முன்னோக்கு

பாலஸ்தீனியர்களை பட்டினியால் கொல்வதையும் இஸ்ரேலின் இனச் சுத்திகரிப்பு திட்டங்களை நிறைவேற்றுவதையும் நோக்கமாகக் கொண்டு UNRWA அமைப்பிற்கான நிதியளிப்பு நிறுத்தப்படுகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம் 

பாலஸ்தீனியர்கள் டிசம்பர் 21, 2023 அன்று காஸாப் பகுதியின் ரஃபாவில் இலவச உணவுக்காக வரிசையில் நிற்கிறார்கள். [AP Photo/Fatima Shbair]

பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரண மற்றும் பணிகள் அமைப்பிற்கான (UNRWA) நிதியுதவியை அமெரிக்காவும் ஏனைய ஏகாதிபத்திய சக்திகளும் திரும்பப் பெறுவதானது, இஸ்ரேலின் நோக்கத்திற்காக காஸாவிலிருந்து பாலஸ்தீனியர்களை குண்டுவீசித் தாக்கியும் பட்டினியாலும் வெளியேற்றி கைப்பற்றுவதற்கு நெதன்யாகு ஆட்சியுடன் அவர்கள் நேரடியாக இணைந்திருப்பதை பிரதிபலிக்கிறது.

இது மேற்குக் கரை மற்றும் மத்திய கிழக்கு முழுவதிலும் உட்பட பாலஸ்தீனியர்கள் மீதான இனச் சுத்திகரிப்பின் ஒரு பரந்த தாக்குதலின் ஒரு பகுதியாகும்.

ஜனவரி 27 அன்று, சர்வதேச நீதிமன்றம் (ICJ) இஸ்ரேல் இனப்படுகொலை நடவடிக்கைகளைத் தவிர்க்க “அதன் சக்திக்குட்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்” என்று தீர்ப்பளித்தது. சில மணி நேரங்களுக்குள், இஸ்ரேல் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட எதிர்தாக்குதலைத் தொடங்கியது. வாஷிங்டனில் இருந்து வந்த அறிவுறுத்தலின் கீழ் செயல்பட்ட UNRWA ஆணையர் ஜெனரல் பிலிப் லாஸரினி, காஸாவிலுள்ள அவரது 13,000 ஊழியர்களில் 12 பேர் அக்டோபர் 7 அன்று இஸ்ரேலுக்குள் ஹமாஸ் தலைமையிலான ஊடுருவலில் ஏதோவொரு வகையில் பங்கெடுத்துக் கொண்டனர் என்று கூறி ஒரு வாரத்திற்கு முன்னர் இஸ்ரேலின் பாதுகாப்பு சேவைகளால் அவருக்கு வழங்கப்பட்ட ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை ICJ இன் தீர்ப்பின் சில மணி நேரங்களுக்குப் பின்னர் அறிவித்தார்.

அமெரிக்கா உடனடியாக UNRWA க்கான அனைத்து நிதியுதவிகளையும் நிறுத்தியது. வாஷிங்டனைத் தொடர்ந்து ஜேர்மனி, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் உட்பட 10 பிற நாடுகளும் இதை அறிவித்தன.

இதன் தாக்கங்கள் கொடூரமானவையாக இருக்கின்றன.

“காஸாவில் வேகமாக மோசமடைந்து வரும் மனிதாபிமான பேரழிவுக்கு மத்தியில்” எடுக்கப்பட்ட முடிவு குறித்து “ஆழ்ந்த கவலையும் கோபமும்” கொண்டிருப்பதாக சேவ் தி சில்ட்ரன் (Save the Children), ஆக்ஷன் எய்ட் (ActionAid), ஒக்ஸ்ஃபாம் (Oxfam) மற்றும் டேனிஷ் அகதிகள் கவுன்சில் (Danish Refugee Council) உள்ளிட்ட சுமார் 21 சர்வதேச உதவி நிறுவனங்கள் எழுதியிருக்கின்றன.

அவர்களின் கூட்டுக் கடிதம் இவ்வாறு எழுதியிருந்தது:

நன்கொடை வழங்கும் நாடுகளால் நிதியுதவிகள் நிறுத்தி வைக்கப்படுவது, காஸாவில் UNRWA உதவியை நம்பியுள்ள இரண்டு மில்லியனுக்கும் அதிகமான குடிமக்களின் உயிர் காக்கும் உதவியை பாதிக்கும், அவர்களில் பாதிக்கும் மேலானவர்கள் குழந்தைகள் ஆவார்கள். இஸ்ரேலின் தொடர்ச்சியான கண்மூடித்தனமான குண்டுவீச்சு மற்றும் காஸாவில் வேண்டுமென்றே உதவி மறுக்கப்படுவதன் மூலம் சூழ்ந்திருக்கும் பட்டினி, அச்சுறுத்தும் பஞ்சப் பற்றாக்குறை மற்றும் நோய் வெடிப்பை மக்கள் எதிர்கொள்கின்றனர்.

மனித உரிமைகளுக்கான சுயாதீன ஆணையம் (ICHR), மனித உரிமைகளுக்கான அல் மெசான் மையம் மற்றும் ரஃபாவில் உள்ள மனித உரிமைகளுக்கான பாலஸ்தீனிய மையம் உள்ளிட்ட பாலஸ்தீனிய குழுக்கள், இந்த நடவடிக்கையை “காஸாவில் ஆக்கிரமிப்பு படைகளால் நடைமுறைப்படுத்தப்பட்ட இனப்படுகொலையின் தொடர்ச்சி” என்றும் இது காஸாப் பகுதியில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான பாலஸ்தீனியர்களை “பட்டினியால் இறப்பதற்கு” இட்டுச் செல்லும் என்று விபரித்தன.

இஸ்ரேல் மற்றும் அதன் ஆதரவாளர்களின் வெளிப்படையான நோக்கம், அவ்வப்போது அவர்கள் செய்யக்கூடிய எந்தவொரு இழிந்த அறிக்கைகளையும் பொருட்படுத்தாமல், பட்டினியால் மரணத்தை ஏற்படுத்துவதாகும். இஸ்ரேலின் ஆயுதப்படைகள் சுமார் 30,000 பாலஸ்தீனியர்களை, பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகளைப் படுகொலை செய்தும், 65,000 பேரைக் காயப்படுத்தியுள்ள நிலையில், காஸாவின் அத்தியாவசிய உள்கட்டமைப்பில் பாதிக்கும் அதிகமானவற்றை தரைமட்டமாக்கி 1.9 மில்லியன் மக்களை (அதன் மக்கள்தொகையில் 85 சதவீதத்தினர்) உள்நாட்டிலேயே இடம்பெயரச் செய்துள்ள நிலையில், இஸ்ரேல் “தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்வதற்கான உரிமை” என்று கூறப்படுவதை அனைத்து ஏகாதிபத்திய சக்திகளும் தயக்கமின்றி பாதுகாத்துள்ளன.

எந்தவித தயக்கமுமின்றி, இஸ்ரேலும் அதன் நட்பு நாடுகளும் இப்போது பல்லாயிரக்கணக்கானோருக்கான மரண ஆணையில் கையெழுத்திட்டுள்ளன.

சி.என்.என் (CNN) வெளியிட்ட ஒரு கொடூரமான அறிக்கையானது, குழந்தைகள் பழைய ரொட்டிக்காக சண்டையிடுவதையும், கொடுமையான பசியைத் தணிக்க புல்லைத் தின்ன வேண்டிய கட்டாயத்தில் இருப்பதையும் விவரிக்கிறது. அங்கு சுத்தமான தண்ணீர் கிடையாது. காலரா மற்றும் வயிற்றோட்டம் போன்ற சுகயீனங்கள் தலைவிரித்தாடுவதோடு சுகயீனமுற்றவர்களைக் கவனிக்க வைத்தியசாலைகள் கிடையாது. ஐ.நா.வின் அவசர நிவாரணத் தலைவர் மார்ட்டின் கிரிஃபித்ஸ் சி.என்.என் (CNN) க்கு கூறுகையில், பட்டினி கிடக்கும் அபாயத்தில் இருப்பதாக ஐ.நா அமைப்புகளால் குணாம்சப்படுத்தப்பட்ட 400,000 காஸா மக்களில் “பெரும் பெரும்பான்மையினர்” “உண்மையிலேயே பஞ்சப் பற்றாக்குறையில் உள்ளனர்” என்றார்.

UNRWA ஐ நிவாரண அமைப்பை அழிப்பது என்பது காஸா மீதான இஸ்ரேலின் போரின் ஒரு வெளிப்படையான இலக்காகும், இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF) நூற்றுக்கணக்கான தாக்குதல்களை அதிகரித்துள்ளன, அவற்றில் UNRWA இன் 150 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் அதன் பராமரிப்பு இடங்களில் தஞ்சம் புகுந்துள்ள நூற்றுக்கணக்கான பொதுமக்கள் உள்ளனர். டிசம்பரில் கசியவிடப்பட்ட ஒரு இரகசிய இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சரக அறிக்கையானது UNRWA ஐ அகற்ற முன்மொழிந்திருந்தது, இது UNRWA இன் ஊழியர்கள் ஹமாஸுடன் ஒத்துழைத்ததாக குற்றஞ்சாட்டும் பிரச்சாரத்துடன் தொடங்கியது.

ஜனவரியில், வலதுசாரி கோஹெலெட் அறக்கட்டளையின் (Kohelet Foundation) நோகா அர்பெல் என்பவர் நெசெட் (நாடாளுமன்றம்) க்கு கூறுகையில், “UNRWA ஐ நாம் அழிக்காவிட்டால் இந்தப் போரை வெல்வது சாத்தியமற்றது” மற்றும் பாலஸ்தீனிய அகதிகளுக்கு சேவைகளை வழங்குவதன் மூலம் “பயங்கரவாதிகள் உருவாகுவதை அனுமதிப்பதிலிருந்து” தடுக்க முடியாது. வெளியுறவு மந்திரி இஸ்ரேல் காட்ஸ் அறிவிக்கையில், காஸாவில் ஒரு இஸ்ரேலிய வெற்றிக்கு அடுத்த நாள் “UNRWA ஆனது ஒரு பகுதியாக இருக்காது என்பதை உறுதிப்படுத்தும் ஒரு கொள்கையை ஊக்குவிப்பது” அவரது நோக்கங்களில் உள்ளடங்கி இருப்பதாக அறிவித்தார். 

இந்த நோக்கமானது காஸாவிற்கு அப்பாலும் விரிவடைந்துள்ளது. காஸா மற்றும் மேற்குக் கரை உட்பட, ஜோர்டான், லெபனான் மற்றும் சிரியா முழுவதும் பரவியுள்ள 58 அகதி முகாம்களில் உள்ள சுமார் ஆறு மில்லியன் பாலஸ்தீனியர்கள், UNRWA மற்றும் அதன் 30,000 பலமான பணியாளர்கள் மூலம் வழங்கப்படும் உதவிகளைச் சார்ந்துள்ளனர்.

அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் (UNHCR) 1950 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. அதற்கு முன்னர் இருந்த பல குறுகிய கால அமைப்புக்களைப் போலவே, அதன் பணியானது உலகெங்கிலும் உள்ள அகதிகளுக்கு, பெரும்பாலும் நாஜி ஆட்சி மற்றும் இரண்டாம் உலகப் போரின் கொடூரங்களில் இருந்து தப்பிப்பிழைத்த ஐரோப்பிய யூதர்கள், தாமாக முன்வந்து திருப்பிச் செல்லுதல் மற்றும் உள்ளூர் ஒருங்கிணைப்பு அல்லது மூன்றாவது நாட்டில் மீள்குடியேற்றம் ஆகியவற்றிற்கு உதவி வழங்குவதாக இருந்தது.

ஆனால் 1949 இல் நிறுவப்பட்ட UNRWA ஆனது ஒரு தனி அமைப்பாக வைக்கப்பட்டிருந்தது, ஏனெனில் இஸ்ரேல் மற்றும் 1948-49 அரபு-இஸ்ரேல் போரைத் தொடர்ந்து பாலஸ்தீனத்திலிருந்து தப்பியோடிய அல்லது வெளியேற்றப்பட்ட 700,000 பாலஸ்தீனியர்களை திருப்பி அனுப்புவது சியோனிச ஆட்சிக்கு வெறுக்கத்தக்கதாக இருந்தது. அண்டைய அரபு நாடுகள் பெரும்பாலும் குடியுரிமையை மறுத்தன, அதே நேரத்தில் இழிந்த முறையில், பாலஸ்தீனியர்கள் இழிநிலையான, நெரிசல் நிறைந்த முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டு அடைத்து வைக்கப்பட்டிருப்பது இஸ்ரேலால் ஏற்படுத்தப்பட்ட கட்டாய இடப்பெயர்விற்கு தங்கள் எதிர்ப்பின் வெளிப்பாடு என்று அறிவித்தன.

இது உணவு, உறைவிடம், சுகாதாரம் மற்றும் கல்விக்கு அமெரிக்கா மற்றும் ஜேர்மனி தலைமையிலான ஏகாதிபத்திய சக்திகளால் வழங்கப்பட்ட முற்றிலும் போதாத நிதியின் கருணையில் பாலஸ்தீனியர்களை முற்றிலும் விட்டுச்சென்றது. UNRWA இன் நிதியுதவியை இஸ்ரேல் பலமுறை தடுக்க முயன்றது, இது ஹமாஸின் ஒரு முன்னணி அமைப்பு என்று கூறியது. 2018 ஆம் ஆண்டில், ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்த அமைப்பிற்கான அமெரிக்க நிதியுதவியை நிறுத்தினார், இது பைடெனின் கீழ் ஓரளவு மீட்டெடுக்கப்பட்டது.

சியோனிஸ்டுகள் இப்பொழுது UNRWA ஐ பாலஸ்தீனியர்கள் ஒரு தனித்துவமான மக்களாக இருப்பதை ஒழித்துக்கட்டுவதற்கு ஒரு தடையாக பார்க்கின்றனர், ஏனெனில் அது மில்லியன் கணக்கான பாலஸ்தீனியர்களை ஒன்றாக வைத்திருக்கிறது மற்றும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை தீர்மானம் 194 இல் பொறிக்கப்பட்டுள்ள தங்கள் தாயக வீடுகளுக்குத் திரும்புவதற்கான உரிமையைக் கோர அனுமதிக்கிறது.

வலதுசாரி Jewish News Syndicate இன் தலைமை ஆசிரியரான ஜோனாத்தன் எஸ். டோபின், சியோனிச நிலைப்பாட்டை விரிவாக எடுத்துரைத்து, இவ்வாறு புகார் கூறினார்: அதாவது “மற்ற ஒவ்வொரு அகதி மக்களைப் போலல்லாமல், பாலஸ்தீனிய அரேபியர்கள் மீளக் குடியமர்த்தப்படவில்லை,” மாறாக “அவர்கள் இப்போது இஸ்ரேலாக இருக்கும் இடத்தில் உள்ள அவர்களின் முன்னாள் கிராமங்களுக்கான ‘வீட்டிற்கு’ செல்லக்கூடிய நாளுக்காக காத்திருக்க வைக்கப்பட்டனர்... எனவே, அக்டோபர் 7 இல் UNRWA ஆனது உடந்தையாக இருந்தது அல்லது பிற பயங்கரவாத செயல்கள் பற்றிய விவரங்களைப் பற்றி வாதிடுவதில் அதிக நேரத்தை வீணாக்க வேண்டாம். அதை ஒழித்து ஒரு உண்மையான அகதிகள் அமைப்பால் பிரதியீடு செய்வது குறித்து மட்டுமே நடத்தப்பட வேண்டிய விவாதமாக இருக்க வேண்டும்.”

ஜெருசலேமில் ஞாயிறன்று நடைபெற்ற “இஸ்ரேலின் வெற்றி” மாநாடானது, ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை நிரந்தரமாக இணைத்துக்கொள்ளும் இஸ்ரேலின் நோக்கத்தை உறுதிப்படுத்தியது. இந்த நிகழ்வில் தேசிய பாதுகாப்பு அமைச்சர் இட்டாமர் பென்-க்விர், நிதி மந்திரி பெசலெல் ஸ்மோட்ரிச் மற்றும் பல அரசாங்க அமைச்சர்கள் மற்றும் நெசெட் (நாடாளுமன்றம்) உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். காஸாவில் யூத குடியேற்றங்களை மீண்டும் நிறுவவும், மேற்குக் கரையில் அவற்றை விரிவுபடுத்தவும் அது அழைப்பு விடுத்தது.

உலகெங்கிலுமான தொழிலாளர்களும் இளைஞர்களும், ஒவ்வொரு வாரமும், காஸாவில் இனப்படுகொலையை முடிவுக்குக் கொண்டுவரக் கோரி மில்லியன் கணக்கில் ஆர்ப்பாட்ட அணிவகுப்பு செய்து கொண்டிருக்கின்றனர். போர் நிறுத்தம் கோருவதற்கு வெகுஜன அழுத்தம் கொடுப்பதன் மூலம் இது சாதிக்கப்படலாம் என்று அவர்களிடம் கூறப்பட்டுள்ளது, ஆனால் அவர்களுடைய அரசாங்கங்கள் இஸ்ரேலுக்கு தொடர்ந்து ஆதரவு கொடுப்பதைக் காண முடியும், அதே நேரத்தில் பல குடிமக்கள் கொல்லப்படுவதைத் தவிர்க்குமாறு பணிவுடன் முறையிடுகின்றன.

பின்னர் ஐ.நா.வை நம்புமாறு அவர்களிடம் கூறப்பட்டது. சட்டத்தின் ஆட்சிக்குத் திரும்புவதற்கான நம்பிக்கையின் ஒரு கீற்று இன்னமும் இருக்கிறது என்பதற்கு சர்வதேச நீதிமன்றத்தின் (ICJ) முதற்கட்டத் தீர்ப்பு சான்றாக பாராட்டப்பட்டது. ஆனால் அதற்குப் பதிலாக, ICJ ஆனது ஒரு தற்காலிக போர்நிறுத்தத்திற்கு கூட அழைப்பு விடுக்கவில்லை என்பது மட்டுமல்ல —இது ஐ.நா.வின் உத்தியோகபூர்வ பெரும்பான்மை நிலைப்பாடாக இருந்தபோதிலும்— ஆனால் இஸ்ரேலிய பாதுகாப்பு படையை (IDF) கட்டுப்படுத்துமாறு இஸ்ரேலுக்கு அது விடுத்த தாழ்மையான முறையீடுகள் இன்னும் கூடுதலான போர்க்குற்றங்களைத்தான் தூண்டின.

இவற்றிலிருந்து முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். இனப்படுகொலைக்கு எதிரான போராட்டம் என்பது அமெரிக்க-நேட்டோ ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒரு போராட்டமாகும், இதற்கு மத்திய கிழக்கில் இஸ்ரேல் பிரதான முகவராக உள்ளது. வாஷிங்டன், இலண்டன் மற்றும் பிற தலைநகரங்கள் (அரசாங்கங்கள்) காஸாவில் இஸ்ரேலை ஆதரிக்கின்றன, ஏனென்றால் “பாலஸ்தீன பிரச்சினையை” நீக்குவது ஈரான் மற்றும் அதனுடைய கூட்டாளிகளை இலக்கில் வைத்து, மத்திய கிழக்கில் ஒரு பரந்த போருக்கு பாதை வகுப்பதும், உலகத்தையும் அதன் வளங்களையும் சவாலுக்கிடமற்ற கட்டுப்பாட்டைப் பெறுவதற்காக ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் எதிரான போருக்கான திட்டங்களுடன் பின்னிப் பிணைந்துள்ளது.

இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் பிற ஏகாதிபத்திய சக்திகள் பாலஸ்தீனியர்களை இனரீதியில் சுத்திகரிப்புச் செய்யும் அவற்றின் இலக்கை அடைவதில் இருந்து தடுப்பதற்கும், போருக்கு எதிராகவும், போர் வெறி கொண்ட அரசாங்கங்கள் மற்றும் அவற்றின் பெயரளவு எதிர்ப்புக் கட்சிகளுக்கு எதிராகவும், மற்றும் அவைகள் அனைத்தையும் பாதுகாக்கும் பூகோள சுரண்டலின் முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராகவும் தொழிலாள வர்க்கத்தின் ஒரு சர்வதேச மற்றும் சோசலிச இயக்கம் அபிவிருத்தி செய்யப்பட வேண்டியது அவசியமாகும்.

Loading