தமிழ் தேசிய மக்கள் முன்னணி இலங்கை ஆட்சியின் பங்காளிகளுடன் ஒத்துழைக்கிறது

இலங்கையின் வடக்கில் இரண்டு உள்ளூராட்சி மன்றங்களின் வரவு-செலவுத் திட்டங்கள் தோற்கடிக்கப்பட்ட பின்னர், தமிழ் தேசியவாதக் கட்சியான தமிழ் தேசிய மக்கள் முன்னணி (TNPF) டிசம்பர் 30 2020 அன்று அந்த சபைகளில் பொறுப்பேற்க அரசாங்க சார்பு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் (EPDP) இணைந்துகொண்டது.

யாழ்ப்பாண நகராட்சி மன்றம் மற்றும் நல்லூர் உள்ளூராட்சி மன்றத்தை நிர்வகிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு (TNA) தனது 2021 வரவு-செலவுத் திட்டங்களின் மீதான வாக்கெடுப்பில் தோற்கடிக்கப்பட்டது. இதன் பின்னர், கடந்த ஆண்டு பொதுத் தேர்தல்களுக்குப் பிறகு கட்சியில் இருந்து நீக்கப்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் மணிவண்ணன், தமிழ் தேசிய மக்கள் முன்னணி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி நகராட்சி அங்கத்தவர்களின் ஆதரவோடும் ஒரு தமிழ் தேசிய கூட்டமைப்பின் (TNA) அங்கத்தவர் நடுநிலைவகித்ததாலும் யாழ்ப்பாண மேயரானார். மேலும் நல்லூரில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அங்கத்தவரான பத்மநாதன் மயூரன் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும் பரவலாக மதிப்பிழந்துள்ள இரண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பின் உள்ளூராட்சி சபைகளை வெளியேற்றுவதற்கு கூட்டணியை உருவாக்கிக்கொண்டன. எவ்வாறாயினும், இது கொழும்பில் உள்ள ஆட்சியின் பிற்போக்குத்தனமான அரசியல் கூட்டாளிகளுடன் தொழிலாள வர்க்கத்தையும் இளைஞர்களையும் கட்டிப்போடும் முயற்சியின் ஒரு பகுதியாக மட்டுமே இருக்கின்றது.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவின் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி (SLPP) அரசாங்கத்தில் அமைச்சராக உள்ளார். ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி முந்தைய பல கொழும்பு அரசாங்கங்களில் ஒரு பங்குதாரர் மட்டுமல்ல, இனவாத போரில் கொழும்பின் நீண்டகால பங்காளியாக மதிப்பிழந்த ஒன்றாகும். இக்கட்சி 1987 முதல் இந்திய, இலங்கை இராணுவங்களின் துணை இராணுவ பிரிவாக செயல்பட்டு வந்துள்ளது.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இந்த கூட்டுழைப்பு இந்த கட்சியின் தேசியவாத அரசியலை அம்பலப்படுத்திய மற்றொரு அரசியல் நிகழ்வு ஆகும். அவரது கட்சியின் இந்த சூழ்ச்சி, ஒரு இராணுவ சர்வாதிகாரத்தை நோக்கி நகரும் ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவின் அரசாங்கத்தை ஆதரிக்கும் சக்திகளை பலப்படுத்தியுள்ளது.

விமர்சனங்களிலிருந்து தப்பிப்பதற்காக, இரு உள்ளூர் அரசாங்கங்களிலும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் மணிவண்ணனுடன் இணைந்த 13 உறுப்பினர்களை கட்சியிலிருந்து வெளியேற்றுவதாக பொன்னம்பலம் இழிந்த முறையில் அறிவித்தார். அவர் ஒரு தனித்த கொள்கையை பின்பற்றுவதாக காட்டிக்கொள்வதற்கு, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியை "அரசாங்கத்தின் ஒட்டுக் குழு" என்று அடிக்கடி கண்டித்தாலும், இதற்கு முன்னர் உள்ளூராட்சி மன்றங்களில் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு EPDP உடன் கூட்டணிகளை முன்மொழிந்ந்துள்ளார்.

மேற்கண்ட நிகழ்வுகள் அனைத்து தமிழ் தேசியவாத முதலாளித்துவக் கட்சிகளின் அரசியல் திவால்நிலைக்கும், அவை மேலும் வலதிற்கு நகர்ந்ததற்கும் மற்றொரு வெளிப்பாடாகும். இந்த நிகழ்வுகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வழிநடத்தும் இலங்கை தமிழ் அரசு கட்சி (ITAK) மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு மாற்றாக காட்டிக்கொள்ளும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகியவற்றின் அரசியலை அம்பலப்படுத்தியுள்ளன.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி, 2010 இல் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்ட அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்காரர்களால் (AITC) உருவாக்கப்பட்டது.

இலங்கை இராணுவம் பல்லாயிரக்கணக்கான தமிழ் பொதுமக்களை படுகொலை செய்து, 2009 மே மாதம் விடுதலைப் புலிகளை நசுக்கிய பின்னர், ஆர். சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கட்சி வேட்பாளர் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளித்து கொழும்பு ஸ்தாபகத்துடன் ஒரு கூட்டணியைக் கோரியது. 2009 ஆம் ஆண்டில் இராஜபக்க்ஷவால் மேற்பார்வையிடப்பட்ட புலிகளுக்கு எதிரான இராணுவத் தாக்குதலுக்கு பொன்சேகா தலைமை தாங்கியிருந்தார்.

2009 ல் வகுப்புவாத படுகொலைகளை மேற்பார்வையிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைக்கும் முயற்சிகளால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் ரீதியாக மதிப்பிழந்துவிடும் என்று அஞ்சிய சக்திகளால் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உருவாக்கப்பட்டது. பொன்னம்பலம் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு தலைமை தாங்கியதுடன், திவாலான தமிழ் தேசியவாதத்தின் உண்மையான பாதுகாவலர்களாக அதை முன்வைக்க முயன்றார். எவ்வாறாயினும், தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கும் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இடையே எந்த அடிப்படை அரசியல் வேறுபாடும் கிடையாது. பிரிவினைவாத விடுதலைப் புலிகளைப் போலவே, இருவரும் ஏகாதிபத்திய சக்திகளுடனும், மிக சக்திவாய்ந்த பிராந்திய சக்தியான இந்தியாவுடனும் ஒரு கூட்டணியை உருவாக்கி, தமிழ் முதலாளித்துவத்தின் நலன்களை பாதுகாத்துக்கொள்ள முயன்றனர்.

2010 இல் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உருவான சிறிது காலத்திலேயே, பொன்னம்பலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஸ்தாபகக் கொள்கைகளைப் பின்பற்றுவதாகக் ஊடகங்களுக்குத் தெரிவித்தார். "தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஸ்தாபகக் கொள்கைகள், சுயநிர்ணய உரிமை, இறையாண்மை மற்றும் தாய்நாடு, ஆகும். …அவற்றை பெற்றுக்கொள்வதற்கு நாம் இந்தியாவுடனும் சர்வதேச சமூகத்துடனும் கைகோர்த்து நட்புடன் செயல்படுகிறோம்" என்று அவர் கூறிய அவர், "சர்வதேச சமூகம் இராஜபக்ஷ அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கின்றது, நாங்கள் அதைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்," என்றார்

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் “ஆசியாவில் முன்னிலை” கொள்கையை ஆதரிப்பதில் தமிழ் தேசியவாத கட்சிகளில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு முன்னணியில் இருந்தது. இது ஜனவரி 2015 ஜனாதிபதித் தேர்தலில் இராஜபக்ஷவை ஆட்சியில் இருந்து வெளியேற்றி, மைத்ரிபால சிறிசேனவை பதவியில் அமர்த்திய அமெரிக்கா தலைமையிலான ஆட்சி மாற்ற நடவடிக்கை வரை நீட்டிக்கப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சீனாவிற்கு எதிரான வாஷிங்டனின் போர் முன்னெடுப்புக்கு உதவுவதற்காக உருவெடுத்த சிறிசேன-விக்ரமசிங்க “நல்லாட்சி” அரசாங்கத்தின் அச்சாணியாக செயல்பட்டது.

எவ்வாறாயினும், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அபிவிருத்திகண்ட வரலாற்று அரசியல் நெருக்கடியால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் ரீதியாக சிதைந்தது. இத்தேர்தல், சிக்கன நடவடிக்கை மற்றும் பொலிஸ்-அரசு கொள்கைகளுக்கு எதிராக சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லீம் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களின் எழுச்சிக்கு மத்தியில் நிகழ்ந்தது. 1947 இன் போலி சுதந்திரத்திற்குப் பின்னர் நாட்டை மாறிமாறி ஆட்சி செய்த சிங்கள முதலாளித்துவத்தின் பாரம்பரியக் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் சிதைந்துபோயின.

இராஜபக்க்ஷ ஜனாதிபதியான பின்னர் இராஜபக்ஷவுடன் சமரசம் செய்ய முயன்ற ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரித்தது. பிரதமர் மஹிந்த இராஜபக்க்ஷவுடன் மீண்டும் மீண்டும் சந்தித்த, தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோவிட்-19 தொற்றுநோய் குறித்த “சமூக நோய் எதிர்ப்பு சக்தியை” பெருக்கும் கொள்கைகளை ஆதரித்தது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியலை சில தந்திரோபாய மாற்றங்களுடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தொடர்கிறது. 2015 தேர்தல்களில், சிறிசேனாவிற்கு வாக்களிப்பதை புறக்கணிக்க வேண்டும் என்று கோரியமை அமெரிக்க புவிசார் அரசியல் மூலோபாயத்தின் காரணமாக அல்ல, மாறாக கொழும்பு ஆட்சியின் எதிரியாக காட்டிக்கொள்ள வேண்டும் என்பதற்காகவாகும். பரந்துபட்ட மக்களிடையே தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேகமாக மதிப்பிழந்து கொண்டிருக்கையில் பொன்னம்பலம் இன்னொரு தேசியவாத பொறியை கட்டமைக்க முயற்சித்தார். அவர் 2019 ஜனாதிபதித் தேர்தலிலும் தேர்தல் புறக்கணிப்புக்கு அழைப்பு விடுத்தார்.

எவ்வாறாயினும், பொன்னம்பலமும் மற்றும் பிற தமிழ் தேசியவாத கட்சிகளும் சீனாவுக்கு எதிரான அமெரிக்கா மற்றும் அதன் தெற்காசிய மூலோபாய பங்காளியான இந்தியாவின் போர் மூலோபாயத்தை பின்தொடர வேண்டுமென வலியுறுத்துகின்றன.

ஆகஸ்ட் பொதுத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கடுமையான பின்னடைவுகளுக்கு, இலங்கை தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் மற்றும் சேனாதிராஜா தலைமையிலான பிரிவுகள் ஒருவரையொருவர் குற்றம் சாட்டியதன் மூலம், இந்த கட்சியின் நெருக்கடி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் பலமாக வெளிப்பட்டுள்ளது. 2015 தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாட்டின் மொத்த வாக்குகளில் 515,963 வாக்குகள் அல்லது 4.62 சதவீத வாக்குகளைப் பெற்றது. ஆனால் அது கடந்த தேர்தலில் 327,168 அல்லது 2.8 சதவீதம் மட்டுமே பெற்றது. 2015 இல் வென்ற இடங்களின் எண்ணிக்கை 2019 இல் 9 ஆகக் குறைந்தது. இதன் கடுமையான பின்னடைவு, தமிழ் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் மத்தியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்பாக அதிகரித்து வரும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.

பாரம்பரியமாக தமிழ் முதலாளித்துவத்தின் பிரதான கட்சியாகக் கருதப்படும் இலங்கை தமிழரசுக் கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்பை வழிநடத்தியுள்ளதுடன், கடந்த சில ஆண்டுகளாக பிரிவடைந்துள்ளது.

கடந்த பாராளுமன்றத் தேர்தலில், முன்னாள் மாகாண சபையின் முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் ஒவ்வொரு இடங்களையும் மட்டுமே வென்றுள்ளதுடன், அவை இன்னும் மக்களிடையே செல்வாக்கற்றவையாக உள்ளன. போரின் போது கொல்லப்பட்டவர்கள், காணாமல் போனவர்கள், அரசியல் கைதிகள் மற்றும் போரினால் ஏற்பட்ட பேரழிவுகள் குறித்து இந்த கட்சிகள் அவ்வப்போது முன்வைக்கும் அறிக்கைகள், அரசாங்கத்திற்கு எதிரான வளர்ந்து வரும் பாரிய கோபத்தைத் தணிக்கும் ஒரு இழிந்த முயற்சி மட்டுமே.

கோவிட்-19 தொற்றுநோய் பரவுவதால் உலகளாவிய முதலாளித்துவத்தின் நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில், நாட்டில் உள்ள தமிழ் மற்றும் சிங்கள முதலாளித்துவ கட்சிகள் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளுக்கு முன்பாக என்றுமில்லாதவாறு அம்பலமாகிக் கொண்டிருக்கின்றன.

தமிழ் தேசியவாதக் கட்சிகள் தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடவில்லை என்பதும், மாறாக கொழும்பில் முதலாளித்துவ ஆட்சியுடன் தமிழ் முதலாளித்துவ நலன்களுக்காக, தீவின் ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்திற்கும் ஏழைகளுக்கும் எதிராக சதி செய்கின்றன என்பதும் மீண்டும் மீண்டும் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. தங்களது சலுகைகளைப் பாதுகாப்பதற்காக, அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் பின்பற்றப்படும் உலகளாவிய போர் மூலோபாயத்தை பாதுகாக்கும் அமைப்புகளாக அவர்கள் தங்களை மாற்றிக்கொண்டுள்ளனர்.

இலங்கையில் கோவிட்-19 வைரஸ் வேகமாகப் பரவியுள்ள சூழலில், தொழிலாளர்களை மீண்டும் வேலைக்குத் தள்ளுவதற்கும், பெருவணிகத்தின் இலாபங்களைப் பாதுகாப்பதற்காக பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கும் அரசாங்கத்தின் நடவடிக்கையை தமிழ் தேசியவாத கட்சிகள் முழுமையாக ஆதரிக்கின்றன.

ஜனாதிபதி இராஜபக்க்ஷ ஆட்சி வளர்ந்து வரும் தொழிலாளர்களின் போராட்டங்களை நசுக்குவதற்கும், தமிழ் எதிர்ப்பு மற்றும் முஸ்லீம் விரோத வன்முறைகளைத் தூண்டுவதற்கும், இராணுவ சர்வாதிகாரத்தை நாடுவதற்குமான அதன் முயற்சிகளை துரிதப்படுத்துகிறது. தொழிலாள வர்க்கத்தை இனவாதரீதியில் பிரிக்க அரசாங்கம் முயல்கிறது. இதேபோல், தமிழ் கட்சிகளின் தேசியவாத பிரச்சாரம் வடக்கு, கிழக்கில் உள்ள தொழிலாளர்களை தெற்கில் உள்ள தங்கள் வர்க்க சகோதரர்களிடமிருந்து பிரிக்க உதவுகிறது.

தமிழ் தொழிலாளர்கள், ஏழைகள் மற்றும் இளைஞர்கள் தமிழ் தேசியவாதத்தையும், தமிழ் தேசியவாதத்தை ஊக்குவிக்கும் முதலாளித்துவக் கட்சிகளையும் நிராகரிக்க வேண்டும். தமிழ் மக்களுக்கு எதிரான இன பாகுபாட்டை ஒழிப்பதும் அவர்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதும் ஏகாதிபத்திய சார்பு முதலாளித்துவ ஆட்சியைத் தூக்கியெறிந்து சோசலிசத்திற்கான போராட்டத்துடன் பிணைந்துள்ளது.

தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு முன் உள்ள வேலைத்திட்டம், தமிழ், சிங்கள மற்றும் முஸ்லீம் தொழிலாளர்களின் சர்வதேச ஐக்கியத்தை உறுதி செய்வதும், தெற்காசியாவிலும் சர்வதேச அளவிலும் சோசலிசத்திற்கான போராட்டத்தின் பாகமாக ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசிற்காக போராடுவதும் ஆகும்.

Loading