இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
மஸ்கெலியா- சாமிமலையில் உள்ள ஒல்டன் தோட்டத்தில் ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக, சம்பளக் கோரிக்கைகள் மற்றும் கொடூரமான வேலை நிலைமைகளுக்கு எதிராகப் போராடி வரும் தொழிலாளர்களுக்கு எதிராக ஹொரண தோட்டக் கம்பனியால் கட்டவிழ்த்து விடப்பட்ட பழிவாங்கல் தொடர்கிறது. அவர்களுக்கு எதிரான வேட்டையாடலானது தோட்ட முகாமையாளர், பொலிஸ் மற்றும் தொழிற்சங்கங்களின் கூட்டுச் சதியாகும்.
வேலை நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து ஹட்டன் தொழிலாளர் நீதிமன்றத்தில் தொழிலாளர்கள் தாக்கல் செய்த வழக்கு, ஜூன் 7 அன்று நடைபெற்றது. விசாரணையில் வேலையிழந்த 38 தொழிலாளர்களில் ஆர். மாரியாயி, பி. பத்மஜோதி, பி. முத்துமாரி மற்றும் பி. அன்னலெட்சுமி ஆகிய 4 பெண் தொழிலாளர்களை, மீண்டும் ’புதிய’ தொழிலாளர்களாக வேலைக்கு அமர்த்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மீதமுள்ள 34 பேர் மீதான விசாரணை ஜூலை 12 அன்று நடைபெற இருந்த நிலையில், ஆகஸ்ட் 2 மற்றும் 4 ஆம் திகதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
புதிதாக வேலைக்கு அமர்த்தப்பட்ட நால்வரும், வேலை நீக்கம் செய்யப்படவில்லை எனவும், தாங்களாகவே வேலைக்கு வரவில்லை எனவும் தோட்ட முகாமையாளர் நீதிமன்றில் தமது கருத்தை சமர்ப்பித்துள்ளார். அதன்படி மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆனால், தோட்ட முகாமையாளரின் குற்றச்சாட்டை அந்த தொழிலாளர்கள் மறுக்கின்றனர். பலமுறை வேலைக்குச் சென்றும் தோட்ட முகாமையாளர் வேலை வழங்க மறுத்ததால் வேலைக்குச் செல்லவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர். எஞ்சிய 34 தொழிலாளர்களும் வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கப்பட்ட போதிலும், இந்த 4 தொழிலாளர்களுக்கும் அது குறித்த அறிவிப்பு எதுவும் எழுத்து மூலம் வழங்கப்படவில்லை. தாங்களும் வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள் என மேற்பார்வையாளர் வாய்மொழியாக கூறியதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர். அவர்களுக்கு வேலை வழங்கியதாகவும், அவர்கள் வேலைக்கு செல்லவில்லை என்றும் முகாமையாளர் நீதிமன்றத்தில் கூறுவது பொய்.
புதிய தொழிலாளர்களாக வேலைக்கு அமர்த்தப்படுவதன் மூலம் உரிய காலத்தில் தங்களுக்கு கிடைக்க வேண்டிய சம்பளம், ஓய்வூதியம் மற்றும் நஷ்டஈட்டை இழக்க நேரிடும் என்றும் தொழிலாளர்கள் தெரிவித்தனர். ஆனால், ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக வேலையிழந்து மிகவும் கடினமான சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டியிருப்பதால், நீதிமன்ற உத்தரவை ஏற்று புதிய ஊழியர்களாக வேலைக்குச் செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு பெப்ரவரி 2 அன்று, ஓல்டன் தோட்டத் தொழிலாளர்கள், வேலைகளை துரிதப்படுத்துவதற்கு எதிராகவும், நாளாந்த சம்பளத்தை 1,000 ரூபாயாக உயர்த்தக் கோரியும் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்தனர். வேலை நிறுத்தத்தில் 500 தொழிலாளர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். பெப்ரவரி 5 அன்று சம்பளக் கோரிக்கையை முன்வைத்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் முன்னெடுக்கப்பட்ட நாடுதழுவிய தோட்டத் தொழிலாளர் வேலைநிறுத்தப் போராட்டத்திலும் அவர்கள் கலந்துகொண்டனர். வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக தோட்ட முகாமையாளர்கள் அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டதை தொடர்ந்து, தொழிலாளர்கள் அதற்கு எதிராக மார்ச் 22 வரை தொடர்ச்சியான வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். தோட்ட முகாமையாளரை உடல் ரீதியாக தாக்கினர் என்ற குற்றச்சாட்டின் பேரில் 24 தொழிலாளர்களையும் 2 இளைஞர்களையும் கைது செய்த பொலிஸ் பின்னர் மேலும் எட்டு தொழிலாளர்களை கைது செய்தது.
38 தொழிலாளர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டனர். தோட்ட முகாமையாளரைத் தாக்கியதாகக் குற்றம் சுமத்தப்பட்ட போதிலும் அவர்கள் மீது பொலிசார் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாதமை, தோட்ட முகாமையாளரும் பொலிஸாரும் இத்தொழிலாளர்களுக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டின் பேரில் பழிவாங்குகின்றனர் என்பது மீண்டும் நிரூபனமாகியுள்ளது.
ஒல்டன் தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிரான இந்த மூர்க்கத்தனமான வேட்டையாடல் அவர்கள் அங்கம் வகிக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.) மற்றும் தொழிலாளர் தேசிய சங்கம் (NUW) ஆகியவற்றின் நேரடி ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மலையக மக்கள் முன்னணி, இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் மற்றும் ஏனைய அனைத்து தோட்டத் தொழிற்சங்கங்களும், இந்த பழிவாங்கல் தொடர்பில் முற்றிலும் மௌனக் கொள்கையைப் பின்பற்றி மறைமுகமாக ஆதரவளிக்கின்றன.
இதனால் பலமடைந்த இலங்கை தோட்ட உரிமையாளர் சங்கத்தின் முன்னய பேச்சாளர் ரொஷான் இராஜதுரை, ஓல்டன் தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிரான வேட்டையாடல் மற்ற தோட்டத் தொழிலாளர்களுக்கும் ஒரு 'பாடம்' என்று எச்சரிக்கை செய்தார். எனினும், தொழிற்சங்கங்கள் இந்த வேட்டையாடலுக்கு எதிராகவும் தொழிலாளர்களின் வேலைகள் மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் எந்தவொரு போராட்டத்தையும் ஒழுங்கமைக்க முற்றிலும் மறுத்துவிட்டன.
தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிரான இந்த கொடூர அடக்குமுறையின் தொடர்ச்சியாக, கடந்த வருடம் செப்டெம்பர் மாதம், தோட்ட முகாமையாளர்களின் முறைப்பாட்டின் பிரகாரம், தலவாக்கலை கட்டுக்கலை தோட்டத்தைச் சேர்ந்த 11 தொழிலாளர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். நாளாந்த தேயிலை பறிப்பை 16 கிலோவில் இருந்து 20 கிலோவாக அதிகரிப்பதற்கு எதிராக ஆகஸ்ட் 18-24 வரை ஆறு நாள் வேலை நிறுத்தத்தின் பின்னர் தோட்ட முகாமையாளர்களால் உருவாக்கப்பட்ட ஆத்திரமூட்டல் மூலம் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இலங்கையில் தோட்டத் தொழிலாளர்கள் தீவிர வறுமை வாழ்க்கை நிலைமைகளை எதிர்கொள்கின்றனர். 1,000 ரூபா நாளாந்த சம்பளம் கோரி தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் எழுந்த போராட்டங்களை நசுக்கும் நோக்கில், இராஜபக்ச அரசாங்கம் கடந்த ஏப்ரல் மாதம் தோட்டக் கம்பனிகளுக்கு 1,000 ரூபாய் சம்பளம் வழங்க பரிந்துரை செய்த போதிலும், கம்பனிகள் சம்பளத்தை வழங்க மறுத்துவிட்டன. சம்பள உயர்வுக்கு எதிராக, கம்பனி வழக்குத் தாக்கல் செய்துள்ளதுடன் அன்றாட வேலை சுமைகளை அதிகப்படுத்தியுள்ளன.
அந்த சம்பளம் வழங்கப்பட வேண்டுமாயின் தோட்ட முகாமையாளர்களால் பரிந்துரைக்கப்படும் தினசரி வேலை இலக்குகளை பூர்த்தி செய்ய வேண்டும். பறிக்கப்பட்ட தேயிலைக் கொழுந்தின் அளவைப் பொறுத்தே சம்பளம் தீர்மானிக்கப்படுகிறது. இலக்கை நிறைவேற்றாவிட்டால், 1000 ரூபாய் சம்பளம் கிடைக்காது. பறிக்கப்பட்ட கொழுந்துகளுக்கு மட்டும் கிலோவுக்கு 40 ரூபா கூலியாக தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இது 700-800 ரூபாய் அல்லது அதற்கும் குறைவானதாக இருக்கும்.
அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் விண்ணைத் தொடும் நிலைமைகளின் கீழ், தோட்டத் தொழிலாளி ஒருவருக்குக் கிடைக்கும் அற்பமான அன்றாடச் சம்பளம் வாழ்க்கைச் செலவுக்குக் கூட போதுமானதாக இல்லை. தோட்டங்களில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொவிட்-19 தொற்று நோய் மற்றும் உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் நேட்டோ தலைமையிலான போரினாலும் ஆழமடைந்துள்ள உலக முதலாளித்துவத்தின் மற்றும் இலங்கையினதும் பொருளாதார நெருக்கடியின் மத்தியில், கொழும்பிலும் பிரதான நகரங்களிலும் தினசரி கூலி வேலைக்காக சென்றுள்ள ஆயிரக்கணக்கான பெருந்தோட்ட இளைஞர்கள் தொழில்களை இழந்துள்ளனர்.
இந்த நெருக்கடியின் விளைவாக இலங்கையில் தேயிலை தொழிற்துறையும் இலாபமும் வீழ்ச்சியடையும் நிலைமைகளில், பெருந்தோட்டக் கம்பனிகள் தொழிலாளர்களுக்கு எதிரான சம்பள வெட்டுக்கள், வேலை முடக்கம் மற்றும் ஜனநாயக உரிமைகளை நசுக்குதல் ஆகிய தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
உர இறக்குமதி மீதான அரசாங்கத்தின் தடை காரணமாக, தேயிலை உற்பத்தி 20-30 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை தேயிலை தோட்ட உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. எரிபொருள் நெருக்கடி காரணமாக ஐநூறுக்கும் மேற்பட்ட தேயிலை தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக சங்கத்தின் தலைவர் லயனல் ஹேரத் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
ஓல்டன் தோட்ட முகாமையாளரால் பாதிக்கப்பட்ட பெண் தொழிலாளி எம். பரிமளாதேவி கூறியதாவது: “வேலைநீக்கம் செய்யப்பட்ட 38 தொழிலாள்களில் நான்கு பேர் புதிய தொழிலாளர்களாக மீண்டும் வேலையில் அமர்த்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இழப்பீடு எதுவும் வழங்கப்படவில்லை. புதிய தொழிலாளர்களாக புதிய ஊழியர் சேமலாப நிதி இலக்கத்தின் கீழேயே அவர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். தோட்ட முகாமையாளர், அவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் இல்லாத சூழ்நிலையிலும் அதனைச் செய்துள்ளார். எமது உரிமையை நிலைநாட்ட எந்த தொழிற்சங்கமும் முன்வரவில்லை. வழக்கின் சட்டத்தரணிக்கு தொழிலாளர் தேசிய சங்கம் கட்டணம் செலுத்த மறுத்துள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய 12 பேர் அந்த சங்கத்தைச் சேர்ந்தவர்கள்”.
சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) முன்முயற்சியில், ஓல்டன் தோட்டத்தில் நிறுவப்பட்ட தொழிலாளர் நடவடிக்கைக் குழுவில் பரிமளாதேவி உறுப்பினராக உள்ளார். இந்த வேட்டையாடலுக்கு எதிராகவும், நிபந்தனையற்று தொழிலாளர்களுக்கு வேலை வழங்கவும் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்கான தொடர் போராட்டத்தில் நடவடிக்கை குழு ஈடுபட்டுள்ளது.
தோட்ட முகாமையாளர்களின் நிபந்தனைகளை ஏற்று வேலைக்குச் செல்லமாட்டேன் என்று அவர் மேலும் வலியுறுத்தினார். 'பொய் குற்றச்சாட்டின் பேரில் நான் வேலையிலிருந்து நீக்கப்பட்டேன். புதிதாக வேலைக்கு அமர்த்துவது, சேவைகாலத்தை பிரிப்பதாகும். இது தொழிலாளர்களின் அடிப்படை ஜனநாயக உரிமையை மீறும் செயலாகும். எனவே தொழில் சட்டத்தினபடி வேலை நீக்கம் செய்யப்பட்ட காலத்திற்கு ஊதியம் மற்றும் இழப்பீடு வழங்க வேண்டும்.' என்று அவர் கூறினார்.
தொழிற்சங்கங்கள் மீது தனக்கு நம்பிக்கை இல்லை என்றும், பொய் வழக்குகளைத் தோற்கடிக்க நடவடிக்கைக் குழு மூலம் போராடுவேன் என்றும், சக தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் ஆதரவைப் பெற்று தொழில் உரிமைகளைப் பாதுகாக்க போராடப் போவதாகவும் அவர் கூறினார்.
தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து அவர் கூறியதாவது: ‘கோட்டபாய இராஜபக்ஷ வெளியேறிவிட்டார். தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் ஏனய தொழிலாளர்கள், இளைஞர்களுடன் இணைந்து இராஜபக்ஷவை விரட்டப் போராடினோம். தற்போது ரணில் விக்ரமசிங்க ஆட்சிக்கு வந்துள்ளார். அவரும் கொடுமையான ஆட்சியாளர். அவருக்கு எதிராகவும் நாம் போராட வேண்டும். சோசலிச சமத்துவக் கட்சி வலியறுத்துகின்றவாறு, தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டுவருவதைத் தவிர, வெகுஜனங்களின் பிரச்சினைகளைத் தீர்க்க வேறு வழியில்லை.
மற்றொரு தொழிலாளியான நடவடிக்கை குழு உறுப்பினருமான விஸ்வகேது கூறியதாவது: இந்த 4 தொழிலாளர்களையும் எவ்வித இழப்பீடும் இன்றி புதிய தொழிலாளர்களாக வேலைக்கு அமர்த்தியதை கண்டிக்க வேண்டும். எதிர்காலத்தில் ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதிக்கு உத்தரவாதம் இல்லை. இது தொழிற்சங்கங்களின் ஆதரவுடன் எங்களுக்குள் பிளவை ஏற்படுத்தும் முயற்சி. அனைத்து தொழிலாளர்களுக்கும் நிபந்தனையற்று வேலை வழங்க வேண்டும் மற்றும் பொய் வழக்குகளில் இருந்து அவர்களை விடுவிப்பதற்கான பிரச்சாரத்தை நடவடிக்கை குழு தீவிரப்படுத்த வேண்டும்.'
வேலைநிறுத்த உரிமை உட்பட தொழிலாளர்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தில், சோசலிச சமத்துவக் கட்சியால் அழைக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளின் ஜனநாயக மற்றும் சோசலிச மாநாட்டை கூட்டுவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
21 ஜூலை 2022 அன்று சோசலிச சமத்துவக் கட்சி வெளியிட்ட அறிக்கையின்படி: ஜனநாயக மற்றும் சோசலிச மாநாட்டிற்கான அடித்தளம், தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற உழைப்பாளர்களால் தீவு முழுவதிலும் உள்ள வேலைத் தளங்கள், தொழிற்சாலைகள், பெருந்தோட்டங்கள், குடியிருப்புக்கள் மற்றும் கிராமப்புறங்களிலும், தங்கள் வர்க்க நலன்களுக்காக போராடுவதற்கான நடவடிக்கை குழுக்களை ஸ்தாபிப்பதன் மூலமே அமைக்கப்பட வேண்டும். இந்தக் குழுக்கள் உழைக்கும் மக்களின் அபிலாஷைகளுக்கு உண்மையான குரல் கொடுக்க வேண்டுமானால், அவை முதலாளித்துவ வர்க்கத்தின் அனைத்துக் கட்சிகள் மற்றும் அதன் தொழிற்சங்க அடிவருடிகளிடம் இருந்து சுயாதீனமாக இருப்பது அவசியம்.