மே தினம் 2022: நிதி மூலதனம் மற்றும் உலகளாவிய முதலாளித்துவத்தின் ஆழமான நெருக்கடி

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

மே 1 அன்று நடைபெற்ற 2022 சர்வதேச மே தின இணையவழி பேரணியில் நிக் பீம்ஸ் வழங்கிய அறிக்கை இதுவாகும். பீம்ஸ் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் நீண்டகாலத் தலைவர் மற்றும் மார்க்சிச பொருளாதாரத்தில் நிபுணராவார். அனைத்து உரைகளையும் பார்க்க, wsws.org/mayday ஐ பார்வையிடவும்

Nick Beams, Leading member of the Socialist Equality Party (Australia)

தோழர்களே நண்பர்களே,

இந்த மேதினக் கூட்டம், உலக முதலாளித்துவ அமைப்புமுறையின் வரலாற்று முறிவின் மத்தியில் நடத்தப்படுகிறது, மனிதகுலம் ஒரு பேரழிவுக்குள் தள்ளப்படுவதைத் தவிர்க்க வேண்டுமானால், ஒரு சோசலிச வேலைத்திட்டத்தைச் செயல்படுத்த சர்வதேச தொழிலாள வர்க்கம் அதன் சொந்தக் கரங்களில் அதிகாரத்தை எடுக்க வேண்டிய அவசியத்தை இது முன்வைக்கிறது.

ஆழமடைந்து வரும் இந்த நெருக்கடி, ஏதோ தத்துவார்த்த முன்அனுமானம் அல்ல. உலகெங்கிலும் தொழிலாளர்களின் அன்றாட வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் இது ஆதிக்கம் செலுத்துகிறது மற்றும் ஒவ்வொரு அம்சத்தையும் தீர்மானிக்கிறது.

கோவிட்-19 ஐ அகற்றுவதற்கு அவசியமான நடவடிக்கைகளை முதலாளித்துவ அரசாங்கம் எடுக்க மறுத்ததன் விளைவாக ஏற்பட்ட தேவையில்லாத பாரிய மரணங்களாலும், மற்றும் உலகை மறுபங்கீடு செய்வதற்காக உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் நேட்டோ தொடங்கிய ஒரு புதிய உலகப் போர் முனைவாலும் இது வேகப்படுத்தப்பட்டு தீவிரமடைந்துள்ளது.

இந்த பேரழிவுகரமான சம்பவங்கள், பல தசாப்தங்களாக முதிர்ச்சியடைந்து வந்துள்ள இந்த உலகளாவிய முதலாளித்துவ இலாப நோக்கு அமைப்பு முறையின் அடிப்படை முரண்பாடுகள் மேற்பரப்பில் வெடிப்பதற்கு வினையூக்கிகளாக செயல்பட்டுள்ளன.

கடந்த 50 ஆண்டுகளாக, இத்தகைய முரண்பாடுகளுக்கு விடையிறுப்பாக ஆளும் வர்க்கங்கள் மேற்கொண்ட எல்லா நடவடிக்கைகளும் தவிர்க்கமுடியாமல் அவை மேலும் தீவிரமடைவதற்கே வழிவகுத்துள்ளன.

20 ஆம் நூற்றாண்டின் இரத்தக்களரி முதல் பாதிக்குப் பின்னர், உலக முதலாளித்துவ அமைப்புமுறை இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் மீண்டும் ஸ்திரப்படுத்தப்பட்டது. இதற்கு அடிப்படையானது அமெரிக்க முதலாளித்துவத்தின் பொருளாதாரப் பலமாகும்.

ஆனால் அந்த பொருளாதார மேலாதிக்கம் 1950 கள் மற்றும் 1960 களிலும், மற்றும் ஆகஸ்ட் 1971 இல் அமெரிக்கா ஒருதலைப்பட்சமாக அமெரிக்க டாலரில் இருந்து தங்கத்தின் தொடர்பை நீக்கிய போதும் படிப்படியாக சிதைந்தது. அது 1944 பிரெட்டென் வூட்ஸ் கூட்டத்தில் ஸ்தாபிக்கப்பட்டு, போருக்குப் பிந்தைய முதலாளித்துவ சமநிலைக்கு அடித்தளம் அமைத்திருந்த இந்த உலகளாவிய நிதிய முறையை முடிவுக்குக் கொண்டு வந்தது.

டாலரைத் தங்கமாக மாற்றும் இந்த முறையை அகற்றியமை, அதன் சரிவை தடுக்க அமெரிக்கா மேற்கொண்ட முயற்சியாக இருந்தது, இது அதன் அதிகரித்த வர்த்தக சமநிலை (balance of trade) மற்றும் நடப்புக் கணக்கு பற்றாக்குறையில் (current account deficits) பிரதிபலித்தது.

முழுமையாக அரசு-நிர்ணய செலாவணி (fiat currency) அடிப்படையிலான புதிய நிதிய முறை, தங்கத்தின் வடிவில் நிஜமான மதிப்பைக் கொண்டிருக்காத இது, புதிய முரண்பாடுகளுக்கு வழிவகுத்தது, அவை பணவீக்க உயர்வில் தம்மை வெளிப்படுத்தின.

1970 களின் இறுதியில் இலாப விகித போக்கின் வீழ்ச்சி —அதாவது, முதலாளித்துவப் பொருளாதாரத்தின் ஓர் அடிப்படை விதியான இது— தன்னைப் பலப்படுத்த தொடங்கி, வேகமான விலையுயர்வுகளுடன் சேர்ந்து மந்தநிலை (recession) அபிவிருத்தி அடைந்ததில், அதாவது தேக்கநிலை (stagflation) என்றழைக்கப்பட்டதில் அதன் வெளிப்பாட்டைக் காணத் தொடங்கியது.

இதுதான், 1980 களில் ரீகன் மற்றும் தாட்சர் அரசாங்கங்களின் கீழ் தொடங்கப்பட்ட உலகப் பொருளாதார மறுகட்டமைப்பிற்கான உந்து சக்தியாக இருந்தது, இது ஒட்டுமொத்த தொழில்துறை பகுதிகளை அழிப்பதிலும் மற்றும் மலிவுழைப்பு ஆதாரங்களை ஆதாயமாக்க பூகோளமயப்பட்ட உற்பத்தியைத் தொடங்கியதில் போய் முடிந்தது.

நிதியமயமாக்கலின் அதிகரிப்புக்கு மேல் அதிகரிப்பு —அதாவது, போருக்குப் பிந்தைய வளர்ச்சியின் போது நடந்ததைப் போல தொழில்துறை வளர்ச்சி மற்றும் விரிவாக்கம் மூலமாக அல்லாமல், மாறாக பங்குச் சந்தை மற்றும் நிதி அமைப்புமுறையின் ஏனைய பாகங்களின் மூலமாக மேற்கொள்ளப்பட்ட இலாபத் திரட்சியானது— இந்த நிகழ்ச்சிப்போக்கின் முக்கிய அம்சமாக இருந்தது.

1980 களில் நிதிய ஒட்டுண்ணித்தனத்தின் வளர்ச்சியானது இந்த இலாப அமைப்புமுறையில் வளர்ந்து கொண்டிருந்த நெருக்கடியை தீர்க்கவில்லை, மாறாக அக்டோபர் 1987 வோல் ஸ்ட்ரீட் பொறிவுக்கு இட்டுச் சென்றது, இப்போது வரையில் வரலாற்றில் இது தான் மிகப்பெரிய ஒருநாள் வீழ்ச்சியாகும்.

ஒரு புதிய கொள்கை தொடங்கப்பட்டது. அந்த பொறிவுக்கு விடையிறுத்து, ஆலன் கிரீன்ஸ்பான் தலைமையில் இருந்த அமெரிக்க பெடரல் ரிசர்வ், நிதியுதவி வழங்கியதன் மூலம் சந்தையை ஸ்திரப்படுத்த தலையிட்டது.

இது ஒரேயொரு நடவடிக்கை மட்டுமல்ல. அது ஒரு புதிய நிதிய ஆட்சிமுறையின் தொடக்கமாக இருந்தது, அதில் பெடரல் அடுத்தடுத்த ஒரு ஊகவணிக குமிழியின் பொறிவுக்கு நிதி வழங்கியதன் மூலம் விடையிறுத்து அடுத்தடுத்து நிதி வழங்க தலையிட்டது.

1990 கள் மற்றும் 2000 களின் முற்பகுதியில் அதிகரித்து வந்த நிதியப் புயல்களுக்கு மத்தியிலும் இந்த தலையீடுகள் தொடர்ந்தன —அவை ஒவ்வொன்றும் ஒன்றை விட ஒன்று அதிக கடுமையாக இருந்தன— அதேவேளையில் ஊகவணிகங்களைத் தடுக்கும் முயற்சியில் 1930 களில் கொண்டு வரப்பட்ட எல்லா நெறிமுறைகளும் அகற்றப்பட்டன.

சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதை அடுத்து, உலகெங்கிலும் ஆளும் வர்க்கங்கள் சுதந்திர சந்தையின் வெற்றியைக் கொண்டாடின.

'மாபெரும் மிதவாதம்' (great moderation) என்று குறிப்பிடப்பட்ட ஒரு புதிய காலகட்டம் தொடங்கி இருந்ததாகவும், முதலாளித்துவ அமைப்புமுறையின் முரண்பாடுகள் கடந்து போய்விட்டதாகவும் அவர்கள் வாதிட்டார்கள்.

ஒட்டுண்ணித்தனமான இலாபத் திரட்சியின் சக்கரங்களை நிதியியல் பிரச்சினைகள் எழாமல் திருப்புவதற்காக, குறைந்த வட்டி விகிதங்களில் பணத்தை வழங்குவதன் மூலம் மத்திய வங்கிகள் நிதியச் சந்தைகளில் தலையிடலாம் என்பது பணவீக்கத்தைக் குறைப்பதை அர்த்தப்படுத்தியது.

மேலும் தொழிலாள வர்க்கத்தின் கூலிகள் தொழிற்சங்க எந்திரங்களால் ஒடுக்கப்பட்டன. எல்லாமே நன்மைக்காக, சாத்தியமான எல்லா உலகங்களின் நன்மைக்காக செய்யப்பட்டன.

ஆனால் புதிய முரண்பாடுகள் உருவாகிக் கொண்டிருந்தன, முதலீட்டு வங்கி லெஹ்மன் பிரதர்ஸின் பொறிவு மற்றும் அதற்கடுத்து மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனம் AIG க்கு வரவிருந்த முடிவு ஆகியவற்றுடன் செப்டம்பர் 2008 இல் நிதிய அமைப்புமுறை வெடித்தது.

நிதிய தன்னலக்குழுவுக்கு பெடரல் அதன் ஆதரவைப் பெருமளவில் அதிகரித்தது. அது வட்டி விகிதங்களை பூஜ்ஜியமாகக் குறைத்ததுடன், பணத்தை அச்சிட்டு புழக்கத்தில் விடும் (quantitative easing) கொள்கையைத் தொடங்கியது. அமெரிக்க அரசாங்கம் நூறு பில்லியன் கணக்கில் பிரதான பெருநிறுவனங்களுக்குப் பிணையெடுப்பு வழங்கிய அதேவேளையில், நிதிய சொத்திருப்புக்களை கொள்முதல் செய்வதற்காக பெடரல் ட்ரில்லியன் கணக்கான டாலர்களை வழங்கியது.

பணத்தை அச்சிட்டு புழக்கத்தில் விடும் QE (quantitative easing) கொள்கை தற்காலிகமானது என்றும், 'வழமையான' நிலைமைகள் திரும்பியவுடன் விரைவில் நிறுத்தப்படும் என்றும் கூறப்பட்டது. அந்த நாள் வரவே இல்லை. 2018 இல் செய்யப்பட்டதைப் போல வட்டி விகிதங்களை உயர்த்துவதற்கான சிறிய முயற்சிகளும் கூட வோல் ஸ்ட்ரீட்டில் ஒரு நெருக்கடியைத் தூண்டின, இதனால் மீண்டும் அவற்றை தலைகீழாக மாற்ற வேண்டியிருந்தது.

இதன் விளைவாக, 2020 இன் தொடக்கத்தில் பெருந்தொற்று தாக்கிய போது, அது 2008 ஐ விட மிகவும் கடுமையாக இருக்கக்கூடிய சந்தை பொறிவுக்கு இட்டுச் சென்றது.

பங்குச் சந்தை சரிந்தது, மார்ச் மாதம் ஒரு கட்டத்தில், அமெரிக்க மற்றும் உலக நிதிய அமைப்புமுறையின் அடித்தளமான 22 ட்ரில்லியன் டாலர் அமெரிக்க கருவூலச் சந்தை முடங்கியது. உலகிலேயே மிகவும் பாதுகாப்பான நிதிய சொத்தாகக் கூறப்படும் அமெரிக்கக் கடனுக்காக கொள்முதல் செய்ய யாரும் முன்வரவில்லை.

சுகாதார அபாயங்கள் தொடர்பாக தொழிலாளர்கள் வெளிநடப்பு செய்ததை அடுத்து, வைரஸை அகற்ற பொது சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்ற அச்சத்தால் அந்த பொறிவு தூண்டப்பட்டது.

இந்த அச்சம் நிதி மூலதனத்தின் தன்மையில் இருந்தே எழுந்தது. இது மற்றொரு பரிமாணத்தில், ஒரு விதமான சொர்க்கத்தில் செயல்படுவதாக தோன்றுகிறது, அங்கே பணம் அதன் இயல்பிலேயே சர்வசாதாரணமாக அதிக பணத்தை ஈர்க்கிறது.

ஆனால், பகுப்பாய்வின் இறுதியில், அனைத்து நிதியச் சொத்துக்களும், முதலாளித்துவ உற்பத்தி நிகழ்ச்சிப்போக்கில் தொழிலாள வர்க்கத்திடமிருந்து பிரித்தெடுக்கப்படும் உபரி மதிப்பைக் கோருகின்றன. அர்த்தமுள்ள பொது சுகாதார நடவடிக்கைகள் செல்வத்தின் இந்த ஓட்டத்தை அச்சுறுத்தியது.

ஆகவே, மீண்டும் வேலைக்குத் திரும்ப செய்யும் முனைவும், 'நோயை விட குணப்படுத்துதல் மோசமாக இருந்து விடக் கூடாது' என்ற வலியுறுத்தலும் வந்தன. குறிப்பாக தொழிலாளர்களின் உடல்நலம், ஆரோக்கியம் மற்றும் உயிரும் கூட முக்கியமில்லை, முற்றிலும் எதுவுமே, நிதியத் தன்னலக்குழுவுக்கு செல்வம் செல்வதைத் தடுக்க அனுமதிக்க முடியாது என்றானது.

உலகெங்கிலுமான அரசாங்கங்கள், பெருநிறுவனங்களுக்கு பில்லியன் கணக்கில் வாரி வழங்கிய அதேவேளை, அமெரிக்க பெடரலும் மற்ற பிரதான மத்திய வங்கிகளும் 16 ட்ரில்லியன் டாலர்களை நிதியச் சந்தைகளில் செலுத்தியுள்ளன. பெடரல் ரிசர்வ் கிட்டத்தட்ட ஒரேயிரவில் 8 ட்ரில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்பில் அதன் சொத்து கையிருப்புகளை இரட்டிப்பாக்கி, ஒரு தருணத்தில் ஒவ்வொரு நொடிக்கும் ஒரு மில்லியன் டாலரைச் செலவிட்டு, ஒவ்வொரு நிதியச் சந்தைக்கும் பின்தளமாக மாறியது.

விளைவுகள் மிகப் பயங்கரமாக உள்ளன.

இந்த பெருந்தொற்றின் முதல் இரண்டு ஆண்டுகளில், சமூகத்தின் அடிமட்ட 99 சதவீதத்தினரின் வருமானம் வீழ்ச்சியடைந்த அதேநேரத்தில், பத்து மிகப் பெரிய பணக்காரர்களின் செல்வம் இரண்டு மடங்கு அதிகமானதாக ஆக்ஸ்பாம் நிதியுதவி அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இந்த பெருந்தொற்று தொடங்கியதிலிருந்து ஒவ்வொரு 26 மணி நேரத்திற்கும் ஒரு புதிய பில்லியனர் உருவாக்கப்பட்டுள்ளார், இந்த இரண்டாண்டு கோவிட் காலத்தின் போது உலகின் 2,775 பில்லியனர்களின் செல்வவளம் ஒட்டுமொத்தமாக முந்தைய 14 ஆண்டுகளில் இருந்ததை விட அதிகமாக அதிகரித்தது, இவையே கூட ஒரு மிகப்பெரிய களியாட்டமாக இருந்தன.

இப்போது இரண்டு முக்கிய கேள்விகள் எழுகின்றன: அடுத்து என்ன நடக்கும்? மற்றும்: என்ன செய்ய வேண்டும்?

எல்லாவற்றுக்கும் முதலாவதாக நமது முன்னோக்கு கடந்த 50 ஆண்டுகளின் படிப்பினைகளை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்: அதாவது, ஒரு நெருக்கடியை எதிர்த்துப் போராட ஆளும் வர்க்கங்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கையும் இன்னும் அதிக வெடிப்பார்ந்த வடிவத்தில் அது மீண்டும் எழுச்சி பெறுவதற்கான நிலைமைகளை மட்டுமே உருவாக்குகிறது.

இது தான் இன்றைய நிலை.

அரசாங்கங்கள். நிதிச் சந்தைகளைப் பாதுகாக்கும் அதே வேளையில் தொற்றுநோயை ஒழிக்க நடவடிக்கை எடுக்க மறுக்கின்றன, இத்துடன் மத்திய வங்கிகளின் நடவடிக்கைகளும் சேர்ந்து, இது நிஜமான பொருளாதாரத்தில் ஒரு நெருக்கடியை உருவாக்கியுள்ளது: இது விநியோகச் சங்கிலியை சீர்குலைத்து, பரவலான பணவீக்கத்தைத் தூண்டியுள்ளது.

ரஷ்யாவையும் அதன் பின்னர் சீனாவையும் சூறையாடும் நோக்கில் அமெரிக்க போர் முனைவை அது தீவிரப்படுத்தி உள்ளது, அதேவேளையில் அது அதன் இரத்த நாளங்களுக்குள் புது இரத்தத்தைப் பாய்ச்சுவதன் மூலம் அதன் வரலாற்று வீழ்ச்சியைக் கடக்க முயல்கிறது.

நீண்ட காலமாக ஒடுக்கப்பட்ட வர்க்கப் போராட்டம் இப்போது செயல்பாட்டுக்கு வருகிறது. பணவீக்கத்தால் தொழிலாளர்கள் நாளாந்தம் வாழ்க்கை நிலைமைகள் பாதிக்கப்படுவதை எதிர்த்து போராட்டத்திற்குள் இழுக்கப்பட்டு வருகின்ற நிலையில், பெடரல் ரிசர்வ் தலைமையில் மத்திய வங்கிகள், தொழிலாளர்களை எதிர்த்துப் போராடுவதற்காக ஒரு மந்தநிலையை தோற்றுவிக்கும் நோக்கில் வட்டிவிகிதங்களை உயர்த்தி வருகின்றன.

பெருநிறுவன பிணையெடுப்புகள் மூலம் திரண்ட பாரிய அரசுக் கடன்களை சமூக செலவின வெட்டுக்கள் மூலமாக திருப்பிச் செலுத்தியாக வேண்டுமாம்.

அதிகரித்து வரும் பணவீக்க நிலைமைகளின் கீழ் சுமத்தப்படும் இந்த வட்டி விகித உயர்வுகள், இப்போது ஒரு புதிய நிதி நெருக்கடியை தூண்டும் அச்சுறுத்தலைக் கொண்டுள்ளன.

ஏனென்றால் பல தசாப்தங்களாக இலாபத் திரட்சிக்கு மையமாக இருந்த ஊகவணிகமானது முற்றிலும் குறைந்த வட்டிவிகித முறையையே சார்ந்து இருந்துள்ளது.

ஒப்பீட்டளவில் ஒரு சிறிய நிதி நிறுவனத்தின் பொறிவும் கூட அமைப்புரீதியான ஒரு நெருக்கடியைத் தூண்டும் என்ற அச்சத்தின் மத்தியில், பத்திரச் சந்தைகள் மற்றும் பங்குச் சந்தைகளுடன் சேர்ந்து பண்டங்களின் சந்தைகளும் ஏற்கனவே கொந்தளிப்பில் உள்ளன.

ஆனால் முதலாளித்துவத்தின் இறுதி நெருக்கடி என்று எதுவும் இல்லை. எந்த நெருக்கடியும், அதுவே தானே, இந்த இலாப அமைப்புமுறைக்கு மரண அடியை உண்டாக்கும்.

தொழிலாள வர்க்கத்தின் நனவுபூர்வமான புரட்சிகரப் போராட்டத்தின் மூலம் மட்டுமே நாசகரமான மற்றும் அழிவார்ந்த இந்த சமூக ஒழுங்கைத் தூக்கியெறிய முடியும்.

இந்த போராட்டத்திற்குத் தலைமை கொடுக்க, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவை சோசலிசப் புரட்சியின் உலகக் கட்சியாகக் கட்டியெழுப்ப வேண்டும். இந்த மே தினத்தில், இதுதான், ஆழமடைந்து வரும் இந்த பொருளாதார உடைவிலிருந்து எழும் அவசரப் பணியாகும்.

Loading