இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்பு, ஜனவரி 9 அன்று, கண்டியில் உள்ள கன்டியன் ஆர்ட்ஸ் ரெசிடென்ஸி ஹோட்டலில் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கனத் திட்டத்தை தோற்கடிப்பது எப்படி? என்ற தலைப்பில் ஒரு பகிரங்க விரிவுரையை நடத்தவுள்ளது.
இதற்கு முன்னர் ஜனவரி 3 அன்று பேராதனைப் பல்கலைக்கழகத்தில் திட்டமிடப்பட்டிருந்த இந்த விரிவுரை இரத்துச் செய்யப்பட்டதைத் தொடர்ந்தே, கண்டியில் இந்த விரிவுரையை நடத்துகிறோம். பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞான மாணவர் சங்கத்தின் (அ.வி.மா.ச.) அனுசரணையுடன் மற்றும் அரசியல் விஞ்ஞானத் துறை தலைவரின் அனுமதியுடன் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விரிவுரை, பல்கலைக்கழக அதிகாரிகளால் திடீரென தடை செய்யப்பட்டது.
விரிவுரையின் தலைப்பு அரசாங்க கொள்கைகளை சவால் செய்வதால் அதை இரத்து செய்ய பேராதனை பல்கலைக்கழகத்தின் பதில் துணைவேந்தர் உத்தரவிட்டுள்ளதாக, ஜனவரி 3 அன்று காலை ஐ.வை.எஸ்.எஸ்.இ.க்கு அறிவிக்கப்பட்டது. மாற்றீடாக, விரிவுரையின் தலைப்பை மாற்ற வேண்டும் என ஐ.வை.எஸ்.எஸ்.இ.க்கு அறிவுறுத்தப்பட்டது. இது கூட்டத்திற்கு விதிக்கப்பட்ட தடையாகும்.
இது அ.வி.மா.ச., ஐ.வை.எஸ்.எஸ்.இ., அதே போல் ஒட்டுமொத்த பல்கலைக்கழக மாணவர்களதும் கருத்து சுதந்திரத்தின் மீதான ஜனநாயக விரோத தாக்குதல் என்று விவரித்து, ஐ.வை.எஸ்.எஸ்.இ. உடனடியாக இந்த அரசியல் தணிக்கையை கண்டித்து ஒரு அறிக்கையை வெளியிட்டது. விரிவுரையை இரத்துச் செய்ததில் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.)/தேசிய மக்கள் சக்தி (தே.ம.ச.) அரசாங்கத்தின் பங்கு இருப்பதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன.
மாணவர்கள், பல்கலைக்கழக ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள் மற்றும் ஏனைய தொழிலாளர்களும் இளைஞர்களும் இந்த விரிவுரையை நடத்துவதற்கான எங்கள் உரிமையை ஆதரிக்க வேண்டும் என்றும் ஜனநாயக உரிமைகள் நசுக்கப்படுவதைக் கண்டிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினோம். எவ்வாறாயினும், இந்தக் கருப்பொருள் கலந்துரையாடப்பட வேண்டிய அவசரத்தின் அடிப்படையில், ஐ.வை.எஸ்.எஸ்.இ. இந்த கூட்டத்தை கண்டியில் நடத்த முடிவு செய்துள்ளது.
பகிரங்க விரிவுரைக்காக, பேராதனை பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற ஐ.வை.எஸ்.எஸ்.இ. பிரச்சாரத்தின் போது மாணவர்கள், கல்வியாளர்கள் மற்றும் தொழிலாளர்களும், 2023ல் இருந்து அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் ஆரம்பிக்கப்பட்டு, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் தற்போதைய ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்படும் சர்வதேச நாணய நிதியத்தின் கொடூரமான சிக்கன நடவடிக்கைகளுக்கு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை தனியார்மயமாக்கி அல்லது வணிகமயமாக்கி, இலட்சக் கணக்கான அரச தொழில்களை அழித்தல் மற்றும் இலவச சுகாதாரம் மற்றும் இலவசக் கல்விக்கான நிதிகளை வெட்டுதலையும் உள்ளடக்கியுள்ள இந்த சிக்கன நடவடிக்கைகள், அனைத்து உழைக்கும் மக்களுக்கும் வாழ்வா சாவா பிரச்சினையாகும்.
ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம், ஸ்தாபனக் கட்சிகள், தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் மற்றும் அவர்களோடு தொங்கிக்கொண்டிருக்கும் போலி இடதுகளுமாக அனைவரும் முதலாளித்துவ முறைமையைப் பாதுகாக்கின்றனர்.
ஐ.வை.எஸ்.எஸ்.இ. மற்றும் சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.) மட்டுமே சர்வதேச நாணய நிதியத்தின் கொடூரமான சமூகத் தாக்குதல்களைத் தோற்கடிக்க சோசலிச மற்றும் சர்வதேச கொள்கைகளின் அடிப்படையில், தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டுவதற்காக போராடும் அமைப்புகளாகும்.
இந்த இன்றியமையாத பிரச்சினைகளைப் பற்றி கலந்துரையாட, தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களையும் எதிர்வரும் எங்களது கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
கூட்டம் நடைபெறும் இடம்: கன்டியன் ஆட்ஸ் ரெசிடென்ஸி ஹோட்டல், கண்டி (கிங்ஸ்வூட் கல்லூரி அருகில்)
திகதி மற்றும் நேரம்: ஜனவரி 9, வியாழன், மாலை 4 மணி
மேலும் படிக்க
- இலங்கையில் சர்வதேச நாணய நிதிய சிக்கனத் திட்டத்திற்கு எதிரான IYSSE விரிவுரைக்கு பேராதனைப் பல்கலைக்கழகம் தடை விதித்ததை கண்டனம் செய்!
- இலங்கை பராளுமன்றம் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு ஏகமனதாக ஒப்புதல் அளித்துள்ளது
- ஜே.வி.பி./தே.ம.ச. ஆதரவாளர் பேராதனை பல்கலைக்கழகத்தில் சோசலிச சமத்துவக் கட்சி பிரச்சாரகர்களை அச்சுறுத்தினார்
- பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் போராட்டத்திற்கு செயலூக்கத்துடன் ஆதரவளிப்போம்! ஊதியம், வேலை வாய்ப்பு மற்றும் இலவசக் கல்வியையும் வென்றெடுக்க ஒன்றிணைந்து போராடுவோம்!