இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
சனிக்கிழமையன்று கொழும்பில் சுமார் ஒரு மில்லியன் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகள் கலந்து கொண்ட பாரிய வெகுஜன எதிர்ப்புக்கள் ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவை அடுத்த புதன் கிழமை பதவி விலகுவதாக அறிவிக்க நிர்ப்பந்தித்தது. முதலில் அவ்வாறு செய்ய மறுத்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் சனிக்கிழமை மாலை, 'சர்வகட்சி அரசாங்கம்' அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து தான் இராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
ஜனாதிபதி இராஜபக்ஷ மற்றும் அவரது அரசாங்கத்தை இராஜினாமா செய்யக் கோரி கொழும்பு காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பமாகி மூன்று மாதங்கள் கடந்துள்ள நிலையில், சனிக்கிழமை நாடு முழுவதிலும் இருந்து மக்கள் கொழும்புக்கு பயணித்த ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். அவ்வாறு செய்வதன் மூலம், சனிக்கிழமையன்று வெகுஜன ஆர்ப்பாட்டங்களில் இணைந்தவர்கள் ஊரடங்கு உத்தரவையும் பொலிஸ் தாக்குதல்களையும் மீறினர்.
மிகப்பெரிய எதிர்ப்பு இலங்கையில் பொருளாதார, அரசியல் மற்றும் சமூக நெருக்கடியில் ஒரு திருப்புமுனையை குறிப்பதுடன், இதுவே கோவிட்-19 தொற்றுநோயால் தீவிரமடைந்து உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ பினாமி போரினால் உக்கிரமடைந்துள்ள முதலாளித்துவத்தின் உலகளாவிய நெருக்கடியின் கூர்மையான வெளிப்பாடாகும். .
இராஜபக்ஷ மற்றும் விக்கிரமசிங்கவின் கட்டாய இராஜினாமா, அரசாங்கத்திற்கு எதிரான மூன்று மாத கால மக்கள் எழுச்சியில் முக்கிய பங்கைக் கொண்டிருந்த தொழிலாள வர்க்கத்தின் மகத்தான சமூக சக்தியை எடுத்துக்காட்டுகிறது. எவ்வாறாயினும், அவர்களுக்குப் பதிலாக அனைத்துக் கட்சி அரசாங்கம் ஒன்றை பதவிக்கு கொண்டு வருவது, தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற உழைப்பாளிகள் எதிர்கொள்ளும் பிரதான பிரச்சினைகள் எதையும் தீர்க்காது. எரிபொருள், உணவு, மருந்துகள் மற்றும் சமையல் எரிவாயு உட்பட அத்தியாவசியப் பொருட்களின் கடுமையான தட்டுப்பாடு மற்றும் விண்ணைத் தொடும் விலைவாசி அல்லது பல மணிநேர தினசரி மின்வெட்டு ஆகியவற்றால் ஏற்படும் தாங்க முடியாத வாழ்க்கை நிலைமைகளை முடிவுக்கு கொண்டுவர அது எதுவும் செய்யாது.
இராஜபக்ஷவும் விக்கிரமசிங்கவும் போகலாம் என்றாலும் அரசியல் மற்றும் பொருளாதார அதிகாரம் முதலாளித்துவத்தின் கைகளிலேயே இருக்கும். முதலாளித்துவ ஆட்சி தொடரும் வரை, உழைக்கும் மக்கள் மற்றும் கிராமப்புற உழைப்பாளிகள் எதிர்கொள்ளும் சமூக நெருக்கடி இன்னும் மோசமாகும். 'இடைக்கால அரசாங்கத்தை' அமைப்பதற்கு மூடிய கதவுகளுக்குப் பின்னால் பேச்சுவார்த்தை நடத்துவதில் மும்முரமாக இருக்கும் ஐக்கிய மக்கள் சக்தி (ஐ.ம.ச.), மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட எதிர்க்கட்சிகள், சர்வதேச நாணய நிதியத்தால் கோரப்பட்டுள்ள கடுமையான சிக்கன நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த உறுதிபூண்டுள்ளன..
மக்கள் எதிர்ப்புக்கள் தொடங்கிய போது, சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) ஏப்ரல் 7 அன்று தொழிலாள வர்க்கத்திற்கான அத்தியாவசிய அரசியல் பிரச்சினைகளை எழுப்பி ஒரு அறிக்கையை வெளியிட்டது: 'சோசலிச சமத்துவக் கட்சி உழைக்கும் மக்களின் கோரிக்கைகளுக்குப் பின்னால் நிற்கிறது: 'கோட்டா செல்ல வேண்டும்! ஆனால் அவருக்கு பதிலாக யார் வருவது? இராஜபக்ஷவை பதவி விலகக் கோருவது போதாது. முதலாளித்துவ வர்க்கத்தின் செல்வம் மற்றும் நலன்களைப் பாதுகாப்பதற்கும், தீவு முழுவதிலும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் சுரண்டல் மற்றும் வறுமையை பேணுவதற்கும் ஒழுங்கமைக்கப்பட்ட ஊழல் மற்றும் பிற்போக்கு ஜனாதிபதி அரசு முறையின் இன்றைய அசிங்கமான முகம் மட்டுமே அவர் ஆவார்.”
என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்குகையில், சோசலிச சமத்துவக் கட்சி கூறியதாவது: “தற்போதைய அரசியல் நெருக்கடியை எதிர்கொள்வதில் ஒரு முக்கிய படியாக, தொழிலாள வர்க்கத்தின் தலைக்க நேரே துப்பாக்கியை நீட்டிக்கொண்டிருக்கின்ற, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை, அதன் எதேச்சதிகார அதிகாரங்களுடன், உடனடியாக ஒழிக்க வேண்டும் என்று சோ.ச.க. கோருகிறது. தொழிலாள வர்க்கம், கிராமப்புற ஏழைகள் மற்றும் இளைஞர்களின் உறுதியான போராட்டத்தின் மூலம் மட்டுமே அடையக்கூடிய இந்த இன்றியமையாத ஜனநாயக அரசியல் மாற்றங்களின் நோக்கம், சோசலிச வழிகளில் பொருளாதாரத்தின் அடிப்படை மறுசீரமைப்பை தொடக்கி வைப்பதே ஆகும் என்று சோசலிச சமத்துவக் கட்சி வலியுறுத்துகிறது.'
தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற மக்களின் வர்க்க நலன்கள், எந்த இடைக்கால அரசாங்கத்தாலும் இரக்கமின்றி செயல்படுத்தப்படும் சர்வதேச நாணய நிதிய சிக்கன திட்ட நிரலுக்கு நேரடியாக எதிரானவை. ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில், சர்வதேச நாணய நிதியம் அறிவித்ததாவது: 'தற்போதைய சூழ்நிலையில் ஒரு தீர்வு கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம், இது சர்வதேச நாணய நிதிய-ஆதரவு திட்டத்தில் எங்கள் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க அனுமதிக்கும்.'
ஏற்கனவே விதிக்கப்பட்ட கடுமையான நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக, சர்வதேச நாணய நிதியமானது வரிகள் அதிகரிப்பு மற்றும் வரி வலையை விரிவுபடுத்துதலையும் பொதுச் செலவினங்களை மொத்தமாகக் குறைப்பதையும் கோருகின்றது. இது, கல்வி, சுகாதாரம் மற்றும் விலை மானியங்கள் போன்ற அத்தியாவசிய சேவைகளை பெரிதும் பாதிக்ககும். மற்றும் தவிர்க்க முடியாமல் வேலைகள், ஊதியங்கள் மற்றும் அரச துறையின் நிலைமையிலும் கொடூரமான வெட்டுக்களை அமுல்படுத்தும் தனியார்மயமாக்கலையும் அது கோருகிறது.
அமெரிக்க ஏகாதிபத்தியம் இலங்கையில் நடக்கும் நிகழ்வுகளை பதட்டத்துடன் அவதானித்து வருகின்றது, தீவிலான வெகுஜன எழுச்சியானது உலகின் பிற பகுதிகளிலும், குறிப்பாக உழைக்கும் மக்கள் இதேபோன்ற சமூக நெருக்கடியை எதிர்கொள்ளும் இந்தியாவில் இதேபோன்ற எதிர்ப்புக்களை தூண்டக்கூடும் என்பதையிட்டு அது நன்கு விழிப்படைந்திருக்கிறது. அதே நேரத்தில், சீனாவிற்கு எதிரான போருக்குத் தயாராகும் பரந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக, கொழும்பில் தனது நிலையை முன்னேற்றுவதற்கு இந்த நெருக்கடியைப் பயன்படுத்திக்கொள்ள முயல்கிறது.
சனிக்கிழமை ஆர்ப்பாட்டங்களுக்கு முன்னதாக, கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங், அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுத்து, ட்வீட் செய்தார்: “வன்முறை ஒரு பதில் அல்ல. போராட்டம் நடத்தப் போகிறீர்கள் என்றால், அமைதியான முறையில் போராட்டம் நடத்துங்கள். அமைதியான எதிர்ப்பாளர்களுக்கு அனுமதி மற்றும் பாதுகாப்பை வழங்குமாறு இராணுவம் மற்றும் காவல்துறைக்கு நினைவூட்டுகிறேன். குழப்பமும் பலாத்காரமும் பொருளாதாரத்தை சரி செய்யாது அல்லது இலங்கையர்களுக்கு தற்போது தேவையான அரசியல் ஸ்திரத்தன்மையை கொண்டு வராது,” என அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகள், தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற உழைப்பாளர்களின் எதிர்ப்பை தீவிரப்படுத்தும். அவற்றை ஜனநாயக ரீதியாக அமுல்படுத்த முடியாது. இராஜபக்ஷ மற்றும் விக்கிரமசிங்கவின் இராஜினாமாவும் அனைத்துக் கட்சி இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதும், ஆளும் வர்க்கம் நேரத்தை எடுத்துக்கொள்ளும் அவநம்பிக்கையான முயற்சியாகும். அத்தகைய அரசாங்கம், எதிர்ப்பை உடைக்கவும், பிளவுபடுத்தவும் மற்றும் மனச்சோர்வை ஏற்படுத்தவும் முயற்சிக்கும் மற்றும் இராணுவ-பொலிஸ் அடக்குமுறை மற்றும் சர்வாதிகார ஆட்சி வடிவங்களுக்கு வழி வகுக்கும்,
சனிக்கிழமை மாலை, பாதுகாப்புப் படைகளின் பிரதானி மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா, ஒரு விசேட ஊடகவியலாளர் சந்திப்பில், 'நாட்டில் அமைதியைப் பேணுவதற்கு ஆயுதப்படைகள் மற்றும் பொலிஸாருக்குத் தேவையான ஆதரவை மக்கள் வழங்க வேண்டும்' என்று பொது மக்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் கூறினார்.
உழைக்கும் மக்களின் வெகுஜன எழுச்சியால் ஹொஸ்னி முபாரக்கின் பல தசாப்த கால சர்வாதிகார ஆட்சி அகற்றப்பட்ட 2011 இல் நடந்த எகிப்திய புரட்சியின் அனுபவங்களில் இருந்து இலங்கைத் தொழிலாளர்கள் ஒரு கூர்மையான எச்சரிக்கையை பெற வேண்டும். எவ்வாறாயினும், தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான புரட்சிகர தலையீடு, புரட்சிகர சோசலிஸ்டுகள் (RS) போன்ற போலி-இடதுகளின் பாத்திரத்தின் மூலம் தடுக்கப்பட்டதுடன், அந்த அமைப்புகள் வெகுஜன எதிர்ப்பை அரசியல்ரீதியாக முதலாளித்துவ முஸ்லீம் சகோதரத்துவத்திற்கு அடிபணிய வைத்தது.
முஸ்லீம் சகோதரத்துவ அரசாங்கத்தால் அடிப்படையான பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியை தீர்க்க இயலாது. அதன் ஆதரவு சரிந்த நிலையிலும், ஒரு சோசலிச மாற்று இல்லாத நிலையிலும், இராணுவம் நிலைமையை கைப்பற்றியதுடன், ஒரு கொடூரமான ஒடுக்குமுறையை முன்னெடுத்து, முபாரக்கின் முன்னாள் ஜெனரல் அப்தெல் ஃபத்தா அல்-சிசியின் தற்போதைய இராணுவ சர்வாதிகாரத்தை நிறுவியது. இலங்கையைப் போலவே, முதலாளித்துவ ஆட்சியை நிலைநிறுத்துவதற்கான அனைத்து பிற்போக்கு சூழ்ச்சிகளிலும் அமெரிக்கா நெருக்கமாக ஈடுபட்டுள்ளது.
எந்த வடிவமாக இருந்தாலும் சரி, புதிய சர்வகட்சி அரசாங்கத்தின் மீது இலங்கைத் தொழிலாளர்கள் நம்பிக்கை வைக்கக்கூடாது. உழைக்கும் மக்கள் எதிர்கொள்ளும் பயங்கரமான சமூக நிலைமைகளை சரிசெய்வதற்கு அத்தகைய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க முடியும் என்ற மாயையை ஊக்குவிப்பதற்கு முன்னிலை சோசலிசக் கட்சி போன்ற பல்வேறு போலி-இடது அமைப்புகளின் முயற்சிகளையும் அவர்கள் நிராகரிக்க வேண்டும்.
தொழிலாள வர்க்கத்திற்கு மாற்றாக அதன் சொந்த புரட்சிகர சோசலிச வேலைத்திட்டத்திற்காக தொழிலாள வர்க்கம் போராட வேண்டும். அது, சர்வதேச ரீதியிலும் தெற்காசியாவிலும் சோசலிசத்துக்கான பரந்த போராட்டத்தின் பாகமாக, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வர இளைஞர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளை தொழிலாளர்கள் தம்பின்னால் அணிதிரட்டிக்கொள்ள வேண்டும்.
இலங்கையில் அத்தகைய முன்நோக்கை முன்வைப்பது சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே. அந்தப் பாதையில், ஒரு இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்காக ஒரு “அனைத்துக் கட்சி உடன்பாட்டை” ஏற்படுத்திக்கொள்வதற்கான பேச்சுவார்த்தையில் பங்கெடுக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தி விடுத்த அழைப்பை சோசலிச சமத்துவக் கட்சி முழுமையாக நிராகரிக்கின்றது.
ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு எழுதிய பகிரங்க கடிதத்தில், இராஜபக்ஷ-விக்கிரமசிங்க அரசாங்கத்தைப் போலவே “அதற்கு மாற்றாக வரும் எந்தவொரு முதலாளித்துவ அரசாங்கமும் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன திட்டத்தை அமுல்படுத்துவதோடு அந்த தாக்குதல்களுக்கு எதிராக போராட்டத்தில் இணையும் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஏனைய உழைப்பாளிகளை அடக்குவதற்காக அரச இயந்திரத்தின் தற்போதுள்ள அனைத்து ஒடுக்குமுறை கருவிகளையும் பயன்படுத்தும்,” என சோசலிச சமத்துவக் கட்சி எச்சரிக்கின்றது.
சோசலிச சமத்துவக் கட்சி மேலும் கூறியதாவது: “உங்களது அழைப்பை நிராகரித்து, தொழிலாள வர்க்கத்தின் சமூக சக்தியை அணிதிரட்டுவதற்காக ஒரு செயல் திட்டத்தை அபிவிருத்தி செய்வதோடு பிரமாண்டமான சமூக மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு அதன் சொந்த தீர்வை அமுல்படுத்த போராடுகிறது -அதன் கீழ், ஐக்கிய மக்கள் சக்தி போன்ற எதிர்க் கட்சிகள் மற்றும் அரசாங்க கட்சிகளின் சிக்கனத் திட்டத்திற்கு எதிராக, முதலீட்டாளர்களின் இலாபத்துக்கு மாறாக மனித தேவைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்.
ஸ்தாபகக் கட்சிகள் மற்றும் வேலை நிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை காட்டிக்கொடுக்கும் மற்றும் தடுக்கும் துரோக பாத்திரத்தை ஆற்றும் தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக, தங்கள் சொந்த நடவடிக்கை குழுக்களை அமைக்குமாறு தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற உழைப்பாளிகளுக்கு சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுக்கின்றது. நடவடிக்கை குழுக்கள் அவற்றின் அரசியல் நடவடிக்கையை முன்னெடுக்க கூடியவாறான ஒரு தொகை கோரிக்கைகளை நாம் முன்வைக்கின்றோம். அனைத்து வெளிநாட்டு கடன்களையும் நிராகரிக்க வேண்டும், உற்பத்தி மற்றும் விநியோகம் தொழிலாளர்கிளன் ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ் வைக்கப்பட வேண்டும், பில்லியனர்கள் மற்றும் கூட்டுத்தாபனங்களின் செல்வங்களை அபகரி, வறிய விவசாயிகள் மற்றும் சிறு வியாபாரிகளின் கடன்களை இரத்துச் செய்ய வேண்டும், உணவு, எரிபொருள் மற்றும் உரங்களுக்கான விலை மானியங்களை மீண்டும் வழங்க வேண்டும், ஆகியன அந்தக் கோரிக்கைகளில் அடங்கும்.
முதலாளித்துவ அசியல்வாதிகள் மற்றும் அவர்களது போலி இடது அடிவருடிகளதும் அழுகிப்போன சதிவலைகளுக்கு ஒரு அரசியல் மாற்றீடை எதிர்பார்க்கும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை எங்களது கட்சியில் இணையுமாறும் அதை அடுத்துவரும் போராட்டங்களுக்குத் தேவையான புரட்சிகர தலைமைத்துவமாக கட்டியெழுப்புமாறும் கேட்டுக்கொள்கிறோம்.