இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
டிசம்பர் 21 அன்று பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மற்றும் அதன் இளைஞர் அமைப்பான சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர்கள் (IYSSE) அமைப்பினதும் உறுப்பினர்கள் குழுவிற்கு எதிராக, தங்களை அந்த பல்கலைக்கழகத்தின்,கல்வி சாரா ஊழியர் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட தேசிய மக்கள் சக்தி (தே.ம.ச.) / மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) அரசாங்கத்தின் ஆதரவாளர் ஒருவர் பிரச்சாரத்தை நிறுத்துமாறு மிரட்டினார்.
'சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன திட்டத்தை தோற்கடிப்பது எப்படி?' என்ற தலைப்பின் கீழ் ஏதிர்வரும் ஜனவரி 3 அன்று பேராதனைப் பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞானப் பிரிவில் நடைபெறவுள்ள ஐ.வை.எஸ்.எஸ்.இ. ஏற்பாடு செய்துள்ள விரிவுரைக்காக பிரச்சாரப் பணியில் ஈடுபட்டிருந்த போதே இந்த ஆத்திரமூட்டும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞான சங்கம் இந்த விரிவுரைக்கு அணுசரணையளித்துள்ளது.
பல்கலைக்கழகத்தின் 'அக்பர் பாலம்' அருகே சோ.ச.க./ஐ.வை.எஸ்.எஸ்.இ. உறுப்பினர்களை அணுகிய அந்த கல்விசாரா ஊழியர், கூட்டத்திற்கும் பிரச்சாரத்திற்கும் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார். அவர், 'அரசாங்கம் வந்து இன்னும் 30 நாட்கள்தான் ஆகிறது. நாட்டைக் கட்டியெழுப்ப கால அவகாசம் கொடுக்காமல், அதற்கு தடை போடுகிறீர்கள்,'' என்றார். சோ.ச.க., 'அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சிக்கும் ஒரு அரசு சாரா அமைப்பு' என்று குற்றம் சாட்டிய அவர், இதைப் பற்றி பாதுகாப்புத் துறையிடம் புகாரளிக்கப் போவதாக மிரட்டிவிட்டு வெளியேறினார்.
பின்னர், சிவில் உடை அணிந்த நபர் ஒருவர் அங்கு வந்து தன்னை பல்கலைக்கழகத்தின் “தலைமை பாதுகாப்பு அதிகாரி” என்று அறிமுகப்படுத்திக்கொண்டு “இதுபோன்ற வேலையை அனுமதிக்க முடியாது” என்று கூறினார். பிரச்சாரத்தை உடனடியாக கைவிட வேண்டும் என வலியுறுத்திய அவர், இல்லாவிட்டால், பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்களை பொலிசில் ஒப்படைப்போம் என மிரட்டல் விடுத்தார்.
இது பல்கலைக்கழக சமூகத்தினுள் தமது அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு சோ.ச.க./ஐ.வை.எஸ்.எஸ்.இ. அமைப்புகளுக்கு உள்ள உரிமைக்கும், அந்த அரசியலைப் பற்றி அறிந்து கொள்வதற்கு அந்த சமூகத்திற்கு உள்ள ஜனநாயக உரிமைக்கும் எதிராக ஆத்திரமூட்டும் வகையில் தலையிடுவதாகும். அதே போல், இது ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு எதிராக, அல்லது அந்த அரசாங்கத்திற்கு எதிராக ஒரு அரசியல் நிலைப்பாட்டை எடுக்கும் பல்கலைக்கழக மாணவர்கள், கல்வியாளர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் எதிர்கொள்ளப் போகும் நிலைமையைப் பற்றிய முன் அறிகுறியாகும்.
ஜனநாயக உரிமைகளை மதிக்கின்ற மற்றும் அவற்றை பாதுகாக்க உறுதிபூண்டுள்ள அனைவரையும், இந்த ஜனநாயக விரோத மற்றும் ஆத்திரமூட்டும் செயலைக் கண்டித்து, சோசலிச சமத்துவக் கட்சியின்/ஐ.வை.எஸ்.எஸ்.இ.யின் ஜனநாயக உரிமையைப் பாதுகாக்க முன்வருமாறு நாங்கள் தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் ஏனைய ஒடுக்கப்பட்ட பிரிவினர் எதிர்கொள்ளும் மிகவும் பாரதூரமான பிரச்சினைகளில் ஒன்றான 'சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கனத் திட்டத்தை தோற்கடிப்பது எப்படி?' என்பது பற்றி, தொழிலாள வர்க்கத்தின் பார்வையில் இருந்து கலந்துரையாடுகின்ற ஒரு விரிவுரையே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கனத் திட்டமானது, முதலாளித்துவ ஆளும் வர்க்கம் எதிர்கொள்ளும் ஆழமான பொருளாதார நெருக்கடியின் முழுச் சுமையையும் உழைக்கும் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது சுமத்துவதே ஆகும். ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம் வரிகளை மேலும் உயர்த்துகின்ற, பொதுக் கல்வி மற்றும் பொது சுகாதாரத்தை மேலும் வெட்டிக் குறைக்கின்ற, அரச நிறுவனங்களை தனியார்மயமாக்குகின்ற / மறுசீரமைக்கின்ற மற்றும் அதன் மூலம் இலட்சக்கணக்கான அரசாங்க வேலைகளை அழிக்கின்ற இந்த சிக்கனத் திட்டத்தை அமுல்படுத்துவதில் உறுதியாக உள்ளது. ஜே.வி.பி./தே.ம.ச. மட்டுமன்றி, ஐக்கிய மக்கள் சக்தி உட்பட அனைத்து முதலாளித்துவக் கட்சிகளும், தொழிற்சங்கங்களும் முன்னிலை சோசலிசக் கட்சி போன்ற போலி-இடது கட்சிகளும் அந்த வேலைத்திட்டத்தில் முழுமையாக அர்ப்பணிப்புடன் உள்ளன.
இந்தச் சூழ்நிலையில், ஜே.வி.பி./தே.ம.ச. ஆதரவாளர், “கால அவகாசம் கொடுங்கள்” என்ற திசாநாயக்க அரசாங்கத்தின் மந்திரத்தை எமக்கு முன் ஓதுகிறார். சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடும் தொழிலாளர்-ஒடுக்கப்பட்ட மக்களை நசுக்குவதற்கு, அரசாங்கம் தனது அடக்குமுறை இயந்திரத்தை வலுப்படுத்துவதற்கே இந்த நேரத்தை எடுத்துக்கொள்வதோடு, பயங்கரவாதத் தடைச் சட்டம் உட்பட அடக்குமுறைச் சட்டங்களை நீக்குவதாக அது கொடுத்த வாக்குறுதிகளை குப்பையில் போட்டதன் மூலம் அரசாங்கம் அதையே நிரூபித்துள்ளது.
பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், தங்களை ஆசிரியர் சேவையில் உள்வாங்கக் கோரி போராட்டம் நடத்திய போது, பொலிசாரை ஏவிவிட்டு அவர்களை கொடூரமான முறையில் தாக்கிய திசாநாயக்க அரசாங்கம், தற்போது அவர்களை வேட்டையாடும் மிலேச்ச நடவடிக்கையை முன்னெடுத்து வருகிறது. இது போராட்டத்தில் இறங்குவதற்கு தயாராகும் தொழிலாள வர்க்கத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் அரசாங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை ஆகும். அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகளாலேயே பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இந்த இரண்டு ஆத்திரமூட்டல்காரர்களும் ஊக்குவிக்கப்பட்டுள்ளனர்.
'முதலாளித்துவ நெருக்கடிக்கு நாங்கள் விலை கொடுக்க வேண்டியதில்லை' என்பதே தொழிலாள வர்க்கத்தின் நிலைப்பாடாக இருக்க வேண்டும். இதில் இருந்து எழும் தர்க்க ரீதாயன முடிவு என்னவெனில், சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கனத் திட்டத்திற்கு முழு எதிராக நின்று அதை தோற்கடிக்க தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் எதிர்த்தாக்குதல் தொடங்கப்பட வேண்டும் என்பதே ஆகும். கிராமப்புற ஏழைகளையும் ஒன்றிணைத்துக்கொண்டு தொழிலாள வர்க்கம் முன்னெடுக்கும் அத்தகைய போராட்டத்தில். சர்வதேச சோசலிசக் கொள்கைகளை செயல்படுத்துகின்ற ஒரு தொழிலாளர்-விவசாயிகள் அரசாங்கத்தின் மூலம் முதலாளித்துவ அரசாங்கத்தை பதிலீடு செய்ய வேண்டும்.
இந்த வேலைத் திட்டத்தைப் பற்றி கலைந்துரையாடுவதற்காக, அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வி சாரா தொழிலாளர்கள் மற்றும் பிற தொழிலாளர்-ஒடுக்கப்பட்ட பிரிவினரையும் ஜனவரி 03 விரிவுரைக்கு வருகை தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் படிக்க
- பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் போராட்டத்திற்கு செயலூக்கத்துடன் ஆதரவளிப்போம்! ஊதியம், வேலை வாய்ப்பு மற்றும் இலவசக் கல்வியையும் வென்றெடுக்க ஒன்றிணைந்து போராடுவோம்!
- இலங்கைப் பிரதிநிதிகள் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியிடம் சிக்கனத் தாக்குதலைத் தொடரப்போவதாகக் கூறுகிறார்கள்
- இலங்கை IYSSE நடத்தும் விரிவுரை: சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கனத் திட்டத்தை தோற்கடிப்பது எப்படி?