மொழிபெர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
இப்புத்தாண்டு தீவிரமடையும் வர்க்கப் போராட்டத்தினதும் உலக சோசலிச புரட்சியினதும் ஒரு தசாப்தம் ஆரம்பமாவதைக் குறித்துநிற்கிறது.
வருங்காலத்தில், புத்திசாதுர்யமான வரலாற்றாசிரியர்கள் இருபத்தியோராம் நூற்றாண்டின் எழுச்சிகள் பற்றி எழுதுகின்றபோது, 2020 களின் தொடக்கத்தில் நிலவிக் கொண்டிருந்த, விரைவில் உலகெங்கும் வியாபிக்கவிருந்த புரட்சிகரப் புயலின் “வெளிப்படையான” அறிகுறிகளைப் பட்டியலிடுவார்கள். உண்மைகளின் ஒரு விரிவான தொகுப்பு, ஆவணங்கள், வரைபடங்கள், வலைத் தள மற்றும் சமூக ஊடக பதிவுகள், மற்றும் தாங்கள் கையாளக்கூடிய மற்ற மதிப்புமிக்க டிஜிட்டல் தகவல் வடிவங்களின் மூலமாக, அறிஞர்கள், 2010 களை உலக முதலாளித்துவ அமைப்புமுறையின் தீர்க்கமுடியாத பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நெருக்கடியால் குணாதிசயப்படுத்தப்பட்ட ஒரு காலகட்டமாக விவரிப்பார்கள்.
இந்த நூற்றாண்டின் மூன்றாம் தசாப்தம் தொடங்கும்போது, தத்துவார்த்தரீதியாக காரல் மார்க்ஸால் முன்கணிக்கப்பட்ட ஒரு நிலைக்கு வரலாறு துல்லியமாக வந்து சேர்ந்திருந்ததை அவர்கள் குறிப்பிட்டுக் காட்டுவார்கள்: “சமூகத்தின் சடத்துவ உற்பத்தி சக்திகள், அவற்றின் குறிப்பிட்ட அபிவிருத்திக் கட்டத்தில், அப்போது நிலவும் உற்பத்தி உறவுகளுடன், அல்லது அதன் ஒரு சட்டபூர்வமான வெளிப்பாடான அவை இதுவரை இயங்கிவந்த சொத்துடமை முறைகளுடன் மோதலுக்குள் வருகின்றன. அதிலிருந்து இந்த உற்பத்தி சக்திகளின் அபிவிருத்தி வடிவங்கள் அவற்றின் தளைகளாக மாறுகின்றன. அதன்பின் சமூகப் புரட்சியின் ஒரு சகாப்தம் ஆரம்பமாகிறது. பொருளாதார அடித்தளத்தின் மாற்றத்துடன், ஒட்டுமொத்தமான பாரிய மேற்கட்டுமானமும் கிட்டத்தட்ட துரிதமாய் உருமாற்றம் காண்கிறது.”
உண்மையில், கடந்த பத்து ஆண்டுகளின் பிரதான குணாம்சங்களாக என்ன இருந்தன?
முடிவற்ற இராணுவ மோதலின் ஸ்தாபகமயமாக்கமும் அணுஆயுத உலகப் போரின் பெருகிய அச்சுறுத்தலும்
கடந்த தசாப்தத்தில் அமெரிக்கா போரில் ஈடுபடாத ஒரேயொரு நாளும் கூட இருக்கவில்லை. இராணுவ நடவடிக்கைகள் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் தொடர்ந்ததுடன் மட்டுமல்ல. சிரியா, லிபியா, ஏமன் மற்றும் உக்ரேனிலும் புதிய தலையீடுகள் மேற்கொள்ளப்பட்டன. 2020 இப்போது தான் தொடங்கியிருக்கிறது என்ற நிலையில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் உத்தரவின் பேரில் ஈரானிய மேஜர் ஜெனரல் காசிம் சுலைமானி கொல்லப்பட்டிருப்பது அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில், கணக்கிலடங்கா பின்விளைவுகளைக் கொண்ட முழுவீச்சிலான போர் வெடிக்க அச்சுறுத்துகிறது. ஒரு அமெரிக்க ஜனாதிபதி இன்னுமொரு குறிவைத்த கொலையில் ஈடுபடுவதும், அதன்பின் இரத்தவேட்கையுடனான சுயதம்பட்டம் அடிப்பதும், ஒட்டுமொத்த ஆளும் உயரடுக்கின் சீரழிவு எந்த அளவுக்கு சென்றுள்ளது என்பதற்கு சான்றுகூறுகிறது.
மேலும், 2018 இல் ஒரு புதிய மூலோபாய சித்தாந்தம் கையேற்றுக் கொள்ளப்பட்டுள்ளமையானது அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகளில் பரந்தவொரு அதிகரிப்புக்கு சமிக்கையளித்தது. புதிய மூலோபாயத்தை அறிவிக்கையில், அப்போது பாதுகாப்புச் செயலராக இருந்த ஜேம்ஸ் மாட்டிஸ் அறிவித்தார்: “இன்று நாம் ஈடுபட்டுள்ள பயங்கரவாதிகளுக்கு எதிரான பிரச்சாரத்தை நாம் தொடர்ந்தும் நடத்துவோம், என்றபோதும், பயங்கரவாதம் அல்ல, வல்லரசுகளிடையேயான போட்டிதான் இப்போது அமெரிக்க தேசியப் பாதுகாப்பின் முக்கிய கவனம்செலுத்தும் விடயமாக இருக்கிறது.” அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்க நிலையை தக்கவைப்பதற்கான முயற்சியே “பயங்கரவாதத்தின் மீதான போர்” என்பதாக முன்பு அழைக்கப்பட்டு வந்த ஒன்றின் அத்தியாவசியமான நோக்கமாக இருந்தது என்பதை புதிய சித்தாந்தம் வெளிப்படுத்தியது.
நிதிரீதியாய் எத்தனை செலவானாலும், மனித உயிர்களின் விடயத்தில் எத்தனை பின்விளைவுகளைக் கொண்டிருந்தாலும், இந்த நிலையை தக்கவைப்பதற்கு அமெரிக்கா தீர்மானமாய் இருக்கிறது. மூலோபாய ஆய்வுகளுக்கான சர்வதேச நிறுவனம் (IISS) சமீபத்தில் வெளியான அதன் மூலோபாயஆய்வில்தெரிவித்தது: “அமெரிக்கா அதன் பங்காக, தானாகவோ, தயக்கத்துடனோ அல்லது ஏதோ கொஞ்சம் சண்டை செய்ததற்குப் பின்னரோ, எந்த மூலோபாய கோலையும் (strategic baton) சீனாவுக்குக் கொடுத்து விடுவதாய் இல்லை.”
கடந்த தசாப்தத்தின் போது, அத்தனை முக்கிய ஏகாதிபத்திய சக்திகளுமே, உலகப் போருக்கும் அணுஆயுத மோதலுக்குமான தமது தயாரிப்புகளை அதிகப்படுத்தின. 2019 இல் ட்ரம்ப் நிர்வாகம், ஜனநாயகக் கட்சியின் ஆதரவுடன், கையேற்க்கப்பட்ட டிரில்லியன்-டாலர் இராணுவ நிதிஒதுக்கீட்டுத் திட்டம் ஒரு போர் நிதிஒதுக்கீட்டுத் திட்டமாகும். ஜேர்மனி, பிரான்ஸ், ஐக்கிய இராச்சியம் மற்றும் ஏகாதிபத்திய நாடுகள் அத்தனையுமே தத்தமது இராணுவப் படைகளைக் கட்டியெழுப்பிக் கொண்டிருக்கின்றன. ரஷ்யா மற்றும் சீனாவில் இருக்கும் ஆளும் உயரடுக்குகள் உள்ளிட, ஏகாதிபத்தியத்தின் இலக்குகள் போர் மிரட்டல்களுக்கும் ஏதோவொரு வகையிலான உடன்பாட்டை உருவாக்குவதற்கான நப்பாசையான முயற்சிகளுக்கும் இடையில் மாறிமாறி ஊசலாடுகின்றன.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் இன்னுமொரு உலகளாவிய மோதல் வெடித்து விடாமல் தடுப்பதற்காக உருவாக்கப்பட்ட அமைப்புகள் செயலிழந்து கிடக்கின்றன. மூலோபாயஆய்வு எழுதுகிறது:
2018–19 இன் போக்குகள் அனைத்தும் சர்வதேச சமூகத்தின் அணுமயமாக்கத்தை ஊர்ஜிதம் செய்திருக்கின்றன. ‘சக்திகளது சமநிலை’யோ அல்லது ‘சர்வதேச விதிகள்-அடிப்படையில் ஆட்சி’யோ ஒழுங்குக் கோட்பாடுகளாக சேவை செய்யவில்லை. சர்வதேச அமைப்புகள் ஓரங்கட்டப்பட்டிருக்கின்றன. வழமையான இராஜதந்திர சந்திப்புகள் தொடரவே செய்கின்றன என்றபோதும், போட்டியிடும் தேசிய முன்முயற்சிகளே முக்கியமானதாக இருக்கின்றன. இவை அபூர்வமாகவே மற்ற நாடுகளுடன் ஒருங்கிணைந்து செல்லக்கூடியதாக இருக்கின்றன. அவற்றை நடைமுறைப்படுத்துவதிலும் பின்விளைவிலும் அநேகமான சமயங்களில் முன்கணிப்பிட முடியாதவையாக இருக்கின்றன. அநேகமான சமயங்களில் அவை செயலுறுத்தம் மற்றும் பின்விளைவு இரண்டிலுமே தவறுகொண்டவையாக இருக்கின்றன.
“உலகளாவிய விதிகள்-அடிப்படையிலான ஒழுங்கு” —அதாவது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சவால் செய்யமுடியாத மேலாதிக்கத்தை சார்ந்ததான ஒன்று— முடிவுக்கு வருவதானது, போருக்கு இட்டுச் செல்லும் ஒரு அரசியல் தர்க்கத்தை இயங்கச் செய்கிறது. மூலோபாயஆய்வுஎச்சரிக்கின்றவாறாக: “சட்டம் அரசியலால் உருவாக்கப்படுகிறது, பராமரிக்கப்படுகிறது. சட்டத்தால் பிரச்சினைகளை தீர்க்கவியலாத போது, அவை தீர்வுக்காக அரசியல் களத்தின் பக்கம் திருப்பி விடப்படுகின்றன.” IISS குறிப்பிடும் “களம்” குறித்து புரிந்து கொள்ள வேண்டுமானால், போர் என்பது, வேறு வழிவகைகள் மூலமான அரசியலாகும் என்ற கிளவுஸ்விட்ஸ்’ இன் பிரபல வரையறையை ஒருவர் நினைவுகூர வேண்டும்.
ஒரு நவீன உலகப் போரை என்னவெல்லாம் சூழ்ந்திருக்கும்? அணுஆயுதங்களது பயன்பாட்டிற்கான புதிய திட்டங்களுக்கு IISS கவனம் ஈர்க்கிறது. “இதனிடையே, அமெரிக்காவும் ரஷ்யாவும் தத்தமது ஆயுதக் கிடங்குகளை நவீனப்படுத்திக் கொண்டிருக்கின்றன, அவற்றின் பயன்பாட்டுக்கு வழிவகை தரக்கூடிய வழிகளில் தமது சித்தாந்தங்களை மாற்றிக் கொண்டிருக்கின்றன, அதேவேளையில் காஷ்மீர் தொடர்பாக இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையில் நிலவும் மோதலானது அணுஆயுதங்களது பயன்பாட்டிற்கான சாத்தியவளம் கொண்ட ஒரு பற்றவைப்புப் புள்ளியாக தொடர்ந்தும் திகழ்கிறது.” தந்திரோபாய அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது ஒரு சாத்தியமான தெரிவுதான் என்பது கொள்கை உருவாக்குநர்கள் மத்தியில் நிலவுகையில், கிறுக்குத்தனத்தின் விளிம்பில் நிற்கின்ற, பொறுப்பற்ற தன்மையை சுட்டிக் காட்டி IISS எழுதுகிறது:
குறிப்பிட்ட சூழ்நிலைகளின் கீழ், வரம்புபட்ட, பிராந்திய அளவிலான அணுஆயுதச் சண்டையானது கடுமையான உலக சுற்றுச்சூழல் விளைவுகளைக் கொண்டிருக்கிறது என்பது மட்டுமே ஓரளவுக்கு நிச்சயமாக சொல்லப்படக் கூடியதாகும். ஆயினும்மற்றசூழ்நிலைகளின்கீழ், விளைவுகள்மிகக்குறைவாகவேஇருக்கக்கூடும். [அழுத்தம் சேர்க்கப்பட்டுள்ளது]
மனிதகுலத்தையே அழிக்க அச்சுறுத்தக் கூடியதாக இருக்கும் ஒரு மூன்றாம் உலகப் போரை நோக்கிய உந்துதலை மனிதாபிமான அழைப்புவிடுவதன் ஊடாக நிறுத்தப்பட்டு விட முடியாது. முதலாளித்துவத்தின் அராஜகம் மற்றும் தேசிய-அரசு அமைப்புமுறையின் காலாவதி நிலையில் இருந்தே போர் தோன்றுகிறது. ஆகவே, சோசலிசத்திற்கான தொழிலாள வர்க்கத்தின் உலகளாவிய போராட்டத்தின் மூலமாக மட்டுமே அது தடுத்து நிறுத்தப்பட முடியும்.
ஜனநாயகத்தின் பொறிவு
வர்க்கப் பதட்டங்களின் அதீத தீவிரப்படலும் ஏகாதிபத்தியத்தின் இயக்கவியலும் தான் ஜனநாயக ஆட்சி வடிவங்களின் உலகளாவிய பொறிவுக்கான உண்மையான மூலவளங்களாய் இருக்கின்றன. முதலாம் உலகப் போரின் மத்தியில் லெனின் எழுதியவாறாக: “ஏகாதிபத்தியமானது, எங்கெங்கிலும் சுதந்திரத்தினை கொண்டுசெல்வதற்கானதாக இல்லாமல் தனது மேலாதிக்கத்தினை முன்கொண்டு செல்வதை அறிமுகப்படுத்தும் நிதி மூலதனத்தினதும் மற்றும் ஏகபோகங்களினதும் சகாப்தமாகும். இந்த போக்குகளின் விளைவாக எவ்வாறான அரசியல் அமைப்புமுறை இருந்தாலும் எங்கும் பிற்போக்குத்தனமும் குரோதங்கள் தீவிரப்படுதலுமே இருக்கும்.”
கடந்த தசாப்தத்தின் போது, ஆளும் உயரடுக்குகள் எதேச்சாதிகார மற்றும் பாசிச ஆட்சி வடிவங்களை நோக்கித் திரும்பியதில் லெனினின் பகுப்பாய்வு ஊர்ஜிதப் படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் நரேந்திர மோடி, பிலிப்பைன்ஸில் ரோட்ரிகொ டுடெர்டெ, இஸ்ரேலில் பெஞ்சமின் நெத்தனியாகு, எகிப்தில் அப்துல் ஃபதா அல்-சிசி, பிரேசிலில் ஜாயிர் பொல்சனாரோ, அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப், மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் போரிஸ் ஜோன்சன் போன்று இத்தகைய குற்றவியல், இன்னும் சொல்வதானால், மனநோய்கொண்ட ஆளுமைகள் அதிகாரத்திற்கு உயர்ந்தமையானது ஒட்டுமொத்த முதலாளித்துவ அமைப்புமுறையின் ஒரு அமைப்புரீதியான நெருக்கடியின் அறிகுறியாக இருக்கிறது.
ஜேர்மனியில், மூன்றாவது ரைய்க் (நாஜி ஆட்சி, 1933-45) பொறிந்து எழுபத்தியைந்து ஆண்டுகளுக்குப் பின்னர், பாசிசம் மீண்டும் திரும்பிக் கொண்டிருக்கிறது. நவ-நாஜிக்களின் ஒரு புகலிடமாக இருக்கும் AfD (The Alternative für Deutschland), கடந்த தசாப்தத்தின் போது பிரதான எதிர்க்கட்சியாக எழுந்தது. பெரும் கூட்டணியின் (Grand Coalition) அரசாங்கமும், ஊழலடைந்த ஊடகங்களும் மற்றும் பிற்போக்குத்தனமான கல்வியறிஞர்களும் தண்டனை அச்சமின்றி ஹிட்லர் ஆட்சியின் குற்றங்களை மூடிமறைத்ததின் மூலமாக இதன் வளர்ச்சிக்கு வழிவகை செய்யப்பட்டது. இதேபோன்ற நிகழ்ச்சிப்போக்குகள்தான் ஐரோப்பாவெங்கிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன, 1930கள் மற்றும் 1940களின் பாசிசத் தலைவர்கள் —பிரான்சில் பெத்தான், இத்தாலியில் முசோலினி, ஹங்கேரியில் ஹோர்த்தி மற்றும் ஸ்பெயினில் பிராங்கோ— இனிய பழைய நினைவுகளாக நினைவு கூரப்படுகின்றனர்.
யூத-விரோத வன்முறையின் மீளெழுச்சி, இஸ்லாமியவெறுப்பின் வளர்த்தெடுப்பு, மற்றும் தேசியப் பேரினவாதம் மற்றும் இனவாதத்தின் பிற வடிவங்களை சென்ற தசாப்தம் கண்டது. மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் இருந்து தப்பிப்பிழைத்து ஓடிவரும் அகதிகளை சிறையிடுவதற்காக மெக்சிகோவுடனான அமெரிக்க எல்லையிலும், ஐரோப்பிய ஒன்றியத்தின் புலம்பெயர்வு-விரோதக் கொள்கையின் முன்முனைவாக ஐரோப்பா மற்றும் வட ஆபிரிக்காவிலும் தடுப்பு முகாம்கள் கட்டப்பட்டன.
முதலாளித்துவக் கட்சிகளுக்குள்ளே எந்தவொரு முற்போக்கான போக்குகளும் இல்லை. ஒரு பாசிச வகைப்பட்ட ஜனாதிபதிக்கு முகம்கொடுக்கும் நிலையிலும் கூட, ஜனநாயகக் கட்சியானது ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதன் அடிப்படையிலான எதிர்ப்பில் இருந்து ஒதுங்கிக் கொள்கிறது. அவர்களது பார்வையில், ட்ரம்ப் அமெரிக்காவின் ரஷ்யாவுக்கு எதிரான பிரச்சாரத்தையும் உக்ரேனிலான பினாமிப் போரையும் பலவீனப்படுத்தியிருக்கிறார் என்ற காரணத்தால் மட்டுமே, ஒரு அரண்மனைக் கவிழ்ப்பின் வழிமுறைகளைப் பிரயோகித்து, ஜனநாயகக் கட்சியினர் ட்ரம்ப் மீது கண்டனத் தீர்மானத்தை நிறைவேற்ற விழைகின்றனர்.
ஜனநாயக உரிமைகளை நோக்கி ஒட்டுமொத்த முதலாளித்துவ அரசியல் ஸ்தாபகமும் கொண்டிருக்கின்ற மனோபாவமானது, விக்கிலீக்ஸ் ஸ்தாபகரான ஜூலியன் அசாஞ்ச் மற்றும் எச்சரிக்கையூட்டியான செல்சியா மானிங் ஆகியோர் மீதான படுபயங்கர நடத்தையில் சுருக்கமாய் எடுத்துரைக்கப்படுவதாக இருக்கிறது. ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினர் ஆகிய இருகட்சியினரது ஆதரவுடன், அசாஞ்ச், அமெரிக்காவுக்கு நாடுகடத்தப்பட காத்திருக்கும் நிலையில், இலண்டனில் உள்ள பெல்மார்ஷ் சிறையில் தொடர்ந்து அடைக்கப்பட்டிருக்கிறார். மேலதிக குற்றச்சாட்டுகளில் அசாஞ்ச் ஐ குற்றப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட ஒரு பெரும் நீதிபதிகள் குழுவின் முன்பாக சாட்சியமளிக்க மறுத்தமைக்காக மானிங் கிட்டத்தட்ட ஒருவருட காலமாக சிறையிலடைக்கப்பட்டிருக்கிறார்.
அசாஞ்ச் மற்றும் மானிங் துன்புறுத்தப்படுவதானது அரசியல்சட்டரீதியாக-பாதுகாக்கப்பட்ட செய்தித்துறை நடத்தையை குற்றமாக்குவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது. இணைய தணிக்கை பிரச்சாரம், இந்தியாவில் மாருதி-சுசுகி தொழிலாளர்கள், மற்றும் பிற வர்க்கப் போர் கைதிகள் சிறையிலடைக்கப்படுவது உள்ளிட எதிர்ப்புணர்வின் மீதான ஒரு பரந்த ஒடுக்குமுறையின் பகுதியாக அது இருக்கிறது.
போருக்கான தயாரிப்புகள் —அதற்காக பாரிய செலவினங்கள் மற்றும் முன்கண்டிராத மட்டத்திற்கு கடன் திரட்டுவது உள்ளிட— ஜனநாயகத்தில் இருந்து சுவாசக்காற்றை உறிஞ்சுகின்றன. இறுதி ஆய்வில், போரின் செலவுகள் உலகின் உழைக்கும் மக்கள் மீதுதான் திணிக்கப்பட்டாக வேண்டியதாக உள்ளது. இந்த சுமையேற்றல் பல தசாப்த கால பலிகொடுப்புகளால் ஏற்கனவே கோபத்தில் இருக்கும் ஒரு மக்களின் எதிர்ப்பை எதிர்கொள்ளும். மக்கள் எதிர்ப்பின் ஒவ்வொரு வடிவத்தையும் ஒடுக்குவதற்கான தமது முயற்சிகளைத் தீவிரப்படுத்துவதே ஆளும் உயரடுக்கின் பதிலிறுப்பாக இருக்கும்.
சுற்றுச்சூழல் சீரழிப்பு
சென்ற தசாப்தமானது சுற்றுச்சூழலின் தொடர்ச்சியான மற்றும் அதிக துரிதமான அழிப்பினால் குறிக்கப்பட்டது. உலகளவில் அவசரமான மற்றும் ஆழமான நடவடிக்கைகள் எடுக்கப்படாது போகுமானால், உலக வெப்பமயமாதலின் விளைவுகள் பெருநாசகரமானதாகவும் திரும்பவியலாததாகவும் இருக்கும் என்ற முன்னெப்போதினும் தீவிரமான எச்சரிக்கைகளை விஞ்ஞானிகள் விடுத்திருக்கின்றனர். வருடம் நிறைவடையும் வேளையில், ஆஸ்திரேலியாவைச் சூழ்ந்திருக்கின்ற மரணகரமான காட்டுத்தீ, காலநிலை மாற்றத்தின் படுபயங்கர பின்விளைவுகளில் சமீபத்தியது மட்டுமேயாகும்.
நவம்பரில், “பூமிக் கோளம் ஒரு காலநிலை அவசரநிலைக்கு முகம்கொடுத்துக் கொண்டிருக்கிறது” என்று எச்சரித்து 11,000 விஞ்ஞானிகள் கையெழுத்திட்டிருந்த ஒரு அறிக்கை BioScience விஞ்ஞான இதழில் வெளியாகியிருந்தது. உலக காலநிலை பேச்சுவார்த்தைகளின் நான்கு தசாப்த சமயத்தில், “சில விதிவிலக்குகள் தவிர்த்து, பொதுவாக நாம் நமது வழக்கமான வேலைகளை தொடர்ந்து வந்திருக்கிறோம், இந்த இக்கட்டினைக் குறித்து பேசுவதற்கு பெருமளவில் தவறியிருக்கிறோம்….
காலநிலை நெருக்கடி வந்துவிட்டது, அத்துடன் அநேக விஞ்ஞானிகள் எதிர்பார்த்ததை விடவும் துரிதமான வேகத்தில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அது முன்கணிக்கப்பட்டதை விடவும் மிகக் கடுமையானதாக, இயற்கை சூழலமைப்புகளையும் மனிதகுலத்தின் விதியையும் அச்சுறுத்துவதாக இருக்கிறது... மனிதர்களால் கட்டுப்படுத்தப்படக் கூடிய நிலைக்கு மிகவும் அப்பாலும், ஒரு பேரழிவுகரமான ‘எரிவீடு பூமி’ (‘hothouse Earth’) க்கு இட்டுச் செல்லக் கூடிய, மீண்டும் பழையநிலைக்கு திருப்பவியலாததாக ஆகக்கூடிய சாத்தியம்கொண்ட காலநிலை விளிம்புப் புள்ளியை அடைந்துள்ளமையும் குறிப்பாக கவலையூட்டக் கூடியவையாக உள்ளன. இந்த காலநிலை சங்கிலி விளைவுகள் சூழலமைப்புகளுக்கும், சமூகத்திற்கும் மற்றும் பொருளாதாரங்களுக்கும் கணிசமான இடையூறுகளுக்கு காரணமாகலாம், பூமியின் மிக அதிகமான பகுதிகளை வாழமுடியாததாக ஆக்கக் கூடும்.
விவசாயப் பிராந்தியங்கள் உலக வெப்பமயமாதலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், ஏற்கனவே பசியினால் பாதிப்படைந்துள்ள 821 மில்லியன் மக்கள் பட்டினிநிலைக்கு முகம்கொடுக்கின்றனர் என்று ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றத்திற்கான அரசாங்கங்கள் இடையிலான குழு ஆண்டின் ஆரம்பத்தில் தெரிவித்திருந்தது. நூறு மில்லியன் கணக்கானோர் நன்நீருக்கான அணுகலின்றி போகக் கூடும் என்ற வேளையில், இன்னும் பலர், வெள்ளம், வரட்சி மற்றும் புயல்கள் என கடுமை அதிகரித்த காலநிலைப் போக்குகளின் காரணத்தால் பாதிக்கப்படவிருக்கிறார்கள்.
முடிவில்லாமல் தனிமனித செல்வத்தைக் குவிப்பதைக் காட்டிலும் ஒரு ஆரோக்கியமான சுற்றுச்சூழலுக்கான தேவை உள்ளிட்ட சமூகத் தேவைகளது அடிப்படையில் உலக உற்பத்தியை ஒரு பகுத்தறிவான மற்றும் விஞ்ஞானபூர்வமான விதத்தில் ஒழுங்கமைக்கத் திறனற்றதாக இருக்கும் ஒரு சமூக, பொருளாதார அமைப்புமுறையின் விளைபொருட்களாகவே காலநிலை மாற்றமும், சுற்றுச்சூழல் சீரழிவின் மற்ற வெளிப்பாடுகளும் இருக்கின்றன.
2008 பொறிவுக்குப் பிந்தைய நிலையும் முதலாளித்துவத்தின் நெருக்கடியும்
2008 பொருளாதார மற்றும் நிதி நெருக்கடியைத் தொடர்ந்து ஆளும் வர்க்கத்தால் சுவீகரிக்கப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தின் தவிர்க்கவியலாத மற்றும் நோக்கரீதியான பின்விளைவாக இருக்கின்ற, அதீத சமூக சமத்துவமின்மையின் தீய வளர்ச்சி, சமூக மற்றும் அரசியல் சூழலின் அத்தனை பிற அம்சங்களுக்கும் கீழமைந்திருக்கிறது.
2010களை ஒட்டி நடந்த நிதிப் பொறிவைத் தொடர்ந்து, உலக அரசாங்கங்களும் மத்திய வங்கிகளும் பணமடைகளைத் திறந்து விட்டன. அமெரிக்காவில், புஷ் மற்றும் குறிப்பாக ஒபாமா நிர்வாகங்கள் வங்கிகளின் 700 பில்லியன் டாலர் பிணையெடுப்பையும் அதனைத் தொடர்ந்து “குறைந்த வட்டிக்கு பணத்தை வழங்கும்” நடவடிக்கைகளில் —அதாவது நிதி நிறுவனங்கள் கொண்டிருந்த மதிப்பற்ற சொத்துக்கள் மற்றும் பத்திரங்களை கூட்டரசாங்கக் கருவூலம் வாங்கிக் கொள்வது— டிரில்லியன் கணக்கான டாலர்கள் பணஇறைப்பையும் ஒழுங்கமைத்தன.
ஒரே இரவில், அமெரிக்க அரசாங்கத்தின் கூட்டரசாங்கக் கடன் இருமடங்காகியது. கூட்டரசாங்கக் கருவூலத்தின் (Federal Reserve) சொத்துக்கள் 2008 நவம்பரில் 2 டிரில்லியன் டாலர்களாக இருந்ததில் இருந்து 2014 அக்டோபரில் 4.5 டிரில்லியன் டாலர்களாக அதிகரித்தன, இன்று அந்த மதிப்பின் அளவு 4 டிரில்லியன் டாலருக்கும் அதிகமான நிலையிலேயே தொடர்கிறது. மாதத்திற்கு 60 பில்லியன் டாலர் சொத்துக்கள் வாங்கும் 2019 இன் பிற்பகுதியில் தொடக்கப்பட்ட புதியதொரு திட்டத்தின் காரணத்தால், இந்த ஆண்டின் மத்தியில் நிதிநிலைக்கணக்கு பொறிவுக்குப் பிந்தைய உச்சங்களைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ட்ரம்ப்பின் பாரிய பெருநிறுவன வரி வெட்டுக்கள் மற்றும் வட்டி விகிதங்களில் மேலதிக குறைப்புகளுக்கான கோரிக்கைகள் ஆகியவை சகிதமாக, அவரின் பதவிக்காலத்திலும் இதே கொள்கையே தொடர்ந்து வந்திருக்கிறது. ஜனவரி 1 அன்றான ஒரு கட்டுரையில், நியூயோர்க்டைம்ஸ் (”2019 இல் பலித்த ஒரு எளிய முதலீட்டு உத்தி: கிட்டத்தட்ட எதனை வேண்டுமானாலும் வாங்கு”) கிட்டத்தட்ட அத்தனை முதலீட்டு சொத்துக்களின் மதிப்புமே கடந்த ஆண்டின் போது கூர்மையாக உயர்ந்திருந்தது என்று குறிப்பிட்டது. நாஸ்டாக் 35 சதவீதம் வரை உயர்ந்தது, S&P 500 29 சதவீதம் வரை உயர்ந்தது, மூலப்பொருள்கள் 16 சதவீதம் வரை உயர்ந்தது, அமெரிக்க பெருநிறுவன பத்திரங்கள் 15 சதவீதம் வரையும் அமெரிக்க கருவூலப் பத்திரங்கள் 7 சதவீதம் வரையும் உயர்ந்தன. “கிட்டத்தட்ட ஒரு தசாப்த காலத்தில் கண்டிராத மட்டத்திற்கு சகல முதலீட்டு மதிப்புகளிலும் கணிசமான உயர்வு. காரணம்? அநேக அளவுக்கு பெடரல் ரிசர்வின் தலைசுற்றும் நிலையற்றதன்மை தான் காரணம், அது வட்டி விகிதங்களை உயர்த்தத் திட்டமிட்ட நிலையில் இருந்து அவற்றை குறைப்பதற்கும் நிதிச் சந்தைகளில் புதிய பணத்தை இறைப்பதற்கும் சென்றது.”
பெரும் முதலாளித்துவ சக்திகள் அனைத்துமே இதேபோன்ற நடவடிக்கைகளையே பின்பற்றி வந்திருக்கின்றன. வரம்பற்ற கடன் ஒதுக்கீடு மற்றும் நோட்டு அச்சடிப்பானது —இறுதிப் பகுப்பாய்வில், குறைந்த வட்டிக்கு பணத்தை வழங்கும் quantitative easing என்பது இதுதான்— கீழமைந்த நெருக்கடியைத் தீவிரப்படுத்தியது. தங்களை மீட்கின்ற முயற்சியில், ஆளும் உயரடுக்குகள் ஒட்டுண்ணித்தனத்தை புனிதப்படுத்தினர், நவீன வரலாறு அறிந்திராத ஒரு மட்டத்திற்கு சமூக சமத்துவமின்மையை உயர்த்தினர்.
சந்தையில் வரம்பற்ற பணம் இறைக்கப்பட்டதில் ஆதாயமடைந்த நிதிய உயரடுக்கின் சொத்துக்கள் கடந்த தசாப்தத்தில் வானளாவிய உயரங்களுக்கு உயர்ந்தன. உலகின் 500 மிகப்பணக்கார செல்வந்தர்கள் (உலக மக்கள்தொகையில் 0.000006 சதவீதம்) மொத்தமாய் இப்போது 5.9 டிரில்லியன் டாலர் நிகர சொத்துக்களைக் கொண்டுள்ளனர், இது சென்ற ஆண்டில் மட்டும் 1.2 டிரில்லியன் டாலர் அதிகரிப்பாகும். இந்த அதிகரிப்பு உலகின் 15 நாடுகள் தவிர்த்து மற்ற நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை (அதாவது, உற்பத்தி செய்யப்பட்ட அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளது மொத்த மதிப்பு) விட அதிகமானதாகும். அமெரிக்காவில், 400 மிகப்பணக்கார செல்வந்தர்கள் கீழிருக்கும் 64 சதவீதம் பேர் கொண்டிருக்கும் மொத்த செல்வத்தை விடவும் அதிகமாய் கொண்டுள்ளனர், சமூகத்தின் மேல்மட்டத்திலிருக்கும் 0.1 சதவீதத்தினர் பெருமந்தநிலைக்கு முன்னரான காலமான 1929 இல், பிந்தைய எந்தவொரு சமயத்தை விடவும் மிகப்பெரியதொரு பங்கினை கொண்டிருக்கின்றனர்.
உலகெங்கிலும் பாரிய எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் முகம்கொடுக்கும் கூடிய சமூகப் பெருந்துயரானது, பெருநிறுவன மற்றும் நிதிய உயரடுக்கின் செல்வக் குவிப்பிற்கு உத்திரவாதம் அளிக்க செயல்படுத்தப்பட்ட கொள்கைகளது நேரடி விளைபொருளாக இருக்கிறது.
அமெரிக்காவில் தொழிலாளர்கள் மத்தியில் சராசரி ஆயுட்காலம் வீழ்ச்சியடைவது, உலகெங்கிலும் தொழிலாளர்கள் மற்றும் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் பாரிய வேலைவாய்ப்பின்மை, கிரீஸ் மற்றும் பிற நாடுகளில் திணிக்கப்பட்ட நாசகரமான சிக்கன நடவடிக்கைகள், பெருநிறுவனங்களது இலாபங்களை அதிகரிக்கும் விதமாக சுரண்டல் தீவிரப்படுத்தப்படுவது ஆகிய இவை அனைத்துமே ஆளும் உயரடுக்கினரால் பின்பற்றப்பட்ட கொள்கைகளது பின்விளைவுகளே.
சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தின் வளர்ச்சியும் உலகளாவிய வர்க்கப் போராட்டமும்
சோசலிசப் புரட்சிக்கான புறநிலைமைகள் உலக நெருக்கடியில் இருந்து எழுகின்றன. சோசலிசப் புரட்சி நெருங்கி வருவதானது, 2019 இல், மெக்சிகோ, போர்டோ ரிக்கோ, ஈக்வடோர், கொலம்பியா, சிலி, பிரான்ஸ், ஸ்பெயின், அல்ஜீரியா, பிரிட்டன், லெபனான், ஈராக், ஈரான், சூடான், கென்யா, தென் ஆபிரிக்கா, இந்தியா மற்றும் ஹாங்காங் என உலகெங்கிலும் வியாபித்த பாரிய ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களில் ஏற்கனவே முன்நிழலைக் காட்டியிருக்கிறது. ஒட்டுமொத்த அரசியல் கட்டமைப்புமே வர்க்கப் போராட்டத்தை ஒடுக்குவதை நோக்கி சென்று கொண்டிருக்கும் அமெரிக்கா, நாற்பது ஆண்டுகளுக்கும் பின்னர் வாகன உற்பத்தித் தொழிலாளர்களின் முதல் தேசிய அளவிலான வேலைநிறுத்தத்தைக் கண்டது.
எனினும், வர்க்கப் போராட்டத்தின் ஆதிக்கம்செலுத்தும் மற்றும் மிகப் புரட்சிகரமான அம்சமாக இருப்பது, நவீன-கால முதலாளித்துவத்தின் பூகோளரீதியான தன்மையில் வேரூன்றியதாய் இருக்கின்ற, அதன் சர்வதேச தன்மையாகும். மேலும், தொழிலாள வர்க்கத்தின் இயக்கமென்பது இளைய தலைமுறையின் ஒரு இயக்கமாகும், ஆகவே அது எதிர்காலத்தை ஒழுங்கமைக்கும் ஒரு இயக்கமுமாகும்.
30 வயதிற்குக் கீழிருப்பவர்கள் இப்போது உலகின் பாதிக்கும் மேற்பட்ட மக்கள்தொகையாகவும், உலகின் மிக வேகமாக வளர்ச்சி காண்கிற பிராந்தியங்களில் —துணை-சஹாரா ஆபிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா— மக்களில் 65 சதவீதத்திற்கும் அதிகமானோராகவும் உள்ளனர். இந்தியாவில் ஒவ்வொரு மாதமும், ஒரு மில்லியன் பேர் 18 வயதை எட்டுகின்றனர். மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆபிரிக்காவில், அடுத்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 27 மில்லியன் இளைஞர்கள் உழைக்கும் சக்தியாக நுழைவார்கள் என்று மதிப்பிடப்படுகிறது.
1980 முதல் 2010 வரையில், உலகளாவிய தொழிற்துறை அபிவிருத்தி தொழிலாள வர்க்கத்தில் 1.2 பில்லியன் பேரை கூடுதலாக சேர்த்திருந்தது, அதன்பின்னான தசாப்தத்தில் இன்னும் நூறு மில்லியன் கணக்கானோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த 1.2 பில்லியன் மக்களில், 900 மில்லியன் பேர் வளரும் நாடுகளது தொழிலாள வர்க்கத்தில் நுழைந்திருக்கின்றனர். சர்வதேச அளவில், விவசாயியாக வகைப்படுத்தக் கூடிய உலகளாவிய தொழிலாளர் படையின் சதவீதம் 1991 இல் 44 சதவீதமாக இருந்ததில் இருந்து 2018 இல் 28 சதவீதமாக வீழ்ச்சி கண்டிருந்தது. துணை-சஹாரா ஆபிரிக்காவில் கிட்டத்தட்ட ஒரு பில்லியன் பேர் வரவிருக்கும் தசாப்தங்களில் தொழிலாள வர்க்கத்தில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவில் மட்டும், 121 மில்லியன் மக்கள் 2000க்கும் 2010க்கும் இடையிலான காலத்தில், “பண்ணைகளில் இருந்து தொழிற்சாலைக்கு” மாற்றம் கண்டிருந்தனர், அதன்பின்னான தசாப்தத்தில் இன்னும் மில்லியன் கணக்கானோர் மாறியிருந்தனர்.
ஆசியா மற்றும் ஆபிரிக்கா மட்டும் தான் உழைக்கும் மக்களின் வளர்ச்சியைக் கண்டிருக்கின்றன என்றில்லை. முன்னேறிய முதலாளித்துவ நாடுகளிலும், முன்னர் தங்களை நடுத்தர வர்க்கமாக கருதி வந்திருக்கும் பெரும் பகுதிகள் பாட்டாளி வர்க்க மயமாக்கப்பட்டிருக்கின்றன, இலத்தீன் அமெரிக்காவில் இருந்து அமெரிக்காவிற்கும் வட ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் இருந்து ஐரோப்பாவிற்கும் புலம்பெயர்பவர்களது அலையானது ஒரு மிகவும் பல்தரப்பட்ட உழைப்பாளர் படைக்கு மில்லியன் கணக்கானோரை கூடுதலாகச் சேர்த்திருக்கிறது.
2010 முதல் 2019 வரையில், உலகின் நகர்ப்புற மக்கள்தொகை ஒரு பில்லியன் வரை அதிகரித்து, சமத்துவமின்மையை அன்றாட வாழ்வின் ஒரு புலப்படக் கூடிய உண்மையாகக் கொண்ட, பொருளாதார உற்பத்திக் கூடுகளாகவும் மற்றும் சமூக வெடி கிடங்குகளாகவும் திகழக் கூடிய, ஒன்றுடனொன்று இணைக்கப்பட்ட “மாபெரும் நகரங்களது” ஒரு வலைப்பின்னலை உருவாக்கியிருக்கிறது.
இந்தத் தொழிலாளர்கள் உலக வரலாற்றில் முன்கண்டிராதவொரு விதத்தில் ஒருவருடனொருவர் இணைக்கப்பட்டுள்ளனர். விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் தகவல்தொடர்புகளிலான பிரம்மாண்ட முன்னேற்றங்கள், எல்லாவற்றுக்கும் மேல் இணையத்தின் வளர்ச்சி மற்றும் நடமாடும் சாதனங்களின் பல்கிப்பெருகல் ஆகியவை, அரசு மற்றும் உளவு முகமைகளின் ஊதுகுழல்களாக இருப்பதற்கு அதிகமாக எதுவும் செய்யாத முதலாளித்துவ ஊடகங்களின் பொய்ச் செய்திகளை புறந்தள்ளுவதற்கு பரந்துபட்ட மக்களை அனுமதித்திருக்கின்றன. உலகின் மக்கள்தொகையில் பாதிக்கும் அதிகமானோர், 4.4 பில்லியன் மக்கள், இப்போது இணையத்தினை பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். ஒரு சராசரி தனிமனிதர், ஒவ்வொரு நாளும், பெரும்பாலும் கையடக்க சாதனங்களின் வழியாக, சமூக ஊடகங்களில் இரண்டு மணி நேரங்களுக்கும் அதிகமாக செலவிடுகிறார்.
காலநிலை மாற்றத்திற்கு எதிரான சர்வதேச இயக்கம், சமத்துவமின்மைக்கு எதிரான எதிர்ப்பின் ஒரு உலகளாவிய அடையாளமாக “மஞ்சள் சீருடை”களது உதயம், மற்றும் அமெரிக்கா மற்றும் மெக்சிகோவின் வாகன உற்பத்தித் துறை தொழிலாளர்களது ஐக்கியம் ஆகியவற்றில் வெளிப்படுத்தப்படுகின்றது போல், தொழிலாளர்களும் இளைஞர்களும் இன்று தமது ஆர்ப்பாட்டங்களையும் நடவடிக்கைகளையும் ஒரு உலகளாவிய மட்டத்தில் ஒருங்கிணைக்க முடிகிறது.
இந்த புறநிலை மாற்றங்கள், சமூக சமத்துவமின்மை என்ற மையமான பிரச்சினையிலான சமூக நனவில் பெரும் மாற்றங்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. கிட்டத்தட்ட அனைத்து நாடுகளிலுமே, கூடுதல் சமத்துவம் கோருகின்ற மக்களின் விகிதமானது 2000களில் இருந்து 2010கள் வரையான காலத்தில் 50 சதவீதம் வரை உயர்வு கண்டிருந்ததாக 2019 ஐக்கிய நாடுகள் மனித அபிவிருத்தி அறிக்கை விளக்குகிறது. அந்த அறிக்கை பின்வருமாறு எச்சரித்தது: “சமத்துவமின்மை பற்றியும், கூடிய சமத்துவத்திற்கான விருப்பங்கள் அதிகரிப்பதையும், சிறப்பான வாழ்க்கை பற்றிய அகநிலை உணர்வில் அதிகரிக்கும் உலகளாவிய சமத்துவமின்மை பற்றிய உணர்ந்துகொள்ளல் எழுச்சியடைவதை கணக்கெடுப்புகள் வெளிப்படுத்தியிருக்கின்றன. இந்த அனைத்து போக்குகளும் பிரகாசமான அபாய விளக்குகளாகும்.”
புரட்சிகரத் தலைமையின் பாத்திரம்
சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தின் எண்ணிக்கை வளர்ச்சியும் வர்க்கப் போராட்டத்தின் எழுச்சியும் புரட்சிக்கான புறநிலை அடிப்படையாக இருக்கின்றன. ஆயினும், தொழிலாளர்களின் தன்னெழுச்சியான போராட்டங்களும் உள்ளுணர்வுரீதியாக சோசலிசத்திற்கான அவர்களது உந்துதலும் மட்டுமே போதுமானதல்ல. வர்க்கப் போராட்டத்தை சோசலிசத்திற்கான ஒரு நனவான இயக்கமாக உருமாற்றுவது அரசியல் தலைமை குறித்த ஒரு பிரச்சினையாக உள்ளது.
கடந்த தசாப்தம், புரட்சிகரத் தலைமையின் இன்றியமையாத பாத்திரத்தை, எதிர்மறை முறையில், விளங்கப்படுத்துகின்ற அரசியல் அனுபவங்களது ஒரு செல்வத்தை வழங்கியிருக்கிறது. ஹோஸ்னி முபாரக்கின் அமெரிக்க ஆதரவு சர்வாதிகாரத்திற்கு எதிராக எகிப்தின் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களது பிரம்மாண்டமான போராட்டங்களின் வடிவத்திலான புரட்சியுடன் தசாப்தம் தொடங்கியது. ஒரு புரட்சிகரத் தலைமை இல்லாத நிலையிலும், குட்டி-முதலாளித்துவ அமைப்புகளால் அறிமுகம் செய்யப்பட்ட நோக்குநிலை பிறழ்வின் உதவியுடனும், பரந்துபட்ட மக்கள் ஆளும் வர்க்கத்தின் வெவ்வேறு கன்னைகளுக்குப் பின்னால் மாற்றி விடப்பட்டனர், கெய்ரோவின் கொலைபாதகர் அல்-சிசியின் கீழ் நேரடி இராணுவ சர்வாதிகாரம் மீண்டும் ஸ்தாபிக்கப்படுவதில் இது உச்சமடைந்தது.
மார்க்சிசத்திற்கான மாற்றுகளாக, வசதியான நடுத்தர வர்க்கத்தின் பிரதிநிதிகளால் இட்டுக்கட்டப்பட்ட, அத்தனையும் மதிப்பிழந்து போயிருக்கின்றன: 2011 இல் அமெரிக்காவில் எழுந்த “அரசியலல்லாத” மற்றும் நவ-அராஜகவாத வோல் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு இயக்கம் ஒரு நடுத்தர-வர்க்க இயக்கமாக வெளிப்பட்டது, “99 சதவீதத்தினரின் கட்சி”க்கான அதன் அழைப்பு, தொழிலாள வர்க்கத்தின் நலன்களை, சமூகத்தின் மேல்மட்டத்திலுள்ள 10 சதவீதம் பேரது நலன்களுக்கு கீழ்ப்படியச் செய்ய வைக்க முனைந்தது.
ஐரோப்பாவில், கிரீஸில் சிரிசா (Syriza) மற்றும் ஸ்பெயினில் பொடேமோஸ் (Podemos) உள்ளிட, “இடது ஜனரஞ்சகவாத”த்தின் புதிய வடிவங்கள் ஊக்குவிக்கப்பட்டன. 2015 இல் அதிகாரத்திற்கு வந்த சிரிசா, நான்கு ஆண்டுகளுக்கு வங்கிகளின் கட்டளைகளை அமல்படுத்தியது. பொடேமோஸ் இப்போது ஒரு ஆளும் கட்சியாக, ஒரு வலது-சாரி, சிக்கனநடவடிக்கை-ஆதரவு வேலைத்திட்டத்திற்கு உறுதிப்பாடு கொண்டிருக்கும் ஸ்பானிய சோசலிஸ்ட் கட்சி (PSOE) உடன் கூட்டணியில் இருக்கிறது. ஒரு ஸ்தாபக-எதிர்ப்பு கிளர்ச்சியாக முன்நிறுத்தப்பட்ட “ஐந்து-நட்சத்திர இயக்கம்” (Five-Star Movement) இத்தாலியின் நவ-பாசிஸ்டுகளுடன் அரசியல் கூட்டணி கொள்வதில் சென்று முடிந்துள்ளது. தொழிற் கட்சியை முதலாளித்துவ-எதிர்ப்புப் போராட்டத்திற்கான ஒரு கருவியாக மீண்டும் மலரச் செய்யும் பிரமையை வளர்த்து வந்த கோர்பின்வாதமானது, இறுதியில் அரசியல் கோழைத்தனம் மற்றும் ஆளும் வர்க்கத்தின் முன் மண்டியிடுவதற்கு நிகரானதாக நிரூபணமாகியது. சாண்டர்ஸ் ஒருவேளை வெள்ளை மாளிகைக்கு செல்ல முடிந்தாலும் கூட, அவரது நிர்வாகமும் இவற்றுக்குச் சளைக்காத கையாலாகாததாகவே நிரூபணமாகும்.
இலத்தீன் அமெரிக்காவில், “இளஞ்சிவப்பு அலை”யின் —பிரேசிலில் லுலாயிசம், வெனிசூலாவில் சாவேஸின் “பொலிவேரிய புரட்சி”, மற்றும் பொலிவியாவில் ஏவோ மோராலெஸ்— பகுதியாக இருந்த “இடது” முதலாளித்துவ தேசியவாதமானது உலக முதலாளித்துவத்தின் நெருக்கடியால் சின்னாபின்னமாக்கப்பட்டிருக்கிறது. அவற்றின் சொந்த சிக்கன நடவடிக்கை மற்றும் பெருநிறுவன-ஆதரவுக் கொள்கைகள், பிரேசிலில் பொல்சனாரோ அதிகாரத்துக்கு உயர்ந்தமை மற்றும் 2019 இல் மோராலெஸ் க்கு எதிராக அமெரிக்க-ஆதரவு இராணுவக் கவிழ்ப்பு ஆகியவை உள்ளிட்ட வலது நோக்கிய ஒரு கூர்மையான மாற்றத்திற்கு பாதை வகுத்துத் தந்தன.
நீண்டகாலமாக வர்க்கப் போராட்டத்தை ஒடுக்குவதற்கான பொறிமுறைகளாக சேவை செய்து வந்திருக்கும் தொழிற்சங்கங்கள், பெருநிறுவனங்கள் மற்றும் அரசின் முகவர்களாக அம்பலப்படுத்தப்பட்டிருக்கின்றன. அமெரிக்காவில் வாகன உற்பத்தித் துறை தொழிலாளர்களின் போராட்டங்கள், பெருநிறுவனங்களிடம் இருந்து இலஞ்சம் பெற்றதற்காக அல்லது தொழிலாளர்களுக்குரிய பணத்தைத் திருடியதற்காக குற்றப்பத்திரிகை வாசிக்கப்பட்டிருக்கும் அல்லது விசாரணைக்குட்படுத்தப்பட்டு இருக்கும் UAW இன் ஊழலடைந்த நிர்வாகிகளுடன் மோதியே நடத்தப்பட்டிருக்கின்றன. ஆயினும், UAW ஒரு உலகம்தழுவிய நிகழ்ச்சிப்போக்கின் மிகத்தெளிவானதொரு வெளிப்பாடு மட்டுமே.
தொழிலாள வர்க்கத்திற்கும் இன, பாலின மற்றும் பால் அடையாள அரசியலை ஊக்குவிக்கும் வசதியான நடுத்தர வர்க்கத்தின் பிரிவுகளை அடிப்படையாகக் கொண்ட போலி-இடதுகள் எனும் ஒரு சர்வதேச அரசியல் போக்கிற்கும் இடையில் ஒரு பரந்த அரசியல் மற்றும் சமூக பேதம் உண்டாகியிருக்கிறது. உயர் நடுத்தர வர்க்கத்தின் அரசியலானது மேல்மட்ட 1 சதவீதத்தினரிடம் குவிந்திருக்கும் செல்வத்தில் சிறிதளவை தாம் பெற்று அதனை தம்மிடையே மறுவிநியோகம் செய்வதையும் எதிர்நோக்குகிறது. பரந்த பெரும்பான்மையினரது சமூக நலன்களுக்கு உதாசீனம் காட்டுகின்ற அதேவேளையில், அதிகாரம் மற்றும் சலுகை கொண்ட பதவிகளை பெற்றுக்கொள்வதற்கு “அடையாள”த்தை ஒரு வழிவகையாக பயன்படுத்தி, தனிநபர்கள் மீது தமது பிடிவாதமான கவனக்குவிப்பை செலுத்துகின்றனர்.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பணிகள்
முதலாளித்துவ ஊடகங்களின் பல்வேறு கருத்துரைகளிலும், கடந்த ஆண்டின் ஆர்ப்பாட்டங்களும் வேலைநிறுத்தங்களும் “தலைவர்கள் இல்லாதவை”யாக குறிப்பிடப்படுகின்றன. ஆயினும் வெகுஜன நனவின் அபிவிருத்தியில் இது ஒரு ஆரம்பநிலை கட்டம் மட்டுமேயாகும். போராட்டங்களின் பாதையில் அனுபவம் திரட்டுகின்ற வெகுஜனங்கள், அவர்களது சமூக மற்றும் அரசியல் நோக்குநிலையில் ஒரு ஆழமான மாற்றத்திற்கு உட்சென்று வருகின்றனர். இந்த புரட்சிகர நிகழ்முறையின் பொருட்சூழலில் தான் சோசலிச நனவுக்கான போராட்டம் அபிவிருத்தியடையும்.
சோசலிசப் புரட்சியின் புதிய தசாப்தமானது நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் வரலாற்றில் ஒரு புதிய கட்டத்தையும் அதனுடன் கொண்டு வருகிறது. புரட்சிகர இயக்க நடைமுறைபயில்வு தீர்மானகரமானதாய் இருக்கிறது. 2018 இல் சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) தேசிய காங்கிரஸ் தீர்மானம் விளக்கியது:
13. …. புரட்சிகரக் கட்சியின் தலையீட்டின் தாக்கத்தை தவிர்த்து விட்டு, புறநிலை குறித்து மதிப்பிடுவதும் அரசியல் சாத்தியங்கள் குறித்து யதார்த்தரீதியாக எடைபோடுவதும், மார்க்சிசத்திற்கு முற்றிலும் அந்நியமானதாகும். ஒரு மார்க்சிச புரட்சிகரக் கட்சி, வெறுமனே நிகழ்வுகள் குறித்து கருத்திடுவதுடன் மட்டும் நின்றுவிடுவதில்லை, அது பகுப்பாய்வு செய்கின்ற நிகழ்வுகளில் தலையீடு செய்து, தனது தலைமையின் ஊடாக தொழிலாளர்களது’ அதிகாரத்திற்கும் சோசலிசத்திற்குமான போராட்டத்தில் உலகை மாற்றுவதற்கு அது முனைகின்றது. (காணவும்:"வர்க்கப் போராட்டத்தின் மீளெழுச்சியும் சோசலிச சமத்துவக் கட்சியின் பணிகளும்”).
ICFI இன் சர்வதேசிய அரசியல் செல்வாக்கு அதிகரித்து வருவதற்கு ஏராளமான அறிகுறிகள் இருக்கின்றன. 2019 இல், இணையத் தணிக்கைப் பிரச்சாரம் ஒன்றையும் தாண்டி, WSWS அதன் வாசகர் எண்ணிக்கையில் ஒரு பிரம்மாண்டமான வளர்ச்சியைக் கண்டது. பக்கப் பார்வைகளின் மொத்த எண்ணிக்கை, 2018 இல் 14 மில்லியனாக இருந்ததில் இருந்து 20 மில்லியனாக அதிகரித்திருந்தது (40 சதவீதத்திற்கும் அதிகமானதொரு வளர்ச்சி). செப்டம்பர் மற்றும் அக்டோபரில் ஜெனரல் மோட்டார்ஸ் வேலைநிறுத்தம் மற்றும் வாகன உற்பத்தித்துறை தொழிலாளர்களின் போராட்டங்களின் சமயம், மிக அதிக வாசகர் வருகை சமயமாக இருந்தது, ஒவ்வொரு மாதத்திலும் இரண்டு மில்லியனுக்கும் அதிகமானோர் வலைத் தளத்திற்கு வருகை தந்தனர்.
இந்த அபிவிருத்திகள் ஒரு கணிசமான முன்னேற்றத்தைக் குறிக்கின்றபோதிலும், அவை சுய-திருப்தி அடைவதற்கான காரணமாகி விடக்கூடாது. ICFI இன் செல்வாக்கின் வளர்ச்சியானது எல்லாவற்றினும் தெளிவாக முன்னிருக்கும் தீவிரமான பொறுப்புகள் மற்றும் கடமைகளை சுட்டிக்காட்டுகிறது.
இப்போதைய திருப்பம் தொழிலாள வர்க்கத்தை நோக்கியதாக, சமத்துவமின்மை, போர் மற்றும் சர்வாதிகாரத்திற்கு தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களது எதிர்ப்பின் ஒவ்வொரு வெளிப்பாட்டிலுமான செயலூக்கமான தலையீட்டை நோக்கியதாக இருக்க வேண்டும். அரசியல் மட்டத்தை உயர்த்துவதற்கும், தொழிற்சாலைகள் மற்றும் பள்ளிகளில் காரியாளர்களை உருவாக்குவதற்கும், வரலாற்றின் படிப்பினைகள் மற்றும் முதலாளித்துவத்தின் இயல்பை விளக்குவதற்கும் தளர்ச்சியற்று வேலை செய்யப்பட வேண்டும். சோசலிசத்திற்கான போராட்டத்திற்கு உறுதிபூண்ட மக்களுக்கு பஞ்சம் இருக்கப் போவதில்லை.
ஆயினும் இந்த மனஉறுதியானது தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களை சோசலிசத்திற்கான ஒரு உலகளாவிய இயக்கத்துடன் ஐக்கியப்படுத்துகின்ற ஒரு மூலோபாயத்தைக் கொண்டு ஆயுதபாணியாக்கப்பட வேண்டும்.
இந்த ஆண்டு, ரஷ்யப் புரட்சியில் லெனினுக்கு இணைத் தலைவராக இருந்தவரும் நான்காம் அகிலத்தின் ஸ்தாபகருமான லியோன் ட்ரொட்ஸ்கி 1940 ஆகஸ்ட் 20 அன்று ஒரு ஸ்ராலினிச முகவரால் படுகொலை செய்யப்பட்டதன் 80வது ஆண்டைக் குறிக்கிறது. ட்ரொட்ஸ்கி, அவரது வாழ்வின் இறுதி ஆண்டுகளில், புரட்சிகரத் தலைமையின் பாத்திரத்தின் மீது மிகப்பெரும் வலியுறுத்தம் செய்தார். “மனிதகுலத்தின் வரலாற்று நெருக்கடி, புரட்சிகரத் தலைமைக்கான நெருக்கடியாக குறைக்கப்படுகிறது” என்று நான்காம் அகிலத்தின் ஸ்தாபக ஆவணத்தில் அவர் எழுதினார்.
இப்போது அது, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவை சர்வதேச அளவில் கட்டியெழுப்பும், சோசலிச சமத்துவக் கட்சிகள் இருக்கின்ற நாடுகளில் அவற்றை விரிவுபடுத்தும், மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு இன்னும் ஒரு அமைப்புரீதியான இருப்பை கொண்டிருக்காத நாடுகளில் அதன் புதிய பிரிவுகளைக் கட்டியெழுப்பும் ஒரு பிரச்சினையாக உள்ளது. இந்த இயக்கத்தின் அடித்தளத்திலமைந்திருக்கின்ற, சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் அனுபவங்களது நனவான திரட்சி என்ற, பிரம்மாண்டமான வரலாற்று அடித்தளமானது தொழிலாள வர்க்கத்தின் அபிவிருத்தியடையும் போராட்டங்களிலும் சோசலிசத்திற்கான பாதையை உருவாக்குவதிலும் முன்கொண்டுவரப்பட வேண்டும்.
இந்த தசாப்தத்தை நாம் தொடங்குகின்ற வேளையில், நான்காம் அகிலத்தின் ஸ்தாபக ஆவணத்தில் ட்ரொட்ஸ்கி நிறைவாகக் கூறிய வார்த்தைகளை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு நினைவுகூர்கிறது:
அனைத்து நாடுகளின் ஆண், பெண் தொழிலாளர்களே, உங்களை நான்காம் அகிலத்தின் பதாகையின் கீழ் நிறுத்துங்கள். அதுவே நீங்கள் நெருங்கிக் கொண்டிருக்கும் வெற்றிக்கான பதாகையாகும்!
SEP இல் இணைவது அல்லது உங்கள் நாட்டில் ICFI இன் ஒரு பிரிவைக் கட்டியெழுப்புவது குறித்த விபரங்களுக்கு இங்கே அழுத்தவும்.