இலங்கை தொழிலாள வர்க்கம் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராகவும் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கவும் எவ்வாறு போராட வேண்டும்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏப்ரல் 3 அன்று பல்கலைக்கழக பேராசிரியர்களின் கூட்டமொன்றில் பேசிய போது, சர்வதேச நாணய நிதியத்துடனான கடன் ஒப்பந்தத்தை விவாதத்திற்காக பாராளுமன்றத்தில் முன்வைக்கப் போவதாகவும் அதை அங்கீகரிப்பதற்கான வாக்கெடுப்பு நடத்தப்போவதாகவும் கூறினார். 'இதைத் தொடர்ந்து, ஒப்பந்தத்தின் முக்கிய புள்ளிகள் சட்டமாக ஆக்கப்படும்,' என்று அவர் அறிவித்தார்.

அதே நேரத்தில், புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் (ATB) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் விக்ரமசிங்க அறிவித்தார். இந்த கொடூரமான நடவடிக்கைகள், சர்வதேச நாணய நிதிய திட்டம் உட்பட அவரது அரசாங்கத்தின் கொள்கைகள் மீதான அனைத்து வெகுஜன எதிர்ப்பையும் நசுக்க, ஜனாதிபதிக்கு பொலிஸ் அரச அதிகாரங்களை வழங்குகிறது.

அதன் பின்னர் இந்த இரு கொள்கைகளும் ஏப்ரல் 25 அன்று பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

4 பெப்ரவரி 2023 அன்று கொழும்பில் நடைபெற்ற 75வது சுதந்திர தின விழாவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஆயுதப் படைகளின் தலைவர்களுடன். [Photo: Sri Lanka president’s media division]

சர்வதேச நாணய நிதிய வேலைத்திட்டத்தை நாட்டின் சட்டத்துக்குள் எழுதும் விக்கிரமசிங்கவின் திட்டமானது, அரசாங்கத்தின் கடுமையான நடவடிக்கைகளுக்கு எதிரான எந்தவொரு செயற்பாடும் சட்டவிரோதமாக்கப்படும் என்று தொழிலாள வர்க்கம் மற்றும் ஏழைகளுக்கு எதிராக விடுக்கப்படும் ஒரு பாரதூரமான அச்சுறுத்தலாகும் என்று சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) எச்சரிக்கிறது. அவரது பயங்கரவாத எதிரப்புச் சட்டத் திணிப்புடன், விக்கிரமசிங்கவின் நகர்வுகள், ஜனாதிபதி சர்வாதிகாரத்தை பலப்படுத்துவதற்கான மற்றொரு குறிப்பிடத்தக்க அடியெடுப்பாகும்.

இந்த அப்பட்டமான ஜனநாயக விரோத நடவடிக்கைகளை தோற்கடிப்பதற்கும் விக்கிரமசிங்க ஆட்சியை வீழ்த்துவதற்கும் தொழிலாள வர்க்கம் அதன் சுயாதீனமான தொழில்துறை பலத்தை அணிதிரட்டுவது அவசரமானதாகும். தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற உழைப்பாளர்களின் சுயாதீன நடவடிக்கைக் குழுக்களின் அடிப்படையில் ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான தொழிலாளர்களதும் கிராமப்புற வெகுஜனங்களதும் மாநாட்டை கட்டியெழுப்புவதன் மூலம் மட்டுமே இதைச் செய்ய முடியும்.

ஜனாதிபதியின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்குப் பின்னால் உள்ளது சர்வதேச நிதி மூலதனமே ஆகும். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நீண்டகால கைக்கூலியாக இருந்த விக்கிரமசிங்க, கடந்த ஆண்டு வெகுஜன எழுச்சியைத் தொடர்ந்து அவருக்கு முன்னோடியாக இருந்த கோட்டாபய இராஜபக்ஷவின் இழிவான வீழ்ச்சிக்குப் பின்னர் ஜனாதிபதியாக பதவியேற்றார்.

சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தை ஒரு 'கொடூரமான பரிசோதனை' என்று முன்னர் விவரித்த இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய தூதுக் குழுவின் தலைவர் பீட்டர் ப்ரூயர், ஏப்ரல் 9 அன்று விக்கிரமசிங்கவின் அறிக்கைகளை அடிக்கோடிட்டுக் காட்டி இந்த நிலைப்பாட்டை மீண்டும் கூறினார்.

'சர்வதேச நாணய நிதியம் உதவுவதற்கே இங்கே உள்ளது,' ஆனால் 'எளிதான தீர்வுகள் எதுவும் கிடையாது... இந்த பிரமாண்டமான பிரச்சனையை சமாளிக்க அனைவரும் ஒன்று சேர வேண்டும். சீர்திருத்தங்கள் மூலம் பெற்ற கடின-வெற்றியின் ஆதாயங்கள் மக்களுக்கு நன்மை பயப்பதையும் நெருக்கடி மீண்டும் வராது என்பதையும் உறுதிப்படுத்துவது மிகவும் தீர்க்கமானது,” என ப்ரூயர் அறிவித்தார்.

அரசாங்கத்தின் வரவிருக்கும் பல தாக்குதல்களுக்கு முன்னதாகவே, ரூபாயின் கூர்மையான மதிப்பிழப்பு, இறக்குமதி வெட்டுக்கள் மற்றும் பெறுமதி சேர் வரிகள், மின்சார கட்டண அதிகரிப்பு மற்றும் வருமான வரி அதிகரிப்பு உட்பட, ஏற்கனவே சர்வதேச நாணய நிதியத்தின் ஆரம்ப கோரிக்கைகளை கொழும்பு அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ளது. இதில் தனியார்மயமாக்கல், நலன்புரி மானிய வெட்டுக்கள், இலட்சக் கணக்கான அரச வேலைகளை வெட்டுதல் மற்றும் அரசாங்கத் துறை மறுசீரமைப்பும் நிதிப் பற்றாக்குறையை அகற்றுவதற்கான பிற நடவடிக்கைகளில் அடங்கும். இந்த நடவடிக்கைகள் அனைத்தும் இலங்கைத் தொழிலாளர்கள் மற்றும் உழைக்கும் மக்களை வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துமாறு கட்டாயப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

இவ்வாறு கட்டவிழ்த்துவிடப்படும் நடவடிக்கைகள் மற்றும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான ஆபத்தான அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், 100 தொழிற்சங்கங்களின் தலைவர்கள், பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மற்றும் அரசாங்கத்தின் செலவுக் குறைப்புத் தாக்குதல்களுக்கு தங்களின் பிரதிபலிப்பைப் பற்றி கலந்துரையாடுவதற்காக எனக் கூறிக்கொண்டு ஏப்ரல் 10 அன்று கொழும்பில் கூடினர். இந்த அரசாங்க அச்சுறுத்தல்களை தோற்கடிக்க தொழிற்சங்கங்கள் எதுவும் செய்யப் போவதில்லை என்பதை உணர்த்தும் வகையில், சாந்தமான அறிக்கையுடன் அந்தக் கூட்டம் முடிந்தது.

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) சார்பு தேசிய தொழிற்சங்க மையம் மற்றும் இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கம், அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA), இலங்கை மருத்துவ சங்கம் (SLMA), பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு (FUTA), சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பு, போலி-இடது முன்னிலை சோசலிசக் கட்சியின் தொழிலாளர் போராட்ட மையம் மற்றும் பப்லோவாத ஐக்கிய சோசலிசக் கட்சியும் இந்த கூட்டத்தில் பங்குபற்றி இருந்தன. பல்வேறு சிவில் சமூகக் குழுக்கள் மற்றும் மீனவ அமைப்பினரும் இதில் கலந்து கொண்டனர்.

பழமைவாத தொழிலறிஞர்களின் தொழிற்சங்கங்களான பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்க கூட்டமைப்பு, அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் மற்றும் இலங்கை மருத்து சங்கமும் ஏற்கனவே சர்வதேச நாணய நிதியத்துடன் உயர்மட்ட கலந்துரையாடல்களை நடத்தியுள்ள அதேவேளை, முன்னர் குறிப்பிடப்பட்ட அனைத்து தொழிற்சங்கங்களும் வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளை ஆதரிக்கின்றன.

ஏப்ரல் 10 கூட்டத்தில், அரசாங்கம் தனது எதேச்சதிகாரமான வருமான வரி முறையை விலக்கிக்கொள்ள வேண்டும், தேசிய சொத்துக்களை விற்பதை நிறுத்த வேண்டும், அதிக வாழ்க்கைச் செலவுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என அழைப்பு விடுத்து அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.

தொழிற்சங்க அதிகாரத்துவத்தினர், “ஆட்சியாளர்களால் நெருக்கடிக்குள் இழுத்துவிடப்படும் எமது அன்புக்குரிய தாய்நாட்டை விடுவிப்பதற்கு, ஒரே சிந்தனையில் அனைத்து இலங்கையர்களுடன் ஐக்கியப்பட்டு வேலைசெய்ய, அனைத்து நடவடிக்கைகளும் முழு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட, உறுதியான முயற்சி மற்றும் சளைக்காத துணிச்சலுடன் ஒன்றாக ஐக்கியப்பட்டு, உறுதிப்பாட்டுடன் வேலை செய்யவும் அதற்காக அதிகபட்ச பலத்தின் ஊடாக நம்மை அர்ப்பணித்துக்கொள்ளவும்” உறுதிமொழி எடுத்தனர். 

இந்தத் தேசியவாத வாய்ச்சவடால், துன்பப்படும் மக்களை ஏமாற்றுவதை நோக்கமாகக் கொண்டது. வேலைநிறுத்தங்கள், எதிர்ப்புகள் அல்லது ஆர்ப்பாட்டங்கள் போன்று எந்த நடவடிக்கையையும் தொழிற்சங்கங்கள் முன்மொழியவில்லை. அத்துடன் சலுகைகளை வழங்குவதற்கு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கமுடியும் என்ற கட்டுக்கதையை மீண்டும் பிரச்சாரம் செய்கின்றன.

கூட்டத்தின் போது, இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் பேராசிரியர் இந்திக்க கருணாரத்ன, சர்வதேச நாணய நிதியத்தின் நிதியை 'விவேகமுடன் பயன்படுத்த' அழைப்பு விடுத்தார். பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனத்தின் சார்பில் பேசிய பேராசிரியர் அருணா சாந்த ஆராச்சி, சிங்கப்பூரில் உள்ள டெமாசெக் (Temasek), மலேசியாவின் கஸானா (Khazana) ஆகியவற்றை முன்மாதிரியான அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள் என்று பாராட்டினார். இந்த அரசாங்கத்திற்கு சொந்தமான, அரச செல்வ நிதிகள், தனியார்மயமாக்கலின் மற்றொரு வடிவமாகும்.

தேசிய தொழிற்சங்க மையத்தின் தலைவர் வசந்த சமரசிங்க, அரசாங்கம் 'பின்வாங்க' நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளதாகவும் தொழிற்சங்கங்கள் எதிர்த்ததை அடுத்து பயங்கரவாத எதிர்ப்பு மசோதாவை பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கான அதன் முந்தைய தேதியை ஒத்திவைத்ததாகவும் பொய்யாக கூறினார். விக்கிரமசிங்க பின்னர் ஏப்ரல் மாத இறுதியில் சட்டமூலத்தை முன்வைப்பதாக அறிவித்ததை அடுத்து இந்தக் பொய் அம்பலமானது.

தொழிலாளர் போராட்ட மையத்தின் தலைவர் துமிந்த நாகமுவ, சலுகைகளை வென்றெடுப்பதற்காக அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க பாராளுமன்றத்திற்கு வெளியே ஒரு அதிகாரம் கட்டியெழுப்பப்பட வேண்டும்' என்று கூட்டத்தில் கூறினார். சிங்கப்பூர் அல்லது மலேசியா மாதிரியிலான தனியார்மயமாக்கல் முன்மொழிவுகளில் அவருக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை அல்லது சர்வதேச நாணய நிதிய பணத்தை 'விவேகத்துடன்' பயன்படுத்த வேண்டும் என்று கூட்டத்தில் இருந்தவர்கள் கூறியது சம்பந்தமாக அவரிடம் விமர்சனம் எதுவும் இல்லை.

மார்ச் 1 மற்றும் 15 அன்று பாரிய வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்புகளைத் தொடர்ந்தே இந்த தொழிற்சங்கங்களின் பிரதிபலிப்பு வந்தது. இந்த நடவடிக்கைகளை மட்டுப்படுத்த தொழிற்சங்கங்கள் முயற்சித்த போதிலும், இரண்டு நாட்களிலும் சுமார் அரை மில்லியன் தொழிலாளர்கள் பங்கேற்றனர். தாம் போராடுவதற்குத் தயார் என்பதை தொழிலாளர்கள் தெளிவுபடுத்தியுள்ள போதிலும், விக்கிரமசிங்க ஆட்சி மற்றும் முழு ஆளும் வர்க்கத்தையும் போன்றே, தொழிற்சங்க அதிகாரத்துவங்களும், தொழிலாள வர்க்கப் போராட்டங்களின் புதுப்பிக்கப்பட்ட அலை தலைதூக்கும் என்பதையிட்டு பீதியடைந்தள்ளன.

இந்த தொழிற்சங்கங்கள் அனைத்தும், போலி இடது குழுக்களின் ஆதரவுடன், கடந்த ஆண்டு நாடு தழுவிய ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஏப்ரல் 28, மே 6 ஆகிய நாட்களில் நடந்த பொது வேலைநிறுத்தங்களை காட்டிக்கொடுத்து, இந்த வெகுஜன இயக்கத்தை, ஜனாதிபதி இராஜபக்ஷவின் கீழ் ஒரு இடைக்கால முதலாளித்துவ அரசாங்கத்தை அமைக்க ஜே.வி.பி. மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி (ஐ.ம.ச.) விடுத்த அழைப்புக்கு ஆதரவாக திசைதிருப்பி விட்டன. 

கடந்த மாதம் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் ஊழியர்கள் மார்ச் 28 அன்று வேலைநிறுத்தம் செய்த போது, இந்த தொழிற்சங்கங்களின் துரோகப் பாத்திரம் மீண்டும் நிரூபணமானது. அரசாங்கம் வேலைநிறுத்தத்தைக் கலைக்கவும் ஊழியர்களை தொடர்ந்து வேலை செய்ய வைக்கவும் ஆயிரக்கணக்கான துருப்புக்களையும் பொலிஸாரையும் அனுப்பியது. அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தைப் பயன்படுத்தி, மின்சாரதுறை அமைச்சர் 20 தொழிற்சங்கத் தலைவர்களை கட்டாய விடுமுறையில் வைத்து, அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, ஐ.ம.ச., ஜே.வி.பி., ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றால் கட்டுப்படுத்தப்படும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன தொழிற்சங்கங்கள் உட்பட தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் அனைத்தும், சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு அர்ப்பணிப்புடன் உள்ளதுடன் இந்த அடக்குமுறை சம்பந்தமாக ஒரு வெற்று “கண்டன” அறிக்கையுடன் மட்டுமே பிரதிபலித்தன.

வளாகத்தில் இருந்து இராணுவ மற்றும் பொலிஸ் படைகளை அகற்றுவதற்கோ, அத்தியாவசிய சேவைகள் சட்டத்தை மற்றும் தொழிற்சங்கத் தலைவர்கள் மீது சுமத்தப்பட்ட கட்டாய விடுமுறை உத்தரவை விலக்கிக்கொள்வதற்கோ அல்லது இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்களைப் பாதுகாக்க தொழிலாளர்களை தொழிற்துறை ரீதியில் அணிதிரட்டுவதற்கோ எந்த அழைப்பும் விடுக்கப்படவில்லை.

தொழிலாள வர்க்கம் விஷயங்களைத் தன் கைகளில் எடுத்துக்கொள்வதன் மூலம் மட்டுமே சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராகவும், தங்கள் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கவும் போராட முடியும் என்பதை தொழிற்சங்கங்களின் துரோகப் பாத்திரம் மீண்டும் உறுதிப்படுத்துகிறது. இதற்கு தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் அவர்களின் போலி-இடது அடிவருடிகளிலும் இருந்து சுயாதீனமான நடவடிக்கைக் குழுக்களைக், ஒவ்வொரு வேலைத் தளத்திலும், பெருந்தோட்டங்களிலும் மற்றும் சுற்றுப்புறங்களிலும் கட்டியெழுப்ப வேண்டும்.

சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கைக்கு பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென்பதற்குக் காரணம், எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை அரசாங்கத்தின் பின்னால் அணிதிரட்ட வேண்டும் என்பதற்காகத்தான் என்பதை விக்கிரமசிங்க தெளிவுபடுத்தியுள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள முன்னெப்போதும் இல்லாத பொருளாதாரக் கொந்தளிப்புக்கு முதலாளித்துவ அமைப்பிற்குள் சீர்திருத்த தீர்வு எதுவும் இல்லை. இது உலக முதலாளித்துவத்தின் வரலாற்று நெருக்கடியின் ஒரு பகுதியாகும்.

கோவிட்-19 மற்றும் உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ யுத்தம் அதிக பணவீக்கத்தை தூண்டிவிட்டுள்ளது. இப்போது இலங்கையில் பணவீக்கம் சுமார் 50 சதவீதமாக உள்ளது. 2022 இல், 5 இலட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்தனர். வறுமை 2019 இல் 13.1 சதவீதத்திலிருந்து 2022 இல் 25.6 சதவீதமாக இரட்டிப்பாகி, மேலும் 2.7 மில்லியன் மக்களை துயரத்தில் தள்ளியது. உலக உணவுத் திட்டத்தின் சமீபத்திய கணக்கெடுப்பின்படி, இலங்கையில் உள்ள குடும்பங்களில் 32 சதவீதத்தினர் 'உணவுப் பாதுகாப்பின்றி' உள்ளனர், அதாவது அவர்கள் பசி அல்லது பட்டினியால் அவதிப்படுகின்றனர்.

விக்கிரமசிங்க ஆட்சியின் சர்வாதிகார நகர்வுகள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் கொடூரமான கோரிக்கைகளுக்கு எதிராக, சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகள் தங்கள் நடவடிக்கைக் குழுக்களின் மூலம் தொடர் நடவடிக்கைகளுக்காக போராட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது.

ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டத்தை அபிவிருத்தி செய்ய, சோசலிச சமத்துவக் கட்சி நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்க அழைப்பு விடுக்கிறது. பயங்கரவாத எதிர்ப்பு மசோதா வேண்டாம்! அவசரகாலச் சட்டம், அத்தியாவசிய சேவைகள் சட்டம் மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டம் உட்பட அனைத்து அடக்குமுறைச் சட்டங்களையும் இரத்து செய்! அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்!

இந்த போராட்டம் முதலாளித்துவ அவலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் போராட்டத்துடன் பிணைக்கப்பட்டுள்ளது. சோசலிச சமத்துவக் கட்சி, அத்தியாவசியப் பொருட்களின் உற்பத்தி மற்றும் விநியோகத்தை தொழிலாள வர்க்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர அழைப்பு விடுக்கிறது. வங்கிகள், பெருநிறுவனங்கள் மற்றும் பெருந்தோட்டங்களை தேசியமயமாக்கி, ஜனநாயக பொதுக் கட்டுப்பாட்டின் கீழ் வைப்பதன் மூலமே இதைச் செய்ய முடியும். பில்லியனர்கள் மற்றும் பெருநிறுவனங்களின் பிரமாண்டமான சொத்துக்கள் கைப்பற்றப்படுவதோடு அனைத்து வெளிநாட்டு கடன்களும் நிராகரிக்கப்பட வேண்டும்.

இந்தத் திட்டத்திற்காகப் போராட, நடவடிக்கைக் குழுக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் அடிப்படையில் ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான தொழிலாளர்களதும் கிராமப்புற வெகுஜனங்களதும் மாநாட்டை கட்டியெழுப்ப வேண்டும். இந்த சோசலிச மற்றும் ஜனநாயக வேலைத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் அரசாங்கத்திற்கான போராட்டத்தை முன்னெடுக்க இது வழி வகுக்கும். இந்தப் போராட்டத்தில், தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துவதற்கும் பலவீனப்படுத்துவதற்கும் முதலாளித்துவ வர்க்கத்தின் ஆயுதமான சிங்களப் பேரினவாதம் அல்லது தமிழ் இனவாதத்திற்கு எதிராக, இனப் பாகுபாடுகளுக்கு அப்பால் தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியம் கட்டியெழுப்பட வேண்டும்.

ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிராக மில்லியன் கணக்கான பிரெஞ்சு தொழிலாளர்களின் வெகுஜன எதிர்ப்புக்கள் மற்றும் வேலைநிறுத்தங்களில் காணப்படுவதுபோல், இலங்கையில் வர்க்கப் போராட்டமானது சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் எழுச்சியின் ஒரு பகுதியாகும். முதலாளித்துவ நெருக்கடியின் சுமையை உழைக்கும் மக்கள் மீது திணிக்கும் அரசாங்கங்களின் முயற்சிகளுக்கு எதிராக ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் இந்தியா முழுவதும் தொழிலாளர்களின் போராட்டங்கள் வளர்ச்சியடைந்து வருகின்றன.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் தொடங்கி வைக்கப்பட்ட தொழிலாளர் நடவடிக்கை குழுக்களின் சர்வதேச கூட்டணியுடன் தங்கள் நடவடிக்கைக் குழுக்களை ஒருங்கிணைப்பதன் மூலம் இலங்கைத் தொழிலாளர்கள் சர்வதேச அளவில் தங்கள் வர்க்க சகோதர சகோதரிகளுடன் தங்கள் போராட்டங்களை ஐக்கியப்படுத்த முடியும்.

இந்த வேலைத்திட்டத்திற்காக போராடுவதற்கு சோசலிச சமத்துவக் கட்சியில் இணையுமாறு தொழிலாளர்களையும் இளைஞர்களையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

இலங்கை அரசாங்கத்தின் பயங்கரவாத எதிர்ப்பு மசோதா: ஜனநாயக உரிமைகளை துடைத்துக் கட்டும் தாக்குதல்

இலங்கை தொழிற்சங்கங்கள் சர்வதேச நாணய நிதியத்துடன் உயர்மட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன

ஜனநாயகத்திற்கும் சோசலிசத்திற்குமான இலங்கை தொழிலாளர்களினதும் கிராமப்புற வெகுஜனங்களினதும் மாநாட்டிற்காக!

Loading