மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் ஏற்கனவே உயரும் விலைகளினால் அதிகுறைந்த வாழ்க்கை தரத்தின் விளிம்பில் இருக்கையில், ஒரு முன்னணி உலகளாவிய நிதி நிறுவனம், வேலையின்மையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்புடன் விலைகள் மேலும் உயரும் என்று எச்சரித்துள்ளது.
செவ்வாய்கிழமை வெளியிடப்பட்ட அதன் சமீபத்திய உலகப் பொருளாதார முன்னோக்குகள் என்ற அறிக்கையில், உலகப் பொருளாதாரம் குறைந்த வளர்ச்சி மற்றும் வெளிப்படையான சுருக்கத்துடன் ஒரு நீண்டகால தேக்கவீக்கநிலைக்குள் (stagflation) எதிர்காலத்தில் முன்கூட்டியே காணக்கூடிய நிலையில் நீடித்திருக்கும் என்று உலக வங்கி எச்சரித்துள்ளது.
அறிக்கையின் முன்னுரையில், உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ் பின்வருமாறு கூறினார்: “உலகப் பொருளாதாரம் மீண்டும் ஆபத்தில் உள்ளது. அதே நேரத்தில் அதிக பணவீக்கம் மற்றும் மெதுவான வளர்ச்சியை எதிர்கொள்கிறது. உலகளாவிய மந்தநிலை தவிர்க்கப்பட்டாலும், தேக்கவீக்கநிலையின் தாக்கம் பல ஆண்டுகளுக்கு நீடிக்கலாம்”.
அறிக்கை முழுவதும், உலக வங்கி இந்த நிலைமைகளை உருவாக்குவதில் உக்ரேனில் போரின் தாக்கங்களை வலியுறுத்துகிறது. ஆனால், பெப்ரவரியில் போர் வெடிப்பதற்கு முன்னரே தேக்கமந்தநிலை போக்குகள் இயங்கிக்கொண்டிருந்தன என்பது அறிக்கையிலிருந்தே தெளிவாகிறது.
2021ல் 5.7 சதவீதமாக இருந்த உலக வளர்ச்சிக்கான அதன் முன்னறிவிப்பை இந்த ஆண்டு வெறும் 2.9 சதவீதமாகக் குறைத்துள்ளது. இது ஜனவரியில் வெளியிடப்பட்ட 4.1 சதவீத முன்னறிவிப்பில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு குறைவாகும்.
நேற்று வெளியிடப்பட்ட முக்கிய நாடுகளை உள்ளடக்கிய பொருளாதார ஒத்துழைப்புக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் (OECD) அறிக்கையில் குறைந்த வளர்ச்சி மற்றும் அதிக பணவீக்கம் போன்ற முன்னறிவிப்புகள் கூறப்பட்டுள்ளன.
உலக வங்கி அறிக்கை 2022இல் உலகப் பொருளாதாரத்திற்கு 'எதிர்மறையான அதிர்ச்சி' இருந்தபோதிலும், அடுத்த ஆண்டு 'அடிப்படையில் மீள்எழுச்சி' எதிர்பார்ப்பதற்கு இல்லை எனக்குறிப்பிட்டுள்ளது. பல தடைகளுடன், குறிப்பாக பாவனைப்பொருட்களின் கூடிய விலைகள் மற்றும் மத்திய வங்கிகளால் வட்டி விகிதங்களை உயர்த்துவதால் தொடர்ச்சியான பண இறுக்கம் போன்றவற்றால் வளர்ச்சி 3 சதவிகிதம் வரையிலேயே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்த இருண்ட கண்ணோட்டம் கூட பல்வேறு 'கீழ்நோக்கி செல்வதற்கான அபாயங்களுக்கு' உட்பட்டது. இதில் 'உக்கிரமடையும் புவிசார் அரசியல் பதட்டங்கள், வளர்ந்து வரும் தொடர் தேக்கமந்தநிலைகள், அதிகரித்து வரும் நிதிய உறுதியற்ற தன்மை, தொடரும் விநியோக இறுக்கங்கள் மற்றும் மோசமடைந்து வரும் உணவுப் பாதுகாப்பு போன்றவை உள்ளடங்கியிருக்கும்'.
ஒரு நீண்ட காலத்தில், வளர்ச்சியானது 2010 களில் எட்டப்பட்ட நிலைகளை விட இந்த தசாப்தத்தின் எஞ்சிய காலத்திற்கு குறைவானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
1970களில் ஏற்பட்ட தேக்கமந்தநிலையின் கடைசி காலகட்டத்திலிருந்து பொருளாதார மீட்சிக்கு, 'பணவீக்கத்தைத் தணிக்க, பெரிய முன்னேறிய நாடுகளின் மத்திய வங்கிகளின் வட்டி விகிதங்களில் செங்குத்தான அதிகரிப்பு தேவைப்பட்டது. இது உலகளாவிய மந்தநிலை மற்றும் எழுச்சியுறும் சந்தைகள் மற்றும் வளரும் பொருளாதாரங்களில் [EMDE] நிதி நெருக்கடிகளைத் தூண்டியது'.
உலகப் பொருளாதாரம் தொற்றுநோயின் இரண்டு வருட விளைவுகளால் பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், உலகெங்கிலும் உள்ள முதலாளித்துவ அரசாங்கங்கள் பங்குச் சந்தைகளில் பாதிப்பு ஏற்பட்டுவிடும் என்ற காரணத்தினால் நோயை அகற்ற விஞ்ஞான அடிப்படையிலான பொது சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள மறுத்ததும் மற்றும் உக்ரேனில் போர் குறிப்பிடத்தக்க 'அதன்மேலான' தாக்கங்களைக் கொண்டுள்ளது.
ஆனால் அறிக்கை ஒப்புக்கொள்வது போல, இந்த விளைவுகள் 'உலகளாவிய விநியோகச் சங்கிலிகளில் உள்ள இடையூறுகள் மற்றும் பல பொருட்களின் விலையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு போன்ற தொற்றுநோயிற்கு முன்பே இருந்த நெருக்கடிகளை பெரிதாக்குகின்றன.'
தொற்றுநோய்காலத்தில் எடுக்கப்பட்ட நிதி நடவடிக்கைகள் கடனை அதிகரித்துள்ளதால், போரின் விளைவுகளை சமாளிப்பதற்கான 'கொள்கை நடவடிக்கைகளில்' குறிப்பிடத்தக்க குறைப்பு ஏற்பட்டுள்ளதுடன், 'வளர்ச்சிக்கு ஆதரவழிப்பதற்கும் விலை அழுத்தங்களைக் கட்டுப்படுத்துவதற்கும் இடையே கொள்கை வகுப்பாளர்கள் எதிர்கொள்ளும் மிகவும் கடினமான சமநிலைப்படுத்துவதற்கான முயற்சிகளை இன்னும் தீவிரப்படுத்தியுள்ளது'.
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், கடந்த காலங்களில், குறைந்த வட்டி விகித நிலைமைகளின் கீழ், கூடிய கடன்களை எடுப்பதனால் செலவினங்களை உயர்த்துவதன் மூலம் அரசாங்கங்கள் பொருளாதாரத்திற்கு ஒரு ஊக்கத்தை வழங்க முடிந்தது. பணவீக்கத்திற்கு பதிலளிக்க மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களை உயர்த்துவதால் இனி அவ்வாறு செய்ய முடியாது.
'போருக்கு முன்னர் பல எழுச்சியுறும் சந்தைகள் மற்றும் வளரும் பொருளாதாரங்களுக்கு கடன் ஏற்கனவே ஒரு தவிர்க்க முடியாத பாதையாக இருந்தது. மேலும் பலவீனமான வளர்ச்சி வாய்ப்புகள் மற்றும் அதிக கடன் வாங்கும் செலவுகள் ஆகியவற்றால் நிதி நிலைத்தன்மை மேலும் சிதைக்கப்பட வாய்ப்புள்ளது' என்று அறிக்கை குறிப்பிடுகிறது.
எவ்வாறாயினும், உலக வங்கி அறிக்கையானது, வட்டி விகிதங்களின் அதிகரிப்பு விலைகளை குறைக்க எதுவும் செய்யாது என்ற முக்கிய குறிப்பைக் குறிப்பிடவில்லை. மாறாக, நான்கு தசாப்தங்களில் மிக உயர்ந்த பணவீக்கத்தை எதிர்கொண்டுள்ள தொழிலாளர்களின் ஊதியக் அதிகரிப்புக் கோரிக்கைகளைக் கட்டுப்படுத்த மந்தநிலை நிலைமைகளைத் தூண்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, இது அவர்களின் வாழ்க்கைத் தரத்தை நாளாந்தம் குறைக்கிறது.
எழுச்சியுறும் சந்தைகள் என்று அழைக்கப்படுபவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. எழுச்சியுறும் சந்தைகள் மற்றும் வளரும் பொருளாதாரங்களின் வளர்ச்சி 2022 இல் பாதியாகக் குறையும், 2021 இல் 6.6 சதவீதத்துடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு 3.4 சதவீதமாகக் குறையும் மற்றும் 2011-2019 காலகட்டத்தின் வருடாந்த சராசரியான 4.8 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
உலகளாவிய பணவீக்கம் உலகம் முழுவதும் உயர்ந்து மற்றும் இப்போது மத்திய வங்கிகளின் இலக்குகளை விட அதிகமாக உள்ளது. 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் விலை உயர்வின் தொடக்கத்தில், மத்திய வங்கித் தலைவர்களால் முன்வைக்கப்பட்ட 'வழக்கமான அறிவுரை' பணவீக்கம் 'தற்காலிகமானது' என்பதாக இருந்தது.
'பணவீக்கம் நீண்ட காலத்திற்கு உயர்வாகவும், முன்பு கருதப்பட்டதை விட அதிக அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது' என்று உலக வங்கி அறிக்கையுடன், இந்த மகிழ்ச்சியான சூழ்நிலை இறுதியில் உண்மையாகவே குப்பையில் போடப்பட்டுள்ளது.
நிதி அதிகாரிகளின் பெரும் அச்சம் என்னவென்றால், நீடித்திருக்கும் பணவீக்கம் அதிக ஊதியத்திற்கான உந்துதலுக்கு வழிவகுக்கும். எனவே அறிக்கை பின்வருமாறு எச்சரிக்கிறது, 'விலைவாசி உயர்வைக் கட்டுக்குள் கொண்டு வர தற்போது எதிர்பார்த்ததை விட வேகமாக நிதிய கொள்கையை கடுமையாக்க வேண்டிய கட்டாயம் மத்திய வங்கிகளுக்கு ஏற்படலாம்.'
உலக வங்கி அறிக்கை பொதுவாக கிடைக்கக்கூடிய அனைத்து ஆதாரங்களுக்கும் மாறாக தொற்றுநோய் முடிந்துவிட்டது என்ற உத்தியோகபூர்வ அறிவிப்புகளுக்கு பின்னால் வருகிறது. ஆனால் அது 'புதிய, அதிக வீரியம்மிக்க மாறுபாடுகளின் தோற்றத்தால் மோசமடையக்கூடும்' என்பதை ஒப்புக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
குறிப்பாக அடிப்படைப் பாவனைப்பொருட்களில் பணவீக்கத்தின் அளவானது, அறிக்கையில் உள்ளடங்கியிருக்கும் சில மதிப்பீடுகளால் எடுத்துக்காட்டப்படுகிறது.
2022ல் எரிசக்தி விலைகள் 52 சதவீதம் உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது முன்பு கணித்ததை விட 47 சதவீதம் அதிகமாகும். முந்தைய கணிப்புகளை விட இந்த ஆண்டு விவசாய விலைகள் 18 சதவீதம் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய ஏற்றுமதியாளராக ரஷ்யா இருப்பதால், உரங்களின் விலை 70 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலோக விலைகள் 12 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அலுமினியம் மற்றும் நிக்கல் விலை ஏற்கனவே 30 சதவீதம் உயர்ந்துள்ளது.
பெட்ரோல், எரிசக்தி மற்றும் உணவுப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், விலைவாசி உயர்வு உலகம் முழுவதும் ஏற்கனவே உணரப்பட்டு வருகிறது.
அமெரிக்காவில், பெட்ரோல் விலை ஒரு கலனுக்கு 5 டாலரினை எட்டவுள்ளது. உலகம் முழுவதும் இதேபோன்ற உயர்வுகள் இடம்பெறுகின்றன. குடும்பங்கள் தங்கள் வாகனங்களை இயக்குவதற்கு எப்போதும் அதிகரித்து வரும் செலவுகளை எதிர்கொள்கின்றனர். அதே சமயம் உயரும் போக்குவரத்துச் செலவுகள் உணவு மற்றும் பிற தேவையான பொருட்களின் விலை அதிகரிப்பு வடிவத்தில் நுகர்வோர் மீது சுமத்தப்படுகின்றன.
உலகளாவிய உணவு நெருக்கடி பற்றி, பொருளாதார ஒத்துழைப்புக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் சமீபத்திய அறிக்கையின் முன்னுரையில் அதன் தலைமை பொருளாதார நிபுணர் லோரன்ஸ் பூனின் ஒரு கருத்து இருந்தது. உலகம் அனைவருக்கும் உணவளிக்க போதுமான தானியங்களை உற்பத்தி செய்கிறது, 'ஆனால் விலைகள் மிக அதிகம் 'என்று அவர் எழுதினார்.
முக்கிய நாடுகளின் வளர்ச்சி பற்றிய அதன் ஆய்வில், உலக வங்கி அறிக்கை 2022 இல் 'குறிப்பிடத்தக்க வகையில் மெதுவாக' 2.6 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில், ஆண்டின் முதல் பாதியில் 'செயல்பாடு வேகத்தை இழந்தது' என்று கூறுகிறது. அமெரிக்கப் பொருளாதாரம் முதல் காலாண்டில் 1.4 சதவிகிதம் என்ற வருடாந்த விகிதத்தில் சுருங்கியது. இந்த குறைந்த வளர்ச்சி தொடரும்.
2022 ஆம் ஆண்டிற்கான வளர்ச்சி விகிதம் 2022 இல் 2.5 சதவிகிதமாக இருக்கும், முந்தைய முன்னறிவிப்பை விட 1.2 சதவிகிதம் குறைவாக இருக்கும் என முன்னறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2023-2024 இல் 2.2 சதவிகிதமாக குறையும் அதிக எரிபொருள் விலைகள், இறுக்கமான பண நிலைமைகள் மற்றும் உக்ரைன் போரினால் கூடுதல் விநியோக பிரச்சனைகள் ஏற்பட்டது.
போரினால் கூடுதலான விநியோக அதிர்ச்சிகள் பாயும் என்பதால் யூரோ நாணய பகுதியின் வளர்ச்சி இந்த ஆண்டு 2.5 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது முந்தைய கணிப்புகளிலிருந்து 1.7 சதவீத புள்ளிகள் கீழ்நோக்கிய திருத்தமாகும்.
ஜப்பானில் பொருளாதார செயல்பாடுகள் கணிசமாகக் குறைந்துள்ளன. இந்த ஆண்டு வளர்ச்சி 1.7 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது முந்தைய கணிப்புகளை விட 1.2 சதவீத புள்ளிகள் குறைந்துள்ளது.
சீனா 0.8 சதவிகிதப் புள்ளிகள் குறைந்து இந்த ஆண்டு 4.3 சதவிகிதம் வளர்ச்சியடையும். பின்னர் 2023 இல் 5.2 சதவிகிதம் விரிவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சீனாவின் பூஜ்ஜிய-கோவிட் நடவடிக்கைகள் பெரும் பொருளாதார சேதத்தை ஏற்படுத்துகின்றன என்ற கூக்குரல் மற்றும் கத்துதல்கள் மற்றும் நோய்த்தொற்றுகள் மற்றும் வெகுஜன இறப்புகளின் விலை என்னவாக இருந்தாலும் அதை மாற்றியமைக்க வேண்டும் எனக்கோரப்பட்ட போதிலும் இந்த விகிதங்கள் அனைத்து முன்னேறிய நாடுகளைக் காட்டிலும் கணிசமாக அதிகமாகும். ஆனால், பாரிய மரணங்களில் முடிவடைந்த “சமூக நோய் எதிர்ப்பு சக்தி” கொள்கைகளை நடைமுறைப்படுத்திய மேற்கத்திய பொருளாதாரங்களை விட, சீனாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சியடைவதை பூஜ்ஜிய-கோவிட் கொள்கைகள் தடுக்கவில்லை என்ற சங்கடமான உண்மை குறித்து அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.
கடந்த ஒன்றரை தசாப்தங்களின் பொருளாதார மற்றும் நிதி வளர்ச்சிகளின் பின்னணியில் பார்க்கும்போது, உலக வங்கி அறிக்கையானது உலக முதலாளித்துவ அமைப்பின் இயங்குமுறை மீதான ஒரு முக்கிய குற்றச்சாட்டாகும். இருப்பினும் நிச்சயமாக இது அதன் நோக்கம் அல்ல.
2008 நெருக்கடியைத் தொடர்ந்து மத்திய வங்கிகள் டிரில்லியன் கணக்கான டாலர்களை இறைத்தன. 2020 இல் தொற்றுநோய் வந்தபோது, முதலாளித்துவ அரசாங்கங்கள் வட்டிகுறைந்த பணத்தால் வீங்கிய ஒட்டுண்ணி பங்குச் சந்தைகளின் சரிவை உருவாக்கும் என்ற பயத்தில் நோய் ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மறுத்தன.
அதற்கு பதிலாக, இப்போது முற்றிலும் அகற்றப்பட்ட சில வரையறுக்கப்பட்ட தணிக்கும் நடவடிக்கைகள் இருந்தபோதிலும், அவை அடிப்படையில் தொற்றுநோயை பரவ அனுமதித்த அதே நேரத்தில் மத்திய வங்கிகள் நிதி அமைப்பினுள் இன்னும் அதிக டிரில்லியன்களை செலுத்தின.
ஆனால், கோவிட்-19ஐ சமாளிக்க மறுத்தது, விநியோகச் சங்கிலி நெருக்கடியை உருவாக்கி, பணவீக்கச் சுழலை ஏற்படுத்தியது. உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்கா தலைமையிலான நேட்டோ போரினால் இது தீவிரமடைந்துள்ளது. இது ஒரு தீர்க்கமான தோல்வியை ஏற்படுத்தவும், ஏகாதிபத்திய கொள்ளைக்காக அந்நாட்டை தமக்கு வசதியான சிறுதுண்டுகளாக்கவும் நடத்தப்பட்டது.
இப்போது, இந்தக் கொள்கைகளின் விளைவுகள், விரைவான பணவீக்கம், அதிகரித்துவரும் நிதிய உறுதியற்ற தன்மை மற்றும் மந்தநிலை அச்சுறுத்தல் போன்ற வடிவங்களில் ஒரே மாதிரியாக அனைத்து நாடுகளிலும் வெளிவருகையில், முதலாளித்துவ அரசாங்கங்களும் அவற்றின் மத்திய வங்கிகளும் குறைந்த வளர்ச்சியடைந்த மற்றும் முன்னேறிய நாடுகளிலும் உள்ள தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக ஒரு போரைத் தொடங்கியுள்ளன.