நாடு தழுவிய லாரி ஓட்டுநர்களின் வேலைநிறுத்தத்தை நசுக்க ஸ்பெயின் 23,000 போலிஸைத் திரட்டியுள்ளது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஸ்பெயினின் சோசலிஸ்ட் கட்சி (PSOE) – பொடேமோஸ் (Podemos) அரசாங்கம், வேலைநிறுத்தம் செய்யும் 75,000 லாரி ஓட்டுநர்களுக்கு 23,000 க்கும் மேற்பட்ட போலீசாரை அணிதிரட்டுவதாக நேற்று அறிவித்தது. ரஷ்யாவை குறிவைத்த நேட்டோ போர் உந்துதலுக்கு மத்தியில் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து லாரி ஓட்டுநர்கள் திங்கள் முதல் நாடு தழுவிய காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நவம்பர் 12, 2019 செவ்வாய்கிழமை, ஸ்பானிய பாராளுமன்றத்தில் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்னர், ஸ்பெயினின் காபந்து பிரதம மந்திரி பெட்ரோ சான்செஸ் பார்த்துக்கொண்டிருக்கும்போது, பொடேமோஸ் கட்சித் தலைவர் பாப்லோ இக்லேசியாஸ் பேசுகிறார் (AP Photo/Paul White)

நேற்று, போக்குவரத்து மந்திரி Raquel Sánchez வேலைநிறுத்தம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்ற போலித்தனத்தை கைவிட்டு, ஒரு பாரிய போலீஸ் அணிதிரட்டலை அறிவித்தார். 'அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களை ஒழுங்குபடுத்துதல் மற்றும் பாதுகாத்தல்' என்ற பணிக்கு, போலீஸ் தாக்குதல் குழுக்களை தயார்படுத்துமாறு உள்துறை அமைச்சகம் அனைத்து ஸ்பானிய பிராந்தியங்களுக்கும் அறிவித்துள்ளதாக அவர் கூறினார்.

வேலைநிறுத்தம் செய்யும் லாரி ஓட்டுநர்களை வன்முறை குற்றவாளிகள் என்று வெறித்தனமாக கண்டித்த அவர், “அந்த நாட்டை ஆயுத மல்யுத்தத்திற்கு உட்படுத்த நாங்கள் அனுமதிக்க முடியாது, நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம், இந்த வன்முறையை ஒடுக்க 15,000 க்கும் மேற்பட்ட அதிகாரிகளை அணிதிரட்ட நாங்கள் உள்துறை அமைச்சகத்துடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். இவை தொழில்துறையை பிரதிநிதித்துவப்படுத்தாத செயல்கள். நாங்கள் உணர்திறன் உடையவர்கள் ஆனால் இந்த அச்சுறுத்தல், நாசவேலை மற்றும் புறக்கணிப்பு ஆகியவற்றில் நாங்கள் ஈடுபடப் போவதில்லை” என்றார்.

PSOE-Podemos அரசாங்கத்தால் தயாரிக்கப்பட்ட பொலிஸ் வரிசைப்படுத்தலில் 7,122 தேசிய பொலிஸ் மற்றும் 16,476 துணை இராணுவ சிவில் காவலர்கள் உட்பட மொத்தம் 23,500 அதிகாரிகள் உள்ளனர். Basque Ertzaintza, Catalan Mossos d'Esquadra மற்றும் Navarre Foral Police போன்ற பிராந்திய பொலிஸ் படைகளும் அணிதிரட்டப்படும்.

இந்த போலி-இடது மற்றும் சமூக-ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம் தயாரித்து வரும் போலீஸ் தாக்குதலுக்கு எதிராக லாரி ஓட்டுநர்களை பாதுகாக்க ஸ்பெயின் மற்றும் சர்வதேச அளவில் தொழிலாளர்களை அரசியல் ரீதியாக அணிதிரட்டுவது மிகவும் முக்கியமானது. ஸ்பெயின் முழுவதும் சக்திவாய்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் இந்த வேலைநிறுத்தத்திற்கு எதிராக முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு காவல்துறையினரை அனுப்புவது ஒரு அவநம்பிக்கையான அச்சுறுத்தலாகும். மாட்ரிட் அருகே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த லாரி ஓட்டுநரை ஒரு இரகசிய போலீஸ்காரர் சுட்டுக் கொன்ற இரண்டு நாட்களுக்குப் பின்னர் இது வருகிறது.

பல தசாப்தங்களாக பரவலான சுரண்டலுக்குப் பின்னர் அதிகரித்து வரும் எரிபொருள் விலைகள் மற்றும் மோசமான வேலை நிலைமைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், 85 சதவீத சிறிய லாரி நிறுவனங்கள் மற்றும் சுயதொழில் லாரி ஓட்டுநர்களுக்குக் கணக்குக் கொடுக்கும், வணிகப் பொருட்களின் சாலைப் போக்குவரத்தின் பாதுகாப்புக்கான தளம், இந்த வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. எண்கள் தெளிவாக இல்லை என்றாலும், 25,000 முதல் 85,000 லாரிகள் வேலைநிறுத்தத்தில் இணைகின்றன. இதில் 1,000 பேர் மட்டுமே ஈடுபட்டுள்ளனர் என்று அரசு கூறுவது அபத்தமானது. ஒவ்வொரு வேலைநிறுத்தக்காரருக்கும் கிட்டத்தட்ட மூன்று போலீஸ்காரர்களை அவர்கள் திரட்டியிருக்கிறார்கள் என்று அர்த்தம்.

வேலைநிறுத்தம், மறியல், பல சாலைத் தடைகள் மற்றும் மெதுவான லாரி தொடரணிகள், முக்கியமாக நாட்டின் பிரதான நகரங்கள் மற்றும் துறைமுகங்கள் மற்றும் தொழில்துறை மற்றும் வணிக மண்டலங்களில், தேசிய மற்றும் சர்வதேச சந்தைகளுக்கு விவசாய மற்றும் தொழில்துறை பொருட்களின் விநியோகத்தை கடுமையாக பாதிக்கத் தொடங்கியுள்ளது.

ஸ்பெயினின் CEOE மற்றும் CEPYME வணிக குழுக்கள், முறையே பெரிய மற்றும் சிறு வணிகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. இந்த வேலைநிறுத்தம், 'தொழில், வணிகம் மற்றும் உணவுத் துறையில் விநியோகச் சங்கிலிக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறது' என்றார். ஸ்பெயினின் தேசிய பால் தொழில் கூட்டமைப்பு, FENIL, அதன் உறுப்பினர்களில் சிலர் உற்பத்தியை நிறுத்த வேண்டும் என்று அறிவித்தது. ஸ்பெயினின் மிகப்பெரிய மொத்த சந்தை மற்றும் உற்பத்தி விநியோக மையமான Mercamadrid, நேற்று ஒரே நாளில் மட்டும் பாதி அளவு பழங்கள் மற்றும் காய்கறிகளை பெற்றுள்ளது என அறிவித்தது.

உதிரிப்பாகங்கள் முடிந்து போனதால் தொழிற்சாலைகள் மூடப்படுகின்றன. பன்னாட்டு எஃகு நிறுவனமான ArcelorMittal அஸ்டூரியாஸில் உற்பத்தியை நிறுத்துகிறது. Almussafes (Valencia) இல் உள்ள Ford தொழிற்சாலை வாகன உற்பத்தியை நிறுத்த வேண்டியதாயிற்று. ஸ்பெயினில் ஆண்டு முழுவதும் இயங்கும் ஒரே சர்க்கரை ஆலையான Azucarera, Jerez de la Frontera இல் தனது ஆலை செயற்பாட்டை நிறுத்தியுள்ளது.

சாலைப் போக்குவரத்துக்கான தேசியக் குழுவால் (CNTC) ஏற்பாடு செய்யப்பட்ட பெரிய லாரி ஓட்டுநர்கள் சங்கங்கள் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களுக்கு எதிரான கிளர்ச்சியாக இந்தப் போராட்டம் வெடித்தது. மாநில அங்கீகாரம் பெற்ற ஒரே லாரி ஓட்டுநர்கள் அமைப்பான CNTC வேலைநிறுத்தத்தை முழுவதுமாக எதிர்த்தது. வேலைநிறுத்தம் இப்போது, நேட்டோ இராணுவக் கூட்டணி மற்றும் வங்கிகளின் ஆதரவு ஸ்பெயினின் PSOE-Podemos அரசாங்கத்துடன் வெளிப்படையான மோதலாக வளர்ச்சியடைந்துள்ளது.

இது, PSOE-Podemos அரசாங்கத்தை முழுமையாக அம்பலப்படுத்துகிறது. அது ஏற்கனவே தொழிலாளர்களுக்கு அதன் உள்ளார்ந்த விரோதத்தை நிரூபித்துள்ளது, சமூக சிக்கனத்தை திணிக்கிறது, கோவிட்-19 சுகாதார நடவடிக்கைகளை வெட்டுகிறது, இராணுவவாதம் மற்றும் ரஷ்ய எதிர்ப்பு வெறுப்பை தூண்டுகிறது மற்றும் புலம்பெயர்ந்தோருக்கு எதிரான வன்முறையான கொள்கைகளை செயல்படுத்துகிறது.

Podemos மற்றும் PSOE ஆல் திரட்டப்பட்ட போலீஸ் படையின் அளவு வரலாற்று ரீதியாக முன்னோடியில்லாதது. 2017 கட்டலான் சுதந்திர வாக்கெடுப்பை முறியடிக்க மாட்ரிட் சுமார் 12,000 காவல்துறையினரையும் சிவில் காவலர்களையும் திரட்டியது, வாக்குச் சாவடிகளில் போலிஸ் தடியடிகளுக்கு வாக்காளர்கள் பாரிய ஒத்துழையாமையுடன் பதிலளித்ததால் 1,000 பேர் காயமடைந்தனர். அதற்கு முன், ஸ்பெயினின் உள்நாட்டுப் போர் வெடிப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, அஸ்டூரியாஸில் ஆயுதமேந்திய சுரங்கத் தொழிலாளர்களின் கிளர்ச்சியை நசுக்க 18,000 துருப்புக்களும் காவல்துறையினரும் அக்டோபர் 1934 இல் அனுப்பப்பட்டனர்.

தங்கள் எதிர்ப்பாளர்கள் அனைவரையும் பாசிஸ்டுகள் என்று அவதூறு செய்யும் ஸ்ராலினிச பாரம்பரியத்தைத் தொடர்ந்து, PSOE-Podemos அரசாங்கம் லாரி ஓட்டுநர்களை தீவிர வலதுசாரி இயக்கமாகத் தாக்குகிறது, இருப்பினும் வேலைநிறுத்தத்திற்கு தலைமை தாங்கும் தளம் (Platform) அமைப்பு தீவிர வலதுசாரி மற்றும் நவ-பாசிச வோக்ஸ் கட்சியுடன் எந்த தொடர்பையும் மறுத்துள்ளது.

தொழிற்சங்கங்கள் மற்றும் CNTC உறுப்பினர்களுடனான சந்திப்பிற்குப் பின்னர், சான்செஸ் வேலைநிறுத்தக்காரர்களை சந்திக்க மறுத்துவிட்டதாகக் கூறினார்: 'இது அதி-வலதுசாரிகள், தீவிர வலதுசாரிகளின் வெறுப்பு வன்முறை நிலைகளால் ஊக்குவிக்கப்பட்ட புறக்கணிப்பு ஆகும். வேலைநிறுத்தம் செய்யும் உரிமைக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை”.

துணைப் பிரதம மந்திரி யோலாண்டா டியாஸ், அமைச்சர்கள் ஐயோன் பெலாரா, ஆல்பர்டோ கார்சன் மற்றும் ஐரீன் மொன்டெரோ மற்றும் முன்னாள் பொடேமோஸ் தலைவர் பாப்லோ இக்லேசியாஸ் போன்ற முன்னணி பொடேமோஸ் உறுப்பினர்கள் எதுவும் கூறவில்லை. வேலைநிறுத்தத்தின் மீதான இந்த காது கேளாத மௌனம், கலகத் தடுப்புப் பொலிஸாருக்கு கொடுத்த துருப்புச் சீட்டுக்கு சமம், இது பொடேமோஸின் பல்வேறு போலி-இடது செயற்கைக்கோள்களால் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. மொரேனோவாத புரட்சிகர தொழிலாளர் (CRT) அதன் இணைய வெளியீடான இக்கியார்டா டியாரியோ (Izquierda Diario) இல் இது பற்றி எதுவும் எழுதப்படவில்லை.

எவ்வாறாயினும், பொடேமோஸ் இன் பதில் அதன் இணைந்த தொழிற்சங்கமான ஸ்ராலினிச தொழிலாளர் ஆணையங்கள் (CCOO) மூலம் வந்தது, இது வேலைநிறுத்தத்தைக் கண்டிக்கிறது. 'வேலைநிறுத்தம் எதுவும் இல்லை,' என்று CCOO தலைவர் உனாய் சோர்டோ (Unai Sordo) கூறினார், சுயதொழில் செய்யும் லாரி ஓட்டுநர்களையும், சரக்குகள் ஏற்றி இறக்கும் சிறு வணிகங்களின் உரிமையாளர்களையும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட அனுமதித்ததற்காக வேலைநிறுத்தக்காரர்களைக் கண்டித்து, சோர்டோ மேலும் கூறினார், 'அவர்கள் தங்கள் ஓட்டுனர்களுக்கு சம்பளம் கொடுக்க விரும்பாதவர்கள், மாறாக மைல் கணக்கு மூலம் செலுத்துபவர்கள்.'

சமூக ஜனநாயகத் தொழிலாளர் பொதுச் சங்கம் (UGT) வெட்கமின்றி வேலைநிறுத்தம் செய்பவர்களை, அவர்கள் UGT இன் சொந்த உறுப்பினர்களை ஒடுக்குவது போல் அடக்க வேண்டும் என்று காவல்துறைக்கு வேண்டுகோள் விடுத்தது. UGT அதிகாரிகள் El Periódico de España செய்தித்தாளிடம், 'எங்கள் எதிர்ப்புக்களில், அவர்கள் எங்களுக்கு எதிராகப் பயன்படுத்துவதைப் போலவே' பொலிஸ் நடவடிக்கையும் தீவிரமாக இருக்க வேண்டும் என்று கூறினார்.

UGT அதிகாரத்துவத்திற்கு தொழிற்சங்க உறுப்பினர் நிலுவைத் தொகையை வழங்காததற்காக சுயதொழில் செய்யும் வேலைநிறுத்தக்காரர்களைக் கண்டித்து அவர்கள் தொடர்ந்து அறிவித்தனர்: 'நிறுவனங்கள் அவற்றை சம்பளப் பட்டியலில் சேர்க்குமாறு கேட்க வேண்டும், ஏனெனில் அப்போது அவர்கள் ஊதியம் பெறுபவர்களாக இருப்பார்கள். அப்போது அவர்கள் சட்டபூர்வ வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடியும்” என்றார்.

இது இன்னொரு பொய். UGT மற்றும் CCOO ஆகியவை லாரி ஓட்டுநர்களின் வேலைநிறுத்தம் பெரிய சரக்கு ஏற்றி இறக்கும் நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்களின் பிற அடுக்குகளுக்கு பரவுவதைத் தடுப்பதில் உறுதியாக உள்ளன. இரண்டு நாட்களுக்கு முன்பு, காடிஸ் மாகாணத்தில் 3,000 ஊதியம் பெறும் லாரி ஓட்டுநர்கள் நடத்திய சரக்கு போக்குவரத்து வேலைநிறுத்தத்தை அவர்கள் கைவிட்டனர். இழிந்த முறையில் முதலாளிகள் ஒரு உடன்படிக்கைக்கு நெருக்கமாக இருப்பதாக அறிவித்தனர்.

இந்த நிகழ்வுகள் WSWS இன் எச்சரிக்கைகளை உறுதிப்படுத்துகின்றன. உக்ரேன் மீதான நிகழ்வில், நேட்டோ ரஷ்யாவுடன் உலகப் போரை நோக்கி நகர்கிறது மற்றும் விலைவாசி, பணவீக்கம் மூலம் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தின் மீது கடுமையான தாக்குதல்களுடன் உள்நாட்டில் தொழிலாள வர்க்கத்தின் மீது போரைத் தயாரிப்பதை உறுதிப்டுத்துகிறது. WSWS கடந்த வெள்ளிக்கிழமை எழுதியது போல்:

இந்த பொறுப்பற்ற பிரச்சாரத்தின் சமூக விளைவுகள், ஒவ்வொரு நாட்டிலும் தொழிலாள வர்க்கத்திற்கும் முதலாளித்துவ வர்க்கத்திற்கும் இடையே ஒரு மோதலுக்கான தயாரிப்புகளாகும். இதில் வெகுஜன கோபம், ஏற்கனவே தொற்றுநோயின் விளைவாக வளர்ந்து வரும் தீவிரமயமாக்கலுடன் சேர்கிறது.… உக்ரேனில் 'சுதந்திரத்தைப் பாதுகாப்பதாக' கூறிக்கொள்ளும் முதலாளித்துவ அரசாங்கங்களின் பதில், தடை உத்தரவுகள், வேலைநிறுத்த எதிர்ப்பு சட்டம், நிர்வாக உத்தரவுகள் மற்றும் உள்நாட்டில் தொழிலாள வர்க்க எதிர்ப்பை அடக்குவதற்கான பிற நடவடிக்கைகள் உட்பட தவிர்க்க முடியாமல் அரசு அடக்குமுறையை அதிக அளவில் பயன்படுத்துவதை உள்ளடக்கும்.

தங்கள் சக்திவாய்ந்த போராட்டத்தை பாதுகாக்க, லாரி ஓட்டுநர்களுக்கு முழு தொழிலாள வர்க்கத்தின் ஆதரவு தேவைப்படுகிறது, அது தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் மற்றும் குட்டி முதலாளித்துவ போலி-இடது கட்சிகளில் இருந்து சுயாதீனமாக அணிதிரட்டப்பட்ட வேண்டும். இது, நேட்டோ ரஷ்யாவை குறிவைப்பதை எதிர்ப்பதையும் உள்ளடக்குகிறது. சோசலிசத்திற்கான போராட்டத்தில் சாமானியத் தொழிலாளர் குழுக்களது சர்வதேசக் கூட்டணி (IWA—RFC) ஐ கட்டமைப்பதே இதற்கான மாற்றாகும்.

Loading