மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அல்லது CPM இன் தொழிற்சங்க கூட்டமைப்பான இந்திய தொழிற்சங்கங்களின் மையம் (CITU), சாம்சங் இந்தியாவின் தமிழ்நாடு வீட்டு உபயோகப் பொருட்கள் உற்பத்தி ஆலையில் சுமார் 1,500 நிரந்தரத் தொழிலாளர்களின் போர்க்குணமிக்க 37 நாள் வேலைநிறுத்தத்தை அக்டோபர் 15, 2024 அன்று திடீரென நிறுத்தியது. உலக மூலதனத்தினதும், இந்தியாவின் தீவிர வலதுசாரி பிஜேபி தலைமையிலான தேசிய அரசாங்கத்தின் பெயரில் செயல்படும் மாநிலத்தின் திமுக அரசாங்கத்தினதும் உத்தரவின் பேரில் அது செயல்பட்டது.
CITU, சாம்சங் சாமானிய தொழிலாளர்களிடம் எதுவும் கேட்காமலும், அவர்களின் கோரிக்கைகள் எவற்றையும் வெற்றிகொள்ளாமலும் வேலைநிறுத்தத்தை கைவிட்டது. இவற்றில் முதன்மையான கோரிக்கை, புதிதாக ஒழுங்கமைக்கப்பட்ட, CITU-ஐச் சேர்ந்த சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தினை (SIWU) மாநிலத்தில் பதிவு செய்வதாகும். இது தமிழ்நாடு மற்றும் இந்திய சட்டத்தின் கீழ் தொழிலாளர்களின் சட்டரீதியானதும், அரசியலமைப்பிலும் உள்ள உரிமையாகும்.
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் அக்டோபர் 17-ம் தேதி முதல் பணியைத் தொடர உத்தரவிடப்பட்டது. அன்றைய தினம் அவர்கள் பணிக்கு வந்தபோது, சாம்சங் நிர்வாகம் வழக்கம்போல் பணியைத் தொடர அனுமதிக்கவில்லை. அதற்குப் பதிலாக, அவர்களது பணியை மீண்டும் தொடங்குவதற்கு முன்பு ஒரு வாரத்திற்கு, நிர்வாகம் அவர்களை அச்சுறுத்தும் அமர்வு ஒன்றில் கட்டாய 'பயிற்சி' ஒன்றை மேற்கொள்ளுமாறு நிர்வாகம் அவர்களுக்கு அறிவுறுத்தியது.
டிசம்பர் வரை நீட்டிக்கப்படும் இந்த பயிற்சியில், 150 தொழிலாளர்களைக் கொண்ட தனித்தனி குழுக்களாகப் பிரித்து அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்றும், “பயிற்சியில் தேறாதவர்கள்' தொழிலாளர் தொகுப்பில் இருந்து நீக்கப்படுவார்கள் என்றும் அவர்களிடம் கூறப்பட்டது.
இந்த வாரம், 150 பணியாளர்களைக் கொண்ட இரண்டாவது குழு, அவர்களின் ஒரு வார கால பயிற்சி அமர்வைத் தொடங்கியது. இந்த வாராந்திர அமர்வுகளுக்கு இதுவரை அழைக்கப்படாதவர்கள், தங்களின் வழக்கமான ஊதியத்தைப் பெற எப்போது மீண்டும் பணியைத் தொடங்க முடியும் என்பது பற்றி ஒன்றும் தெரியாது உள்ளனர். செப்டம்பர் 9 ஆம் தேதி 37 நாள் வேலைநிறுத்தத்தை தொடங்கியதில் இருந்து தொழிலாளர்கள் ஊதிய-காசோலை வழங்கப்படாமல் உள்ளனர்.
மறுபுறம், CITU ஆனது, நிர்வாகத்திற்கும், தமிழக திமுக அரசாங்கத்திற்குமான அதனது முழு சரணாகதியையும், சாம்சங் தொழிலாளர்களுக்கு அது செய்த கேடுகெட்ட காட்டிக்கொடுப்பையும் ஒரு வரலாற்று 'வெற்றி' என்று தொடர்ந்து கொண்டாடி வருகிறது. நீண்டகால CITU செயல்பாட்டாளரும் SIWU தலைவருமான இ. முத்துக்குமார், இந்த வெற்றியை 'உலகம் ஆச்சரியத்துடன் பார்க்கிறது' மற்றும் இது 'தொழிலாளர்களை மகிழ்ச்சியடையச் செய்த' வெற்றி எனக்குறிப்பிட்டார்.
அக்டோபர் 26 அன்று, தமிழ்நாட்டில் திமுகவுடன் தேர்தல்/அரசியல் கூட்டணியில் உள்ள CPM, அதன் ஸ்ராலினிச சகோதரக் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI), மற்றும் தமிழ் தேசியவாதக் கட்சி VCK ஆகியவற்றின் தலைவர்கள் அனைவரும் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலினை சந்தித்து, சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை 'இணக்கமாக' தீர்க்க தலையிட்டதற்கு 'அவருக்கு நன்றி' தெரிவித்தனர்.
உண்மையில், திமுக அரசாங்கம், வேலைநிறுத்தம் செய்பவர்களை மிரட்டி, காவலில் வைத்து, வன்முறையுடன் தாக்குவதற்கு போலீஸாரை பலமுறை பயன்படுத்தியதுடன், தொழிற்சங்க அமைப்பு தமிழ்நாட்டில் சட்டரீதியான உரிமையாக இருந்தபோதிலும், புதிதாக உருவாக்கப்பட்ட SIWU பதிவு செய்வதைத் தீவிரமாகத் தடுத்து நிறுத்தியது.
சாம்சங் தொழிலாளர்களின் பாதுகாப்பிற்காக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்ட CITU மறுத்துவிட்டது. அதேபோல், வேலைநிறுத்தத்திற்கு முன்னரோ அல்லது வேலைநிறுத்தத்தின் போதோ, தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்த அரசாங்கத்திற்கு சொந்தமான (பொதுத்துறை நிறுவனங்கள்) உட்பட இந்தியா முழுவதிலுமுள்ள முதலாளிகளைப் போலவே சாம்சங் நிறுவனமும் பயன்படுத்தும் பிளவுகளுக்கு தலைவணங்கி, வேலைநிறுத்தத்தில் இருந்த ஆலையில் ஒப்பந்தத் தொழிலாளர்களின் ஆதரவை வென்றெடுப்பதற்கு அது எந்த உண்மையான முயற்சியும் செய்யவில்லை.
ஸ்ராலினிஸ்டுகள், தங்கள் விருப்பத்தை நிறைவேற்றி வேலைநிறுத்தத்தை உடனே முடித்துக் கொள்ளாவிட்டால், CPM உடனான கூட்டணியை முறித்துக் கொள்ளத் தயார் என்று திமுக சமிக்கை காட்டியபோது, அவர்கள் உடனடியாக விற்கப்பட்ட ஒரு முத்தரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
WSWS எச்சரித்தது போல், சாம்சங் நிர்வாகம் தொழிலாளர்கள் மீதான தாக்குதலைத் தொடர்கிறது. 'பயிற்சிக் கூட்டங்கள்' என்ற பெயரில், SIWU க்கு எதிராக சாம்சங் நிறுவனம் அமைத்த போலியான 'தொழிலாளர் குழுவை' அவர்களின் 'பிரதிநிதி'யாக 'அங்கீகரிக்கும்' ஆவணத்தில் கையெழுத்து இடும்படி தொழிலாளர்களை மிரட்டியது.
பதிலுக்கு, ஸ்ராலினிசத் தலைவர்கள், தென் கொரியாவை தளமாகக் கொண்ட சாம்சங் நிறுவனத்தை, தொழிலாளர்களின் எதிர்ப்பை கட்டுப்படுத்தி அடக்குவதற்கும், அதன் உற்பத்தித்திறன் மற்றும் இலாபங்களை அதிகரிப்பதற்கும் ஒரு சிறந்த பொறிமுறையாக அவர்களுடன் இணைந்து பணியாற்றுமாறு கெஞ்சுகின்றனர்.
சாம்சங் தொழிலாளர்களை 'தொழிலாளர் குழுவில்' கையெழுத்திடுவதற்கு நிர்வாகத்தின் அப்பட்டமான முயற்சிகளை கண்டிக்கும் ஒரு அறிக்கையில், CITU ஆல் திணிக்கப்பட்ட SIWU இன் தலைவரான இ. முத்துக்குமார், 'CITU, தொழில்துறை அமைதி, உற்பத்தித்திறன் மற்றும் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக அவர்களுடன் [நிர்வாகத்துடன்] கைகோர்க்க எப்போதும் தயாராக உள்ளது” என்று அறிவித்தார்.
மேலும் அவர் 'CITU தொழிலாளர்கள் அமைதியை விரும்புகிறார்கள் மற்றும் உற்பத்தியில் அவர்களுக்கு உதவ நாங்கள் அவர்களுக்கு வழிகாட்டுகிறோம், எனவே பாரபட்சமின்றி நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் இந்த தொழில்துறை அமைதியைப் பாதுகாப்பது சாம்சங் நிர்வாகத்தின் கடமை என்று நாங்கள் இதன் மூலம் அறிவிக்கிறோம்” என்று அறிவித்தார்.
நிறுவனம் தொழிலாளர்களை 'ஒழுங்கமைக்க' அனுமதித்தால், நிர்வாகத்துடன் இணைந்து சாம்சங் தொழிலாளர்களுக்கு காவல்துறையாகப் பணியாற்ற CITU தயார் என்ற இந்த அறிவிப்பு, ஸ்ராலினிச CPM மற்றும் CITU பல தசாப்தங்களாக வகித்த பங்கிற்கு முற்றிலும் ஒத்துப்போகிறது. அவர்கள் போர்க்குணமிக்க தொழிலாளர் போராட்டங்களைத் தனிமைப்படுத்தி நசுக்கியுள்ளனர். அதே நேரத்தில் தமிழ்நாட்டில் திமுக மற்றும் தேசிய அளவில் காங்கிரஸ் கட்சி தலைமையிலான முதலீட்டாளர்களுக்கு ஆதரவான கொள்கைகளை திணிக்கும், வலதுசாரி அரசாங்கங்களுக்கு ஆதரவளித்து, இந்தியாவை இன்னும் முழுமையாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இராணுவ மூலோபாயத்தில், அதாவது சீனாவுக்கு எதிரான தாக்குதலில் ஒருங்கிணைத்துள்ளனர்.
'நாங்கள் CITU வை நம்பினோம், ஆனால் அவர்கள் எங்களை வழியிலேயே விட்டுவிட்டார்கள்'
வேலைநிறுத்தத்தின் போது WSWS உடன் பேசத் தயங்கிய சாம்சங் தொழிலாளர்கள், அதாவது CITU அதிகாரத்துவத்தினர் அவ்வாறு பேசுவதைத் தடை செய்த நிலைமைகளின் கீழ் தயங்கிய தொழிலாளர்கள், இப்போது பேசுவதற்கு ஆர்வமாக உள்ளனர். பலர் மிகவும் விரக்தியடைந்ததோடு CITU காட்டிக்கொடுத்து விட்டதாக உணர்கிறார்கள். சாம்சங் நிர்வாகம் மற்றும் CITU ஆகிய இரு அமைப்புகளாலும் பாதிக்கப்படுவோமோ என்ற அச்சத்தில் பெயர் குறிப்பிடாத தொழிலாளர்கள், ஆலையில் வேலை செய்யும் நிலை என்ன என்றும், திமுகவின் வன்முறையான வேலைநிறுத்த-விரோத நடவடிக்கைக்கு முன் CITU சரணடைந்தது குறித்த தங்கள் எண்ணங்களையும் விளக்கினர்.
வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்ட சாம்சங் நிரந்தர தொழிலாளி வசந்த் பின்வரும் கசப்பான கருத்துக்களை தெரிவித்தார்:
“சாம்சங் தொழிற்சாலையின் சுரண்டலுக்கு எதிராக வேலைநிறுத்தம் செய்ய எங்களுக்கு உரிமை உள்ளது. ஆனால், திமுக தலைமையிலான தமிழக அரசாங்கம் காவல்துறையை பயன்படுத்தி எங்கள் போராட்டத்தை ஒடுக்கியது. CITU வை நம்பினோம். ஆனால், அவர்கள் தொழிலாளர்களை வழியிலேயே கைகழுவிச் சென்று விட்டார்கள் என்று நினைக்கிறேன். அக்டோபர் 15ஆம் தேதி நடந்த முத்தரப்பு சமரசக் கூட்டத்தில் ஏற்பட்ட உடன்படிக்கையின்படி அக்டோபர் 17ஆம் தேதி வியாழன் அன்று பணியைத் தொடரச் சென்றபோது, ஒரு வாரப் பயிற்சியை முடிக்கும் வரை எங்களை வேலை செய்ய அனுமதிக்க மாட்டோம் என்று நிர்வாகம் தெரிவித்தது. நிர்வாகத்தால் வழங்கப்படும் இந்தப் பயிற்சியில், நிர்வாகம் தொழிலாளர்களை 150 பேர் கொண்ட குழுக்களாகப் பிரிக்கும்.”
அவர் தொடர்ந்தார், “நான் குழப்பமடைந்தேன், நாங்கள் எதற்காக வேலைநிறுத்தம் செய்தோம்? எதற்காக மீண்டும் எங்களை உள்ளே போகச் சொன்னார்கள்? (தொழிற்சங்கம் சொன்னதை) நம்பி, நாங்கள் அக்டோபர் 17 ஆம் தேதி நிறுவனத்திற்குச் சென்றோம், ஆனால் சாம்சங் நிர்வாகம் எங்களை வேலை செய்ய விடாமல் தடை செய்தது. எங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது, எதிர்காலம் என்னவாகும் என்று தெரியவில்லை. எங்களுக்கு என்ன நடக்கும் என்று தெரியவில்லை.
சாம்சங் நிர்வாகத்தின் முதுகெலும்பாக திமுக செயல்படுகிறது. CITU வை நம்பிய நாங்கள் இந்த நிலைமையில் இருக்கிறோம். வேலைநிறுத்தத்தின் முடிவு எங்களுக்குத் தெளிவாகத் தெரியவில்லை. வேலைநிறுத்தத்தில் வெற்றி பெற்றது யார், ஊழியர்களா சாம்சங்கா என்று வரும்போது, சாம்சங்தான் வெற்றி பெற்றது என்று நினைக்கிறேன். தொழிற்சாலைக்குள் நுழையக் கூடாது என்றும், கடிதம் மூலம் தொழிற்சாலைக்கு வரச் சொன்னால் மட்டுமே வரவேண்டும் என்றும் நிர்வாகம் இப்போது கட்டளையிடுகிறது. ஆனால் 150 தொழிலாளர்கள் மட்டுமே மின்னஞ்சலைப் பெற்று பயிற்சிக்குச் சென்றுள்ளனர், இப்போது மேலும் 150 தொழிலாளர்கள் பயிற்சியில் உள்ளனர். ஆனால் இந்த பயிற்சி எப்போது முடிவடையும் என்று எங்களுக்குத் தெரியவில்லை, மேலும் நாங்கள் மீண்டும் வேலையைத் எப்போது தொடங்கலாம் மற்றும் எங்கள் சம்பளத்தைப் பெறலாம் என்பதும் தெரியவில்லை.”
“வழக்கமாக, நாங்கள் காலை 8 மணி முதல் மாலை 5:20 மணி வரை வேலை செய்ய வேண்டும். ஆனால் கடைசி 20 நிமிடங்களுக்கு எங்களுக்கு ஊதியம் வழங்கப்படுவதில்லை. மேலும், எங்கள் பேருந்து மாலை 5:30 மணிக்கு புறப்படும். எனவே நாங்கள் பேருந்தைப் பிடிக்க ஓட வேண்டும் அல்லது பொதுப் போக்குவரத்துக்கு நாங்கள் பணம் செலுத்திப் பயணிக்க வேண்டும். நாங்கள் வாரத்தில் ஆறு நாட்கள் நிறுவனத்தில் பணிபுரியும் போது, பொதுவாக மேலதிக வேலையில் (overtime) கூடுதலாக மூன்று மணிநேரம் வேலை செய்கிறோம். சாம்சங் நிர்வாகத்தால் நாங்கள் இப்படித்தான் நடத்தப்பட்டோம்.”
மற்றொரு சாம்சங் தொழிலாளி, மதன், சுமார் 24 வயது ஒப்பந்த தொழிலாளி, அவர் சாம்சங் நிறுவனத்தில் சுமார் ஒரு வருடமாக பணியாற்றி வருகிறார், தானும் ஒவ்வொரு வாரமும் 6 நாட்கள் வேலை செய்வதாக கூறினார். அவர் சுமார் 15,000 ரூபாய் (சுமார் 175 அமெரிக்க டாலர்கள்) மொத்த மாதச் சம்பளத்தைப் பெறுகிறார், ஆனால் வருங்கால வைப்பு நிதி (பணியாளர் மற்றும் முதலாளி இருவரும் சமமாகப் பங்களிக்கும் கட்டாய ஓய்வூதிய சேமிப்புக் கணக்கு) கழித்து, சுமார் 13,000 ரூபாய் மட்டுமே பெறுகிறார். சாம்சங் நிறுவனத்தில் சேர்வதற்கு முன், நான்கு வருடங்கள் மற்ற நிறுவனங்களில் ஒப்பந்த ஊழியராகப் பணிபுரிந்தார்.
'நான் 6 வேலை நாட்களில் ஒவ்வொன்றிலும் கூடுதலாக இரண்டு மணிநேரம் கூடுதல் நேரம் வேலை வேண்டும். பல ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு நிறுவனப் பேருந்துகள் கிடைத்தாலும், எனக்கு வசதி இல்லை. அதனால் எனது வாடகை அறையில் இருந்து சாம்சங் ஆலைக்கு தினமும் 2 கி.மீ தூரம் நடந்து செல்ல வேண்டியுள்ளது”.
அடிப்படை பேருந்து வசதிகள் மற்றும் சிற்றுண்டிச் சாலை சாப்பாடு என்று வரும்போது ஒப்பந்தத் தொழிலாளர்களும் வித்தியாசமாக நடத்தப்படுகிறார்கள். “என்னுடன் உள்ள ஊழியர்கள் நிறுவன சிற்றுண்டிச் சாலையில் ஒரே ஒரு வேளை மட்டுமே சாப்பிட அனுமதிக்கப்படுகிறார்கள். சாம்சங் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தின் போது, செப்டம்பர் 9 முதல் அக்டோபர் 15 வரை வாரத்தில் இரண்டு நாட்கள் எனக்கு வேலை கிடைக்கவில்லை.”
'நிர்வாகத்தின் தவறான அணுகுமுறையால் நான் சாம்சங்கை விட்டு வெளியேறினேன்'
மற்றொரு இளம் சாம்சங் ஒப்பந்தத் தொழிலாளியான கனி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கூறுகையில், “நான் சாம்சங் இந்தியா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் சுமார் ஐந்து மாதங்களாக சலவை-இயந்திர உற்பத்தி வரிசையில் பணியாற்றி வருகிறேன். 8 ஆண்டுகளாக பல்வேறு நிறுவனங்களில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி உள்ளேன். ஆனால் எனக்கு நிரந்தர வேலை கிடைக்கவில்லை. அதனால், சரியான வாழ்வாதாரம் இன்றிச் சிரமமாக உள்ளது. நான் எனது பெற்றோரை இழந்ததால், எனக்கு வீடு இல்லை, ஒப்பந்தத் தொழிலாளியாக நான் தினமும் சம்பாதிக்கும் சிறிய பணத்தில் வாடகை அறையில் தங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன்.”
சுமார் 35 வயதுடைய ஆட்டோ ரிக்க்ஷா ஓட்டுநரான இனியன், 2011 முதல் 2016 வரை சாம்சங் நிறுவனத்தில் நிரந்தர ஊழியராகப் பணிபுரிந்தார். 2011ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தபோது அவருக்கு ரூ. 3,500 அவரது சம்பளம். 2016ல் நிறுவனத்தை விட்டு வெளியேறியபோது அவர் ரூ. 15,000 பெற்றார்.
'நிறுவனத்தில் சாதாரண வேலை நாள் 9 மணிநேரம் என்றாலும், தொழிலாளர்களை ஒவ்வொரு நாளும் 12 மணிநேரம் வேலை செய்ய வைத்தது. நான் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வேலை செய்தேன். எனக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.60 கூடுதலாக கிடைத்தது. தொழிற்சாலை நிர்வாகத்தின் தவறான நடவடிக்கையால் நான் நிறுவனத்தை விட்டு வெளியேறினேன். தொழிலாளர்கள் ஓய்வு எடுக்க அவர்களின் பொருத்தும் பட்டறை வரிசையில் இருந்து விலகினால், அவர்களை மீண்டும் அனுமதிக்க மாட்டார்கள், வெளியே நிற்க வைக்கப்படுவார்கள். அவ்வாறு நானும் சாம்சங் நிர்வாகத்தால் அவமதிக்கப்பட்டேன். நான் அதனை எதிர்த்தபோது, எனக்கு கடுமையான வேலை கொடுக்கப்பட்டது.
'தொழிற்சங்க உரிமைக்கான சாம்சங் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை நான் வரவேற்கிறேன்,' என இனியன் தொடர்ந்தார். “தொழிலாளர்கள் ஒன்றுபட்டால்தான், அவர்களின் உரிமைகளை வென்றெடுக்க முடியும். நான் அங்கு வேலை செய்து கொண்டிருந்த போது, என்னுடன் நிற்க யாரும் இல்லை. இறுதியில், நிர்வாகத்தின் தவறான அணுகுமுறை மற்றும் துன்புறுத்தல் காரணமாக, நான் சாம்சங்கை விட்டு வெளியேறினேன்.
பின்னர் அவர் இந்த வேலைநிறுத்தத்தின் பலன் குறித்தும் தொழிலாளர்கள் முழு முதலாளித்துவ ஸ்தாபகத்திற்கு எதிராக வர்க்கப் போராட்ட முறைகளின் அடிப்படையில் ஒரு புதிய வழிமுறைகளை உருவாக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் பேசினார். 'சிஐடியு CPIM உடன் இணைந்திருக்கும்போது, CPIM திமுக தலைமையிலான அரசாங்கத்துடன் அரசியல் ரீதியாக கூட்டணியில் இருக்கும்போது, சாம்சங் நிர்வாகத்திற்கு எதிராக சிஐடியு எவ்வாறு செயல்படும்?”
'ஒப்பந்த மற்றும் நிரந்தரத் தொழிலாளர்கள் இருவரும் ஒன்றிணைந்த சுயாதீனமான தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களை அமைப்பதே ஒரே வழி என்ற WSWS இன் முன்மொழிவை நான் ஏற்றுக்கொள்கிறேன். அத்தகைய தொழிலாளர்களின் சுயாதீன தொழிலாளர் நடவடிக்கைக் குழு சாம்சங் நிர்வாகத்திற்கு வெற்றிகரமாக சவால் விட முடியும். மேலும், சுங்குவாச்சத்திரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் தொழிற்பேட்டையில் உள்ள பிற தொழிற்சாலைகளில் உள்ள தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதே தொழிலாளர்கள் கோரிக்கைகளை வென்றெடுப்பதற்கான தீர்வாகும் என்பதை ஒப்புக்கொள்கிறேன். இறுதியில், நாம் நொய்டா, தென் கொரியா மற்றும் சர்வதேச அளவில் உள்ள மற்ற சாம்சங் தொழிலாளர்களை ஒன்றிணைக்க வேண்டும்.
மேலும் படிக்க
- வோல்க்ஸ்வாகன் ஆலை மூடல்கள் அறிவிக்கப்பட்ட பிறகு: வாகனத் தொழில்துறையில் வேலை வெட்டுக்களுக்கு எதிரான ஓர் உலகளாவிய சாமானிய தொழிலாளர்களின் பிரச்சாரத்திற்காக!
- போயிங் தொழிலாளர்களின் சாமானிய தொழிலாளர் குழு வேலைநிறுத்த போராட்டத்தை வெல்வதற்கான சர்வதேச மூலோபாயத்தை பற்றி விவாதிக்க பொதுக் கூட்டத்தை நடத்தியது
- திமுக அரசின் உத்தரவின் பேரில் சாம்சங் இந்தியா தொழிலாளர்களின் போர்க்குணமிக்க வேலைநிறுத்தத்தை ஸ்ராலினிச CITU நிறுத்தியது