இந்திய காங்கிரஸ் கட்சி பெரும் வணிகர்களை அரவணைக்கும் அதே நேரம் ​​ஜனரஞ்சக வாக்குறுதிகளை அளிக்கிறது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி, பிரதமர் நரேந்திர மோடியையும் அவரது இந்து மேலாதிக்கவாத பாரதிய ஜனதாக் கட்சியும் அரசியலமைப்பை குப்பையில் போடுவதை தடுப்பதற்கான ஒரே வழியாகத், தன்னையும் அதன் கூட்டணிக் கட்சிகளையும் இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணியில் ஒருங்கிணைப்பதன் மூலமும்; வெகுஜன வேலையின்மை, நீண்டகால வறுமை மற்றும் வளர்ந்து வரும் சமூக சமத்துவமின்மை மீதான மக்களின் அதிருப்திக்கு திட்டமிட்டு சுரண்டிக்கொள்வதன் மூலமுமே வாக்குகளை வெல்ல முயற்சிக்கின்றது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இந்தியா மற்றும் ஆசியாவின் இரண்டு பணக்கார பில்லியனர்களான முகேஷ் அம்பானி மற்றும் கௌதம் அதானியுடனும் நெருங்கிய உறவுகளை வைத்திருப்பதற்காக மோடியையும் பா.ஜ.க.யையும் பலமுறை தாக்கி வருகிறார்.

“கடவுள் என்னை ஒரு நோக்கத்திற்காக அனுப்பினார்” என்றும், பிரதமராக தனது பணி “எப்போது முடியும்” என்பதை கடவுளே முடிவு செய்வார் என்றும் சமீபத்தில் கூறிய இந்து-பலசாலியாக இருக்கக் கூடிய மோடியை, காந்தி செவ்வாயன்று கேலி செய்தார். “கடவுள் மோடியை அனுப்பியது அதானிக்கு உதவுவதற்காகவே அன்றி ஏழைகளுக்கு அல்ல” என்று காங்கிரஸ் கட்சித் தலைவர், இந்தியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் கூட்டத்தில் கூறினார். இந்த சனிக்கிழமை நடைபெறவிருக்கும் ஏழாவது மற்றும் இறுதிக் கட்டப் பொதுத் தேர்தலுக்கான பிரச்சாரம் அதுவாகும்.

அனைத்து கட்ட வாக்குகளும் ஜூன் 4 செவ்வாய்க்கிழமை எண்ணப்படும்.

25 மே 2024, சனிக்கிழமையன்று, இந்தியாவின் தேசியத் தேர்தலில் புதுதில்லியில் நடைபெற்ற ஆறாவது சுற்று வாக்குப்பதிவில் வாக்களித்துவிட்டு, காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, வலது மற்றும் அவரது தாயாரும் மற்றும் சக சிரேஷ்ட தலைவருமான சோனியா காந்தியும் வாக்குச் சாவடியிலிருந்து வெளியேறினர். [AP Photo/Manish Swarup]

காந்தி தனது உரையில், தீவிரமான சமூகப் பொருளாதார நெருக்கடியின் மீதான வெகுஜன கோபத்தையும் விரக்தியையும் தட்டிக் கேட்கும் முயற்சியில், காங்கிரஸ் கட்சி பிரச்சாரம் முழுவதும் அளித்த பல முக்கிய ஜனரஞ்சக வாக்குறுதிகளை மீண்டும் வழங்கினார். விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையான அவர்களின் பயிர்களுக்கு குறைந்தபட்ச விவசாய ஆதரவு விலையை வழங்குதல்; 25 வயதிற்குட்பட்ட அனைத்து பட்டதாரிகளுக்கும் தொழிற்பயிற்சிக்கான “புதிய உரிமை”; பா.ஜ.க.யின் தொழிலாளர் விரோத தொழிலாளர் சட்ட “சீர்திருத்தங்களை” மதிப்பாய்வு செய்தல் மற்றும் திருத்துதல்; இலவச பொது சுகாதாரத்தை வழங்குதல்; ஏழைகளுக்குக் கிடைக்கும் இலவச தானியத்தின் அளவை இரட்டிப்பாக்குதல்; மகாத்மா காந்தி தேசிய உள்ளூர் வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தின் கீழ், சிறு தொழில்களுக்கு வழங்கப்படும் தினசரி ஊதியம் 400 ரூபாயாக (அமெரிக்க $4.80) 25 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்த்துதல் போன்றவை இந்த வாக்குறுதிகளில் அடங்கும்.

இவை அனைத்தும் ஒரு பாசாங்குத்தனமான மோசடி.

பெருவணிக காங்கிரஸ் கட்சியும் அதன் இந்தியத் தேர்தல் கூட்டணிக் கட்சிகளும் (இந்தியா) பதவியேற்றால், அவர்கள் ஒரு வலதுசாரி முதலாளித்துவ அரசாங்கத்தை அமைப்பார்கள். அத்தகைய அரசாங்கம் மோடி மற்றும் அவரது பா.ஜ.க. தலைமையிலான ஆட்சியைப் போலவே, தனியார்மயமாக்கல், நிறுவனங்கள் மீதான அரச கட்டுப்பாட்டை களைதல் மற்றும் வருமானத்தை அதிகரித்தல் (சிக்கன நடவடிக்கை) போன்ற தொழிலாளர் விரோத, “முதலீட்டாளர்-சார்பு” சீர்திருத்தங்களை அமுல்படுத்தவும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனான புது டெல்லியின் சீன-விரோத போர் கூட்டணிக்கும் அர்ப்பணித்துக்கொள்ளும்.

காங்கிரஸ் பிரச்சாரம் இந்தியாவின் தொழிலாளர்கள் மற்றும் உழைக்கும் மக்களின் குறைகளை போலித்தனமாக தூக்கிப் பிடிப்பதில் கவனம் செலுத்துகையில், காங்கிரஸ் கட்சியில் தேர்தல் விஞ்ஞாபனமான நியாயப் பத்திரம் எனப்படுவது பெருவணிகங்களுக்கு ஒரு முழு தொடர் வாக்குறுதிகளை அளிக்கிறது.

இது 1991-96 நமசிம்மராவ் காங்கிரஸ் அரசாங்கத்தின் கீழ் தொழிலாளர் விரோத நவ-தாராளமய சீர்திருத்தத்தை துவக்கியதில் காங்கிரஸின் பங்கை பறைசாற்றுகிறது; மிதமிஞ்சிய கட்டுப்பாடுகள் மற்றும் “குற்றமுதலாளித்துவம்” மூலம் வணிகத்தை முடக்கியதற்காக மோடி ஆட்சியைக் கண்டிக்கிறது; காங்கிரஸ் கட்சி தலைமையிலான அரசாங்கத்தின் “மிக உடனடி நோக்கம்” “வணிகங்களுக்கு ஆரோக்கியமான, அச்சமற்ற மற்றும் நம்பகமான சூழலை மீட்டெடுப்பதாகும்” என்று பிரகடனம் செய்கிறது. இந்த வழியில், “தற்போதைய விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளின் விரிவான மதிப்பாய்வை நாங்கள் நடத்துவோம் மற்றும் தொழில், வணிகம் மற்றும் வர்த்தகத்திற்கான சுதந்திரத்தை மீட்டெடுப்பதற்காக அவற்றை ரத்துசெய்வோம் அல்லது திருத்துவோம்” என்று அது மேலும் அறிவிக்கிறது.

அதிக போர்க்குணமிக்க சீன-எதிர்ப்பு நிலைப்பாட்டிற்கும் இராணுவ செலவினங்களை அதிகரிப்பதற்கும் விடுக்கும் அழைப்பு

சம்மதம் தெரிவிக்கும் ஒரு மௌனத்தில், காங்கிரஸின் தேர்தல் அறிக்கை, அணு ஆயுதம் கொண்ட சீனாவிற்கு எதிரான வாஷிங்டனின் எரியூட்டும் இராணுவ-மூலோபாய தாக்குதலில் இந்தியா ஒரு களமுனை நாடாக மாற்றப்பட்டுள்ள, இந்திய-அமெரிக்க உலகளாவிய மூலோபாய கூட்டாண்மை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.

இருப்பினும், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் தொடர்ச்சியின் அவசியத்தை வலியுறுத்துகிறது. ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் நிர்வாகம், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கிற்கு எதிராக சட்டவிரோத நவ-காலனித்துவப் போர்களை நடத்தி, ஈரானை அச்சுறுத்திய நிலையில், அதனுடன் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் இணைந்து இந்திய-அமெரிக்க மூலோபாய கூட்டுறவை உருவாக்கியது. அப்போதிருந்து, அது இந்திய மக்களின் முதுகுக்குப் பின்னால், அமெரிக்கா மற்றும் அதன் நெருங்கிய ஆசிய-பசிபிக் கூட்டாளிகளான ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா உடனும் இருதரப்பு, முத்தரப்பு மற்றும் நாற்கர இராணுவ-பாதுகாப்பு உறவுகளின் வலையமைப்பில் புது தில்லியை இன்னும் முழுமையாக ஒருங்கிணைக்க பா.ஜ.க. உடன் கூட்டுச் சேர்ந்துள்ளது.

அவர்களின் தேர்தல் அறிக்கையிலும், பிரச்சாரப் பாதையிலும், காந்தியும் ஏனைய காங்கிரஸ் கட்சித் தலைவர்களும், சீனா சம்பந்தமாக “மென்மையான” போக்கை கடைப்பிடிப்பதாக மோடியை பலமுறை தாக்கியுள்ளனர். மோடி அரசாங்கம் கடந்த நான்கு ஆண்டுகளாக இந்தியாவின் சர்ச்சைக்குரிய சீனாவுடனான இமாலய எல்லையில் பல்லாயிரக்கணக்கான துருப்புக்கள், டாங்கிகள் மற்றும் போர் விமானங்களை நிலைநிறுத்தி, முழுமையான போரைத் தூண்டக்கூடிய இராணுவ நடவடிக்கையை எடுக்க அவர்களுக்கு அதிகாரம் அளித்துள்ள நிலைமைகளின் கீழேயே இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளனர்.

2023ல் 83 பில்லியன் டொலருக்கும் அதிகமாக செலவழித்து, உலகின் நான்காவது பெரிய இராணுவ செலவை இந்தியா கொண்டிருந்தாலும், காங்கிரஸ் கட்சி “மொத்த செலவினங்களின் விகிதத்தில் பாதுகாப்பு செலவினங்களின் சரிவை” கண்டிக்கிறது. அதிகரிக்கப்பட்டுள்ள ஆயுதச் செலவுகளுக்கு மேலதிகமாக, சீனா மற்றும் பாகிஸ்தானுடனான “இரண்டு-களமுனை” போரின் “சவாலை” சமாளிக்க ஒரு புதிய தேசிய பாதுகாப்பு மூலோபாயம் மற்றும் ஒரு புதிய செயல்பாட்டு உத்தரவை அறிமுகப்படுத்துவதாக அது உறுதியளிக்கிறது.

சீனாவை எதிர்த்து நிற்கத் தவறிவிட்டதாக குற்றம்சாட்டும் காங்கிரஸின் போர்க்குரல்களுக்கு பதிலளிக்கும் வகையில் மோடியும் பா.ஜ.க.யும், பாகிஸ்தானுக்கு எதிராக தங்கள் அரசாங்கம் உத்தரவிட்ட “இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல்களை” -சட்டவிரோத எல்லை தாண்டிய தாக்குதல்களை- பெரிதாகத் தூக்கிப் பிடித்தனர். இத்தகைய நடவடிக்கைகள், தெற்காசிய அணுஆயுத சக்திகளை 2016 மற்றும் 2019 இல் போரின் விளிம்புக்கே கொண்டுவந்தன. இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும், காங்கிரஸும், இப்போது இந்தியா தேர்தல் கூட்டணியில் இணைந்திருக்கும் இனப் பேரினவாத, சாதிய மற்றும் ஸ்ராலினிசக் கட்சிகளும், பா.ஜ.க. அரசாங்கத்தைச் சுற்றி அணி வகுத்திருந்தன.

பாசிச பா.ஜ.க. மற்றும் அதன் இந்து மேலாதிக்க கூட்டாளிகளுக்கு எதிராக, காங்கிரஸ் கட்சியும் இந்தியா கூட்டணியும் “ஜனநாயக” மற்றும் மதச்சார்பற்ற “அரணாக” நிற்பதாகக் கூறுவதைப் பொறுத்தவரை, அவை பா.ஜ.க.யின் “மக்கள் சார்பு” பாசாங்குத் தோரணையை விட எந்வகையிலும் குறைந்தவை அல்ல.

பா.ஜ.க.யின் வகுப்புவாத தூண்டுதலின் மிகவும் வெட்கக்கேடான நிகழ்வுகளை காந்தி கண்டித்தாலும், காங்கிரஸ் கட்சியானது நீண்ட காலமாக இந்து வலதுசாரிகளுடன் கைகோர்த்துள்ளது. கூட்டுத்தாபன ஊடகங்களின் பிரிவுகள் கூட அதன் தோரணையை “இந்துத்வா மென்மை” என்று விவரித்துள்ளன. ஜனவரியில் பாபர் மசூதி (மசூதி) இருந்த இடத்தில் ராமர் கோயில் திறப்பு விழா கொண்டாட்டங்களில் காங்கிரஸ் இணைந்துகொண்டது. 1992 இல் பா.ஜ.க. -ஆர்.எஸ்.எஸ். சதியின் விளைவாக, உச்ச நீதிமன்றத்தை வெளிப்படையாக அவமதித்து பாபர் மசூதி இடிக்கப்பட்டது. விழாவின் மையத்தில் மோடியை வைத்து பா.ஜ.க. அதை ஒரு “பாகுபாடான” அரசியல் விவகாரமாக மாற்றியது மட்டுமே இந்த விடயத்தில் காங்கிரசுக்கு இருந்தே ஒரே முரண்பாடாகும்.

காங்கிரஸின் இந்தியா கூட்டணிக் கூட்டாளிகள் பலர், பா.ஜ.க.யின் பங்காளிகளாக இருந்தவர்கள். இவற்றில் உத்தவ் பாலாசாகேப் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிராவை தளமாகக் கொண்ட சிவசேனா பிரிவும் அடங்கும். சிவசேனா, ஒரு பாசிச இந்துத்துவாவை அரவணைத்துக்கொண்ட வகுப்புவாத மற்றும் இன வன்முறையைத் தூண்டுவதில் நீண்ட வரலாற்றைக் கொண்ட அமைப்பாகும்.

மோடி அரசாங்கத்தின் எதேச்சதிகார நடவடிக்கைகளுக்கு எதிராக காங்கிரஸ் தன்னை பிரகடனம் செய்யும் அதே வேளை, அது அதிகாரத்தில் இருந்த போது ஜனநாயக உரிமைகள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வந்துள்ளது. ஒருசில இந்திய பணக்காரர்களுக்கும் பெரும் பணக்காரர்களுக்கும் மற்றும் ஒவ்வொரு இரவும் பட்டினியுடன் உறங்கச் செல்லும் கோடிக்கணக்கான மக்களுக்கும் இடையே உள்ள பிரமாண்டமான வேறுபாட்டை வாய்ச்சவடாலாக விமர்சிக்கும் காங்கிரஸ், அந்த இடைவெளியை உருவாக்கிய “முதலீட்டாளர் சார்பு” கொள்கைகளுக்கு, ஜனநாயகத்தின் சிதைவின் மூல வேரான சமூக துருவமுனைப்படுத்தலுக்கு முழு பொறுப்பாளியாகும்.

அதன் “நியாயப் பத்திரிகைக்கு” ஒரு அடியாக காணப்படும், காங்கிரஸ் மற்றும் இந்தியாவின் பிரதான தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று, சில அரசாங்க வேலைகள் மற்றும் பல்கலைக்கழக இடங்கள் தலித்துகள் மற்றும் பிற வரலாற்று ரீதியாக ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் குழுக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள, இந்தியாவின் இடஒதுக்கீடு (உறுதியான நடவடிக்கை) முறைமையை தனியார் துறைக்கும் விரிவுபடுத்துவதாகும். பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் “பிரித்து ஆளும்” மூலோபாயத்தின் ஒரு பகுதியாக, இடஒதுக்கீடு என்பது சுதந்திர முதலாளித்துவ இந்தியாவின் ஆட்சியாளர்களால் மாற்றுக் கருத்துக்களை அடக்குவதற்கு, தலித்துகளிடையே ஒரு சலுகை பெற்ற குட்டி முதலாளித்துவ அடுக்கை வளர்ப்பதற்கும், மற்றும் சமூக எதிர்ப்பை முதலாளித்துவ-எதிர்ப்பு வர்க்கப் போராட்டத்தில் இருந்து திசைதிருப்பும் ஒரு வழிமுறையாக, அதாவது தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளுக்கு இடையில், சாதிகளுக்கு இடையில் மோதல்களின் பக்கம் திசைதிருப்பிவிடும் ஒரு வழிமுறையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

உலகெங்கிலும் உள்ளது போலவே இந்தியாவிலும், முதலாளித்துவத்தின் மதிப்பிழந்த வலதுசாரிக் கட்சிகள் மற்றும் முதலாளித்துவ அரசிடம் வேண்டுகோள் விடுப்பதன் மூலம் அல்லது அவற்றுக்கு ஆதரவளிப்பதன் மூலம் உழைக்கும் மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க முடியாது. மாறாக, இந்தப் போராட்டம், முதலாளித்துவத்திற்கும் ஆளும் வர்க்கத்தின் அனைத்து அரசியல் பிரதிநிதிகளுக்கும் எதிராக, அனைத்து உழைப்பாளிகளையும் கிராமப்புற ஏழைகளையும் தொழிலாள வர்க்கத்தின் பின்னால் ஒருங்கிணைத்து, தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் அணிதிரட்டல் மூலம் மேற்கொள்ளப்படும் வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சியுடன் பிணைந்துள்ளது.

மோடி மற்றும் அவரது பா.ஜ.க.க்கு மாற்றாக “முற்போக்கான” மற்றும் “மக்கள் சார்பு” என்று காட்டிக் கொள்ளும் காங்கிரஸின் முயற்சிகளுக்கு இன்றியமையாத வகையில், அது மீண்டும் ஸ்ராலினிச நாடாளுமன்றக் கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அல்லது CPM மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ), மற்றும் அவற்றுடன் இணைந்த தொழிற்சங்கங்களின் ஆதரவைப் பெறுகின்றது. இந்திய அரசியல் ஸ்தாபனத்தின் நீண்ட பகுதியாக, CPM மற்றும் CPI ஆகியவை காங்கிரஸுக்கும் அதன் இந்தியக் கூட்டணிக்கும் இடது அலங்கார மூடுதிரையாக செயல்படுகின்றன. அவர்கள் சுத்தியலும் அரிவாளும் தாங்கிய சுவரொட்டிகளை மற்றும் சிவப்புக் கொடிகளை அசைத்து செல்கின்ற அதே சமயம், சமீப காலம் வரை இந்திய முதலாளித்துவத்தின் விருப்பமான தேசிய அரசாங்கக் கட்சிக்கான வாக்குகளுக்காக பிரச்சாரம் செய்கின்றனர்.

இதில் அவர்களுடன் இந்தியாவின் முதன்மையான மாவோயிஸ்ட் குழுவான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) லிபரேஷன் உடன் இணைந்துள்ளனர். CPI (M-L) மற்றொரு இடது இலையாக இந்திய கூட்டணியில் இணைக்கப்பட்டுள்ளது. இந்தியா பதாகையின் கீழ் நான்கு வேட்பாளர்களும், பீகாரில் மூன்று பேரும், அண்டை மாநிலமான ஜார்க்கண்டில் ஒருவரும் போட்டியிடுகின்றனர். ஏனைய எல்லா இடங்களிலும், கிராமப்புற ஏழைகள், தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களையும் அது காங்கிரஸ் கட்சி, சிவசேனா மற்றும் மேற்கு வங்கத்தில் கடும்போக்கு கம்யூனிச எதிர்ப்பு மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் போன்றவற்றின் பின்னால் அணிதிரட்ட முயற்சிக்கிறது.

இருபது ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவின் தொழிலாளர்களும், உழைப்பாளிகளும் ஆறு வருட பா.ஜ.க. தலைமையிலான அரசாங்கத்தின் “இந்தியா ஒளிர்கிறது” என்ற கூற்றுக்களை உறுதியாக நிராகரித்த நிலையில், இம்மாதம், 2004 மே, காங்கிரஸ் கட்சியும் அதன் கூட்டணிக் கட்சிகளும் தங்களை ஆச்சரியப்படுத்தும் வகையில், ஒரு அரசியல் பூகம்பத்தில் ஆட்சிக்கு வந்தது. அந்த நேரத்தில், CPM தலைமையிலான இடது முன்னணி வழங்கிய ஆதரவால் உற்சாகமடைந்த காங்கிரஸ் கட்சி, தாங்கள் “சீர்திருத்தங்களை மேற்கொள்வோம், ஆனால் அதை மனித முகத்துடன்” செய்வோம் என்று கூறியது. வெகுஜனங்களின் நலன்களை மூலதனத்தின் பேராசையான இலாபத் தேவைகளுடன் சமரசம் செய்ய முடியும் என்ற கூற்று, அதாவது முதலீட்டாளர் சார்பு சீர்திருத்தம் இந்தியாவின் தொழிலாளர்கள் மற்றும் உழைக்கும் மக்களுக்கு சமூக ஆதரவையும் அதிகரிக்கலாம் என்ற கூற்று- ஒரு கொடூரமான புரளி என்று தவிர்க்க முடியாமல் நிரூபிக்கப்பட்டது.

ஒரு பரம்பரை கட்சி உயிர்காப்புடன் வாழத் தள்ளப்பட்டுள்ளது

2008-9 உலக நிதி நெருக்கடிக்குப் பிறகு, இந்தியாவில் முதலாளித்துவ வளர்ச்சி குறைந்ததால், காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) அரசாங்கத்திற்கான ஆதரவு சரிந்து போனது. வளர்ந்து வந்த பொருளாதார நெருக்கடி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர்களுக்கும் பெருவணிகத்திற்கும் இடையிலான வெளிப்படையான பண தொடர்பு ஆகியவற்றால் உழைக்கும் மக்கள் கோபமடைந்தனர். இதற்கிடையில், முதலாளித்துவ உயரடுக்கு, சந்தைச் சார்பு சீர்திருத்தங்களை இன்னும் ஆக்ரோஷமாக முன்னெடுத்துச் செல்வதற்கும், உலக அரங்கில் தங்களின் பெரும்-அதிகார லட்சியங்களைத் தொடருவதற்கும் ஒரு வழிமுறையாக மோடி தலைமையிலான பா.ஜ.க. பக்கம் திரும்பியது.

2014 முதல், காங்கிரஸ் கட்சி அடுத்தடுத்து தேர்தல் தோல்வியை சந்தித்து வருகிறது. கடந்த இரண்டு தேசிய தேர்தல்களிலும் காங்கிரஸ் 20 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகளை பெற்று முறையே 44 மற்றும் 52 இடங்களையே கைப்பற்றியுள்ளது. 1999 இல் அதன் முந்தைய மோசமான தேர்தல் தோல்வி அதை விட இருமடங்கு அதிகமாக-114 ஆக- இருந்தது.

மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா உட்பட, வட இந்தியாவின் பெரும்பகுதியில், காங்கிரஸ் மிகச் சிறியதாக குறுக்கப்பட்டுள்ளது. தற்போது, ​​இந்தியாவின் பெரும் பழைய கட்சி என்று அழைக்கப்படும் காங்கிரஸ், இந்தியாவின் 28 மாநிலங்களில் கர்நாடகா, ஹிமாச்சல பிரதேசம், தெலுங்கானா ஆகிய மூன்றில் மட்டுமே அரசாங்கத்தை வழிநடத்துகிறது.

மற்றொரு தேர்தல் தோல்வியைத் தவிர்க்கும் ஏக்கத்தில், காங்கிரஸ் தனது கூட்டணிக் கட்சிகளுக்கு முன்பை விட அதிக எண்ணிக்கையிலான இடங்களை விட்டுக் கொடுத்துள்ளது. 543 மக்களவைத் தொகுதிகளில் 400-க்கும் குறைவாகப் போட்டியிட்டிருக்காத காங்கிரஸ், இந்தத் தேர்தலில் 328 வேட்பாளர்களை மட்டுமே நிறுத்தியுள்ளது.

மோடியும் அவரது பா.ஜ.க.யும் அம்பானி மற்றும் அதானியுடன் நெருக்கமாக இருப்பதாக ராகுல் காந்தி சுமத்தும் குற்றச்சாட்டிற்கு, அவர்கள் காங்கிரஸ் கட்சியின் வம்ச குணத்தை சுட்டிக்காட்டி பதிலடி கொடுத்துள்ளனர். அரை நூற்றாண்டுக்கும் மேலாக, நேரு-காந்தி குடும்பத்தில் இருந்து பிரிக்க முடியாத ஒரு வம்சக் கட்சியாக காங்கிரஸ் கட்சி செயல்பட்டு வருகிறது. இந்தியப் பிரதமர்களின் மகன், பேரன் மற்றும் கொள்ளுப் பேரனான ராகுல் காந்தி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளரான அவரது சகோதரி பிரியங்கா காந்தி வத்ராவைப் போலவே, காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பதவிக்கு உரிமை கொண்டாடுபவர்.

தேர்தல் பிரச்சாரத்தின் தொடக்கத்தில், உள்நாட்டு மற்றும் சர்வதேச ஊடகங்கள் மோடியும் அவரது பா.ஜ.க.யும் மீண்டும் ஆட்சிக்கு வருவார்கள் என்று உரத்த குரலில் அறிவித்தன. எவ்வாறாயினும், சமீபத்திய வாரங்களில் மோடி “அலை” வீழ்ச்சியடைந்துவிட்டதாகத் தோன்றுவதையும், பா.ஜ.க. வகுப்புவாத தூண்டுதல் மற்றும் பொய்களின் அலையுடன் பிரதிபலிப்பதையும் அவர்கள் அவதானித்துள்ளனர்.

மதிப்பிழந்த, ஊழல்பிடித்த காங்கிரஸ் கட்சி, சமீபகாலம் வரை, உயிர்காப்பு ஆதரவுடன் ஒட்டிக் கொண்டிருந்ததுடன், அதன் இந்தியா கூட்டாளிகள், மக்களின் கோபத்தை சுரண்டிக்கொள்ள முடியும் என்பதை நிரூபித்திருப்பார்களா என்பதைப் பார்க்க வேண்டும். ஆனால் 2024 தேர்தலின் முடிவு எதுவாக இருந்தாலும், உலக முதலாளித்துவம், ஒரு அமைப்பு ரீதியான உலகளாவிய நெருக்கடியில் சிக்கி, காட்டுமிராண்டித்தனத்திற்குச் செல்லும் நிலையில், தொழிலாள வர்க்கம் இந்தியாவின் அடுத்த அரசாங்கத்துடன் விரைவாக மோதலுக்கு வரும்.

மேலும் படிக்க

Loading