இலங்கையின் புதிய ஜனாதிபதிக்கு பைடன் வாழ்த்து தெரிவித்துள்ளார்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், வியாழன் அன்று வெளியிடப்பட்ட X/ட்விட்டர் செய்தியில், இலங்கையின் புதிய ஜனாதிபதியும் மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) / தேசிய மக்கள் சக்தியின் (தே.ம.ச.) தலைவருமான அனுரகுமார திசாநாயக்கவிற்கு வாழ்த்து தெரிவித்தார்: 'இந்தோ-பசிபிக் பகுதியில் சமாதானம், பாதுகாப்பு மற்றும் செழிப்பை மேம்படுத்துவதில் நான் உங்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன்,” என அவர் பிரகடனம் செய்தார்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க [Photo: AP/Evan Vucci/Facebook Sri Lanka President's Media Division]

பைடனின் கருத்துக்கும் சமாதானம், பாதுகாப்பு அல்லது செழிப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை. சீனாவிற்கு எதிராக ஆசியா முழுவதும் அமெரிக்கத் தலைமையிலான ஆக்கிரோஷமான மோதல் மற்றும் போர் உந்துதலால் இவற்றுக்கு விரைவாகக் குழிபறிக்கப்படுகிறது. மாறாக இது, கொழும்பில் உள்ள புதிய அரசாங்கம் பென்டகனின் போர் திட்டங்களுடன்வ இலங்கையின் ஒருங்கிணைவை தொடர வேண்டும் என்ற பிரகடனமே ஆகும்.

குறிப்பிடத்தக்க வகையில் ஜே.வி.பி./தே.ம.ச. தலைவர் உடனடியாக, பைடனின் 'இனிமையான நல் வாழ்த்துக்களுக்கு' நன்றி கூறினார்: 'எனது தலைமையின் கீழ் இலங்கை நமது நீண்டகால நட்புறவுகளை வலுப்படுத்துவதற்காக அமெரிக்காவுடன் நெருக்கமாக பணியாற்றும். அமைதியான, பாதுகாப்பான மற்றும் வளமான இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான எனது அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை நான் மீண்டும் வலியுறுத்துகிறேன்.” என திசாநாயக்க அறிவித்தார்.

கொழும்பில் தொடர்ந்து ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள், குறிப்பாக அவருக்கு முன்பிருந்த நன்கு அறியப்பட்ட அமெரிக்க கைக்கூலியான ரணில் விக்கிரமசிங்கவினால் அபிவிருத்தி செய்யப்பட்ட அமெரிக்காவுடனான நெருக்கமான இராணுவ உறவுகளைத் தொடர்வதாகவே திசாநாயக்க உறுதியளித்துள்ளார்.

இலங்கை ஏற்கனவே அமெரிக்காவுடன் இரண்டு இராணுவ உடன்படிக்கைகளை கொண்டுள்ளது. அதில் ஒன்று கையகப்படுத்தல் மற்றும் குறுக்கு சேவை ஒப்பந்தம் (ACSA) ஆகும். மற்றையது படைகள் நிலைகொள்ளல் ஒப்பந்தம் (SOFA) ஆகும். இவை முறையே, கடல் மற்றும் விமான நிலையங்கள் உட்பட நாட்டின் வசதிகளை அமெரிக்க இராணுவப் பிரசன்னத்திற்கு அனுமதிப்பதும் அமெரிக்க இராணுவ சிப்பாய்கள் தங்கியிருப்பதற்கு அனுமதிப்பதும் ஆகும். SOFA உடன்படிக்கையை மேம்படுத்துவதற்கு அமெரிக்கா இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கிறது.

காஸ்ட்றோவாதம், மாவோவாதம்வ மற்றும் சிங்கள ஜனரஞ்சகவாதத்தின் கலவையில் ஸ்தாபிக்கப்பட்ட ஜே.வி.பி., நீண்ட காலத்திற்கு முன்பே 'ஆயுதப் போராட்டத்தையும்', அதன் ஏகாதிபத்திய-விரோத வாய்வீச்சையும் கைவிட்டு, கொழும்பு அரசியல் ஸ்தாபனத்தில் தன்னை இணைத்துக் கொண்டது.

கடந்த இரண்டு வருடங்களாக, திசாநாயக்கவும் ஜே.வி.பி./தே.ம.ச. தலைவர்களும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்குடன் பேச்சுவார்த்தைகளை நீட்டித்துள்ளனர். ஜே.வி.பி./தே.ம.ச. இந்த கலந்துரையாடல்கள் குறித்து மௌனம் காத்தாலும், எதிர்கால ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்தின் மீது தனது நம்பிக்கையை வெளிப்படுத்திய சங், இது பொதுமக்கள் மத்தியில் எதிரொலிக்கும் 'ஒரு குறிப்பிடத்தக்க கட்சி' என்று கூறினார்.

2023 ஒக்டோபர் 19 அன்று ஜே.வி.பி. தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போது, (இடதுபுறத்தில் இருந்து) அமெரிக்க தூதரகத்தின் அரசியல் அதிகாரியான மெத்யூ ஹின்சன், தூதுவர் ஜூலி சங், ஜே.வி.பி. தலைவர் அனுரகுமார திசாநாயக்க மற்றும் ஜே.வி.பி. பிரச்சார செயலாளர் விஜித ஹேரத். [படம்: X/Twitter @anuradisanayake] [Photo: X/Twitter @anuradisanayake]

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் செப்டம்பர் 22 அன்று திசாநாயக்கவின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தார். 'அயல் நாட்டுக்கு முதலிடம் என்ற இந்தியாவின் கொள்கையில் இலங்கை ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளதுடன்' கொழும்புடன் 'நெருக்கமாக பணியாற்ற' எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகக் அவர் கூறினார்.

சீனாவுடனான போருக்கான தயாரிப்புகளை அமெரிக்கா முடுக்கிவிட்டுள்ள நிலையில், தெற்காசியாவில் வாஷிங்டனின் பிரதான மூலோபாய பங்காளியாக இந்தியா உள்ளது. அது ஒரு குறிப்பிடத்தக்க பிராந்திய சக்தியாக மாறுவதற்கு அதன் சொந்த அபிலாஷைகளைக் கொண்டுள்ளதுடன் இலங்கையை அதன் 'அண்டை நாடு' அல்லது செல்வாக்கு வலயத்தின் ஒரு பகுதியாகக் கருதுகிறது. சீனாவுக்கு எதிரான நாற்கர பாதுகாப்பு உரையாடலில் இந்தியாவும் உறுப்பினராக உள்ளது. இது ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவை உள்ளடக்கிய நடைமுறையில் அமெரிக்கா தலைமையிலான ஒப்பந்தமாகும்.

திசாநாயக்க மற்றும் ஜே.வி.பி./தே.ம.ச. தலைவர்கள் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பலமுறை இந்தியாவிற்கு விஜயம் செய்து, வெளிவிவகாரச் செயலாளர் எஸ். ஜெய்சங்கர் உட்பட உயர் அதிகாரிகளைச் சந்தித்து, கட்சி ஆட்சிக்கு வந்தால், மோடி அரசாங்கத்தின் நலன்கள் பாதுகாக்கப்படும் என்று உறுதியளித்தனர். அவர்கள் கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவர் சன்தோஸ் ஜாவையும் சந்தித்தனர். அவர் திசாநாயக்கவுக்கு வாழ்த்து தெரிவித்த முதல் வெளிநாட்டுத் தூதுவர் ஆவார்.

திசாநாயக்கவுக்கு சீனாவும் வாழ்த்து தெரிவித்துள்ளது. புதிய ஜனாதிபதியை பாராட்டிய ஜனாதிபதி ஷீ ஜின்பிங்,, 'பாரம்பரிய நட்புறவை முன்னெடுத்துச் செல்ல ஜனாதிபதி திசாநாயக்கவுடன் இணைந்து பணியாற்ற பெய்ஜிங் தயாராக உள்ளது' என்றார். உலகப் பொருளாதாரத்துடன் தன்னை ஒருங்கிணைக்க சீனா முன்னெடுக்கும் முதன்மை உள்கட்டமைப்பு வேலைகளான 'மிகவும் பலனளிக்கும் உயர்தர பெல்ட் அன்ட் ரோட் ஒத்துழைப்பு (BRI)' சம்பந்தமாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

சீனா இலங்கைக்கு மிகப்பெரிய இருதரப்பு கடன் வழங்கும் நாடு ஆகும். அது 2000 ஆண்டு முதல் 20 பில்லியன் அமெரிக்க டொலர்களை உள்ளடக்கிய 300 வேலைத் திட்டங்களில் ஈடுபட்டுள்ளது. சீனாவின் பிரதான திட்டங்களில் ஒன்று, கிழக்கு ஆசியாவை ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவுடன் இணைக்கும் பிரதான கப்பல் பாதைகளுக்கு அருகில் தீவின் தெற்கு முனையில் உள்ள மூலோபாய அம்பாந்தோட்டை துறைமுகமாகும். அமெரிக்கா மற்றும் இந்தியாவுடனான இலங்கையின் நெருக்கமான இணக்கம் இந்த முதலீடுகளை ஆபத்தில் ஆழ்த்துகிறது.

பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் திசாநாயக்க நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், “எமது நாட்டுக்கு சர்வதேச ஆதரவு தேவை. எனவே, உலகில் அதிகாரப் பிளவுகள் எதுவாக இருந்தாலும், ஒவ்வொரு அரசையும் நாட்டுக்கு மிகவும் சாதகமான முறையில் கையாள்வதே எங்களின் எதிர்பார்ப்பாகும்” என்று குறிப்பிட்டார்.

வெவ்வேறு சக்திகளுக்கு இடையில் வெறுமனே சமநிலைப்படுத்துவதற்குப் பதிலாக, திசாநாயக்க ஆட்சியானது விக்கிரமசிங்க பின்பற்றும் அமெரிக்க சார்பு வழியையே தொடரும்.

ஜே.வி.பி./தே.ம.ச. தேர்தல் விஞ்ஞாபனம் தெளிவாக இந்தியா மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பக்கம் சாய்ந்துள்ளது. இந்தியா உட்பட பிராந்தியத்தை அச்சுறுத்தும் எந்தவொரு நடவடிக்கைக்கும் இலங்கையின் 'நிலம், வானம் அல்லது கடல்' பகுதியை பயன்படுத்துவதை கட்சி அனுமதிக்காது என்று அது அறிவித்தது.

விக்ரமசிங்கவின் கீழ் வெளிவிவகார அமைச்சின் செயலாளராக பதவிவகித்த அருணி விஜேவர்தனவை மீண்டும் அதே பதவிக்கு நியமித்ததன் மூலம், திசாநாயக்கவின் வெளியுறவுக் கொள்கை நோக்குநிலையும் அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டது.

விக்கிரமசிங்க பதவியில் இருந்த 2022 முதலான இரண்டு வருடங்களில், ஜே.வி.பி./தே.ம.ச. அவரது அமெரிக்க சார்பு கொள்கைகள் குறித்து எந்த ஆட்சேபனையோ அல்லது விமர்சனமோ செய்யவில்லை. வாஷிங்டனும் புது டெல்லியும் இலங்கை துறைமுகங்களுக்கு சீன ஆராய்ச்சிக் கப்பல்கள் வருவதை கடுமையாக எதிர்த்த பின்னர் இத்தகைய வருகைகளை தடை செய்வதும், இஸ்ரேலுக்கு அனுப்பப்படும் பொருட்களை, யேமனில் பாலஸ்தீன-சார்பு ஹவுத்தி போரளிகளின் தாக்குதலில் இருந்து பாதுகாப்பதற்காக அமெரிக்கா தலைமையிலான ப்ராஸ்பெரிட்டி கார்டியன் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இந்த ஆண்டு செங்கடலுக்கு இலங்கை போர்க்கப்பலை அனுப்பியதும் இதில் அடங்கும்.

காசா, மேற்குக் கரையில் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேலிய ஆட்சியின் இனப்படுகொலை மற்றும் இப்போது லெபனானில் அதன் கொடூரமான இராணுவத் தாக்குதல்கள், அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் ஆதரவுடன் மத்திய கிழக்கில் விரிவடையும் போரின் ஒரு பகுதியாகும். அதே நேரத்தில், அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான போரையும் சீனாவுடனான போருக்கான தயாரிப்புகளையும் முடுக்கி விட்டுள்ளனர். இவை வேகமாக வளர்ந்து வரும் பேரழிவு தரக்கூடிய உலகப் போரின் மூன்று முனைகள் ஆகும்.

ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தின் போது, ​​திசாநாயக்கவும் ஏனைய ஸ்தாபன வேட்பாளர்களும் மனித குலத்தின் இருப்புக்கே அச்சுறுத்தல் விடுத்தள்ள இந்த போர குறித்து முற்றிலும் மௌனமாக இருந்தனர்.

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) இந்த பாரதூரமான ஆபத்துக்களைப் பற்றி எச்சரித்ததுடன், சோசலிசக் கொள்கைகளின் அடிப்படையில் ஒரு சர்வதேச போர்-எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு தெற்காசியாவிலும் உலகெங்கிலும் உள்ள அவர்களது வர்க்க சகோதர சகோதரிகளுடன் இலங்கையில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை ஐக்கியப்படுத்த பிரச்சாரம் செய்கிறது.

அந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, நாங்கள் விடுத்த கோரிக்கைகளாவன:

ACSA மற்றும் SOFA போன்ற அமெரிக்காவுடனான அனைத்து இரகசிய ஒப்பந்தங்களையும் அம்பலப்படுத்து!

ஏகாதிபத்திய சக்திகள் மற்றும் இந்தியா உட்பட பிற நாடுகளுடனான அனைத்து பாதுகாப்பு ஒப்பந்தங்களையும் இரத்துச் செய்!

முதலாளித்துவத்தையும், உலகத்தை போட்டி தேசிய அரசுகளாகப் பிரித்து வைத்திருக்கின்ற அதன் பிற்போக்கு பிளவையும் தொழிலாள வர்க்கத்தின் போராட்டத்தின் மூலம் புரட்சிகரமாக தூக்கியெறிவதே, மூன்றாம் உலகப் போரையும் அணுவாயுத மோதலையும் தடுப்பதற்கான ஒரே வழி என்று சோசலிச சமத்துவக் கட்சி வலியுறுத்துகிறது.

Loading