இலங்கை பொலிஸ் ஓல்டன் தோட்டத்தில் நிரந்தர நிலையத்தை நிறுவ நடவடிக்கை எடுக்கின்றது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

மத்திய தேயிலை பெருந்தோட்ட மாவட்டத்தில் மஸ்கெலியாவிற்கு அருகிலுள்ள ஓல்டன் தோட்டத்தில், தற்போது தொழிலாளர்களுக்கு எதிராக நடந்து வரும் வேட்டையாடலோடு இணைந்தவாறு, இலங்கை பொலிஸ் தோட்டத்திற்குள் ஒரு விசேட நிலையத்தை அமைக்க முயற்சிக்கின்றது. இந்த தோட்டத்தை ஹொரானா பிளான்டேஷன்ஸ் நிர்வகிப்பதோடு இது இலங்கையின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஹேலீசுக்கு சொந்தமானதாகும்.

தோட்டத்தின் கலாச்சார மண்டபத்தை பொலிஸ் நிலையமாக பயன்படுத்துவதற்கான திட்டத்தின் ஒரு பகுதியாக, கடந்த வாரம், ஹட்டன் உதவி பொலிஸ் அத்தியட்சகர் தோட்டத்தை பார்வையிட்டார். இந்த ஆத்திரமூட்டும் நடவடிக்கையை எதிர்த்த தொழிலாளர்கள், இந்த மண்டபம் திருமண விழாக்கள் உட்பட பலதரப்பட்ட சமூக செயல்பாடுகளுக்கு பயன்படுத்தப்படும் இடம் என்பதை சுட்டிக்காட்டினார்.

டிரேட்டன் தோட்டத் தொழிலாளர்கள் [Photo credit: K. Kishanthan]

உள்ளூர் தொழிற்சங்க அலுவலர்களால் அறிவிக்கப்பட்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.) தலைவர் ஜீவன் தொண்டமான் தோட்டத்திற்கு சென்றார். அவர் பொலிசின் திட்டத்தை எதிர்க்கவில்லை, மாறாக தோட்டத்தில் வேறு இடத்தைக் பார்க்குமாறு கேட்டுக்கொண்டார். தொண்டமன், ஜனாதிபதி கோடாபய இராஜபக்ஷவின் தோட்ட வீடமைப்பு மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சராக உள்ளார். பொலிசார் தற்போது வேறொரு இடத்தை தேடி வருவதோடு நிர்வாகத்துடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளனர்.

ஓல்டன் தோட்டத் தொழிலாளர்கள் தங்கள் ஆதங்கத்தை உலக சோசலிச வலைத் தளத்திற்கு தெரிவித்தனர். 'தற்போது அவர்கள் பொலிஸ் காவல் நிலையத்தை தோட்டத்தின் மருந்தகத்தில் அமக்க முயற்சிக்கிறார்கள், ஆனால் நாங்கள் அதையும் எதிர்ப்போம்' என ஒரு தொழிலாளி கூறினார்.

தோட்டத்தில் ஒரு பொலிஸ் காவல் நிலையத்தை நிறுவுவதானது ஓல்டன் தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராக, இ.தொ.கா.வின் ஆதரவு அனுசரணையுடன் தோட்ட நிர்வாகம்-பொலிஸ் கூட்டு சேர்ந்து மேற்கொள்ளும் சதித் திட்டத்தின் தொடர்ச்சியாகும்.

பெப்ரவரி 2 அன்று ஊதிய அதிகரிப்பு கோரி அவர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். பின்னர் பெப்ரவரி 5 அன்று இ.தொ.கா. அழைப்பு விடுத்த 1,000 ரூபாய் (5 அமெரிக்க டாலர்) தினசரி ஊதியத்துக்கான தேசிய போராட்டத்தில் பங்கேற்றனர். தீவு முழுவதும் உள்ள தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் வேலை நிறுத்தம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வளர்ந்து வந்த நிலையில், அதை தணிக்கும் வகையில் இ.தொ.கா. இந்த மட்டுப்படுத்தப்பட்ட தேசிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்தது.

வெலிஓயா தோட்டத் தொழிலாளர்கள் தனிமைப்படுத்தல் நிவாரணம் கோரி நடத்திய போராட்டம் [Photo credit: K. Kishanthan] [Photo: K. Kishanthan]

ஓல்டன் தோட்ட நிர்வாகம் உடனடியாக வேலை நிறுத்தக்காரர்களை மிரட்டத் தொடங்கியது. வேலைநிறுத்தம் செய்தவர்கள், முகாமையாளரின் பங்களாவுக்கு வெளியே நடத்திய ஆர்ப்பாட்டதை பற்றிக்கொண்ட நிர்வாகம், முகாமையாளர் மற்றும் உதவி முகாமையாளரை தொழிலாளர்கள் தாக்கியதாக பொய்யாகக் குற்றஞ்சாட்டியது.

24 தொழிலாளர்களையும் இரண்டு இளைஞர்களையும் பொலிஸ் கைது செய்தனர். போலியான குற்றவியல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவர்கள் வழக்குகளுக்கு முகம் கொடுக்கின்றனர். ஹொரன பெருந்தோட்ட நிறுவனம், பின்னர், பொலிசாரினால் குற்றம் சாட்டப்பட்ட 24 பேர் உட்பட 38 தொழிலாளர்களை, எந்தவொரு விசாரணையும் அல்லது மேல் முறையீட்டு உரிமையும் இல்லாமல், வேலை நீக்கம் செய்தது .இந்த தாக்குதல்கள் அனைத்தையும் இ.தொ.கா. ஆதரித்தது, கைது செய்யப்பட வேண்டிய தொழிலாளர்களின் பெயர் பட்டியலை இ.தொ.கா. பொலிசுக்கு கொடுத்ததோடு அவர்களை வேலை நீக்கம் செய்ய கம்பனிகளை அனுமதித்தது.

ஓல்டன் தோட்டத்தில் பொலிஸ் காவல் நிலையத்தை ஸ்தாபிக்க இ.தொ.கா. கொடுத்த ஆதரவு, தோட்டத் தொழிலாளர்கள் மீதான ஜனநாயக-விரோத தாக்குதலில் ஒரு புதிய கட்டத்தைக் குறிக்கிறது. ஓல்டன் தோட்டத்தில், தொழிலாளர் தேசிய சங்கம் (NUW), மலையக மக்கள் முன்னணி (ம.ம.மு.) ஆகிய தொழிற்சங்கங்களும் உறுப்பினர்களை கொண்டுள்ள போதிலும், அவை தற்போதைய அரச ஆத்திரமூட்டலையோ அல்லது முந்தைய போலிக் குற்றசாட்டுகளை மற்றும் பழிவாங்களை எதிர்க்கவில்லை.

ஓல்டன் தோட்ட நிர்வாகமும் ஏனைய தோட்ட முதலாளிகளும், ஓல்டன் முகாமையாளர்களின் வீட்டிற்கு வெளியே வேலை நிறுத்தக்காரர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தைப் பயன்படுத்தி, பெருந்தோட்டங்களில் அடக்குமுறையை முடுக்கிவிட இராஜபக்ஷ அரசாங்கத்தை கேட்டுக்கொண்டனர். மார்ச் 3 அன்று, சுமார் 500 தோட்ட நிர்வாகிகள் தோட்டங்களில் பொலிஸ் 'ரோந்து' கோரி ஹட்டனில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். 'தோட்ட வன்முறையை' சமாளிக்க துப்பாக்கிகள் மற்றும் ஆயுதப் பயிற்சிக்கு அவர்கள் ஆத்திரமூட்டும் வகையில் வேண்டுகோள் விடுத்தனர்.

வெலிஓயா தோட்டத் தொழிலாளர்கள் தனிமைப்படுத்தல் நிவாரணம் கோரி நடத்திய போராட்டம் [Photo credit: K. Kishanthan]

இதற்கு பிரதிபலித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, அரசாங்கம் “தோட்ட நிர்வாகத்திற்கு பாதுகாப்பு வழங்கப்படுவதை உறுதி செய்யும்” என்று பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு உறுதியளித்தார். ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷ தலைமையிலான தேசிய பாதுகாப்பு சபையில் இந்த பிரச்சினை குறித்து கலந்துரையாடப்படும் என்று அவர் உறுதியளித்தார். கடந்த ஏப்ரல் மாதம், ஜனாதிபதி இராஜபக்ஷ, தோட்டத் தொழிலாளர்களின் அதிகரித்து வரும் கோபத்தைத் தணிக்கும் முயற்சியில், 900 ரூபாய் அடிப்படை ஊதியம் மற்றும் 100 ரூபாய் கொடுப்பனவு உள்ளடங்களாக தொழிலாளர்களுக்கு 1,000 ரூபாய் தினசரி ஊதியம் வழங்க தோட்ட உரிமையாகளுக்கு உத்தரவிட்டார். எவ்வாறாயினும், தோட்க் கம்பனிகள் இந்த உத்தரவை எதிர்த்தன, இப்போது தினசரி கொழுந்து பறிக்கும் இலக்குகளை அதிகரித்து வருகின்றன.

உதாரணமாக, ஓல்டன் தோட்டத் தொழிலாளர்கள், கம்பனிகளின் புதிய தினசரி இலக்கான 18 கிலோகிராம் தேயிலைக் கொழுந்தை பறிக்கத் தவறியவர்களுக்கு, அவர்கள் 17 கிலோ பறித்தாலும், 1,000 ரூபாய் தினசரி சம்பளத்தில் அரைவாசியான 500 ரூபாயே வழங்கப்படுகிறது. 18 கிலோவுக்கு அதிகமாக பறித்தால் அதற்கு செலுத்த வேண்டிய கட்டணம் கொடுப்பதில்லை.

ஓல்டன் தோட்டத்தில் லயன் வீடுகள் [WSWS media]

ஒரு ஓல்டன் தோட்ட தொழிலாளி கூறியவாறு, நிர்வாகம் ஓய்வுபெற்ற தொழிலாளர்களை தற்காலிக அடிப்படையில் குறைந்த ஊதியத்தில் வேலைக்கு அமர்த்துகிறது. ஒரு கிலோ பறித்த தேயிலை கொழுந்துக்கு 40 ரூபாய் மட்டுமே செலுத்துகிறது. தினசரி 1,000 ரூபாய் வீதத்தை அடைய, அவர்கள் 25 கிலோ கொழுந்து பறிக்க வேண்டும். இது சாத்தியமற்றது. இ.தொ.கா., தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் ம.ம.மு. ஆகியவற்றின் அனுசரணையுடன் முன்வைக்கப்படும் இந்த கொடூரமான கோரிக்கைகள், தொழிலாளர்களின் எதிர்ப்பு அலைகளைத் தூண்டிவிடுகின்றன.

* கடந்த வாரம், பொகவந்தலாவையிவில் உள்ள கொட்டியாகல தோட்டத்தின் கீழ் மற்றும் நடு பிரிவுகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 300 தொழிலாளர்கள் வேலை நாட்களின் எண்ணிக்கையை குறைப்பதை எதிர்த்து வேலைநிறுத்தம் செய்தனர்.

'நிர்வாகம் எங்களுக்கு வாரத்தில் இரண்டு நாட்களுக்கு, அதாவது ஒரு மாதத்தில் எட்டு நாட்கள் மட்டுமே வேலை தருகிறது' என்று தொழிலாளர்கள் ஊடகங்களுக்கு தெரிவித்தனர். “இந்த ஊதியத்தில் நாம் எவ்வாறு வாழ முடியும் நாளொன்றுக்கு18 கிலோகிராம் கொழுந்தை பறிக்க முகாமையாளர்கள் கட்டாயப்படுத்துகிறார்கள், ஆனால் இந்த இலக்கை அடைவது மிகவும் கடினம். இதைத் தடுக்க தொழிற்சங்கங்கள் எதுவும் செய்யவில்லை, மாறாக, இந்த கோரிக்கைகளை செயல்படுத்த இ.தொ.கா. நிர்வாகத்துடன் கூட்டுச் சேர்ந்துள்ளது.”

* மஸ்கெலியா லங்கா தோட்டத் தொழிலாளர்கள் ஜூன் 16 அன்று கொழுந்து மடுவத்தின் அருகே ஆர்ப்பாட்டம் செய்தனர். வாக்குறுதியளிக்கப்பட்ட ஆயிரம் ரூபாய் ஒரு ஏமாற்று என்ற பாதாகைகளை ஏந்தி, அவர்கள் கோஷங்களை முழங்கினர்.

.* நிர்வாகம் நாளொன்றுக்கு 20 கிலோ கொழுந்து பறிக்க வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்த்தது, மஸ்கெலியா கிளன்டில்ட் தோட்டத்தின் ஐந்து பிரிவுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் கடந்த வாரம் மூன்று நாட்கள் வேலை நிறுத்தம் செய்தனர்,

* திங்களன்று, டிரேடன் தோட்டத்தின் டிடி பிரிவு தொழிலாளர்கள் தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு 20 கிலோ கொழுந்து பறிக்க வேண்டும் என்ற நிர்வாகத்தின் கோரிக்கையை எதிர்த்தனர்.

இந்த சமீபத்திய நடவடிக்கைகள் நாட்டின் பெருந்தோட்ட மாவட்டங்களில் இப்போது வெடிக்கும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் தொழில்துறை போராட்டங்களின் ஒரு பகுதியாகும். 'ஊதிய உயர்வைத் தொடர்ந்து தோட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்படும் அடக்குமுறை பற்றி புகார் கொடுக்க' தொழிலாளர்கள் தனது தொழிற்சங்க அலுவலகத்திற்கு வருவதாக ம.ம.மு. தலைவர் வி. ராதாகிருஷ்ணன் சமீபத்தில் ஊடகங்களிடம் ஒப்புக் கொண்டார்.

இலங்கையின் குறைந்த ஊதியம் பெறும் தோட்டத் தொழிலாளர்கள், சரியான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாது, சமூக இடைவெளி சாத்தியமில்லாத சிறிய லயன் குடியிருப்புகளில் வசிப்பதுடன் இதனால் தோட்டப் பகுதிகளில் வேகமாகப் பரவி வரும் கொவிட் -19 வைரஸால் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.

ஜூன் 9 வரை, நாட்டின் முக்கிய பெருந்தோட்ட மாவட்டமான நுவரெலியாவில் 78 பேர் கொரோனாவால் மரணித்துள்ளதுடன் 3,915 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ள. 5,342 நோய்த்தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். இந்த பாதிக்கப்பட்டவர்களில் பலர் தோட்டத் தொழிலாளர்களாக இருக்கக்கூடிய அதே வேளை எந்த விபரங்களும் வெளியிடப்படவில்லை.

பரிசோதனை விகிதம் மிகக் குறைவாக இருந்தாலும், பொகவந்தலாவையின் ஐந்து தோட்டங்களில் 46 தொற்ற்றாளர்கள் சமீபத்தில் பதிவாகியுள்ளனர். இதில் டின்சின் மற்றும் கிலானி உட்பட ஹட்டனுக்கு அருகிலுள்ள வெலிஓயா தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் சமீபத்தில் வாக்குறுதியளிக்கப்பட்ட, ஆனால் இன்னும் நிலுவையில் உள்ள தனிமைப்படுத்தல் நிவாரணங்களை கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஜூன் 11 அன்று, 50,000 சுகாதார ஊழியர்கள் தேசியரீதியாக ஐந்து மணி நேரம் வேலைநிறுத்தம் செய்தனர். விசேட கொடுப்பனவுகள் மற்றும் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றுநோயிலிருந்து தங்களை காத்துக்கொள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரித்தல் போன்ற கோரிக்கைகளுடன், ஜூன் மாதம் தீவு முழுவதும் நடைபெற்ற இரண்டாவது போராட்டம் இதுவாகும்,

வளர்ந்து வரும் இந்த இயக்கம் குறித்து அச்சமடைந்த ஜனாதிபதி இராஜபக்ஷ, மே 27 மற்றும் ஜூன் 2 ஆகிய திகதிகளில் அனைத்து அரச துறை வேலைநிறுத்தங்களையும் தடை செய்யும் கடுமையான அத்தியாவசிய சேவை உத்தரவுகளை பிறப்பித்தார். கடந்த வெள்ளிக்கிழமை, அரசாங்கம் தபால் சேவைகளையும் இதில் இணைத்தது. இந்த அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு தொழிற்சங்கங்கள் அமைதியாக ஒப்புதல் அளித்துள்ளன.

தொழிற்சங்கங்கல் இருந்து அந்நியப்பட்ட, தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன இயக்கத்தை அபிவிருத்தி செய்வதன் மூலம் மட்டுமே, சோடிக்கப்பட்ட வழக்கினால் ஓல்டன் தோட்டத் தொழிலாளர்கள் வேட்டையாடப்படுவதையும் அரச ஊழியர்கள் மீதான அரசாங்கத்தின் அதிகரித்து வரும் ஜனநாயக-விரோத தாக்குதல்களையும் தோற்கடிக்க முடியும். இதற்கு, ஒரு சோசலிச மற்றும் சர்வதேச முன்னோக்கிற்கான போராட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கைக் குழுக்களையும் சாமான்ய உறுப்பினர்களின் அமைப்புகளையும் கட்டியெழுப்ப வேண்டும்.

பழிவாங்கப்படும் ஓல்டன் தோட்டத் தொழிலாளர்களை நிபந்தனையின்றி விடுவிக்கவும், அனைத்து குற்றச்சாட்டுகளையும் இரத்துச் செய்யவும், வேலை நீக்கம் செய்யப்பட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் மீண்டும் மீண்டும் வேலை கொடுக்க கோரியும், ஓல்டன் தோட்டத் தொழிலாளர் நடவடிக்கைக் குழுவும் சோசலிச சமத்துவக் கட்சியும் ஒரு பாதுகாப்பு பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளன. வேலைத் தளங்களில் தீர்மானங்களை நிறைவேற்றியும், ஆதரவு அறிக்கைகளை அனுப்புவதன் மூலமும் இந்த பிரச்சாரத்தை ஆதரிக்குமாறு, இலங்கை மற்றும் சர்வதேச அளவில் தொழிலாளர்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். உங்கள் தீர்மானங்களையும் ஆதரவு அறிக்கைகளையும் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: wswscmb@sltnet.lk.

Loading