நேட்டோ "அணு ஆயுதம் தாங்கிய போட்டியாளர்களுக்கு எதிரான போருக்கு" தயாராகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஸ்பெயினின் மாட்ரிட்டில் நடந்த இந்த வார நேட்டோ உச்சிமாநாட்டின் முடிவில், பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா மற்றும் கனடா உள்ளிட்ட நேட்டோ அங்கத்துவநாடுகள் ரஷ்யாவுடனான போரை பெருமளவில் விரிவுபடுத்தி மற்றும் சீனாவுடனான போருக்குத் தயாராக ஐரோப்பிய கண்டத்தை இராணுவமயமாக்குவதற்கான திட்டங்களை கோடிட்டுக் காட்டும் ஒரு மூலோபாய ஆவணத்தை ஏற்றுக்கொண்டனர்.

மாட்ரிட்டில் நேட்டோ உச்சி மாநாடு (Jonathan Ernst/Pool Photo via AP) [AP Photo/Jonathan Ernst]

'அணு ஆயுதம் ஏந்திய போட்டியாளர்களுக்கு எதிரான மிகத்தீவிரமான, பல துறைகளில் போரிடுவதற்குத்' தேவையான 'முழு அளவிலான சக்திகளை வழங்க' ஆவணம் உறுதியளிக்கிறது.

இந்த மூலோபாய ஆவணத்திலிருந்து ஒரு பகுதி

2010 இல் முதன்முதலில் வெளியிடப்பட்ட கடைசி மூலோபாய ஆவணத்திலிருந்து ஒரு ஆழமான மாற்றத்துடன், புதிய நேட்டோ மூலோபாய ஆவணம் 'யூரோ-அட்லாண்டிக் பகுதி அமைதியாக இல்லை' மற்றும் மாறாக கூட்டணி போரில் இருப்பதாக அறிவிக்கிறது. நேட்டோ கூட்டணியின் உறுப்பினர்கள் எவரும் 'யூரோ-அட்லாண்டிக் பகுதிக்குள்' எந்தவொரு போரையும் அறிவிக்கவில்லை என்ற உண்மை இருந்தபோதிலும் இவ்வாறு உள்ளது.

'யூரோ-அட்லாண்டிக் பகுதி அமைதியாக இல்லை' என்று ஆவணம் அறிவிக்கிறது.

மூலோபாய கட்டமைப்பின் ஆவணம் வல்லரசு அரசியலின் வார்த்தைப் பிரயோகங்களை வெளிப்படையாக ஏற்றுக்கொள்கிறது. இது Machtpolitik என ஜேர்மன் மொழியில் குறிப்பிடப்படுவதால் நன்கு அறியப்படுகிறது. அது 'நலன்கள்' என்ற வார்த்தையை ஏழு முறை குறிப்பிட்டு, சீனாவும் ரஷ்யாவும் 'கூட்டணியின் நலன்களுக்கு' சவால் விடுவதாக அறிவிக்கிறது.

2010 இல் வெளியிடப்பட்ட முந்தைய நேட்டோ மூலோபாய கட்டமைப்பானது, 'பகிரப்பட்ட நலன்கள் உள்ள பகுதிகளில் ரஷ்யாவுடன் அரசியல் ஆலோசனைகளையும் நடைமுறை ஒத்துழைப்பையும் மேம்படுத்துவதற்கு' உறுதியளிக்கும் வகையில், 'நலன்கள்' என்ற வார்த்தையை ஒருமுறை மட்டுமே பயன்படுத்தியது.

2010 ஆவணம் ரஷ்யாவை 'பங்காளி' என்று பெயரிட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு மூலோபாய கட்டமைப்பு ரஷ்யாவை ஒரு 'அச்சுறுத்தல்' என்றும் சீனாவை 'சவால்' என்றும் அறிவிக்கிறது. புதிய நேட்டோ மூலோபாய ஆவணம், இந்த நாடுகள் 'எங்கள் நலன்களுக்கு சவால் விடுகின்றன' என்று அறிவிப்பதன் மூலம் இவ்வாறு குறிப்பிடுவதை வெளிப்படையாக நியாயப்படுத்துகிறது.

“மக்கள் சீனக் குடியரசு முக்கிய தொழில்நுட்ப மற்றும் தொழில்துறை துறைகள், முக்கியமான உள்கட்டமைப்பு மற்றும் மூலோபாய பொருட்கள் மற்றும் விநியோகச் சங்கிலிகளைக் கட்டுப்படுத்த முயல்கிறது என்று அது அறிவிக்கிறது. மூலோபாய தங்கியிருத்தல்களை உருவாக்குவதற்கும் அதன் செல்வாக்கை மேம்படுத்துவதற்கும் அது அதன் பொருளாதார செல்வாக்கைப் பயன்படுத்துகிறது” என அறிவிக்கின்றது.

சீனாவின் பொருளாதார வளர்ச்சி ('கட்டுப்பாடு' என குறிப்பிடப்படுகிறது) நேட்டோ உறுப்பினர்களின் 'நலன்களுடன்' முரண்படுகிறது என்று ஆவணம் வலியுறுத்துகிறது.

தங்கள் 'நலன்களை' பாதுகாப்பதற்காக, கூட்டாளிகள் 'தடுப்பு மற்றும் பாதுகாப்பை கணிசமாக வலுப்படுத்துவதாக' உறுதியளிக்கின்றனர்.

விமர்சனரீதியாக, இந்த ஆவணம் உக்ரேனில் போரைத் தூண்டிய தொடர் நடவடிக்கைகள் வெற்றியடைந்துள்ளன என்று வலியுறுத்துகிறது. 'நேட்டோவின் விரிவாக்கம் ஒரு வரலாற்று வெற்றியாகும் என்றது.' நேட்டோவில் இணைவதற்கான உக்ரேனின் முயற்சிகள் மற்றும் ரஷ்யாவின் எல்லையில் அணு ஆயுதங்களை நிலைநிறுத்துவது அதன் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி உக்ரேன் மீதான அதன் ஆக்கிரமிப்பை கிரெம்ளின் நியாயப்படுத்தியது.

நேட்டோ ஆவணம் இராணுவக் கூட்டணியின் விரிவாக்கத்தை உறுதிப்படுத்தி பின்வருமாறு விளக்குகின்றது. 'எங்கள் திறந்த கதவு கொள்கையை நாங்கள் மீண்டும் உறுதிப்படுத்துகிறோம்... எங்கள் கூட்டணியின் மதிப்புகளைப் பகிர்ந்து கொள்ளும் அனைத்து ஐரோப்பிய ஜனநாயக நாடுகளுக்கும் எங்கள் கதவு திறந்தே உள்ளது' என்று அறிவிக்கிறது. அது மேலும் கூறுகிறது, 'அங்கத்துவம் பற்றிய முடிவுகள் நேட்டோ நட்பு நாடுகளால் எடுக்கப்படுகின்றனவே தவிர, மேலும் இந்த செயல்பாட்டில் மூன்றாம் தரப்பினர் கூறுவதற்கு எதுவும் இல்லை.'

இப்போது உக்ரேனில் நடந்து வரும் போர், இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐரோப்பாவில் மிகப் பெரியதாகும். இது ஏற்கனவே பல்லாயிரக்கணக்கான உக்ரேனியர்களையும் ரஷ்யர்களையும் கொன்றுள்ளது. நேட்டோவின் விரிவாக்கம் வெற்றியடைந்ததாக விவரிக்கையில், இந்த மரணங்களும் மற்றும் இன்னும் பலவும், கூட்டணி அங்க்கத்தவர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கான ஏற்றுக்கொள்ளக்கூடிய இழப்புகள் என்று கூட்டணி உண்மையில் அறிவிக்கிறது.

கூட்டணியின் 'நலன்களுக்கான' சவால்களுக்கு விடையிறுக்கும் வகையில், சமூகத்தின் அனைத்து அம்சங்களையும் பாதிக்கும் இராணுவமயமாக்கல் திட்டத்தை நேட்டோ உறுப்பினர்கள் உறுதியளித்துள்ளனர் அது அறிவிக்கிறது, 'மூலோபாய போட்டியின் சூழலில், எங்கள் 360 பாகை திருப்ப அணுகுமுறைக்கு ஏற்ப, அனைத்து துறைகளிலும் மற்றும் திசைகளிலும் தடுக்க, பாதுகாக்க, போட்டியிட மற்றும் நிராகரிக்க நாங்கள் எங்கள் உலகளாவிய விழிப்புணர்வை மேம்படுத்துவோம்' என்றது.

ஆவணம் மேலும் கூறுகிறது, 'அணு ஆயுதங்கள் இருக்கும் வரை, நேட்டோ ஒரு அணுசக்தி கூட்டணியாக இருக்கும்,' மேலும் 'பலப்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த ஆகாய மற்றும் ஏவுகணை பாதுகாப்பு உள்ளடங்கலாக, நிலத்திலும், கடலிலும், வானிலும் கணிசமான மற்றும் நிலையான பிரசன்னத்தை உறுதி செய்வதாக கூட்டணி உறுதியளிக்கிறது'. 'நேட்டோவின் அணுவாயுதத் தடுப்பு நிலைப்பாடு, ஐரோப்பாவில் முன்கூட்டி நிறுத்தப்பட்ட அமெரிக்காவின் அணு ஆயுதங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட நேச நாடுகளின் பங்களிப்புகளையும் நம்பியுள்ளது' என்று ஆவணம் மேலும் கூறுகிறது.

ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இலக்குகளை அடைவதற்கு துருப்புக்கள், வெடிமருந்துகள் மற்றும் போருக்குத் தேவையான விநியோகச் சங்கிலிகளின் பாரிய விரிவாக்கம் தேவைப்படுகிறது. 'நாங்கள் வலுவான இடத்தில், பல துறைகளில், போருக்கு தயாரான படைகள், மேம்படுத்தப்பட்ட கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு ஏற்பாடுகள், முன்கூட்டியே வழங்கப்பட்ட வெடிமருந்துகள் மற்றும் உபகரணங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட திறன் மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றுடன் எந்தவொரு கூட்டாளியையும் விரைவாக வலுப்படுத்துவோம்.”

நேட்டோ மூலோபாய ஆவணம் அதன் இராணுவ வளங்களுக்கான எந்தவொரு போட்டி முன்னுரிமைகளையும் அங்கீகரிக்கவில்லை அல்லது ஏற்றுக்கொள்ளவில்லை. 'பசி,' 'வறுமை' மற்றும் 'வேலையின்மை' என்ற வார்த்தைகள் இந்த ஆவணத்தில் தோன்றவில்லை. மேலும் உலகளவில் மில்லியன் கணக்கான மக்களையும், அமெரிக்காவில் மட்டும் ஒரு மில்லியனையும் கொன்றுள்ள கோவிட்-19 தொற்றுநோயைப் பற்றி எந்த குறிப்பும் இல்லை.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடெனின் கருத்துக்கள் இந்த ஆவணத்தின் தொனியுடன் முழுமையாக ஒத்துப்போகின்றன.

உச்சிமாநாட்டிற்குப் பிந்தைய செய்தியாளர் கூட்டத்தில், பைடென்: “நான் பதவியேற்றதில் இருந்து உக்ரேனுக்கு கிட்டத்தட்ட $7 பில்லியன் பாதுகாப்பு உதவிகளை வழங்கியுள்ளோம். அடுத்த சில நாட்களில், உக்ரேனுக்கான புதிய மேம்பட்ட மேற்கத்திய வான் பாதுகாப்பு அமைப்பு, மேலும் பீரங்கி மற்றும் வெடிமருந்துகள், எதிர் ஏவுகணை ரேடார்கள், நாங்கள் ஏற்கனவே வழங்கியிருக்கும் மற்றும் பிற நாடுகளில் இருந்தும் வரும் HIMARS பல்குழல் ஏவுகணை அமைப்பிற்கான கூடுதல் வெடிமருந்துகள் உட்பட 800 மில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை அறிவிக்க உள்ளோம்' என பெருமையாகக் கூறினார்.

அமெரிக்க நட்பு நாடுகளின் மொத்த அர்ப்பணிப்பில் 'கிட்டத்தட்ட 140,000 டாங்கி எதிர்ப்பு அமைப்புகள், 600 க்கும் மேற்பட்ட டாங்கிகள், கிட்டத்தட்ட 500 பீரங்கிகள், 600,000 க்கும் மேற்பட்ட பீரங்கி வெடிமருந்துகள், அத்துடன் மேம்பட்ட பல ஏவுகணை ராக்கெட் அமைப்புகள், கப்பல் எதிர்ப்பு மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகள் ஆகியவை அடங்கும்.

ஆயினும்கூட, போரினால் அமெரிக்க பொதுமக்களுக்கு ஏற்படும் செலவுகள் பற்றி கேட்டபோது, இது கருத்தில் கொள்ளப்பட்டதாகக்கூட பைடென் குறிப்பிடவில்லை.

செய்தியாளர் கூட்டத்தில், பைடெனை ஒரு நிருபர் 'G7 தலைவர்கள் இந்த வாரம் 'எவ்வளவு காலம் தேவையானாலும்’ உக்ரேனை ஆதரிப்பதாக உறுதியளித்தனர். 'எவ்வளவு காலம் தேவையானாலும்’ என்பது அமெரிக்க மக்களுக்கு எதனை அர்த்தப்படுத்துகின்றது என நீங்கள் விளக்க முடியுமா என்று நான் ஆச்சரியப்படுகின்றேன். இது உக்ரேனுக்கு அமெரிக்காவின் காலவரையற்ற ஆதரவு என்று அர்த்தமா? அல்லது அமெரிக்கா தனது நாட்டை இனி ஆதரிக்க முடியாது என்று ஜனாதிபதி செலென்ஸ்கியிடம் நீங்கள் சொல்ல வேண்டிய நேரம் வருமா? எனக் கேட்டார்.

பைடென், 'எவ்வளவு காலம் தேவையானாலும் நாங்கள் உக்ரேனை ஆதரிக்கப் போகிறோம்' என பதிலளித்தார்.

மற்றொரு நிருபர் 'அமெரிக்காவிலும் உலகெங்கிலும் பெட்ரோலின் அதிக விலை பற்றி கேட்டு... உலகெங்கிலும் உள்ள அமெரிக்க ஓட்டுநர்கள் மற்றும் உலகிலுள்ள ஓட்டுநர்கள் இந்தப் போருக்கான மேலதிக கொடுப்பனவுகளை செலுத்த வேண்டும் எதிர்பார்ப்பது எவ்வளவு காலம் நியாயமானது?' எனக் கேட்டார்.

பைடென் மீண்டும் 'எவ்வளவு காலம் தேவையானாலும்?' என வலியுறுத்தினார்.

பைடென்: எரிவாயு விலைகள் 'எவ்வளவு காலம் தேவையானாலும்' அதிகமாக இருக்கும்

பைடெனின் பிரகடனம் போர் முயற்சிக்காக சமூக வளங்களை கொடுப்பதற்கான வரம்பற்ற உறுதிமொழியாகும். கோவிட்-19 க்கான நிதியுதவியை இழந்த நிலையில், அதாவது காப்பீடு செய்யப்படாத தொழிலாளர்கள் தடுப்பூசிகள் மற்றும் கோவிட்-19 க்காக மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கு தமது கைகளில் இருந்து பணம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

சமீபத்திய நேட்டோ மூலோபாய ஆவணத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள திட்டங்கள், போருக்கு மட்டுமின்றி, இராணுவச் செலவினங்களுக்கு சமூக வளங்களை முடிவில்லாது திசைதிருப்புவது கணக்கிட முடியாத விளைவுகளை ஏற்படுத்தும். இது சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் ஓய்வூதியங்களுக்கான செலவினங்களைக் குறைப்பதோடு தொழிலாளர்களின் ஊதியத்தில் குறைப்புடன் இணைக்கப்படும்.

அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுக்கு எதிராக உலகம் முழுவதும் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், அவர்கள் போருக்கும் இராணுவவாதத்திற்கும் எதிரான போராட்டத்தை ஒரு முக்கியமான கோரிக்கையாக எடுத்துக்கொள்வது மிகவும் முக்கியமானது.

Loading