இலங்கை பாராளுமன்றம் சர்வதேச நாணய நிதியத்தின் மூர்க்கத்தனமான நடவடிக்கைகளை அங்கீகரிக்கின்றது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, 8 பிப்ரவரி 2023 புதன்கிழமை, இலங்கை பாராளுமன்றத்திற்கு வந்த போது. நடுவில் இருப்பவர் பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ஆவார் [AP Photo/Eranga Jayawardena]

இலங்கை பாராளுமன்றம் மூன்று நாள் விவாதத்திற்குப் பின்பு வெள்ளி அன்று சர்வதச நாணய நிதியத்தின் சிக்கன வேலைத்திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. பிரதானமாக ஆளும் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.) 120 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர். மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) இரண்டு உறுப்பினர்களும் ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.யில் இருந்து பிரிந்த 22 பேரும் எதிராக வாக்களித்தனர். 

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி (ஐ.ம.ச.), மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ.ல.சு.க.), இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஆகியவற்றின் அறுபது பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பைத் தவிர்த்துக் கொண்டனர்.

எதிராக வாக்களித்தவர்கள் அல்லது வாக்களிப்பை தவிர்த்தவர்களுக்கு, சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளுடன் எந்த அடிப்படை முரண்பாடுகளும் கிடையாது. மாறாக அவர்கள் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக உயர்ந்துவரும் வெகுஜன எதிர்ப்பை இழிந்த முறையில் பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்கின்றனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கையை ஏப்ரல் 26 அன்று பாராளுமன்றத்தில் சமர்பித்தார். “எமக்கு சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கையத் தவிர வேறு தெரிவுகள் கிடையாது. இரு கட்சிகளையும் ஒன்றிணைத்து இதை நிறைவேற்றுவோம்” என அறிவித்த அவர், “இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படாவிட்டால் அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் யாரும் உயிர் வாழ முடியாது” என மேலும் தெரிவித்தார். 

அரசாங்கத்திற்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையிலான ஆரம்ப அதிகாரிகள் மட்ட உடன்படிக்கையானது கடந்த செப்டம்பரில் கைச்சாத்திடப்பட்டது. எவ்வாறாயினும், சர்வதேச நாணய நிதிய நிறைவேற்றுச் சபையானது அதன் கொடூரமாக தாக்குதல்களை நடைமுறைப்படுத்துவதில் கொழும்பின் திறனை மதிப்பாய்வு செய்த பின்னரே, மார்ச் 20 அன்று அதன் மூன்று பில்லியன் டொலர் பிணையெடுப்பு பொதியை வழங்கியது.

இந்த சிக்கன நடவடிக்கைகளில், அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான பெறுமதி சேர் வரியை (VAT) 15 சதவீதமாக உயர்த்துதல், பத்தாயிரக் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் தொழிலறிஞர்கள் மீது புதிய ஊதியத்தை ஒத்த புதிய வரி விகிதங்களைச் சுமத்துதல், எரிபொருள், மின்சாரம் மற்றும் நீர் வழங்கல் மானியங்களை இரத்து செய்தல் மற்றும் கட்டணங்களை உயர்த்துதல், சந்தை-உந்துதல் பரிமாற்று விகிதத்தை பேணுதல், இறக்குமதியைக் குறைத்தல் மற்றும் 2006க்குப் பின்னர் வேலைக்குத் அமர்த்தப்பட்டவர்களுக்கான பங்களிப்புத் திட்டங்களை அமுல்படுத்துவதன் மூலம் பொது ஊழியர்களின் ஓய்வூதியத்தை வெட்டுதலும் அடங்கும்.

சர்வதேச நாணய நிதியம் ஆரம்பத்தில் கோரிய 15 க்கும் மேற்பட்ட நடவடிக்கைகளை தான் அமுல்படுத்தியுள்ளதாக விக்கிரமசிங்க பெருமையாகக் கூறினார். இந்தக் கொள்கைகள் மிக உயர்ந்த பணவீக்கத்தை விஸ்தரித்ததோடு மில்லியன் கணக்கான குடும்பங்கள் எதிர்கொள்ளும் வறுமை மற்றும் பட்டினியை அதிகரிக்கச் செய்த அதே வேளை, முன்னெப்போதும் இல்லாத பொருளாதாரச் சுருக்கத்துக்கும் பங்களிப்புச் செய்துள்ளது. கடந்த ஆண்டு 7.8 சதவீதமாக பொருாளாதாரச் சுருக்கமானது, இந்த ஆண்டு மூன்று சதவீதமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

பிணையெடுப்பு பொதி மற்றும் முதல் தவணையான 330 மில்லியன் டொலரை அறிவித்து, இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக் குழுத் தலைவர் பீட்டர் ப்ரூயர், நாடு ”கொடூரமான பரிசோதனைக்கு” உள்ளாகி வருவதாக அறிவித்தார். சர்வதேச நாணய நிதியத்தின் மதிப்பாய்வு மற்றும் மேற்பார்வைக்கு உட்பட்டு மீதமுள்ள பிணையெடுப்பு கடன் மூன்று தவணைகளில் விடுவிக்கப்படும்.

விக்கிரமசிங்க அரசாங்கம் இப்போது அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களை தனியார்மயமாக்குதல், மேலும் வரி வருவாயை அதிகரித்தல், மேலும் தனியார் முதலீட்டுக்கு வழிதிறக்கும் வகையில், கல்வி மற்றும் சுகாதாரத்திற்கான சலுகைகளை மேலும் வெட்டுதல் மற்றும் இலட்சக் கணக்கான அரச ஊழியர்களின் தொழிலை அழித்தல் போன்றவற்றைச் செய்வதற்கு அர்ப்பணித்துக்கொண்டுள்ளது. 

அரசாங்கம், உள்நாட்டு கடன் மறுசீரமைப்பையும் மேற்கொள்ள வேண்டும். அரசாங்கத்துக்கான பிரதான உள்ளூர் கடன் வழங்குனர்களாக அரச வங்கிகளும் ஊழியர் சேம இலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் உள்ளன. இந்தக் கடன்களில் எந்தவொரு குறைப்பும் தொழிலாளர்கள் மற்றும் ஓய்வுதியதாரர்களின் சேமிப்பு மற்றும் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கும்.

விக்கிரமசிங்க, அதன் கடன்களை மறுசீரமைக்க மறுக்கின்ற எந்தவொரு வங்கியையும் அச்சுறுத்தினார். அவர்கள் “இந்த சூழ்நிலையை எதிர்கொண்டு, இந்தப் பொறுப்பை ஏற்று பொருளாதாரத்தை முன்னெடுத்துச்செல்ல முடியாதாயின், பங்குச் சந்தை சரிந்துவிடும். அது நடந்தால், நான் [பங்குச் சந்தைகளை] மூடிவிடுவேன்,” என அவர் கூறினார்.

இந்தக் கருத்துக்கள், தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் பணம் செலுத்துவார்கள் என வெளிநாட்டு கடன் வழங்குனர்களுக்கு உறுதியளித்து, சர்வதேச மூலதனத்தின் கட்டளைகளுக்கு விக்கிரமசிங்கவின் முழுமையான அர்ப்பணிப்பை சுட்டடிக்காட்டுகின்றன.

சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன வேலைத்திட்டம் மீதான பாராளுமன்ற விவாதம் ஒரு கேலிக்கூத்து ஆகும். எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, சர்வதேச நாணய நிதியமே ஒரே மாற்றீடு என வலியுறுத்தி முன்னதாகவே அதனிடம் செல்லாதமைக்கு அரசாங்கத்தை கண்டித்தது. இலங்கையின் வளர்நதுவரும் வெளிநாட்டுக் கடன்கள் மற்றும் பொருளாதார நெருக்கடியும், கோவிட்-19 தொற்று நோயின் பூகோள பரவலும் அதன் நிலையான இருப்பு மற்றும் உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போரினாலும் தீவிரமடைந்தன.

அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வது “சரியானது“ என்றாலும் ”அதன் பேச்சுவார்த்தை தீர்வுகள் தவறானவை” என கபடத்தனமாக அறித்த ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாச, சாதாரண மக்கள் மீது சிக்கன நடவடிக்கைகளை சுமத்துவதுடன் உடன்படவில்லை என பாராளுமன்றத்தில் தெரிவித்தார். தன்னால் சர்வதேச நாணய நிதியத்திடம் நிபந்தனைகள் பற்றி பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்பதை அறிந்திருந்த பிரேமதாசவின் கருத்துக்கள் மக்களை ஏமாற்றுவதற்கான ஒரு முயற்சி ஆகும்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், சிங்கப்பூர் மற்றும் மலேசியாவின் தனியார்மயமாக்கள் மாதிரியை ஏற்றுக்கொக்கின்றனர். அரச நிறுவனங்களை தனியார்மயமாக்குவதற்கான சிறந்த மாதிரியாக அவர்கள் இதை முன்வைக்கின்றனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் பிரதான எதிர்கட்சி கொறடாவான லக்ஷமன் கிரியெல்ல, சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளை பாராட்டியுள்ளார். அவை ”பேரினப் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் கடன் நிலைத்தன்மையையும் மீட்டெடுத்து இலங்கையின் வளர்ச்சித் திறனை திறந்துவிடும்” என அவர் கூறிக்கொண்டார்.

அரசாங்கம் ”சர்வதேச நாணய நிதியத்திற்கான அதன் வாக்குறுதிகளை நிறைவேற்றுமா” என்பதே ஐக்கிய மக்கள் சக்தியின் கவலை என்றும் அவர் தெரிவித்தார்.  இது, 2019 நவம்பரில் பதவியேற்ற பின்னர், கடந்த அரசாங்கத்தின் சர்வதேச நாணய நிதிய நடவடிக்கைகளை நிறுத்தி வைத்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவை சுட்டிக் காட்டுவதாகும். 

ஜே.வி.பி. தலைவர் அனுர குமார திஸாநாயக்க, ஊழல் நிறைந்த முன்னைய அரசாங்கங்களின் ஒரே உருவாக்கமான தற்போது உள்ள சமூகப் பிரச்சனைகளை சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத் திட்டம் மோசமாக்கும் எனக் கூறி, அதை பாசாங்குத்தனமாக விமரச்சித்தார். முன்னைய அரசாங்கங்களின் ஊழலின் பல்வேறு உதாரணங்களைச் மேற்கோள் காட்டிய அவர், தேவையான சிக்கன நடவடிக்கையை செயல்படுத்தும் தனது கட்சியை உள்ளடக்கிய ஊழல் அற்ற அரசாங்கமே முன்னோக்கிச் செல்வதற்கான ஒரே வழி எனத் தெரிவித்தார்.

கடந்த ஒக்டோபரில், ”ஸ்வர்ணவாஹினி” உரையாடல் நிகழ்ச்சியில் பேசிய திஸாநாயக்க, இலங்கை வெளிநாட்டுக் கடன்களை திரும்பச் செலுத்தத் தவறியமையால் ”சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வது தவிர்க்க முடியாதது” என்றும் ”சமூகம் ஒரு குறிப்பிட்ட செலவை தாங்க வேண்டும்” என்றும் கூறினார்.

ஜனவரி 24 அன்று, கொழும்பில் நடந்த பெரு வணிக நிகழ்வொன்றில், திஸாநாயக்க, கல்வி மற்றும் சுகாதாரத்தை மேலும் தனியார் முதலீட்டுக்கு திறந்துவிட வேண்டியது அவசியம் என்று கூறினார். ”இந்த நெருக்கடியில் இருந்து வெளியேற விரும்பினால், நாம் அதைச் செய்ய வேண்டும். நாம் வலிமிகுந்த நடவடிக்கையை எடுக்க நிர்ப்பந்திக்கப்படுவோம்” என்று வலியுறுத்தினார்.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சர்வதேச நாணய நிதியத்தின் உடனான விக்கிரமசிங்கவின் பிணையெடுப்பு உடன்படிக்கையுடன் ஜே.வி.பி.க்கு வேறுபாடுகள் கிடையாது என்பதாகும்.

பிரதான தமிழ் முதலாளித்துவக் கட்சியான இலங்கை தமிழ் அரசுக் கட்சி, இந்தப் பொருளாதார நெருக்கடிக்கு ஒரே தீர்வாக சர்வதேச நாணய நிதியத்தின் கடன் பொதிக்காகப் பகிரங்கமாக பிரச்சாரம் செய்தது. இது தமிழ் மக்கள் மத்தியில் அதிகரித்து வரும் எதிர்ப்பைக் கலைக்க, அது தனது தாளத்தை மாற்றிக்கொண்டு, விக்கிரமசிங்கவின் கொள்கைகளை விமர்சிக்கத் தொடங்கியது.

கடந்த வாரம் ஏப்ரல் 25 அன்று, பிரதானமாக தமிழ் மற்றும் முஸ்லீம் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள், அரசாங்கத்தின் பயங்கரவாத எதிர்ப்பு மசோதாவை எதிர்த்தும் வாழ்க்கை மற்றும் சமூக நிலைமைகள் மீதான அரசாங்கத்தின் தாக்குதல் மீதான அவர்களின் கோபத்தை வெளிப்படுத்தியும் நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கில் கிட்டத்தட்ட முற்று முழுதான ஹர்த்தாலை நடத்தினர்.

மார்ச் 1 மற்றும் 15 ஆகிய தினங்களில், இலங்கை முழுதிலும் சுமார் அரை மில்லியன் தொழிலாளர்கள், அதிகரிக்கப்பட்ட வருமான வரி விகிதங்கள் மற்றும் தனியார் மயமாக்களுக்கு எதிராக வேலை நிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டனர். சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரவளிக்கின்ற தொழற்சங்க அதிகராத்துவங்கள், சிக்கனக் கொள்கைகள் மற்றும் அடக்குமுறை சட்டங்களை நிறுத்துமாறு அரசாங்கத்தை நெருக்க முடியும் என்ற மாயைகளை விதைத்து, அந்தப் போராட்டங்களை மட்டுப்படுத்தின.

ஏப்ரல் 28 அன்று, டெய்லி மிரர் மற்றும் ஐலண்ட் ஆகிய  கொழும்பில் வெளிவரும் இரு நாளாந்தப் பத்திரிகைகள், சர்வதேச நாணய நிதியத்தின் நடவடிக்கைகளை ஆதரித்து ஆசிரியர் தலையங்களை வெளியிட்டன.

“சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையை அல்லது வேறு எதையாவாது ஆதரிக்கவோ அல்லது எதிர்க்கவோ பாராளுமன்ற உறுப்பினர்களுகளுக்கு உள்ள உரிமையை கேள்விக்குட்படுத்த முடியாது. ஆனால், பிச்சைக்காரர்களுக்கு வேறு தெரிவுகள் கிடையாது” என்ற உண்மை மீதான பார்வையை தவிர்க்க கூடாது என ஐலண்ட் அறிவித்தது. டெய்லி மிரர் கூறியதாவது: “நாம் ஒன்றுபட்டு வேலை செய்யாமல் சண்டையிட்டு புறம் பேசுவதை தொடங்குவோமானால், முந்தைய ஆண்டைப் போன்ற, அல்லது அதைவிட மோசமான சூழ்நிலையை எதிர்கொள்ளும் வாய்ப்பை முகங்கொடுப்போம்.”

இந்த ஆசிரியர் தலையங்கங்கள், அதிகரித்துவரும் வெகுஜன எதிர்ப்பு பற்றியும் தொழிலாளர் வரக்கம் மற்றும் ஏழைகளுக்கு எதிராக எதிர்ப்-புரட்சிகர சக்திகளை அணிதிரட்ட வேண்டியதன் அவசியத்தைப் பற்றியும் ஆளும் உயரடுக்குகள் மத்தியில் நிலவும் கூர்மையான கவலையை வெளிக்காட்டுகின்றன.

2022 ஏப்ரல் மற்றும் ஜுலையில் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் வெகுஜன எழுச்சி ஜனாதிபதி இராஜபக்ஷ மற்றும் அவரது ஆட்சியை வீழ்த்திய அதே வேளை, போலி இடது குழுக்களால் ஆதரிக்கப்பட்ட தொழிற்சங்க அதிகாரத்துமானது விக்கிரமசிங்கவை ஜனாதிபதி பதவிக்கு உயர்த்த அனுமதித்தது. 

பாரிய சமூக நெருக்கடிக்கும் சர்வதேச நிதி மூலதனத்தால் கட்டளையிடப்பட்ட தாக்குதல்களுக்கும், முதலாளித்துவ முறைமைக்குள் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளுக்கு தீர்வு கிடையாது. இதனால்தான் சோசலிச சமத்துவக் கட்சி, தொழலாளர் வர்க்கம் முதலாளித்துவ கட்சிகள் மற்றும் தொழிற்சங்கஙகளில் இருந்து பிரிந்து அதன் சொந்த சுயாதீன இயக்கத்தை கட்டியெழுப்ப வேண்டும் என அழைப்பு விடுக்கின்றது.

தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல, நடவடிக்கை குழுக்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை அடிப்படையாகக் கொண்டு, ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான தொழிலாளர்களதும் கிராமப்புற வெகுஜனங்களதும் மாநாட்டை ஏற்பாடு செய்ய, ஒவ்வொரு வேலைத் தளத்திலும் கிராமப்புறங்களிலும் தங்கள் சொந்த நடவடிக்கைக் குழுக்களை கட்டியெழுப்ப வேண்டும்.

அத்தகைய அரசாங்கம், பெருந்தோட்டங்கள் உட்பட வங்கிகள் மற்றும் பெரு நிறுவனங்களை ஜனநாயக பொதுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர வேண்டும். பெரும் பணக்காரர்களின் செல்வத்தை கைப்பற்றுவதோடு வெளிநாட்டுக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.

பிரான்ஸ் மற்றும் ஐரோப்பா முழுவதிலும், கனடா மற்றும் இலங்கையிலும் கட்டவிழ்ந்துவரும் தொழிலாளர்களின் போராட்டங்கள், சர்வதேச தொழிலாளர் வர்க்கத்தின் வளர்ந்து வரும் எழுச்சியின் ஒரு பாகமாகும். இலங்கைத் தொழிலாளர்கள் மேற்கூறிய வேலைத்திட்டத்துக்கான போராட்டத்தை முன்னெடுக்கும் நோக்கில் நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவால் ஆரம்பிக்கப்பட்ட தொழிலாளர் நடவடிக்கை குழுக்களின் சர்வதேச கூட்டணியுடன் தமது நடவடிக்கை குழுக்களை ஒருங்கிணைக்க வேண்டும்.

இலங்கை அரசாங்கத்தின் பயங்கரவாத எதிர்ப்பு மசோதா: ஜனநாயக உரிமைகளை துடைத்துக் கட்டும் தாக்குதல்

இலங்கை தொழிற்சங்கங்கள் சர்வதேச நாணய நிதியத்துடன் உயர்மட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன

இலங்கை தொழிலாள வர்க்கம் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராகவும் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கவும் எவ்வாறு போராட வேண்டும்

Loading