முன்னோக்கு

கோவிட்-19 ஐ, "உள்ளூர் தொடர் பரவல் நோய் (Endemic)" என அறிவிப்பதன் மூலம், பைடென் நிர்வாகம் கட்டாய வெகுஜன நோய்த்தொற்று கொள்கையை மேற்பார்வை செய்கிறது

கோவிட்-19 பெருந்தொற்று தொடங்கியதில் இருந்து, அமெரிக்கா தற்போது அதன் ஒன்பதாவது பாரிய தொற்று அலையில் சிக்கித் தவிக்கிறது. மக்கள் இப்போது அதிகாரத்தில் இருப்பவர்களால் முற்றிலுமாக கைவிடப்பட்டுள்ளனர். அனைத்து பொது சுகாதார நடவடிக்கைகளும் அகற்றப்பட்டுள்ளதோடு, கட்டாய நோய்த்தொற்றுக் கொள்கை வெளிப்பட்டுள்ளது. மேலும், மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் முகக்கவசம் அணிவதற்கான மிக அடிப்படையான பாதுகாப்பு நடவடிக்கைகள் குற்றமாக்கப்படுகிறது.

ஒவ்வொரு நாளும் 1.2 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கர்கள் கோவிட்-19 பெருந்தொற்றால் பாதிக்கப்படுவதாக கழிவுநீர் தரவு அறிக்கை காட்டுகிறது. குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மத்தியில் மருத்துவமனையில் சேர்க்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதேவேளையில் உத்தியோகபூர்வ இறப்புக்கள் எண்ணிக்கை வாரத்திற்கு 1,000 ஐ நெருங்கி வருகின்றன. கோவிட்-19 காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகளின் உண்மையான எண்ணிக்கையைக் குறித்த மிகவும் துல்லியமான அளவீடான அதிகப்படியான இறப்பு விகிதம், நாளொன்றுக்கு 500 க்கும் அதிகமாக உள்ளதுடன், அமெரிக்காவில் ஒட்டுமொத்த இறப்பு எண்ணிக்கை 1.5 மில்லியனை நெருங்கி வருகிறது. பெரும்பாலும் பலவீனப்படுத்தும் அறிகுறிகளின் தொகுப்பான நீண்டகால கோவிட் இப்போது 20 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கர்களையும், உலகளவில் 400 மில்லியனுக்கும் அதிகமான மக்களையும் பாதிக்கிறது.

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

கழிவுநீர் மாதிரியாளர் டாக்டர் மைக் ஹோர்ஜரின் (Dr. Mike Hoerger) கூற்றுப்படி, அமெரிக்காவில் மட்டும் 1.1 பில்லியனுக்கும் அதிகமான கோவிட்-19 நோய்த்தொற்றுகள் ஏற்பட்டுள்ளன, சராசரி அமெரிக்கருக்கு மூன்று அல்லது நான்கு முறை தொற்று ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு மறு நோய்த்தொற்றும் நீண்டகால கோவிட் மற்றும் பக்கவாதம் அல்லது மாரடைப்பு போன்ற பிற பாதகமான சுகாதார நிகழ்வுகளின் அபாயத்தை அதிகரிக்கிறது என்பதைக் காட்டும் பல ஆய்வுகளுடன், “என்றென்றும் கோவிட்” கொள்கையின் தற்போதைய பாதை உலகளாவிய அளவில் பெருமளவில் பலவீனமாக்குதல் மற்றும் இறப்பை நோக்கி செல்கிறது.

இந்த நிலைமைகளின் கீழ், ஆகஸ்ட் 23 அன்று, அமெரிக்காவின் முன்னணி பொது சுகாதார நிறுவனங்களின் உயர்மட்ட அதிகாரிகள் ஒரு அசாதாரண பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினர். இந்த சந்திப்பு, பைடென் நிர்வாகத்தின் “என்றென்றும் கோவிட்” குற்றவியல் கொள்கையை மிகவும் வெளிப்படையாக கோடிட்டுக் காட்டுகிறது.

இந்நிகழ்வுக்கு தலைமை கொடுத்தவர் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் (Centers for Disease Control and Prevention - CDC) இயக்குனர் டாக்டர் மாண்டி கோஹன் (Dr. Mandy Cohen) ஆவார். கோவிட்-19 பெருந்தொற்றானது, “உள்ளூர் தொடர் பரவல் நோய் (Endemic - எண்டெமிக்) எனவும் அது இங்கே நம்முடன் உள்ளது” என்றும் அப்பட்டமாக அறிவித்தார். (அதாவது கோவிட் வைரஸ் இப்போது நமது சுற்றுச்சூழலின் நிரந்தர பகுதியாக உள்ளது என்பதையும், மக்களிடையே காலவரையின்றி தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும் என்பதையும் அர்த்தப்படுத்துகிறது). 2021 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஓமிக்ரான் மாறுபாடு தோன்றியதிலிருந்து வைரஸ் எண்டெமிக்காக மாறும் செயல்பாட்டில் உள்ளது என்று டாக்டர் அந்தோனி ஃபாசி, ரோசெல் வலென்ஸ்கி மற்றும் ஆஷிஷ் ஜா ஆகியோர் மீண்டும் மீண்டும் பொய்யாகக் கூறிய பின்னர், ஒரு உயர் பொது சுகாதார அதிகாரி கோவிட்-19 ஐ “ உள்ளூர் தொடர் பரவல் நோய் “ என்று அறிவித்தது இதுவே முதல் முறையாகும்.

ஒரு உள்ளூர் தொடர் பரவல் நோய் (endemic disease) என்பது, சமூகத்தின் அடிப்படை செயல்பாட்டிற்கு இடையூறு விளைவிக்காத, கணிக்கக்கூடிய, பெருமளவில் கட்டுப்படுத்தக்கூடியது. இவற்றில் எதுவுமே கோவிட்-19 க்கு பொருந்தாது. இது, ஏறத்தாழ ஆண்டு முழுவதும் காட்டுத்தீ போல் பரவி வருகிறது, மக்களின் ஆரோக்கியத்திற்கு பரவலான சேதத்தை ஏற்படுத்தி வருகிறது, அத்துடன் ஆண்டுக்கு 1 ட்ரில்லியன் டாலருக்கும் அதிகமான அளவுக்கு ஏராளமான மக்கள் வேலைக்கு வரமுடியாமல் மற்றும் பொருளாதார சீர்குலைவை ஏற்படுத்தி வருகிறது.

கோவிட்-19 ஐ “ உள்ளூர் தொடர் பரவல் நோய் “ என்று கூறிய பின்னர், கோஹன் விரைவாக “நாம், நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அதைச் செய்வதற்கான கருவிகள் நம்மிடம் உள்ளன, நாம் அவற்றைப் பயன்படுத்த வேண்டும்” என்று சேர்த்துக் கொண்டார்,

டாக்டர் மாண்டி கோஹன், ஜூலை 10, 2023 முதல் அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் இயக்குநர் [AP Photo/Bryan Anderson]

உண்மை என்னவென்றால், COVID-19 இன் ஆபத்துகளைத் தணிக்கத் தேவையான பொது சுகாதார “கருவிகள்”, தொற்றுநோயை நிறுத்துவது ஒருபுறம் இருக்க, இவை முழு அரசியல் ஸ்தாபனத்தாலும் திட்டமிட்டு முறையாக களங்கப்படுத்தப்பட்டு, மேலும் குற்றகரமாகவும் கூட ஆக்கப்பட்டுள்ளன. வோல் ஸ்ட்ரீட் மற்றும் அமெரிக்க பெருநிறுவனங்களின் இலாப நலன்களுக்கு கடமைப்பட்டுள்ள முதலாளித்துவ அரசு, அனைத்து தொற்றுநோய் கண்காணிப்பையும் தகர்த்து, மக்களை அவர்களே தற்காத்துக் கொள்ள விட்டுள்ளது. விழிப்புடன் இருப்பவர்கள் மற்றும் தொற்றுநோயைத் தவிர்க்க விரும்புபவர்கள் அதிகரித்தளவில் தனிமைப்படுத்தப்படுகிறார்கள் மற்றும் வைரஸ் பரவலாகவும் வேகமாகவும் பரவுவதால் அவர்கள் தங்களைப் தாங்களே பாதுகாத்துக் கொள்ள முடியவில்லை.

ஒரு பத்திரிகையாளர் சந்திப்பின் போது, பைடென் நிர்வாகத்தால் வலியுறுத்தப்பட்ட ஒரே “கருவி” என்பது தற்போது வெளியிடப்பட்டு வரும் KP.2 மாறுபாட்டிற்காக வடிவமைக்கப்பட்ட புதிய தடுப்பூசிகள் என்பது தெளிவாகத் தெரிந்தது. KP.3.1.1 மாறுபாடு இப்போது ஆதிக்கம் செலுத்துகிறது, KP.2 மாறுபாடு தேசிய அளவில் பாதிக்கப்பட்டவர்களில் வெறும் 3.2 மட்டுமே ஆகும். மேலும், தற்போதைய தொற்று அலை உச்சத்தில் இருப்பதாகத் தெரிகிறது என்பதைக் கருத்தில் கொண்டு, இந்த தடுப்பூசிகள் மிகக் குறைவாக உள்ளன, மிகவும் தாமதமானவை என்ற உண்மையை அங்கிருந்த அதிகாரிகள் மூடிமறைத்தனர்.

மேலும், பத்திரிகையாளர் சந்திப்பின் போது, சமீபத்திய தடுப்பூசிகள் அனைவருக்கும் உத்தரவாதம் அளிக்கப்படாது என்பது தெளிவாகியது, காப்பீடு இல்லாத அமெரிக்கர்கள் (26 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்) தங்கள் உள்ளூர் அல்லது மாவட்ட பொது சுகாதார அதிகாரத்துவத்துடன் செயல்பட முயற்சிக்க வேண்டும் அல்லது தடுப்பூசிக்கு 120 டாலருக்கு மேல் செலுத்த வேண்டும் என்று கோஹன் கூறினார். தடுப்பூசி எடுத்துக்கொள்வது மிகவும் குறைவாக உள்ளது என்ற உண்மையை எந்தவொரு பேச்சாளரும் தீவிரமாக குறிப்பிடவில்லை. இது, இருகட்சிகளின் தடுப்பூசி எதிர்ப்பு, தவறான தகவல்கள் மற்றும் தொற்றுநோயை முடிந்துவிட்டது என்று சித்தரிக்கும் பிரச்சாரத்தின் விளைபொருளாகும்.

நன்கு பொருத்தப்பட்ட N95 சுவாசக் கருவிகள் கோவிட்-19 மற்றும் பிற காற்றில் பரவும் அனைத்து நோய்க்கிருமிகளின் பரவலையும் தடுக்க முடியும் என்பதை பல ஆய்வுகள் நிரூபித்துள்ளன என்ற உண்மைக்கு இடையிலும், பத்திரிகையாளர் சந்திப்பின் போது ஒருமுறை கூட “முகக்கவசம்” என்ற வார்த்தையை அவர் குறிப்பிடப்படவில்லை.

உண்மையில், CDC பத்திரிகையாளர் சந்திப்புக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு, இந்த மாத தொடக்கத்தில் மாவட்ட அளவிலான முகக்கவசம் தடை விதிக்கப்பட்ட பின்னர், நியூயோர்க்கின் நாசாவ் மாவட்டத்தில் பனிச்சறுக்கு முகக் கவசம் அணிந்ததற்காக 18 வயது இளைஞரை போலீசார் கைது செய்தனர். முகக்கவசம் அணிந்ததற்காக கைது செய்யப்பட்டவர்களுக்கு 1,000 டாலர் வரை அபராதம், ஓராண்டு வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். இதேபோன்ற தடை தற்போது வட கரோலினாவிலும் நடைமுறையில் உள்ளது, அதே நேரத்தில் லொஸ் ஏஞ்சல்ஸ் போன்ற நகரங்கள் ஏற்கனவே அத்தகைய தடைகளை பரிசீலித்து வருகின்றன.

சராசரி அமெரிக்கர்கள் அணுகுவதற்கு பெருகிய முறையில் கிடைக்காத அல்லது சாத்தியமில்லாத மற்றொரு “கருவி” கோவிட்-19 க்கான ஒரே பயனுள்ள சிகிச்சைகளில் ஒன்றான பாக்ஸ்லோவிட் (Paxlovid) ஆகும். தனது கருத்துக்களில், சுகாதார மற்றும் மனித சேவைகள் துறை (Department of Health and Human Services  - HHS) அதிகாரி டான் ஓ’கோனெல், 2025 ஆம் ஆண்டு தொடங்கி ஃபைசர் (Pfizer) பாக்ஸ்லோவிட் விநியோகத்தை முழுவதுமாக கட்டுப்படுத்தும் என்று குறிப்பிட்டார். இந்த மருந்து தயாரிப்பு நிறுவனமானது சந்தேகத்திற்கு இடமின்றி மருந்துக்கான முழு விலையையும் வசூலிக்கும். இது, 1,500 டாலர்களுக்கும் அதிகமாக செலவாகும்.

கோவிட்-19 உடன் மீண்டும் தொற்று ஏற்படுவதற்கான அபாயங்கள் குறித்த சமீபத்திய அறிவியலைப் பற்றி ஒரு நிருபர் கேட்டபோது, கோஹன் ஆபத்துகளைக் குறைத்து மதிப்பிட்டு, பைடென் நிர்வாகத்தின் தடுப்பூசி மட்டுமே என்ற மூலோபாயத்தை மீண்டும் வலியுறுத்தினார். தொற்றுநோய் பரவுவதைத் தடுக்க முகக் கவசங்களை அணிய வேண்டியதன் அவசியம் குறித்து அவர் எதுவும் கூறவில்லை. உண்மை என்னவென்றால், ஒவ்வொரு மறு நோய்த்தொற்றும் நீண்ட கோவிட் உருவாகும் அபாயத்தை அதிகரிக்கிறது என்று பல ஆய்வுகள் எடுத்துக் காட்டுகின்றன, இது தடுப்பூசி மூலம் சற்று குறைக்கப்படுகிறது.

சமீபத்திய பாரிய தொற்றுநோய் அலைக்கு பைடென் நிர்வாகத்தின் விடையிறுப்பானது, அறிவியல் மற்றும் பொது சுகாதாரத்தில் பல நூற்றாண்டுகளாக ஏற்பட்ட முன்னேற்றங்கள் மிதிக்கப்பட்டு கைவிடப்பட்ட நிலையில், முதலாளித்துவம் காட்டுமிராண்டித்தனத்திற்குள் இறங்கி வருகிறது என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. தடுக்கக்கூடிய நோயுடன் கூடிய பாரிய தொற்று இனி தடுக்கப்பட வேண்டியதில்லை, மாறாக ஊக்குவிக்கப்படுகிறது.

ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் இந்த மரணக் கொள்கைக்கு முக்கிய குற்றவாளிகள் என்றால், அவர்களுடன் பசுமைக் கட்சியின் ஜில் ஸ்டீன், மற்றும் சுயேச்சை வேட்பாளர் கார்னல் வெஸ்ட் போன்ற போலி-இடதுகளின் ஜனாதிபதி பிரச்சாரங்களும் இணைந்துள்ளன. இருவரும் ரொபர்ட் எஃப். கென்னடியால் வளர்க்கப்பட்ட அதிதீவிர வலதுசாரிகளின் தடுப்பூசி எதிர்ப்பு பிரச்சாரத்துக்கு ஏற்ப தங்கள் சொல்லாட்சியை வடிவமைத்துள்ளனர். ரொபர்ட் எஃப். கென்னடியே “ சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்க (herd immunity)” முன்னோடியான டொனால்ட் ட்ரம்பை ஆதரித்துள்ளார்.

பொது சுகாதாரம் மற்றும் அறிவியலுக்காக போராடும் ஒரே அரசியல் கட்சி, சோசலிச சமத்துவக் கட்சியும் அதன் ஜனாதிபதி வேட்பாளர்களான ஜோசப் கிஷோர் மற்றும் ஜெர்ரி வைட்டும் ஆவர். அவர்களின் தேர்தல் பிரச்சாரம் முழுவதிலும், கோவிட்-19 மற்றும் பிற நோய்க்கிருமிகளை நோக்கிய உலகளாவிய ஒழிப்பு மூலோபாயத்தின் நம்பகத்தன்மை மற்றும் அவசியம் உட்பட, தொற்றுநோய் குறித்த விஞ்ஞானம் குறித்து தொழிலாளர்களுக்கு அவர்கள் கல்வியூட்டி வருகின்றனர்.

மேலும் அவர்கள், நீண்ட கால கோவிட் மற்றும் அடுத்த தலைமுறை தடுப்பூசிகள் பற்றிய ஆராய்ச்சிக்கு நிதியளிப்பதற்கு ஏராளமான வளங்களை உட்செலுத்த வேண்டும் என்றும், சுத்தமான உட்புறக் காற்றை அணுகுவதை உறுதி செய்வதற்காக அனைத்து பொது இடங்களையும் புதுப்பித்தலுக்கு, பிரமாண்டமான இராணுவ வரவு செலவுத் திட்டம் மற்றும் நிதிய தன்னலக்குழுவின் செல்வம் ஆகியவற்றிலிருந்து செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

உடலின் ஒவ்வொரு உறுப்பையும் சேதப்படுத்துவதாக அறியப்படும் ஒரு வைரஸ் ஒட்டுமொத்த உலக மக்கள் தொகையிலும் நிரந்தர மறுதொற்று நோய்களைக் கட்டவிழ்த்து விட சுதந்திரமாக அனுமதிக்கப்படும் “என்றென்றும் கோவிட்” கொள்கை நிலையானதல்ல. கோவிட்-19 ஒரு “ உள்ளூர் தொடர் பரவல் நோய்” என்று மாற்றுவது குறித்த எந்தவொரு வாய்வீச்சும் பெருந்திரளான தொழிலாளர்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு வீழ்ச்சியடைந்து வரும் புறநிலை யதார்த்தத்தை மறைக்கப் போவதில்லை.

இப்போது அதிகரித்து வரும் அணுஆயுதப் போர் மற்றும் பாசிசவாத சர்வாதிகாரத்துடன் சேர்த்து சர்வதேச தொழிலாள வர்க்கம் முகங்கொடுக்கும் தற்போதைய சுகாதார அபாயங்கள் குறித்து அதற்கு கல்வியூட்டுவதும், மற்றும் இந்த துயரங்களின் தோற்றுவாயான முதலாளித்துவ இலாபகர அமைப்புமுறைக்கு முடிவுகட்ட ஒரு புரட்சிகர சோசலிச இயக்கத்தைக் கட்டியெழுப்புவதும் இன்றியமையாத பணியாகும்.

Loading