மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
விக்கிரமசிங்க-ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.) அரசாங்கம் நிதி ஒதுக்கீடூ செய்வதை தடுத்து, அதன் மூலம் வாக்குச் சீட்டுக்கள் அச்சிடுவதை தடுப்பதன் மூலம், மார்ச் 9 அன்று திட்டமிடப்பட்ட உள்ளூராட்சி சபைத் தேர்தலை நிறுத்துவதற்கான முயற்சிகளை முடுக்கிவிட்டுள்ளது. சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) இந்த அப்பட்டமான ஜனநாயக-விரோத நடவடிக்கையை கண்டிக்கிறது.
அரசாங்கம் தேவையான நிதியை வழங்காததால், உள்ளூராட்சித் தேர்தலுக்கான தபால் வாக்குப்பதிவை ஒத்திவைக்க தேர்தல் ஆணைக்குழு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் வாக்குச் சீட்டுக்கள் விநியோகிக்கப்படவிருந்த போதிலும், தேர்தல் ஆணைக்குழு மொத்த அச்சிடும் செலவு 410 மில்லியன் ரூபாவை ($US 1.12) செலுத்தும் வரை அவற்றை அச்சிடுவதற்கு அரசாங்க அச்சகம் மறுத்துவிட்டது. முன்னெப்போதும் இல்லாத இந்த முடிவானது அரசாங்கத்தின் அறிவுறுத்தலின் பேரில் நடந்தமை தெளிவாக உள்ளது.
அரசாங்க அச்சக அதிபர் கங்கானி லியனகே, சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரட்ணம் மற்றும் திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோரை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சந்தித்ததாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதை நிறுத்துமாறு லியனகேவுக்கு உத்தரவிடப்பட்டது.
பெப்பிரவரி 9 அன்று நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சரான விக்கிரமசிங்க, 'அத்தியாவசிய அரசாங்க செலவுகளுக்கு மாத்திரம் நிதி வழங்குமாறு' திறைசேரி செயலாளருக்கு அறிவுறுத்தினார். இந்த உத்தரவுக்கு தேர்தல் ஆணைக்குழு உள்ளடங்காது. மத்திய வங்கி ஆளுநர், அந்நிய செலாவணி பற்றாக்குறையை மேற்கோள் காட்டி, தேர்தல் நடவடிக்கைகளுக்கு போதுமான எரிபொருள் மற்றும் மின்சாரத்தைப் பெறுவதற்கு தேவையான நிதியை வழங்க வேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையையும் ஏற்க மறுத்துவிட்டார்.
நிதி நெருக்கடிகளை மேற்கோள் காட்டி கொழும்பு தனது ஜனநாயக விரோத நடவடிக்கையை நியாயப்படுத்த முயற்சிக்கிறது. இது ஒரு மோசடியாகும். பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கத்தின் 2023 வரவு செலவுத் திட்டத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் தேர்தல் தோல்வி உடனடியாக விக்கிரமசிங்க-ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. அரசாங்கத்தை கீழறுக்காது என்றாலும், அதன் முடிவு அரசியல் ஸ்திரமின்மையை ஆழப்படுத்துவதோடு சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 2.9 பில்லியன் டொலர் அவசர பிணையெடுப்பு கடனுக்கான அதன் பேச்சுவார்த்தைகளை கீழறுக்கும் என்று அது அஞ்சுகிறது.
உள்ளுராட்சி சபைத் தேர்தலை நிறுத்துவதற்கான சமீபத்திய அரசியல் சூழ்ச்சியானது பல தோல்வியுற்ற முயற்சிகளில் ஒன்றாகும். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தால் 2022 பெப்ரவரியில் நடைபெறவிருந்த கடைசி திட்டமிடப்பட்ட உள்ளூராட்சித் தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டன.
கடந்த மாதம், ஜனவரி 6 அன்று, விக்கிரமசிங்க தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களைச் சந்தித்து தேர்தலை ஒத்திவைக்க வலியுறுத்தும் முயற்சியில் ஈடுபட்டார். ஜனவரி 9 ஆம் திகதி அமைச்சரவை கூடி, அடுத்த நாள் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹபுஹின்ன அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பி, தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களிடமிருந்து கட்டுப் பணங்களைப் பெற வேண்டாம் என்று கட்டளையிட்டார். மாவட்ட செயலாளர்கள் தேர்தலில், தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக செயல்படுகின்றனர். பின்னர் மக்களின் எதிர்ப்பை அடுத்து இந்த உத்தரவு விலக்கிக்கொள்ளப்பட்டது.
பல்வேறு தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகளுக்கும் அரசியல் அழுத்தம் கொடுக்கப்பட்டு, அவர்கள் இராஜினாமா செய்ய வலியுறுத்தப்பட்டனர். ஒரு பெண் அதிகாரி பதவி விலகியதுடன் இரண்டு தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களான எஸ்.பி. திவாரத்ன மற்றும் எம்.எம். மொஹமட் ஆகியோர் தங்களுக்கு அடையாளம் தெரியாத நபர்களால் தொலைபேசியில் தொடர்பு கொள்ளப்பட்டதாகவும், அவர்கள் பதவி விலகவேண்டும் என கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் பொலிசாரிடம் தெரிவித்தனர்.
செவ்வாய் கிழமை, உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான தேர்தல் ஆணைக்குழுவின் முந்தைய முடிவை ரத்து செய்யக் கோரி நீதிமன்றில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்த ஓய்வுபெற்ற இராணுவ கேணல் டபிள்யூ.எம்.ஆர். விஜேசுந்தர, தனது உயர் நீதிமன்ற ரிட் மனு மீதான முன் விசாரணையை கோரி மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
செவ்வாயன்று அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான கூட்டத்தில் உரையாற்றிய தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா, தேர்தலுக்கான நிதியை வழங்குமாறு ஆணைக்குழு நிதி மற்றும் திறைசேரி அமைச்சுக்கு கடிதம் எழுதியதாகவும், ஆனால் எந்த பதிலும் இல்லை என்றும் கூறினார். உள்ளுராட்சி மன்ற வாக்கெடுப்பு தொடர்பான எந்தவொரு நீதித்துறை வழக்கிலும் சட்டமா அதிபர் தேர்தல் ஆணைக்குழுவை ஆதரிக்க மாட்டார் என்றும் தனியார் சட்டத்தரணிகளை நியமிக்க ஆணைக்குழு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூட்டத்தில் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி (ஐ.ம.ச.) மற்றும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) போன்ற பல்வேறு எதிர்க் கட்சிகளின் பிரதிநிதிகளும், முன்னிலை சோசலிசக் கட்சி (மு.சோ.க.) மற்றும் ஐக்கிய சோசலிசக் கட்சி (USP) போன்ற போலி-இடது அமைப்புக்களின் பிரதிநிதிகளும், தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.
ஐ.ம.ச., ஜே.வி.பி., மு.சோ.க. ஆகியவை நீதித்துறை நடவடிக்கையை பரிந்துரைத்த அதேவேளை, ஐக்கிய சோசலிசக் கட்சி, போட்டியிடும் அனைத்துக் கட்சிகளிலிருந்தும் அரசாங்கத்திற்கு ஒரு கூட்டுக் கடிதம் அனுப்புவதையும் ஒன்றிணைந்த எதிர்ப்பையும் முன்மொழிந்தது. இந்த ஆலோசனைகள் ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. -விக்கிரமசிங்க அரசாங்கம் முன்னெடுக்கும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு எதிரான வெகுஜன எதிர்ப்பை, முதலாளித்துவ பாராளுமன்ற கட்டமைப்பிற்குள் சிறைவைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன. ஆளும் ஸ்தாபனம் மற்றும் முதலாளித்துவ இலாப அமைப்புமுறைக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான இயக்கம் தலைதூக்குவது பற்றியே அவர்கள் உண்மையில் பீதியடைந்துள்ளனர்.
தேர்தல்களை பிற்போடுவதற்கான அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சிகள், அதன் கொடூரமான சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக கிளர்ந்தெழுந்துள்ள உழைக்கும் மக்களின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான அதன் பரந்த தாக்குதல்களின் ஒரு பாகமாகும்.
பெப்ருவரி 9 அன்று, 50,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அரசாங்கத்தின் சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட்டுள்ள கொள்கைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர். இது டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் அரச ஊழியர்கள் ஊதிய உயர்வு கோரியும் தனியார்மயமாக்கலுக்கு எதிராகவும் நடத்திய வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களைத் தொடர்ந்து நடந்தது. இந்த தொழிற்துறை நடவடிக்கை, கடந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் ஜூலையில் இராஜபக்ஷ அரசாங்கத்தை வெளியேற்றிய வெகுஜன ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து தொழிலாள வர்க்க போராட்டம் புத்துயிர் பெறுவதை சமிக்ஞை செய்கிறது.
கோவிட்-19 பெருந்தொற்று நோய், உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ யுத்தம் ஆகியவற்றால் உக்கிரமடைந்துள்ள பாரிய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் விக்கிரமசிங்க-ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளின் முழு சுமையையும் தொழிலாள வர்க்கம் மற்றும் கிராமப்புற உழைக்கும் மக்கள் மீது சுமத்துவதில் உறுதியாக உள்ளது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைப்பதற்கான அரசாங்கத்தின் தற்போதைய முயற்சிகளை ஐ.ம.ச. மற்றும் ஜே.வி.பி.யும் எதிர்க்கும் அதேவேளை, அரசாங்கத்திற்கு எதிராக அதிகரித்து வரும் வெகுஜன கோபத்தைப் பயன்படுத்தி முன்கூட்டியே பொதுத் தேர்தலை நடத்துவதற்கும் ஒரு புதிய முதலாளித்துவ அரசாங்கத்தை அமைப்பதற்கும் முடியும் என்றும் நம்புகின்றன. இக்கட்சிகளுக்கு விக்கிரமசிங்க-ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகளுடன் எந்த அடிப்படை முரண்பாடுகளும் கிடையாது. அத்துடன் அவை அரசாங்கத்தை அமைத்தால், சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளை உடனடியாக திணிக்க நடவடிக்கை எடுக்கும்.
ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.-விக்கிரமசிங்க ஆட்சிக்கும் அரசியல் ஸ்தாபகத்தின் ஏனைய அனைத்து கட்சிகளுக்கும் எதிரான ஒரு அரசியல் போராட்டத்தின் ஊடாக மட்டுமே தொழிலாள வர்க்கமும் கிராமப்புற உழைக்கும் மக்களும் தமது சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க முடியும். முதலாளித்துவத்தின் கீழும் பாராளுமன்ற முறையின் கீழும் தொழிலாளர்களும் உழைக்கும் மக்களும் முகங்கொடுக்கும் எரியும் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் இல்லை. ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டமானது சோசலிச கொள்கைகளுக்கான போராட்டத்துடன் பிணைந்துள்ளது.
சோசலிச சமத்துவக் கட்சியானது அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகள், ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் மற்றும் ஒரு மூன்றாவது ஏகாதிபத்திய யுத்தத்தின் அதிகரித்து வரும் ஆபத்தையும் எதிர்த்துப் போராடுவதற்காக, உள்ளூராட்சித் தேர்தல்களில் போட்டியிடுகிறது. இதற்கு அனைத்து முதலாளித்துவ கட்சிகள், அவற்றின் தொழிற்சங்க மற்றும் போலி-இடது முகவர்களிடமிருந்து சுயாதீனமாக, தொழிலாள வர்க்கத்தை ஒரு சோசலிச மற்றும் சர்வதேசிய வேலைத்திட்டத்தில் அணிதிரட்டுவது அவசியமாகும்.
அதனால்தான் சோசலிச சமத்துவக் கட்சியானது ஒவ்வொரு வேலைத்தளத்திலும் தொழிற்சாலையிலும் தோட்டங்களிலும் மற்றும் சுற்றுப்புறத்திலும் மற்றும் கிராமப்புறங்களிலும் கட்டியெழுப்பப்பப்டும் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளின் நடவடிக்கைக் குழுக்களை அடிப்படையாகக் கொண்ட ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான தொழிலாளர்களதும் கிராமப்புற வெகுஜனங்களினதும் மாநாட்டிற்கு பிரச்சாரம் செய்து வருகிறது. இந்த மாநாடு தொழிலாள வர்க்கத்தின் போராட்டத்தை வழிநடத்துவதுடன் கிராமப்புற ஏழைகளை அணிதிரட்டும். முதலாளித்துவ ஆட்சி, பதிலாக சோசலிசக் கொள்கைகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தினால் பதிலீடு செய்யப்பட வேண்டும்.
கொழும்பு மாவட்டத்தில் கொலன்னாவை நகர சபை, மத்திய பெருந்தோட்டங்களில் நுவரெலியா மாவட்டத்தில் மஸ்கெலியா பிரதேச சபை மற்றும் யாழ்ப்பாண மாவட்டத்தில் காரைநகர் பிரதேச சபை ஆகிய மூன்று உள்ளூராட்சி சபைகளுக்கு சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற வறியவர்களை எமது தேர்தல் பிரச்சாரத்தை ஆதரிக்குமாறும், எல்லாவற்றிற்கும் மேலாக, சோசலிச சமத்துவக் கட்சியில் இணைந்து அதை ஒரு வெகுஜன புரட்சிகர கட்சியாக கட்டியெழுப்புமாறும் நாம் அழைப்பு விடுக்கின்றோம்.
இலங்கை சோ.ச.க. உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுகிறது
இலங்கைப் பாராளுமன்றம் கொடூரமான “புனர்வாழ்வு” சட்டத்தை நிறைவேற்றியது