இலங்கையின் ஜே.வி.பி. அரசாங்கம் பயங்கரவாத தடைச் சட்டத்தை ஒழிப்பதாக கொடுத்த தேர்தல் வாக்குறுதியை கைவிட்டது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கையின் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) / தேசிய மக்கள் சக்தி (தே.ம.ச.) நிர்வாகமானது ஆட்சிக்கு வந்து இப்போதுதான் ஒரு மாதம் கடந்துள்ள நிலையில், மோசமான பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இல்லாதொழிப்பதாக அது கொடுத்த வாக்குறுதியைக் கைவிட்டுள்ளது.

ஜே.வி.பி./தே.ம.ச.யின் ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனம், 'பயங்கரவாத தடைச் சட்டம் உட்பட அனைத்து அடக்குமுறைச் செயல்களையும் ஒழித்து, நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள மக்களின் சிவில் உரிமைகளை உறுதி செய்வதாக' வெளிப்படையாக உறுதியளித்தது (வளமான நாடு, அழகான வாழ்க்கை, பக்கம் 129)

இலங்கை அமைச்சரவை அமைச்சரும் ஜே.வி.பி.யின் அரசியல் குழு உறுப்பினருமான விஜித ஹேரத் [Photo: Facebook/jvpvijithaherath]

புதன் கிழமையன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஜே.வி.பி.யின் அரசியல் குழு உறுப்பினரும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சருமான விஜித ஹேரத், 'இந்த நேரத்தில் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கவோ அல்லது திருத்தவோ முடியாது” என அறிவித்தார். இந்த கொடூரமான சட்டம் புதிய ஆட்சியால் 'துஷ்பிரயோகம்' செய்யப்படமாட்டாது என்றும் அவர் கூறிக்கொண்டார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அகற்றுவதற்கான அதன் உறுதிப்பாட்டைக் கைவிடுவதுடன், ஜே.வி.பி./தே.ம.ச. நிர்வாகம், தான் தூக்கி வீசுவதாக வாக்குறுதியளித்த ஜனாதிபதி பதவியின் பரந்த மற்றும் ஜனநாயக விரோத நிறைவேற்று அதிகாரங்களையும் பேணுகிறது.

ஜனாதிபதித் தேர்தலின் போது அது காட்டிய 'ஜனநாயக' தோரணைக்கு மாறாக, ஜே.வி.பி. மற்றும் ஏனைய சிங்கள பேரினவாத அமைப்புக்களும் 2006ல் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மீண்டும் அமுல்படுத்த வேண்டும் என்று கோரி கூட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தின. 2002 இல் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுடனான கொழும்பின் போர் நிறுத்தத்தின் போது இந்த கொடூரமான சட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.

இந்த வார அறிவிப்பானது அரச எந்திரத்துடனான புதிய ஆட்சியின் ஆழமான தொடர்புகளை மேலும் எடுத்துக்காட்டுவதுடன் சர்வதேச நாணய நிதியம் ஆணையிட்டுள்ள அதன் சிக்கனத் திட்டத்திற்கு எதிராக எழும் எந்தவொரு வெகுஜன எதிர்ப்பையும் நசுக்க முயற்சிப்பதோடு ஒடுக்குமுறை நடவடிக்கைகளையும் பயன்படுத்தும் என்பதை தெளிவாக சுட்டிக்காட்டுகிறது.

செப்டெம்பர் இறுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, மூன்று பேர் கொண்ட அமைச்சரவையை உருவாக்கி, தனது நிறைவேற்று அதிகாரங்களைப் பயன்படுத்தி, விரைவில் நவம்பர் 14ஆம் திகதி பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதாக அறிவித்தார். ஈவிரக்கமின்றி விரைவாக அதன் சிக்கன திட்டத்தை செயல்படுத்துவதற்காக, அவரும் ஜே.வி.பி./தே.ம.ச.யும் கணிசமான பாராளுமன்றப் பெரும்பான்மையுடன் 'வலுவான அரசாங்கத்தை' அமைக்க முயற்சிக்கின்றனர்.

சிக்கனத் திட்டங்களில், உழைக்கும் மக்கள் மீது கணிசமான வரி அதிகரிப்பு, 400க்கும் நேற்பட்ட அரச நிறுவனங்ளை தனியார்மயமாக்கல், வணிகமயமாக்கல் அல்லது மூடுதல் மற்றும் 500,000 அரச தொழில்களை அழிப்பதும் அடங்கும். இலவச சுகாதார சேவை மற்றும் கல்வியை மேலும் பாதிக்கும் வகையில் தொடர்ந்து மானியங்களை வெட்டிக் குறைக்கவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

விக்கிரமசிங்க அரசாங்கத்தால் வாக்குறுதியளிக்கப்பட்ட அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வை கடந்த மாதம் அரசாங்கம் தடுத்து நிறுத்தியமை அரச ஊழியர்களிடையே கோபத்தை தூண்டியது. இலட்சக் கணக்கான அரச ஊழியர்களால் ஜூலையில் நடத்தப்பட்ட வெகுஜன எதிர்ப்புக்கள் மற்றும் வேலைநிறுத்தங்களுக்கு பிரதிபலிக்கும் வகையில் விக்கிரமசிங்க அரசாங்கத்தால் இந்த சம்பள உயர்வு உறுதியளிக்கப்பட்டது.

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஹேரத்தின் அறிவிப்பு, புதிய ஆட்சியின் வர்க்கத் தன்மை பற்றிய சோசலிச சமத்துவக் கட்சியின் எச்சரிக்கைகளை உறுதிப்படுத்துகிறது. திசாநாயக்கவும் அவரது ஆளும் வர்க்க ஆதரவாளர்களும், 2022 இல் இராஜபக்ஷ ஆட்சியை கவிழ்த்த, அனைத்து மொழி, மத மற்றும் இனத் தடைகளுக்கு அப்பால் பல மில்லியன் மக்கள் கலந்துகொண்ட பலமான வெகுஜன எதிர்ப்புக்கள் போன்ற ஒரு புதிய போராட்டத்தின் வெடிக்கக் கூடும் என்ற பீதியில் வாழ்கின்றனர்.

ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம் பயங்கரவாத தடைச் சட்டத்தை தக்கவைத்துக்கொள்வதானது, தொழிற்சங்க அதிகாரத்துவங்களால் வளர்ந்து வரும் தொழிலாள வர்க்க எதிர்ப்பைக் கட்டுப்படுத்தவும் திசைதிருப்பவும் முடியாவிட்டால், அது தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக அரச எந்திரத்தை கட்டவிழ்த்துவிடும் என்று சர்வதேச மூலதனத்திற்கும் இலங்கை பெருவணிகத்திற்கும் விடுக்கும் தெளிவான சமிக்ஞையாகும்.

முதலில் 1979 இல் அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவின் கீழ் இயற்றப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டம், தமிழ் போராளிக் குழுக்களை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு வழிமுறையாக ஆரம்பத்தில் நியாயப்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும், விடுதலைப் புலிகளுக்கு எதிரான கொழும்பின் 26 ஆண்டுகால உள்நாட்டுப் போரின் போது தீவு முழுவதும் உள்ள தமிழர்களுக்கு எதிராக இந்த சட்டம் திட்டமிட்ட முறையில் பயன்படுத்தப்பட்டது.

பின்னர் ஆட்சிக்கு வந்த இலங்கை அரசாங்கங்கள், அரசியல் எதிரிகளுக்கு எதிராக, குறிப்பாக தெற்கில் 1988 முதல் 1990 வரையிலான கிராமப்புற அமைதியின் போது, பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தின. இந்த காலகட்டத்தில், ​​அரச படைகள் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களைக் கொன்று தள்ளின. மஹிந்த இராஜபக்ஷ மற்றும் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கங்கள், அரசியல் செயற்பாட்டாளர்களையும் ஏனைய எதிர்ப்பாளர்களையும் தடுத்து வைப்பதற்கு இந்தப் பயங்கரவாத தடைச் சட்டத்தை பரவலாகப் பயன்படுத்தின.

பயங்கரவாத தடைச் சட்டமானது இராணுவத்துக்கும் பொலிசுக்கும் 'சட்டவிரோத நடவடிக்கைகள்' பற்றிய தெளிவற்ற சந்தேகங்களின் அடிப்படையில், ஆதாரங்கள் இல்லாமலேயே நபர்களை எதேச்சதிகாரமாக கைது செய்ய அனுமதியளிக்கிறது. கைதிகளை 90 நாட்கள் வரை விசாரணையின்றி காவலில் வைக்க முடியம், இது 18 மாதங்கள் வரை நீட்டிக்கப்படலாம். நிரபராதி என்ற அனுமானத்தின் அடிப்படையில் ஒரு முழுமையான மற்றும் நியாயமான நீதிமன்ற விசாரணைக்கான உரிமைக்கு குழிபறிக்கும் வகையில், நடுவர் மன்றம் இல்லாமல் மேல் நீதிமன்றத்தில் விசாரணைகள் நடத்தப்படுகின்றன. பின்னர் நீதிமன்றத்தில் ஆதாரமாக பயன்படுத்தப்படுத்துவதன் பேரில், ஒப்புதல் வாக்குமூலங்களைப் பெறுவதற்காக தாம் சித்திரவதை செய்யப்பட்டதாக பல கைதிகள் புகார் அளித்துள்ளனர்.

மனித உரிமைகள் கண்காணிப்பகம், பாதுகாப்புப் படையினரால் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் ஏனைய சித்திரவதை முறைகள் உட்பட கடுமையான துஷ்பிரயோகங்களை ஆவணப்படுத்தியுள்ளது. 2017 ஜூலையில் வெளியிடப்பட்ட அரசாங்க புள்ளிவிவரங்கள், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 70 கைதிகள் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணைக் காவலில் வைக்கப்பட்டுள்ளதோடு, மேலும் 12 பேர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் திசாநாயக்க அரசாங்கம் பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி குறைந்தது இரண்டு நபர்களையாவது தடுத்து வைத்தது. தென்கிழக்கு இலங்கையின் பிரபல சுற்றுலா தலமான அருகம் குடாவில் உள்ள யூத ஆலயம் மற்றும் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைத்து திட்டமிடப்பட்ட பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு (TID) கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்தது. அவர்கள் பாதுகாப்பு அமைச்சராக இருந்து ஜனாதிபதி திசாநாயக்கவினால் ஒப்புதல் வழங்கப்பட்டு, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ், 90 நாள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பயங்கரவாத தடைச் சட்டம் 'துஷ்பிரயோகம் செய்யப்படமாட்டாது' என்ற ஹேரத்தின் கூற்று, இந்த கொடூரமான சட்டத்தின் வரலாற்றையும் ஜே.வி.பி.யின் அரசியல் அவப்பேறையும் மூடிமறைக்க முயற்சிக்கும் இரட்டைப் பேச்சு ஆகும். பயங்கரவாத தடைச் சட்டம் 'துஷ்பிரயோகம்' செய்யப்படவில்லை. அதன் நோக்கத்தின்படி, அரசியல் எதிரிகளை ஒடுக்குவதற்கும் அடிப்படை ஜனநாயக மற்றும் சட்ட உரிமைகளை அபகரிப்பதற்கும் அது திட்டமிட்டபடி அடுத்தடுத்த அரசாங்கங்களால் பயன்படுத்தப்பட்டது.

பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு பதிலாக புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த முந்தைய நிர்வாகங்கள் மேற்கொண்ட முயற்சிகள், பொதுமக்களை தவறாக வழிநடத்தும் நோக்கம் கொண்டவை ஆகும். வெறுக்கப்பட்ட சட்டத்தை திருத்துவதற்கான உறுதிமொழிகள் ஒருபுறம் இருக்க, முன்மொழியப்பட்ட மாற்றங்களோ அதன் அனைத்து ஜனநாயக விரோத அங்கங்களையும் தக்க வைத்துக் கொண்ட ஒப்பனை மாற்றங்களாகும்.

2017ஆம் ஆண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னாள் அரசாங்கம் “பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை” உருவாக்கியது. 2023 இல் விக்கிரமசிங்க நிர்வாகம் 'பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை' அறிமுகப்படுத்தியது. இரண்டு அரசாங்கங்களும் தாம் பயங்கரவாத தடைச் சட்டத்தை மாற்ற விரும்புவதாகக் கூறிக்கொண்டாலும், அவர்களின் பிரேரணைகள் அதன் கடுமையான விதிகள் பலவற்றைத் தக்கவைத்துக் கொண்டன. தற்போதைய ஆட்சியானது இந்த மாதிரியான தோரணையை அப்படியே கைவிட்டுள்ளது.

சோசலிச சமத்துவக் கட்சியும் அதன் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும் (பு.க.க.), பயங்கரவாத தடைச் சட்டத்தை அதன் தொடக்கத்திலிருந்தே எதிர்த்து வந்ததுடன், அதனுடன் பொது மக்கள் பாதுகாப்புச் சட்டம், அத்தியாவசியப் பொதுச் சேவைகள் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்டம் போன்ற பிற அடக்குமுறைச் சட்டங்களையும் இரத்துச் செய்யத் தொடர்ந்து போராடி வருகின்றன. சோசலிச சமத்துவக் கட்சி இனவாத யுத்தம் மற்றும் ச்சபயங்கரவாத தடைச் சட்டம் போன்ற ஜனநாயக விரோத சட்டங்களுக்கு எதிராகவும் தீவு முழுவதிலும் - சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லீம் - உழைக்கும் மக்களை ஐக்கியப்படுத்தவும் பிரச்சாரம் செய்து.

பரந்த கொழும்பு அரசியல் ஸ்தாபனத்தைப் போலவே ஜே.வி.பி./தே.ம.ச.யும் பாதுகாப்புப் படைகளுடன் வலுவான உறவுகளைக் கொண்டுள்ளது. இவை இந்த வார அறிவிப்பைக் கொண்டாடும் என்பதில் சந்தேகமில்லை. விடுதலைப் புலிகளுக்கு எதிரான ஏறக்குறைய மூன்று தசாப்த கால யுத்தத்தின் போது இலங்கை இராணுவம் இழைத்த போர்க்குற்றங்கள் மற்றும் 2009 இல் யுத்தம் முடிவடைந்த பின்னர் நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகளை கோரும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களை, திசாநாயக்க அரசாங்கம் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.

ஜே.வி.பி., தேசிய மக்கள் சக்தியாக (தே.ம.ச.) விரிவாக்கமடைந்தமை, ஓய்வுபெற்ற இராணுவ மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் குழுக்களை -ஓய்வுபெற்ற முப்படைகள் கூட்டமைப்பு மற்றும் ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரிகள் கூட்டமைப்பை- ஸ்தாபிப்பதை உள்ளடக்கியது. இவற்றில் பெரும்பாலும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடைய தனிநபர்கள் அடங்குவர்.

தொழிலாள வர்க்கமானது தனது அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்கு எதிராக புதிய ஆட்சியின் அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களை உணர்ந்து அதற்கேற்ப தயாராக வேண்டும். சர்வதேச நாணய நிதியம் சுமத்தியுள்ள சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டமும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதும் முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தில் இருந்து பிரிக்க முடியாதவை.

தங்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதான அரசாங்கத்தின் தாக்குதலை எதிர்க்க, நாடு முழுவதிலும் உள்ள தொழிலாளர்கள், தொழிற்சாலைகளிலும் அலுவலகங்கள், பெருந்தோட்டங்கள் மற்றும் கிராமப்புற சமூகங்களிலும் தங்கள் சொந்த நடவடிக்கைக் குழுக்களை உருவாக்கி, விகாரங்களைத் தங்கள் கைகளில் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தக் குழுக்கள், இலங்கை முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் அவற்றுடன் இணைந்த தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் அனைத்திலும் இருந்து சுயாதீனமாக இருக்க வேண்டும்.

சோசலிச சமத்துவக் கட்சி இந்த போராட்டத்தை கலந்துரையாடுவதற்கும் ஒருங்கிணைப்பதற்கும் இந்த நடவடிக்கைக் குழுக்களின் பிரதிநிதிகளைக் கொண்ட தொழிலாளர்களதும் கிராமப்புற வெகுஜனங்களதும் ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான மாநாட்டிற்கு பிரச்சாரம் செய்து வருகிறது. இந்த அடக்குமுறைச் சட்டங்களை நீக்குவது இந்த மாநாட்டின் மையக் கோரிக்கையாகவும், சோசலிச மற்றும் சர்வதேச வேலைத்திட்டத்திற்கு அர்ப்பணித்துக்கொண்ட தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கான புரட்சிகரப் போராட்டத்தின் ஒருங்கிணைந்த அங்கமாகவும் இருக்கும்.

நவம்பர் 14 பொதுத் தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சி இந்த அரசியல் வேலைத்திட்டத்திற்காக போராடுவதற்காக கொழும்பு, வடக்கில் யாழ்ப்பாணம் மற்றும் மத்திய தோட்டப் பகுதியான நுவரெலியா ஆகிய மூன்று தேர்தல் மாவட்டங்களில் 41 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. இந்த முன்னோக்கை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு ஆதரவளித்து எங்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுமாறு தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

Loading