விக்கிரமசிங்க அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலங்கை தொழிலாளர்கள் வேலைநிறுத்தமும் ஆர்ப்பாட்டமும் செய்தனர் 

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

தீவு முழுவதும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேற்று வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் இணைந்து, விக்கிரமசிங்க அரசாங்கம் அமுல்படுத்தும் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) புதிய சுற்று சமூகத் தாக்குதல்களுக்கு எதிராகப் போராடினர். இந்த நடவடிக்கை முக்கியமாக ஊதியங்கள் மீதான புதிய வரிகளை மையமாகக் கொண்டிருந்தாலும், எதிர்ப்பாளர்கள் தாங்க முடியாத வாழ்க்கைச் செலவு அதிகரிப்பைக் கண்டித்தனர்.

பெட்ரோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் கொழும்பு கோட்டையில் 8 பெப்ரவரி 2023 அன்று நடத்திய ஆர்ப்பாட்டம்

அரசாங்கத்திற்குச் சொந்தமான பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் அரை நாள் வேலைநிறுத்தத்தை நடத்தினர், அதே போல் அரச மற்றும் தனியார் வங்கிகளைச் சேர்ந்த சுமார் 30,000 ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். சுமார் 5,000 அரசுப் பல்கலைக்கழக ஆசிரியர்களும், அரச மருத்துவமனைகளைச் சேர்ந்த 20,000 மருத்துவர்களும் ஒரு நாள் வேலைநிறுத்தம் செய்தனர். புற்றுநோய் சிகிச்சை, மகப்பேறு பிரிவு, அவசர சிகிச்சை மற்றும் குழந்தைகள் வாட்டுகளுக்கு மருத்துவர்களின் வேலை நிறுத்தத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.

துறைமுகங்களைச் சேர்ந்த சுமார் 6,000 தொழிலாளர்கள் அரை நாள் ஒத்துழையாமை போராட்டத்தை கடைப்பிடித்தபோது, ஆயிரக்கணக்கான இலங்கை மின்சார சபை (இ.மி.ச.) தொழிலாளர்கள், செயலிழப்புகளில் கலந்து கொண்டவர்களைத் தவிர, சுகயீன விடுப்பு பிரச்சாரத்தில் பங்கேற்றனர்.

அதிகரித்து வரும் பணவீக்கத்திற்கு எதிராக கொழும்பில், ஆயிரக்கணக்கான துறைமுக தொழிலாளர்கள் மற்றும் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை ஊழியர்கள் கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக மதிய உணவு நேர ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வருமான வரி உயர்வை அரசாங்கம் கைவிட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பல இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன தொழிற்சங்கங்கள் ஏற்பாடு செய்திருந்த ஒரு மணி நேர ஆர்ப்பாட்டம் மற்றும் சுமார் 4,000 இலங்கை மின்சார சபை (இ.மி.ச.) ஊழியர்கள் இ.மி.ச. தலைமையகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டம் செய்தனர். அன்று பிற்பகல், சுமார் 4,000 வைத்தியர்கள், பல்கலைக்கழக ஆசிரியர்கள், பொறியியலாளர்கள் மற்றும் ஏனைய நிபுணர்கள் கொழும்பின் ஹைட் பார்க்கில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

8 பெப்ரவரி 2023 அன்று வருமான வரி அதிகரிப்புக்கு எதிராக கொழும்பு கோட்டையில் துறைமுக ஊழியர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்.

தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக அரச வன்முறையை கட்டவிழ்த்து விடுவதற்கு அதன் தயார்நிலையை சுட்டிக்காட்டும் வகையில், விக்கிரமசிங்க அரசாங்கம் கொழும்பில் போராட்டத் தளங்களுக்கு அருகில், நீர் தாரை வண்டிகளுடன் கலகத் தடுப்புப் பொலிசார் உட்பட நூற்றுக்கணக்கான பொலிஸாரை நிறுத்தி வைத்திருந்தது. அரசாங்கம் இராணுவத்தையும் கோட்டை பகுதிக்கு அனுப்பியிருந்த போதிலும் அவர்கள் சிறிது தூரத்தில் இருந்தனர்.

8 ஆம் திகதி நடந்த வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்புக்கள், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் அவரது அரசாங்கத்திற்கும் எதிராக கடந்த ஆண்டு இறுதியில் ஆரம்பிக்கப்பட்ட தொழிலாளர்களின் வளர்ந்து வரும் இயக்கத்தின் சமீபத்திய கட்டமாகும்.

டிசம்பர் தொடக்கத்தில், ஸ்ரீலங்கா டெலிகொம், காப்புறுதி மற்றும் வங்கி ஊழியர்கள் தனியார்மயமாக்கல் மற்றும் பிற சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஜனவரி 9 அன்று, ஆயிரக்கணக்கான அரச சுகாதார ஊழியர்கள் ஊதிய உயர்வு கோரியும் சிக்கன நடவடிக்கைகளை எதிர்த்தும் ஒரு நாள் வேலைநிறுத்தம் செய்தனர். ஜனவரி நடுப்பகுதியில் பல்லாயிரக்கணக்கான பெட்ரோலியக் கூட்டுத்தாபனத் தொழிலாளர்கள், வங்கி ஊழியர்கள், மருத்துவர்கள் மற்றும் பொறியாளர்களும் ஒரு வாரம் போராட்டங்களை நடத்தினர். இதைத் தொடர்ந்து ஜனவரி 25 அன்று 5,000 துறைமுகத் தொழிலாளர்கள் அரசாங்கத்தின் புதிய ஊதியத்திற்கு ஏற்ப வரிக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். இந்த வரி சுமார் 100,000 ரூபாயில் ($US273) தொடங்கி, மாதச் சம்பளத்தில் இருந்து 6 முதல் 36 சதவிகிதம் வரை குறைக்கப்படுகிறது.

விக்கிரமசிங்க அரசாங்கம் முன்னெடுக்கும் சர்வதேச நாணய நிதியம் ஆணையிட்டுள்ள நடவடிக்கைகளில் அரச நிறுவனங்களை தனியார்மயமாக்குதல் மற்றும் மறுசீரமைத்தல், தொழில் வெட்டுக்கள் மற்றும் ஊதிய வெட்டுக்கள், வேலை நிலைமைகளை வெட்டுதல் ஆகியவை அடங்கும்; மானியங்கள் உட்பட அரசாங்க செலவினங்கள் கூர்மையாக குறைக்கப்பட உள்ளன; மின்சாரம், தண்ணீர் கட்டணங்கள் மற்றும் பிற பயன்பாடுகளுக்கான கட்டணங்கள் மேலும் மேலும் அதிகரிக்கப்படுகின்றன.

அரசாங்கத்தின் சமூகத் தாக்குதல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்குத் தொழிலாளர்கள் தங்கள் விருப்பத்தை சக்தி வாய்ந்ததாக முறையில் காட்டியுள்ள நிலையில், தொழிற்சங்கங்களோ நாடு தழுவிய தொழிற்சங்க மற்றும் அரசியல் போராட்டத்தைத் தடுக்கும் எதிர்பார்ப்பில் தொழிலாளர்களைப் பிரித்து வைத்து, போராட்டங்களை வருமான வரிக்கு எதிரானதாக மட்டும் மட்டுப்படுத்தி வைத்துள்ளன.

ஆர்ப்பாட்டத்தை சீர்குலைக்கும் முயற்சியில் பொலிஸார் கோட்டை நிலையத்திற்கு வந்தபோது, ஆத்திரமடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அவர்களைக் கண்டித்தனர். ஒரு தொழிலாளி, 'நீர் பீரங்கிகளால் எங்களைத் தாக்கினால், துறைமுகங்களில் வேலையை நிறுத்துவோம்' என்று கூச்சலிட்டார். மற்றொரு தொழிலாளி, 'நீங்கள் தாக்கினால், அடுத்து என்ன நடக்கும் என்பதை நாங்கள் பார்ப்போம்' எனக் கூறினார். உடனடி தொழில்துறை பின்னடைவைத் தூண்டிவிடக் கூடும் என்ற கவலையில் பொலிசார் முன்நகரவில்லை.

தொழிற்சங்கங்களின் கட்டுப்பாட்டிற்கு வெளியே தொழிலாளர்களின் எதிர்ப்பு உருவாகலாம் என்ற அச்சத்தில், மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) சார்ந்த அகில இலங்கை பொது துறைமுக ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் நிரோஷன் கோரகன, கோபமடைந்த தொழிலாளர்களை அமைதிப்படுத்தும் முயற்சியில் தலையிட்டார். 

“இந்த நடவடிக்கைகள் இன்னும் தொடரும். உங்கள் கோபத்தை வெளிப்படுத்த நாங்கள் உங்களுக்கு வாய்ப்பளிப்போம். சீர்குலைக்கும் செயல்களில் ஈடுபடாதீர்கள்” என்று கோரகன தொழிலாளர்களிடம் பதட்டத்துடன் கூறினார்.

பெப்ரவரி 17 ஆம் திகதிக்குள் விக்கிரமசிங்க புதிய வரிக் கொள்கையை ஒழிக்கவில்லை என்றால், “நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து முழு வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம். அனைவரையும் ஒரே இடத்தில் கொண்டு வந்து போராட்டம் நடத்துவோம்,” என அவர் தெரிவித்தார். போக்கை மாற்றவில்லை என்றால், இலங்கை தொழிலாளர்களின் இந்த வளர்ந்து வரும் இயக்கத்தை தொழிற்சங்கங்களால் கட்டுப்படுத்த முடியாமல் போகலாம் என்பதே விக்கிரமசிங்கவுக்கு அவர் விடுத்த வேண்டுகோள் ஆகும்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இ.மி.ச. ஊழியர்கள் முன் உரையாற்றிய ஜே.வி.பி.யுடன் இணைந்த மின்சார ஊழியர் சங்கத்தின் தலைவர் ரஞ்சன் ஜயலால், “நாங்கள் அரசாங்கத்தை மண்டியிட்டு எங்கள் கோரிக்கைகளை வென்றெடுப்போம். மின்சார சபையை விற்க விடமாட்டோம். இந்த கடுமையான மின்சார விலைகளால் மக்கள் சுமக்க வேண்டிய சுமைகளை நாங்கள் எதிர்க்கிறோம்,” எனக் கூறினார்.

ஜெயலால் மற்றும் கோரகனவினதும் உரைகள் அவர்களது உறுப்பினர்களை ஏமாற்றும் முயற்சியாகும். அவர்களின் தொழிற்சங்கங்கள் சார்ந்திருக்கும் ஜே.வி.பி.க்கு, சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளுடன் எந்த அடிப்படை வேறுபாடுகளும் இல்லை. அடுத்த பொதுத் தேர்தல்களில் அதிகாரத்தை வெல்வதற்காக, அதிகரித்து வரும் வெகுஜனக் கோபத்தைப் பயன்படுத்திக் கொள்ள இழிந்த முறையில் அது முயற்சிக்கிறது. அது வெற்றியடைந்தால் அதே சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்தும்.

8 பெப்ரவரி 2023 அன்று கொழும்பு கோட்டைக்கு அருகில் அணிதிரண்டிருந்த இலங்கை இராணுவப் படையினர் சிலர். [Photo: Facebook Malainadu ]

தொழிற்சங்கங்கள் கூறுவது போல், விக்கிரமசிங்கவின் சிக்கன வேலைத்திட்டத்தை வெகுஜன அழுத்தத்தின் மூலம் பின்னுக்குத் தள்ள முடியாது. புதிய வரி விதிப்பு முறையை மாற்றப் போவதில்லை என அறிவித்த விக்ரமசிங்க, போராட்டங்களின் போது பாராளுமன்றத்தில் தனது கொள்கை அறிக்கையை வழங்கினார். சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளை ஒன்றுவிடாமல் செயல்படுத்துவதாக சுட்டிக்காட்டிய அவர், 'நினைவில் கொள்ளுங்கள், நான் ஜனரஞ்சகமாக இருக்க வரவில்லை... தேசத்தின் நலனுக்காக மக்கள் விரும்பாத முடிவுகளை எடுக்க நான் தயாராக இருக்கிறேன்,' என அறிவித்தார். 

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) நேற்றைய ஆர்ப்பாட்டங்களில் தலையிட்டு, 'தொழிலாளர்களே, அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக எவ்வாறு போராடுவது?' என்ற தலைப்பில் ஒரு அறிக்கையை விநியோகித்தது. சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரகர்கள் அவர்களின் நடவடிக்கையின் முக்கியத்துவம் மற்றும் அதை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு தேவையான வேலைத்திட்டம் பற்றி தொழிலாளர்களுடன் கலந்துரையாடினர்.

சோசலிச சமத்துவக் கட்சி சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக போராட முன்வரும் தொழிலாளர்களின் பக்கம் நிற்கின்றது என அறிவித்த அந்த அறிக்கை, இது 'உலகம் முழுவதிலும் உள்ள முதலாளித்துவ அரசாங்கங்களின் தாக்குதல்களுக்கு எதிராக அதிகரித்து வரும் சர்வதேச வர்க்கப் போராட்டங்களின் ஒரு பகுதியாகும்' என்று சுட்டிக் காட்டியது. தொழிலாளர்களால் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க முடியும் என்ற போலி நம்பிக்கையை வளர்ப்பதற்காகவே நேற்றைய நடவடிக்கைகளுக்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன என்றும், இந்த வழியில், 'தொழிலாளர்களிடையே பெருகும் கோபத்தை திசை திருப்பி அதை நீர்த்துப்போகச் செய்ய முடியும்' என்றும் அது குறிப்பிட்டது.

அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு எதிரான போராட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொள்வதற்காக, அனைத்து பாராளுமன்றக் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக, வேலைத் தளங்கள், தொழிற்சாலைகள் மற்றும் சுற்றுப்புறங்களில் தங்களது சொந்த நடவடிக்கைக் குழுக்களை அமைக்குமாறு அந்த அறிக்கை தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த நடவடிக்கைக் குழுக்களின் மூலம் கிராமப்புற ஏழைகளை அணிதிரட்டிக்கொண்டு, ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான தொழிலாளர்களதும் கிராமப்புற மக்களினதும் மாநாட்டைக் கூட்டுவதை நோக்கி முன்னேறுவதற்கான தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன இயக்கத்தின் அவசியத்தை அது விளக்கியது. அத்தகைய மாநாடு சர்வதேச சோசலிச கொள்கைகளுக்கு அர்ப்பணித்துக்கொண்ட தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்காகப் போராடும்.

பல தொழிலாளர்கள் ஆர்வத்துடன் சோசலிச சமத்துவக் கட்சியின் துண்டுப் பிரசுரத்தை எடுத்துக் கொண்டாலும், துறைமுகத் தொழிலாளர்களின் ஆர்ப்பாட்டத்தில் தொழிற்சங்கத் தலைவர்கள் சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரகர்கள் மீது உடல்ரீதியான தாக்குதலைத் தூண்ட முயற்சித்தனர். இருப்பினும், பல தொழிலாளர்கள், சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்களின் பிரச்சார உரிமையைப் பாதுகாக்க தலையிட்டனர். சோசலிச சமத்துவக் கட்சியின் அறிக்கையை விநியோகிப்பதை நிறுத்தும் தொழிற்சங்கத் தலைவர்களின் முயற்சி தோல்வியடைந்தது.

பல தொழிலாளர்கள் சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரகர்களிடம் அரசாங்கத்தின் சமூகத் தாக்குதல்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் வகிபாகம் பற்றிப் பேசினர்.

கொழும்பு துறைமுகத் தரிப்பைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் கூறியதாவது: “மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் பெற்ற சம்பளத்திற்கு அரசாங்கம் வருமான வரி விதிக்கிறது. இந்த வேலையைத் தவிர எனக்கு வேறு வருமானம் இல்லை ஆனால் எல்லாப் பொருட்களின் விலையும் கூடிவிட்டது.

'இந்த நிலைமை பற்றி பேசுவதற்கு எங்களுக்கு யாரும் இல்லை. அவர்கள் [தொழிற்சங்க தலைவர்கள்] காது கேளாதவர்கள். ஒரு புதிய அரசாங்கம் ஒழுங்காக ஆட்சி செய்ய முடியும் என்று எப்படி நம்புவது? இதுவரை இந்த அரசாங்கம் எமக்காக எதுவும் செய்யவில்லை, இப்போது எவராலும் பிரச்சினைகளை தீர்க்க முடியாது” என்றார்.

கப்பல்துறை தொழிலாளி ஒருவர் ஜே.வி.பி. மீது போலி நம்பிக்கையை வெளிப்படுத்தினார். “அவர்கள் [ஜே.வி.பி] வாக்களித்து ஆட்சிக்கு வர வேண்டும், அவர்களால் நன்றாக ஆட்சி செய்ய முடியுமா என்று பார்ப்போம். தற்போது ஜே.வி.பி.யின் குரலை மட்டுமே கேட்கிறோம்,'' என்றார்.

எதிர்கால ஜே.வி.பி. அரசாங்கம் முதலாளித்துவ வர்க்கத்தின் இலாப நலன்களைப் பாதுகாக்கும் என்று சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரகர்கள் விளக்கினர். சோசலிச சமத்துவக் கட்சியைப் பற்றியும் தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தின் கீழ் அனைத்து வெளிநாட்டுக் கடன்களையும் தள்ளுபடி செய்வதற்கான அதன் அழைப்பு பற்றியும் தான் தெரிந்து கொள்ள விரும்புவதாகத் தொழிலாளி பதிலளித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஒரு இளம் இ.மி.ச. தொழிலாளி, தொழிலாளர்கள் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க முடியும் என்று தொழிற்சங்கம் கூறுவது 'தோல்வியடைந்துவிட்டது' என்றார். இ.மி.ச.  தனியார்மயமாக்கப்பட்டால், 'கட்டணம் செலுத்த முடியாத ஏழை மக்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படும்' என்று அவர் கூறினார்.

சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்கள் கண்டிக்கு அருகிலுள்ள பேராதனை வைத்தியசாலையிலும் பிரச்சாரம் செய்தனர். கட்சி அறிக்கையின் பிரதிகளை ஆர்ப்பாட்டம் செய்த மருத்துவர்கள் மற்றும் ஏனைய சுகாதார ஊழியர்கள் மத்தியில் விநியோகித்தனர். ஜே.வி.பி.க்கு வாக்களிப்பதன் மூலம் சாதாரண மக்கள் எதிர்நோக்கும் சிரமங்களுக்கு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்த்துள்ளதாக தாதியர் குழு ஒன்று தெரிவித்துள்ளது.

ஜே.வி.பி. சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்திற்கு அர்ப்பணிப்புடன் இருப்பதாக சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்கள் விளக்கியதுடன், 'மக்களுடன் முரண்படும்' விருப்பமற்ற முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்று ஜே.வி.பி. தலைவர் அனுரகுமார திஸாநாயக்க பாராளுமன்றத்தில் கூறிய வீடியோ காட்சியை ஒளிபரப்பினர். தாங்கள் இதை இதற்கு முன்பு கேள்விப்பட்டதில்லை என்றும், ஜே.வி.பி.யும் சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்தும் என்பது தெரியவந்துள்ளது என்றும் தாதியர்கள் தெரிவித்தனர்.

இலங்கை சோ.ச.க. உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுகிறது

இலங்கையில் முதலாளித்துவக் கட்சி-தொழிற்சங்க கூட்டணிகள் வேண்டாம்! அரசாங்க-ச.நா.நி. சிக்கன நடவடிக்கைகளை தோற்கடி! ஜனநாயகம் மற்றும் சோசலிசத்துக்கான தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற வெகுஜனங்களின் மாநாட்டை கட்டியெழுப்பு!

அரசாங்க-விரோத போராட்டங்களை நசுக்கப் போவதாக இலங்கை ஜனாதிபதி மிரட்டுகிறார்

Loading