இலங்கை பராளுமன்றம் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு ஏகமனதாக ஒப்புதல் அளித்துள்ளது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கை பாராளுமன்றமானது டிசம்பர் 3-4 திகதிகளில் நடத்திய இரண்டு நாட்கள் விவாதத்தின் பின்னர், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் நவம்பர் 21 முன்வைக்கப்பட்ட, மக்கள் விடுதலை முன்னணி / தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி./தே.ம.ச.) அரசாங்கத்தின் கொள்கை அறிக்கைக்கு, வாக்கெடுப்பு நடத்தாமலேயே ஏகமனதாக ஒப்புதல் அளித்தது.

2025 ஆம் ஆண்டின் முதல் 4 மாதங்களுக்கான அரசாங்கத்தின் இடைக்கால வரவு செலவுத் திட்டம் வாக்கெடுப்பின்றி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. [Photo: Parliament of Sri Lanka]

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த உறுதியளித்த கொள்கை அறிக்கையில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒருமித்த கருத்து, காட்டுமிராண்டித்தனமான சிக்கன திட்ட நிரலுடன் முழு அரசியல் ஸ்தாபனமும் கொண்டுள்ள அடிப்படை உடன்பாட்டை நிரூபிக்கிறது.

இதன் மூலம், ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் வாழ்க்கை நிலைமைகள் மீதான தாக்குதலைத் தொடர்வதற்கு, அதன் கைகளை எதிர்க்கட்சிகள் பலப்படுத்தியுள்ளன. அடுத்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தை அதன் கோரிக்கைகளுக்கு ஏற்ப முன்வைப்பதாக உறுதியளித்தது நவம்பர் 23 அன்று சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர்கள் மட்டத்திலான ஒப்பந்தத்தில் அரசாங்கம் கையெழுத்திட்டதைத் தொடர்ந்தே எதிர்க் கட்சிகள் இந்த ஆதரவை வெளிப்படுத்தியுள்ளன.

கடந்த வாரம், 2025 ஆம் ஆண்டிற்கான முறையான வரவு செலவுத் திட்டம் ஜனவரியில் சமர்ப்பிக்கப்படும் வரை, அரசாங்கம் 2025 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்கு இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்தது. இந்த இடைக்கால வரவு செலவுத் திட்டம் டிசம்பர் 6 அன்று பாராளுமன்றத்தில் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது.

கடந்த மாதம் கொள்கை அறிக்கையை முன்வைத்த ஜனாதிபதி திசாநாயக்க வலியுறுத்தியதாவது: 'உத்தேச மறுசீரமைப்பு திட்டம் நல்லதா, கெட்டதா, சாதகமா அல்லது பாதகமானதா என்பதைப் பற்றி விவாதிப்பது எந்த நோக்கத்திற்கும் உதவாது.' நாட்டின் 'பொருளாதாரம் ஒரு நூலில் தொங்கிக்கொண்டிருக்கிறது. நெருக்கடியின் அளவு காரணமாக, சிறிய பிழை கூட குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்... அதனால் தவறுகளுக்கு இடமில்லை.' என்றும் அவர் கூறினார்.

அவரது கருத்துக்கள் ஜே.வி.பி./தே.ம.ச. தேர்தல் விஞ்ஞாபனத்தை முற்றிலுமாக நிராகரிப்பதாக இருந்தது. அது 'சர்வதேச நாணய நிதியத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தவும்', 'ஏழைகள் மற்றும் பின்தங்கிய மக்களை [அவர்களின்] வலிமிகுந்த நிலையில் இருந்து காப்பாற்றுவதற்காக மாற்று கடன் நிலைத்தன்மை பகுப்பாய்வை தயாரிப்பதாகவும்' உறுதியளித்தது.

இப்போது நிதியமைச்சராக இருக்கும் திசாநாயக்க, சர்வதேச நாணய நிதியத்தின் அனைத்து கோரிக்கைகளையும் ஒன்றுவிடாமல் திணிப்பதில் உறுதியாக உள்ளார். கடந்த ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.6 சதவீதமாக இருந்த முதன்மை வரவுசெலவு உபரியை, நான்கு மடங்கு கூடுதலாக அடுத்த ஆண்டு 2.3 சதவீதமாக உயர்த்தும் நடவடிக்கையை புதிய அரசாங்கம் கடைபிடிக்கும். இதன் பொருள் வரி அதிகரிப்பு, பயன்பாட்டு கட்டண விகிதங்கள் மற்றும் எரிபொருள் விலைகளில் மேலும் அதிகரிப்பு, அத்துடன் இன்றியமையாத பொதுச் சேவைகளைக் வெட்டிக் குறைத்தல் மற்றும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை நெருப்பு வேகத்தில் விற்றுத்தள்ளி இலட்சக் கணக்கான தொழில்களையும் அழிப்பதை குறிக்கும்.

ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகரான துமிந்த ஹுலங்கமுவ, டிசம்பர் 2 அன்று, நாடு தனது பொதுத்துறை ஊழியர்களின் தொகையை தற்போதைய 1.3 மில்லியனில் இருந்து வெறும் 750,000 ஆக குறைக்க வேண்டும் என்று பகிரங்கமாக கூறினார். குறைந்த பட்சம் 550,000 அரச தொழில்களை அழிக்கும் திட்டம் திசாநாயக்க ஆட்சியால் தயாரிக்கப்ட்டு வரும் கொடூரமான நடவடிக்கைகள் பற்றிய எச்சரிக்கையாகும்.

முன்னெப்போதும் அதிகாரத்தில் இருந்திராத ஜே.வி.பி./தே.ம.ச., ஜனாதிபதி தேர்தலிலும் தேசிய தேர்தல்களிலும், 1948 இல் உத்தியோகபூர்வ சுதந்திரம் பெற்றதில் இருந்து ஆட்சி செய்து வருகின்ற, ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.), அதில் இருந்து பிரிந்து அமைக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தி (ஐ.ம.ச.) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.) போன்ற பாரம்பரிய முதலாளித்துவக் கட்சிகள் மீதான பரவலான வெகுஜன அதிருப்தியை சுரண்டிக்கொண்டது. எதிர்க்கட்சிகள் 225 பாராளுமன்ற ஆசனங்களில் இப்போது வெறும் 66 ஆசனங்களை மட்டுமே வைத்துள்ளன.

திசாநாயக்கவின் கொள்கைகள் பற்றிய பாராளுமன்ற விவாதத்தின் போது, ​​ஜே.வி.பி./தே.ம.ச. பாராளுமன்ற உறுப்பினர்கள், தங்கள் வெற்றியைப் பறைசாற்றி, முன்னைய அரசாங்கங்களைப் போலன்றி இந்த அரசாங்கத்திற்கு 'எதிர்காலத்திற்கான தொலைநோக்கு' மற்றும் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான திட்டங்கள் இருப்பதாக அறிவித்தனர். தாம் ஊழலை ஒழித்து 'புதிய அரசியல் கலாச்சாரத்தை' உருவாக்குவதாக கூறினர். திசாநாயக்க வாழ்க்கைத் தரத்தை சீரழித்து, உழைக்கும் மக்களுக்கு அதிக சமூக அவலத்தை உருவாக்கி வருவதால், இந்தப் புளுகு மூட்டை விரைவில் அம்பலப்படுத்தப்படும்.

எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தி தலைவருமான சஜித் பிரேமதாச, சர்வதேச நாணய நிதியத்தின் கட்டமைப்பிற்கு இணங்க அரசாங்கம் எடுக்கும் முடிவுக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்தார். 'சர்வதேச நாணய நிதிய திட்டத்தின் சில அம்சங்கள் மக்களுக்கு தீங்கு விளைவிக்கும்' என்று அவர் சுட்டிக்காட்டிய போதிலும், தனது கட்சி 'இந்த பிரச்சினையில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால் அதற்கு உதவ தயாராக உள்ளது' என்று கூறினார்.

பிரேமதாச சர்வதேச நாணய நிதியத்தின் திட்ட நிரலை முழுமையாக ஆதரித்துள்ளார். 2021-22 அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. அரசாங்கம் உடனடியாக சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறத் தவறிவிட்டதாக அவர் விமர்சித்தார். இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் போது, ​​அவர் சர்வதேச நாணய நிதியத்தின் கடனுக்கான நிபந்தனைகளை பற்றி 'மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதாக' அறிவித்தார் -அவர் வெற்றி பெற்றிருந்தால் திசாநாயக்கவைப் போலவே அவரும் அந்த வாக்குறுதியை குப்பையில் போட்டிருப்பார்.

ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. தலைவர் நாமல் இராஜபக்ஷ, அரசாங்கத்தை வாழ்த்திய போதிலும், அரசாங்கத்தின் கொள்கைகள் -ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. ஆதரித்து வந்த- முந்தைய விக்கிரமசிங்க அரசாங்கத்தின் கொள்கைகளாகவே இருக்குமா அல்லது 'ஜனாதிபதித் தேர்தலின் போது நீங்கள் முன்வைத்த கொள்கைகளாக இருக்குமா' என்று கிண்டலாக கேட்டார்.

முன்னாள் ஜனாதிபதி விக்கிரமசிங்க, 'சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பட்ட கட்டமைப்பிற்கு இணங்குகின்ற' திசாநாயக்கவின் அறிக்கையை தான் ஆதரிப்பதாக மீண்டும் ஊடகங்களுக்குத் தெரிவித்தார். 2022 ஏப்ரல்/மே மாதங்களில் நாட்டின் கடன் செலுத்தப்படாததால் ஏற்பட்ட பெரும் சமூக நெருக்கடிக்கு எதிராக ஒரு வெகுஜன எழுச்சி இடம்பெற்றதை அடுத்து ஆட்சிக்கு வந்த விக்கிரமசிங்க, சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் செய்தார்.

அவரது ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரே பாராளுமன்ற உறுப்பினரான விக்கிரமசிங்கவுக்கு மக்கள் ஆதரவு இல்லை. அவரது அமெரிக்க சார்பு மற்றும் சர்வதேச நாணய நிதிய சார்பு நோக்குநிலைக்கு பெயர் பெற்ற அவர், தேர்தல் மூலம் அன்றி, பாராளுமன்றம் வழியாக ஜனநாயக விரோதமாக பதவியில் அமர்த்தப்பட்டார். ஜே.வி.பி./தே.ம.ச. மற்றும் ஐ.ம.ச.யும் தொழிற்சங்கங்கள் மற்றும் முன்னிலை சோசலிசட் கட்சி போன்ற போலி இடதுகளுடன் இணைந்து, இந்த வெகுஜன இயக்கத்தை சிதைப்பதில் முக்கிய பங்கைக் கொண்டிருந்தன. 'இடைக்கால அரசாங்கத்திற்கான' அவர்களின் கோரிக்கை மதிப்பிழந்த பாராளுமன்றத்தை சட்டப்பூர்வமாக்க உதவியது.

சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தை ஒருபோதும் எதிர்க்காத ஜே.வி.பி./தே.ம.ச., விக்கிரமசிங்கவின் சட்டபூர்வமான தன்மையை கேள்விக்குள்ளாக்கியது. சர்வதேச நிதிய மூலதனத்தின் ஆசீர்வாதத்துடன், சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைகளை நிறைவேற்றுவதற்கும் எந்தவொரு எதிர்ப்பையும் நசுக்குமான ஒரு வழிமுறையாக இப்போது அது இலங்கை ஆளும் வர்க்கத்தால் ஆதரிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே திசாநாயக்க அரசாங்கம் டிசம்பர் 2 அன்று பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நடத்திய அமைதியான போராட்டத்தை நசுக்குவதற்கு பொலிஸாரைப் பயன்படுத்தி நால்வரை கைது செய்தது. அரசு ஆசிரியர் சேவையில் முறையான ஆசிரியர் நியமனத்தை கோரியமையே அவர்கள் செய்த குற்றமாகும். அவர்கள் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பணியில் அமர்த்தப்பட்டதோடு ஆசிரியர்களாகப் பயன்படுத்தப்பட்ட போதிலும், குறைந்த ஊதியம் மற்றும் ஏழ்மையான நிலைமைகளிலேயே வைக்கப்பட்டுள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் திட்ட நிரலுக்கான ஒருமித்த பாராளுமன்ற ஆதரவு, தொழிலாள வர்க்கமானது அதன் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளுக்காக போராட சுயாதீனமாக அணிதிரள வேண்டிய அவசியத்தை தெளிவாக்குகிறது. சோசலிச சமத்துவக் கட்சி தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற மக்களை ஒவ்வொரு வேலைத் தளங்களிலும், பெருந்தோட்டங்களிலும், நகர மற்றும் புறநகர் பகுதிகளிலும் சுயாதீனமான நடவடிக்கை குழுக்களை கட்டியெழுப்புமாறு அழைப்பு விடுக்கிறது. இந்த நடவடிக்கைக் குழுக்களில் முதலாளித்துவ அரசியல்வாதிகள் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தினர் பங்கேற்க அனுமதிக்கக் கூடாது.

உழைக்கும் மக்கள் பெரும் செல்வந்தர்களின் இலாபத்தை அதிகரிக்க தியாகங்களைச் செய்ய வேண்டும் என்ற கருத்தை நடவடிக்கைக் குழுக்கள் நிராகரிக்க வேண்டும், மேலும் அனைத்து வெளிநாட்டுக் கடன்களையும் சர்வதேச நாணய நிதிய திட்ட நிரலையும் நிராகரிக்க வேண்டும். உழைக்கும் மக்கள் எதிர்கொள்ளும் எரியும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு, பெரும் பணக்காரர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும், பெரிய வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்கள் தொழிலாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் தேசியமயமாக்கப்பட வேண்டும்.

ஒரு சோசலிச மூலோபாயத்திற்காக கலந்துரையாடவும் போராடவும் நடவடிக்கை குழுக்களின் பிரதிநிதிகளை அடிப்படையாகக் கொண்டு, தொழிலாளர்களதும் கிராமப்புற வெகுஜனங்களினதும் ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான மாநாட்டை கட்டியெழுப்ப சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. சோசலிசத்திற்கான பரந்த சர்வதேசப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, சோசலிசக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு, அரசியல் அதிகாரத்திற்கான மற்றும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் அரசாங்கத்தை நிறுவுவதற்குமான போராட்டத்தில் உழைக்கும் மக்களின் போராட்டங்களை ஒன்றிணைப்பதற்கும், இது ஒரு முக்கியமான வழிமுறையாகும்.

Loading