உள்ளூராட்சித் தேர்தலை முடக்கும் இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகளை எதிர்த்திடு! ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டு! 

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணாலம்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இலங்கை அரசாங்கம், மார்ச் 9 நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலைத் தடுப்பதற்கு திட்டமிட்டு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இது உழைக்கும் மக்களின் வாக்குரிமையைப் பயன்படுத்துவதற்கான அடிப்படை ஜனநாயக உரிமையின் மீதான பெரும் தாக்குதலாகும்.

விக்கிரமசிங்க ஆட்சியின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) கண்டிக்கிறது. இது சர்வதேச நாணய நிதியத்தால் ஆணையிடப்பட்ட அரசாங்கத்தின் கொடூரமான சிக்கன நடவடிக்கைகளுக்கு விரோதமான எதிர்ப்பை அடக்குவதற்கான தயாரிப்பில், ஜனநாயக உரிமைகள் மீது மேற்கொள்ளும் பரந்த தாக்குதல்களின் ஒரு பகுதியாகும்.

20 பெப்பிரவரி 2023 திங்கட்கிழமை, இலங்கையின் கொழும்பில் உள்ளூராட்சித் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்ட பேரணியை பொலிஸ் தடுத்து நிறுத்திய பின்னர், இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியின் ஆதரவாளர்கள் கோஷங்களை எழுப்பினர். [AP Photo/Eranga Jayawardena]

அனைத்து முதலாளித்துவ கட்சிகள் மற்றும் துரோக தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக, வேலைத்தளங்கள் மற்றும் அயல் பிரதேசங்களிலும் நடவடிக்கை குழுக்களை உருவாக்குவதன் மூலம், ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளை பாதுகாக்க தொழிலாளர்களை அணிதிரளுமாறு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம். அரசின் சமீபத்திய நகர்வுகள் இந்தப் பணியின் அவசரத்தையே எடுத்துக் காட்டுகின்றன.

சனிக்கிழமை கொழும்பில் ரோட்டரி கழகத்தின் மாவட்ட மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி விக்கிரமசிங்க, தனது சர்வாதிகார நோக்கங்களைப் பற்றி வார்த்தைகளைப் பிரயோகிப்பதையிட்டு சிறிதும் கவலைப்படவில்லை. 'இந்த ஆண்டு, எனது முதல் முன்னுரிமை பொருளாதாரத்தை மீட்பதே ஆகும்... பொது ஒழுங்கு இல்லாமல் பொருளாதார மீட்சி இருக்க முடியாது' என்று அவர் அறிவித்தார்.

'நாடு அராஜகத்திற்கு செல்ல அனுமதிக்க மாட்டோம்' என்று ஜனாதிபதி அப்பட்டமாக எச்சரித்தார். வாக்குச்சீட்டைப் பயன்படுத்துவதன் மூலம் அடுத்த ஆண்டு நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்க முடியும், ஆனால் அது பொருளாதார மீட்சிக்குப் பிறகுதான்”, என்று அவர் கூறினார்.

செய்தி தெளிவானது: விக்கிரமசிங்க ஆட்சியின் கீழ் 'செயல்படும் ஜனநாயகம்' இருக்காது. அவர் இப்போது ஜனநாயக உரிமைகளை நசுக்கித் தள்ளும் நிலையில், அடுத்த ஆண்டு தேர்தலை அனுமதிப்பேன் என்ற அவரது கூற்றுக்கள் ஒரு மோசடியாகும். மற்றும் எதிர்காலத்தில் தேவைப்படின் அவர் அதை மீண்டும் செய்வார்.

விக்கிரமசிங்கவின் அறிவுறுத்தலின் கீழ், உள்ளூராட்சி தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணையத்திற்கு தேவையான நிதியை வழங்க அரச திறைசேரி மறுத்துவிட்டது. 'அத்தியாவசிய அரசாங்க செலவுகளுக்காக மட்டுமே நிதி வழங்குமாறு' அவர், பெப்ரவரி 8 அன்று திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தனவிற்கு உத்தரவிட்டார். அத்தியாவசிய செலவுகள் பட்டியலில் இருந்து உள்ளாட்சி தேர்தல் அகற்றப்பட்டுள்ளது.

நிதி பற்றாக்குறை காரணமாக நிர்ணயிக்கப்பட்ட தேதியில் தேர்தலை நடத்த முடியாது என தேர்தல் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்தில் நேற்று தெரிவித்தது. ஏற்கனவே உள்ளாட்சித் தேர்தலை நிறுத்தக் கோரி அரசுக்கு ஆதரவான இராணுவ கேணல் ஒருவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

விக்கிரமசிங்க மற்றும் ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.) தலைமையிலான கூட்டணி எந்தவொரு தேர்தலிலும் கிட்டத்தட்ட தோல்வியை சந்திக்கும். இலங்கையின் சிந்தனைக் குழுவான வெரிட் ரிசேர்ஜ் நடத்திய ஆய்வின்படி, அரசாங்கத்தின் அங்கீகார மதிப்பீடுகள் 10 சதவீதமாக குறைந்துள்ளன.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தேசிய அரசாங்கத்தை மாற்றாது என்றாலும், ஒரு தேர்தல் தோல்வி மேலும் அரசியல் ஸ்திரமின்மைக்கு இட்டுச்சென்று, அதன் கடும் எதிர்ப்புக்குள்ளான பொருளாதார வேலைத்திட்டத்தை தடம் புரளச் செய்து, சர்வதேச நாணய நிதியத்துடனான 2.9 பில்லியன் டொலர் பிணை எடுப்பு கடனுக்கான பேச்சுவார்த்தைகளை ஆபத்தில் ஆழ்த்தலாம் என்று விக்கிரமசிங்க ஆட்சி கவலை கொண்டுள்ளது.

விக்கிரமசிங்க 'பொருளாதார மீட்சிக்கான' பாதை பற்றிப் பேசும்போது, அவர் ஈவிரக்கமற்ற சிக்கன நடவடிக்கைகளை அர்த்தப்படுத்துகிறார்: அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களைத் தனியார்மயமாக்குவதன் மூலம் பொதுச் செலவினங்களை பாரியளவில் வெட்டித்தள்ளுதல், வரிகளை அதிகரித்தல், ஆயிரக்கணக்கான அரச தொழில்களை அழித்தல் மற்றும் ஊதியங்கள் மற்றும் சமூக மானியங்களைக் குறைத்தலும் இந்த சிக்கன நடவடிக்கைகளில் அடங்கும்.

அரசாங்கம் கடந்த ஆண்டு 75 சதவீத மின் கட்டண உயர்வுக்கு மேலதிகமாக கடந்த வெள்ளியன்று அதை இன்னும் 66 சதவீதத்தால் உயர்த்தியது. இந்த நடவடிக்கையால் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள இலட்சக் கணக்கான குடும்பங்கள் மின்சாரம் பெற முடியாமல் போகும்.

எந்தவொரு எதிர்ப்பிற்கும் அரசாங்கத்தின் பதிலிறுப்பு அடக்குமுறையாகும். நேற்று, உள்ளூராட்சித் தேர்தலை நடத்தக் கோரி கொழும்பில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி (ஐ.ம.ச.) அழைப்பு விடுத்திருந்த ஆர்ப்பாட்டத்தை நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகித்து கலைக்க, பொலிஸாரும் படையினரும் திரட்டப்பட்டிருந்தனர். குருநாகலில் எதிர்க்கட்சியான மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) மற்றும் அதன் தேசிய மக்கள் சக்தி (தே.ம.ச.) நடத்திய இதேபோன்ற போராட்டத்தையும் போலீசார் தாக்கினர்.

இந்த பொலிஸ் தாக்குதல்களை சோசலிச சமத்துவக் கட்சி சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கிறது. எவ்வாறாயினும், தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் தங்கள் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க இந்த முதலாளித்துவக் கட்சிகளை நம்ப வேண்டாம் என்று நாங்கள் எச்சரிக்கிறோம். சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கனக் கொள்கைகளை அமுல்படுத்துவதில் விக்கிரமசிங்க அரசாங்கத்துடன் ஐ.ம.ச. அல்லது ஜே.வி.பி.க்கு எந்தவிதமான அடிப்படை வேறுபாடுகளும் இல்லை. அவர்களின் ஒரே கவலை, மதிப்பிழந்த ஆட்சியால் உழைக்கும் மக்களின் எழுச்சி பெறும் எதிர்ப்பைக் கட்டுப்படுத்த முடியாமல்போகும் என்பதுதான். அதே திட்ட நிரலை நிறைவேற்றுவதற்கான ஒரு மாற்றீடு கட்சியாக அவை தங்களை ஆளும் வர்க்கத்திற்கு காட்டுகின்றன.

தொழிலாளர்கள் மத்தியில் பெருகிவரும் கோபத்திற்கு மத்தியில், தொழிற்சங்கங்கள் புதன்கிழமையன்று கடுமையான வரி உயர்வுகளை எதிர்த்து ஒரு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டன. இரண்டு வாரங்களில் இரண்டாவது போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. இதில் கொழும்பு துறைமுகம், பெற்றோலியம் மற்றும் மின்சாரம், வங்கிகள், நீர் வழங்கல் மற்றும் வைத்தியர்கள் மற்றும் பொறியியலாளர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

தங்களின் வாழ்க்கை நிலைமைகள் விரைவாக மோசமடைவதையிட்டு உழைக்கும் மக்கள் மத்தியில் வளரும் பாரிய எதிர்ப்பின் தெளிவான அடையாளமாக, தொழிற்சங்கங்கள் தங்கள் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவிசாய்க்காவிட்டால் மார்ச் 1 முதல் பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்போவதாக அறிவித்துள்ளன.

தொழிற்சங்கங்கள் இந்தப் போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களுக்கு அழைப்பு விடுப்பது, அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தை நடத்துவதற்கு அல்ல, மாறாக முதலாளித்துவ ஆட்சியை அச்சுறுத்தும் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற உழைப்பாளர்களின் ஒரு சுயாதீன இயக்கம் தோன்றுவதைத் தடுப்பதற்காகவே ஆகும், என்று சோசலிச சமத்துவக் கட்சி தொழிலாள வர்க்கத்தை எச்சரிக்கிறது. விக்கிரமசிங்க, ரோட்டரி கழகத்தில் உரையாற்றிய போது சலுகைகள் வழங்கப்பட மாட்டாது என்று உறுதியாக அறிவித்திருக்கின்ற போதிலும், அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க முடியும் என்ற மாயையை தொழிற்சங்கங்கள் ஊக்குவிக்கின்றன.

சர்வதேச நாணய நிதிய சிக்கன திட்ட நிரலை அமுல்படுத்துவதில் உறுதியாக உள்ள ஆளும் ஸ்ரீ.ல.பொ.ஜ.மு., எதிர்க்கட்சியான ஐ.ம.ச. மற்றும் ஜே.வி.பி. போன்ற முதலாளித்துவக் கட்சிகளாலேயே இந்த தொழிற்சங்கங்கள் அனைத்தும் கட்டுப்படுத்தப்படுகின்றன. அவை கடந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஏற்பட்ட பாரிய வெகுஜன எழுச்சியை காட்டிக்கொடுத்து, மில்லியன் கணக்கானவர்கள் பங்கேற்ற வேலைநிறுத்த நடவடிக்கையை வேண்டுமென்றே மட்டுப்படுத்தி, கைவிட்டனர். அதன் மூலம் கோடாபய இராஜபக்ஷ நாட்டை விட்டு ஓடிய பின்னர் ஜனநாயக விரோதமான முறையில் விக்கிரமசிங்க நியமிக்கப்படுவதற்கு கதவைத் திறந்து விட்டனர்.

முதலாளித்துவ முறைமைக்குள் தொழிலாள வர்க்கத்திற்கு தீர்வு கிடையாது. இலங்கையில் முன்னெப்போதும் இல்லாத பொருளாதார கொந்தளிப்பானது கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போரால் துரிதப்படுத்தப்பட்ட ஆழமடைந்து வரும் பூகோள நெருக்கடியின் விளைவாகும். உலகெங்கிலும் உள்ள ஆளும் வர்க்கங்கள், சிக்கன நடவடிக்கையின் மூலம் உழைக்கும் மக்கள் மீது இந்த சுமையை திணித்தும் எதிர்ப்பை நசுக்க ஜனநாயக விரோத வழிமுறைகளை கையாண்டும் பிரதிபலிக்கின்றன.

சோசலிச சமத்துவக் கட்சி, ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டமானது இலாப முறைமையை தூக்கி எறிந்து சோசலிச கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கான போராட்டத்துடன் பிணைந்துள்ளது என்று வலியுறுத்துகிறது. பின்வரும் கோரிக்கைகளுக்காகப் போராடுவதற்கு தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளித்துவ அரசியல் கட்சிகளைச் சாராது, தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற உழைக்கும் மக்களின் நடவடிக்கைக் குழுக்களை அவசரமாக கட்டியெழுப்ப அழைப்பு விடுக்கிறோம்:

  • அனைத்து வெளிநாட்டு கடன்களையும் தள்ளுபடி செய்! சர்வதேச வங்கியாளர்கள் மற்றும் நிதி நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் சிக்கனக் கோரிக்கைகளை நிராகரி!

  • கோடீஸ்வரர்கள் மற்றும் பெருநிறுவனங்களின் பிரமாண்டமன செல்வத்தை கைப்பற்று!

  • உழைக்கும் மக்களின் வாழ்க்கைக்கு முக்கியமான அனைத்து அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் ஏனைய வளங்களின் உற்பத்தி மற்றும் விநியோகம் தொழிலாளர்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும்! வங்கிகள், பெருநிறுவனங்கள், பெருந்தோட்டங்கள் மற்றும் ஏனைய பிரதான பொருளாதார மையங்களை தேசியமயமாக்கு!

  • பாதுகாப்பான வேலை நிலைமையுடன் அனைவருக்கும் கண்ணியமான, நல்ல ஊதியத்துடன் கூடிய தொழில் வேண்டும்! வாழ்க்கைச் செலவுப் புள்ளிக்கு ஏற்ற ஊதியம் வேண்டும்!

  • சிறு விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்து, அவர்களின் விளைபொருட்களுக்கு உத்தரவாத விலையும் மாநியமும் கொடுத்து உதவ வேண்டும்!

சோசலிச சமத்துவக் கட்சி, உழைக்கும் மக்களின் அவசரத் தேவைகளுக்காகப் போராடுவதற்கான அரசியல் மூலோபாயத்தை கலந்துரையாடுவதற்கும் வடிவமைப்பதற்கும் தீவு முழுவதிலும் உள்ள நடவடிக்கைக் குழுக்களின் பிரதிநிதிகளை அடிப்படையாகக் கொண்ட தொழிலாளர்களதும் கிராமப்புற வெகுஜனங்களதும் ஜனநாயக மற்றும் சோசலிச மாநாட்டை கூட்டுவதற்கு அழைப்பு விடுக்கிறது.

திவாலான இலாப முறைமைக்கு முடிவுகட்டவும் சோசலிச கொள்கைகளை செயல்படுத்தவும் தங்கள் சொந்த தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை நிறுவுவதன் மூலமும் மட்டுமே, தொழிலாள வர்க்கம் மற்றும் கிராமப்புற ஏழைகளால் சர்வாதிகாரத்தின் அச்சுறுத்தலை தோற்கடிக்கவும், தற்போதைய சமூக பேரழிவை முடிவுக்கு கொண்டு வரவும் முடியும். சோசலிசத்திற்கான ஐக்கியப்பட்ட போராட்டத்தில், இலங்கைத் தொழிலாளர்களின் கூட்டாளிகள், தெற்காசியாவிலும் சர்வதேச அளவிலும் அவர்களது வர்க்க சகோதர சகோதரிகளே ஆவர். 

தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற உழைப்பாளிகள் சோசலிச சமத்துவக் கட்சியுடன் இணைந்து இந்த அரசியல் போராட்டத்தை வழிநடத்துவதற்குத் தேவையான வெகுஜனப் புரட்சிகரக் கட்சியாக அதைக் கட்டியெழுப்புமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் மீதான இலங்கை அரசாங்கத்தின் ஜனநாயக விரோதத் தாக்குதலை எதிர்ப்போம்

விக்கிரமசிங்க அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலங்கை தொழிலாளர்கள் வேலைநிறுத்தமும் ஆர்ப்பாட்டமும் செய்தனர் 

இலங்கை சோ.ச.க. உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுகிறது

Loading