மதிப்பிழந்த இலங்கை ஆளும் கட்சி மீண்டும் தலைதூக்க முயற்சிக்கிறது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபாய இராஜபக்ஷ, வெகுஜன எழுச்சிக்கு மத்தியில் நாட்டை விட்டு வெளியேறி இராஜினாமா செய்ய நிர்ப்பந்திக்கப்பட்ட மூன்று மாதங்களுக்குப் பின்னர், அவரது மதிப்பிழந்த ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.) தனது அரசியல் செல்வாக்கை புதுப்பிக்க முயற்சிக்கிறது. கோட்டாபயவின் மூத்த சகோதரரும் முன்னாள் பிரதமருமான மஹிந்த இராஜபக்ஷ, “ஒன்றாக எழுவோம்” என்ற பதாகையின் கீழ் ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. பிரச்சாரத்தை முன்னெடுத்து, நிலைமையை பரிசோதிக்கும் பொதுக் கூட்டங்களை நடத்துகிறார். ஒக்டோபர் 8 மற்றும் 16 ஆம் திகதிகளில் முறையே மேற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் களுத்துறை மற்றும் நாவலப்பிட்டி ஆகிய இடங்களில் முதல் இரண்டு கூட்டங்கள் நடைபெற்றன.

கோட்டாபய இராஜபக்ஷ மற்றும் மஹிந்த ராஜபக்ஷ [Photo by AP Photo/Eranga Jayawardena, CC BY-SA 2.0/World Economic Forum]

தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற உழைக்கும் மக்கள் எதிர்கொள்ளும் தாங்க முடியாத நிலைமைகள், பரவலான தட்டுப்பாடுகள் மற்றும் உணவு, மருந்து மற்றும் எரிபொருள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விண்ணைத் தொடும் விலை அதிகரிப்பு மற்றும் நீண்ட மணிநேர மின்வெட்டு உட்பட, ஏப்ரல் தொடக்கத்தில் இருந்து இராஜபக்ஷவும் அவர்களது ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.வும் ஒரு வெகுஜன எழுச்சியை எதிர்கொண்டனர். ஏப்ரல் 28 மற்றும் மே 6 இல் ஒரு நாள் பொது வேலைநிறுத்தத்தில் இணைந்துகொண்டு மில்லியன் கணக்கான தொழிலாள வர்க்கம் ஒரு பிரதான வகிபாகம் ஆற்றியது. வெகுஜன எதிர்ப்புக்கள் ஜனாதிபதி இராஜபக்ஷ மற்றும் அவரது அரசாங்கத்தை இராஜினாமா செய்யுமாறும் சமூகப் பேரிடருக்கு முடிவு கட்டுமாறும் கோரின.

மத்திய கொழும்பில் காலி முகத்திடலிலும் பிரதமரின் இல்லத்திற்கு வெளியிலும் ஆக்கிரமித்திருந்த அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது அவர் ஏவிவிட்ட குண்டர்களின் வன்முறைத் தாக்குதலுக்கு மத்தியில், பெரும் வெகுஜன சீற்றம் ஏற்பட்டதை அடுத்து, மே 9 அன்று மகிந்த இராஜபக்ஷ தனது உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறி இராஜினாமா செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டார், தனது அமைச்சரவை உடனடியாக சரிந்த போதிலும், கோட்டாபய இராஜபக்ஷ பிடிவாதமாக பதவி விலக மறுத்துவிட்டார். போராட்டம் தொடர்ந்ததால், ஜூலை 13 அன்று அவர் நாட்டை விட்டு வெளியேறினார்.

இராஜபக்ஷ மற்றும் ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதான பரவலான பொது விரோதம் எந்தளவுக்கு உள்ளது என்றால், அவர்களால் பொது நிகழ்வுகளில் கலந்து கொள்ளவோ, அவர்களின் தொகுதிகளுக்குச் செல்லவோ முடியவில்லை. பலத்த பாதுகாப்பில் மட்டுமே அவர்களால் நடமாட முடிகிறது.

28 ஏப்பிரல் 2022 வியாழன், இலங்கையின் கொழும்பில் ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவை பதவி விலகக் கோரி நடந்த வேலைநிறுத்தம். [AP Photo/Eranga Jayawardena]

படு மோசமாக அவப்பேறு பெற்ற வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சியின் (ஐ.தே.க.) தனியொரு பாராளுமன்ற உறுப்பினரான ரணில் விக்கிரமசிங்க, பிரதானமாக ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. வாக்குகள் மூலம், மதிப்பிழந்த பாராளுமன்றத்தால் ஜனநாயக விரோதமாக ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார். அவர் புதிய அமைச்சரவையை கிட்டத்தட்ட அதே பழைய ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. உறுப்பினர்களைக் கொண்டே உருவாக்கினார்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கடுமையான சிக்கனக் கோரிக்கைகளை அமுல்படுத்துவதற்கு பாரிய எதிர்ப்பு இருந்தபோதிலும், விக்கிரமசிங்கவும் ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.வும், அரசாங்கம் தற்போதைய பாராளுமன்றத்தின் பதவிக்காலம் 2025 இல் முடிவடைவது வரை இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றன. ஈவிரக்கமற்ற நிறைவேற்று ஜனாதிபதி பதவியை ஏற்றதில் இருந்தே, விக்கிரமசிங்க போராட்டங்கள் மற்றும் போராட்டத் தலைவர்கள் மீது இரக்கமற்ற ஒடுக்குமுறை கட்டவிழ்த்துவிட்டு வருகிறார்.

விக்கிரமசிங்க அரசாங்கம் தனது நிலையை பலப்படுத்திக் கொண்டு, நாட்டின் கடுமையான பொருளாதார நெருக்கடியின் சுமையை தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற உழைப்பாளிகள் மீது சுமத்தவும், எந்தவொரு மக்கள் எதிர்ப்பையும் நசுக்குவதற்கும் முற்படுகையில், உழைக்கும் மக்கள் பெரும் ஆபத்துக்களை எதிர்கொள்கின்றனர்.

தனது வர்க்க நலன்களைப் பாதுகாக்க, தொழிலாள வர்க்கமானது முதலாளித்துவ வர்க்கத்தின் ஆணிவேரை உலுக்கிய வெகுஜனப் போராட்டங்களுக்குப் பிறகு, மதிப்பிழந்த ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. அதன் அசிங்கமான தலையை உயர்த்த முடிந்தது ஏன் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பிரதான அரசியல் பொறுப்பு எதிர்க்கட்சிகளான ஐக்கிய மக்கள் சக்தி (ஐ.ம.ச.), மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) மற்றும் தொழிற்சங்கங்கள் மற்றும் உண்மையான மாற்றீட்டைப் பிரதிநிதித்துவம் செய்வது போன்ற ஆபத்தான மாயையை ஊக்குவித்து வரும் போலி-இடது குழுக்களையுமே சாரும்.

ஐ.ம.ச. மற்றும் ஜே.வி.பி.க்கு விக்கிரமசிங்க அரசாங்கத்துடன் அடிப்படை வேறுபாடுகள் கிடையாது. மற்றும் சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட்டுள்ள சிக்கன நடவடிக்கைகளுக்கு அவை முழுமையாக ஆதரவளிக்கின்றன. உண்மையில், சர்வதேச நாணய நிதியத்தின் அவசரகால கடன்களை விரைவில் பெறுவதற்கு முயற்சிக்கவில்லை என இராஜபக்ஷவை. ஐ.ம.ச. விமர்சித்தது. வெகுஜன எதிர்ப்புகளின் போது, அனைத்துக் கட்சி, இடைக்கால முதலாளித்துவ அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்ற வேலைத் திட்டத்தை இரு எதிர்க்கட்சிகளும் முன்வைப்பதன் மூலம் முதலாளித்துவ ஆட்சியைக் காப்பாற்ற முன்வந்தன.

கடந்த காலத்தில் சோசலிசவாதிகளாக கூறிக்கொண்ட ஜே.வி.பி., தற்போதைய பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிக்கு முதலாளித்துவத்தை அன்றி, அரசாங்கத்தின் ஊழலையே குற்றம் சாட்டுகிறது. உழைக்கும் மக்கள் மீது புதிய சுமைகளைச் சுமத்துவதற்குத் தேவையான சட்டப்பூர்வத்தன்மையுடன் கூடிய அரசாங்கத்தை அமைக்க ஆளும் வர்க்கத்திற்கு அதன் சேவைகளை வழங்க முன்வந்துள்ளதுடன் முன்கூட்டியே தேர்தல்களுக்கு அழைப்பு விடுக்கிறது.

சியத தொலைக்காட்சியில் சமீபத்திய உரையாடல் நிகழ்ச்சியில், ஜே.வி.பி. தலைவர் அனுரகுமார திசாநாயக்க, சர்வதேச நாணய நிதியத்துடனான அரசாங்கத்தின் அணுகுமுறையை '[வெளிநாட்டு] கடனைத் திருப்பிச் செலுத்தாத நடவடிக்கையாக' நியாயப்படுத்தினார். 'நெருக்கடியிலிருந்து ஒரு வழியைக் கண்டுபிடிக்க சமூகம் சில சுமைகளைத் தாங்க வேண்டும்' என்று அவர் வலியுறுத்தினார். திஸாநாயக்க, புதிய 'ஆணையுடன்' ஒரு புதிய அரசாங்கத்தால் மட்டுமே தேவையான சிக்கன திட்டத்தை செயல்படுத்த முடியும் என்று வலியுறுத்தினார்.

ஜே.வி.பி. தலைவர் அனுரகுமார திஸாநாயக்க [Photo: Facebook]

ஐ.ம.ச. அல்லது ஜே.வி.பி. ஆல் அமைக்கப்படும் எந்தவொரு அரசாங்கமும், பாரியளவு அரச துறை வேலை வெட்டுதல், உழைக்கும் மக்கள் மீது புதிய வரிகளை சுமத்துதல், தனியார்மயமாக்கலை விரிவாக்குகதல் மற்றும் அத்தியாவசிய சமூக சேவைகளை வெட்டுதல் உட்பட சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளை அமுல்படுத்துவதிலும் எந்தவொரு வெகுஜன எதிர்ப்பையும் நசுக்குவதிலும் விக்கிரமசிங்கவைப் போலவே ஈவிரக்கமற்றதாக இருக்கும்.

தொழிற்சங்கங்கள் மற்றும் முன்னிலை சோசலிசக் கட்சி (FSP) உட்பட போலி-இடது குழுக்களால், இராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் இயக்கம் காட்டிக் கொடுக்கப்பட்டதன் மூலம், ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. இன் புத்துயிர்ப்பு அரசியல் ரீதியாக எளிதாக்கப்பட்டுள்ளது. பொது வேலைநிறுத்தங்களில் மில்லியன் கணக்கான தொழிலாளர்களின் சக்திவாய்ந்த தலையீடு இருந்தபோதிலும், தொழிற்சங்கங்கள் அவற்றை ஒரு நாள் நடவடிக்கைகளுக்கு மட்டுப்படுத்தின. அதே நேரம், தொழிற்சங்கங்களும் போலி-இடதுகளும் முதலாளித்துவ ஆட்சியை ஸ்திரப்படுத்த ஒரு இடைக்கால அரசாங்கத்திற்காக எதிர்க்கட்சியான ஐ.ம.ச. மற்றும் ஜே.வி.பி. விடுத்துள்ள அழைப்புகளுக்கு ஆதரவளித்தன.

தொழிற்சங்கங்கள், தொழிலாள வர்க்கத்தை மட்டுப்படுத்தி, கலைத்து விடுவதன் மூலம், விக்கிரமசிங்க பதவியேற்பதற்கும், இராஜபக்ஷக்கள் தங்களதும் தங்களது ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. இனதும் அரசியல் செல்வாக்கை மீண்டும் கட்டியெழுப்ப முயற்சிப்பதற்கும் வழி வகுத்தது. செப்டெம்பர் 3 அன்று கோட்டாபய இராஜபக்ஷ எதிர்ப்பின்றி இலங்கைக்குத் திரும்பியமை, அரசியல் அலைகள் மாறிக்கொண்டிருப்பதற்கான தெளிவான அறிகுறியாகும்.

ஏப்ரல் தொடக்கத்தில் காலி முகத்திடலில் ஆக்கிரமிப்பைத் தொடங்கிய பல்வேறு மத்தியதர வர்க்கக் குழுக்கள் மற்றும் தலைவர்கள் என சுயமாக கூறிக்கொண்டவர்களும், கோட்டாபய இராஜபக்ஷவை வெளியேற்றுவதற்கான அழைப்புக்கு அணிதிரண்ட பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் மன உறுதியைக் குலைப்பதில் மிகவும் ஒத்த பாத்திரத்தை வகித்தனர். அவர்கள் தங்கள் ஆதரவை எதிர்க் கட்சிகளுக்குப் பின்னால் திருப்பிவிட்டதோடு ஒரு இடைக்கால அரசாங்கத்திற்கும் அழைப்பு விடுத்தனர். இந்த திட்டத்தை பெரும் வணிகங்களும் ஆதரித்தன.

இந்த மத்தியதர வர்க்க கூறுகளையும் அவர்களின் முதலாளித்துவ சார்பு திட்ட நிரலையும் ஆதரித்த போலி-இடது முன்னிலை சோசலிசக் கட்சி, காலி முகத்திடல் ஆக்கிரமிப்பை அரசியல் போராட்டத்தின் மையமாக அறிவித்தது. பெருகிவரும் அரசு அடக்குமுறையை எதிர்கொண்டு, ஆக்கிரமிப்பிற்குப் பின்னால் இருந்த குழுக்களும் தலைவர்களும் துண்டாடப்பட்டு சிதறுண்டிருந்தனர் -சிலர் அரசாங்கத்தை ஆதரிக்கின்றனர், மற்றவர்கள் எதிர்க் கட்சிகளை ஆதரித்து வருகின்றனர், மேலும் சிலர் முன்னிலை சோசலிசக் கட்சியின் போலிப் பிரச்சாரத்தில் இணைந்து வருகின்றனர்.

அரசாங்கத்திற்கு எதிராக ஒரு 'வெகுஜன இயக்கத்தை' கட்டியெழுப்பும் பெயரில், முன்னிலை சோசலிசக் கட்சி அதன் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தை (அ.ப.மா.ஓ) தொழிற்சங்கங்கள் மற்றும் எதிர்க்கட்சிகளுடன் ஒரு சந்தர்ப்பவாத அரசியல் முன்னணியை உருவாக்க பயன்படுத்திக்கொண்டு. விக்கிரமசிங்க ஆட்சியின் அடக்குமுறையை நிறுத்த அழுத்தம் கொடுக்க முடியும் என்ற போலி நம்பிக்கையை ஊக்குவித்து வருகின்றது.

விக்கிரமசிங்கவும் இராஜபக்ஷவும் கடந்த காலத்தில் கடும் போட்டியாளர்களாக இருந்த போது, இலங்கை முதலாளித்துவத்தை பாதுகாப்பதில் ஐக்கியப்பட்டுள்ளனர். விக்கிரமசிங்க நிறைவேற்று ஜனாதிபதியாக எதேச்சதிகார அதிகாரங்களை அனுபவித்து வருகின்ற போதிலும், அவர், ஏறத்தாழ எல்லா அமைச்சரவை அமைச்சர்களையும் கொண்டுள்ள அதே போல் பாராளுமன்ற பெரும்பான்மையை வழங்குகின்ற ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. இல் தங்கியிருக்கின்றார்.

அதேபோன்று, இராஜபக்ஷக்கள், ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.வுக்கு ஒரு மெல்லிய சட்டப்பூர்வ போர்வையைக் கொடுத்து, புத்துயிர் பெற உதவுவதற்காக, விக்கிரமசிங்கவை நம்பியிருக்கிறார்கள். நாவலப்பிட்டி கூட்டத்தில், மஹிந்த இராஜபக்ஷவின் புதல்வரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் இராஜபக்ஷ, “காலிமுகத்திடல் போராட்டத்தை துடைத்துக் கட்டியமைக்காக” விக்கிரமசிங்கவுக்கு நன்றி தெரிவித்தார்.

எவ்வாறாயினும், ஆழமடைந்து வரும் சமூக நெருக்கடி, ஏற்கனவே தொழிலாள வர்க்கத்தை போராட்டத்திற்கு உந்தித் தள்ளுகிறது. அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகள் வேலைகளை அழித்து வருவதுடன் 75 சதவீதத்தை எட்டியுள்ள பணவீக்கத்திற்கு பங்களித்துள்ளதுடன், உணவுப் பற்றாக்குறை 102 சதவீதமாக உள்ளது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உட்பட சில பொதுத்துறை ஊழியர்கள், அடக்குமுறை அத்தியாவசிய பொதுச் சேவை உத்தரவுகளின் கீழ் அரசாங்கம் விடுத்துள்ள அச்சுறுத்தல்களை மீறி ஏற்கனவே வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆளும் வர்க்கம் ஒரு புதிய சுற்று வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்புகள் வெடிக்கும் என்பதையிட்டு தெளிவாக அஞ்சுகிறது. அக்டோபர் 17 அன்று ஐலண்ட் பத்திரிகையின் தலையங்கம் பின்வருமாறு அறிவித்தது: 'அரசாங்கம் மக்களின் பொறுமையைச் சோதிப்பதாகவும், முந்தை போராட்டங்கள் அற்பமானாக தோன்றுமளவு பிரமாண்ட வெகுஜன கிளர்ச்சிகளின் அடுத்த அலைக்கான சூழ்நிலையை உருவாக்குவதாகவும் எச்சரிக்க வேண்டியுள்ளது.'

தொழிலாள வர்க்கத்தின் முக்கியமான பிரச்சினை, போராட்டத்தின் முதல் கட்டத்தின் அத்தியாவசிய அரசியல் படிப்பினைகளைக் கற்றுக்கொள்வதுதான்: தொழிலாளர்கள் தொழிற்சங்கங்கள் மற்றும் எதிர்க் கட்சிகளுடன் கட்டுண்டிருப்பதாலேயே பேரழிவை எதிர்கொள்கின்றனர். சோசலிச சமத்துவக் கட்சி மட்டும் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற உழைக்கும் மக்களை ஒவ்வொரு வேலைத் தளத்திலும், தொழிற்சாலையிலும், சுற்றுப்புறத்திலும் மற்றும் கிராமப்புறங்களிலும், தங்கள் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளுக்காக போராடக் கூடிய சுயாதீன நடவடிக்கை குழுக்களை நிறுவுமாறு அழைப்பு விடுத்துள்ளது.

சர்வதேச நாணய நிதியம் மற்றும் சர்வதேச நிதி மூலதனத்தின் கட்டளைகளை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை எனக் கூறும் ஏனைய அரசியல் கட்சிகளின் கூற்றுகளுக்கு எதிராக, சோசலிச சமத்துவக் கட்சி, உழைக்கும் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான தொடர்ச்சியான இடைமறுவுக் கோரிக்கைகளை முன்வைத்தது:

* உழைக்கும் மக்களின் வாழ்க்கைக்கு இன்றியமையாத அனைத்து அத்தியாவசிய பொருட்கள் மற்றும் ஏனைய வளங்களின் உற்பத்தி மற்றும் விநியோகத்தை தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர வேண்டும்.

* வங்கிகள், பெருநிறுவனங்கள், பெருந்தோட்டங்கள் மற்றும் ஏனைய பிரதான பொருளாதார மையங்களை தேசியமயமாக்க வேண்டும்.

* அனைத்து வெளிநாட்டுக் கடனையும் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன கோரிக்கைகளையும் நிராகரிக்க வேண்டும்.

* பில்லியனர்கள் மற்றும் பெரிய நிறுவனங்களின் பிரமாண்ட செல்வத்தை கைப்பற்ற வேண்டும்.

* ஏழை மற்றும் சிறு விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்களின் கடன்களை இரத்து செய்யுங்கள். விவசாயிகளுக்கு உரம் உட்பட அனைத்து விலை மானியங்களையும் மீண்டும் வழங்க வேண்டும்.

* கண்ணியமான மற்றும் பாதுகாப்பான வேலை நிலைமைகளுடன் அனைவருக்கும் வேலை உத்தரவாதமும். வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப ஊதியமும் வேண்டும்.

ஒரு இடைக்கால முதலாளித்துவ அரசாங்கத்திற்கு எதிராக, சோசலிச சமத்துவக் கட்சி, இந்தக் கோரிக்கைகளுக்கான அரசியல் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு, நாடு முழுவதிலும் உள்ள நடவடிக்கைக் குழுக்களின் வலையமைப்பின் பிரதிநிதிகளை அடிப்படையாகக் கொண்ட, ஜனநாயகம் மற்றும் சோசலிசத்துக்கான தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற வெகுஜனங்களின் மாநாட்டைக் கூட்டுவதற்கு அழைப்பு விடுத்துள்ளது. விக்கிரமசிங்க ஆட்சியால் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் முன் வைக்கப்பட்டுள்ள ஆபத்துக்களுக்கு எதிராகப் போராட, உழைக்கும் மக்கள் தங்கள் வர்க்க நலன்களை வலியுறுத்துவதற்கு தேவையான அதிகார மையமாக இந்த மாநாட்டைக் கட்டியெழுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.

பிரதான முதலாளித்துவ மையங்களிலும் பின்தங்கிய நாடுகளிலும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சர்வதேச தொழிலாள வர்க்கத்துடன் ஐக்கியப்படுவதன் மூலமே இலங்கையில் உள்ள தொழிலாளர்கள் இந்தப் போராட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும். தங்களுடைய சொந்த நடவடிக்கைக் குழுக்களை அமைப்பதில், அந்த சர்வதேச ஒற்றுமையை நிறுவுவதற்கான அடிப்படையாக சாமானிய தொழிலாளர் நடவடிக்கை குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியை கட்டியெழுப்பும் போராட்டத்தில் சேருமாறு தொழிலாளர்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

ஜனநாயகம் மற்றும் சோசலிசத்துக்கான தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற வெகுஜனங்களின் மாநாட்டை கட்டியெழுப்புவதற்கான போராட்டம், தெற்காசியாவிலும் சர்வதேச அளவிலும் சோசலிசத்திற்கான பரந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக, இலாப முறையை தூக்கி எறிந்து, சோசலிச கொள்கைகளுக்கு அர்ப்பணிப்பு கொண்ட தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் அரசாங்கத்தை ஸ்தாபிக்க வழி வகுக்கும்.

Loading