இலங்கை தோட்ட நிறுவனம் 38 ஓல்டன் தோட்டத் தொழிலாளர்களை வேலைநீக்கம் செய்கிறது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கையில் ஓல்டன் தோட்டத்தை நடத்தி வரும் ஹொரன பெருந்தோட்ட நிறுவனம், தோட்ட முகாமையாளர் மற்றும் உதவி முகாமையாளர் மீது சரீரத் தாக்குதல் நடத்தியதாகக் குற்றம் சாட்டி, 38 தொழிலாளர்களை வேலைநீக்கம் செய்துள்ளது. இது ஓல்டன் தொழிலாளர்களின் ஜனநாயக உரிமைகள் மீதான அப்பட்டமான தாக்குதலாக இருப்பதோடு பரந்த அளவில் முழு தொழிலாள வர்க்கத்திற்கும் ஒரு எச்சரிக்கை ஆகும்.

மார்ச் 22 அன்று, ஹொரன பெருந்தோட்ட நிர்வாகம் 38 தொழிலாளர்களுக்கு தண்டனை விதிக்கப்படுவதை அறிவிக்கும் கடிதங்களை வெளியிட்டது. கடிதத்தின் ஒரு தமிழ் மொழி பெயர்ப்பு, அவர்கள் வேலையில் இருந்து 'இடைநிறுத்தம்' செய்யப்பட்டதாகக் கூறியது. பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் 'இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக' தொழிற்சங்க அதிகாரத்துவத்தினரும் தெரிவித்தனர்.

உலக சோசலிச வலைத் தள நிருபர்கள், கடிதங்களின் தமிழ் மற்றும் ஆங்கில மொழி பிரதிகளைப் பெற்றனர். ஆங்கில மொழி கடிதம் “வேலைநீக்கம் செய்யப்படுவதை அறிவிக்கும் கடிதம்” என்ற தலைப்பில் இருந்ததுடன் பெரும்வணிக விவகாரங்களின் துணை பொது முகாமையாளர் புஷ்பிகா சமரகோன் அதில் கையெழுத்திட்டிருந்தார்.

ஓல்டன் தோட்டம் (Source: Facebook)

பல்வேறு குற்றச்சாட்டுகளை பட்டியலிட்ட பின்னர், “மேற்குறிப்பிட்ட சூழ்நிலைகளின் காரணமாக, தங்களது சேவைகளை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நிறுத்துவதற்கு தொழில் வழங்குனர்/நிறுவனம் முடிவு எடுத்துள்ளது,” என அந்தக் கடிதம் கூறியுள்ளது. தாங்கள் 'தொழிற்சாலை, அலுவலகம் மற்றும் தோட்டம் ஆகியவற்றின் எல்லைகளுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்படுவதையும் தெரிவித்துக்கொள்கிறோம்,' எனவும் அது மேலும் குறிப்பிட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட தொழிலாளர்களைப் பாதுகாக்கும் சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) வழக்கறிஞர், புதன்கிழமை பொது முகாமையாளர் சமரகோனுக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு, நிறுவனத்தின் தன்னிச்சையான தண்டனையின் தமிழ் மற்றும் ஆங்கில வார்த்தைகளுக்கு இடையில் ஏன் முரண்பாடு இருந்தது என்பதைக் கண்டறிந்தார்.

“இது உடனடி முடிவு. [தமிழ்] மொழிபெயர்ப்பில் கையொப்பமிடப்படவில்லை. அசல் பிரதியில் [ஆங்கிலத்தில்] கையெழுத்திட்டுள்ளோம். இது மிகவும் தெளிவாக உள்ளது,” என சமரகோன் தெரிவித்தார்.

'இந்த முடிவுக்கு முன்னர் ஏதேனும் விசாரணை நடந்ததா?' எனக் கேட்டபோது, 'இல்லை' என்று கூறிய அவர், தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் மேலதிகாரிகள் நேரடியாக சம்பந்தப்பட்ட வழக்குகளில்: 'நாங்கள் பொதுவாக உள்ளக விசாரணை நடத்துவதில்லை... இது கடுமையான குற்றம், எனவே உடனடி வேலை நீக்கங்களுக்கு நாங்கள் விசாரணை நடத்த மாட்டோம்,” என அவர் தெரிவித்தார்.

பிப்ரவரி 17 அன்று தோட்ட முகாமையாளர் சத்தியமூர்த்தி சுபாஷ் நாராயணனையும் உதவி முகாமையாளர் அனுஷன் திருச்செல்வத்தையும் தொழிலாளர்கள் சரீர ரீதியாக தாக்கியதாகவும், அவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் ஹொரன பெருந்தோட்ட நிர்வாகத்தின் கடிதங்கள் குற்றம் சாட்டுகின்றன.

வேலை நீக்கம் செய்யப்பட்ட 38 தொழிலாளர்கள் ஒரு கும்பலின் பங்காளிகளாக இருந்ததாகவும், 'தோட்டத்தின் சட்டம் ஒழுங்கு முறைகளை மீறி, தோட்டத்தில் நிலைநிறுத்தப்பட்டிருந்த அமைதிக்கும் பங்கம் விளைவித்து கூட்டான தவறான நடத்தைகளின் காரணமாக குற்றவாளியாக காணப்படுகின்றீர்கள்” என்றும் அந்த கடிதங்கள் கூறுகின்றன. வேலைநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களோ முகாமையாளர் மற்றும் உதவி முகாமையாளர் மீது எந்தவொரு உடல்ரீதியான தாக்குதலிலும் தாங்கள் ஈடுபடவில்லை என்று திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.

சமரகோன் எந்தவொரு விசாரணையையும் திமிர்த்தனமாக நிராகரிப்பதும் உடனடி வேலைநீக்கங்களை அவர் நியாயப்படுத்துவதும் அடிப்படை சட்டத் தேவைகளை அப்பட்டமாக மீறுவதும், முதலாளிகளின் தவறான கூற்றுக்களில் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள தொழிலாளர்களுக்கு உள்ள அடிப்படை ஜனநாயக உரிமையை மறுப்பதும் ஆகும்.

இலங்கையின் மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்றான ஹேலிஸ் குழுமத்தால் கட்டுப்படுத்தப்படும் ஹொரன பெருந்தோட்ட கம்பனி, தொழிலாளர்கள் மீது குற்றம் சாட்டவும் முறையான குற்றப்பத்திரிகை கூட வெளியிடாமல் அல்லது தொழிலாளர்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ள அனுமதிக்காமல், பூர்வாங்க விசாரணை என்று அழைக்கப்படுவதை நடத்தி, அவர்களை குற்றவாளிகள் ஆக்கி, தண்டனையை விதிக்க முடிவு செய்துள்ளது.

இந்த முற்றிலும் ஜனநாயக விரோத நடைமுறை, காலனித்துவ ஆட்சியின் போது பிரிட்டிஷ் நிறுவனங்களால் தொழிலாளர்கள் கொடூரமாக நடத்தப்பட்டதை நினைவூட்டுகிறது. 1948 இல் இலங்கையின் உத்தியோபூர்வ சுதந்திரத்திற்குப் பிறகும், இந்த கம்பனிகள் தங்கள் சர்வாதிகார முறைகளைத் தொடர்ந்தன. அந்த ஆண்டு, இலங்கை அரசாங்கம் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்களின் குடியுரிமையை ரத்து செய்து, இன பாகுபாட்டைக் கட்டவிழ்த்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்கள் தொடர்ந்து ஒடுக்கப்படுவதை உறுதி செய்தது.

1972 ஆம் ஆண்டில் கொழும்பு அரசாங்கம் தோட்டங்களை தேசியமயமாக்கி பின்னர் 1990 இல் தனியார்மயமாக்கிய பின்னரும், தோட்டத் தொழிலாளர்கள் தொடர்ந்து அதே ஈவிரக்கமற்ற முறையில் நடத்தப்பட்டு வருகின்றனர். தோட்டத் தொழிலாளர்கள் எதிர்ப்பு போராட்டங்களின் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளதுடன் இந்த ஒடுக்குமுறைக்கு எதிராக பெரும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் அல்லாதவர்கள் சுமார் 80 பேர் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக ஹொரன பெருந்தோட்டக் கம்பனி கூறிக்கொள்கின்றதுடன், தாக்குதலில் பங்கேற்ற ஏனையவர்கள் குறித்து தோட்டத் தொழிலாளர்களிடம் இருந்து தகவல்களைக் கோருகின்றது.

பெப்ரவரி 2, சுமார் 500 தொழிலாளர்கள் 1,000 ரூபாய் அடிப்படை நாள் சம்பளம் கோரி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதுடன் உற்பத்தி செய்யப்பட்ட தேயிலை தூளை கொண்டு செல்வதற்கான நிர்வாகத்தின் முயற்சியைத் தடுத்தனர். முகாமையாளர் தொழிலாளர்களைத் தாக்கி, ஒரு பெண் தொழிலாளியின் கையை காயப்படுத்தினார். அந்த பெண்னை மருத்துவமனையில் அனுமதிக்க நேர்ந்தது.

இதே கோரிக்கையின் பேரில் பெப்ரவரி 5 அன்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.) அழைத்த ஒரு நாள் தேசிய வேலைநிறுத்தத்தில் ஓல்டன் தொழிலாளர்கள் இணைந்துகொண்ட அதே வேளை, நிர்வாக அச்சுறுத்தல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தொடர்ந்தும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். பெப்ரவரி 15 அன்று, தேயிலை கொழுந்துகளை வேறொரு தொழிற்சாலைக்கு கொண்டு செல்ல முயற்சிப்பதன் மூலம் வேலைநிறுத்தத்தை நாசப்படுத்த நிர்வாகம் முயன்றது. தொழிலாளர்கள் இந்த முயற்சியைத் தோற்கடித்ததோடு முகாமையாளரின் வீட்டுக்கு வெளியே ஒரு போராட்டத்தை நடத்தினர்.

தொழிலாளர்கள் முகாமையாளர்களுக்கு எதிராக வன்முறையைப் பயன்படுத்தியதாகக் கூறி, கம்பனி பொலிசுடன் சேர்ந்து இ.தொ.கா.வின் முழு ஆதரவோடு, வேட்டையாடலை முன்னெடுத்தது. இ.தொ.கா. தலைவர்களே தொழிலாளர்களின் பட்டியலை உருவாக்கி, அவர்களை பொலிசில் சரணடையச் சொன்னார்கள்.

பெப்ரவரி 18 அன்று, எட்டு தொழிலாளர்களை பொலிசார் கைது செய்ததுடன், மார்ச் 1 அன்று இன்னும் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் ஒரு நீதவானால் கண்டி சிறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். இ.தொ.கா. பின்னர் மேலும் 12 தொழிலாளர்களை பொலிசில் சரணடையச் செய்தது. கைது செய்யப்பட்ட அனைவரும் மார்ச் 10 அன்று கடுமையான பிணை நிபந்தனைகளின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டனர்.

ஹொரன பெருந்தோட்டக் கம்பனி மேலும் 18 தொழிலாளர்களை பெயரிட்டது, அவர்களில் நான்கு பேர் மார்ச் 29 அன்று மஸ்கெலியா பொலிஸ் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மற்ற அனைத்து தொழிலாளர்களுடனும் ஏப்ரல் 28 அன்று அவர்களையும் நீதிமன்றத்திற்கு சமூமளிக்குமாறு கூறப்பட்டுள்ளது.

ஓல்டன் தோட்டத் தொழிலாளர்கள் மீதான வேட்டையாடலுக்கும் வேலை நீக்கத்துக்கும் இ.தொ.கா. நேரடி பொறுப்பாளியாக உள்ள அதே வேளை, தொழிலாளர் தேசிய சங்கம் (NUW) மற்றும் மலையக மக்கள் முன்னணி (ம.ம.மு) இந்த ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலை மௌனமாக இருந்து ஆதரிக்கின்றன.

மார்ச் 23 அன்று, தொழிற்சங்கத்தின் அறிவுறுத்தலின் பேரில் அனைத்து தொழிலாளர்களும் வேலைக்குத் திரும்பிய போதே, 38 பேர் வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளதை அறிந்துகொண்டனர். அவர்கள் பாதிக்கப்பட்ட அனைத்து தொழிலாளர்களையும் மீண்டும் பணியில் அமர்த்தக் கோரி உடனடியாக வெளிநடப்பு செய்தனர். இராஜபக்ஷ அரசாங்கத்தில் தோட்ட உள்கட்டமைப்பு அமைச்சராக இருக்கும் இ.தொ.கா. தலைவர் ஜீவன் தொண்டமன், பழிவாங்கலைப் பற்றி விசாரணை நடத்துவதாக உறுதியளித்து, வேலை நிறுத்தம் செய்தவர்களை வெள்ளிக்கிழமை மீண்டும் வேலைக்கு அனுப்பினார்.

மார்ச் 3 அன்று ஹட்டனில் தோட்ட முகாமையாளர் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு, அனைத்து பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகளின் ஆதரவுடன் நடந்த ஒரு ஆத்திரமூட்டும் போராட்டத்தைத் தொடர்ந்தே ஓல்டன் தோட்டத் தொழிலாளர்கள் வேலைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தோட்டங்களில் நடந்ததாகக் கூறப்படும் வன்முறைகளைச் சமாளிக்க தோட்ட உரிமையாளர்கள் துப்பாக்கிகளையும் பயிற்சியையும் கோரினர். கடந்த மாத தொடக்கத்தில் இலங்கையின் தேசிய பாதுகாப்புச் சபையானது தோட்டங்களில் பாதுகாப்பு பிரச்சினைகள் என்று கூறப்பட்டதைப் பற்றி கலந்துரையாடியது.

ஓல்டனில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஈவிரக்கமற்ற ஒடுக்குமுறையானது அரசாங்கத்தினதும் தொழிற்சங்கத்தினதும் ஆதரவு கொண்ட பெரும்வணிகம், உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்கும், செலவுகளைக் குறைப்பதற்கும், கொவிட்-19 தொற்றுநோயால் மோசமடைந்துள்ள பொருளாதாரச் சுமைகளை தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்துவதற்கும் உறுதியாக உள்ளது என்பதற்கான எச்சரிக்கையாகும்.

இந்த வாரம் சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) உதவியுடன் அமைக்கப்பட்ட ஆல்டன் தோட்ட நடவடிக்கைக் குழு ஒன்றுகூடி, வேலைநீக்கம் செய்யப்பட்ட அனைத்து தொழிலாளர்களையும் மீண்டும் வேலையில் அமர்த்துவதற்கும், சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை இரத்துச் செய்வதற்கும் ஒரு பிரச்சாரத்தை நடத்த முடிவு செய்தது. கைது செய்யப்பட்ட தொழிலாளர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால், முகாமையாளர்களை 'கடுமையாக காயப்படுத்தியதற்காக' அவர்கள் ஏழு ஆண்டுகள் வரை சிறைவாசம் அனுபவிக்க நேரும் மற்றும் 'சட்டவிரோத ஒன்றுகூடலுக்காக' ஆறு மாதங்கள் சிறையில் அடைக்கப்படலாம்.

இந்த பழிவாங்கலுக்கும் ஓல்டன் தோட்டத் தொழிலாளர்களை கைது செய்வதற்கும் எதிரான சோ.ச.க.வின் போராட்டமானது இப்போது அரசாங்கத்தினதும் பெரும் வணிகத்தினதும் தாக்குதலுக்கு உள்ளாகும் அனைத்து இலங்கை தொழிலாளர்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாகும்.

இந்த முகவரிக்கு உங்களது ஆதரவு அறிக்கைகளை அனுப்பி வையுங்கள் wswscmb@sltnet.lk.

Loading