமையை ஒழித்ததுடன், தமிழர் விரோத பேரினவாதமும் படுகொலைகளும் 1983ல் நீண்டகால உள்நாட்டு யுத்தத்திற்கு வழிவகுத்தது. முன்னிலை சோசலிசக் கட்சி வேண்டுகோள் விடுக்கும் எதிர்க்கட்சிகளான ஐக்கிய மக்கள் சக்தி, ஜே.வி.பி. மற்றும் ஒட்டுமொத்த கொழும்பு அரசியல் ஸ்தாபகமும், பிளவுபடுத்தும் இனவாத அரசியலில் மூழ்கியுள்ளன. இப்போது பெரும் பொருளாதார, சமூக நெருக்கடி நிலைமைகளின் கீழ், ஆளும் வர்க்கம் இனவாதத்தை துாண்டிவிட்டு ஆட்சியின் சர்வாதிகார வடிவங்களை முன்னெடுக்கத் தயங்காது.
குறிப்பிடத்தக்கவகையில், முன்னிலை சோசலிசக் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிடும் போது, அதன் வேட்பாளர் போபகே, விக்கிரமசிங்க அரசாங்கம் “இந்தியாவுக்கு முழுமையாக அடிபணிந்துள்ளதாகவும்” “சுதந்திரத்தை இழந்துவிட்டதாகவும்” அதை விமர்சித்தார். இது தமிழ் பிரிவினைவாத விடுதலைப் புலிகளை நிராயுதபாணயாக்க தீவின் வடக்கிற்கு இந்திய “அமைதி காக்கும் படைகளை” கொண்டுவந்த இந்திய-இலங்கை ஒப்பந்ததிற்கு எதிராக, 1988-1989 இல் பாசிச கிளர்ச்சியில் ஈடுபட்ட முன்னிலை சோசலிசக் கட்சியின் தாய்க் கட்சியான ஜே.வி.பி. முன்னெடுத்த, இந்திய-விரோத மற்றும் தமிழர்-விரோத பேரினவாத பிரச்சாரத்தை நினைவுபடுத்துகின்றது. அதன் பேரினவாத பிரச்சாரத்தை எதிர்த்த தொழிலாளர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள், சோசலிச சமத்துவக் கட்சியின் உறுப்பினர்கள் உட்பட அரசியல்வாதிகளை, அதன் துப்பாக்கிதாரிகள் சுட்டுக்கொன்றனர். முன்னிலை சோசலிசக் கட்சி, இந்த கீழ்த்தரமான வகுப்புவாத அரசியலை ஒருபோதும் நிராகரிக்கவில்லை.
இரண்டு கட்ட தத்துவத்திற்கு எதிராக, இலங்கை போன்ற முதலாளித்துவ அபிவருத்தி பின்தங்கிய நாடுகளில் உள்ள தேசிய முதலாளித்துவம், தொழிலாள வர்க்கம் மற்றும் ஒடுக்கபட்ட வெகுஜனங்களின் அடிப்படை சமூக மற்றும் ஜனநாயக அபிலாஷைகளை நிறைவேற்ற இயல்பாகவே இலாயக்கற்றது என லியோன் ட்ரொட்ஸ்கி தனது நிரந்தரப் புரட்சி தத்துவத்தில் விளக்கியுள்ளார். அந்தப் பணிகள், சோசலிசப் புரட்சியில் முதலாளித்துவத்தை துாக்கிவீசி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான போராட்டத்தில், கிராமப்புற ஏழைகளையும் தன்பின்னே ஒன்றிணைத்துக் கொண்ட தொழிலாள வர்க்கத்திடமே ஒப்படைக்கப்படுகின்றன.
இன்று உலக முதலாளித்துவ நெருக்கடி எந்தளவுக்கு உள்ளது என்றால், பின்தங்கிய நாடுகள் மட்டுமன்றி, முன்னேறிய ஏகாதிபத்திய நாடுகள் என்று அழைக்கப்படுபவை தீவிர-வலதுசாரி, ஜனநாயக விரோத ஆட்சி வடிவங்களை நோக்கித் திரும்புகின்றன. அனைத்திற்கும் மேலாக, பாசிசவாதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் போர் வெறியர் கமலா ஹரிஸ் ஆகியோர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியாளர்களாக உள்ள அமெரிக்காவில் இந்த நிலைமை மிகவும் உக்கிரமாக காணப்படுகின்றது. உலகம் முழுவதிலும் ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டமானது சோசலிசத்திற்காக தொழிலாள வரக்கம் முன்னெடுக்க வேண்டிய போராட்டத்துடன் இணைந்துள்ளது.
முன்னிலை சோசலிசக் கட்சி, மக்கள் சபையைக் கட்டியெழுப்புவதன் ஊடாக, அரசாங்கத்திற்கும் பாராளுமன்றத்திற்கும் அழுத்தம் கொடுத்து பாராளுமன்றத்தை ஜனநாயகமயப்படுத்த அழைப்புவிடுக்கின்றது. இது வர்க்க ஒத்துழைப்பின் வேலைத்திட்டமே தவிர வேறொன்றுமில்லை. அத்தகைய “மக்கள் சபைகளில்” ஆதிக்கம் செலுத்துபவர்கள், முதலாளித்துவ மற்றும் உயர் மத்திய வர்க்கப் பிரிவுகளின் பிரதிநிதிகளாகவே இருப்பர்.
சோசலிச சமத்துவக் கட்சியானது தொழிலாளர்கள் தமது சொந்த சுயாதீன பலத்தை நிலைநிறுத்துவதற்கு விடயங்களை தங்கள் கையில் எடுத்துக்கொள்ள வேண்டும் என அழைப்புவிடுக்கின்றது. நாம், அனைத்து முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் அவற்றின் தொழிற்சங்கங்க கைக்கூலிகளில் இருந்தும் பிருந்து, சுயாதீனமாக, ஒவ்வொரு வேலைத்தளம், தொழிற்சாலைகள் மற்றும் பெருந்தோட்டங்களில் நடவடிக்கைக் குழுக்களை அமைக்க பரிந்துரைக்கின்றோம். நாடாளுமன்றத்திற்கு எதிராக, தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளை தமது ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளைப் பாதுகாக்க அவசியமான அரசியல் மற்றும் தொழிற்துறை மூலோபாயத்தை தீர்மானிக்கவும், நடைமுறைப்படுத்தவும், தமது நடவடிக்கைக் குழுக்களில் இருந்து ஜனநாயக-ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை உள்ளடக்கிய, தொழிலாளர்களதும் கிராமப்புற வெகுஜனங்களதும் ஜனநாயகத்திற்கும் சோசலிசத்திற்குமான மாநாட்டை கட்டியெழுப்ப அழைப்பு விடுக்கின்றது.
இந்த நடவடிக்கைக் குழுக்களில், தொழிலாள வர்க்கத்தை நெருக்கும் தேவைகளை பூர்த்தி செய்ய, ஒரு தொடர் கோரிக்கைகளை சோசலிச சமத்துவக் கட்சி பரிந்துரைக்கின்றது. சர்வதேச நாணய நிதியத்தால் கட்டளையிடப்பட்டுள்ள சிக்கன வெட்டுக்களை நிராகரி!, அனைத்து வெளிநாட்டுக் கடன்களையும் தள்ளுபடி செய்!, அரசு நிறுவனங்களை தனியார்மயமாக்க அல்லது மறுசீரமைக்க அனுமதிக்காதே! வாழ்க்கைச் செலவு சுட்டெண்ணுக்கு ஏற்ப அனைத்து தொழிலாளர்களுக்கும் போதுமான சம்பளம் வேண்டும்!, பெரு நிறுவனங்கள், பெருந்தோட்டங்கள், பாரிய வங்கிகள், மற்றும் மிக முக்கியமான பொருளாதார மையங்களை தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவா!
இந்தக் கோரிக்கைகளில் எதுவும் முதலாளித்துவ கட்டமைப்பிற்குள்ளோ அல்லது தேசிய அடிப்படையிலோ செயற்படுத்த முடியாது. ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான மாநாட்டை ஸ்தாபிப்பதானது, முதலாளித்துவத்தை துாக்கிவீசி சோசலிச வழியில் சமூகத்தை மறுகட்டமைக்க ஒரு தொழிலாளர்-விவசாயிகளின் அரசாங்கத்தை ஸ்தாபிக்க வேண்டியதன் அவசித்தை முன்வைக்கின்றது. இது தெற்காசியாவிலும் சர்வதேச அளவிலும் சோசலிசத்திற்கான பரந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்.