இலங்கையில் ஜூலை 9 ஆர்ப்பாட்டம்: தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஒரு சோசலிச வேலைத்திட்டம்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இலங்கையில் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற உழைக்கும் மக்கள் எதிர்கொள்ளும் உணவு, எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு போன்ற அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் அவற்றின் விண்ணைத் தொடும் விலைவாசி மற்றும் நீண்ட மணிநேர தினசரி மின்வெட்டு போன்ற, தாங்க முடியாத நிலைமைகளால் தூண்டிவிடப்பட்ட இராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிரான வெகுஜன எழுச்சி, இப்போது ஒரு புதிய கட்டத்தை எட்டியுள்ளது

கண்டியில் 7 ஜூலை 2022 அன்று சுகாதார ஊழியர்கள் நடத்திய ஆர்ப்பாட்ட பேரணி (Photo: WSWS media)

உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு, பாரிய பட்டினி நிலைமைகளுக்கு இட்டுச் செல்வதுடன், எரிபொருள் தீர்ந்துவிட்டதால் இராஜபக்ஷ-விக்கிரமசிங்க அரசாங்கம் நாட்டை கிட்டத்தட்ட முடக்கத்தில் வைத்துள்ளது. பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதுடன் அரசு நிறுவனங்களுக்கு 'அத்தியாவசிய ஊழியர்களை' மட்டுமே வேலைக்கு அழைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எரிபொருள் பற்றாக்குறையால் பொதுப் போக்குவரத்து முடங்கியுள்ளது. இந்த நிலைமைகள் அரசாங்கத்திற்கு எதிரான வெகுஜன கோபத்தை மேலும் கொதிநிலைக்கு கொண்டு வந்துள்ளன.

இத்தருணத்தில், கொழும்பில் பிரதான போராட்டத் தளமான காலி முகத்திடலில் “கோட்டா கோகம” (கோட்டா கிராமத்துக்குப் போ) என்று அழைக்கப்படும் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் சமூக ஊடக ஆர்வலர்கள், ஜூலை 09 அன்று. “பாரிய வெகுஜனப் போராட்டத்தை” அறிவித்துள்ளனர். இது “இலங்கையின் வரலாற்றில் மாபெரும் எழுச்சியாக” இருக்கும் என்று அவர்கள் கூறிக்கொள்கின்றனர். இந்த திகதி காலி முகத்திடலில் போராட்டம் தொடங்கிய மூன்று மாதங்களை குறிக்கிறது.

எவ்வாறாயினும், ஜூலை 05 அன்று எதிர்ப்புத் தலைவர்களால் வெளியிடப்பட்ட 'எதிர்கால போராட்டத்திற்கான செயல் திட்டம்', மக்கள் எதிர்கொள்ளும் எரியும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண எந்த வேலைத் திட்டத்தையும் முன்வைக்கவில்லை, மாறாக, தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற உழைப்பாளிகளை, இந்த நெருக்கடிக்கு மூல காரணமான முதலாளித்துவ ஆட்சிக்கும் முதலாளித்துவ இலாப நோக்கு அமைப்புக்குள்ளும் சிக்கவைக்கும் ஒரு பொறியாகும்.

அவர்களின் வேலைத்திட்டம் ஒரு 'இடைக்கால அரசாங்கம்' ஆகும். அதாவது ஐக்கிய மக்கள் சக்தி (SJB) மற்றும் மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) உள்ளிட்ட பாராளுமன்ற எதிர்க்கட்சிகளால் ஊக்குவிக்கப்பட்ட மற்றும் முன்னிலை சோசலிசக் கட்சி போன்ற போலி இடது குழுக்களால் ஆதரிக்கப்படும் ஒரு மாற்று முதலாளித்துவ அரசாங்கமே தவிர வேறில்லை. எதிர்ப்பு நடவடிக்கைகளின் முன்னணி அமைப்பாளர்களில் ஒருவரான அனுருத்த பண்டார, எகோனொமிநெக்ஸ்ட் ஊடகத்திற்கு கூறியவாறு, எதிர்க் கட்சிகளான ஐக்கிய மக்கள் சக்தி, மற்றும் ஜே.வி.பி. மற்றும் பலகட்சிகள் 'கிட்டத்தட்ட இதற்குள் உள்ளடங்குகின்றன'.

ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சரவை மற்றும் உயர் பதவிகளுக்கு அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ள அனைவரும் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகள் இந்த செயல்திட்டத்தின் முக்கிய நிலைப்பாடுகளில் அடங்கும். அவர்களுக்கு மாற்றாக 'இடைக்கால அரசாங்கம்' இருக்கும். இந்த 'இடைக்கால அரசாங்கத்தை' யார் உருவாக்குவார்கள் என்பது குறித்து எந்த அறிகுறியும் இல்லை. எவ்வாறாயினும், எதிர்க்கட்சிகளே முன்மொழிந்ததன்படி, இந்த இடைக்கால அரசாங்கத்தில் அனைத்து பாராளுமன்ற அரசியல் கட்சிகளும் சேர்க்கப்பட வேண்டும் என்பது குறிபிடத்தக்கது.

இந்த 'இடைக்கால ஆட்சி' என்பது, 'மக்கள் போராட்டத்தின் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நோக்கங்கள் மற்றும் அபிலாஷைகளுக்கு' துணைபுரியும் எனக் கூறப்படுகின்றது. எரிபொருள், உணவு போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தைப் பேணுவதை அவர்கள் அந்த 'இலக்குகள் மற்றும் அபிலாஷைகளின்' நீண்ட பட்டியலில் சேர்த்திருந்தாலும், அவற்றை எவ்வாறு வழங்குவது என்பது குறித்து எந்த உறுதியான திட்டத்தையும் முன்வைக்கவில்லை. அவ்வாறு செய்ய அழுத்தம் கொடுக்கப்பட்டால், 'இடைக்கால அரசாங்கம்' அவர்களுக்கு அவற்றை வழங்கும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

'மக்கள் பேரவை' ஒன்றை நிறுவ முன்மொழியப்பட்டுள்ளது. அதில் 'மக்கள் போராட்டத்தின்' பிரதிநிதிகளால், 'இடைக்கால அரசாங்கத்துடன் திறம்பட ஒருங்கிணைப்பில் ஈடுபடவும் கொடுக்கல் வாங்கல் செய்யவும்' முடியும். எனவே, அந்த 'மக்கள் பேரவையின்' பணி, புதிய அரசாங்கத்தின் மீது அழுத்தத்தை பிரயோகித்து காரியங்களை நிறைவேற்றுவதாக இருக்கும். போலி-இடது முன்னிலை சோசலிசக் கட்சி பரிந்துரைத்த திட்டமும் இதுவே ஆகும். செயல் திட்டமானது, ஒரு வருடத்திற்குள் புதிய அரசியலமைப்பை சர்வஜன வாக்கெடுப்பு மூலம் நிறுவுவதற்கு முன்மொழிகிறது. இதன் கீழ், 'நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிக்கப்படுவதுடன்' 'நியாயமான தேர்தலுக்கு பொருத்தமான செயல்முறை' முன்னெடுக்கப்படும்.

ஒரு மாற்று முதலாளித்துவ அரசாங்கத்தை அமைப்பதற்கான காலி முகத்திடல் போராட்டத் தலைவர்களின் வேலைத்திட்டத்தை எதிர்த்து, சோசலிச சமத்துவக் கட்சி (SEP) தொழிலாள வர்க்கத்திற்கான ஒரு புரட்சிகர சோசலிசத் வேலைத்திட்டத்தை முன்வைக்கின்றது. அதாவது இராஜபக்ஷ அரசாங்கம் மற்றும் முதலாளித்துவ ஆட்சிக்கு எதிராக உழைக்கும் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கான தெளிவான செயல்முறை வேலைத்திட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்ட அழைப்பு விடுக்கிறோம்.

முதலாளித்துவ ஆட்சிக்குள்ளும் முதலாளித்துவ இலாப நோக்கு அமைப்பிற்குள்ளும் வெகுஜனங்களின் எரியும் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடையாது என சோசலிச சமத்துவக் கட்சி வலியுறுத்துகிறது. இவற்றிற்கு தேசியத் தீர்வும் கிடையாது. இந்த அரசாங்கத்தின் மீதோ அல்லது எதிர்கால முதலாளித்துவ அரசாங்கத்தின் மீதோ எவ்வளவு அழுத்தம் கொடுக்கப்பட்டாலும், அது ஆளும் வர்க்கத்தை வெகுஜனங்களின் அடிப்படைத் தேவைகளை வழங்க வைக்காது.

ஜனாதிபதி இராஜபக்ஷவும் அவரது அரசாங்கமும் இராஜினாமா செய்ய வேண்டும் என்ற, போராடும் மக்களின் பிரதான கோரிக்கைக்கு ஆதரவளிக்கும் அதேவேளையில், அதற்குப் பதிலாக மற்றொரு முதலாளித்துவ அரசாங்கத்தால் பிரதியீடு செய்யப்படக்கூடாது, ஆனால் சோசலிசக் கொள்கைகளுக்கு அர்ப்பணிப்புடன் செயல்படும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கமே அமைக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கவேண்டும் என சோசலிச சமத்துவக் கட்சி வலியுறுத்துகிறது.

வெகுஜன எழுச்சியின் ஆரம்பத்திலேயே, ஏப்ரல் 7 அன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் விளக்கப்பட்டது போலவும் அடுத்தடுத்து வெளியிடப்பட்ட அறிக்கைகளில் மீண்டும் வலியுறுத்தியது போலவும், அத்தியாவசிய சேவைகள் சட்டம், பொது பாதுகாப்பு சட்டம், பாதுகாப்புப் படையினருக்கு பொலிஸ் அரச அதிகாரங்களை வழங்கும் பயங்கரவாதத் தடைச் சட்டம் போன்ற அடக்குமுறை சட்டங்களுடன் எதேச்சதிகார நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையையும் உடனடியாக ஒழிக்கப்பட வேண்டும் என சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுக்கிறது. இராஜபக்ஷ கடந்த மாதம் கூட மின்சார மற்றும் சுகாதார ஊழியர்களுக்கு எதிராக அத்தியாவசிய சேவைச் சட்டங்களை அமுல்படுத்தியதோடு, குறிப்பாக எரிபொருளுக்காக பல நாட்களாக வீதிகளில் வரிசையில் நின்று வாடும் தொழிலாளர்களை அடக்குவதற்காக இராணுவத்தை நிலைநிறுத்த தனது அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்தினார்.

இராஜபக்ஷ-விக்கிரமசிங்க ஆட்சியை மாற்றும் முதலாளித்துவ அரசாங்கம் எதுவாக இருந்தாலும், அது சர்வதேச நாணய நிதியம் (IMF) கட்டளையிட்ட அதே கடுமையான சிக்கன நடவடிக்கைகளை அது தொடரும். அது உழைக்கும் மக்களையும் கிராமப்புற உழைப்பாளிகளையும் பொருளாதார நெருக்கடியின் முழுச் சுமையையும் சுமக்க கட்டாயப்படுத்த முற்படும்.

ஐக்கிய மக்கள் சக்தி, ஜே.வி.பி. மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகியவை உட்பட அனைத்து எதிர்க் கட்சிகளும், சர்வதேச நாணய நிதிய கொள்கைகளுக்கு தங்கள் வெளிப்படையான அல்லது மறைமுக ஆதரவை தெரிவித்துள்ளன. எனவே, செயல் திட்டத்தில் முன்மொழியப்பட்ட இடைக்கால ஆட்சி என அழைக்கப்படுவது, தொழிலாள வர்க்கம் மற்றும் கிராமப்புற உழைக்கும் மக்களின் எதிர்ப்பை நசுக்கின்ற கொள்கைகளை கொடூரமாக செயல்படுத்தும் முதலாளித்துவ ஆளும் உயரடுக்கின் ஒரு கருவியாக மாறும்.

செவ்வாய்கிழமை பாராளுமன்றத்தில் பிரதமர் விக்கிரமசிங்க ஆற்றிய உரையில் சர்வதேச நாணய நிதிய வேலைத்திட்டத்தின் கொடூரம் சுட்டிக்காட்டப்பட்டது. சர்வதேச நாணய நிதிய ஆணைகளால் முத்திரையிடப்பட்ட வரவிருக்கும் காலகட்டத்தைக் குறிப்பிடுகையில், அவர் கூறியதாவது: 'இது ஒரு கடினமான மற்றும் கசப்பான பயணமாக இருக்கும்... விடயங்கள் மாறவில்லை என்றால், முழு நாடும் சரிந்துவிடும்.'

'மாற்றங்களில்', அரச துறையை பெருமளவில் குறைத்தல், அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை தனியார்மயமாக்குதல் மற்றும் வணிகமயமாக்குதல் மற்றும் அதிகரித்த வரிகளுடன் வரி வலையமைப்பை விரிவுபடுத்துதல் ஆகியவை இதில் உள்ளடங்கும். இவை, அரச துறையில் தொழில் வெட்டுக்கள், சம்பள வெட்டுக்கள் மற்றும் தொழிலாளர்களின் ஏனைய நலன்களை வெட்டுதல், மின்சார மற்றும் நீர் கட்டண அதிகரிப்பு மற்றும் மானியங்களிலான மேலதிக வெட்டுக்களுக்கும் வழிவகுக்கும்.

தொழிலாள வர்க்கம் இந்த மிருகத்தனமான வர்க்க-போர் கொள்கையையும் அனைத்து இடைக்கால அரசாங்க பொறிகளையும் நிராகரிக்க வேண்டும். இது ஏப்ரல் 28, மே 6 மற்றும் மே 10 ஆகிய தேதிகளில் பொது வேலைநிறுத்தங்களின் போது நிரூபிக்கப்பட்டது போல, தொழிலாளர்கள் தங்கள் தேவைகளை நிவர்த்தி செய்யும் மற்றும் மகத்தான சமூக சக்தியை கட்டவிழ்த்துவிடும் ஒரு வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தங்கள் சொந்த சுயாதீன அரசியல் தலையீட்டை உருவாக்க வேண்டும். இந்த வேலைத்திட்டம் பெருவணிகத்தின் இலாபக் கோரிக்கைகள் அல்ல, தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற உழைக்கும் மக்களின் சமூக தேவைகளை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும்.

இந்த வேலைத்திட்டத்திற்காக போராடுவதற்கான முதல் படி, நாடு முழுவதும் உள்ள தொழிற்சாலைகள், வேலைத்தளங்கள், பெருந்தோட்டங்கள் மற்றும் தொழிலாள வர்க்க சுற்றுப்புறங்களில், தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட சுயாதீன நடவடிக்கைக் குழுக்களை அமைப்பதாகும். இந்த நடவடிக்கைக் குழுக்கள், முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் முதலாளித்துவ ஆளும் ஸ்தாபகத்தின் கைக்கூலிகளாகவும் வக்காலத்து வாங்குபவர்களாகவும் செயல்படும் தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக இருக்க வேண்டும்.

முதலாளித்துவ வர்க்கத்தால் உருவாக்கப்பட்ட சமூக-பொருளாதார நெருக்கடிக்கு தொழிலாள வர்க்க தீர்வை முன்னெடுக்கும் இந்த நடவடிக்கைக் குழுக்களை உருவாக்குவதை சோசலிச சமத்துவக் கட்சி ஊக்குவிப்பதுடன் அரசியல் ரீதியாக உதவவும் தயாராக உள்ளது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினால் (ICFI) ஆரம்பித்து வைக்கப்பட்ட சர்வதேச தொழிலாளர்களின் சாமானிய தொழிலாளர் குழு கூட்டணியை (IWA-RFC) அமைப்பதன் மூலம் தொழிலாள வர்க்கத்தின் போராட்டம் சர்வதேச அளவில் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.

முதலாளித்துவத்தால் உருவாக்கப்பட்ட பாரிய துன்பங்களை முறியடிக்க நடவடிக்கை குழுக்களுக்கான போராட்ட வேலைத்திட்டமாக பின்வரும் கோரிக்கைகளை சோசலிச சமத்துவக் கட்சி முன்னெடுக்கிறது:

  • மக்களின் வாழ்க்கைக்கு முக்கியமான அனைத்து அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் பிற வளங்களின் உற்பத்தி மற்றும் விநியோகம் தொழிலாளர்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கொண்டு வரப்பட வேண்டும்! வங்கிகள், பெருநிறுவனங்கள், பெருந்தோட்டங்கள் மற்றும் பிற முக்கிய பொருளாதார மையங்களை தேசியமயமாக்க வேண்டும்!
  • அனைத்து வெளிநாட்டுக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்! சர்வதேச வங்கியாளர்கள் மற்றும் நிதி நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் சிக்கனக் கோரிக்கைகளை நிராகரி!
  • ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செயல்முறைகளில் ஊழலை ஒழிப்பதற்கும், அத்தியாவசிய பொருட்களின் விநியோகத்தை உறுதி செய்வதற்கும் வெளிநாட்டு வர்த்தகத்தின் மீது அரச ஏகபோகத்தை நிறுவ வேண்டும்!
  • ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நிகழ்ச்சிப்போக்கில் ஊழலை ஒழிப்பதற்கும், அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விநியோகத்தை உறுதி செய்வதற்கும் வெளிநாட்டு வர்த்தகத்தில் அரசு ஏகபோகத்தை நிறுவவேண்டும்!
  • பில்லியனர்கள் மற்றும் பெருநிறுவனங்களின் பிரமாண்ட செல்வத்தை கைப்பற்றுங்கள்!
  • ஏழை மற்றும் குறுநில விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்களின் அனைத்து கடன்களையும் இரத்து செய்! விவசாயிகளுக்கான உர மானியங்கள் உட்பட அனைத்து மானியங்களும் மீண்டும் நிலைநிறுத்தப்பட வேண்டும்!
  • கண்ணியமான மற்றும் பாதுகாப்பான வேலைச்சூழலுடன் அனைவருக்கும் வேலைகள் உத்தரவாதம் செய்யப்பட வேண்டும்! வாழ்க்கைச் செலவு குறியீட்டுக்கு ஏற்ப ஊதியம் வழங்கப்பட வேண்டும்!

மேற்கூறிய கோரிக்கைகளின் அடிப்படையில் நடவடிக்கைக் குழுக்களின் ஊடாக செயற்படும் தொழிலாளர் வர்க்கத்தின் ஒரு சுயாதீன இயக்கம், கிராமப்புற ஏழைகள் மற்றும் ஏனைய ஒடுக்கப்பட்ட மக்களை அதன் பின்னால் அணிதிரட்டும். இது சோசலிசக் கொள்கைகளில் உறுதியாக உள்ள தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை நிறுவுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு வெகுஜன இயக்கத்திற்கான அடித்தளத்தை உருவாக்கும்.

இந்த வேலைத்திட்டத்திற்கான போராட்டம் தெற்காசியாவிலும் சர்வதேச அளவிலும் சோசலிசத்திற்கான பரந்த போராட்டத்தின் ஒரு பகுதியாகும், இது உலகளவில் தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியப்பட்ட இயக்கத்தின் மூலம் நடத்தப்பட வேண்டும்.

இலங்கையின் வெகுஜன எழுச்சியில் தொழிலாள வர்க்கத்தின் சக்தி வாய்ந்த தலையீட்டில், தொழிலாள வர்க்கத்தின் இத்தகைய சுயாதீன இயக்கத்திற்கான சாத்தியம் தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 28, மே 6 மற்றும் மே 10 ஆகிய தேதிகளில் மில்லியன் கணக்கானோர் பங்கேற்ற மாபெரும் பொது வேலைநிறுத்தங்கள் இதில் அடங்கும்.

இலங்கையில் தொழிலாளர்களின் போராட்டம் உலகம் முழுவதும் தொழிலாள வர்க்கத்தின் எழுச்சியின் ஒரு பகுதியாகும். 50,000 பிரிட்டிஷ் இரயில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்ததைத் தொடர்ந்து, சர்வதேச விமானத் தொழில் சமீபத்திய வாரங்களில் வேலைநிறுத்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளது. இலத்தீன் அமெரிக்காவிலிருந்து ஆசியா வரை, ஐரோப்பாவிலிருந்து அமெரிக்கா வரை, கல்வியாளர்கள், வாகனத் தொழிலாளர்கள், போக்குவரத்துத் தொழிலாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் அனைத்து பிரிவுகளும் விலைவாசி உயர்வு, சுரண்டல் மற்றும் சமத்துவமின்மைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஒரு சோசலிசத் திட்டத்திற்கும் முன்னோக்கிற்குமான இந்த போராட்டத்தை முன்னெடுப்பதற்கு தொழிலாளர்களையும் இளைஞர்களையும் சோசலிச சமத்துவக் கட்சியில் இணைந்துகொள்ளுமாறு அழைக்கிறோம்.

Loading