முன்னோக்கு

கனேடிய பசிபிக் இரயில்வேயின் கதவடைப்பும், பிரிட்டன் ஃபெர்ரி நிறுவனத்தின் பாரிய வேலைநீக்கங்களும்: அதிகரித்து வரும் வர்க்க போராட்டங்களுக்கு ஆளும் வர்க்கத்தின் ஈவிரக்கமற்ற விடையிறுப்பு

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

சரிந்து வரும் வாழ்க்கைத் தரங்கள், கடுமையான வேலை நிலைமைகள் மற்றும் கோவிட்-19 பெருந்தொற்றால் தூண்டப்பட்டு தொடர்ந்து கொண்டிருக்கும் பேரழிவு ஆகியவற்றிற்குச் சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்திற்கிடையே அதிகரித்து வரும் எதிர்ப்புக்கு விடையிறுக்கும் வகையில், ஆளும் வர்க்கம் கதவடைப்புகள், பாரிய வேலைநீக்கங்கள் மற்றும் வேலைநிறுத்தத்திற்கு எதிரான நீதிமன்ற தடுப்பாணைகள் உட்பட அதன் பழைய அடக்குமுறை மற்றும் வர்க்கப் போர் அணுகுமுறைகள் அனைத்தையும் மீட்டுயிர்ப்பித்து வருகிறது.

ஞாயிற்றுக்கிழமை காலை, கனேடிய பசிபிக் (CP) இரயில்வே நிறுவனம் அது முன்னர் அறிவித்திருந்த 72 மணிநேர கதவடைப்புக்கான காலக்கெடு முடிவடைந்ததை அடுத்து அதன் செயல்பாடுகளை நிறுத்தியது. வட அமெரிக்காவின் அந்த ஆறாவது மிகப் பெரிய இரயில்வேயில் உள்ள 3,000 தொழிலாளர்கள், போதிய ஓய்வு வழங்காத வேலை நேரங்களை மாற்றியமைக்கும், சம்பளங்கள் மற்றும் ஓய்வூதியங்களில் அதிக அதிகரிப்பை பெறும் தீர்மானத்துடன் கடந்த மாதம் ஏறக்குறைய ஒருமனதாக வேலைநிறுத்த நடவடிக்கைக்கு வாக்களித்தார்கள்.

A Canadian Pacific train close to the small town of Pritchard, in British Columbia (Mariano Mantel/Flickr)

பேரம்பேசல்கள் நெடுகிலும் கனேடிய பசிபிக் உடன் நடந்த அதன் பேச்சுவார்த்தைகள் குறித்து தொழிலாளர்களை இருட்டில் வைத்திருக்கும் டீம்ஸ்டர்ஸ் தொழிற்சங்கம், வியாழக்கிழமை காலந்தாழ்த்தி வேலைநிறுத்த அறிவிப்பை வெளியிட்டது. நிறுவனத்தின் விடாப்பிடியான மற்றும் சர்வாதிகார நடவடிக்கைகள் மீது தொழிலாளர்கள் மத்தியில் நிலவும் கோபத்தை அறிந்துள்ள இந்த தொழிற்சங்கம், தன் முகத்தை காப்பாற்றும் முயற்சியில், அந்நிறுவனத்தின் கதவடைப்புக்குக் கூடுதலாக ஒரு வேலைநிறுத்தத்தை தொடங்குவதாக சனிக்கிழமை இரவு அறிவித்தது.

கனேடிய மற்றும் அமெரிக்க வணிக நலன்கள் இரண்டு தரப்புமே வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர தாராளவாத பிரதம மந்திரி ஜஸ்டின் ட்ரூடோவின் அரசாங்கம் தலையிட வேண்டுமென நெருக்குகின்றன.

கனேடிய வர்த்தக கூட்டமைப்பின் தலைவர் பெரின் பீட்டி, உடனடியாக வேலைக்குத் திரும்ப நிர்பந்திக்கும் சட்டமசோதாவை உடனடியாக தாக்கல் செய்யுமாறு தாராளவாத தொழிலாளர்துறை அமைச்சர் சீமஸ் ஓ'ரீகனுக்கு அழைப்பு விடுத்தார், “இந்த வேலை நிறுத்தம் மொத்த கனேடிய வணிகங்கள் மீதும்—பெருவணிகம் மற்றும் சிறுவணிகம் இரண்டின் மீதும்—ஆழமான மற்றும் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும், இவை அவற்றின் வினியோக சங்கிலிக்காக இரயில்வேயைச் சார்ந்துள்ளன. உலகளாவிய நிச்சயமற்ற தன்மை அதிகரித்திருக்கும் ஒரு காலத்ததில் கனேடிய வினியோகச் சங்கிலிக்கு ஏற்படும் இந்த கடுமையாக பாதிப்பு நம் எல்லைகளைக் கடந்து விரிவடைந்து, சர்வதேச வர்த்தகத்தில் ஒரு நம்பகமான பங்காளி என்ற நம் நற்பெயருக்குத் தீங்கு விளைவிக்கும்,” என்றார்.

கடந்த வாரம் பல அமெரிக்க குடியரசுக் கட்சி செனட்டர்களும் மற்றும் வடக்கு டகோட்டாவின் ஆளுநரும் தனித்தனியாக கடிதங்களை அனுப்பி, உக்ரேன் போரால் எரிபொருள் விலைகளின் கூர்மையான அதிகரிப்பு மற்றும் விவசாய விநியோகப் பற்றாக்குறையை நியாயப்பாடாக சுட்டிக் காட்டி, வேலை நிறுத்தத்தைத் தடுக்க ட்ரூடோ தலையிட வேண்டும் என்று கோரினர். அமெரிக்காவின் கன்சாஸ் நகரம் வரை தெற்கே பொருட்களை எடுத்துச் செல்கின்ற கனேடிய பசிபிக் இரயில்வே, ஒரு முக்கிய உர மூலப்பொருளான பொட்டாஷ் மற்றும் கச்சா எண்ணெய் கொண்டு செல்ல ஒரு முக்கிய போக்குவரத்து நிறுவனமாக விளங்குகிறது.

அதிகரித்து வரும் எரிவாயு மற்றும் உணவுப் பொருட்களின் விலைகள் நுகர்வோர் மீது ஏற்படும் தாக்கம் குறித்து எரிச்சலூட்டும் விதமாக கவலைகளை வெளிப்படுத்துவதற்கு அப்பாற்பட்டு, ஆளும் வர்க்கம் சிக்கன நடவடிக்கைகளைத் திணிக்க வேண்டுமென்றும், “தேசிய நலனுக்காகவும்' மற்றும் ரஷ்யாவுடனான போருக்குத் தயாராவதற்கும் தொழிலாளர்களின் போராட்டங்களை ஒடுக்க வேண்டுமென்றும் இன்னும் அதிகமாகவே கோரி வருகிறது.

ஒருபுறம் கனேடிய பசிபிக் நிர்வாகத்தின் ஈவிரக்கமற்ற நகர்வுகளும், மறுபுறம் தங்கள் வாழ்க்கை மற்றும் வேலையிட நிலைமைகளை மேம்படுத்துவதற்காக இரயில்வே தொழிலாளர்களின் உறுதிப்பாடும், சர்வதேச அளவில் பரந்தளவில் வர்க்கப் போராட்டம் தீவிரமடைந்திருப்பதன் ஒரு பாகமாகும்:

  • பிரிட்டனில், P&O பெர்ரி நிறுவனம் வியாழக்கிழமை ஒட்டுமொத்தமாக அதன் 800 பணியாளர்களை அந்த இடத்திலேயே வேலைநீக்கம் செய்தது. பல ஐரோப்பிய துறைமுகங்களுக்கு பயணியர் போக்குவரத்து சேவை மற்றும் சரக்கு போக்குவரத்துச் சேவை வழங்கும் இந்நிறுவனம், தொழிலாளர்கள் உடனடியாக அவர்களது உடைமைகளை எடுத்துக் கொண்டு கப்பல்களைக் காலி செய்யுமாறு கட்டாயப்படுத்தவும், அவர்களுக்குப் பதிலாக பெரிதும் மிகக் குறைந்த கூலியில் ஒப்பந்த தொழிலாளர்களைக் கொண்டு அவர்கள் இடத்தைப் பிரதியீடு செய்யவும், தனியார் பாதுகாவலர்களை இறக்கியது. இதற்கு விடையிறுப்பாக ஆரம்பத்தில் ஹல்லில் அமைந்துள்ள ஃபெர்ரி நிறுவன தொழிலாளர்கள் கப்பலில் ஏற உதவும் படிக்கட்டுகளை இடம் நகர்த்தும் படிக்கட்டுகளை அகற்றி, அவர்கள் படகுகளில் பொலிஸையோ அல்லது பிரதியீடாக வேலை செய்ய வந்தவர்களையோ அனுமதிக்க மறுத்தனர், அதேவேளையில் டோவரில் பாதுகாவலர்கள் தொழிலாளர்களைக் கலைந்து செல்ல நிர்பந்திப்பதற்கு முன்னர், அவர்கள் தொழிலாளர்கள் சாலைகளை மறித்து, துறைமுகத்தை அணுக முடியாதவாறு தடுத்தனர். வெள்ளிக்கிழமை நூற்றுக் கணக்கான தொழிலாளர்களும் அவர்கள் குடும்ப உறுப்பினர்களும் டோவரில் 'இப்போதே கப்பல்களை முற்றுகையிடுங்கள்!” என்ற கோஷமிட்டவாறு, பாதிக்கப்பட்ட நகரங்களில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
  • இந்தியாவில், மகாராஷ்டிர மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் (MSRTC) 70,000 க்கும் அதிகமான தொழிலாளர்கள் 20 வாரங்களாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர், அவர்கள் பணிக்குத் திரும்புவதற்கான அரசாங்கத்தின் உத்தரவுகளையும் பாரிய கைது நடவடிக்கை அச்சுறுத்தல்களையும் தொடர்ந்து எதிர்த்து நிற்கின்றனர். இந்த வெளிநடப்பு ஏறக்குறைய இரண்டு டஜன் தொழிற்சங்கங்களை எதிர்த்து நடத்தப்படுகிறது, அவை தடை உத்தரவுக்குப் பணிந்து வேலைநிறுத்தத்திற்கு அனுமதி வழங்க மறுத்தன. நல்லதொரு ஊதியம் மற்றும் சலுகைகளைப் பெறவும் அத்துடன் கோவிட்-19 ஆல் உயிரிழந்த 700 தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கவும் அந்த போக்குவரத்துக் கழகத்தை அரசு நிறுவனமாக மாற்ற வேண்டுமென தொழிலாளர்கள் கோரி வருகின்றனர். MSRTC வேலைநிறுத்தம் செய்தவர்களில் 2,216 பேரை பணிநீக்கம் செய்துள்ளது, மேலும் மற்றொரு 12,207 பேரை இடைநீக்கம் செய்துள்ளது.
  • ஸ்பெயினில், அதிகரித்து வரும் எரிபொருள் விலை மற்றும் மோசமான வேலை நிலைமைகள் சம்பந்தமாக கடந்த திங்கட்கிழமை 75,000 டிரக் ஓட்டுநர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கினர். சோசலிஸ்ட் கட்சி (PSOE) மற்றும் போலி-இடது பொடெமோஸ் (Podemos) கட்சிக்கு இடையே ஒரு கூட்டணி அரசாங்கத்தால் வழிநடத்தப்படும் ஸ்பெயின் அரசு, மூர்க்கமாக விடையிறுத்துள்ளது. கடந்த வாரம் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த 33 வயதான ஒருவர் ஓர் இரகசியப் பொலிஸ்காரரால் சுடப்பட்டு பலத்த காயமடைந்தார், PSOE-Podemos அரசாங்கம் இந்த வேலைநிறுத்தத்தை நசுக்க 23,000 க்கும் அதிகமான பொலிஸாரைக் குவிக்க இருப்பதாக அறிவித்துள்ளது.
  • அமெரிக்காவில், கடந்த மாதம் ஒரு கூட்டாட்சி நீதிபதி 17,000 BNSF இரயில் தொழிலாளர்களுக்கு எதிரான வேலைநிறுத்தத்திற்குத் தடை விதிக்கும் உத்தரவை உறுதி செய்தார். பிற்போக்குத்தனமான இரயில்வே தொழிலாளர் சட்டத்தின் அடிப்படையில் அமைந்த அந்த நீதிமன்றத் தீர்ப்பு, தொழிலாளர்கள் 'எந்தவொரு வேலைநிறுத்தங்கள் செய்வதற்கோ, வேலைகளைக் கைவிடுதல், மறியல், வேலைகளை மெதுவாக்கல், மருத்துவ விடுப்பு எடுத்தல், BNSF அல்லது அதன் செயல்பட்டுவரும் ரயில்வே துணைநிறுவனங்களுக்கு எதிராக ஏனைய சுய உதவி ஏற்படுத்திக் கொள்வதற்கோ அங்கீகாரம் வழங்குதல், ஊக்குவித்தல், அனுமதித்தல், அழைப்பு விடுத்தல் அல்லது வேறு விதத்தில் ஈடுபடுவதில் இருந்து” தடுக்கப்படுகிறார்கள் என்று வரையறுக்கிறது. இந்நிறுவனம் திணித்த பரவலாக வெறுப்பை ஏற்படுத்தும் தண்டிக்கும் விதமான 'Hi-Viz' வருகைப் பதிவேட்டு கொள்கைக்கு எதிராக வேலைநிறுத்தம் செய்ய இந்தாண்டு தொடக்கத்தில் தொழிலாளர்கள் பெருவாரியாக வாக்களித்தனர், பின்னர் பெப்ரவரி 1 இல் நிறுவனத்தால் இந்த கொள்கை எதேச்சதிகாரமாக திணிக்கப்பட்டது.
  • ஞாயிற்றுக்கிழமை, ஜனநாயகக் கட்சி ஆதிக்கம் செலுத்தும் மினெயாபொலிஸ் பள்ளிக் கல்வித்துறை வாரியம், சுமார் 4,500 கல்வியாளர்களின் வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சியில், கல்வித்துறை உதவி தொழில் வல்லுனர்களுக்கான அவர்களின் 'கடைசி, சிறந்த மற்றும் இறுதியான முன்மொழிவை' வெளியிட்டது. ஆத்திரமூட்டும் வகையில், அந்த பள்ளிக் கல்வித்துறை வாரியம் உதவி பணியாளர்களுக்கு மிகச் சிறியளவில் சம்பளங்களை உயர்த்தினாலும் கூட அடுத்தாண்டு வரவுசெலவு திட்டக்கணக்கில் 10 மில்லியன் டாலர் வெட்டு ஏற்படும் என்று அறிவித்தது—ஏற்கனவே இவர்களுக்கு மிகக் குறைந்த சம்பளமே வழங்கப்படுகிறது என்பதோடு ஒரு சிலர் அவர்களின் கார்களிலேயே உறங்க நிர்பந்திக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்கா மற்றும் அதன் நேட்டோ நட்பு நாடுகளின் போர் முனைவு வேகமாக தீவிரப்படுத்தப்பட்டு வரும் நிலையில், தொழிற்சங்கங்களோ வேலைநிறுத்தங்களை முடக்கியோ அல்லது, முடியாவிட்டால், அவற்றைத் தனிமைப்படுத்த முயல்வதன் மூலமாகவோ, பெருநிறுவனங்கள் மற்றும் அரசின் கட்டளைகளைத் திணிப்பதற்கான அவற்றின் முயற்சிகளை இரட்டிப்பாக்கி வருகின்றன. இதற்காக, முதலாளித்துவ அரசாங்கங்கள், குறிப்பாக பைடென் நிர்வாகம், எதிர்ப்பை நசுக்க முயற்சிப்பதற்காக பெருமளவில் மதிப்பிழந்த இந்த தொழிற்சங்கங்களை முன்பினும் அதிகமாக நம்பியுள்ளன.

கனடாவில், ட்ரூடோ அரசாங்கம் இந்த இரயில்வே வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதில் நேரடியாக தலையிடுவதை நிறுத்தி வைத்துள்ளது, அதற்குப் பதிலாக டீம்ஸ்டர் தொழிற்சங்கத்தை அந்நிறுவனத்துடன் ஒரு உடன்பாட்டுக்கு வருமாறு அல்லது நடுவர் மன்றத் தீர்ப்பை ஏற்குமாறு அழுத்தம் கொடுத்து வருகிறது. அமெரிக்காவில், 30,000 எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மற்றும் பெட்ரோ கெமிக்கல் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை முடக்கி, வெடிப்பார்ந்த எண்ணெய் விலை உயர்வுக்களில் இருந்து இலாமீட்டி வருகின்ற எரிசக்தித்துறை பெருநிறுவனங்களின் கட்டளைகளைத் திணிக்க ஐக்கிய எஃகுத்துறை தொழிலாளர் (USW) சங்க நிர்வாகிகளை வெள்ளை மாளிகை சந்தித்தது. இந்த ஒப்பந்தத்தை 'பொறுப்பானது' என்றும் மற்றும் 'பணவீக்க அழுத்தங்களைச் சேர்க்காதது' என்றும் கூறி USW இதை முன்நகர்த்தியது.

உக்ரேனில் நடக்கும் போரை 'ஜனநாயகம்' மற்றும் 'சுதந்திரத்துக்கான' போராட்டமாக சித்தரித்து மேற்கத்திய ஊடகங்களில் ஒரு மிகப் பெரிய பிரச்சார பேரலை வெளி வருகின்றன. ஆனால் இந்த பாசாங்குத்தனமான கூற்றுகளுக்கு முரண்பட்ட விதத்தில், அமெரிக்காவிலும் அதன் நட்பு நாடுகளிலும் தொழிலாளர்களின் ஜனநாயக உரிமைகள் அதிகரித்தளவில் ஒன்றும் இல்லாமல் ஆக்கப்படுகின்றன. தங்கள் வாழ்க்கை நிலைமைகளை உயர்த்த தொழிலாளர்கள் நடத்தும் வேலைநிறுத்தங்கள் மற்றும் பிற போராட்டங்களின் அளவை வைத்து, அவர்கள் “புட்டினின் கைக்கூலிகள்” என்றும் தேசிய நலனுக்கு அச்சுறுத்தல் என்றும் அதிகரித்தளவில் கரும்புள்ளி குத்தப்படுகிறார்கள், இதை வேலைநிறுத்தம் செய்து வரும் இலண்டன் சுரங்க ரயில் பாதை தொழிலாளர்கள் சமீபத்தில் அனுபவித்துள்ளனர்.

ஆளும் உயரடுக்குகள் தீர்க்க முடியாத சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன. இந்த பெருந்தொற்றுக்கு மிகப் பெரிய முதலாளித்துவ நாடுகள் காட்டிய படுமோசமான விடையிறுப்பின் விளைவாகவும், மிகச் சமீபத்தில், பகிரங்கமான உலகப் போராக வெடிக்க அச்சுறுத்துகின்ற வகையில், உக்ரேனில் பொறுப்பின்றி இராணுவ மோதலை தூண்டியதன் விளைவாகவும் மற்றும் ரஷ்யாவுக்கு எதிராக முன்னோடியில்லாத பொருளாதாரத் தடைகளை விதித்ததாலும், விநியோகச் சங்கிலிகள் அதிகரித்தளவில் சிதைந்துள்ளன. அதே நேரத்தில் இந்த பெருந்தொற்று தொடங்கியதில் இருந்து மத்திய வங்கிகள் நடைமுறையளவில் இலவச பணமாக கையளித்ததால் எரியூட்டப்பட்ட பித்துப்பிடித்த ஊக வணிக முதலீட்டுடன், பங்குச் சந்தை மதிப்புகள் கிட்டத்தட்ட எப்போதும் இல்லாதளவுக்கு உயர்ந்து உச்சபட்ச பலவீனத்துடன் ஊதிப் பெரிதாகி உள்ளது.

இத்தகைய நிலைமைகளின் கீழ், சம்பளக் குறைப்பு மற்றும் தொழிலாளர்களுக்கான ஒழுக்க நெறிமுறைகளைத் திணிப்பது ஆளும் வர்க்கத்திற்கு இன்றியமையாத அவசியமாக உள்ளது, ஆளும் வர்க்கம் தங்களைப் பாதுகாக்க அதன் கைவசமிருக்கும் அரசு ஒடுக்குமுறையின் எல்லா ஆதாரவளங்களையும் மற்றும் அணுகுமுறைகளையும் பயன்படுத்தும். இந்த வார தொடக்கத்தில் வட்டி விகிதங்கள் உயரும் என்று அறிவித்த ஃபெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவல், சம்பள உயர்வுக்காக அதிகரித்து வரும் கோரிக்கை எதிர்கொள்ள பணவீக்கத்தைக் குறைக்க வேண்டிய அவசியமிருப்பதைச் சுட்டிக் காட்டினார், தொழிலாளர்களின் சம்பளம் 'காலப்போக்கில் 2 சதவீத பணவீக்கத்துடன் ஒத்துப் போகாத வழிகளில் நகர்ந்து வருகிறது' என்று கூறிய அவர், “பணவீக்கத்தை 2 சதவீதத்திற்குக் கீழ் வைத்திருக்க நம் கருவிகளை நாம் பயன்படுத்த வேண்டும்,” என்பதையும் சேர்த்துக் கொண்டார்.

மக்களுக்கு முடிவில்லாமல் பெருந்தொற்றையும், சம்பளக் குறைப்புகள், தாங்கொணா வேலை நேரங்கள், சிக்கன நடவடிக்கைகள் மற்றும் போரைத் தவிர வேறெதையும் வழங்க முடியாத ஒரு ஆளும் வர்க்கத்திற்கு எதிராக உலகெங்கிலுமான தொழிலாளர்கள் தாங்கள் அதிகரித்தளவில் ஓர் அரசியல் போராட்டத்தில் இருப்பதைக் காண்கிறார்கள். ஆனால் ஆளும் உயரடுக்கினரை இந்த நாசகரமான போர் பாதைக்குள் இட்டுச் சென்று கொண்டிருக்கும் இதே அடிப்படை முரண்பாடுகள், மிகப் பெரியளவில் வர்க்கப் பதட்டங்களைத் தீவிரப்படுத்தி வருவதுடன், மக்களின் பரந்த அடுக்குகளைத் தீவிரப்படுத்தி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக, விட்டுக்கொடுப்புகளைத் திணிப்பதற்கான தொழிற்சங்கங்களின் முயற்சிகளுக்கு எதிராக தொழிலாளர்கள் அதிகரித்தளவில் கிளர்ந்தெழுந்துள்ளனர், 2021 இல் மட்டும் வாரியர் மெட் கோல், வொல்வோ, டீர், டானா கார்ப், ஃபிரெடொ-லே, கெல்லாஹ் ஆகியவற்றிலும் மற்றும் ஏனைய இடங்களிலும் தொழிற்சங்கங்கள் அங்கீகரித்த உடன்படிக்கைகளை நிராகரித்து தொழிலாளர்கள் பெருவாரியாக வாக்களித்தனர்.

பெருநிறுவன சார்பு தொழிற்சங்கங்கள் ஏற்படுத்தி உள்ள தனிமைப்படுத்தலை முறிக்க, தொழிலாளர்களுக்கு அவர்களின் புதிய அமைப்புக்கள், அதாவது சாமானிய தொழிலாளர்களின் வேலையிட மற்றும் தொழிற்சாலை குழுக்கள் தேவைப்படுகின்றன, இவை தங்களை வர்க்க போராட்ட அணுகுமுறைகள் அடிப்படையிலும் மற்றும் எல்லா தொழிலாளர்களின் தேவைகளுக்காக இடைவிடாது போராடுவதன் அடிப்படையிலும் இருக்க வேண்டும். அதே நேரத்தில், ஆளும் வர்க்கம் மற்றும் அதன் அரசின் அதிகரித்து வரும் ஈவிரக்கமற்றத் தன்மையானது, தொழிலாளர்கள் தங்களுக்கென சொந்தமாக ஓர் அரசியல் முன்னோக்கு மற்றும் வேலைத்திட்டத்தை ஏற்றிருக்க வேண்டிய அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது, இது சோசலிசம் மற்றும் சமூக சமத்துவத்திற்கான மற்றும் போருக்கு எதிரான போராட்டத்தில் சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தை அணித்திரட்டுவதற்காக அர்ப்பணித்திருக்கும்.

Loading