முன்னோக்கு

பைடெனின் "உள்ளூர் நேட்டோ": தொழிற்சங்க அதிகாரத்துவம் உலகப் போர் விரிவாக்கத்தை ஆதரிக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

ஜனாதிபதி ஜோ பைடென், ஜூலை 10, 2024 புதன்கிழமை வாஷிங்டனில் உள்ள AFL-CIO தலைமையகத்தில் உரையாற்றுகிறார், ​​AFL-CIO தலைவர் லிஸ் ஷுலர், வலது பக்கம் நிற்கிறார். [AP Photo/Evan Vucci]

புதன்கிழமை காலை ஜனாதிபதி பைடென், வாஷிங்டனில் நடந்த நேட்டோ உச்சிமாநாட்டில் பேச்சுவார்த்தைக்கு புறப்படுவதற்கு முன் AFL-CIO தலைமையகத்திற்கு சென்று, தொழிற்சங்க அதிகாரத்துவத்தை ஊக்குவிக்கும் ஒரு நிகழ்வில் கலந்துகொண்டார். 81 வயதான பைடென், அவரது போர்க் கொள்கைகளுக்காக, குறிப்பாக காஸாவில் இடம்பெற்றுவரும் இனப்படுகொலைக்காக தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களால் வெறுக்கப்படுகிறார். மேலும், அவரது மறுதேர்தல் பிரச்சாரம் வீழ்ச்சியில் உள்ளது. ஆனால், அவருடன் கூடியிருந்த தொழிற்சங்க நிர்வாகிகள் அவருக்கு வீர வரவேற்பு அளித்து, அவரை தலைவர் என்று பாராட்டினர்.

அமெரிக்கப் பொருளாதாரத்தின் வலிமை பற்றிய அபத்தமாக, தடுமாற்றத்துடன் வழங்கிய கருத்துக்களில், பைடென் தனது வர்க்கப் போர் அரசியலில் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் பங்கு பற்றி வழக்கத்திற்கு மாறாக, வெளிப்படையான மற்றும் தெளிவான அறிக்கையை வெளியிட்டார். அவர் பின்வருமாறு கூறினார்:

எங்களிடம் இரண்டு வலுவான, உறுதியான அமைப்புகள் உள்ளன. அவை எங்கள் பாதுகாப்பிற்காக இருக்கின்றன என்று நான் எதிர்பார்க்கிறேன். அவற்றில் ஒன்று நேட்டோ, இது நாம் அமைதியைப் பேணுவதை உறுதிப்படுத்த ஜனநாயக நாடுகளின் கூட்டுக் கூட்டமைப்பாகும். இதை யாரும் நம்மை கேலி செய்யப் போவதில்லை, இது முன்னெப்போதையும் விட வலிமையானது. நான் உங்களை எனது உள்ளூர் நேட்டோவாக கருதுகிறேன்.

உண்மையில், நேட்டோ என்பது சோவியத் யூனியனை எதிர்கொள்வதற்காக முதலில் உருவாக்கப்பட்ட ஒரு ஏகாதிபத்திய கூட்டணியாகும். 1990களின் பிற்பகுதியில் செர்பியா மீது குண்டுவீச்சு, 2000களின் முற்பகுதியில் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் மீதான படையெடுப்புகள் மற்றும் 2011ல் லிபியா துண்டாடப்பட்டது உட்பட பல தசாப்தகால ஆக்கிரமிப்புப் போர்களில் நேட்டோ உறுப்பு நாடுகள் ஈடுபட்டுள்ளன. இந்த வார உச்சிமாநாடு, நேட்டோ உக்ரேனில் ரஷ்யாவுடன் போரில் ஈடுபடவில்லை என்ற பாசாங்கு அனைத்தையும் கைவிட்டு, அணுஆயுத மோதலின் ஆபத்தை உயர்த்துகிறது.

தொழிற்சங்க அதிகாரத்துவத்தினரும் தொழிலாளர்களுக்கு குறைவான எதிரிகள் அல்ல. பல தசாப்தங்களாக தேசியவாதம் மற்றும் கம்யூனிச எதிர்ப்பு ஆகியவற்றில் மூழ்கியிருந்த அவர்கள், தொழிலாளர்கள் மீது தொடர்ச்சியான பாரிய பணிநீக்கங்கள், ஊதிய வெட்டுக்கள் மற்றும் பிற தாக்குதல்களை திணிப்பதற்கு உதவி வந்துள்ளனர். அவர்கள் முதலாளித்துவ அரசுடன் இடுப்பில் இணைந்துள்ளனர். AFL-CIO இன் ஒற்றுமை மையம் CIA யின் போர் முனைகளில் ஈடுபட்டதன் மூலம் அவர்கள் நீண்ட காலமாக அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் கருவிகளாகவும் செயல்பட்டு வருகின்றனர்.

பைடெனின் ஒப்பீடு, ஒரு தெளிவான கேள்வியை எழுப்புகிறது: இந்த “உள்ளூர் நேட்டோ” யாருடன் போரிடுகிறது? எல்லாவற்றிற்கும் மேலாக, அது வறுமை மற்றும் சமத்துவமின்மையால் சலித்துப்போய், முழு அரசியல் அமைப்பையும் வெறுக்கும் அமெரிக்க தொழிலாள வர்க்கம் ஆகும்.

அமெரிக்காவில் உள்ள “உள்ளூர் நேட்டோ” இதர நேட்டோ நாடுகளிலும் பிரதிபலிக்கிறது. பிரிட்டனில் புதிய தொழிற்கட்சி அரசாங்கம் மற்றும் ஜஸ்டின் ட்ரூடோவின் கனடிய லிபரல் அரசாங்கம் இரண்டும் தொழிற்சங்க எந்திரத்தின் ஆதரவை பெரிதும் நம்பியுள்ளன. ஜேர்மன் தொழிற்சங்கங்கள் அரசாங்கம் மற்றும் முதலாளிகளுடன் “ஒருங்கிணைந்த நடவடிக்கையில்” ஈடுபட்டுள்ளன. இது, பைடெனின் கொள்கைகள் தற்போதைய அமெரிக்க அதிகாரத்துவத்தின் அகநிலை குணங்களில் அல்ல, தொழிற்சங்க எந்திரத்தின் சமூக தன்மை மற்றும் செயல்பாட்டை அடிப்படையாகக் கொண்டது என்பதைக் காட்டுகிறது.

“அமெரிக்க வரலாற்றில் தொழிற்சங்க சார்பு ஜனாதிபதி” என்று தன்னைக் காட்டிக் கொள்ளும் பைடென், வேலைநிறுத்தங்களைத் தடுப்பதற்கும் பணிநீக்கங்களை திணிப்பதற்கும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் சேவைகளைப் பயன்படுத்துகிறார். கடந்த நான்கு ஆண்டுகளில் வெள்ளை மாளிகை ஒவ்வொரு பெரிய ஒப்பந்தத்திலும் ஈடுபட்டுள்ளது. 2022ல் சுத்திகரிப்பு தொழிலாளர்களின் ஒப்பந்தமும் இதில் அடங்கும். அதே ஆண்டு இரயில்வே தொழிலாளர்களின் ஒப்பந்தத்தின்படி, அவர் வேலைநிறுத்தத்தை தடை செய்ய தலையிட்டார். மேற்கு கடற்கரை கப்பல்துறை தொழிலாளர்கள் மற்றும் கடந்த ஆண்டு UPS இல், இது இப்போது ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை பணிநீக்கம் செய்துள்ளது.

பாரம்பரியமாக அமெரிக்காவில் இருக்கும் அரசியல் ரீதியாக மிக முக்கியமான தொழிற்சங்கமான ஐக்கிய வாகன தொழிலாளர் சங்கம் (UAW), வெள்ளை மாளிகையுடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டுள்ளது. கடந்த ஆண்டு பைடென் வெளிப்படையாக தொழிற்சங்கம் அதன் போலியான “திடீர் வேலைநிறுத்தத்தை” விற்றுத்தள்ளியதை ஆதரித்தார். இது, ஆயிரக்கணக்கான வேலை வெட்டுக்களுக்கு வழி வகுத்தது. UAW தலைவர் ஷான் ஃபெயின் பைடெனின் முக்கிய அரசியல் கூட்டாளி ஆவார்.

UAW தலைவர் ஷான் ஃபெயின், பைடெனின் மறுதேர்தல் பிரச்சாரத்திற்கான முதன்மைப் பினாமி மட்டுமல்ல, அவருடைய வெளியுறவுக் கொள்கையின் பினாமியாக இருக்கின்றார். ஃபெயின் வர்த்தகப் போர் ஏற்றுமதி கவுன்சிலுக்கு நியமிக்கப்பட்டதோடு, வெளிநாட்டு பிரமுகர்கள், பில்லியனர்கள் மற்றும் போர்வெறியர்களுடன் உச்சிமாநாட்டிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

பைடென் “உள்ளூர் நேட்டோ” என்ற சொற்றொடரைப் பயன்படுத்துவது, அரசியல் ஸ்தாபனம் தொழிலாள வர்க்கத்தின் மீதான போரை, மூன்றாம் உலகப் போரின் முக்கிய போர் முன்னரங்காகக் காண்கிறது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அவரது 2022 தேசிய பாதுகாப்பு மூலோபாயத்தில், பைடென் தனது நிர்வாகம் “உள்நாட்டு கொள்கைக்கும் வெளியுறவுக் கொள்கைக்கும் இடையிலான பிளவுக் கோட்டை உடைத்துவிட்டது” என்று பெருமையாகக் கூறினார். இதற்கு, முழு அமெரிக்க சமூகமும் போருக்கு அடிபணிய வேண்டும், இதற்கு தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை ஒடுக்க வேண்டும்.

கடந்த ஆண்டில், பைடென் “ஜனநாயகத்தின் ஆயுதக் களஞ்சியத்தை” (இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்க இராணுவ ஆயுத உற்பத்திக்கான பிரச்சாரப் பெயர்) இன்றைய முன் மாதிரியாகப் பலமுறை பயன்படுத்தியுள்ளார். ஆண்டின் தொடக்கத்தில் UAW இன் ஒப்புதலை ஏற்றுக்கொண்ட போது, தொழிற்சங்க ​​அதிகாரத்துவத்தினர் இனப்படுகொலைக்கு எதிரான போராட்டக்காரர்களை வெளியேற்றினர். ​​தொழிலாளர்கள் 1940 களில் செய்தது போல் “விமானம் தாங்கி கப்பல்கள் மற்றும் கவச வாகனங்களை” உருவாக்க வேண்டும் என்று பைடென் அறிவித்தார். பி-24 குண்டுவீச்சு விமானத்தின் சின்னத்தைக் கொண்ட வாசகத்துடன் கூடிய மேலங்கியை அணிந்து கொண்டு ஃபெயின் இந்த கருப்பொருளை எடுத்துக்கொண்டார்.

அமெரிக்க முதலாளித்துவம் இரண்டாம் உலகப் போரில் “ஜனநாயகத்திற்காகத்தான்” போராடியது என்ற கூற்று எப்போதும் தவறானது. உண்மையில், அப்போது அது உலக வல்லரசாக ஆவதற்குப் போராடிக் கொண்டிருந்தது, மேலும் இந்த இலக்கை அடைவதுக்கு ஜப்பானிய-அமெரிக்க குடிமக்களுக்குள் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தவும், மனிதகுலத்திற்கு எதிரான பிற குற்றங்களைச் செய்யவும் தயங்கவில்லை. “ஜனநாயகத்தின் ஆயுதக் களஞ்சியம்” என்று அழைக்கப்படுவது, தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் வேலைநிறுத்தம் இல்லாத உறுதிமொழி மற்றும் போர்-எதிர்ப்பு சோசலிஸ்டுகளை கைது செய்ததன் மூலம் தொழிலாளர்கள் மீது திணிக்கப்பட்டது.

ஆனால், இன்றும் மற்றும் அன்றைய காலத்துக்கும் இடையேயான முக்கிய வேறுபாடு என்னவென்றால், அமெரிக்க ஏகாதிபத்தியம் இன்று ஒரு எழுச்சி பெறும் சக்தி அல்ல, மாறாக அது இறுதி வீழ்ச்சியில் உள்ளது. இது உக்ரேனில் உள்ள நவ-நாசிக்களுடன் வெளிப்படையாக இணைந்துள்ளதுடன் காஸாவில் உள்ள பாலஸ்தீனிய மக்களுக்கு எதிரான இனப்படுகொலையின் இரண்டாவது பதிப்பில் ஆழமாக ஈடுபட்டுள்ளது.

புதிய ஒப்பந்த வேலைகளுக்கான திட்டங்களுக்கு (New Deal jobs programs) பதிலாக, அமெரிக்க அரசாங்கம் பாரிய வேலையின்மைக்கு தலைமை தாங்குகிறது. சகிக்க முடியாத அளவிலான சமூக சமத்துவமின்மையின் எடையின் கீழ், அமெரிக்க ஜனநாயகம் பாசிசம் மற்றும் சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கிறது. இதற்கிடையில், 1940 களின் சந்தர்ப்பவாத தொழிற்சங்க அதிகாரத்துவத்தினர் பெரும் மந்தநிலையின் போது, வேலைநிறுத்தங்களுடனான அவர்களது தொடர்பு காரணமாக சில நம்பகத்தன்மையை தக்க வைத்துக் கொண்டனர். ஆனால், இன்றைய தொழிற்சங்க அதிகாரத்துவம் தொழிலாளர்களால் வெறுக்கப்படுகிறது மற்றும் முற்றிலும் அரசு மற்றும் பெருவணிக நிர்வாகத்தின் ஆதரவை அது நம்பியுள்ளது.

அரசாங்கத்திற்கும் தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கும் இடையிலான பைடெனின் பெருநிறுவனக் கூட்டணியின் இரண்டு தூண்களின் கால்களும் நாற்றம்கண்டு அழுகிக் கொண்டிருக்கின்றன. இந்த வருட இலையுதிர் காலத்தில் அவர் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக இருந்தாலும் அல்லது இல்லாவிட்டாலும், பைடெனின் முதுமையும், அதே போல் அவரது வயதான எதிரியான பாசிச டிரம்ப் என்பதும் அமெரிக்க அரசியல் நிறுவனங்களின் ஆழமான சீரழிவை வெளிப்படுத்திக் காட்டுகிறது.

இந்த நெருக்கடியில் தொழிற்சங்க அதிகாரத்துவம் முழுமையாக மூழ்கியுள்ளது. பைடெனின் வேட்புமனு பற்றி ஆளும் வட்டாரங்களில் கேள்விகள் எழுந்துள்ள நிலையில், UAW இன் ஃபெயின் நிர்வாகம் முற்றிலும் சட்டவிரோதமானது என்பதை அதன் வெளிப்பாடுகள் உறுதிப்படுத்துகின்றன. நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட கண்காணிப்பாளர், ஃபெயின் மற்றும் UAW இன் உயர்மட்டத் தலைமைக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரித்து வருகிறார். இதற்கிடையில், ஒரு கூட்டாட்சி நீதிபதி சமீபத்தில் சோசலிச வாகனத் தொழிலாளியான வில் லெஹ்மனுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தார். அவரது இந்த வழக்கு, தொழிலாளர் துறை மற்றும் கண்காணிப்பாளரின் ஆதரவுடன், போலி வாக்கெடுப்பில், ஃபெயினை அதிகாரத்திற்குக் கொண்டு வருவதுக்கு, வாக்காளர் மீதான அடக்குமுறையை பாவித்ததுக்கு எதிரானதாகும்.

இதற்கு விடையிறுக்கும் வகையில், UAW வில் புதிய தேர்தல்களுக்கு வாகனத் தொழிலாளர்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருகிறது, இந்த முறை இது, சாமானிய தொழிலாளர்களால் கட்டுப்படுத்தப்படுமே ஒழிய, அதிகாரத்துவவாதிகளாலோ அல்லது அவர்களது அரசாங்க கூட்டாளிகளாலோ அல்ல.

ஆளும் வர்க்கத்தின் கொடுமையை தொழிலாளர்கள் குறைத்து மதிப்பிடக் கூடாது. ஆனால், இந்த நெருக்கடி அவர்கள் எல்லோரும் சக்தி வாய்ந்தவர்கள் அல்ல என்பதைக் காட்டுகிறது. ஒரு சுயாதீன அமைப்பு மற்றும் மூலோபாயத்தின் அடிப்படையில் தொழிலாளர்கள் தலையிட முடியும் மற்றும் தலையிட வேண்டும்.

தொழிற்சங்க எந்திரத்தை தூக்கி வீசி, தொழிலாளர்களுக்கு அதிகாரத்தை மாற்றுவதை இலக்காகக் கொண்ட ஒரு கிளர்ச்சியைத் தயாரிப்பதற்கான சாமானிய நடவடிக்கை குழுக்களை உருவாக்குவதே இதன் பொருளாகும். சர்வதேச தொழிலாளர் குழுக்களின் சாமானிய தொழிலாளர் கூட்டணியின் (IWA-RFC) வளர்ந்து வரும் உலகளாவிய வலையமைப்பு, அத்தகைய முன்னோக்கிற்கான பரந்த ஆதரவிற்கு சாட்சியமளிக்கிறது.

ஆனால், எல்லாவற்றிற்கும் மேலாக, தொழிலாளர்கள் அரசியல் போராட்டத்தை எதிர்கொள்கின்றனர். தொழிற்சங்க அதிகாரத்துவம் என்பது ஆளும் வர்க்கத்தின் ஒரு கருவியாகும். அதன் சமூக நலன்கள் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் எந்தவொரு சமூகப் பிரச்சனைக்கும் தீர்வு காணப் போவதில்லை. தொழிலாள வர்க்கம் அதன் மகத்தான சமூக சக்தியை, முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராக, போர் மற்றும் சர்வாதிகாரத்தின் மூலாதாரத்திற்கு எதிராக அணிதிரட்டி, அதற்கு பதிலீடாக ஒரு தொழிலாளர் அரசாங்கத்தை கொண்டு வர வேண்டும்.

காஸாவில் இடம்பெற்றுவரும் இனப்படுகொலையை எதிர்த்து உலக சோசலிச வலைத் தளம் மற்றும் சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுத்துள்ள ஜூலை 24 பேரணிக்கு IWA-RFC இணை அனுசரணை வழங்குகிறது. இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்க காங்கிரஸில் ஆற்றப்போகின்ற உரையைக் கண்டித்து இந்தப் போராட்டம் நடைபெறும். இனப்படுகொலை மற்றும் ஏகாதிபத்திய போருக்கு முற்றுப்புள்ளி வைக்க தொழிலாள வர்க்கத்திற்கான சோசலிச மூலோபாயத்தை விரிவுபடுத்துவதே இந்தப் பேரணியின் இலக்காகும்.

பைடெனின் “உள்ளூர் நேட்டோவிற்கு” எதிரான ஒரு சாமானிய தொழிலாளர்களின் கிளர்ச்சியின் வளர்ச்சி, இந்தப் போராட்டத்தின் அவசியமான ஒரு அங்கமாகும். அனைத்து தொழிலாளர்களும் இப்பேரணியில் கலந்துகொள்வதற்கு பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Loading