இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தால் மார்ச் 22 அன்று வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு மசோதா தொழிலாள வர்க்கம், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளின் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதான துடைத்துக் கட்டும் தாக்குதலாகும்.
அரசாங்கத்தின் கூற்றுகளுக்கு மாறாக, பயங்கரவாத எதிர்ப்பு மசோதாவுக்கும் பயங்கரவாதத்தை தடுப்பதற்கும் எந்த தொடர்பும் கிடையாது. ஆனால், சர்வதேச நாணய நிதியத்தால் கட்டளையிடப்பட்ட சமூக தாக்குதல்களுக்கு எதிராக அதிகரித்து வரும் வெகுஜன எதிர்ப்பை நசுக்குவதற்கே இது பயன்படுத்தப்படும். விக்கிரமசிங்க, ஏற்கனவே தனது சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்பவர்களை 'பாசிஸ்டுகள்' மற்றும் 'பயங்கரவாதிகள்' என்று பகிரங்கமாக அவதூறு செய்துள்ளார்.
இந்த மசோதா இழிபுகழ்பெற்ற பயங்கரவாத தடைச் சட்டத்தை (PTA) பதிலீடு செய்யும் சாக்குப்போக்கின் கீழ் உருவாக்கப்பட்டாலும், அது அதன் அனைத்து தீமைகளையும் உள்ளடக்கிக்கொண்டுள்ளது. 2015இல் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் முன்னைய அரசாங்கம், 2016 மற்றும் 2018 ஆம் ஆண்டிலும் இந்த பயங்கரவாத எதிர்ப்பு மசோதாவை நிறைவேற்ற முயற்சித்த போதிலும், பரவலான வெகுஜன எதிர்ப்பை எதிர்கொண்டதால் அதனை விலக்கிக்கொள்ள வேண்டியிருந்தது.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான 30 ஆண்டுகால இனவாதப் போரின் போது, தமிழ் போராளிக் குழுக்களை எதிர்த்துப் போரிடுவது என்ற சாக்குப்போக்கில் 1979 ஆம் ஆண்டில் கொடூரமான பயங்கரவாத தடைச்சட்டம் முதலில் இயற்றப்பட்டது. அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த கொழும்பு அரசாங்கங்கள், பல்லாயிரக்கணக்கான இளைஞர்களை அரச படுகொலை செய்த 1988 மற்றும் 1990 க்கு இடையில், தீவின் தெற்கில் நிலவிய கிராமப்புற அமைதியின்மையை அடக்குவது உட்பட, தமது அரசியல் எதிரிகளுக்கு எதிராக அதை பிரயோகித்து வந்துள்ளன.
கடந்த ஆண்டு ஜனநாயக விரோமான முறையில் ஜனாதிபதியாக பதவியேற்ற விக்கிரமசிங்க, ஏற்கனவே அரசியல் ஆர்வலர்கள் மற்றும் மாணவர் தலைவர்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தியுள்ளார். எவ்வாறாயினும், புதிய பயங்கரவாத எதிர்ப்பு மசோதா, அரசியல் எதிரிகள் மற்றும் குறிப்பாக தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான இன்னும் கடுமையான நடவடிக்கைகளுக்கு வழி திறக்கிறது.
விக்கிரமசிங்க மற்றும் அவரது அரசாங்கம் உட்பட முழு ஆளும் வர்க்கமும் கடந்த ஆண்டு ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவையும் அவரது அரசாங்கத்தையும் வெளியேற்றிய வெகுஜன இயக்கத்தின் மீள் எழுச்சி குறித்த அச்சத்தில் வாழ்கின்றன. புதிய சட்டத்தின் பெரும்பாலான விதிகள் அத்தகைய எழுச்சியைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
ஏற்கனவே பிரமாண்டமான வரி அதிகரிப்பு, மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டண அதிகரிப்பு, வங்கி வட்டி விகித அதிகரிப்பு மற்றும் விண்ணை முட்டும் பணவீக்கத்தாலும் தத்தளித்துக் கொண்டிருக்கும் தொழிலாளர்கள், இப்போது சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட்ட புதிய சுற்று தாக்குதல்களை எதிர்கொள்கின்றனர்.
நான்கு ஆண்டுகளில் 2.9 பில்லியன் டொலர் பிணை எடுப்பு கடனுக்கு ஈடாக, விக்கிரமசிங்க, ஒரு 'கொடூரமான பரிசோதனை' என்று சமீபத்தில் சர்வதேச நாணய நிதியமே விவரித்த சிக்கன திட்டங்களை சுமத்தத் தொடங்கினார். இதில் அரச நிறுவனங்களின் தனியார்மயமாக்கல், பல்லாயிரக்கணக்கான அரச வேலைகளை நீக்குதல் மற்றும் சுகாதாரம் மற்றும் கல்வி சேவைகளில் எஞ்சியிருப்பவற்றை துடைத்துக் கட்டுவதும் அடங்கும்.
சமீபத்திய வாரங்களில், துறைமுகங்கள், பெட்ரோலியம், தொலைத்தொடர்பு, வங்கி, சுகாதாரம் மற்றும் கல்வித் தொழிலாளர்கள் அரசாங்கத்தின் 'அத்தியாவசிய சேவை' வேலை நிறுத்த எதிர்ப்புத் தடைகளை மீறி இந்தத் தாக்குதல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கடந்த வாரம், பெட்ரோலியத் தொழிலாளர்களின் தனியார்மயமாக்கலுக்கு எதிரான வேலைநிறுத்தத்தை முறியடிக்க அரசாங்கம் ஆயிரக்கணக்கான இராணுவ மற்றும் பொலிஸ் படைகளை அனுப்பியது. வேலைநிறுத்தம் செய்த இருபது தொழிலாளர்கள், பெரும்பாலும் தொழிற்சங்கத் தலைவர்கள், கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டனர். 'அத்தியாவசிய சேவைகள்' சட்டத்தின் கீழ் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பெற்றோலியத்துறை அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் கடுமையான அபராதம் மற்றும் சிறைத்தண்டனையுடன் வேலையில் இருந்தும் வெளியேற்றப்படலாம்.
விக்கிரமசிங்கவின் புதிய பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின் அரசியல் பின்னணி இதுதான். மசோதாவின் பிரிவு 4 இன் படி, 'பயங்கரவாத' குற்றத்தைச் செய்ததாகக் கருதப்படும் எவருக்கும் மரண தண்டனை, 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் ஒரு மில்லியன் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
இந்த மசோதா மிகவும் விரிவானது மற்றும் தெளிவற்றது. இதன் கீழ் எந்தவொரு அரசாங்க எதிர்ப்பு அரசியல் நடவடிக்கையையும் பயங்கரவாதம் என்று வரையறுக்கலாம். “பொதுமக்கள் அல்லது பொது மக்கள் பிரிவினரை மிரட்டுதல்; இலங்கை அரசாங்கத்தையோ அல்லது வேறு எந்த அரசாங்கத்தையோ அல்லது ஒரு சர்வதேச நிறுவனத்தையோ, எந்தவொரு செயலையும் செய்யுமாறு அல்லது செய்வதிலிருந்து விலகியிருக்குமாறு தவறாக அல்லது சட்ட விரோதமாக நிர்ப்பந்தித்தல்; அத்தகைய அரசாங்கம் செயல்படவிடாமல் சட்டவிரோதமாக இடையூறு விளைவிப்பதும்” இதன் கீழ் பயங்கரவாத நடவடிக்கையாக கருதப்படும்.
சர்வதேச நாணய நிதிய சிக்கனத் திட்டம் உட்பட சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான அரசாங்கத்தின் தாக்குதல்களின் ஈவிரக்கமற்ற வர்க்கத் தன்மையை அம்பலப்படுத்துவதையும் இந்த மசோதா பயங்கரவாத குற்றமாக ஆக்கும். உலகப் போரின் பெருகும் ஆபத்தைப் பற்றி உழைக்கும் மக்களுக்குக் கற்பிப்பது கூட பொதுமக்களை 'அச்சுறுத்தல்' என்றும் வரையறுக்கப்படலாம்.
சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான வேலைநிறுத்தங்கள் மற்றும் தொழிலாளர்களின் எதிர்ப்புக்கள் - 'தவறாக அல்லது சட்டவிரோதமாக இலங்கை அரசாங்கத்தையோ அல்லது வேறு எந்த அரசாங்கத்தையோ அல்லது ஒரு சர்வதேச நிறுவனத்தையோ எந்தச் செயலையும் செய்யுமாறு அல்லது செய்யாமல் இருக்குமாறு வற்புறுத்துவது' - ஒரு பயங்கரவாதச் செயலாக வரையறுக்கப்படலாம்.
மசோதாவின் பிரிவு 3 'பயங்கரவாதத்தை' பின்வருமாறு வரையறுக்கிறது: 'எந்தவொரு பொதுப் பயன்பாட்டு இடம், ஒரு அரச அல்லது அரசாங்க வசதி, எந்தவொரு அரச அல்லது தனியார் போக்குவரத்து அமைப்புக்கு அல்லது எந்தவொரு உள்கட்டமைப்பு வசதி அல்லது சுற்றுச்சூழலுக்கும் கடுமையான சேதத்தை ஏற்படுத்துதல்; அத்தியாவசிய சேவைகள் அல்லது பொருட்கள் அல்லது ஏதேனும் அத்தியாவசிய சேவை அல்லது விநியோகத்துடன் தொடர்புடைய முக்கியமான உள்கட்டமைப்பு அல்லது களஞ்சிய வசதி ஆகியவற்றில் கடுமையான தடை அல்லது சேதம் அல்லது குறுக்கீடு செய்வது; பொது அல்லது அதன் ஒரு பிரிவின் உடல்நலம் மற்றும் பாதுகாப்புக்கு கடுமையான ஆபத்தை ஏற்படுத்துதல்; மேலே உள்ள பத்திகளில் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு செயலுக்கும் அல்லது சட்டவிரோதமான புறக்கணிப்பிலும் அல்லது ஒரு சட்டவிரோத ஒன்றுகூடலிலும் பங்காளியாக இருத்தல்.”
இதன் விளைவாக, பொலிஸ் அல்லது அதன் ஆத்திரமூட்டல்காரர்களால் மேற்கொள்ளப்பட்ட 'சேதங்கள்' உட்பட போலியான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் எந்தவொரு அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர் அல்லது குழுக்கும் எதிராக பயங்கரவாத குற்றச்சாட்டில் வழக்குத் தொடரப்படலாம். ஏற்கனவே கடுமையான தண்டனையாக இருக்கும் அத்தியாவசிய பொது சேவைகள் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள அத்தியாவசிய சேவைகளில் நடக்கும் வேலைநிறுத்தங்கள், புதிய மசோதாவின் கீழ் பயங்கரவாதம் என்று வரையறுக்க முடியும்.
இந்த மசோதா கருத்துச் சுதந்திரத்தின் மீதான அடிப்படைத் தாக்குதலாகும். பிரிவு 10 கூறுவதாவது, 'பயங்கரவாதக் குற்றத்தைச் செய்யவோ, தயார்படுத்தவோ அல்லது தூண்டிவிடவோ அவர்களுக்கு ஊக்கம் அல்லது தூண்டுதல் ஏற்படுத்தும் ஒரு அறிக்கையை வெளியிடுபவர்கள் அல்லது வெளியிடுவதற்கு காரணமானவர்கள், அல்லது ஏதேனும் வார்த்தை அல்லது வார்த்தைகளைப் பேசுபவர்கள், பொதுமக்களில் சிலருக்கு அல்லது அனைவருக்கும் புரியக்கூடியவாறான சமிக்ஞைகளை செய்பவர்கள் அல்லது வெளிப்படையாக பிரதிநிதித்துவங்களைச் செய்பவர்களுக்கு எதிராக அவர்கள் மீது 'பயங்கரவாத' வழக்குத் தொடரப்படலாம்.
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், எந்தவொரு தனிநபரும் அல்லது அமைப்பும், சிக்கன நடவடிக்கைகள் உட்பட, அரசாங்கக் கொள்கையை விமர்சிப்பதும் மற்றும்/அல்லது இந்தக் கொள்கைகளை எதிர்க்கும்படி மக்களைக் கேட்டுக்கொள்வதும் 'பயங்கரவாத' குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் செயலாகும்.
பயங்கரவாதி என்று சந்தேகிக்கப்படும் எவரையும் கைது செய்ய பொலிஸ் அதிகாரிகள் மற்றும் ஆயுதப்படை உறுப்பினர்களுக்கு பாரதூரமான அதிகாரங்கள் வழங்கப்படும். சந்தேகநபர்களை நீதவானிடம் முற்படுத்துவதற்கு முன்னதாக 48 மணித்தியாலங்கள் சிறையில் அடைத்து வைக்க முடியும், பின்னர் குற்றவியல் வழக்கு நடைமுறைகள் ஏதுமின்றி ஒரு வருடத்திற்கு விளக்கமறியலில் அவர்களை வைக்க முடியும். இந்த காலக்கெடுவை மேல் நீதிமன்ற நீதிபதியால் மூன்று மாத அதிகரிப்புகளில் நீட்டிக்க முடியும்.
இந்த பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் எனப்படுவது சர்வாதிகார ஆட்சிக்கு வழி வகுக்கின்றது. ஜனாதிபதி விக்கிரமசிங்கவும் அவரது அரசாங்கமும் நீதித்துறை, இராணுவம், பொலிஸ், சிறைச்சாலைகள் மற்றும் பாராளுமன்றம் உட்பட முதலாளித்துவ அரசின் அனைத்து உறுப்புகளையும் தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக முழுமையாகப் பயன்படுத்துவதில் உறுதியாக இருப்பதை இது தெளிவுபடுத்துகிறது.
இந்த புதிய நடவடிக்கைகளுக்கு தொழிற்சங்கங்களின் பிரதிபலிப்பு, அத்தியாவசிய பொதுச் சேவைச் சட்டத்தின் மீதான அவர்களின் பிரதிபலிப்பைப் போன்றே முற்றிலும் வங்குரோத்தானது.
மார்ச் 22 அன்று, தேசிய தொழிற்சங்க மையத்தின் அழைப்பாளரும், எதிர்க்கட்சியான மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) ஒரு தலைவருமான வசந்த சமரசிங்க, 'புதிய சட்டத்தின் நோக்கம் தனக்கு புரியவில்லை' என்று ஊடகங்களிடம் கூறினார். 'அரசாங்கத்தின் இந்த நகர்வுகளை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களா இல்லையா என்பதை சர்வதேச நாணய நிதியத்திடம் நாங்கள் கேட்க விரும்புகிறோம்' என மேலும் அவர் அறிவித்தார்: சர்வதேச நிதி மூலதனத்தின் இந்த கருவி என்ற வகையில் சர்வதேச நாணய நிதியத்துக்கு உழைக்கும் மக்களின் ஜனநாயக உரிமைகள் மீது கிஞ்சித்தும் அக்கறை இல்லை!
அரசாங்கத்தின் புதிய எதேச்சதிகார நடவடிக்கைகளுக்கு தெளிவான நோக்கம் இல்லை என்றே சமரசிங்கவின் பதில் உணர்த்துகிறது. இது ஒரு அப்பட்டமான மூடிமறைப்பே தவிர வேறில்லை. தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளின் வளர்ந்து வரும் அரசாங்க விரோத எதிர்ப்பை கொடூரமாக ஒடுக்குவதற்கு அரசு பலப்படுத்தப்படுகிறது.
சமரசிங்கவும் இலங்கையின் ஏனைய தொழிற்சங்க அதிகாரத்துவமும் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிக்கின்றன. தொழிலாளர்களை அரசியல்ரீதியாக நிராயுதபாணியாக்குவதற்கும், அவர்களின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது அதிகரித்துவரும் தாக்குதலுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு சுயாதீனமான அரசியல் தலையீட்டையும் தடுப்பதற்கும் அவை வேலை செய்கின்றன.
அரசாங்கத்தின் புதிய அடக்குமுறை நடவடிக்கைகளின் ஆபத்தான தாக்கங்களை தொழிலாள வர்க்கத்தால் ஏற்றுக்கொள்ள முடியாது. மற்றும் அதற்கெதிராக போராட தயாராக வேண்டும். இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கும், வேலைகள் மற்றும் சமூக நிலைமைகள் மீது அதிகரித்து வரும் அரசாங்கத்தின் தாக்குதல்களைத் தோற்கடிப்பதற்கும், தொழிலாளர்கள் விஷயங்களை தங்கள் கைகளில் எடுத்துக் கொள்ள வேண்டும். அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளித்துவக் கட்சிகளில் இருந்தும் சுயாதீனமாக, ஒவ்வொரு தொழிற்சாலையிலும், வேலைத் தளத்திலும், பெருந்தோட்டங்களிலும், நகர்ப்புற மற்றும் கிராமப்புற சமூகங்களிலும் நடவடிக்கைக் குழுக்களை உருவாக்குவதே இதன் பொருள்.
சோசலிச சமத்துவக் கட்சி, அத்தகைய நடவடிக்கைக் குழுக்களின் பிரதிநிதிகளை அடிப்படையாகக் கொண்டு, தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற வெகுஜனங்களதும் ஜனநாயக சோசலிச மாநாட்டிற்கான போராட்டத்தை முன்னெடுக்குமாறு தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளுக்கு அழைப்பு விடுக்கிறது. இது சர்வதேச தொழிலாள வர்க்கத்துடன் ஐக்கிப்பட்டு, ஒரு சோசலிச வேலைத்திட்டத்திற்கு அர்ப்பணித்துக்கொண்ட தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்கு ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கத்திற்கு அடித்தளத்தை வழங்கும்.
வேலைநிறுத்தம் செய்யும் இலங்கை ஆசிரியர்களின் உரிமையைப் பாதுகாத்திடு!
இலங்கைக்கான தனது திட்டம் ஒரு 'கொடூர பரிசோதனை' என்று சர்வதேச நாணய நிதியம் அறிவிக்கிறது
இலங்கை அரசாங்கம் IMF இன் சிக்கன நடவடிக்கைகளை சுமத்துவதால் பொருளாதார அழிவு மோசமடைகிறது