ஜனாதிபதி திசாநாயக்க தேசத்திற்கு ஆற்றிய உரை - பூகோள மூலதனத்திற்கும் இலங்கை பெருவணிகத்திற்குமான ஒரு அர்ப்பணிப்பு

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க புதன்கிழமை மாலை 'தேசத்திற்கு' ஆற்றிய உரை, தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். அவரது மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.)/தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உலக மூலதனத்திற்கும் இலங்கை முதலாளித்துவத்திற்கும் கட்டுப்பட்ட வலதுசாரி முதலாளித்துவ நிர்வாகமாக இருக்கும்.

இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, 25 செப்டம்பர் 2024 அன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய போது [Photo: Screenshot/Sri Lankan Presidenti's Media Division ]

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கொடூரமான சிக்கன நடவடிக்கைகளைத் திணிப்பதே வணிகத்தின் முதல் கட்டளை என்று திசாநாயக்க தெளிவுபடுத்தினார்.

திசாநாயக்கவின் உரையானது ஆரம்பம் முதல் இறுதி வரை, தேசியவாத வசைமாரியாக இருந்தது. தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு அனைவரும் அரசாங்கத்தின் கீழ் 'ஒழுக்கமுள்ள சமூகத்தில்' பணியாற்ற வேண்டும் என்று அவர் கோரினார்.

'நாங்கள் இலங்கைப் பிரஜைகள்' என்று அனைவரும் பெருமையுடன் கூறக்கூடிய ஒரு நாட்டைக் கட்டியெழுப்புவதே ஜே.வி.பி.யின் நோக்கம் என்று கூறிய அதேவேளை, அவரது உரை, சிங்களப் பேரினவாத அறைகூவல்கள் மற்றும் சிங்கள மேலாதிக்க ஒற்றையாட்சி முதலாளித்துவ அரசை நிலைநிறுத்துவதற்கான வாக்குறுதிகளால் கோர்க்கப்பட்டிருந்தது.

பிரமாண்ட தேசியக் கொடிகள் பின்னணியில் இருக்க, ஒரு ஆவேசமான தேசியவாத சிங்கள-பௌத்த சூழலுக்குள் நிகழ்த்தப்பட்ட இந்த உரை, நாடு முழுவதும் உள்ள 20 சதவீதத்துக்கும் அதிகமான தமிழ் பேசும் மக்களைப் புறக்கணித்து, சிங்களத்தில் மட்டுமே ஒலிபரப்பப்பட்டது.

பெருவணிகத்திற்கும் சர்வதேச நிதியத்திற்கும் வாக்குறுதியளித்த திசாநாயக்க, வெளிநாட்டு கடன் வழங்குனர்களுக்கு கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கனத் திட்டத்திற்கும் தனது முழு அர்ப்பணிப்பையும் வலியுறுத்தினார்.

'தற்போதைய பொருளாதாரத்தில் ஸ்திரத்தன்மையையும் நம்பிக்கையையும் அடைவது மிகவும் தீர்க்கமானது. சர்வதேச நாணய நிதியத்துடன் உடனடியாக பேச்சுவார்த்தைகளை தொடங்கவும், நீட்டிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான நடவடிக்கைகளுடன் முன்செல்லவும் நாங்கள் திட்டமிட்டுள்ளோம்,” என்று அவர் அறிவித்தார். திசாநாயக்க அர்ப்பணித்துக்கொண்டுள்ள சர்வதேச நாணய நிதிய வேலைத்திட்டத்தின் அடுத்த கட்டமானது அரசுக்கு சொந்தமான பெருமளவிலான நிறுவனங்களை தனியார்மயமாக்குதல், இலட்சக கணக்கான தொழில்களை அழித்தல், சுங்கத் தீர்வைகளை அதிகரித்தல் மற்றும் வரிகளை அதிகரிப்பதையும் உள்ளடக்கியதாகும்.

அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட உடனேயே, தீவின் மிகவும் சக்திவாய்ந்த வணிக ஆலோசனை குழுவான இலங்கை வர்த்தக சம்மேளனம், சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு இடையூறு இருக்கக் கூடாது என்பது உட்பட பத்து அம்ச கோரிக்கைகளுடன் திசாநாயக்கவை வாழ்த்தியது.

கொழும்பு பங்குச் சந்தை மற்றும் கடன் பத்திரங்களின் விலைகள் திங்களன்று ஆரம்பத்தில் வீழ்ச்சியடைந்த அதேவேளை, உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னரும் அவரது பதவியேற்பு விழாவில் திசாநாயக்க சுருக்கமான வணிக சார்பு கருத்துக்களை வெளியிட்ட பின்னரும் செப்டம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் அது மீண்டும் உயர்ந்தது.

செவ்வாயன்று சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிரிஸ்டலினா ஜோர்ஜிவா திசாநாயக்கவிற்கு எழுதிய கடிதத்தில், 'சர்வதேச நாணய நிதியத்துக்கும் இலங்கைக்கும் இடையிலான பரஸ்பர நன்மையான உறவை ஆழப்படுத்த நான் எதிர்பார்க்கிறேன்...' என்றார்

திசாநாயக்க அவரது உரையில், தனது அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த பாராளுமன்றத்தை கலைத்து தேசிய தேர்தலை நடத்துவது அவசியமானது என்றார். “மக்களின் விருப்பத்தை துல்லியமாக பிரதிபலிக்கும் பாராளுமன்றம் எங்களுக்கு அவசியம். தற்போதுள்ள பாராளுமன்றம் அந்த விருப்பத்தை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை,” என்று அவர் கூறினார்.

ஆனால் 'மக்களின் விருப்பம்' சர்வதேச நாணய நிதியத்தின் கொடூரமான சமூக சிக்கன நடவடிக்கைகள் அல்ல. மாறாக, ஜே.வி.பி/தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்த மில்லியன் கணக்கான உழைக்கும் மக்கள், முன்ன்னெப்போதும் இல்லாத வகையில் சமூகத் தாக்குதல்களைத் திணித்துள்ள அரசியல் ஸ்தாபனத்தின் அனைத்து பாரம்பரியக் கட்சிகளுக்கும் எதிராக வளர்ச்சிகண்டுவரும் வெகுஜன எதிர்ப்பின் ஒரு பாகமாகவே திசாநாயக்கவுக்கு வாக்களித்தனர்.

2022 ஏப்ரல்-ஜூலை மாதங்களில் நடந்த வெகுஜன எதிர்ப்புக்கள் மற்றும் இரண்டு பொது வேலைநிறுத்தங்கள் கோட்டாபய இராஜபக்ஷவையும் அவரது அரசாங்கத்தையும் அதிகாரத்திலிருந்து விரட்டியது. இதே இயக்கம்தான் இப்போது அவருக்குப் பதிலாக பதவியில் இருத்தப்பட்ட ரணில் விக்கிரமசிங்கவையும் அவரது நிர்வாகத்தையும் வெளியேற்ற வாக்களித்துள்ளது.

வெளியேறும் 225 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் மூன்று உறுப்பினர்களை மட்டுமே கொண்டிருந்த ஜே.வி.பி/தேசிய மக்கள் சக்தி, பெருவணிகம் மற்றும் சர்வதேச நிதி மூலதனத்தின் மற்றொரு அரசியல் கருவியே என்பது அம்பலத்துக்கு வரும் முன்பே, ஆரம்ப ஆதரவு அடித்தளத்தை பாராளுமன்ற பெரும்பான்மையாக மாற்றிக்கொள்ள முயற்சிப்பதே திசாநாயக்க திடீர் தேர்தலை அழைத்ததற்கு உண்மையான காரணம் ஆகும்.

திசாநாயக்கவும் ஜே.வி.பி.யும் தங்கள் அதிகாரத்தை பலப்படுத்திக் கொள்ளவும், சர்வதேச நாணய நிதியம் கட்டளையிடும் நடவடிக்கைகளின் அடுத்த கட்டத்திற்கு செல்லவும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த அடுத்த கட்ட நடவடிக்கைகளில், தவிர்க்க முடியாது வெடிக்கவுள்ள தொழிலாள வர்க்கத்தின் வெகுஜன எதிர்ப்பை நசுக்குவதும் அடங்கும்.

அரசியல் எதிரிகளுக்கு எதிரான மெல்லிய அச்சுறுத்தலில், “இந்த சந்தர்ப்பத்தில், நம் நாட்டைக் கட்டியெழுப்புவதில் கூட்டுக் கவனத்துடன் அரசியலில் ஈடுபடுவதன் முக்கியத்துவத்தை நான் முன்னிலைப்படுத்த விரும்புகிறேன். அந்தத் தலைமையை வழங்குவதற்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்... நமது தேசத்தின் முன்னேற்றத்திற்கு உண்மையாகவும் நேர்மறையாகவும் அர்ப்பணிப்புடன் செயல்படும் அனைவருக்கும் எங்கள் கதவுகள் திறந்திருக்கும்,” என அவர் அறிவித்தார்.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், திசாநாயக்கவின் நிர்வாகம் எந்தவொரு கருத்து வேறுபாடுகளையும் பொறுத்துக்கொள்ளாது என்பதாகும். இந்த அச்சுறுத்தல்கள், விக்கிரமசிங்க அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு எதிராக போராட்டம் நடத்திய மற்றும் வேலைநிறுத்த நடவடிக்கைகளில் ஈடுபட்ட பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு எதிராக இலக்கு வைக்கப்பட்டதாகும். ஜே.வி.பி.யின் கட்டுப்பாட்டில் உள்ள தொழிற்சங்கங்கள் இந்தப் போராட்டங்களை நசுக்குவதில் முக்கிய பாத்திரம் ஆற்றின. தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்யாமல், திசாநாயக்கவுக்கு வாக்களித்து, ஜே.வி.பி/தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு ஆதரவளிக்குமாறும் அந்த அரசாங்கம் தொழிலாளர்களின் கோரிக்கைகள் கிடைப்பதை உறுதிசெய்யும் என்றும் கூறினர்.

'சட்டத்தை மதிக்கும் தேசத்தை உருவாக்குதல் மற்றும் ஒழுக்கமான சமூகத்தை வளர்ப்பது' என்ற திசாநாயக்கவின் கூற்று, இந்த வெளிச்சத்தில் வைத்தே பரிசீலிக்கப்பட வேண்டும். ஆனால் அவர் என்ன வகையான சட்டங்களைக் குறிப்பிடுகிறார்?

அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த இலங்கை அரசாங்கங்கள், குற்றஞ்சாட்டப்படாமல் எதிரிகளைக் தடுப்புக் காவலில் வைப்பதற்கான பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் புதிய வடிவம், வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களை கடுமையான சிறைத்தண்டனையுடன் தண்டிப்பதற்கான அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டம் உட்பட, ஒரு சரமாரியான பிற்போக்கு சட்டங்களைத் திணித்துள்ளன. சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் பாரிய போராட்ட நடவடிக்கையை எதிர்கொண்டுள்ள திசாநாயக்கவின் நிர்வாகம், இந்த அடக்குமுறைச் சட்டங்களைப் பயன்படுத்தத் தயங்காது.

ஆனால் அவரது அனைத்து பகட்டான உரைகளைப் பொறுத்தவரையில், திசாநாயக்கவின் நிர்வாகம் தான் நடைமுறைப்படுத்துவதாக உறுதியளித்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன வெட்டுக்களுக்கு வெகுஜன ஆதரவைக் கொண்டிருக்கவில்லை. மற்றும் வெகுஜனங்கள் மத்தியில் நிலவும் ஆழ்ந்த சந்தேகத்தை எதிர்கொள்கிறது, இல்லையென்றாலும் தமிழ் மக்கள் மத்தியில் வெளிப்படையான விரோதத்துக்கு முகங்கொடுக்கின்றது.

ஏறக்குறைய தனது உரையின் ஆரம்பத்திலேயே, திசாநாயக்க ஒரு திடுக்கிடும் பிரகடனத்தை வெளியிட்டார்:

“இந்த வெற்றிக்காக அர்ப்பணித்த மற்றும் உயிர்த்தியாகம் செய்த முந்தைய தலைமுறையின் துணிச்சலான ஆண்கள் மற்றும் பெண்களை நாங்கள் கௌரவிப்பதோடு நினைவுகூருகிறோம். இந்த வெற்றியையும், நாம் கட்டியெழுப்ப முயற்சிக்கும் வளமான தேசத்தையும் அவர்களின் மரபுரிமைக்கு ஒரு புகழஞ்சலியாக நான் பார்க்கிறேன்.

இது 1971 மற்றும் பின்னர் 1988-89 இல் ஜே.வி.பி. தலைமையிலான இரண்டு ஆயுதக் கிளர்ச்சிகளில் அரசாங்க பாதுகாப்புப் படைகளால் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான கிராமப்புற இளைஞர்களுக்கு செலுத்தும் புகழஞ்சலி அல்ல.

மாறாக, சிங்கள மேலாதிக்க ஒற்றை ஆட்சியை பலவீனப்படுத்துவதை எதிர்ப்பதாக கூறிக்கொண்டு, கிளர்ச்சியில் ஈடுபட்ட பின்னர், பிரதமரும் பின்னர் ஜனாதிபதியுமான ரணசிங்க பிரேமதாசவுடன் மோதிக்கொண்டதை அடுத்து, 1989 இல் இலங்கை அரசால் பிடித்தவுடன் கொல்லப்பட்ட ரோஹன விஜேவீர மற்றும் ஏனைய சிரேஷ்ட ஜே.வி.பி. தலைவர்களுக்கு செலுத்தும் புகழஞ்சலி ஆகும்.

இந்த பாசிச தாக்குதல்களில், சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் உறுப்பினர்கள் உட்பட நூற்றுக்கணக்கான இடதுசாரிகள் மற்றும் தொழிலாளர் அமைப்புகளின் தலைவர்களை ஜே.வி.பி. குறிவைத்தது.

ஜே.வி.பி. தனது கொலைகாரத் தாக்குதல்களையோ அல்லது அவர்களை ஊக்குவித்த அதிதீவிர சிங்களப் பேரினவாதத்தையோ ஒருபோதும் நிராகரிக்கவில்லை. அதே நேரம், விஜேவீரவில் தொடங்கி, அந்தக் கொலைகளைக்கு கட்டளையிட்டவர்களைக் கொண்டாடுவதை ஜே.வி.பி. வழக்கமாகக் கொண்டுள்ளது.

திசாநாயக்க, தனது நிர்வாகமானது 'இனம், மதம், வர்க்கம் மற்றும் சாதி அடிப்படையிலான பிளவுபடுத்தும் சகாப்தத்துக்கு முழுமையாக முடிவுகட்டி, பன்முகத்தன்மையை மதிக்கும் ஒரு ஐக்கிய இலங்கை தேசத்தை கட்டியெழுப்ப ஒரு நிரந்தர வேலைத்திட்டத்தை துவக்கி வருகிறது' என்று இழிந்த முறையில் அறிவித்தார். இந்தக் கூற்று போலியானது.

எளிய மொழியில் விளக்கினால், இது தமிழர்கள் மற்றும் பிற சிறுபான்மையினரின் உரிமைகளை நசுக்குவதையே குறிக்கும். இந்த மாத தொடக்கத்தில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கில் வாக்குகளை கோரும் போது, ​​ ஒரு மறைமுகமான அச்சுறுத்தலை விடுத்த திசாநாயக்க, புதிய அரசாங்கத்திற்கான தெற்கில் உள்ள மக்களின் விருப்பத்தை தடுப்பவர்களாக தமிழர்கள் கருதப்படக் கூடாது என்று எச்சரித்தார்.

“தெற்கில் மக்கள் மாற்றத்திற்காக அணிவகுத்து நிற்கும் போது, ​​நீங்கள் மாற்றத்தை எதிர்ப்பவர்களாக மாறினால், தென்னிலங்கை மக்களிடையே எத்தகைய மனநிலை உருவாகும் என்பதை தயவு செய்து சிந்தியுங்கள். யாழ்ப்பாணம் [வடக்கின் பிரதான நகரம்] அந்த மாற்றத்திற்கு எதிரானதாக முத்திரை குத்தப்படுவதை நீங்கள் விரும்புகிறீர்களா? வடக்கு அவ்வாறு முத்திரை குத்தப்படுவதை நீங்கள் விரும்புகிறீர்களா?” என அவர் கேட்டார்.

ஜனாதிபதியாக அவர் எடுத்த முதல் முடிவுகளில் ஒன்றில், போர்க்குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்ட சம்பத் துயகோந்தவை புதிய பாதுகாப்புச் செயலாளராக திசாநாயக்க நியமித்தார். குற்றம் சாட்டப்பட்ட மற்றொரு போர்க்குற்றவாளி கமல் குணரத்னவிடமிருந்து அவர் பதவியை ஏற்கிறார். 2009 ஏப்ரலில் நகர்ப்புறமான புதுக்குடியிருப்பில் நூற்றுக்கணக்கான தமிழர்களைக் கொன்ற கிட்டத்தட்ட 20,000 ராக்கெட்டுகளை ஏவிய ஹெலிகாப்டர் துப்பாக்கிப் படையான எண் 09 படைப்பிரிவின் விங் கமாண்டராக துயகோந்தா இருந்தார்.

அவரது அரசாங்கம் 'தேசத்தை' கட்டியெழுப்பத் தயாராக உள்ளது என்ற திசாநாயக்கவின் வாய்வீச்சு கூற்றுக்கள், அவரது நிர்வாகம் தொழிலாள வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களிடமிருந்து சர்வதேச நிதி மூலதனத்திற்கு செலுத்துவதற்குத் தேவையான நிதியை பிழிந்தெடுப்பதற்கு அவசியமான அனைத்தையும் செய்யும் என்று பெருவணிகத்திற்கு கொடுக்கும் ஒரு உறுதிமொழியாகும்.

புதிய ஆட்சி சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளை திணிப்பதற்கு எதிராக வெடிக்கும் அடுத்தடுத்த போராட்டங்களை நசுக்குவதற்கு ஜே.வி.பி./தேசிய மக்கள் சக்தி விரைவாக தயாராகி வருகிறது என்று சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) தொழிலாள வர்க்கத்தை எச்சரிக்கிறது. இந்தத் தாக்குதலை எதிர்த்துப் போராடுவதற்குத் தேவையான அரசியல் மற்றும் அமைப்பு ரீதியான தயாரிப்புகளைச் செய்யுமாறு தொழிலாளர்களை நாங்கள் அழைக்கிறோம்.

ஒவ்வொரு தொழிற்சாலை, வேலைத் தளங்கள் மற்றும் பெருந்தோட்டங்கள் மற்றும் சுற்றுப்புறங்களிலும், அத்துடன் கிராமப்புற ஏழைகள் மத்தியிலும், அனைத்து முதலாளித்துவ கட்சிகள் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களிலிருந்தும் சுயாதீனமாக, நடவடிக்கைக் குழுக்களைக் கட்டியெழுப்புவதன் மூலம் இந்த போராட்டத்தை உங்கள் கைகளில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதே இதன் அர்த்தமாகும்.

இந்த நடவடிக்கைக் குழுக்களில் இருந்து ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை அடிப்படையாகக் கொண்ட, தொழிலாளர்களதும் கிராமப்புற வெகுஜனங்களினதும் ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான மாநாட்டை கட்டியெழுப்புவது அவசியமாகும். அத்தகைய மாநாடு, முதலாளித்துவ ஆட்சியை தூக்கியெறிந்து, சோசலிச வேலைத்திட்டத்தை செயல்படுத்தும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்காக, கலந்துரையாடல் நடத்தி, கிராமப்புற ஏழைகளை ஒன்றிணைத்துக்கொண்ட, தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கத்தையும் ஒரு சர்வதேச முன்னோக்கையும் அபிவிருத்தி செய்யப் போராட வேண்டும்.

Loading