இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
சனிக்கிழமையன்று, ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவையும் அவரது அரசாங்கத்தையும் பதவி விலகக் கோரும் மக்கள் போராட்டத்தின் மூன்றாவது மாதத்தைக் குறிக்கும் முகமாக, இலங்கை முழுவதிலுமிருந்து இலட்சக்கணக்கான தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற உழைப்பாளர்கள் கொழும்பில் குவிந்தனர். அவர்கள் ஜனாதிபதி செயலகம் மற்றும் கொழும்பில் உள்ள ஜனாதிபதி மற்றும் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லங்களையும் முற்றுகையிட்டு தற்போது ஆக்கிரமித்துள்ளனர்.
நாடு முழுவதிலும் உள்ள பிரதான நகரங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களுடன், ஜூலை 9 நடந்த அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்கள் நாட்டின் வரலாற்றில் ஆளும் உயரடுக்கிற்கு எதிரான மிகப்பெரிய போராட்டமாகும்.
ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்தும் அவநம்பிக்கையான முயற்சியில், கொழும்பு நகர எல்லைக்குள் நுழையும் ஒவ்வொரு வீதியிலும் வீதித் தடைகளை ஏற்படுத்த அரசாங்கம் நூற்றுக்கணக்கான இராணுவ படையினரையும் பொலிஸாரையும் நிலைநிறுத்தியது. எவ்வாறாயினும், ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதித்தடைகளை தூக்கிப் போட்டுவிட்டு ஜனாதிபதி செயலகத்திற்கு வெளியே காலி முகத்திடலில் உள்ள பிரதான போராட்ட தளத்திற்கு பேரணியாக சென்றனர்.
கலகத் தடுப்புப் படையினர் வானத்தை நோக்கி வேட்டுக்களைத் தீர்த்தும், கண்ணீர்ப்புகைக் குண்டுகளையும் வீசியும், தண்ணீர் பீரங்கிகளைப் பயன்படுத்தியும் போராட்டக்காரர்களைக் கலைக்க முயன்றனர். ஆனால், அவர்கள் “கோடா வீட்டுக்குப் போ” என்றும் ஏனைய அரசாங்க எதிர்ப்பு சுலோகங்களையும் சத்தமிட்டுக்கொண்டு பிரமாண்டமான எண்ணிக்கையில் துரிதமாக ஒன்றுகூடினர்.
பாரிய ஆர்ப்பாட்டத்தை கண்ட பொலிஸாரும் இராணுவத்தினரும் தண்ணீர் பீரங்கி மற்றும் பஸ்களையும் கைவிட்டு வெளியேறினர். இதேவேளை, அருகில் உள்ள தேசிய வைத்தியசாலையின் தொழிலாளர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு பேரணியாகச் சென்று ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
துப்பாக்கிச்சூடு நடத்திய ஆயுதப்படையினரின் எதிர்ப்பையும் மீறி, போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டனர். கொழும்பின் பிரதான வைத்தியசாலையின் படி, துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் மூன்று பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர், மேலும் 36 பேர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளால் சுவாசிப்பதில் சிரமத்திற்கு ஆளாகி அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கட்டிடங்கள் முற்றுகையிடப்பட்ட போது ஜனாதிபதி இவராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் அந்தந்த வீட்டில் இருக்கவில்லை. பாதுகாப்புப் படையினர் நம்பிக்கையில்லாமல் எண்ணிக்கையில் குறைவாக இருந்த நிலையில், போராட்டக்காரர்கள் சுதந்திரமாக கட்டிடங்கள் வழியாக சுற்றித் திரிந்தனர், மேற்கூரைகளில் ஏறி புகைப்படம் எடுத்துக்கொண்ட அதே வேளை, கோஷங்களையும் எழுப்பினர்.
இராஜபக்ஷ பதவி விலகத் தயாராக இருப்பதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, “இது யாருடைய சக்தி? இது மக்கள் சக்தி” என்ற சுலோகத்தையும் சேர்ந்துக்கொண்டனர். பிரதமர் விக்ரமசிங்க பின்னர் தான் இராஜினாமா செய்வதாக அறிவித்ததோடு, அரசாங்க அமைச்சர்கள் பலர் ஏற்கனவே தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
சனிக்கிழமையன்று மக்கள் கொழும்புக்கு செல்வதைத் தடுக்கும் முயற்சியில், அரசாங்கம் சட்டவிரோதமாக வெள்ளிக்கிழமை இரவு 9 மணி முதல் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தியது. கொழும்பு நகரம் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் உள்ள பெரும்பாலான பொலிஸ் அதிகார பிரதேசங்களை உள்ளடக்கிய பகுதிகளில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு விதிக்கப்பட்டது.
ஊரடங்குச் சட்டத்தின் போது அனைத்து பிரஜைகளும் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்று பொலிஸ் அறிவித்தது. ஊரடங்கு உத்தரவை மீறுவது பொது அமைதி மற்றும் சட்டத்தை மீறுவதாகக் கருதப்பட்டு கடுமையாக தண்டிக்கப்படும் என்று அவர்கள் அறிவித்தனர், மேலும் ஊரடங்குச் சட்டத்தின் கீழ் உள்ள அனைத்து பகுதிகளிலும் பயணம் செய்வது முற்றிலும் தடைசெய்யப்பட்டது.
ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், இளைஞர்கள், குடும்பப்கள் மற்றும் குழந்தைகள் கூட ஊரடங்குச் சட்டத்தை மீறி மத்திய கொழும்பை நோக்கி இரவில் பேரணியாகச் செல்லத் தொடங்கினர். நாடு முழுவதிலும் உள்ள மக்கள் சமூக ஊடகங்களில் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியதோடு, கொழும்புக்கு வரப்போவதாக அறிவித்தனர்.
இந்த வெகுஜன எதிர்ப்பை எதிர்கொள்ளும் நிலையில், இலங்கை சட்டத்தரணிகள் சங்கமும் (BASL) மற்றும் பல மனித உரிமை அமைப்புகளும் ஊரடங்குச் சட்டத்தின் சட்டபூர்வமான தன்மைக்கு சவால் விடுத்ததுடன், அரசாங்கம் தனது முடிவை மாற்றிக்கொள்ளுமாறு வலியுறுத்தின. இந்த எதிர்ப்பை எதிர்கொண்ட அரசாங்கம் சனிக்கிழமை காலை 8 மணிக்கு ஊரடங்குச் சட்டத்தை நீக்கியது.
கடுமையான எரிபொருள் தட்டுப்பாட்டால் போக்குவரத்து பாதிக்கப்பட்டாலும், தலைநகருக்குப் பயணிக்க நாடு முழுவதிலுமிருந்து மக்கள் பேருந்துகள், போக்குவரத்து லொரிகள் மற்றும் றக்குகளை வாடகைக்கு எடுத்தனர். வழியில் உள்ள நகரங்களில் இருந்து கொழும்புக்கு செல்ல விரும்பும் மற்றவர்களுக்கு, போக்குவரத்து இலவசமாக வழங்கப்பட்டது.
ஊரடங்குச் சட்டத்தை காரணம் காட்டி ரயில்வே நிர்வாகம் கொழும்பிற்கான ரயில் பயணம் நிச்சயமற்றதாக இருக்கும் என்று அறிவித்தது. ஆனால் சனிக்கிழமை காலை பிரதான நகரங்களில் உள்ள நிலையங்களில் ஆயிரக்கணக்கானோர் கூடிய பின்னர், ரயில்வே தொழிலாளர்கள் தலைநகருக்கு பயணிகளை அழைத்துச் செல்வதற்காக அனைத்து பிரதான பாதைகளும் இயக்கப்படுவதை உறுதி செய்தனர்.
புகையிரத பயணிகள் அரசாங்கத்திற்கு எதிரான கோசங்களை எழுப்பியவாறும் சுலோக அட்டைகளை ஏந்தியவாறும் கொழும்பு நோக்கி பயணித்தனர். வழியில் ரயில் நிலையங்களில் கூடியிருந்த மற்றவர்கள் ரயில்களில் நிரம்பியிருந்த போராட்டக்காரர்களை உற்சாகப்படுத்தினர்.
ஆரம்பத்தில் இருந்தே, இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மட்டுமே மூன்று மாதங்களுக்கு முன்னர் பாரிய அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்கள் தொடங்கியபோது தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு சுயாதீனமான அரசியல் முன்னோக்கை முன்வைத்த ஒரே அமைப்பாகும். அதன் சர்வதேச சோசலிச வேலைத்திட்டம் அனைத்து இலங்கை முதலாளித்துவ கட்சிகளையும் அவற்றின் போலி இடது மற்றும் தொழிற்சங்க முகவர்களையும் நிராகரிக்கிறது.
சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மாணவர்கள் (IYSSE) அமைப்பின் பிரச்சாரகர்கள் சனிக்கிழமை எதிர்ப்புக்களில் தலையிட்டு, 'இலங்கையில் ஜூலை 9 ஆர்ப்பாட்டம்: தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஒரு சோசலிச வேலைத்திட்டம்' என்ற அதன் அறிக்கையின் ஆயிரக்கணக்கான பிரதிகளை விநியோகித்தனர்.
சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் ஐ.வை.எஸ்.எஸ்.இ. உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஒரு பேரணியை நடத்தினர், பதாகைகளை ஏந்தியபடி, கோஷங்களை எழுப்பினர் மற்றும் ஜனாதிபதி செயலகத்தை நோக்கி வீதியில் பேரணியாகச் சென்றவர்களுடன் பேசினர். “இராஜபக்ஷ அரசாங்கத்தை வீழ்த்து; அடக்குமுறையான தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான சட்டங்களுடன் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையையும் ஒழித்திடு; தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களை கட்டியெழுப்பு; பட்டினி மற்றும் சிக்கன நடவடிக்கைகள் வேண்டாம்; அனைவருக்கும் உணவு, எரிபொருள் மற்றும் மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்; அனைத்து வெளிநாட்டுக் கடன்களையும் நிராகரி,” ஆகிய சுலோகங்கள் அவற்றில் அடங்கும்.
பேரணியில் உரையாற்றிய சோசலிச சமத்துவக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் பிரகீத் அரவிந்த, “ஜனாதிபதி இராஜபக்ஷவும் அவரது அரசாங்கமும் இராஜினாமா செய்ய வேண்டும் என்ற போராடும் மக்களின் பிரதான கோரிக்கையை முழுமையாக ஆதரிக்கும் அதே வேளை, மற்றொரு முதலாளித்துவ அரசாங்கத்தைக் கொண்டு பதிலீடு செய்யக்கூடாது, மாறாக சோசலிச கொள்கைகளுக்கு அர்ப்பணித்துக்கொண்டு ஒரு தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் அரசாங்கத்தைக் கொண்டு பதிலீடு செய்ய வேண்டும் என்று சோசலிச சமத்துவக் கட்சி வலியுறுத்துகிறது,' எனத் தெரிவித்தார்.
தொழிலாளர்கள் எந்த இடைக்கால அரசாங்கத்தையும் ஆதரிக்காமல், தொழிற்சங்கங்களில் இருந்து பிரிந்து, சுதந்திரமான நடவடிக்கைக் குழுக்களை உருவாக்குவதன் மூலம் இந்தப் போராட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு, உலகெங்கிலும் இதே போன்ற தாக்குதல்களை எதிர்த்து போராட்டத்துக்கு வந்துகொண்டிருக்கும் தங்கள் வர்க்க சகோதர, சகோதரிகளுடன் ஒரு ஐக்கிய வேலைத்திட்டத்தில் ஒன்றிணைய வேண்டும், என்று அவர் விளக்கினார். 'இந்தப் போராட்டத்திற்குத் தேவையான அனைத்து அரசியல் ஆதரவையும் சோசலிச சமத்துவக் கட்சி வழங்கும்' என்று அவர் கூறினார்.
திலின என்ற இளம் தொழிலாளி உலக சோசலிச வலைத் தளத்திடம் பேசினார்: “ஆம், கோட்டாபய இராஜபக்ஷ பதவியில் இருந்து அகற்றப்பட்ட பின்னர் எங்களுடைய அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்படாது. எந்தவொரு இடைக்கால அரசாங்கமும் அதே முதலாளித்துவக் கொள்கைகளையே செயல்படுத்தும் என்பதில் நான் உடன்படுகிறேன். வர்க்க ஆட்சியை மாற்றுவதே தீர்வு என்பதில் இது வரை நான் கவனம் செலுத்தியிருக்கவில்லை. இது தீவிரமாகப் பரிசீலிக்கப்பட வேண்டிய ஒன்று” என அவர் கூறினார்.
தனியார் வங்கி ஒன்றில் பணிபுரியும் நிஷாந்த கூறியதாவது: இந்த நிலையில் இருந்து மீள்வதற்கு மக்களும் தியாகம் செய்ய வேண்டும் என நான் முதலில் நினைத்தேன். ஆனால் அரசாங்கம் எங்களுக்காக இந்த வெளிநாட்டுக் கடன்களைப் பெறவில்லை என்பதை நான் நினைக்கும் போது, இந்த பொருளாதார நெருக்கடியின் சுமையை மக்கள் ஏன் சுமக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது. சர்வதேச நாணய நிதியம் முன்மொழியும் நடவடிக்கைகள் உழைக்கும் மக்களிடம் இருந்து சுரண்டுவதாகவே உள்ளது, பணக்காரர்களிடமிருந்து அல்ல. இந்த அமைப்பிற்குள் எடுக்கப்படும் ஒவ்வொரு முடிவும் சிலரின் இலாபத்தை உறுதி செய்வதற்காகவே என்பதை புரிந்துகொள்ள இந்த கலந்துரையாடல் எனக்கு உதவியது. ஒவ்வொரு பிரச்சினையையும் அந்த கோணத்தில் பார்க்க வேண்டும்.
மேலும் படிக்க
- இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி "அனைத்து கட்சி" பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பதற்கான வேண்டுகோளை நிராகரிக்கிறது
- இலங்கையில் ஜூலை 9 ஆர்ப்பாட்டம்: தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஒரு சோசலிச வேலைத்திட்டம்
- இலங்கைத் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகள் இராஜபக்ஷ-விக்கிரமசிங்கவின் சிக்கன திட்ட நிரலுக்கு எதிராக அணிதிரள வேண்டும்!