இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
நான்கு ஆண்டுகளாக அரச பாடசாலைகளில் கற்பித்தல் பணியில் ஈடுபட்டு வரும் சுமார் 16,000 பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தங்களை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளுமாறு கோரி முன்னெடுக்கும் நியாயமான போராட்டம் தற்போது தீர்க்கமான கட்டத்தை எட்டியுள்ளது.
டிசம்பர் 02 அன்று, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் மக்கள் விடுதலை முன்னணி / தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி./தே.ம.ச.) அரசாங்கம் பத்தரமுல்லையில் கல்வி அமைச்சின் முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த சுமார் ஆயிரம் பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தாக்குவதற்கு பொலிஸாரை வழிநடத்தியது. பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆசிரியர்களை அடித்து உதைத்த பொலிசார் 4 பேரை கைது செய்தனர்.
சட்டவிரோதமாக கூட்டம் கூடியமை, போக்குவரத்திற்கு இடையூறு விளைவித்தமை, பொலிசாரை காயப்படுத்தியமை ஆகிய அபத்தமான குற்றச்சாட்டுகளின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்ட நான்கு ஆசிரியர்களும் டிசம்பர் 10 அன்று பிணையில் விடுவிக்கப்பட்டனர். ஆனால், அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளின் கீழ், பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொடர்ந்தும் வேட்டையாடப்படும் அபாயம் உள்ளதை பொலிசின் பிந்தைய நடவடிக்கைகள் காட்டுகின்றன. இந்த வாரமும் ஒரு ஆசிரியர் பொலிசாரால் அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார். மேலும் இருவர் பொலிசில் சரணடைய நிர்ப்பந்திக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் பிணையிலேயே விடுவிக்கப்பட்டுள்ளனர்.
'இலவசக் கல்வியைப் பாதுகாப்பதற்கான ஆசிரியர்-மாணவர்-பெற்றோர் நடவடிக்கைக் குழுவும்' உள்ளடங்கிய 'தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களின் கூட்டமைப்பு' இந்த கொடூரமான பொலிஸ் தாக்குதலைக் கண்டித்து டிசம்பர் 07 அன்று வெளியிட்ட அறிக்கையில் பின்வருமாறு கூறியது:
“கைது செய்யப்பட்ட இந்த நான்கு ஆசிரியர்களும் ஜனாதிபதி திசாநாயக்கவின் அரசாங்கத்தால் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக தயாரிக்கப்பட்டு வரும் வர்க்கப் போரின் முதல் பலிகடாக்களாகும் என நாங்கள் பிரகடனம் செய்கிறோம்.
“இத்தகைய தாக்குதல்களை தொழிலாள வர்க்கம் அனுமதிக்க கூடாது. சர்வதேச நாணய நிதியத்தின் ஈவிரக்கமற்ற சிக்கனத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் ஈடுபட்டிருக்கும் அரசாங்கம், தாமதமின்றி உங்கள் மீதும் விரைவில் பாயும். நமது வர்க்க சகோதர சகோதரிகளில் ஒரு பிரிவினர் மீதான தாக்குதல் நம் அனைவரின் மீதுமான தாக்குதலாகும்!”
இந்த வர்க்க நிலைப்பாட்டின் அடிப்படையில், இந்த பொலிஸ் தாக்குதலை கடுமையாகக் கண்டிக்குமாறும், ஏழு ஆசிரியர்கள் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் விலக்கிக்கொள்ள குரல் கொடுக்குமாறும், தங்களை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளுமாறு கோரி பாடாசலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் முன்னெடுக்கும் நியாயமான போராட்டத்துக்கு செயலூக்கத்துடன் ஆதரவளிக்குமாறும் நாங்கள் ஆசிரியர்கள், அதிபர்கள் உட்பட ஒட்டு மொத்த தொழிலாள வர்க்த்திடமும் பல்கலைக்கழக மாணவர்களிடமும் கேட்டுக்கொள்கிறோம்.
தொழிலாளர் நடவடிக்கை குழுக்களின் கூட்டமைப்பின் அறிக்கை சுட்டிக்காட்டியது போல், “இந்த பொலிஸ் நடவடிக்கை ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்திற்கும் ஒரு எச்சரிக்கையாகும். ஜே.வி.பி./தே.ம.ச. ஆட்சியானது, சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளை முழுமையாக அமுல்படுத்துவதற்கான அதன் வாக்குறுதியை சவால் செய்யும் தொழிலாளர்களின் எந்த நடவடிக்கையையும் நசுக்கத் தயங்காது.”
இந்த அரச அடக்குமுறையில் அரசாங்கம் நடைமுறைப்படுத்தப் போகும் கொடூரமான வழிமுறைகளின் மிகப் பாரதூரமான அறிகுறியும் இந்த பொலிஸ் தாக்குதலில் இருந்து வெளிவந்துள்ளது. ஆர்ப்பாட்டத்தின் போது சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து கொண்ட நபர் ஒருவரை, பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்ததுடன் அவர் இராணுவ புலனாய்வு பிரிவை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. அவரின் கையில் கூரிய ஆயுதம் இருந்ததைக் காட்டும் காணொளி காட்சியை பிரதிவாதி சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளதோடு ஆத்திரமூட்டும் நோக்கில் அவர் பொலிஸாரை காயப்படுத்தியதற்கான சகல சந்தேகங்களும் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் வர்க்கப் போராட்டங்களில் தொழிலாளர்களையும் ஏனையோரையும் வேட்டையாடுவதற்கு நச்சுத்தனமான ஆத்திரமூட்டல்களைப் பயன்படுத்த அரசாங்கம் தயாராக உள்ளது என்பதை இது சமிக்ஞை செய்கிறது.
மறுபுறம், பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தரக்ளின் போராட்டத்திற்கு தொழிற்சங்க அதிகாரத்துவம் காட்டும் பிரதிபலிப்பு, அவற்றின் தொழிலாளர் விரோத, துரோக வகிபாகத்தை மிகத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது.
பாராளுமன்றத்தில் உரையாற்றிய இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் தலைவரும், தற்போது பிரதி தொழில் அமைச்சருமான மஹிந்த ஜயசிங்க, பாராளுமன்றத்தில் பேசுகையில், பொலிஸ் உத்தியோகத்தர்களை காயப்படுத்தியதற்காக பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களை கண்டித்துள்ளார். “இந்தப் போராட்டம் நடந்திருக்கக் கூடாது. அரசாங்கத்தை தர்மசங்கடத்தில் ஆழ்த்துவதற்காக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதா என்ற பிரச்சினை எமக்கு உள்ளது” என்று கூறிய ஜயசிங்க, “அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும்' என்ற தற்போதைய அரசியல் மந்திரத்தை மீண்டும் மீண்டும் கூறினார்.
பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக்கொள்வதை எதிர்த்த அவர், ஆசிரியர் சேவை சட்டத்தின் பிரகாரமே ஆட்சேர்ப்பு செய்யப்படுவதால் அதற்கான போட்டிப் பரீட்சைகள் நடத்தப்பட வேண்டும் என்றார்.
சுயாதீனமாக இருப்பதாக கூறிக்கொள்ளும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளரான ஜோசப் ஸ்டாலினும், ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததில் 'மக்களின் அபிலாஷைகள் வெளிப்பட்டுள்ளதாக' கூறுகின்ற போலி இடது முன்னிலை சோசலிசக் கட்சியின் கீழ் இயங்கும் ஐக்கிய ஆசிரியர் சேவைகள் சங்கமும், ஆசிரியர் சேவைகள் சட்டத்தின்படி, ஒரு போட்டிப் பரீட்சை நடத்தியே ஆட்சேர்ப்பு செய்ய வேண்டும் மற்றும் அவர்கள் 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும், என்ற விடயங்களை முன்வைத்து அரசாங்கத்தின் தாக்குதலுடன் கூட்டுச் சேர்ந்துள்ளன.
கடந்த நான்கு ஆண்டுகளாக, ஆசிரியர் பணியிலும் ஏனைய பாடசாலை நடவடிக்கைகளிலும் பணியாற்றி வருகின்ற பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஏனைய ஆசிரியர்களுடன் கூட்டாகவும் ஒத்துழைப்புடனும் செயற்படுகின்றனர். உண்மையில், அந்த பணிகளில் எங்கள் இரு குழுக்களிடையே எந்த வித்தியாசமும் இல்லை. ஆனால் அவர்களில் பெரும்பாலோருக்கு பாடசாலை முடிந்தவுடன் வெளியேற முடியாது. அவர்கள் மாலை 3.30 மணிக்கு மேல் பாடசாலையில் தங்கி இருக்க நிர்பந்திக்கப்படுவதோடு விடுமுறை நாட்களிலும் வேலைக்குச் செல்ல நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். இவர்களின் சம்பளம் சராசரி ஆசிரியரை விட 6,500 ரூபாய் குறைவு ஆகும்.
இந்நிலையில், 'ஆசிரியர் சேவையில்' தங்களை இணைத்துக் கொள்வதோடு ஏனைய ஆசிரியர்களுக்கு உள்ள உரிமைகள் தங்களுக்கும் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்ற பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் கோரிக்கை முற்றிலும் நியாயமானதாகும். ஆசிரியர் சேவை சட்டம் எனப்படுவதை தூக்கிப்பிடித்துக்கொண்டு அதை எதிர்க்கும் தொழிற்சங்க அதிகாரத்துவம், பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் கோரிக்கைகளை நிராகரித்து, அவர்களின் போராட்டத்தை நசுக்க, அரசாங்கத்துக்கு முழு ஆதரவை அளிக்கிறது.
தொழிலாள வர்க்கத்தின் ஏனைய எல்லாப் போராட்டங்களிலும் போலவே, பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் போராட்டத்திலும் மிக அடிப்படையான கேள்விகள் முன்னுக்கு வந்துள்ளன; முதலாளித்துவ ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம் அல்லது வேறு எந்த முதலாளித்துவ அரசாங்கத்தின் மீதும் அழுத்தம் கொடுத்து தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளை வென்றெடுக்க முடியுமா? தொழிற்சங்க அமைப்புகள் மூலம் உங்கள் போராட்டத்தை தொடர முடியுமா?
உலக முதலாளித்துவ முறைமையே ஆழமான பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுக்கையில், தொழிலாள வர்க்கத்தின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளை நசுக்குவதைத் தவிர உலகெங்கிலும் உள்ள ஆளும் வர்க்கங்களுக்கு வேறு வழியில்லை. சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பெற்ற 3 பில்லியன் டொலர் பிணையெடுப்புக் கடனுக்கு ஈடாக, அது விதித்துள்ள சிக்கன உத்தரவுகளை அமுல்படுத்துகின்ற இலங்கையின் ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கமும் இதையே செய்கின்றது.
அரச சேவைக்கான புதிய ஆட்சேர்ப்பை கட்டுப்படுத்துதல், சம்பளத்தை முடக்குதல் மற்றும் கல்விக்கும் சுகாதாரத்துக்குமான செலவினங்களை வெட்டுதல், ஐந்து லட்சம் தொழில்களை பாதிக்கும் வகையில் 430 அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை மறுசீரமைத்தல் அல்லது ஐந்தரை இலட்சம் அரச தொழில்களை அழித்தல் மற்றும் பாரிய அளவில் வரிகளை உயர்த்துதல் ஆகிய கொடூரமான நடவடிக்கைகள் இந்த அரசாங்கத்தின் திட்டங்களில் அடங்கும்.
இந்த நிலைமைகளின் கீழ், முதலாளித்துவ அரசுக்கு அழுத்தம் கொடுத்து கோரிக்கைகளை வென்றெடுக்க முடியும் என்பது முழு மாயையாகும். முதலாளித்துவ அரசாங்கத்துக்கும் முழு முதலாளித்துவ முறைமைக்கும் எதிராக, சர்வதேச சோசலிசக் கொள்கைகளின் அடிப்படையில், தொழிலாள வர்க்கத்தின் ஒரு ஐக்கியப்பட்ட எதிர்த்தாக்குதலை நடத்துவதன் மூலம் மட்டுமே உழைக்கும்-ஒடுக்கப்பட்ட வெகுஜனங்களின் எந்தவொரு கோரிக்கையும் வெல்ல முடியும். முதலாளித்துவ முறைமையுடன் இயல்பாகவே பிணைந்துள்ள தொழிற்சங்கங்கள், அத்தகைய வேலைத் திட்டத்திற்கு முற்றிலும் விரோதமாக இருப்பதால், தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளித்துவக் கட்சிகளில் இருந்து சுயாதீனமான தொழிலாளர்களின் நடவடிக்கைக் குழுக்களை உருவாக்குவது இங்கு இன்றியமையாததாகும்.
தொழிலாளர் நடவடிக்கை குழுக்களின் கூட்டமைப்பின் அறிக்கை அழைப்பு விடுத்துள்ளபடி, பின்வரும் கோரிக்கைகளுக்காக 'பரந்தளவிலும் அவசரமாகவும்' ஒன்றிணைந்து போராடுமாறு நாங்கள் உங்களை அழைக்கிறோம்:
“சர்வதேச நாணய நிதியத்தின் கொடூரமான சிக்கனத் திட்டம் வேண்டாம்!
“தனியார்மயமாக்கல் அல்லது மறுசீரமைப்பு வேண்டாம்! அனைத்து அரசு நிறுவனங்களையும் அவற்றின் தொழிலாளர்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர போராடு!
“வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தாதே!
நமது சர்வதேச வர்க்க சகோதர சகோதரிகளே, இந்தப் போராட்டத்தில் நமது கூட்டாளிகள் ஆவர். அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா முழுவதும், ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் இன்னும் பரந்தளவில், தொழிலாள வர்க்கமானது பெருநிறுவனங்களதும் அரசாங்கங்களினதும் தாக்குதல்களில் இருந்து தங்கள் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தில் இறங்கியுள்ளது.
சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் பக்கம் திரும்புமாறு உங்களை நாம் வலியுறுத்துகிறோம்! தொழிலாளர் நடவடிக்கை குழுக்களின் சர்வதேச கூட்டணியில் இணைந்துகொள்வதன் ஊடாக உலகளவில் உங்கள் நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதன் மூலம் இந்த சர்வதேச ஐக்கியத்தை அடைய முடியும்.
“பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு முழு ஆதரவு வழங்குவோம்! அவர்களுக்கு எதிரான அரச வேட்டையாடலை எதிர்த்துப் போராடுவோம்!” என்ற தலைப்பில் டிசம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறும் பகிரங்க சூம் இணையவழி கூட்டத்தில் இந்த வேலைத் திட்டம் பற்றி கலந்துரையாடப்படும். அனைத்து ஆசிரியர்கள், அதிபர்கள், ஏனைய தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை இந்த கூட்டத்தில் பங்குபற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம். கூட்டத்திற்கு இந்த இணைப்பில் பதிவு செய்துகொள்ளுங்கள்.
https://us06web.zoom.us/meeting/register/tZ0ocOCopz4rHtazw33JObTrmj3BB4ZpE9Sp#/registration
மேலும் படிக்க
- இலங்கையில் பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மீதான பொலிஸ் தாக்குதலை கண்டனம் செய்! கைது செய்யப்பட்ட நான்கு ஆசிரியர்களை விடுதலை செய்!
- இலங்கையில் கைது செய்யப்பட்ட பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதுடன், அடுத்த வருடம் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
- இலங்கைத் தொழிலாளர்கள் அனைத்து வெளிநாட்டுக் கடன்களையும் தள்ளுபடி செய்யவேண்டுமென ஏன் கோர வேண்டும்?