மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
சர்வதேச அக்கறையின் பொது சுகாதார அவசரநிலை (PHEIC) உலக சுகாதார அமைப்பின் அறிவிப்பானது, முதலாளித்துவத்தின் கீழ் பொது சுகாதார சேவைகளை திட்டமிட்டு அழிக்கப்பட்டதன் விளைவாக, உலக மக்கள் எதிர்கொள்ளும் ஆபத்துக்களை, குரங்கு அம்மை நோயின் ( (MPOX)) மிகவும் ஆபத்தான மாறுபாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
உலகெங்கிலும் தொற்று விகிதங்கள் அதிகரித்துள்ள ஒன்பதாவது கோவிட் -19 அலைக்கு மத்தியில், குரங்கு அம்மை நோயின் அவசரநிலை வந்துள்ளது. அதே நேரத்தில் வேகமாக வளர்ந்து வரும் H5N1 பறவை காய்ச்சல் வைரஸ் பொது மக்களை அச்சுறுத்தி வருகிறது.
உலகின் பல பகுதிகளில் போலியோ, கொலரா, டெங்கு, தட்டம்மை மற்றும் ஏனைய நோய்கள் பரவி வருகின்ற நிலையில், இன்னுமொரு கொடிய வைரஸால் முன்னிறுத்தப்படும் அச்சுறுத்தல் குறித்து, பிரதான முதலாளித்துவ நாடுகளின் தலைவர்கள் ஒரு வார்த்தையைக் கூட உச்சரிக்கவில்லை.
அமெரிக்கத் தேர்தல்களில், ஜனநாயகக் கட்சியின் கமலா ஹாரிஸோ அல்லது குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்போ குரங்கு அம்மை நோய் தொடர்பாக அவசரகால அறிவிப்பு மற்றும் அதன் தாக்கங்கள் குறித்து ஒரு வார்த்தையைக் கூட கூறவில்லை. இந்த இருவரும், சீனாவை அரக்கத்தனமாக சித்தரிக்கும் முயற்சிகளில் ஒரு ஆயுதமாக்குவதை தவிர, கோவிட்-19 ஐ கடந்த காலத்தின் ஒரு விஷயமாக கருதுகின்றனர்.
இதற்கிடையில், கொங்கோ ஜனநாயகக் குடியரசின் கிழக்குப் பகுதியில் வெடித்துள்ள குரங்கு அம்மை நோயை ஒழிப்பதற்காக, பயிற்சி பெற்ற பணியாளர்கள் மற்றும் மருந்துப் பொருட்களை இப் பகுதிக்கு கொண்டு வருவதற்கும், மிகக் கடுமையான தேவைகளை நிவர்த்தி செய்வதற்கும், அற்பமான 15 மில்லியன் டாலர் நிதியை உலக சுகாதார அமைப்பு இன்னும் பெறவில்லை.
நான்கு ஆண்டுகளில் இது மூன்றாவது சர்வதேச அக்கறையின் பொது சுகாதார அவசரநிலை (PHEIC) ஆகும். உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் ஜனவரி 30, 2020 அன்று COVID-19 அவசரநிலையை அறிவித்தார். இரண்டாவது ஜூலை 2022 இல் நடந்தது, கோவிட்-19 க்கு எதிரான அனைத்து சமூக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் முழுமையாக நீக்கியதன் மூலம் அந்த ஆண்டு மே மாதம் தொடங்கிய வைரஸின் குறைவான கொடிய விகாரத்துடன் பல நாடுகளில் குரங்கு அம்மை நோயின் பரவல் ஏற்பட்டது. COVID-19 மற்றும் குரங்கு அம்மை நோயின் கிளேட் 2b க்கான அவசரகால அறிவிப்புகள் மே 2023 இல் தொடர்ச்சியான நோய்த்தொற்றுகள் மற்றும் பொது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருந்தபோதிலும் முன்கூட்டியே நீக்கப்பட்டன.
முதல் குரங்கு அம்மை நோய்ப்பரவல் 116 நாடுகளில் 100,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டது. சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி 208 இறப்புகள் இதுவரை பதிவாகியுள்ளன. ஆனால், கொங்கோ ஜனநாயகக் குடியரசுக்கு வெளியே ஆபிரிக்காவின் அண்டை நாடுகளுக்கும், கண்டத்திற்கு வெளியே உள்ள பயணிகள் மூலமும் பரவியுள்ள குரங்கு அம்மை நோயின் மிகவும் கடுமையான விகாரம் மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும்.
குரங்கு அம்மை நோயின் வைரஸ் நேரடி மற்றும் நெருங்கிய தொடர்புகள் மூலம் மட்டுமே பரவுகிறது என்று சுகாதார அதிகாரிகள் மீண்டும் மீண்டும் கூறியிருந்தாலும், ஐரோப்பிய மற்றும் அமெரிக்க CDC (நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள்) யின் பரிந்துரைகள் சுவாச முன்னெச்சரிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும், குரங்கு அம்மை நோய்க்கு எதிராக தடுப்பூசி போடப்பட்ட சுகாதாரப் பணியாளர்கள் மட்டுமே நோயாளிகளைக் கவனிக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளன. இந்த குறிப்பிட்ட நோய் திரிபு காற்றின் மூலம் பரவும் திறன் கொண்டதா அல்லது அவ்வாறு மாற முடியுமா என்பது வெளிப்படுத்தப்பட வேண்டும் மற்றும் பொருத்தமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடிந்தவரை உறுதியான முறையில் எடுக்கப்பட வேண்டும்.
அதிக வீரியமான குரங்கு அம்மை நோய் திரிபுக்கான பொது சுகாதார அமைப்பின் விடையிறுப்பு, கொரோனா வைரஸ் மற்றும் முந்தைய, குரங்கு அம்மை நோய் வெடித்ததைப் போன்ற அதே சிக்கலான வடிவத்தைக் காட்டுகிறது: மோசமடைந்து வரும் நிலைமை தொடர்பான அறிக்கைகள், உடனடியாக ஆபத்தில் உள்ள உள்ளூர் மக்களுக்கும் மற்றும் உலக மக்களுக்கும் இந்த நோய்க்கிருமிகளால் ஏற்படும் ஆபத்துகள் குறித்த தொடர்ச்சியான செயலற்ற தன்மை மற்றும் எதுவும் நடக்கட்டும் என்ற மனோபாவத்தை காட்டுகிறது.
2022 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து, 1,451 இறப்புகளுடன் குரங்கு அம்மை நோய் clade 1b இன் உறுதிப்படுத்தப்பட்ட மற்றும் சந்தேகிக்கப்படும் 37,583 சம்பவங்களை சுகாதார அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர். இது ஆப்பிரிக்க ஒன்றியத்தின் 15 உறுப்பு நாடுகளில் 3.9 சதவீத இறப்பு விகிதத்தைக் குறிக்கிறது. இது 2020 இல் முதன்முதலில் மேற்கோள் காட்டப்பட்ட COVID-19 ஆய்வில் உலகளவில் காணப்படும் 2-3 சதவீத இறப்பு விகிதத்தை விட அதிகமாகும். 2021 இல் ஒரு புதிய மதிப்பாய்வு இந்த எண்ணிக்கையை முழு மக்கள்தொகைக்கும் 1 சதவீதமாக ஆக இருந்தது. எனவே, குரங்கு அம்மை நோய் கோவிட்-19 ஐ விட மூன்று அல்லது நான்கு மடங்கு ஆபத்தானதாகும்.
கோவிட்-19 போலல்லாமல், வயதான நோயாளிகளிடையே இறப்பு குறியீடு அதிகமாக உள்ளது. குரங்கு அம்மை நோயின் தற்போதைய வீரியமான திரிபு இதற்கு நேர்மாறான உண்மையாகும். உலக சுகாதார அமைப்பின் தரவுகள் காட்டுவது போல, பெரியவர்களை விட குழந்தைகள் வைரஸால் இறப்பதற்கு கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிக வாய்ப்புள்ளது. இறப்பு விகிதம் பெரியவர்களுக்கு 2.4 சதவீதமாக இருந்தாலும், இது 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களிடையே 8.6 சதவீதமாக உயர்கிறது. 2024 ஆம் ஆண்டில் பதிவான குரங்கு அம்மை நோய் இறப்புகளில், 62 சதவீதம் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே இருந்தது.
நோய்த்தொற்று ஏற்பட்டவுடன், அறிகுறிகள் தோன்றுவதற்கு 2 முதல் 3 வாரங்கள் வரை அதிகரிக்கும் காலம் உள்ளது, இதன் போது நோயாளிகள் காய்ச்சல், வலி, சோர்வு மற்றும் வீங்கிய நிணநீர் கணுக்கள் முனையங்களை அனுபவிக்கின்றனர். பின்னர் சில நாட்களுக்குப் பிறகு, சிறப்பியல்பு சொறி உருவாகிறது. கூடுதலாக, உறுதிப்படுத்தப்பட்ட அல்லது சந்தேகிக்கப்படும் தொற்று அல்லது வெளிப்பாடு உள்ள நோயாளிகள் குறைந்தபட்சம் நான்கு முதல் எட்டு வாரங்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும். அவர்களின் அறிகுறிகளைப் பொறுத்து, அவர்களுக்கு மருத்துவ நிபுணர்களால் நிலையான மதிப்பீடு மற்றும் கண்காணிப்பு தேவைப்படுகிறது.
கொங்கோ ஜனநாயகக் குடியரசின் கிழக்குப் பகுதியில் போரால் பாதிக்கப்பட்ட பிராந்தியத்தில், வடக்கு கிவுவின் தலைநகரான கோமாவில், 2 மில்லியன் அகதிகள் மற்றும் உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்கள், கிளர்ச்சி ஆயுதக் குழுக்களிடமிருந்து பாதுகாப்பைத் தேடுவதால், குரங்கு அம்மை நோய் வைரஸ் அவர்களுக்கு பரவுவதற்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. மேலும் இவை, தற்காலிக முகாம்களிலுள்ள மக்களை பாதிக்கின்றன. சுகாதார நிலையங்கள் நோயாளிகளால் இயல்பான அளவைத் தாண்டி நிரம்பி வழிகின்றன.
ஒரு தொற்றுநோயியல் மற்றும் குரங்கு அம்மை நோயின் நிபுணர் ஒருவர், Save the Children என்ற அமைப்பினரிடம், பின்வருமாறு கூறினார்.
நான் பார்த்த மிக மோசமான நிலை என்னவென்றால், ஆறு வாரக் குழந்தை, குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டு இரண்டு வாரங்களே ஆகிறது, இப்போது நான்கு வாரங்களாக எங்கள் பராமரிப்பில் உள்ளது. மருத்துவமனை நெரிசல் காரணமாக, அவரும் அவரது தாயாரும் அந்த நேரத்தில் கண்டறியப்படாத வைரஸ் தொற்றுக்குள்ளான வேறொருவருடன் ஒரு அறையைப் பகிர்ந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருந்ததால் அவர் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அவரது உடல் முழுவதும் தடிப்புகள் இருந்தன, அவரது தோல் கறுக்கத் தொடங்கியது, அவருக்கு கடுமையான காய்ச்சல் இருந்தது. அவரது நிலையைக் கண்டு அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர், அவர் இறந்துவிடுவார் என்று பயந்தனர்.
2023 ஆம் ஆண்டு முழுவதும், ஆப்பிரிக்க நாடுகளில் கிட்டத்தட்ட 15,000 குரங்கு அம்மை நோய் பாதிப்புக்கள் பதிவாகியுள்ளன, இது 2022 உடன் ஒப்பிடும்போது 78.5 சதவீத அதிகரிப்பாகும். 2024 ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில், சுகாதார அதிகாரிகள் 14,250 நோயாளிகளை அடையாளம் கண்டுள்ளனர். இது முந்தைய ஆண்டு முழுவதையும் விட கிட்டத்தட்ட அதிகமாகும். மேலும் இது 2023 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் 160 சதவீத அதிகரிப்பைக் குறிக்கிறது. இறப்புகளின் எண்ணிக்கை 456 ஆகும். இது, கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை விட 19 சதவீதம் அதிகமாகும். இதுவரையான இறப்புகளில் 96 சதவீதம் கொங்கோ ஜனநாயகக் குடியரசில் நிகழ்ந்துள்ளன.
சர்வதேச அக்கறையின் பொது சுகாதார அவசரநிலை அறிவிப்புக்கு ஒரு நாள் கழித்து ஸ்டொக்ஹோமில் சிகிச்சை பெற வந்த ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் கிளேட் 1b இருப்பது கடந்த வாரம் உறுதியானது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அதே காட்சியை இது நினைவூட்டுகிறது, உலகின் ஒவ்வொரு மூலையிலும் குரங்கு அம்மை நோய் விரைவில் பரவுவதற்கு முன்பு, பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் மிகக் குறைவாக இருந்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டபோது, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளிப்பட்ட அதே காட்சியை இது நினைவூட்டுகிறது. ஐரோப்பிய நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் ஆபத்தான நோய் திரிபுடன் அதிகமான வகைகளை எதிர்பார்க்கிறோம் என்று கூறியிருந்தாலும், ஒட்டுமொத்த ஆபத்து குறைவாகவே உள்ளது என்று அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இது செயலற்ற, காத்திருந்து பார்க்கும் அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதைக் காட்டிலும் நோயைத் தடுப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் ஒரு அடிப்படைக் கொள்கையான பொது சுகாதாரத்தில் முன்னெச்சரிக்கை கொள்கையை இது முற்றிலும் தலைகீழாக மாற்றுகிறது.
முதலாளித்துவத்தின் கீழ், பொது சுகாதாரக் கொள்கையின் உந்து சக்தி உயிர்களைக் காப்பாற்றுவதோ அல்லது பலவீனப்படுத்தும் நோய்களைத் தடுப்பதோ அல்ல, மாறாக முதலாளித்துவ இலாபங்களை ஈட்டுவதில் ஏற்படும் தாக்கத்தைக் குறைப்பதாகும். இது இன்னும் பொங்கி வரும் கொரோனா வைரஸ் தொற்றுநோயில் பேரழிவுகரமான விளைவுகளை உருவாக்கியுள்ளது: ஒவ்வொரு ஆண்டும் பத்து மில்லியன் கணக்கானவர்களின் இறப்புகள், நூறு மில்லியன் கணக்கானவர்கள் சார்ஸ்-கொரோனா வைரஸ்-2 ஆல் பாதிக்கப்பட்டு மீண்டும் நோய்த்தொற்றுக்கு ஆளாகின்றனர். மேலும், இதயம் மற்றும் சுவாசக் கோளாறுகள் இணைந்த அளவுக்கு பொதுவானதாகவிட்ட ஒரு பாரிய முடக்கும் நோயாக நீண்ட கோவிட் உருவாகியுள்ளது. 2023 ஆம் ஆண்டின் இறுதியில் வெளிவந்த கணிப்புகள் நீண்ட கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கையை 410 மில்லியன் மக்கள் எனக் குறிப்பிடுகின்றன.
நீண்ட கோவிட்டின் பாதிப்பை தொடர்ந்து எதிர்கொண்டுவரும் தொழிலாள வர்க்க மக்களின் தலைமுறைகளில், நீண்டகால விளைவுகள் தெரியவில்லை. ஆனால், ஆரம்ப அறிகுறிகள் விஷயங்கள் தொடர்ந்து மோசமடையக்கூடும் என்று தெரிவிக்கின்றன. சுவாசக் கோளாறு, இதயம் மற்றும் நரம்பியல் சீர்குலைவுகள், முதியவர்கள் அல்லது நோயெதிர்ப்பு குறைபாடுள்ளவர்களுக்கு மட்டுமல்ல, இளம் நோயாளிகள் மற்றும் அறிகுறியற்ற நோய்த்தொற்றுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் கூட தொற்றுக்களுக்கான வாய்ப்பு உள்ளது.
கோவிட்-19 ஐ விட கொடிய புதிய நோய்களின் தோற்றம் (இதுவரை, அதிர்ஷ்டவசமாக, குறைவாகவே பரவக்கூடியது என்றாலும்) 2020 இன் தொடக்கத்தில் கோவிட்-19 தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து உலக சோசலிச வலைத் தளமும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் விடுத்து வந்த எச்சரிக்கைகளை மட்டுமே அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழு அதன் புத்தாண்டு அறிக்கையில் எச்சரித்தது போல்:
பெருந்தொற்று நோயைத் தடுப்பதற்கான ஒரே வழி, உலகளாவிய ஒருங்கிணைக்கப்பட்ட ஒழித்தல் மூலோபாயத்தை செயல்படுத்துவதாகும். இதில் ஒட்டுமொத்த உலக மக்களும் ஒற்றுமையுடனும் கூட்டு உறுதியுடனும் பொது சுகாதாரத் திட்டத்தை பெரிய அளவில் செயல்படுத்த வேண்டும்.
பெருந்தொற்று நோயின் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, அத்தகைய ஒரு உலகளாவிய மூலோபாயம் உலக முதலாளித்துவத்தின் கீழ் ஒருபோதும் சாத்தியமில்லை என்பது தெளிவாகிறது. இது அனைத்து பொது சுகாதார செலவினங்களையும் ஒரு பண வெறி கொண்ட நிதியத் தன்னலக்குழுவின் தணியாத இலாப நலன்களுக்கு அடிபணிய வைக்கிறது.… உலக சோசலிசப் புரட்சியின் மூலம் மட்டுமே பெருந்தொற்று நோயை முடிவுக்குக் கொண்டுவர முடியும், அத்துடன் முதலாளித்துவமானது, காட்டுமிராண்டித்தனத்திலும் மூன்றாம் உலகப் போரிலும் மேலும் இறங்குவதைத் தடுக்க முடியும்.