அரச ஊழியர்களை "வேலைசெய்" அல்லது "வெளியேறு" என்று இலங்கை ஜனாதிபதி கோருகிறார்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

ஆகஸ்ட் 21 அன்று அனுராதபுரத்தில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திச் சபைக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தமது கடமைகளைச் சரியாகச் செய்யாத அரச ஊழியர்கள் உடனடியாக சேவையிலிருந்து வெளியேற வேண்டும் என்று அறிவித்தார்.

அரசாங்க ஊழியர்களை இலக்கு வைத்து பேசிய விக்கிரமசிங்க, “நீங்கள் வேலை செய்ய விரும்பினால், வேலை செய்யுங்கள். இல்லாவிட்டால் வீட்டுக்குப் போங்கள். ஒன்றும் செய்யாமல் இருப்பதற்கு பணம் கொடுக்க நாங்கள் தயாராக இல்லை…” என அச்சுறுத்தும் பாணியில் அறிவித்தார்.

இந்த ஆண்டு இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 8 சதவீதத்தால் சுருங்கும் என்று அவர் எச்சரித்தார். ஆனால் அதே சமயம், இந்த மாபெரும் நெருக்கடியை விவசாய வளர்ச்சி மற்றும் சுற்றுலா மூலம் ஈடுகட்டுவதாக ஜனாதிபதி மோசடியாக கூறினார்.

உள்ளூர் நிகழ்வொன்றில் விக்கிரமசிங்க இந்த அச்சுறுத்தும் கருத்துக்களை வெளியிட்ட அதேவேளை, புதிய பிணை எடுப்பு கடனுக்கான முன்நிபந்தனையாக சர்வதேச நாணய நிதியம் (IMF) முன்வைக்கும் ஈவிரக்கமற்ற கோரிக்கைகளை அவை எதிரொலிக்கின்றன.

இலங்கை அரசாங்கம் 'கடன் நிலைத்தன்மை' நடவடிக்கைகளை திணிக்கும் வரை அத்தகைய கடன் எதுவும் கிடைக்காது என்று சர்வதேச நாணய நிதியம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. விக்கிரமசிங்க கொடூரமான சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளை அமுல்படுத்துவதில் நீண்டகாலமாக பேர் போனவர் ஆவார்.

மேலதிக கலந்துரையாடல்களுக்காக சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சுவார்த்தைக் குழு ஒன்று புதன்கிழமை கொழும்பை வந்தடைந்தது. இந்த நிதி நிறுவனம் இலட்சக்கணக்கான அரச வேலைகளை அழிக்கும் நடவடிக்கைகள், அரசாங்கத்திற்குச் சொந்தமான நிறுவனங்களைத் தனியார்மயமாக்குதல், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களையும் பாதிக்கும் வகையில் வரி விதிப்பை விரிவுபடுத்துதல் மற்றும் பொதுக் கல்வி, சுகாதாரம் மற்றும் பிற முக்கிய சமூக சேவைகளுக்கான மானியங்கள் மற்றும் அரசின் செலவினங்களைக் குறைத்தலையும் வலியுறுத்தியுள்ளது.

அரச தொழிலாளர்களை சோம்பேறிகள் என்றும், பொதுச் செலவில் தாங்க முடியாத வீணடிப்பு என்றும் விக்கிரமசிங்க கண்டனம் செய்வது புதிதல்ல. அவை சர்வதேச நாணய நிதியத்தால் கோரப்படும் பாரிய வேலை அழிப்பு மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிப்பதை நியாயப்படுத்த முன்னெடுக்கப்பட்டு வரும் அரசாங்க பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும்.

ஜூன் மாதம், பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்னே இலங்கை அரசாங்கத்தால் திட்டமிடப்பட்டுள்ள 'சீர்திருத்த வேலைத்திட்டம்' பற்றிய ஒரு குறிப்பை வெளிப்படுத்தினார்.

“தற்போதைய பொதுத்துறையுடன் நாம் முன்னேற எந்த வழியும் இல்லை. பொருத்தமான அளவு 500,000 அல்லது அதிகபட்சம் 800,000 ஆகும்,” என்று அவர் அறிவித்தார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், கொழும்பு கிட்டத்தட்ட ஒரு மில்லியன் அரச துறை வேலைகளை பறிக்கப் பார்க்கிறது.

மாயாதுன்னே அரச ஊழியர்களுக்கு சம்பளமில்லாத விடுமுறை எடுக்கவும் வெளிநாட்டு வேலை தேடவும் அனுமதிக்கும் சுற்றறிக்கைகளை வெளியிட்டார். இது ஆரம்பத்தில் வெளிநாட்டில் வேலை தேடுவதற்காக அரச துறை ஊழியர்களின் அவசரத்தை தூண்டிவிட்டாலும், பதவிகள் அழிக்கப்படவுள்ள இலங்கை அரச ஊழியர்களின் பெரும் எண்ணிக்கையை உலகச் சந்தை உள்வாங்காது.

பாரிய எண்ணிக்கையிலான மக்களை வறுமைக்குள்ளும் பட்டினிக்குள்ளும் தள்ளும் ஏனைய வேலை அழிப்பு மற்றும் வரவு-செலவுத் திட்ட வெட்டுத் திட்டங்கள் தற்போது அமைச்சரவையால் விவாதிக்கப்படுகின்றன.

செவ்வாயன்று, அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் ஊடகங்களிடம் பேசும் போது, அரசாங்கம் இந்த ஆண்டு அதன் வரவு-செலவுப் பற்றாக்குறையை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.8 சதவீதமாக குறைக்க எதிர்பார்ப்பதுடன், 2023 இல் இதை 6.8 சதவீதமாகக் குறைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

இது வரி அதிகரிப்பு மற்றும் கூடுதலான செலவின வெட்டுக்களுக்கு வழி வகுப்பதோடு, அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களை 'மறுசீரமைப்பு' செய்தல், சில 'நஷ்டத்தில்' இயங்கும் நிறுவனங்களை மூடிவிடுதல் மற்றும் தன்னார்வ ஓய்வூதியத் திட்டம் என்று அழைக்கப்படுவதை ஏற்றுக்கொள்வதையும் உள்ளடக்கியதாக இருக்கும். இந்த கொடூர நடவடிக்கைகளின் முதல் படி, ஆயிரக்கணக்கானோர் வேலை செய்யும் அரசு நடத்தும் ஊடகங்களில் செயல்படுத்தப்படும்.

தற்போது 26,000 ஊழியர்களைக் கொண்ட இலங்கை மின்சார சபைக்கு (இ.மி.ச.) 5,000 ஊழியர்கள் மட்டுமே தேவைப்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர அண்மையில் அறிவித்தார். இ.மி.ச. மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தை (இ.பெ.கூ.) 'மறுசீரமைப்பதற்கான' நடவடிக்கைகளை முன்மொழிவதற்கு அவர் ஏற்கனவே ஒரு குழுவை நியமித்துள்ளார். திங்களன்று, ஆயிரக்கணக்கான இ.பெ.கூ. ஊழியர்கள் இந்த நகர்வுகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர். ஏறக்குறைய 4,600 பேர் பணிபுரியும் ஸ்ரீலங்கா டெலிகொம் மற்றும் சுமார் 2,700 பேரைக் கொண்ட ஸ்ரீலங்கா இன்சூரன்ஸ் ஆகியவையும் தனியார்மயமாக்கலுக்கு இலக்காகின்றன.

பொது சுகாதாரம் மற்றும் கல்வி மற்றும் ஏனை முக்கிய சமூக சேவைகளில் ஊழியர்கள் பற்றாக்குறை அதிகமாக இருந்தாலும், அரசு துறைக்கு புதிதாக ஆட்களை சேர்க்கப் போவதில்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

அத்தியாவசியப் பொருட்களின் விலை பாரியளவில் அதிகரித்துள்ள போதிலும், அனைத்து அரச தொழிலாளர்களின் சம்பளங்களும் முடக்கப்பட்டுள்ளன. கடந்த மாதம், உத்தியோகபூர்வ பணவீக்க விகிதம் 60 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்தது, உணவுப் பற்றாக்குறை 90 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்தது.

சுகாதார ஊழியர்களின் மேலதிக நேர வேலை குறைக்கப்பட்டு, வேலைச்சுமை அதிகரிக்கப்பட்டு, நோயாளிகளின் ஆரோக்கியத்திற்கு ஆபத்து ஏற்படுத்தப்பட்டுள்ளது. புதன்கிழமையன்று, அரசாங்க அச்சக ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு, தங்களின் மேலதிக நேர ஊதியம் மற்றும் கொடுப்பனவுகளை வெட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இலங்கை அரசாங்க உத்தியோகத்தர்களின் தொழிற்சங்க சம்மேளனம் (SLGOTUA) மற்றும் இலங்கை அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை சங்கமும் (SLDOSU) அரச ஊழியர்கள் மீதான விக்ரமசிங்கவின் அவதூறான தாக்குதல்களுக்கு சவால் விடவில்லை.

SLGOTUA தலைவர் பிரதீப் பஸ்நாயக்க, 'அரச ஊழியர்கள் அதிகபட்ச செயல்திறனுடன் பணியாற்றுவதற்கு கட்டமைப்பு தயாராக இல்லை' என்றார். SLDOSU பிரதிநிதி ஒருவர் விக்கிரமசிங்கவின் கருத்துக்களை ஆமோதித்து, “மற்ற எல்லாத் துறைகளிலும் இருப்பதைப் போலவே, பொதுச் சேவையிலும் தங்கள் கடமைகளைச் சரியாகச் செய்யாத ஒரு சிலரே இருக்கலாம். அதை நாங்கள் மறுக்கவில்லை” என்றார்.

கடந்த நான்கு மாதங்களாக, மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள், தாங்க முடியாத வாழ்க்கைச் செலவை எதிர்த்தும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவையும் அவரது அரசாங்கத்தையும் பதவி விலகக் கோரியும் பெரும் போராட்டங்களிலும் வேலைநிறுத்தங்களிலும் ஈடுபட்டுள்ளனர்.

இராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறி தனது பதவியை இராஜினாமா செய்ய நிர்ப்பந்திக்கப்பட்ட அதேவேளை, முன்னிலை சோசலிசக் கட்சி (மு.சோ.க.) போன்ற போலி இடது குழுக்களின் ஆதரவுடன், இந்த முன்னெப்போதும் இடம்பெற்றிராத இந்த இயக்கத்தை தொழிற்சங்கங்கள் காட்டிக்கொடுத்து, அதை எதிர்க்கட்சிகளான ஐக்கிய மக்கள் சக்தி (ஐ.ம.ச.) மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் பின்னால் கட்டிப்போட்டன

மக்கள் எதிர்கொள்ளும் வாழ்வா சாவா சமூகப் பிரச்சனைகளில் ஒன்று கூட தீர்க்கப்படாத போதிலும், புதிய இலங்கை ஜனாதிபதிக்கு சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது இன்னும் அடக்குமுறை தாக்குதல்களை கட்டவிழ்த்து விடுவதற்கு நேரம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த வாரம் விக்கிரமசிங்க மூன்று மாணவர் தலைவர்களை பயங்கரவாத தடைச் சட்டங்களின் கீழ் தடுத்து வைக்க நடவடிக்கை எடுத்தார். இது தனது சிக்கன திட்டத்திற்கு எதிரான அனைத்து எதிர்ப்பையும் இரக்கமின்றி நசுக்க தனது ஆட்சியின் தயார்நிலையை எடுத்துக் காட்டுவதாகும்.

தொழிற்சங்கங்கள் மற்றும் போலி-இடதுகளுடன் ஐ.ம.ச., ஜே.வி.பி. மற்றும் தமிழ் கூட்டமைப்பு உட்பட அனைத்து எதிர்க் கட்சிகளும் சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைகளுடன் எந்த அடிப்படை வேறுபாடுகளையும் கொண்டிருக்கவில்லை.

தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் அனைத்து அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளின் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் தொழிலாள வர்க்க கட்டுப்பாட்டை நிறுவுவதன் மூலம் மட்டுமே தங்கள் வேலைகள், ஊதியங்கள், வாழ்க்கை நிலைமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க முடியும். இதற்கு பில்லியனர்கள் மற்றும் பெருநிறுவனங்களின் மகத்தான செல்வத்தை கைப்பற்றுவது, வங்கிகள், பெரிய நிறுவனங்கள் மற்றும் பெருந்தோட்டங்களை ஜனநாயக பொது கட்டுப்பாட்டின் கீழ் தேசியமயமாக்குவது மற்றும் அனைத்து வெளிநாட்டு கடன்களையும் நிராகரிப்பதும் அவசியமாகும்.

இந்த வேலைத்திட்டத்திற்காக போராடுவதற்கு, தொழிலாள வர்க்கம் கிராமப்புற ஏழைகளுடன் கூட்டணியில் நின்று, தனது சுயாதீனமான அரசியல் பலத்தை திரட்ட வேண்டும்.

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) வேலைத்தளங்கள், தோட்டங்கள் மற்றும் பிரதான பொருளாதார மையங்களிலும், கிராமப்புறங்களிலும், தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளித்துவக் கட்சிகளைச் சாராமல், தங்கள் சொந்த நடவடிக்கைக் குழுக்களை உருவாக்குமாறு தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளை வலியுறுத்துகிறது.

சோசலிச சமத்துவக் கட்சி இந்த நடவடிக்கைக் குழுக்களின் பிரதிநிதிகளைக் கொண்ட தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற வெகுஜனங்களின் ஜனநாயக மற்றும் சோசலிச மாநாட்டைக் கூட்டுவதற்கு அழைப்பு விடுக்கிறது. அனைத்துக் கட்சி முதலாளித்துவ ஆட்சியை ஸ்தாபிப்பதற்கான இலங்கையின் ஆளும் உயரடுக்கின் அவநம்பிக்கையான முயற்சிகளுக்கு எதிராக, இந்த மாநாடு ஒரு சோசலிச மற்றும் சர்வதேச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்கான புரட்சிகர போராட்டத்திற்கான அடித்தளத்தை அமைக்கும்.

Loading