புதிய இராணுவத் தலைவர் ஜெனரல் சான்டர்ஸ், ரஷ்யாவுடன் முழுமையான போருக்குத் தயாராகுமாறு பிரிட்டனை வலியுறுத்துகிறார்

"பிரிட்டிஷ் இராணுவம் அதன் மிக வன்முறையான போரில் ஈடுபட தயாராக இருக்க வேண்டும்."

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பிரிட்டிஷ் இராணுவத்தின் புதிய தலைவரான ஜெனரல் சேர் பாட்ரிக் சான்டர்ஸ் செவ்வாயன்று இரத்தத்தை உறைய வைக்கும் உரையை நிகழ்த்தினார், இங்கிலாந்தும் அதன் நேட்டோ நட்பு நாடுகளும் ரஷ்யாவிற்கு எதிரான போரை நடத்தத் தயாராக வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Royal United Services Institute (RUSI) இன் வருடாந்திர 'நிலப் போர் மாநாடு' (Land Warfare Conference) க்கு சான்டர்ஸின் முக்கிய உரை ஸ்கை நியூஸ் இல் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. மேலும் பாதுகாப்பு செயலாளர் பென் வாலஸ், அமெரிக்க இராணுவ செயலாளர் கிறிஸ்டின் வோர்முத், ஜேர்மனியின் இராணுவ தலைமைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் அல்ஃபோன்ஸ் மைஸ் மற்றும் உக்ரேன் தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு கவுன்சிலின் முன்னாள் செயலாளர் ஒலெக்சான்டர் டானிலியுக் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

பிரிட்டிஷ் இராணுவத்தின் தலைவர் ஜெனரல் சேர் பாட்ரிக் சான்டர்ஸ்

இரண்டாம் உலகப் போர் வெடிப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, அந்த ஆண்டு ஃபீல்ட் மார்ஷல் பேர்னார்ட் லோ மொண்ட்கோமெரி எழுதியதைக் குறிப்பிட்டு, பிரிட்டன் தனது '1937 தருணத்தை' எதிர்கொள்கிறது என சான்டர்ஸ் எச்சரித்தார், 'கடந்த முப்பது அல்லது நாற்பது ஆண்டுகளாக இராணுவத்தில் செய்யப்பட்டிருப்பதால் வெறுமனே ஒரு காரியத்தை தொடர்ந்து செய்ய வேண்டிய அவசியமில்லை — இதைச் செய்வதற்கு இது மட்டுமே காரணம் என்றால், பின்னர் நாங்கள் மாற்றி வேறு ஏதோ ஒன்றை செய்ய வேண்டிய சரியான நேரம் இது.”

சான்டர்ஸ் கூறினார், 'இன்று, 'வேறு ஏதோ ஒன்று' நாம் எதிர்கொள்ளும் புதிய அச்சுறுத்தலைச் சந்திக்க இராணுவத்தை அணிதிரட்டுகிறது: பிப்ரவரி 24 ஆம் தேதி உணரப்பட்ட ஒரு தெளிவான மற்றும் தற்போதைய ஆபத்து, ஐக்கிய இராச்சியத்தின் நண்பரான உக்ரேனிடமிருந்து நிலப்பரப்பைக் கைப்பற்ற ரஷ்யா பலத்தை பயன்படுத்தியது.”

சான்டர்ஸ் மேலும் கூறுகையில், 'சீருடையில் எனது எல்லா ஆண்டுகளிலும், இறையாண்மை மற்றும் ஜனநாயகத்தின் கொள்கைகளுக்கும், வன்முறைக்கு அஞ்சாமல் வாழ்வதற்கான சுதந்திரத்திற்கும் இவ்வளவு தெளிவான அச்சுறுத்தலை நான் அறிந்திருக்கவில்லை. இது, ஜனாதிபதி புட்டினின் மிருகத்தனமான ஆக்கிரமிப்பு மற்றும் அவரது விரிவாக்க அபிலாஷைகளாகும்.”

இந்த இழிந்த உணர்ச்சி வெடிப்பு, மூன்று தசாப்தங்களுக்கு மேலாக பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தால் நடத்தப்பட்ட ஒவ்வொரு குற்றத்திற்கும் ஒரு அனுபவமிக்க ஒருவரால் செய்யப்படுகிறது. வடக்கு அயர்லாந்து, கொசோவோ, பொஸ்னியா, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் நடவடிக்கைகளுக்கு சான்டர்ஸ் கட்டளையிட்டார். தாக்குதல் போர்களை நடத்த ஆயுதப்படைகளை வலுப்படுத்த வேண்டும் என்ற அவரது கோரிக்கைக்கு இது வெளிப்படையான நியாயமாகும். இனிமேல் தேவைப்படுவது என்னவென்றால், 'தயார்நிலை மற்றும் ஒருங்கிணைந்த ஆயுதப் பயிற்சி மற்றும் ஒரு பரந்த நிறுவன புதுப்பித்தல் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்துதல், மற்றும் இது அழைக்கப்பட்டால் வெற்றி பெறுவதற்குத் தேவையான கலாச்சாரத்தை உருவாக்கும். Operation MOBILISE என்று பெயரிடப்பட்ட இந்த செயல்முறை, வரும் ஆண்டுகளில் இராணுவத்தின் முதன்மை மையமாக இருக்கும்.

ஓர்வெல்லியன் இரட்டைப் பேச்சில், 'ஐரோப்பாவில் போரைத் தடுக்க' இங்கிலாந்து 'இன்றைய அச்சுறுத்தலைச் சந்திக்க அணிதிரள வேண்டும்', அதாவது போரை நடத்த வேண்டும் என்று சான்டர்ஸ் கூறினார். இதன் பொருள், ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோவின் பினாமி போரில் உக்ரேனை முழுமையாக ஆயுதபாணியாக்குவதை குறிக்கிறது.

சான்டர்ஸ் பெருமையாகக் கூறினார், 'ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிரான போராட்டத்தில் உக்ரேனைத் தக்கவைக்க இராணுவ உபகரணங்கள், உளவுத்துறை மற்றும் பயிற்சியை வழங்க பங்காளிகளின் கூட்டணியை ஒன்றிணைக்க பாதுகாப்பு ஒரு அற்புதமான வேகத்தில் பணியாற்றியுள்ளது... இந்த ஆண்டு மட்டும் நாங்கள் 9500 டாங்கி-எதிர்ப்பு ஏவுகணைகளை வழங்கியுள்ளோம், அவற்றில் 5000 க்கும் மேற்பட்டவை NLAW ஆகும். நாங்கள் ஏற்கனவே 650 AFU துருப்புகளுக்கு இங்கிலாந்து அடிப்படையிலான பயிற்சியை வழங்கியுள்ளோம், மேலும் வரும் மாதங்களில் மேலும் 10,000 பேருக்கு போரில் வெற்றி பெறும் திறன்களை பிரிட்டிஷ் இராணுவம் வழங்கும். இது இப்போதுதான் தொடங்கப்பட்டுள்ளது.”

வெற்றி பெறுவதற்கு தேவையான அனைத்தையும் செய்ய இங்கிலாந்து தயாராக வேண்டும். 'நீங்கள் மோதலைத் தவிர்க்க விரும்பினால், நீங்கள் போரிடத் தயாராக இருக்க வேண்டும்' என்ற காலங்காலமான கொள்கையை ரஷ்யப் படையெடுப்பு நமக்கு நினைவூட்டியுள்ளது. மேலும் இதை தெளிவாக்குவதற்காக — இதன் அர்த்தம், இந்த அச்சுறுத்தலுக்கு எதிராகவும், இந்த இடத்திலும் போரை வெற்றிகொள்வதில் கவனம் செலுத்துவது, இந்த கூட்டாளிகளுடன் இணைந்து பணியாற்றுவது” என்றார்.

ஸ்பெயின் தலைநகரில் புதன்கிழமை நேட்டோ உச்சிமாநாட்டைக் குறிப்பிடுகையில், சான்டர்ஸ் அறிவித்தார், 'மேலும் மாட்ரிட்டில் வழங்கப்படும் முதல் உத்தரவுகளை நாளை பார்ப்போம்.'

RUSI இன் உதவியுடன், 'நாங்கள் ஒருங்கிணைந்த ஆயுத கையாளல்களை இரட்டிப்பாக்குவோம், குறிப்பாக ஆழமான போரில், மேலும் புவியியலில் வேரூன்றிய ஒரு புதிய கோட்பாட்டை வகுப்போம், நேட்டோவின் போர் திட்டங்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டு, கவனம் செலுத்தும், பொருத்தமான முதலீட்டை இயக்கும் அளவுக்கு குறிப்பிட்டது, மேலும் அழைக்கப்பட்டால் போரிடவும் வெல்லவும் எமது மக்களின் கற்பனையை ஊக்குவிக்கும்.”

ரஷ்யாவை தோற்கடிப்பதற்கு, 'உக்ரேனில் போர், நில சக்தியின் பயன்பாட்டையும் நமக்கு நினைவூட்டுகிறது: பிரதேசத்தை கைப்பற்றவும் மீண்டும் கைப்பற்றவும் அங்கு வாழும் மக்களைப் பாதுகாக்கவும் ஒரு இராணுவம் தேவை.” எனவே பணியாளர்களை பெருமளவில் அணிதிரட்ட வேண்டும். இதை தடுக்க ஒரு இராணுவம் தேவை. இந்த இராணுவம், பிரிட்டிஷ் இராணுவம், நமது நட்பு நாடுகளுடன் இணைந்து தனது பங்கை வகிக்கும்.”

'எங்கள் நேட்டோ நட்பு நாடுகள் மற்றும் பங்காளிகளுடன் இணைந்து', இங்கிலாந்து 'ஆரம்பத்தில் இருந்தே வலிமையை வலிமையுடன் சந்திக்க வேண்டும் மற்றும் நேட்டோ பிரதேசத்திற்காக போராடுவதற்கு சந்தேகத்திற்கு இடமின்றி தயாராக இருக்க வேண்டும்.”

அத்தகைய மோதலில், 'தாக்குதல் நேரத்தில் நாங்கள் அதிகமாக இருப்போம், நாங்கள் பிசாசுகளைப் போல போராடுவோம். காற்று, கடல் அல்லது சைபர் தீ மட்டும் ஆதிக்கம் செலுத்தும் என்பது சாத்தியமில்லை. பூமி எப்போதும் தீர்க்கமான களமாக இருக்கும்... ஒருங்கிணைந்த ஆயுதங்கள் மற்றும் பல-கள திறமையால் வெற்றி தீர்மானிக்கப்படுகிறது. எங்கள் விரோதிகள் மற்றும் பயிற்சியுடன் ஈடுபடுவது, எங்கள் கூட்டாளர்களுக்கு உதவுவது மற்றும் உறுதியளிப்பது மிகவும் இலாபகரமான செயலாகும் என்பதையும் உக்ரைன் காட்டுகிறது'.

இப்போது இரத்த வெறியால் மூழ்கிப்போன சான்டர்ஸ், 'பிரிட்டிஷ் இராணுவம் அதன் மிக வன்முறையான போரில் ஈடுபட தயாராக இருக்க வேண்டும்' என்று முடித்தார்.

அவரது பார்வையாளர்களைப் பார்த்து, “கடந்த காலப் பிரச்சாரங்களில் இருந்த நண்பர்களின் முகங்கள், நாங்கள் கஷ்டங்களையும் சிரிப்பையும், தோல்விகளையும் வெற்றிகளையும் பகிர்ந்து கொண்டோம். நாங்கள் ஒன்றாக இரத்தம் சிந்தியுள்ளோம். நாம் விட்டுச் சென்றவர்களை நினைவில் கொள்கிறோம். மேலும் இதுவே, நமது பொதுவான மதிப்புகள் மற்றும் ஒருவருக்கொருவர் பிரதேசத்தைப் பாதுகாக்க இரத்தம் சிந்த எங்கள் விருப்பம், நம்மை மேலோங்கச் செய்வதை காணும்.'

ஒரு மில்லியனுக்கும் அதிகமான உயிர்களைக் கொன்ற ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற மோதல்களை சான்டர்ஸ் குறிப்பிடுகிறார். அவர் இப்போது வாதிடும் மற்றும் திட்டமிடும் ரஷ்யாவுடனான மொத்தப் போரின் விளைவாக ஏற்படும் இறப்பு எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இது ஒன்றுமே இல்லை.

சான்டர்ஸின் உரையின் முக்கிய பகுதிகள், போருக்கு அணிதிரட்டுவது என்பது மனித வளங்கள் மற்றும் ஆயுதங்களை அதிகப்படுத்துவது என அரசாங்கத்திற்கு எச்சரிக்கையாக இருந்தது. 'ஒரு புதிய யதார்த்தத்தை, அணிதிரட்டுவதற்கான ஒரு பந்தயத்தை நாம் எதிர்கொள்ளும்போது, எதிர்கால சிப்பாய்கள் [பிரிட்டிஷ் இராணுவ உருமாற்றத் திட்டம்] காலக்கெடு, திறன் இடைவெளிகள் மற்றும் அபாயங்கள் பற்றி நாம் நேர்மையாக இருக்க வேண்டும் — இப்போது உக்ரேனின் ஆயுதப் படைகளின் துணிச்சலான வீரர்களுக்கு பரிசளிப்பதன் விளைவாக நமது சொந்த கையிருப்பு குறைந்து வருகிறது.'

இராணுவ சேவையை நிறுவுவதற்கான சாத்தியமான தேவையை சந்தேகத்திற்கு இடமின்றி குறிப்பிடுகையில், அவர் வலியுறுத்தினார்: 'தேவையெனில் இராணுவ சேவையை நிறுவுவதற்கு நாங்கள் பயப்படக்கூடாது. பாதுகாப்பு அதன் பலவீனமான களத்தைப் போலவே வலுவானது. மேலும் தொழில்நுட்பம் போராடும் வெகுஜனத்தின் பொருத்தத்தை அகற்றாது'.

உக்ரேன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பினால் தனது திட்டம் அவசியமானது என சான்டர்ஸ் கூறியது வெளிப்படையான பொய்யாகும். அவரது முழு உரையும், கடந்த ஆண்டு நவம்பர் வரை பாதுகாப்புப் படைகளின் தலைவரான ஜெனரல் சேர் நிக்கோலஸ் கார்ட்டரால் 2018 ஆம் ஆண்டு RUSI மாநாட்டில் ஆற்றிய உரைக்கு சதையை மட்டுமே வைக்கிறது.

பிரிட்டிஷ் இராணுவம், 'சாலை மற்றும் இரயில் மார்க்கமாக தரையை நிலைநிறுத்த முடியும்' என்று அவர் முன்மொழிந்தார். எமது தாக்குதல் கருத்து சுமார் 2,000 கிமீ தூரம் வரை நிலத் திறனை திட்டமிட முயல்கிறது.

இது 1941 ஆம் ஆண்டில் ரஷ்யாவின் நாஜி படையெடுப்பை வரைபடமாக்குவதை உள்ளடக்கும், இது 2,900 கிலோமீட்டர் முன்னணி மேற்கொள்ளப்பட்டது, கார்ட்டர் கூறினார், 'உதாரணமாக, 1940 ஆம் ஆண்டில் ஜேர்மனியர்கள் அனைவரும் தங்கள் முக்கிய நகர்வுகளின் அடிப்படையில் சிறப்பாகச் செய்ததை நாங்கள் நன்றாக நகலெடுக்கிறோம். டாங்கிகள் மற்றும் கவச வாகனங்கள், டிரெய்லர்களைக் கொண்டிருந்தன; அதைச் செய்வதன் மூலம், அது உங்கள் அத்தியாவசிய தேவை தட்டுப்பாட்டை குறைக்கிறது.

பாதுகாப்பு மந்திரி வாலஸ், சான்டர்ஸுடன் இணைந்து இருப்பது, இந்த வாரம் இராணுவ செலவினங்களில் 20 சதவிகிதம், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்ற தனது சொந்த கோரிக்கைகளை வலுப்படுத்துவதாகும். அவர் மாநாட்டில் கூறினார், 'சமாதான ஈவுத்தொகை முடிந்துவிட்டது, முதலீடுகள் தொடர்ந்து வளர வேண்டும் என்பதை சமிக்ஞை செய்ய வேண்டிய நேரம் இது.' கடந்த வாரம் ஜேர்மனியில் நடந்த G7 உச்சிமாநாட்டில், பிரதம மந்திரி போரிஸ் ஜோன்சன், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதத்தை பாதுகாப்புக்காக செலவழிக்க பிரிட்டனின் உறுதிப்பாடு, 'ஒரு தளம், உச்சவரம்பு அல்ல' என்று கூறினார்.

டோரிகள் பொதுவெளியில் சொல்லத் தயாராக இருப்பது இதுதான். ரஷ்யா மற்றும் சீனாவுடனான ஒரு இராணுவ மோதலுக்கு உண்மையிலேயே பரந்த அளவில் பாதுகாப்பு செலவு தேவைப்படும், சான்டர்ஸ் தெளிவுபடுத்தியபடி, சமூகத்தின் இராணுவமயமாக்கலுடன் இணைந்து, பிரிட்டிஷ் தொழிலாளர்களுக்கு எதிராக ஒரு வர்க்கப் போரை நடத்த வேண்டும் மற்றும் அடிப்படை ஜனநாயக உரிமைகளை அழிக்க வேண்டும். அதனால்தான் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள இரயில்வே தொழிலாளர்கள் 'புட்டினின் கைக்கூலிகள்' என கண்டனம் செய்யப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் தற்காலிக தொழிலாளர்களை கருங்காலிகளாக பயன்படுத்த அனுமதிக்கும் சட்டத்தையும் அரசாங்கம் தயாரித்து வருகிறது, மேலும் அத்தியாவசிய தொழில்கள் மற்றும் சேவைகளில் வேலைநிறுத்தங்களை தடைசெய்யும் செய்யும் 'குறைந்தபட்ச சேவை' விதிகளையும் தயாரிக்கிறது.

Loading