முன்னோக்கு

ஜனநாயகத்திற்கும் சோசலிசத்திற்குமான இலங்கை தொழிலாளர்களினதும் கிராமப்புற வெகுஜனங்களினதும் மாநாட்டிற்காக!

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பகுதியான சோசலிச சமத்துவக் கட்சி (SEP), ஜனநாயகத்திற்கும் சோசலிசத்திற்குமான தொழிலாளர்களினதும் கிராமப்புற வெகுஜனங்களினதும் மாநாட்டை ஒழுங்கமைப்பதற்கும் கூட்டுவதற்கும் உழைக்கும் மக்கள் மற்றும் இளைஞர்களால் முன்னெடுக்கப்படும் ஒரு தீவு தழுவிய பிரச்சாரத்திற்கு அழைப்பு விடுக்கின்றது.

சோசலிச சமத்துவக் கட்சி, சுரண்டப்படும் உழைக்கும் மக்களின் இந்த மாநாட்டை, கோட்டாபய இராஜபக்ஷ மற்றும் ரணில் விக்கிரமசிங்கவின் மதிப்பிழந்த பாராளுமன்றக் கூட்டாளிகளால் அமைக்கப்படும் பிற்போக்கான முதலாளித்துவ இடைக்கால அரசாங்கத்திற்கு ஒரு புரட்சிகர அரசியல் மாற்றீடாகக் கருதுகிறது. விக்கிரமசிங்க நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகி இருப்பதோடு எதேச்சதிகாரியாகவும் இருப்பார். ஆளும் வர்க்கத்தின் புதிய அரசாங்கத்திற்கு ஒரே ஒரு நோக்கம் மட்டுமே உள்ளது: அது, சர்வதேச நாணய நிதியம் (IMF), அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியம் மற்றும் இலங்கை ஆளும் வர்க்கமும் கோரும் கொடூரமான சிக்கன திட்டத்தை அமுல்படுத்தும் அதே நேரம், வெகுஜன எதிர்ப்பின் கழுத்தை நெரிப்பதுமாகும்.

9 ஜூலை 2022, சனிக்கிழமை, இலங்கை, கொழும்பில் உள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்குச் செல்லும் தெருவில் எதிர்ப்பாளர்கள் ஒன்றுகூடியுள்ளனர். (AP Photo/Amitha Thennakoon) [AP Photo/Amitha Thennakoon]

ஜனநாயக மற்றும் சோசலிச மாநாட்டிற்கான அடித்தளம், தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற உழைப்பாளர்களால் தீவு முழுவதிலும் உள்ள வேலைத் தளங்கள், தொழிற்சாலைகள், பெருந்தோட்டங்கள், குடியிருப்புக்கள் மற்றும் கிராமப்புறங்களிலும், தங்கள் வர்க்க நலன்களுக்காக போராடுவதற்கான நடவடிக்கை குழுக்களை ஸ்தாபிப்பதன் மூலமே அமைக்கப்பட வேண்டும். இந்தக் குழுக்கள் உழைக்கும் மக்களின் அபிலாஷைகளுக்கு உண்மையான குரல் கொடுக்க வேண்டுமானால், அவை முதலாளித்துவ வர்க்கத்தின் அனைத்துக் கட்சிகள் மற்றும் அதன் தொழிற்சங்க அடிவருடிகளிடம் இருந்து சுயாதீனமாக இருப்பது அவசியம்.

அனைத்துக் கட்சி இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிப்பதில் பங்குகொள்ள மறுத்த ஒரே கட்சி, சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே. ஒரு முதலாளித்துவ இடைக்கால அரசாங்கம், தொழிலாள வர்க்கத்தின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது பேரழிவுகரமான தாக்குதலுக்குத் திட்டமிடும் அதேவேளை, ஆளும் வர்க்கம் அதற்கான நேரத்தை எடுத்துக்கொள்வதற்கான ஒரு கருவியாக அது இருக்கும் என நாங்கள் எச்சரித்திருந்தோம். முதலாளித்துவ வர்க்கத்தைப் பொறுத்தவரை, பொருளாதார நெருக்கடியில் இருந்து வெளியேறும் ஒரே வழி, தொழில்கள், வேலை நிலைமைகள், பொதுக் கல்வி, சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் விலைகளுக்கான மானியங்கள் போன்ற பல தசாப்த கால போராட்டங்களினால் தொழிலாளர்கள் வென்றெடுத்த சமூக நலன்களில் எஞ்சியிருப்பவற்றையும் அழித்து தரைமட்டமாக்கும் கொள்கையாகும்.

சர்வதேச நாணய நிதிய சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்துவதில் பேர் போன, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கைக்கூலியான விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக பாராளுமன்றம் தெரிவு செய்தமை, அரசியல் அமைப்பு முறை ஊழல் நிறைந்தது, ஜனநாயக விரோதமானது மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியம், சர்வதேச நாணய நிதியம் மற்றும் இலங்கை ஆளும் வர்க்கத்தில் உள்ள அவற்றின் முகவர்களால் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுகிறது என்பதற்கு மறுக்க முடியாத ஆதாரத்தை வழங்குகிறது.

இது ஒரு எச்சரிக்கையாகவும் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். மதிப்பிழந்த மற்றும் வெறுக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரே பாராளுமன்ற உறுப்பினரான விக்கிரமசிங்க, மக்கள் பிரதிநிதியாக இல்லாமல், முதலாளித்துவ 'ஒழுங்கின்' பிரதிநிதியாக ஜனாதிபதி பதவிக்கு உரிமை கோரினார். அவர் 'பதில் ஜனாதிபதியாக' பணியாற்றிய ஆறு நாட்களில், வெகுஜன எதிர்ப்பை காட்டுமிராண்டித்தனமாக ஒடுக்குவதற்கும், தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான ஒரு கொடிய தாக்குதலை முன்னெடுக்கவும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அனைத்து எதேச்சதிகார அதிகாரங்களையும், பாரிய இராணுவ-அரசு எந்திரத்தின் முழு பலத்தையும் பயன்படுத்த விக்கிரமசிங்க தயாராகி வருவதை தெளிவாக எடுத்துக்காட்டினார்.

ஜனாதிபதியாகவும் பிரதமராகவும் இருந்துகொண்டு, அனைத்து எதிர்ப்புகளையும் சட்டவிரோதமாக்குவதற்கும், தணிக்கையை திணிப்பதற்கும், குற்றச்சாட்டு இன்றி மக்களை தொகையாக கைது செய்து தடுத்து வைப்பதற்கும், அரச அதிகாரிகளுக்கு அதிகாரங்களை வழங்க அவர் அவசரகால அதிகாரங்களை பயன்படுத்தினார். அவர் பொலிஸுக்கும் இராணுவத்திற்கும் ஒழுங்கை மீட்டெடுக்குமாறு கட்டளையிட்டதுடன், குற்றவியல் மற்றும் ஆளும் வர்க்க குண்டரான கோட்டாபய இராஜபக்ஷவை அதிகாரத்திலிருந்து விரட்டியடித்த வெகுஜனங்களை 'பாசிசவாதிகள்' என அவதூறாகப் பேசினார்.

ஒரு இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது பற்றிய பேச்சுக்களில் பங்குகொள்ள மறுத்த சோசலிச சமத்துவக் கட்சி, 1964இல் ட்ரொட்ஸ்கிசத்தின் இன்றியமையாத அரசியல் கோட்பாடுகளை லங்கா சம சமாஜக் கட்சி பேரழிவுகரமாக காட்டிக் கொடுத்ததன் கசப்பான அரசியல் படிப்பினைகளில் இருந்து கற்றுக்கொண்டது. பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியின் மத்தியில், தொழிலாள வர்க்கத்தின் சக்திவாய்ந்த '21 கோரிக்கைகள்' இயக்கத்திற்கு முகங்கொடுத்த முதலாளித்துவ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான பிரதமர் சிறிமா பண்டாரநாயக்க, முதலாளித்துவ ஆட்சிக்கு முட்டு கொடுக்க லங்கா சம சமாஜக் கட்சியின் (LSSP) தலைவர்களின் பக்கம் திரும்பினார். பண்டாரநாயக்காவின் முதலாளித்துவ 'சிங்களவர்களுக்கு முதலிடம்' அரசாங்கத்திற்குள் லங்கா சம சமாஜக் கட்சி நுழைந்துகொண்டமை '21 கோரிக்கைகள்' இயக்கத்தின் முடிவை மட்டும் குறிக்கவில்லை. அது வெகுஜனங்களை நம்பிக்கையிழக்கச் செய்து, வர்க்கப் போராட்டத்தின் இழப்பில் இன-மொழிரீதியான மோதல்களை ஊக்குவித்ததுடன், பிற்போக்கு இனவாத அரசியலுக்கும் பல தசாப்தகால உள்நாட்டுப் போரின் ஆதிக்கத்திற்கும் வழி வகுத்தது.

லங்கா சம சமாஜக் கட்சியின் காட்டிக்கொடுப்பின் பாதையில் சோசலிச சமத்துவக் கட்சி செல்லப் போவதில்லை. முதலாளித்துவ அரசாங்கங்களுக்கு அனைத்து வகையான நேரடி மற்றும் மறைமுக ஆதரவையும் நாங்கள் நிராகரிக்கிறோம். தொழிலாளர்களின் அதிகாரத்திற்கான போராட்டத்தின் தூண்களான சோசலிச சர்வதேசியவாதம் மற்றும் சுயாதீன வர்க்க அரசியலையும் லங்கா சம சமாஜக் கட்சி நிராகரித்தற்கு நேர் எதிராக, சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம், 1968ல் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஒரு பிரிவாக ஸ்தாபிக்கப்பட்டது.

இலங்கையிலும் பூகோள ரீதியிலுமான முதலாளித்துவ நெருக்கடி, அறுபது வருடங்களுக்கு முன்னர் இருந்ததை விட இன்று மிக ஆழமானதாக உள்ளது. கடந்த மூன்று மாதங்களின் வெகுஜன எழுச்சியானது முதலாளித்துவ ஆட்சியின் ஆணி வேரையே உலுக்கியுள்ளது. ஆனால் லியோன் ட்ரொட்ஸ்கி ஒருமுறை விளக்கியது போல், தனது பலவீனத்தைப் புரிந்துகொள்வதுதான் முதலாளித்துவத்தின் பலம் ஆகும். அரசியல் அதிகாரம் அதன் கைகளில் விடப்பட்டால், அது சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன திட்ட நிரலைத் திணிப்பதன் மூலமும், எந்தவொரு வெகுஜன எதிர்ப்பையும் நசுக்குவதன் மூலமும் ஈவிரக்கமின்றி அதன் நலன்களைப் பாதுகாக்கும்.

தொழிலாள வர்க்கத்தின் பலவீனம், தனது பலத்தை அது புரிந்து கொள்ளாததுதான் என்றும் ட்ரொட்ஸ்கி விளக்கினார். பாரியளவான வெகுஜனங்களின் போராட்டங்கள் பெரும் போர்க்குணம், உறுதிப்பாடு மற்றும் தைரியத்தை வெளிப்படுத்தியுள்ளன. ஆனால் உழைக்கும் மக்கள் அரசியல் ஸ்தாபகத்திற்கு கட்டுப்பட்டு, ஒரு முதலாளித்துவ இடைக்கால அரசாங்கத்தில் நம்பிக்கை வைத்தால், விளைவு தவிர்க்க முடியாமல் ஒரு பேரழிவானதாக இருக்கும்.

2011 பெப்ரவரியில் எகிப்து, கெய்ரோவில் தஹ்ரிர் சதுக்கத்தில் கூடியுள்ள அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் (AP Photo/Tara Todras-Whitehill)

தோல்வியுற்ற 2011 எகிப்திய புரட்சியின் படிப்பினைகள் இந்த நெருக்கடியான தருணத்தில் இலங்கை தொழிலாள வர்க்கத்திற்கு தீர்க்கமான முக்கியத்துவம் வாய்ந்தவை ஆகும். 2011 இன் தொடக்கத்தில் ஒரு வலிமையான மக்கள் எழுச்சி வெடித்ததுடன் சில வாரங்களுக்குள் ஹோஸ்னி முபாரக்கின் பல தசாப்த கால இராணுவ சர்வாதிகாரத்தை வெளியேற்றியது. எவ்வாறாயினும், தொழிலாள வர்க்கம் ஒரு சுயாதீனமான வர்க்க முன்னோக்குடன் ஆயுதபாணியாகி இருக்காததால், அந்த வெகுஜன இயக்கத்தின் மீது முதலாளித்துவ எதிர்ப்பு மற்றும் வசதியான மத்தியதர வர்க்கத்தின் பல்வேறு பிரிவுகள் ஆதிக்கம் செலுத்தின. இந்த சக்திகள் முதலாளித்துவ ஆட்சிக்கு எந்த சவாலையும் விடுப்பதை கடுமையாக எதிர்த்தன. இதில் புரட்சிகர சோசலிஸ்டுகள் (Revolutionary Socialists) போன்ற போலி-இடது குழுக்களும் அடங்கும். அவர்கள் 'ஜனநாயகத்திற்கான பரப்பை திறப்பது' என்ற பெயரில், முஸ்லிம் சகோதரத்துவத்தால் உருவாக்கப்பட்ட குறுகிய கால வலதுசாரி முதலாளித்துவ அரசாங்கத்திற்கும், பின்னர் இராணுவத்தில் 'தாராளவாதிகள்' என்று அழைக்கப்பட்ட பிரிவுகளையும் ஆதரிக்க வலியுறுத்தினர்.

எகிப்தில் வெகுஜன இயக்கம் தணிந்து, துண்டு துண்டாகிய நிலையில், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதரவுடன் இராணுவம் இரத்தக்களரி ஒடுக்குமுறைக்கான வாய்ப்பைப் பற்றிக்கொண்டு, தற்போதைய சர்வாதிகாரியான, முபாரக்கின் முன்னாள் தளபதி அப்தெல் ஃபத்தா அல்-சிசியின் கீழ் பயங்கரவாத ஆட்சியை நிறுவியது.

தொழிலாள வர்க்கத்திற்கு, இந்த துயரமான தோல்வியின் இன்றியமையாத பாடம் என்ன? அரசியல் முன்முயற்சியை அதன் கைகளில் இருந்து நழுவிப் போக அனுமதிக்க முடியாது. முதலாளித்துவத்தின் அனைத்து அரசியல் கட்சிகள், அவற்றுடன் தொங்கிக்கொண்டிருக்கும் போலி-இடதுகள் மற்றும் தொழிற்சங்க எந்திரங்களில் இருந்து தொழிலாள வர்க்கம் தங்களைத் தாங்களே விலக்கிக்கொள்ள வேண்டும். அது தனது வர்க்க நலன்களைப் பாதுகாக்கவும் அதிகாரத்திற்காகப் போராடவும் அதன் சொந்த அரசியல் அமைப்புகளை நிறுவ வேண்டும். சோசலிச சமத்துவக் கட்சி ஒரு இடைக்கால அரசாங்கத்திற்கான பேச்சுவார்த்தைகளை நிராகரித்து, அரசியல் ஸ்தாபகம் மற்றும் முதலாளித்துவ அரசின் ஜனநாயக விரோத சதிகளில் இருந்து முற்றிலும் சுயாதீனமாக, தொழிலாள வர்க்கம் அதன் சொந்த அரசியல் அதிகார மையத்தை நிறுவ வேண்டும் என்பதை புரிந்து கொண்டது. தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற வெகுஜனங்களின் ஜனநாயக மற்றும் சோசலிச மாநாட்டுக்கான நமது அழைப்பின் முக்கியத்துவம் இதுவே ஆகும்.

முழு பாராளுமன்ற கட்டமைப்பின் மீதான பரந்த வெகுஜனங்களின் ஆழமான நம்பிக்கையின்மையும் விரோதமும், ஏற்கனவே '225 பேரும் ஒழிக' என்ற பிரபலமான கோஷத்தில் வெளிப்படுத்தப்பட்டது - வேறுவிதமாகக் கூறினால், இராஜபக்ஷ மற்றும் விக்கிரமசிங்க மட்டுமல்ல, அனைத்து 225 ஊழல்மிக்க, சுயநலன் தேடும் அரசியல்வாதிகள் தங்களின் வசதியான, பாராளுமன்ற ஆசனங்களை ஆக்கிரமித்துள்ளனர். எவ்வாறாயினும், உழைக்கும் மக்கள், வெளியேயிருந்து விமர்சித்துக்கொண்டிருக்க முடியாது. அவர்கள் தங்களின் குரல் கேட்கப்படவும், நடவடிக்கைகள் உணரப்படவும் தங்கள் சொந்த சுயாதீனமான அரசியல் அதிகார அடித்தளத்தை கொண்டிருக்க வேண்டும்.

லியோன் ட்ரொட்ஸ்கி

1917 ரஷ்யப் புரட்சியின் மகத்தான அரசியல் அனுபவத்தை கிரகித்துக்கொண்ட லியோன் ட்ரொட்ஸ்கிக்கு புரட்சிகர இயக்கவியல் பற்றிய ஆழமான புரிதல் இருந்தது. 1930களில் ஸ்பானிய புரட்சி பற்றிய அவரது எழுத்துக்கள், இலங்கையில் நடக்கும் நிகழ்வுகளுடன் அசாதாரணமாக பொருந்தி வருகின்றன. ட்ரொட்ஸ்கி அதில் எழுதியதாவது:

யதார்த்தத்தில் போராட்டத்தின் பலத்த எழுச்சி இருந்தபோதும், புரட்சியின் அகநிலை காரணிகளான கட்சி, வெகுஜனங்களின் அமைப்பு, கோஷங்கள் போன்றவை இந்த இயக்கத்தின் கடமைகளுக்கு அசாதாரணமாக பின்தங்கிய நிலைமையில் இருந்தன. இந்த பின்தங்கியிருந்த தன்மைதான் இன்று முக்கிய ஆபத்தை கொண்டிருக்கிறது.

பாதிக்கப்பட்டவர்களையும் தோல்விகளையும் உருவாக்கிய அல்லது வெற்றிகள் எதுவுமே இல்லாமல் முடிவுக்கு வந்த, பாதி தன்னிச்சையான வேலைநிறுத்தங்களின் பரவலானது புரட்சியின், வெகுஜனங்கள் விழிப்புணர்வு பெறுகின்ற, அவர்கள் அணிதிரள்கின்ற மற்றும் போராட்டத்திற்குள் நுழைகின்ற காலத்தின் முற்றிலும் தவிர்க்க முடியாத கட்டம் ஆகும். அதனால் அது, இயக்கத்தில் பங்குபெறும் தொழிலாளர்களுக்கு மட்டுமன்றி, ஒட்டுமொத்த மக்களுக்கும் முக்கியமான ஒன்றாகும். தொழிற்சாலை தொழிலாளர்கள் மட்டுமன்றி, கைவினைஞர்கள், ஓட்டுநர்கள் மற்றும் வெதுப்பக ஊழியர்கள், கட்டுமான, நீர்ப்பாசன மற்றும் இறுதியாக விவசாயத் தொழிலாளர்களும் வேலைநிறுத்தம் செய்கிறார்கள். அனுபவம்வாய்ந்தவர்கள் அங்கங்களை வடிவமைக்கிறார்கள், புதியவர்கள் கற்றுக்கொள்கிறார்கள். இத்தகைய வேலைநிறுத்த ஊடகத்தின் ஊடாக, இந்த வர்க்கம் தன்னை ஒரு வர்க்கமாக உணரத் தொடங்குகிறது.

எவ்வாறாயினும், தற்போதைய கட்டத்தில் இயக்கத்தின் பலமாக இருக்கின்ற இந்த தன்னிச்சையானது, எதிர்காலத்தில் அதன் பலவீனத்திற்கு மூலகாரணமாக மாறக்கூடும். எதிர்காலத்தில் இந்த இயக்கம் ஒரு தெளிவான வேலைத்திட்டம் இல்லாமல், அதன் சொந்த தலைமைத்துவம் இல்லாமல் விடப்படும் என்று அனுமானிப்பது, நம்பிக்கையீனம் என்ற முன்னோக்கை ஏற்றுக்கொள்வதையே அர்த்தப்படுத்தும். இதில் உள்ள பிரச்சினை அதிகாரத்தை கைப்பற்றுவதை விட குறைவானது அல்ல. ஆங்காங்கே நடப்பவை ஒருபுறம் இருக்க, சூறாவளி வேலைநிறுத்தங்கள் கூட இந்த சிக்கலைத் தீர்க்காது. எதிர்வரவிருக்கும் மாதங்களில் போராட்டத்தின் போக்கில், பாட்டாளி வர்க்கம் அதன் பணிகளும் வழிமுறைகளும் தனக்கே தெளிவாகிவருவதையும், அதன் அணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வலுப்பெறுவதையும் உணரவில்லை என்றால், அதன் சொந்த அணிகளில் ஒரு சிதைவு உருவாகும்... நிச்சயமாக, நாம் இன்னும் அந்த புள்ளியில் இருந்து வெகு தொலைவில் இருக்கிறோம். ஆனால் நேரத்தை இழக்கக்கூடாது. [“ஸ்பெயினில் புரட்சி,” 24 ஜனவரி 1931, ஸ்பானிய புரட்சி (1931-39) நூலில் இருந்து, பாத்ஃபைண்டர் பிரஸ், பக். 88-89]

அதனாலேயே சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் பெருந்தோட்டங்களிலும் ஆசிரியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் மத்தியிலும் சுயாதீனமான, ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட நடவடிக்கைக் குழுக்களை ஸ்தாபிக்கும் செயல்முறையை சோசலிச சமத்துவக் கட்சி ஆரம்பித்துள்ளது. ஆனால், இந்த நடவடிக்கைக் குழுக்கள் தீவு முழுவதும் விரிவுபடுத்தப்பட வேண்டும், ஒரு சோசலிச முன்னோக்கை பற்றி கலந்துரையாடவும் ஏற்றுக்கொள்ளவும், தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற உழைப்பாளர்களின் மாநாட்டுக்கு பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான அடித்தளமாக அவை மாற வேண்டும்.

சோசலிச சமத்துவக் கட்சி பரிந்துரைக்கின்ற நடவடிக்கைக் குழுக்கள், சலுகைகளுக்காக ஒரு இடைக்கால அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க போலி-இடது முன்னிலை சோசலிச கட்சி (FSP) முன்மொழிந்துள்ள 'மக்கள் சபைகளுக்கு' முற்றிலும் எதிரானவை ஆகும். எந்தவொரு முதலாளித்துவ அரசாங்கத்திடமும் பிச்சையெடுக்கும் பாத்திரத்துடன் செல்வது அர்த்தமற்றது. ஆளும் வர்க்கத்திடம் அதிக வலியையும் வேதனையையும் தவிர கொடுப்பதற்கு வேறு எதுவும் கிடையாது. உழைக்கும் மக்களின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடும் அமைப்புகளாக செயல்படும் நடவடிக்கை குழுக்கள் அமைக்கப்படுவது அவசியமாகும்.

சோசலிச சமத்துவக் கட்சி தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற உழைப்பாளிகள் போராடக்கூடிய பல கொள்கைகளை கோடிட்டுக் காட்டியுள்ளது. அவையாவன: சர்வதச நாணய நிதிய சிக்கன திட்ட நிரலை நிராகரி! அனைத்து வெளிநாட்டு கடன்களையும் தள்ளுபடி செய்! பெரும் பணக்காரர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்வதோடு, பெரிய வங்கிகள் மற்றும் பெரு நிறுவனங்களை தொழிலாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் தேசியமயமாக்கு! மில்லியன் கணக்கான மக்கள் எதிர்கொள்ளும் பசி மற்றும் பட்டினிக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும், மருத்துவமனைகளில் மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகள் இருப்பதை உறுதி செய்வதற்கும் உற்பத்தி மற்றும் விநியோகத்தை தொழிலாள வர்க்கம் மறுசீரமைக்க வேண்டும். ஏழை விவசாயிகளின் கஷ்டத்தை போக்க, அவர்களின் கடன்களை இரத்து செய்து, உர மானியத்தை மீண்டும் வழங்க வேண்டும். அனைவருக்கும் தொழில் கிடைக்க வேண்டும் மற்றும் ஊதியங்கள் வாழ்க்கைச் செலவுக்கு ஏற்றவாறு கணிக்கப்பட வேண்டும்.

சோசலிச சமத்துவக் கட்சி முன்மொழிந்துள்ள மாநாட்டின் பணிகள் ஜனநாயக மற்றும் சோசலிச தன்மைகளை கொண்டுள்ளன. ஒரு இடைக்கால அரசாங்கத்தை நிறுவ சதி செய்யும் முதலாளித்துவ கட்சிகள் அனைத்தும் நாட்டின் ஜனநாயக விரோத அரசியலமைப்பு பாதுகாக்கப்பட வேண்டும் என்று அறிவிக்கின்றன. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், முதலாளித்துவ அரசு, பொலிஸ், நீதிமன்றம், சிறைச்சாலைகள் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை மற்றும் அதன் பரந்த அதிகாரங்கள் அப்படியே இருக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை உடனடியாக ஒழிக்கப்பட வேண்டும் என்று சோசலிச சமத்துவக் கட்சி வலியுறுத்துகிறது. அதனுடன் சேர்த்து பல தசாப்தங்களாக உருவாக்கப்பட்ட அடக்குமுறைச் சட்டங்களின் முழு அதிகாரமும் நீக்கப்பட வேண்டும்.

நிரந்தரப் புரட்சி தத்துவத்தில் லியோன் ட்ரொட்ஸ்கி விளக்கியது போல், இலங்கை போன்ற தாமதமாக வளர்ச்சியடைந்த நாடுகளில், ஜனநாயகக் கடமைகள் தொழிலாள வர்க்கத்தின் சோசலிசத்திற்கான போராட்டத்துடன் பிரிக்க முடியாத வகையில் பிணைக்கப்பட்டுள்ளன. 1948ல் உத்தியகபூர்வ சுதந்திரம் பெற்றதிலிருந்து ஏழு தசாப்தங்களில், முதலாளித்துவ வர்க்கமும் அதன் அரசியல் கட்சிகளும், 1970 மற்றும் 1989-90இல் சிங்கள கிராமப்புற இளைஞர்களின் இரத்தக் களரி படுகொலைகள் மற்றும் 1983-2009 பிற்போக்கு இனவாதப் போர் உட்பட, தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற மக்களின் ஜனநாயக உரிமைகளை மீண்டும் மீண்டும் மிதித்து நசுக்கி வந்துள்ளன. இன்று, தமது செல்வத்தையும், பூகோள மூலதனத்தின் முதலீடுகளையும் பாதுகாப்பதற்கு அவர்கள் இன்னும் பெரிய குற்றங்களுக்குத் தயாராகி வருகின்றனர்.

முழு சமூக மற்றும் அரசியல் ஒழுங்கிற்கு எதிரான போராட்டத்தில் வெகுஜனங்களை அதன் பின்னால் அணிதிரட்டிக்கொள்கின்ற தொழிலாள வர்க்கத்தால் மட்டுமே, ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கவும், தமிழர்கள் மற்றும் ஏனைய இன சிறுபான்மையினருக்கு எதிரான வேரூன்றிய பாகுபாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் மற்றும் நிலப்பற்றாக்குறை, உரம் மற்றும் இதர முக்கிய பொருட்களுக்கான திகைப்பூட்டும் விலை அதிகரிப்பு, சிறு உற்பத்தியாளர்கள் மீது பெரும் விவசாய நிறுவனங்களால் மீது திணிக்கப்படும் இடைவிடாத அழுத்தம் உட்பட ஏழை விவசாயிகள் மற்றும் கிராமப்புற தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் அவசரப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும்.

சோசலிச சமத்துவக் கட்சி எப்பொழுதும் தமிழ் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் ஜனநாயக உரிமைகளை பாதுகாத்து வந்ததுடன் தொழிலாளர்களை பிளவுபடுத்த பல தசாப்தங்களாக பயன்படுத்தப்பட்டு வரும் நச்சுத்தனமான சிங்கள பேரினவாதத்தை எதிர்க்கிறது. அதே நேரத்தில், 'தங்கள்' தொழிலாளர்களை சுரண்டுவதற்கு தங்களுக்கு உள்ள 'உரிமையை' தவிர வேறு எதையும் எதிர்பார்க்காத, மற்றும் எப்போதும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக அணிசேரும் தமிழ் ஆளும் உயரடுக்கின் பிளவுபடுத்தும் தமிழ் தேசியவாதத்தை நாங்கள் எதிர்க்கிறோம். எதிர்வரவிருக்கும் வாரங்கள் மற்றும் மாதங்களில், நம்பிக்கை இழந்த ஆளும் வர்க்கம், தொழிலாளர்களை ஒருவருக்கொருவர் எதிராக நிறுத்துகின்ற கீழ்த்தரமான இனவாதப் பொய்களையும் ஆத்திரமூட்டல்களையும் மீண்டும் நாடுமென எச்சரிக்கிறோம். அவை எதிர்க்கப்பட வேண்டும்.

தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற மக்களின் ஜனநாயக மற்றும் சோசலிச மாநாட்டிற்கான சோசலிச சமத்துவக் கட்சியின் அழைப்பு, தொழிலாள வர்க்கத்திற்கு அதன் சக்திகளை ஒருங்கிணைக்கவும், கிராமப்புற மக்களின் தீவிர ஆதரவை வென்றெடுக்கவும், சமூகத்தை சோசலிச வழியில் மறுகட்டமைக்க அர்ப்பணித்துக்கொண்ட தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் அரசாங்கத்தின் மூலம் அதன் சொந்த ஆட்சி அதிகாரத்துக்கு அடித்தளம் அமைக்கவும் ஒரு அரசியல் மூலோபாயத்தை வழங்குகிறது. தொழிலாளர்களும் கிராமப்புற மக்களும் நடவடிக்கைக் குழுக்களைக் கட்டியெழுப்புவதற்கான அரசியல் போராட்டத்தை எவ்வளவு வேகமாக மேற்கொள்கிறார்களோ, அவ்வளவு விரைவில் ஆளும் வர்க்கங்களால் தயாரிக்கப்படும் பேரழிவை எதிர்க்க தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற உழைப்பாளர்களின் மாநாட்டைக் கூட்ட முடியும். இந்தப் போராட்டத்தை முன்னெடுக்க விரும்புவோருக்கு அனைத்து அரசியல் உதவிகளையும் நாம் வழங்குகிறோம்.

லியோன் ட்ரொட்ஸ்கியின் நுண்ணறிவு இன்று எதிரொலிக்கிறது. 1917இல் ரஷ்யாவில் முதலாளித்துவ இடைக்கால அரசாங்கம் தூக்கியெறியப்பட்ட பின்னர் உருவான தொழிலாளர் அரசு சோவியத்துக்களை அடித்தளமாக கொண்டதாகும். புரட்சியின் போக்கில் தோன்றிய சுதந்திரமான, ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட தொழிலாளர்கள் மற்றும் ஏழை விவசாயிகளின் சபைகளுக்கு இந்த பெயர் வழங்கப்பட்டது. 1930ல் ஸ்பானியத் தொழிலாளர்களுக்காக உரையாற்றிய ட்ரொட்ஸ்கி, ஒரு அரசியல் அதிகாரத்திற்கான போராட்டத்தில், அதற்குத் தேவையான நெம்புகோலாக சோவியத்தை நிறுவுவதற்குப் போராடுவதன் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார்:

சோவியத்துக்கள் தோன்றி நம்முடன் அவை வளர்ச்சியடைந்த வடிவத்தில் அதை நாம் நோக்கினால், அவற்றிற்கான கோஷங்கள் முழு சூழ்நிலையால் பரிந்துரைக்கப்படுவதாகவே நான் காண்கிறேன்: முதலில், அவை சக்திவாய்ந்த வேலைநிறுத்தக் குழுக்களாக இருந்தன. ஆரம்பகால பங்கேற்பாளர்களில் ஒருவர் கூட இவை அதிகாரத்தின் எதிர்கால உறுப்புகள் என்று கற்பனை செய்திருக்கமாட்டார்... சோவியத்துகளை செயற்கையாக உருவாக்க முடியாது என்பது புரிகிறது. ஆனால் ஒவ்வொரு உள்ளூர் வேலைநிறுத்தத்தின் போதும், பெரும்பான்மையான தொழிற்துறைகளைத் தழுவி, ஒரு அரசியல் தன்மையை எடுத்துக்கொள்வதால், சோவியத்துகளை நிறுவவேண்டும் என அழைப்பது அவசியம். சமகால நிலைமைகளின் கீழ், இயக்கத்தின் தலைமையை அதன் கைகளில் எடுத்துக்கொள்வதற்கும், புரட்சிகர நடவடிக்கையின் ஒழுக்கத்தை அதனுள் கொண்டு வருவதற்கும் திறன் கொண்ட ஒரே அமைப்பு இதுவே ஆகும். [“ஸ்பானிய புரட்சி ஆபத்தில்,” அதே நூல்., பக். 67]

சாராம்சத்தில் அதுவே இன்று தொழிலாள வர்க்கத்தின் முன் இருக்கும் அரசியல் பணியாக இருப்பதோடு சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே அதற்காகப் போராடுகிறது.

இந்த அரசியல் போராட்டத்தில் இலங்கை தொழிலாள வர்க்கத்தின் கூட்டாளிகள் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களே ஆவர். அதற்காக அவர்கள் போராடினால், இலங்கையில் உள்ள தொழிலாளர்கள் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் வற்றாத ஆதரவைக் காண்பார்கள். உலகெங்கிலும், அமைப்பு ரீதியான நெருக்கடியில் சிக்கிக்கொண்டிருக்கும் உலக முதலாளித்துவமானது, போர், முடிவில்லாத பெரும் தொற்றுநோய், பாசிசம் மற்றும் எப்போதும் தீவிரமடைந்து வரும் சுரண்டல் மற்றும் சமூக அவலத்தைத் தவிர வேறு எதையும் அது கொடுக்கவில்லை என்பதை மக்கள் உணர்ந்து வருகின்றனர்.

உலகெங்கிலும் உள்ள ஆளும் உயரடுக்குகள், இப்போது சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கை மற்றும் மறுசீரமைப்புக்கு இலக்காகியுள்ள, பாகிஸ்தான், எகிப்து தொடக்கம் இன்னும் ஒரு டஜன் நாடுகளில் மட்டுமன்றி, அமெரிக்கா மற்றும் அதன் ஏகாதிபத்திய கூட்டாளிகள் உட்பட, இலங்கை மாதிரியான சமூக வெடிப்பின் பீதியால் பீடிக்கப்பட்டிருக்கின்றன. பெப்ரவரி 15 அன்று பைனான்சியல் டைம்ஸ் எச்சரித்தபடி:

ஆனால் இலங்கையின் பொருளாதார மற்றும் அரசியல் அவலங்கள் ஒரு தேசிய பிரச்சினையை விட மிக பெரியவை. அவை பல வளர்ந்து வரும் சந்தைகளில் ஏற்படக்கூடிய சாத்தியமான நெருக்கடிகளுக்கு ஒரு வியத்தகு எடுத்துக்காட்டு ஆகும். உலகப் பொருளாதாரத்தைத் தாக்கியுள்ள பொருளாதார அதிர்ச்சிகளின் தொடர்ச்சியை, பணக்கார நாடுகளாலேயே சமாளிக்க முடியாதுள்ளது. உலக மக்கள்தொகையில் பெரும்பான்மையானோர் வாழும் பல ஏழை மற்றும் வளர்ந்து வரும் நாடுகளில், கவலைப்படுவதற்கு இன்னும் அதிக காரணம் இருக்கிறது. பொருளாதார அழுத்தங்கள் அரசியல் ஸ்திரமின்மையை கொண்டு வருகின்றன - இன்று பொருளாதார அழுத்தங்கள் எல்லா இடங்களிலும் உள்ளன.

ஒரு ஜனநாயக மற்றும் சோசலிச மாநாட்டை ஒழுங்கமைப்பதற்கும் கூட்டுவதற்கும் தொழிலாள வர்க்கம் மற்றும் கிராமப்புற வெகுஜனங்களின் பரந்த பிரிவுகளை அரவணைத்துக்கொள்ளும் ஒரு உண்மையான வெகுஜன இயக்கத்தின் வளர்ச்சி தேவைப்படுகிறது. மாநாட்டு கூட்டப்பட்டவுடன், அது நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள வேலைத் தளங்கள், தொழிற்சாலைகள், பெருந்தோட்டங்கள் மற்றும் குடியிருப்புகளிலும் உள்ளூர் குழுக்களின் பரந்த வலையமைப்பை எந்த அளவிற்கு ஸ்தாபித்துள்ளது என்பதிலேயே அதன் அதிகாரமும் பலமும் தங்கியுள்ளது.

இந்த குழுக்களின் வலையமைப்பை நிறுவி விரிவுபடுத்துவதற்கான போராட்டத்தில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் தொடங்கப்பட்ட சர்வதேச தொழிலாளர்களின் சாமானிய தொழிலாளர் கூட்டணி ஒரு தீர்க்கமான பாத்திரத்தை வகிக்கும். உலகம் முழுவதிலும், பெருநிறுவன சார்பு மற்றும் தேசியவாத தொழிற்சங்க அமைப்புகளின் பிடியில் இருந்து விடுபட்டு, தங்களைத் தாங்களே சுயாதீனமாக ஒழுங்கமைத்துக்கொள்கின்ற தொழிலாளர்களின் இயக்கம் அதிகரித்து வருகிறது.

சோசலிச சமத்துவக் கட்சி மாநாட்டை ஸ்தாபிப்பதற்கான வெகுஜன இயக்கத்தின் வளர்ச்சிக்குத் தேவையான அரசியல் வழிகாட்டுதலை வழங்கவும், உதவவும் தயாராக உள்ளது.

மனிதகுலத்தின் சோசலிச எதிர்காலத்திற்கான கூட்டுப் போராட்டத்திற்காக இந்தியாவிலும் தெற்காசியா முழுவதிலும், சர்வதேச அளவிலும் உள்ள தொழிலாளர்களுக்கு நாங்கள் ஒரு சிறப்பான வேண்டுகோளை விடுக்கிறோம். இலங்கையில் உள்ள போர்க்குணமிக்க தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை சோசலிச சமத்துவக் கட்சியில் இணையுமாறும் சோசலிச சர்வதேசியத்திற்கான புரட்சிகரப் போராட்டத்தில் உங்கள் பங்களிப்பைச் செய்யுமாறும் நாங்கள் அழைக்கிறோம்.

மேலும் படிக்க

Loading