மோடியும் அவரது பா.ஜ.க.வும் மீண்டும் தேர்வாகும் நோக்கில் தீவிர வலதுசாரி, வகுப்புவாத பிரச்சாரத்தை முன்னெடுக்கின்றனர்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இந்திய அரசாங்கத்தின் தலைவராக மூன்றாவது முறையாக ஐந்தாண்டு பதவிக் காலத்தை பெறும் முயற்சியில், பிரதமர் நரேந்திர மோடியும் அவரது இந்து மேலாதிக்க பாரதீய ஜனதாக் கட்சியும் (பா.ஜ.க.) பாசிச பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்தப் பிரச்சாரம், வகுப்புவாத அவதூறுகள் மற்றும் மதவெறியை தூண்டிவிடுதல் மற்றும் எதிர்க்கட்சிகளை பாகிஸ்தான்-சார்பானவை என்றும், மக்களின் சொத்துக்களை கொள்ளையடிக்கும் நோக்கம் கொண்டுள்ளன என்றும் குற்றம்சாட்டுவதிலும் முனைப்புக் கொண்டுள்ளது.

9 ஏப்ரல் 2024 செவ்வாய்க் கிழமை, இந்தியாவில், சென்னையில் தேசியத் தேர்தல் பிரச்சாரத்தின் போது வீதி உலா வந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பாரதீய ஜனதா கட்சியின் சின்னமான தாமரையைக் காட்டுகிறார் [AP Photo/AP Photo]

இந்தியாவின் முஸ்லீம் சிறுபான்மையினரை “திருப்திப்படுத்த” காங்கிரஸ் கட்சி தலைமையிலான இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணியை (இந்தியா) மோடி பலமுறை சாடியுள்ளார். காழ்ப்புணர்ச்சியைத் தூண்டிவிட்ட அவர், முஸ்லிம்களை “ஊடுருவல்காரர்கள்”, “ஜிஹாதிகள்” மற்றும் “பெரும் எண்ணிக்கையிலான பிள்ளைகளைக் கொண்டவர்கள்” என்று குறிப்பிடுகிறார்.

காங்கிரஸ் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் தசாப்தத்திற்கும் மேலான பழைய கருத்தை வேண்டுமென்றே திரிபுபடுத்திய மோடியும் பா.ஜ.க.யும், இந்தியாவின் இட ஒதுக்கீட்டு முறைமையின் கீழ் தலித்துகளுக்கும் பிற தாழ்த்தப்பட்ட குழுக்களுக்கும் ஒதுக்கப்பட்ட அரசு தொழில்கள் மற்றும் பல்கலைக்கழக இடங்களை அபகரித்து, அவற்றை முஸ்லிம்களுக்கு வழங்க எதிர்க்கட்சிகள் சதி செய்வதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

காங்கிரஸ் கட்சி, அதன் உறுதியான “முதலீட்டாளர் சார்பு” நிலைப்பாட்டைக் கடைப்பிடித்து, எந்தவொரு வரி உயர்வையும் நிராகரித்துள்ள போதிலும், இந்தியா கூட்டணி மக்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் “நக்சலைட்” (மாவோயிஸ்ட்) திட்டத்துடன் அமைக்கப்பட்டிருப்பதாக மோடி குற்றம் சாட்டியுள்ளார். ராஜஸ்தானில் தேர்தல் கூட்டமொன்றில் பேசிய மோடி, எதிர்க்கட்சிகள் “தாய் மற்றும் சகோதரிகளின் தங்கத்தை கணக்கிட்டு, அது பற்றிய தகவல்களைப் பெற்று, பின்னர் அவற்றை ஊடுருவல்காரர்களுக்கு விநியோகிக்க இருப்பதாக” உறுதியாக கூறுகிறார். பார்வையாளர்களை மேலும் உசுப்பேற்றும் நோக்கத்துடன் பேசிய இந்தியப் பிரதமர், “நீங்கள் உழைத்து சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்குச் செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா?” என முழங்கினார்.

பா.ஜ.க.க்கு வகுப்புவாத தூண்டுதல் மற்றும் அதன் இந்து தீவிர வலதுசாரி கூட்டாளிகளுடன் கூட்டு சேர்ந்து வகுப்புவாத வன்முறையில் ஈடுபடுவதில் நீண்ட வரலாறு உள்ளது. மேற்கு மாநிலமான குஜராத்தின் முதலமைச்சராக இருந்தபோது, 2002 முஸ்லீம்-விரோத படுகொலையைத் தூண்டிவிட்டு தலைமை தாங்கியதால், மோடி தேசிய அளவில் இழிபுகழ் பெற்றார். இந்த வன்முறைகளில் கொல்லப்பட்ட சுமார் 2,000 பேரில் பெரும்பாலோர் ஏழை முஸ்லிம்கள் ஆவர். வன்முறையினால் இலட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர்.

இருப்பினும், தற்போதைய ஆளும் கட்சியான பா.ஜ.க.யின் தேர்தல் பிரச்சாரம் கடும்போக்கு வகுப்புவாத மற்றும் பாசிச தூண்டுதல்களிலும் அதன் முதலாளித்துவ அரசியல் எதிரிகளை பொய் அவதூறுகளை சுமத்தி தாக்குவதிலும் முனைப்புக் காட்டுகின்றது. எதிர்பார்த்தது போலவே, மோடி அரசாங்கம், அதன் எதிரிகளை மிரட்டுவதற்கு அரசு எந்திரத்தின் மீதான தனது கட்டுப்பாட்டை தொடர்ந்து பயன்படுத்திக்கொள்கிறது. டெல்லி தேசிய தலைநகர் பிரதேசத்தின் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உட்பட தனது எதிரிகளை சோடிக்கப்பட்ட மற்றும் சூழ்ச்சியில் உருவாக்கப்பட்ட குற்றவியல் வழக்குகளில் சிக்க வைத்தமை மற்றும் ஊடகங்களையும் இடதுசாரி விமர்சகர்களையும் வாயடைக்க வைப்பதும் இந்த மிரட்டல்களில் அடங்கும்.

இடிக்கப்பட்ட பாபர் மசூதியின் இடத்தில் புராண இந்துக் கடவுள் ராமர் கோவிலை மோடி கடந்த ஜனவரி மாதம் திறந்துவைத்தமை பா.ஜ.க. தேர்தல் பிரச்சாரத்தின் அதிகாரப்பூர்வமற்ற தொடக்கமாகும். தேசிய அளவில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில், பல்லாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான “முஸ்லிம் ஆதிக்கம்” மற்றும் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சிக்குப் பின்னர், “இந்து தேசம்” எனப்படும் இந்தியாவின் “மறுபிறப்பை” மோடி கொண்டாடினார். 1992 டிசம்பரில், பா.ஜ.க.யினால் அணிதிரட்டப்பட்ட இந்து அடிப்படைவாத செயற்பாட்டாளர்கள், இந்திய உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை மீறி, கிட்டத்தட்ட 500 ஆண்டுகள் பழமையான பாபர் மசூதியை இடித்தனர்.

சிறுபான்மையினர் அடிபணிந்து வாழும், ஏறத்தாழ அல்லது இன்னமும் அரசியலமைப்பின் படி அறிவிக்கப்படாத ஒரு இந்து அரசாக இந்தியாவை மாற்றும் இலக்கை யதார்த்தமாக்குவதை நோக்கிய பெரும் அடியெடுப்பை பா.ஜ.க. எடுத்து வைத்திருந்தாலும் கூட, அதன் தேர்தல் பிரச்சாரமானது பொருளாதார வளர்ச்சிக்கான வாக்குறுதிகளில் குவிமையப்படுத்தப்படும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசாங்கம், உலகை வெல்லும் ஒரு பொருளாதார வளர்ச்சியை அளித்து, சர்வதேச முதலீட்டுக்கான காந்தமாக இந்தியாவை உருவாக்கியுள்ளதுடன், அவர்களின் ஆட்சியில் இந்தியா உலக வல்லரசாக வேகமாக வளர்ந்து வருகிறது என்பது, சமீப வருடங்களாக பா.ஜ.க.யின் பல்லவியாக இருந்து வருகின்றது. 

அது பா,ஜ,க, தலைவர்களின் திட்டமாக இருந்திருக்கலாம். எவ்வாறாயினும், ஏப்ரல் 19 அன்று நடைபெற்ற இந்தியாவின் ஏழு கட்டத் தேர்தலின் முதல் கட்டத்தைத் தொடர்ந்து, பா.ஜ.க.யின் பிரச்சார பேச்சுக்களில், வகுப்புவாத மற்றும் பிற அதி-வலதுசாரி அழைப்புகளுக்கு மிக அதிகமாக முதலிடம் வழங்க முனைப்பு காட்டும் மாற்றம் ஏற்பட்டதை இந்திய மற்றும் சர்வதேச பத்திரிகைகள் கூட சுட்டிக்காட்டியுள்ளன.

பா.ஜ.க.யின் பிரச்சாரத்தின் பாசிச மேல்தொணிக்கு ஏற்ப, மோடியை ஒரு எதேச்சதிகாரத் தலைவராகவும், ஒரு பகுதி இந்து பலசாலியாகவும், ஒரு பகுதி இந்து குரு அல்லது புனித மனிதராகவும் தூக்கிப் பிடிப்பதும் இதில் அடங்கும்.

பா.ஜ.க. பிரச்சாரகர்கள், மோடியால் மட்டுமே இந்தியாவிற்கு “வலுவான அரசாங்கத்தை” உருவாக்க முடியும் என்று வலியுறுத்துகின்ற அதே நேரம், அவர்கள் எதிர்க்கட்சிகளை பரம எதிரியான பாகிஸ்தானின் ஆதரவாளர்கள் என பொருள்படும்படி கண்டிக்கின்றனர். தனது பங்கிற்கு, மோடி, “எதிரி எதையும் செய்வதற்கு முன் அவனை 100 முறை சிந்திக்கச்” செய்யும் ஒரு தாகத் சர்க்காருக்கு (வலுவான அரசாங்கத்துக்கு) தலைமை தாங்குவதாகக் கூறுகிறார்.

மோடியைத் தவிர, அவரது முக்கிய உதவியாளர், உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் அதே அளவில் நெருக்கமான யோகி ஆதித்யநாத்துக்கும் மட்டுமே பா.ஜ.க.யின் தேசிய பிரச்சாரத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. முஸ்லீம்-விரோத வன்முறையைத் தூண்டிய குற்றவியல் நடத்தைக்கு குற்றஞ்சாட்டப்பட்ட இந்து சாமியாரான யோகி ஆதித்யநாத்தையே இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்திரப் பிரதேசத்தின் முதல்வராக மோடி நியமித்துள்ளார். ஷாவும் யோகி ஆதித்யநாத்தும், மோடியை விடவும் வேறுபடுவார்களெனில், அது அவர்களின் தாக்குதல்களில் மிகவும் அச்சுறுத்தும் தன்மை மற்றும் விஷமத்தனத்திலும் மட்டுமே. 

இம்மாத தொடக்கத்தில் மேற்கு வங்கத்தில் பிரச்சாரம் செய்த ஷா, இந்தியா தேர்தல் கூட்டணியின் பங்காளியான திரிணாமுல் காங்கிரஸ் அந்த மாநிலத்தில் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, “முல்லாக்களுக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது, நமது சொத்துக்கள் மதரஸாக்களுக்கு வழங்கப்படுவதுடன், மாஃபியாக்கள் ஏழை மக்களைக் கொள்ளையடிக்க வெளிப்படையாக அனுமதிக்கப்படுகிறது,” என்று பா.ஜ.க. கூட்டத்தில் தெரிவித்தார். பா.ஜ.க. ஊக்குவித்த தேசிய குடிமக்கள் பதிவேட்டின் கீழ், குடியுரிமையை நிரூபிக்க முடியாத முஸ்லீம்கள், “கரையான்கள்” போல வங்காள விரிகுடாவில் தள்ளப்படுவார்கள் என்று ஷா முன்பு பெருமையாக கூறினார். பெரும்பாலான கிராமப்புற பிறப்புகள் பதிவு செய்யப்படாத ஒரு நாட்டில் குடியுரிமையை நிரூபிக்க முடியாமை ஒரு பொதுவான நிகழ்வாக உள்ளது.

பா.ஜ.க. பிரச்சாரத்தில் ஏற்பட்ட மாற்றமானது, எதிர்பார்க்கப்பட்ட “மோடி அலை” செயல்படத் தவறிவிட்டதாக எதிர்க்கட்சிகளாலும், மிக குறிப்பிடத்தக்கவகையில், அநேகமான ஊடகங்களாலும் சுட்டிக்காட்டப்பட்டமை, ஆளும் கட்சிக்குள்ளேயே அதிக கவலையை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு சுமார் 3 சதவீதம் குறைந்துள்ளதுடன் அடுத்த இரண்டு கட்டங்களிலும் வாக்காளர் பங்கேற்பில் இதேபோன்ற சரிவு பதிவாகியுள்ளது. இந்த முதல் மூன்று கட்டங்களும் சேர்த்து, ஜூன் 1 ஆம் தேதி முடிவடையவிருக்கும் இந்தியாவின் பொதுத் தேர்தலில் பாதிக்கு மேற்பட்ட ஆசனங்களை உள்ளடக்குகின்றன. ஜூன் 4 செவ்வாய் அன்று வாக்குகள் எண்ணப்படவுள்ளன. மிக சமீபத்திய கட்டமான ஐந்தாவது கட்டம் மே 20 அன்று நடைபெற்றது. இதில் பூர்வாங்க அறிக்கைகள் வாக்குப்பதிவில் 1.9 சதவீதம் சரிவைக் குறிப்பிடுகின்றன.

கடந்த மாத இறுதியில் தி டிப்ளமட் ஊடகத்திடம் பேசுகையில், “இந்தியாவின் நாளிதழ் ஒன்றின் தேசியப் பணியகத்தின் சிரேஷ்ட ஆசிரியர்”, “மக்கள நம்ப வேண்டும் என பா.ஜ.க. எதிர்பார்ப்பதை விட தேர்தல் முடிவுகள் தீர்மானிக்க முடியாதவையாக இருக்கின்ற நிலையில், பா.ஜ.க. கொஞ்சமேனும் கவலைப்பட காரணம் இருக்கின்றது,” என்று தெரிவித்தார்.

ஒரு சமூக வெடிகுண்டு

இந்தியா ஏற்கனவே ஃபியூஸ் எரிந்து போன ஒரு சமூக வெடிகுண்டு ஆகும். நீண்டகால வேலையின்மை மற்றும் நிரந்தர வேலையின்மை, நீண்டகால வறுமை, பாழடைந்த மற்றும் இல்லாமல் போன பொது சேவைகள் மற்றும் இந்தியாவின் தொழிலாளர்கள் மற்றும் உழைப்பாளிகளுக்கும் ஒரு சிறிய முதலாளித்துவ உயரடுக்கு மற்றும் அதில் தொங்கி வளரும் உயர் மத்தியதர வர்க்கத்துக்கும் இடையே எப்போதும் அதிகரித்து வரும் இடைவெளி சம்பந்தமான பிரமாண்டமான ஆனால் இன்னும் வெடிக்காத சமூக கோபமும் விரக்தியும் உள்ளது. இந்தியாவின் உயர்மட்ட 1 சதவீதத்தினர் இந்தியாவின் மொத்த செல்வத்தில் 40 சதவீதத்தையும் தேசிய வருமானத்தில் பெருக்கெடுப்பதில் 20 சதவீதத்தையும் தம்வசம் வைத்துள்ளனர். கோடிக்கணக்கான இந்தியர்கள் ஊட்டச்சத்து குறைபாடு, வளர்ச்சி குன்றிய நிலை மற்றும் பிற துன்பங்களால் அவதிப்பட்டு வரும் நிலையில், ஹுருன் ஆராய்ச்சி நிறுவனத்தின் 2024 உலக பணக்காரர்களின் பட்டியலின்படி, நாடு 271 பில்லியனர்களைக் கொண்டுள்ளதுடன் அவர்களில் 94 பேர் 2022 இல் புதிதாகத் தலைதூக்கியவர்கள் ஆவர். உலகிலேயே அமெரிக்காவுக்கு அடுத்ததாக இந்தியாவிலேயே இப்போது பில்லியனர்கள் அதிகம் உள்ளனர்.

10 பெப்ரவரி 2023 வெள்ளிக்கிழமை, இந்தியாவின் குவாஹாட்டியின் புறநகர்ப் பகுதியில் ஒரு பெண் தனது குடிசை வீட்டில் நிற்கிறார். [AP Photo/Anupam Nath]


இந்தியாவின் முதல் பணக்கார மற்றும் இரண்டாவது பணக்கார கோடீஸ்வரர்களான முகேஷ் அம்பானி மற்றும் கெளதம் அதானி தலைமையிலான இந்தியாவின் ஆளும் உயரடுக்கு, மோடி மற்றும் இந்து மேலாதிக்க பா.ஜ.க.யைச் சூழ அணிதிரண்டுள்ளது. ஏனெனில், அவர்கள் தங்கள் திட்ட நிரலை இரக்கமின்றி முன்னோக்கி நகர்த்துவதற்கும், அரச வன்முறைகள் மற்றும் வகுப்புவாதத்தின் மூலம் தொழிலாள வர்க்கத்தை குழப்புவதற்கும் பிளவுபடுத்துவதற்குமான வழிவகைகளை கையாண்டு வெகுஜன அதிருப்தியை அடக்குவதற்குமான தங்களின் சிறந்த அரசியல் கருவியாக அவர்கள் பா.ஜ.க.யைப் பார்க்கிறார்கள். 

தேர்தல் பிரச்சாரத்தின் தொடக்கத்தில், பா.ஜ.க., இந்தியாவின் இருசபை பாராளுமன்றத்தில் கீழ் சபையான, ஆனாலும் மிகவும் சக்திவாய்ந்ததான மக்களவையில் உள்ள 543 இடங்களில் 370 இடங்களை வெல்வோம் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டது. மக்களவைத் தொகுதிகளில் மூன்றில் இரண்டு பங்கு பங்கைக் கைப்பற்றினால், அரசியலமைப்புச் சட்டத்தில் மாற்றங்களைச் செய்ய பா.ஜ.க. சிறந்த நிலையில் இருக்கும். ஆனால் 370 ஆசனங்கள் இலக்கு என்பது, மோடி அரசாங்கம் 2019 ஆகஸ்ட்டில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு தனித்துவமான சுயாட்சி அந்தஸ்தை வழங்கும் அரசியலமைப்பின் 370 வது பிரிவை இரத்து செய்வதற்காக எதேச்சதிகாரமாக அரசியலமைப்பை திருத்தி எழுதியதைக் கொண்டாடுவதை அர்த்தப்படுத்துவதாகும். கடந்த ஆண்டின் பிற்பகுதியில், சர்ச்சைக்குரிய காஷ்மீர் மீதான இந்திய அரசின் பிடியை இறுக்கி, சீனா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் போர்க்குணமிக்க செய்தியை அனுப்பிய, 370வது பிரிவை ஒரே இரவில் இரத்து செய்வதற்கான சட்டப்பூர்வ நியாயத்தை வழங்குவதற்காக, இந்தியாவின் உச்ச நீதிமன்றம் துணிச்சலாக சட்டத்தை மறுவிளக்கம் செய்தது.

தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள், வேலையின்மை மற்றும் விலைவாசி உயர்வு பற்றியே வாக்காளர்கள் பிரதானமாக கவலைப்படுவதைக் காட்டியது. பா.ஜ.க.யின் பிரத்தியேகமான இந்து தேசியவாத அரசியலை பெரும்பான்மையான இந்தியர்கள் நிராகரிப்பதாகவும் அவை சுட்டிக்காட்டின.

பா.ஜ.க. மற்றும் அதன் திட்ட நிரலுக்கான வெளிப்படாத எதிர்ப்பு எந்த அளவிற்கு தேர்தலில் வெளிப்படும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இந்தியா (I.N.D.I.A) கூட்டணியானது பா.ஜ.க.க்கு பதிலீடாக ஆளும் வர்க்கத்திற்கு ஒரு மாற்று அரசாங்கத்தை வழங்கும் நோக்கத்துடன் ஒன்று சேர்ந்துள்ள பல்வேறு வலதுசாரிக் கட்சிகளை உள்ளடக்கிய ஒரு ஆட்டங்கண்ட தேர்தல் கூட்டணியாகும். இது தனியார்மயமாக்கல், கட்டுப்பாடுகளை தளர்த்துதல் மற்றும் சிக்கன நடவடிக்கைகளைத் தினிப்பதன் மூலம் முதலீடுகளை ஈர்ப்பதற்கும், சீனாவிற்கு எதிரான வாஷிங்டனின் இராணுவ-மூலோபாய தாக்குதலில் இந்தியாவை களமுனை நாடாக மாற்றப்பட்டுவரும் இந்திய-அமெரிக்க பூகோள மூலோபாய கூட்டாண்மைக்கும் எந்த குறைவும் இல்லாமல் அர்ப்பணிப்பணித்துக்கொண்ட கூட்டமைப்பாகும். 

இந்தியா கூட்டணியானது சமீப காலம் வரை இந்திய ஆளும் வர்க்கத்தின் விருப்பமான அரசாங்க கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சியால் வழிநடத்தப்படுகிறது. பிரதமர்களின் மகன், பேரன் மற்றும் கொள்ளுப் பேரனுமான ராகுல் காந்தி, அதன் வம்சத் தலைவராக பணியாற்றுகிறார். கடந்த மூன்று தசாப்தங்களின் பெரும் பகுதியில், காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான தேசிய அரசாங்கங்கள், இந்திய முதலாளித்துவத்தின் “சந்தை-சார்பு சீர்திருத்த” திட்டத்தை செயல்படுத்துவதை வழிநடத்தின. அவர்கள் வாஷிங்டன் மற்றும் சீன-விரோத இந்திய-அமெரிக்க கூட்டணிக்கு திரும்பவும் நடவடிக்கை எடுத்தனர். காங்கிரஸ் கட்சி “மதச்சார்பின்மையின்” பாதுகாவலராக காட்டிக்கொண்டாலும், அது நீண்ட காலமாக இந்து வலதுசாரிகளுடன் கொடுக்கல் வாங்கல் செய்துள்ளது. அது, முஸ்லீம்களும் கிறிஸ்தவர்களும் உண்மையான இந்தியர்கள் இல்லை என்று கூறும் இந்து மேலாதிக்க சித்தாந்தமான இந்துத்துவாவின் தீவிர ஆதரவாளரும், பா.ஜ.க.யின் முன்னாள் கூட்டாளியுமான சிவசேனாவுடன் சமீப ஆண்டுகளில் நெருங்கிய கூட்டுறவை உருவாக்கிக்கொண்டுள்ளது.

இந்தியக் கூட்டணியில் பல்வேறு வலதுசாரி இன-பிராந்தியவாத மற்றும் சாதியவாதக் கட்சிகள் மற்றும் ஸ்ராலினிச நாடாளுமன்றக் கட்சிகளும் உள்ளன. பல தசாப்தங்களாக ஸ்ராலினிஸ்டுகள் இந்து வலதுசாரிகளுக்கு எதிராகப் போராடுகிறோம் என்ற பெயரில் வர்க்கப் போராட்டத்தை நசுக்கியதோடு தாம் வெளிப்படையாக “முதலீட்டாளர்-சார்பு” - அதாவது தொழிலாள வர்க்க-விரோதக் கொள்கைகள் என்று வர்ணிப்பதை ஆதரித்து வந்துள்ள அதே நேரம், சோசலிசத்தை நிராகரித்து வந்துள்ளன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) மேற்கு வங்க முதல்வரின் வார்த்தைகளில் கூறுவதெனில், சோசலிசமானது “வேறுபட்ட விடயம்”

வாக்குகளைப் பெறுவதற்கான முயற்சியில், இந்தியா கூட்டணியானது வெகுஜன வேலையின்மையை விமர்சித்து பல்வேறு ஜனரஞ்சக வாக்குறுதிகளை அளித்துள்ளது. ஆனால், அதில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் வலதுசாரி வரலாற்றை கருத்தில் கொண்டால், இவற்றில் எதுவுமே குறைந்த பட்சமேனும் நம்பத்தகுந்தவையாக இல்லாததோடு இந்திய வெகுஜனத் தொழிலாளர்களும் உழைக்கும் மக்களும் இதை ஒரு பாசாங்காக சரியாக நிராகரித்துள்ளனர்.

Loading