இலங்கை:இ.தொ.கா முதலாளித்துவ ஆட்சிக்கு சேவை செய்வதற்காக அரசியல் குத்துக்கரணம் அடிக்கிறது

பிரதான பெருந்தோட்டத் தொழிற்சங்கமான மதிப்பிழந்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.) இலங்கையில் முதலாளித்துவ ஆட்சியைப் பாதுகாப்பதற்காக மேலும் வலதுசாரி பாத்திரம் ஆற்றுவதற்குத் தயாராகி வரும் நிலையில், அது தனக்கு வெள்ளை பூசிக்கொள்ளும் அவநம்பிக்கையான முயற்சியில் மற்றுமொரு குத்துக்கரணம் அடித்துள்ளது.

இ.தொ.கா. பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், ஒரு பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி கோட்டாபய அரசாங்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வரை தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சராக இருந்தவராவார். அவர் ஏப்ரல் 5 அன்று அந்தப் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்து, பாராளுமன்றத்தில் இ.தொ.கா. சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்தார். தோட்டத் தொழிலாளர்களும் இணைந்து கொண்ட ஒரு வெகுஜன எழுச்சியை அரசாங்கம் எதிர்கொண்டுள்ள நிலையில், அவர் தயக்கத்துடன் இந்த முடிவை எடுத்தார்.

மே 1, நுவரேலியா மாவட்டத்தில் உள்ள கொட்டகலையில் நடத்திய மேதினக் கூட்டத்தில், இராஜபக்ஷக்களுடான 15 வருட உறவை முறித்துக் கொள்வதாக தொண்டமான் அறிவித்தார். “இராஜபக்ஷக்களுடான 15 வருட உறவு இன்று முடிவுக்கு வருவதோடு மக்களுக்கு பாரிய சிரமங்களை கொடுக்கும் தற்போதய அரசாங்கத்தில் பதவி வகிக்க வேண்டிய தேவையில்லை” என அவர் வஞ்சத்தனமாக பெருமை பிதற்றினார்.

“மலையகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதே எனது கனவு, நான் பதவிக்காக அரசியல் செய்யவில்லை, அதனால் தான் நாம் இராஜபக்ஷ அரசாங்கத்துடனான உறவை முறித்துக் கொண்டோம், இன்று நாம் மக்களுடன் இருக்கின்றோம்,” என்று அவர் பின்னர் ஊடகங்களிடம் கூறினார்.

என்ன ஒரு பொய்! அவரும், அவரது தொழிற்சங்கம் சார் அரசியல் கட்சியும், குறைந்த பட்சம் இந்த 15 வருடங்களும் என்ன செய்தன என்பது பற்றி அவர் தெளிவுபடுத்தவில்லை. ஆயிரக் கணக்கானோரைக் கொன்றும், காணாமல் ஆக்கியும், நூற்றுக் கணக்கனோரை சிறையில் அடைத்தும், 2009ல் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராஜபக்ஷ அரசாங்கத்தின் இரத்தம் தோய்ந்த இனவாத யுத்தத்திற்கு இ.தொ.கா. ஆதரவு கொடுத்தது.

பிரதமர் மஹிந்த இராஜபக்ஷவுக்கு பொண்ணாடை போர்த்தி கௌரவிக்கும் ஆறுமுகம் தொண்டமானுக்குப் பின்னால் மகன் ஜீவன் தொண்டமான் (இடமிருந்து இரண்டாவதாக) (photo @PresRajapaksa)

அது. பெருந்தோட்டங்களில் சம்பளம் உட்பட ஒழுங்கான வாழ்க்கை நிலமைகளுக்காக தொழிலாளர்கள் நடத்திய போராட்டங்களை நசுக்கியதோடு வேலை சுமையை அதிகரிப்பதற்கும் மற்றும் அதன் காட்டிக் கொடுப்புக்களை எதிர்த்த தொழிலாளர்களை வேட்டையாடுவதற்கும், கம்பனிக்கும் பொலிசுக்கும் உதவியது.

மே 12, ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்ட போது, ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் ஜீவன் தொண்டமான் அவருக்கு வாழ்த்து செய்தியை அணுப்பினார். அதே நாள் தொண்டமான் ஒரு ட்விட்டர் செய்தியை வெளியிட்டார். “பலவிடயங்கள் தாமதப்படாமல் நடைமுறைப்படுத்த வேண்டிய தேவையுள்ளதுடன் இந்த விடயங்களை கடந்துவருவதற்கும் எங்களுடைய நாட்டை ஸ்திரப்படுத்துவதற்குமான உங்கள் முயற்சிக்கு, இலங்கை தொழிலாளர் காங்கரஸ் முழுமையான ஒத்துழப்பை வழங்கும் என்பதற்கு நான் உறுதியளிக்கின்றேன்” என அவர் தெரிவித்திருந்தார்.

மே 18, எல்லா அரசியல் கட்சிகளும் “அரசியல் வேறுபாடுகள்” இருந்த போதும் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார். “நாடு பாரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் ரணில் விக்கிரமசிங்க துணிகரமாக பிரதமராக பதவியேற்றுள்ளார்” என அவர் கூறினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரே ஒரு பாராளுமன்ற உறுப்பினரை பிரதமராக இராஜபக்ஷ நியமித்தமை, 'பொருளாதார நெருக்கடியை' தீர்க்க அல்ல, மாறாக சரவதேச நாணய நிதியத்தின் சிக்கனத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி நெருக்கடியின் சுமையைக் குவிப்பதற்கும் தொழிலாளர்களை அதற்கு விலைகொடுக்கச் செய்வதற்குமே ஆகும் என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார்.

குறிப்பிடத்தக்க வகையில், அவர் மே தின அறிக்கையை, பாசிசவாத பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் நாட்டுத் தலைவர் அண்ணாமலையுடன் அமர்திருந்த மேடையில் வைத்தே வெளியிட்டார்.

மே 20 அன்று, தொண்டமான், இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் மற்றும் இன்னொரு தலைவரான பி. அருள்சாமியடன் இணைந்து, புதுடில்லியில் இந்திய நிதி அமைச்சர் சீதா ராமனை சந்தித்தார். “இருதரப்பு உறவுகள் பற்றி கலந்துரையாடப்பட்டது” என்று ட்விட்டரில் அறிவித்திருந்த தொண்டமான், இலங்கைக்கு உதவியதிற்காக பிரதமர் மோடிக்கும் சீதா ராமனுக்கும் தெரிவித்திருந்தார்.

சீதா ராமனுடன் கலந்துரையாடிய இருதரப்பு உறவுகள் பற்றிய விபரத்தை அவர் வெளியிடவில்லை. எவ்வெறெனினும், இ.தொ.கா. தலைவர் பாசிசவாத பாரதிய ஜனதாக் கட்சி தலைவர்களுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்திக்கொள்வது, தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு எச்சரிக்கையாகும். மோடி, அமெரிக்காவின் சீனாவுக்கு எதிரான யுத்த தயாரிப்பின் முன்னிலை அரசாக இந்தியாவை நிறுத்தியுள்ளதுடன் நாட்டில் தனது கொள்கைக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை நசுக்குவதற்காக எதேச்சதிகார நடவடிக்கைகளை கையில் எடுத்துள்ளார்.

இ.தொ.கா.வின் வகிபாகம் பற்றி பொய் கூறும் போது, 1978 இல் இருந்தே ஆட்சிக்கு வந்த அரசாங்களுக்கு முண்டு கொடுத்த வரலாறு சம்பந்தமாக அவர் குறிப்பிடவில்லை. அவரின் பூட்டன் செளமியமூர்த்தி தொண்டமான், பின்னர் அவரின் தகப்பன் ஆறுமுகம் தொண்டமானும் பல அரசாங்களில் அமைச்சர்களாக இருந்து, தோட்டத் தொழிலாளர்களின் ஒவ்வொரு போராட்டத்தையும் காட்டிக்கொடுத்து, ஆளும் வர்க்கத்தின் நலனையும் மற்றும் முதலாளிமார்களையும் பாதுகாத்து வந்தனர்.

தொழிலாளர்களின் எதிர்ப்பை நசுக்கி, சர்வதேச நாணய நிதியத்தின் திறந்த பொருளாதாரக் கொள்கையை நடைமுறைப்படுத்த, ஜே.ஆர். ஜயவர்தனவினால் 1978இல் அரசியலமைப்புக்கு கொண்டுவரப்பட்ட சர்வாதிகார ஜனாதிபதி ஆட்சிமுறைக்கு அது ஆதரவளித்தது. 1983 இல் அந்த அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதிரான 30 வருட இனவாத யுத்தத்தை ஆரம்பித்து வைத்தது.

1990களில், ரணசிங்க பிரேமதாச அரசாங்கம் இ.தொ.கா.வினதும் ஏனய தொழிற்சங்களினதும் ஆதரவுடன், அரசாங்க தோட்டங்களை தனியார் மயமாக்கியது. அது தொடக்கம் தோட்டக் கம்பனிகள் சம்பளம் மற்றும் சமூக மானியங்களை வெட்டியதுடன், வேலைச் சுமையை திட்டமிட்டு அதிகரித்தன.

தகப்பனாரின் மறைவின் பின்னர், ஜீவன் தொண்டமான் இ.தொ.கா.வின் பொதுச் செயலாளராக பதவியேற்றதுடன் 2020 பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கீழ் போட்டியிட்டு நுவரெலியா மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானார். உழைக்கும் மக்களின் மீது கொடூரமான சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்தவும் அவர்களின் ஜனநாயக உரிமைகளை நசுக்கவும், இராஜபக்ஷ அரசாங்கத்திற்கு சேவை செய்வதற்காக அவர் இராஜாங்க அமைச்சுப் பதவியை பணிவாக ஏற்றுக் கொண்டார்.

இ.தொ.கா. மற்றும் ஏனைய தொழிற்சங்கங்களும் 2017 இல் இருந்து 1,000 ரூபாய் நாட் சம்பளம் கோரி தொழிலாளர்கள் நடத்திய வேலை நிறுத்தங்களையும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களையும் காட்டிக் கொடுத்தன. அரசாங்கம் சம்பள உயர்வு வர்த்தகமாணியை வெளியிட்ட போதிலும், கம்பனிகள் சம்பள உயர்வை வழங்க மறுத்ததுடன் 1,000 ரூபாய் வழங்க வேண்டுமாயிருந்தால் வேலை சுமை அதிகரிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது.

கடந்த வருடம் பெப்ரவரி 5 அன்று நடைபெற்ற ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் பங்கு பற்றிய 21 ஓல்டன் தோட்ட தொழிலாளர்களை பொலிசார் கைது செய்தனர். தோட்ட நிர்வாகம், இ.தொ.கா. மற்றும் பொலிசாரின் கூட்டுச் சதியின் மூலமாக புனையப்பட்ட அவர்களுக்கு எதிரான வழக்கு தற்பொழுது நடைபெற்று வருகின்றது. அதன் பின்னர், 38 தொழிலாளர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்ட போதிலும் இ.தொ.கா. மற்றும் ஏனய தொழிற்சங்களும் அவர்களை பாதுகாக்க முன்வரவில்லை.

தலவாக்கலை கட்டுக்கலை தோட்டத்தில் வேலைச் சுமை அதிகரிப்பதற்கும் சம்பள வெட்டுக்கும் எதிராகப் போராடிய 11 தொழிலாளர்களை பொலிசார் கைது செய்ததுடன் வேலையிலிருந்தும் நீக்கப்பட்டார்கள்.

29 செப்டெம்பர் 2021 கட்டுக்கலை தோட்டத் தொழிலாளர்கள் கொழுந்து மடுவத்துக்கு அருகில் நடத்திய மறியல் போராட்டம் (Photo: WSWS)

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மட்டுமே அந்த தொழிலாளர்களை பாதுகாக்க போராடுகின்றது. அது ஓல்டன் தோட்டத்தில் நடவடிக்கை குழுவை அமைத்து வழக்கு மற்றும் பொய் குற்றச் சாட்டுக்களை விலக்கிக்கொள்ளுமாறும் அவர்களை நிபந்தனையற்று வேலைக்கு அமர்த்துமாறும் வலியுறுத்தி பிரச்சாரம் செய்து வருகின்றது.

இ.தொ.கா. இராஜபக்ஷ அரசாங்கத்திலிருந்து விலகியிருக்க தீர்மானித்திருப்பது தோட்டத் தொழிலாளர்களின் நலன் கருதியல்ல. அவர்கள் “மலையக மக்கள்” என்ற இனவாத பதத்தை பயன்படுத்துவது தோட்டத் தொழிலாளர்கள் வேறு சமூகம் என்று அடையாளப்படுத்துவதற்கே ஆகும். இ.தொ.கா.வும் ஏனய தொழிற்சங்கங்களும், தமிழ் பேசும் இந்திய வம்சாவழி தோட்டத் தொழிலாளர்களை ஏனய தொழிலாளர்களிடம் இருந்து பிரிப்பதற்கான முயற்சியாகும்.

இ.தொ.கா. மக்கள் மத்தியில் செல்வாக்கிழந்து மற்றும் அவர்களுக்கு எதிரான எதிர்ப்பு வளர்ந்து வருகின்ற நிலமையிலேயே, இ.தொ.கா. தலைவர்கள் இத்தகைய எல்லா அரசியல் சூழ்ச்சிகளையும் மற்றும் பிற்போக்கு பிரச்சாரங்களையும் செய்கின்றனர்.

சகிக்க முடியாத வாழ்க்கை செலவுகளின் உயர்வு, உணவு, மருந்து, எண்ணெய் மற்றும் எரிவாயு உள்ளடங்களான அத்தியாவசிய பொருட்களின் பாரிய தட்டுப்பாடு மற்றும் மின்வெட்டு ஆகியவற்றின் காரணமாக, ஏப்ரல் ஆரம்பத்திலிருந்து ஜனாதிபதி இராஜபக்ஷவுக்கும் அவரது அரசாங்கத்திற்கும் எதிராக பாரிய வர்க்கப் போராட்டமும் வெகுஜன எழுச்சியும் தலைதூக்கியது.

இராஜபக்ஷவையும் அவரது அரசாங்கத்தையும் வெளியேற வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் தோட்டத் தொழிலாளர்கள் உட்பட இலட்சக் கணக்கான தொழிலாளர்கள், கிராம்ப்புற ஏழைகள், இளைஞர் மற்றும் சிறு வியாபாரிகளும் இணைந்து கொண்டார்கள்.

இ.தொ.கா. ஏப்ரல் பொது வேலை நிறுத்தத்திற்கு எதிராக இருந்த அதே நேரம், தொழிற்சங்கள் வார்த்தையளவில் ஆதரவு கொடுத்தன. “நாங்கள் தொழிலாளர்களை வேலை நிறுத்தம் செய்யுமாறு அழைப்பு விடுக்கவில்லை, இது தொழிலாளர்களுக்கு மேலும் பொருளாதார சுமைகளை ஏற்படுத்தும்” என இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் குறிப்பிட்டார். “கருப்பு பட்டி அணிந்து வேலைக்கு செல்லுமாறு” தொழிலாளர்களை அவர் கேட்டுக் கொண்டார்.

தொழிலாளர் தேசிய சங்கம் (தொ.தே.ச.), மலையக மக்கள் முன்னணி (ம.ம.மு.) மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணி (ஜ.ம.மு.) இணைந்த கூட்டணியான தமிழ் முற்போக்கு கூட்டணி (த.மு.கூ.) மற்றும் வலதுசாரி ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்திருக்கும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கமும் தொழிலாளர்களின் போராட்டங்களை நசுக்குவதற்கு அதை பிளவுபடுத்தும் வேலையை பகிர்ந்துகொண்டன.

தொழிலாளர்களுக்கு பொருளாதார சுமைகளை அதிகரிக்கும் என்று கூறியவாறு இ.தொ.கா. மற்றும் முற்போக்கு கூட்டணியும் மே 6 பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்பதை நிராகரித்தன. தொழிலாளர்களின் போர்குணம் முதலாளித்துவ ஆட்சியை சவால் செய்யும் என்று அவர்கள் அஞ்சியதே உண்மையான காரணம் ஆகும்.

எவ்வாறெனினும், ஆயிரக்கணக்கான தோட்டத் தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களின் எதிர்ப்பின் மத்தியிலும் வேலை நிறுத்தத்தில் இணைந்து கொண்டார்கள்.

தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையம் மற்றும் தொழிற்சங்கம் மற்றும் வெகுஜன இயக்கங்கள் எனப்படுபவை வேலை நிறுத்தத்தை ஒரு நாளைக்கு மட்டுப்படுத்தி காட்டிக் கொடுத்து, ஜனாதிபதி இராஜபக்ஷவின் கரத்தையும் ஆளும் வர்க்கத்தையும் பலப்படுத்தியது. பெருந்தோட்ட தொழிற்சங்கங்கள் இதற்கு உதவின.

இதன் விளைவாக, அரசியல் நெருக்கடியினால் பலவீனம் அடைந்திருந்த ஜனாதிபதி இராஜபக்ஷவால், ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராகவும் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அவரை நிதி அமைச்சராகவும் நியமிக்க முடிந்தது.

தொழிற்சங்கங்களின் ஒத்துழைப்போடு, இராஜபக்ஷ-விக்கிரமசிங்க அரசாங்கம், அரச நிறுவனங்களை தனியார்மயமாக்கல் மற்றும் வணிகமயமாக்கல், அரச ஊழியர்களின் வேலைகள் மற்றும் ஊதியங்களை குறைத்தல், வரி அதிகரிப்பு உட்பட சர்வதேச நாணய நிதியத்தால் கட்டளையிடப்பட்ட தொடர்ச்சியான கொடூரமான தாக்குதல்களை உழைக்கும் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடத் தொடங்கியுள்ளது. தொண்டமானும் இ.தொ.கா.வும் இந்த தாக்குதல்களை முழுமையாக ஆதரிக்கின்றனர்.

தொழிலாளர்களால் இத்தகைய தாக்குதலை பொறுத்துக் கொள்ளமுடியாது மற்றும் புதிய சுற்று போராடங்கள் வெடிக்கவுள்ளன. குறிப்பாக, நெருக்கடியினால் கடுமையாக பாதிக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர் மத்தியில் கோபம் அதிகரித்துள்ளது. இத்தகைய தாக்குதல்கள் தொழிலாளர்களின் வர்க்கப் போராடங்களை அதிகரிக்கும்.

தொழிலாளர்கள் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கும் போராட்டத்தை தொழிற் சங்கங்களின் கையில் விட்டுவைக்க முடியாது. தொழிலாளர்கள், எல்லா வேலைத்தளங்கள், பெருந்தோட்டங்கள் மற்றும் தொழிலாள வர்க்க புறநகர் பகுதிகளிலும் தொழிலாளர் நடவடிக்கை குழுக்களை தொழிற்சங்களில் இருந்தும் முதலாளித்துவ கட்சிகளில் இருந்தும் சுயாதீனமாக அமைத்துக்கொள்வதன் மூலம், தொழிலாளர்கள் போராட்டத்தை தமது கையில் எடுக்கவேண்டும்.

சோசலிச சமத்துவக் கட்சி ஓல்டன் தோட்டத்திலும் மற்றும் கிளனுகி-டீசைட் தோட்டத்திலும் நடவடிக்கை குழுக்களை முன்னெடுத்துள்ளது. எல்லாத் தோட்டங்களிலும் தொழிலாளர்கள் இத்தகைய முன் நடவடிக்கையை எடுக்க வேண்டும். எங்களுடைய நடவடிக்கை குழுக்களும் மற்றும் சோ.ச.க.யும் அத்தகைய அமைப்புக்களை உருவாக்குவதற்கு உதவி செய்யும். எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.

பெரிய கம்பனிகளை தேசியமயமாக்குதல், பெருந்தோட்டங்கள் மற்றும் வங்கிகளை தொழிலாளர்களின் ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ் கொண்டவருதல் மற்றும் வெளி நாட்டுக் கடன்களை இரத்துச் செய்வது உட்பட சோசலிச கொள்கைகளுக்காகப் போராடுவதே, சமூக நெருக்கடிக்கான தீர்வாகும். இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு, சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் தொழிலாளர் -விவசாயிகள் அரசாங்கத்தை அமைப்பதற்கு முன்வர வேண்டும்.

Loading