நேட்டோ உச்சி மாநாட்டில் அமெரிக்க-ஜேர்மன் ஏவுகணைத் திட்டங்கள் ரஷ்ய மையப் பகுதியில் உள்ள நகரங்களை அச்சுறுத்துகின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

கடந்த வியாழன் அன்று, வாஷிங்டனில் இடம்பெற்ற நேட்டோ உச்சிமாநாட்டின் நிறைவில் எடுக்கப்பட்ட முடிவுகள், ஏகாதிபத்திய நேட்டோ சக்திகள் அணு ஆயுதம் ஏந்திய ரஷ்யாவிற்கு எதிராக நேரடி இராணுவத் தலையீட்டைப் பரிசீலித்து வருகின்றன என்பதைக் காட்டுகின்றன. ரஷ்யாவிற்கு எதிரான போர்த் தாக்குதலை ஒருங்கிணைக்க உக்ரேனில் ஒரு அலுவலகத்தையும் ஜேர்மனியில் நேட்டோ கட்டளை மையத்தையும் உருவாக்குவதாக நேட்டோ கூட்டமைப்பு முந்தைய நாள் அறிவித்தது.

புதிய நீண்ட தூர செல்லும் ஹைப்பர்சோனிக் ஆயுதம் (LRHW) மார்ச் 3, 2023 அன்று புளோரிடாவில் உள்ள கேப் கனாவெரல் விண்வெளிப் படைத் தளத்தில் ஆபரேஷன் தண்டர்போல்ட் தாக்குதலின் போது காட்சிக்கு வைக்கப்பட்டது [Photo: US Army]

நேட்டோ சக்திகள் கடந்த வாரம் உக்ரேனிய ஆட்சிக்கான இராணுவச் செலவில் 40 பில்லியன் டாலர்களை கூடுதலாக வழங்க உறுதியளித்தன. மிகவும் ஆத்திரமூட்டும் வகையில், வாஷிங்டனும் பேர்லினும் ஜேர்மனியில், ரஷ்யாவை இலக்காகக் கொண்ட நீண்ட தூர வழிகாட்டும் ஏவுகணைகளை நிலைநிறுத்த ஒப்புக்கொண்டன. இது தொடர்பாக, அமெரிக்க மற்றும் ஜேர்மன் அரசாங்கங்களின் கூட்டுப் பிரகடனம் பின்வருமாறு கூறுகிறது:

அமெரிக்கா, அதன் பல- களங்களை இலக்கு வைத்து தாக்கும் படையணியின் நீண்ட தூரத்துக்கு சுடும் திறன்களைக் கொண்ட ஆயுதங்களை ஜேர்மனிக்கு 2026 இல் வழக்கத்துக்கு மாறாக வரிசைப்படுத்தத் தொடங்கும். எதிர்காலத்தில் இந்த திறன்களை நிலையாக நிலைநிறுத்துவதற்கான திட்டமிடலின் ஒரு பகுதியாக இது இருக்கும். இந்த திட்டம் முழுமையாக முழு வளர்ச்சி அடையும் போது, நீண்ட தூரம் செல்லும் மரபுசார் ஆயுத பிரிவுகளில் SM-6, Tomahawk மற்றும் அபிவிருந்தியடைந்த ஹைப்பர்சோனிக் ஆயுதங்கள், ஐரோப்பாவில் தற்போது தரையிலிருந்து சுடும் திறன்களை விட அதிக தூரம் செல்லக்கூடியவைகளாக இருக்கும்.

பெல்கோரோட் மற்றும் செவஸ்டோபோலில் ரஷ்ய குடிமக்களுக்கு எதிரான உக்ரேனிய ஏவுகணைத் தாக்குதல்களை மேற்பார்வையிட்ட நேட்டோ நாடுகள், இப்போது கிட்டத்தட்ட அனைத்து முக்கிய ரஷ்ய மக்கள்தொகை மையங்களிலும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்த தேவையான நிலைமைகளை உருவாக்கி வருகின்றன. 2,000 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் வரை சென்று தாக்கும் Tomahawk க்ரூஸ் ஏவுகணைகள் ரஷ்யாவை ஆழமாக தாக்க இருக்கின்றன. பேர்லினுக்கும் மாஸ்கோவிற்கும் இடையிலான குறுகிய தூரம் 1,600 கிலோமீட்டருக்கும் குறைவானதாகும்.

நீண்ட தூர ஹைப்பர்சோனிக் ஆயுதம் (LRHW) 1,725 ​​மைல்கள் (2,776 கிலோமீட்டர்) தூர வரம்பைக் கொண்டுள்ளதோடு, ஏவுகணை தடுப்பு பாதுகாப்பு அமைப்புகளையும் தாண்டி பயணம் செல்லுக்கூடியது. அமெரிக்க இராணுவத்தின் கூற்றுப்படி, “தரையிலுள்ள வாகனத்திலிருந்து ஏவப்படக் கூடிய இந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள், ஒரு மணி நேரத்திற்கு 3,800 மைல்களுக்கு மேல் பயணிக்கும் திறன் கொண்டுள்ளது. அவை பூமியின் வளிமண்டலத்தின் மேல் விளிம்பை அடையலாம் மற்றும் அவை பயணிக்கும் வரை வான் மற்றும் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளின் வரம்பிற்கு அப்பால் இருக்கும். அந்த நேரத்தில், இதற்கு பதிலடி தாக்குதல் மேற்கொள்வது மிகவும் தாமதமாகவிடும்.

ஜேர்மனியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள LRHW ஏவுகணைகள் ரஷ்யாவின் பெரிய நகரங்களான மாஸ்கோ மற்றும் செயின்ட் பீட்டர்ஸ்பேர்க்கை மட்டும் தாக்க கூடியவை அல்ல. மாறாக, இவை நிஸ்னி-நோவ்கோரோட், பெர்ம், உஃபா, சரடோவ் மற்றும் மேற்கு கஜகஸ்தானின் பெரும் பகுதிகள் போன்ற யூரேசியாவிற்குள் ஆழமான ரஷ்ய நகரங்களை தாக்க கூடியவைகளாக இருக்கின்றன.

ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) முக்கிய சக்திகள் ரஷ்ய நகரங்களை குறிவைக்கும் நீண்ட தூர தாக்குதல் திறன் கொண்ட ஏவுகணைகளின் திறன்களை மேம்படுத்துவது குறித்தும் பரிசீலித்து வருகின்றன. வாஷிங்டனில், ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி மற்றும் போலந்து ஆகிய நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் தங்களுடைய சொந்த நீண்ட தூர துல்லியமான ஆயுதங்களை உருவாக்கும் நோக்கத்தின் பிரகடனத்தில் கையெழுத்திட்டனர்.

Frankfurter Allgemeine Zeitung (FAZ) எழுதிய இந்த திட்டத்தின் நோக்கம், “கணிசமாக, ஆயிரம் கிலோமீட்டருக்கும் அதிகமான வரம்பைக் கொண்ட தரையிலிருந்து தாக்கும் ஆயுதத்தை உருவாக்குவது” ஆகும். இது “குரூஸ் ஏவுகணை அல்லது ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையாக இருக்கும், பிந்தையது சூப்பர்சோனிக் வேகம் கொண்டது. அத்தகைய ஆயுதங்கள், பின்னர் ஜேர்மனியிலிருந்து ரஷ்ய இலக்குகளையும், அத்தோடு 2,000 கிலோமீட்டர் தூரத்திலுள்ள மாஸ்கோவிற்கும் ஏவப்படலாம்” என்று FAZ மேலும் கூறியது.

20 ஆம் நூற்றாண்டின் இரண்டு உலகப் போர்களின் போது ரஷ்யாவை அடிபணிய வைக்கும் முயற்சியில் இனப்படுகொலைக் குற்றங்களைச் செய்த ஜேர்மன் ஏகாதிபத்தியம் மீண்டும் போர் விரிவாக்கத்தின் முன்னணியில் உள்ளது. நீண்ட தூர ஏவுகணை அமைப்புகள் தேவை என்று சமூக ஜனநாயக கட்சியின் ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ், சாத்தியமான வகையில் ரஷ்ய ஆக்கிரமிப்பாளருக்கு நம்மை தற்காத்துக் கொள்ள நாம் தயாராக இருக்கிறோம் என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று கூறினார். மேலும், “எங்களுக்கு எதிரான எந்த தாக்குதலுக்கும் வழக்கமான முறையில் பதிலடி கொடுக்கப்படும்” என்று மேலும் அவர் தெரிவித்தார்.

ஜேர்மன் சமூக ஜனநாயக கட்சி அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ், நேட்டோ உச்சிமாநாட்டின் தொடக்கத்தில், ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோ தாக்குதலுக்கு ஜேர்மனி இன்னும் கூடுதலான “பொறுப்பை” ஏற்க விரும்புகிறது என்று பெருமையாக கூறினார். “நேட்டோ கூட்டணிக்குள் இருக்கும் ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய நாடு ஜேர்மனி, இது எங்களுக்கு ஒரு சிறப்புப் பொறுப்பைத் தருகிறது,” என்று ஷோல்ஸ் கூறினார். மேலும் அவர், “தெளிவாகவும் சந்தேகத்திற்கு இடமின்றி சொல்ல முடியும்: நாங்கள் அதைச் செய்வோம், நான் இந்த பொறுப்பை நிறைவேற்றுவேன்” என்று தெரிவித்தார்.

ஷோல்ஸ், மீண்டும் மீண்டும் ஜேர்மன் இராணுவத்துக்கான 100 பில்லியன் யூரோ சிறப்பு நிதி மற்றும் “எங்கள் பாதுகாப்புத் திறனுக்கான இத்தகைய பாரிய ஆதரவை நோக்கி நிச்சயமாக ஒரு மாற்றத்தை, இந்த ஆண்டு மற்றும் அனைத்து அடுத்தடுத்த ஆண்டுகளில்” ஏற்படுவதுபற்றி பெருமையடித்துக் கொண்டார். மேலும், ஜேர்மனி, “முக்கியமான பணிகளை மேற்கொள்ளும், குறிப்பாக லிதுவேனியாவில் உள்ள படைப்பிரிவுடன், குறிப்பாக ரோஸ்டாக்கில் உள்ள பால்டிக் கடல் பகுதியிலுள்ள கூட்டுக் கட்டளை மையத்துடன், குறிப்பாக அடுத்த ஆண்டு 35,000 ஆண்கள் மற்றும் பெண்களைக் கொண்ட விரைவாக செயற்படக்கூடிய ஆயுதப் படைகளை வழங்குவதன் மூலம், எங்கள் கூட்டணியின் பாதுகாப்புப் பணிகளுக்கு உத்தரவாதம் அளிக்க முடியும்” என்று அவர் கூறினார்.

ஷோல்ஸ், “பாதுகாப்பு பணிகள்” என்று அழைப்பது, உண்மையில் ரஷ்யாவை போரால் அச்சுறுத்தி, ஐரோப்பாவையும் உலகையும் மிகவும் எளிதில் தூண்டுக்கூடிய இடத்தில் வைப்பதுடன், அங்கு நேட்டோ ஒரு நிமிட அறிவிப்பில் ரஷ்யா மீது ஏவுகணை தாக்குதல்களை நடத்த முடியும் என்பதையாகும். உண்மையில், வாஷிங்டன் உச்சிமாநாட்டின் இறுதிப் பிரகடனம், வாஷிங்டன் ரஷ்யாவிற்கு எதிராக மட்டுமல்ல, யூரேசியாவில் ரஷ்யாவின் நேச நாட்டு வல்லரசுகளுக்கு எதிராகவும் போருக்குத் தயாராகி வருகிறது என்பதைத் தெளிவாக்கியுள்ளது.

“எங்கள் நட்பு நாடுகளின் பாதுகாப்பிற்கு ரஷ்யா மிகப்பெரிய மற்றும் உடனடி அச்சுறுத்தலாக உள்ளது,” என்று அதன் அறிக்கை கூறுகிறது. மேலும், “யூரோ-அட்லாண்டிக் பகுதியில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை ரஷ்யா சிதைத்துவிட்டதாகவும், உலகளாவிய பாதுகாப்பை கடுமையாக குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும்” அறிக்கை குற்றம் சாட்டுகிறது. நேட்டோ சக்திகள், “ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கும், போட்டியிடுவதற்கும் மற்றும் நேட்டோவின் நட்பு நாடுகளுக்கு எதிராக ஸ்திரமின்மை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அதன் திறனை எதிர்ப்பதற்கும் உறுதியாக உள்ளன” என்று அறிக்கை மேலும் கூறுகிறது.

இவை அனைத்தும் பொய்கள் ஆகும். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் உக்ரேன் மீதான படையெடுப்பு பிற்போக்குத்தனமானது. ஆனால், இந்தப் போரில் மிகவும் ஆக்கிரோஷமான பாத்திரத்தை வகித்து வருவது ரஷ்யா அல்ல மாறாக நேட்டோவாகும். நேட்டோவின் மக்கள்தொகை ரஷ்யாவின் 144 மில்லியனையும் தாண்டி 900 மில்லியன் ஆக இருக்கிறது. மேலும் ரஷ்யாவின் 1.3 மில்லியனுடன் ஒப்பிடும்போது, 3.3 மில்லியன் நேட்டோ துருப்புக்கள் சுறுசுறுப்பான பணியில் ஈடுபட்டுள்ளன. நேட்டோ நாடுகள் தங்கள் துருப்புக்களை ரஷ்யாவின் எல்லை வரை அணிவகுத்துச் சென்றள்ளன. வேறு வழியில்லாமல், இப்போது நேட்டோ ரஷ்ய நகரங்களை நோக்கி குண்டுவீசி மிரட்டியும் வருகிறது.

மத்திய கிழக்கு, மத்திய ஆசியா மற்றும் ஆபிரிக்காவில் மேற்கொண்டுவந்த, பல தசாப்தகால செல்வாக்கற்ற ஆக்கிரமிப்புப் போர்களுக்குப் பிறகு, நேட்டோ ஏகாதிபத்திய சக்திகள் ரஷ்யாவை அடிபணிய வைப்பதற்கும், சீனாவுக்கு எதிரான போரை தயாரிப்பதற்கும், மேலும் உலகளாவிய போரைத் விரிவாக்குவதற்கும் திட்டமிட்டு வருகின்றன.

நேட்டோ பிரகடனம் காஸாவில் நேட்டோ ஆதரவு இஸ்ரேலிய இனப்படுகொலை குறித்து மௌனமாக உள்ளது. மாறாக ஈரான், வட கொரியா மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக சீனாவை ரஷ்யாவுடன் உறவுகளை வைத்திருப்பதற்காக அச்சுறுத்துகிறது. “PRC [மக்கள் சீனக் குடியரசு] ஆனது உக்ரேனுக்கு எதிரான ரஷ்யாவின் போருக்கு அதன் வரம்புகள் இல்லாத கூட்டாண்மை மற்றும் ரஷ்யாவின் பாதுகாப்பு தொழில்துறை தளத்திற்கான அதன் பெரிய அளவிலான ஆதரவின் மூலம் ஒரு தீர்க்கமான இயக்கமாக மாறியுள்ளது. … PRC, அதன் நலன்கள் மற்றும் நற்பெயரை எதிர்மறையாக பாதிக்காமல், சமீபத்திய வரலாற்றில் ஐரோப்பாவில் மிகப்பெரிய போரை செயல்படுத்த முடியாது“ என்று அறிக்கை கூறுகிறது.

ஏவுகணைத் தாக்குதல்களால் ரஷ்ய நகரங்களையும் மற்றும் சீனாவையும் அச்சுறுத்திவரும் நேட்டோவின் நடவடிக்கையை ஒரு எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ள வேண்டும்: அவர்கள் நேட்டோ நாடுகளில் உள்ள தொழிலாளர்களும் இளைஞர்களும் பேரழிவுகரமான உயிரிழப்புகளை சந்திக்கும் ஒரு மோதலை உருவாக்கி வருகிறார்கள்.

ரஷ்ய அதிகாரிகள், வாஷிங்டன் உச்சிமாநாட்டைக் கண்டித்தும் இராணுவ எதிர் நடவடிக்கைகளை அச்சுறுத்துவதன் மூலமாக இதற்கு பதிலளித்தனர். “ஐரோப்பிய கண்டத்தில் பதட்டங்கள் அதிகரித்து வருகின்றன” என்று கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் எச்சரித்தார். “கருங்கடலில் நகரங்களில் தனியாக ஆயுத தளவாட மையங்களை அமைப்பது, ஐரோப்பாவில் கூடுதல் இராணுவ வசதிகளை திறப்பது போன்ற நேட்டோவின் முடிவுகளை ரஷ்யா காண்கிறது” என்று குறிப்பிட்ட அவர், இது “நமது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு மிகவும் கடுமையான அச்சுறுத்தலாக இருப்பதுடன், நேட்டோவை தடுக்கவும் எதிர்க்கவும் சிந்தனைமிக்க, ஒருங்கிணைந்த மற்றும் பயனுள்ள பதில்கள் தேவை” என்று தெரிவித்தார்.

ரஷ்ய துணை வெளியுறவு மந்திரி செர்ஜி ரியாப்கோவ் “முதலில் இந்த புதிய விளையாட்டுக்கு இராணுவ பதிலடியை உருவாக்குவதாக” உறுதியளித்தார் என்று Interfax செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சோவியத் ஒன்றியத்தை ஸ்ராலினிசம் கலைத்ததன் மூலம் ஸ்தாபிக்கப்பட்ட ஊழல் நிறைந்த ரஷ்ய முதலாளித்துவ ஆட்சியின் திவால்நிலையை இந்தப் பதில்கள் அம்பலப்படுத்துகின்றன. நேட்டோவின் அச்சுறுத்தல்களுக்கு ரஷ்யாவின் இராணுவப் பதிலடி - ரஷ்ய ஏவுகணைப் படைகள் பேர்லின், லண்டன், பாரிஸ், ரோம் மற்றும் மாட்ரிட் ஆகிய இடங்களில் விரைவாகக் குண்டு வீசும் வகையில் திட்டங்களை வகுத்தல் - உலகை ஒரு பேரழிவுகரமான அணுஆயுத மோதலுக்கு ஒரு படி நெருக்கமாகக் கொண்டுவருகிறது. நேட்டோ போர்வெறிக்கு ஒரேயொரு முற்போக்கான தீர்வு, தொழிலாள வர்க்கத்திற்குள் ஏகாதிபத்திய போருக்கான பாரிய எதிர்ப்பை, ஒரு சர்வதேச சோசலிச போர் எதிர்ப்பு இயக்கத்தில் அணிதிரட்டுவதாகும்.

Loading