இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
தெற்காசிய தீவு நாடான இலங்கையின் ஜனாதிபதியாக மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ளமை கவனமாக ஆராயப்பட வேண்டியதாகும். பெருகிவரும் வர்க்க முரண்பாடுகளினாலும், பூகோளப் போரின் மூலம் பூமியை மறுபகிர்வு செய்வதற்கான ஏகாதிபத்திய உந்துதலினாலும், முதலாளித்துவ உயரடுக்கின் பாரம்பரிய அரசியல் கட்சிகளும், ஆட்சியின் வழிமுறைகளும் தகர்ந்து போவதால், இது உலகளாவிய அளவில் திடீர் அரசியல் மாற்றங்களை முன்னறிவிக்கிறது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், அரசாங்கம் பாரியளவில் வெளிநாட்டுக் கடன்களைச் செலுத்தத் தவறியதை அடுத்து, கடுமையான பொருளாதாரப் பற்றாக்குறையால் தூண்டப்பட்ட வெகுஜன எழுச்சிகளால் இலங்கை கொந்தளித்தது. வெகுஜன எதிர்ப்புக்கள் ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறி இராஜினாமா செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டதில் உச்சக்கட்டத்தை அடைந்தது — இறுதியில் ஒரு மோசமான அமெரிக்க சார்பு கைக்கூலியான ரணில் விக்கிரமசிங்க பதிலீடு செய்யப்பட்டதுடன், உடனடியாக கொடூரமான சர்வதேச நாணய நிதிய சிக்கன நடவடிக்கைகளை திணித்தார்.
இப்போது ஜே.வி.பி. மற்றும் அதன் பரந்த 'தேசிய ஐக்கிய' முன்னணியான தேசிய மக்கள் சக்தி (தே.ம.ச.) ஆகிய இரண்டிற்கும் தலைமை வகிக்கும் திசாநாயக்க, பதவியில் அமர்த்தப்பட்டுள்ளார். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, ஜே.வி.பி-தே.ம.ச.யின் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்ட திசாநாயக்க, மொத்த வாக்குகளில் 3.8 சதவீதமான 446,000 வாக்குகளையே பெற்றார். கடந்த சனிக்கிழமை நடந்த தேர்தலில், அவர் 5.63 மில்லியன் அல்லது 42 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றார். விக்கிரமசிங்க மற்றும் பாரம்பரிய அரசியல் ஸ்தாபகத்தின் இரு தலைவர்களான சஜித் பிரேமதாச, நாமல் இராஜபக்ஷ ஆகியோர் அவமானகரமான தோல்வியை சந்தித்தனர்.
சர்வதேச பத்திரிகைகள் இலங்கை ஒரு 'மார்க்சிச ஜனாதிபதியை' தெரிவு செய்துள்ளதாக தலைப்புச் செய்திகளில் தடித்த எழுத்துகளில் பிரகடனம் செய்கின்றன. இது ஒரு அப்பட்டமான பொய் ஆகும்.
ஜே.வி.பி. ஒரு வலதுசாரி, தேசியவாத, இனவாத இயக்கமாகும். இது சிங்கள ஜனரஞ்சகவாதத்திலும் தீவின் தமிழ் சிறுபான்மையினருக்கு எதிரான விரோதத்திலும் ஊறிப்போனதாகும். ஜே.வி.பி., 1988-89ல் இடதுசாரி மற்றும் தொழிலாளர் அமைப்புக்கள் மீது கொலைவெறி தாக்குதல்களை நடத்தியமை உட்பட, பல தசாப்தங்களாக இலங்கை முதலாளித்துவத்தின் தீர்க்கமான முட்டுக்கட்டையாக செயற்பட்டுள்ளது.
ஜே.வி.பி.-என்.பி.பி. அரசாங்கமானது பல்வேறு சமூகக் குழுக்களுக்கு இடையேயும் அவர்களது நலன்களையும் சமரசம் செய்து ஒழுங்குபடுத்தி, அவர்கள் அனைவரையும் 'தேசத்திற்காக உழைக்க' செய்யக் கூடியவாறு, இலங்கை சமூகத்தை (அதாவது போட்டியிடும் வர்க்கங்களை) வடிவமைக்கும் என்ற திசாநாயக்கவின் கூற்று, சோசலிசத்தை ஒத்த எதையும் விட பாசிசத்தையே ஒத்திருக்கிறது.
பாரம்பரிய அரசியல் உயரடுக்கின் வெளிப்படையான ஊழலுக்கு எதிராக வசைபாடும் அதேவேளை, தான் 'வெளியாள்' என்ற ஒரு பிம்பத்தை தூக்கிப்பிடிக்கும் ஜே.வி.பி., சமூகச் செலவீனங்களை அதிகரிப்பது பற்றி மட்டுப்படுத்தப்பட்ட வாக்குறுதிகளையே கொடுத்துள்ளது.
இவை அனைத்தும் முற்றிலும் அபத்தமானவை. ஜே.வி.பி., விக்கிரமசிங்கவினால் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட சர்வதேச நாணய நிதியத்தின் பிணை எடுப்புக்கான நிபந்தனையின் 'பரிமாணங்களுக்குள்” பணியாற்றுவதற்கு பகிரங்கமாக உறுதிபூண்டுள்ளது. சர்வதேச நாணய நிதிய பிணை எடுப்பு நிபந்தனையின் கீழ், இலட்சக்கணக்கான அரசு தொழில்களை அழிக்குமாறும், இறக்குமதி தீர்வை, வரி உயர்வுகள் மற்றும் பொது சுகாதாரத்துக்கும் கல்விக்குமான செலவுளை தொடர்ந்து வெட்டிக் குறைப்பதன் மூலமும் பல ஆண்டுகளாக கிடைக்காமல் இருந்த வரவு-செலவுத் திட்ட வருமானங்களை, மீண்டும் ஈட்ட வேண்டும் என இலங்கை அரசாங்கத்திற்கு அழைப்புவிடுத்துள்ளது.
2022ல் இருந்து, ஜே.வி.பி., வேகமாக பெருவணிகத்தை அரவணைத்துக் கொண்டதோடு, பாதுகாப்புப் படைகளுடன் உறவுகளை வளர்ப்பதற்கான அதன் நீண்டகால முயற்சிகளைத் தொடர்ந்தது. இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் மற்றும் சிரேஷ்ட இந்திய அதிகாரிகளையும் பலமுறை சந்தித்துள்ளது. முன்கூட்டியே பேசி வைத்ததைப் போல் அமைதியைப் பேணும் ஜே.வி.பி., சீனாவிற்கு எதிரான இந்திய ஆதரவுடன் கூடிய அமெரிக்கா தலைமையிலான இராணுவ மூலோபாயத் தாக்குதலில், இலங்கையின் அதிகரித்துவரும் ஒருங்கிணைப்பு குறித்து பகிரங்கமாக கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
ஏகாதிபத்தியமும் இலங்கை ஆளும் வர்க்கமும், திசாநாயக்கவையும், ஜே.வி.பி.யையும் பற்றி எடை போட்டுக் கொண்டன. திசாநாயக்க ஜனாதிபதியானால் பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தலாக அமையும் என்று தேர்தல் பிரச்சாரம் முழுவதும் முழங்கிய விக்கிரமசிங்க, தோல்வியை ஒப்புக்கொண்டு, தலைகீழாக மாறி, புதிய ஜனாதிபதி 'தொடர்ச்சியான வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மையின் பாதையில் இலங்கையை வழிநடத்துவார்' என்று தான் 'நம்பிக்கை' கொண்டுள்ளதாக அறிவித்தார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களமும் பாராட்டு அறிக்கைகளை வெளியிட்டு, புதிய ஜனாதிபதியுடன் உறவுகளை வலுப்படுத்துவதில் தங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தினர்.
திசாநாயக்க சுயமாக பிரகடனப்படுத்தியுள்ள 'மக்கள் அரசாங்கத்துடன்' விரைவில் தொழிலாள வர்க்கத்தையும் கிராமப்புற உழைப்பாளிகளையும் துணிகரமான மோதலுக்கு கொண்டு வரும் ஒரு வெடிக்கும் வர்க்க இயக்காற்றல் இயங்கிக் கொண்டிருக்கின்றது என்பதையே இது காட்டுகிறது.
உழைக்கும் மக்களின் பரந்த பிரிவின்ர் ஜே.வி.பி.யில் வைத்துள்ள நம்பிக்கைகள் எதுவாக இருந்தாலும், அது சர்வதேச நாணய நிதிய சிக்கன வெட்டுக்களை அமுல்படுத்துவதால், அது மாற்மின்றி சிதைந்துவிடும்.
எல்லாவற்றுக்கும் மேலாக, தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு, கிழக்கு மற்றும் பெருந்தோட்ட மாவட்டங்களில், ஜே.வி.பி.யின் இனவாதத் தூண்டுதலின் சாதனையின் காரணமாக, வரவிருக்கும் அரசாங்கத்தின் மீது வெளிப்படையான விரோதப் போக்கு ஏற்கனவே உள்ளது. பெரும்பான்மையான தமிழ் மாவட்டங்களில், திசாநாயக்க 10 வீதம் அல்லது குறைவான வாக்குகளைப் பெற்று மூன்றாவது அல்லது நான்காவது இடத்தையே பெற்றார்.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் சோசலிச சமத்துவக் கட்சியும் (இலங்கை) ஜே.வி.பி.க்கு எதிராக முன்னெடுத்த பல தசாப்த காலப் போராட்டம்
போராட்டத்தின் அடுத்த கட்டத்திற்கு தொழிலாள வர்க்கத்தை அரசியல்ரீதியாக தயார்ப்படுத்துவதில் ஒரு தீர்க்கமான பங்களிப்பாக, உலக சோசலிச வலைத் தளமானது ஜே.வி.பி மற்றும் அதன் குட்டி முதலாளித்துவ தேசியவாத அரசியலை எதிர்த்து, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் அதன் இலங்கைப் பகுதியும் நடத்திய போராட்டத்தின் அரசியல் பதிவை வரும் நாட்கள் மற்றும் வாரங்களில் தெளிவுபடுத்தி ஆவணப்படுத்தும்.
ஜே.வி.பி.யின் பரிணாமம் மற்றும் அரசியல் சுழற்சியை, மார்க்சிச வர்க்க பகுப்பாய்வுக்கு உட்படுத்துவது, தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்கான போராட்டத்திற்கும், இலங்கை முதலாளித்துவத்திற்கும் உலக ஏகாதிபத்தியத்திற்கும் எதிரான போராட்டத்தில், கிராமப்புற உழைப்பாளிகளை அதன் பின்னால் அணிதிரட்டுவதற்கும் மிகவும் தீர்க்கமானது.
மாவோவாதம், காஸ்ட்ரோவாதம் மற்றும் சிங்கள ஜனரஞ்சகவாதத்தின் கலவையின் அடிப்படையில் 1966 இல் ஜே.வி.பி. ஸ்தாபிக்கப்பட்டது. அது அப்போது தேர்தல்களில் 'முற்போக்கானது' என்று ஆதரித்து பாராட்டிய அதே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டணி அரசாங்கத்திற்கு எதிராக, ஒரு வருடத்துக்குள், 1971 ஏப்ரலில், கிராமப்புற சிங்கள இளைஞர்களின் பேரழிவுகரமான எழுச்சிக்கு தலைமை வகித்தது.
சோசலிச சமத்துவக் கட்சியின் (இலங்கை) முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம், கொடிய அரசு அடக்குமுறைக்கு எதிராக ஜே.வி.பி.யை பாதுகாத்தது. அதே நேரம், ஜே.வி.பி.யின் அரசியலும் வர்க்கப் பண்பும் என்ற தலைப்பில், புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் ஸ்தாபக பொதுச் செயலாளர் கீர்த்தி பாலசூரிய, ஜே.வி.பி.யின் நச்சுத்தனமான தொழிலாள வர்க்க விரோதத் தன்மையை அம்பலப்படுத்தினார். தொழிலாளர்களின் பொருளாதாரப் போராட்டங்கள் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான 'தேசபக்தி' போராட்டத்தில் இருந்து திசைதிருப்பப்பட்டுள்ளதால் அது 'கஞ்சிக் கோப்பைக்கான போராட்டம்” என்று ஜே.வி.பி. கேலி செய்தது. மாவோவாத-ஸ்ராலினிச மக்கள் முன்னணியின் பாணியில், ஜே.வி.பி.யும் ஏகாதிபத்தியம் அனைத்து 'சமூக வர்க்கங்களையும் ஒன்றாகக் குவித்துள்ளது' என்று கூறிக்கொண்டது.
தமிழ் பேசும் தோட்டத் தொழிலாளர்கள் 'சலுகைபடைத்தவர்கள்' மற்றும் 'இந்திய விஸ்தரிப்புவாதத்தின்' முகவர்கள் என்ற ஜே.வி.பி.யின் கண்டனங்களையும் பாலசூரிய சுட்டிக்காட்டினார். அதன் நச்சுத்தனமான தமிழர்-விரோத இனவாதத்தை ஊக்குவிப்பதன் மூலம், 'ஜே.வி.பி. ஒரு தொழிலாள வர்க்க விரோத இயக்கத்தை உருவாக்குவதுடன் இதை எதிர்காலத்தில் பாசிச இயக்கமொன்றால் நன்கு பயன்படுத்திக்கொள்ள முடியும்,' என்று அவர் எச்சரித்தார்.'
இந்த எச்சரிக்கைகள் அதிகமாகவே நிரூபிக்கப்பட்டன. 1980களில், தமிழ் சிறுபான்மையினருக்கு எதிரான இலங்கை ஆளும் வர்க்கத்தின் போரின் மிகவும் முனைப்பான வக்கீலாக ஜே.வி.பி. வெளிப்பட்டது. 1988-89ல், அது சிங்கள-மேலாதிக்க முதலாளித்துவ அரசின் ஐக்கியத்துக்கு அச்சுறுத்தல் என்ற அடிப்படையில், பிற்போக்கு இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கு எதிராக ஆயுத கிளர்ச்சியை நடத்தியது. ஆரம்பத்தில் பிரதமர் (பின்னர் ஜனாதிபதி) ரணசிங்க பிரேமதாச மற்றும் அரசு இயந்திரத்தின் சில பிரிவுகளின் ஆசீர்வாதத்துடன், ஜே.வி.பி. ஒரு படுகொலை பிரச்சாரத்தை மேற்கொண்டது, இதில் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழக உறுப்பினர்கள் உட்பட, நூற்றுக்கணக்கான இடதுசாரி அரசியல் எதிர்ப்பாளர்கள், தொழிற்சங்கவாதிகள் மற்றும் தொழிலாளர்களும் கொல்லப்பட்டனர்.
ஜே.வி.பி.யை அரசாங்கத்தின் கீழ் கொண்டு வந்து அதை அரசின் துணைப் படையாகப் பயன்படுத்துவதே பிரேமதாசாவின் திட்டமாக இருந்தது. இது சாத்தியமற்றது என நிரூபிக்கப்பட்டபோது, இலங்கை அரசு ரோகண விஜேவீரவையும் மற்ற இரண்டு பிரதான ஜே.வி.பி. தலைவர்களையும் கைது செய்து சில மணிநேரங்களுக்குள் கொன்றுவிட்டது. இந்த ஜனநாயக-விரோதச் செயலைத் தொடர்ந்து, இலங்கையின் தெற்கே கிராமப்புறங்களில் அதிருப்தியை அடக்குவதை நோக்கமாகக் கொண்ட பாரிய அரசு அடக்குமுறை பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டதுடன் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
ஆயினும்கூட, 1993 இல், வடக்கு மற்றும் கிழக்கில் புதுப்பிக்கப்பட்ட தமிழ் கிளர்ச்சிக்கு எதிராக 'தேசத்தை ஒன்றிணைத்தல்' என்ற பெயரில், மீண்டும் முதலாளித்துவ ஆட்சியின் முட்டுக்கட்டையாக அதைப் பயன்படுத்தும் நோக்கத்துடன், ஜே.வி.பி.யின் அரசியல் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க அனுமதிக்கப்பட்டது. 1994 தேர்தலில், தமிழர் விரோதப் போரையும் தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலையின் மீதான தாக்குதலையும் தொடர்வதற்கு, ஆளும் வர்க்கத்திற்கு அரசாங்க முகமொன்றை வழங்குவதற்கு ஜே.வி.பி. உதவியது. 15 வருடங்களுக்கும் மேலாக பதவியில் இருந்த ஆழமாக வெறுக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு பதிலாக, குமாரதுங்கவையும் அவரது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் ஆட்சிக்கு கொண்டுவர இது உதவியது.
அதன் பின்னர், ஜே.வி.பி., 2009 மே மாதம் 40,000 தமிழர்கள் படுகொலையில் முடிவடையும் வரை, இனவாதப் போரின் உறுதியான ஆதரவாளர்களாக இருந்த அதே வேளை, அரசியல் ஸ்தாபகத்தில் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டது. 2004 இல், பெருவணிக கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் தேர்தல் கூட்டணியில் இருந்த ஜே.வி.பி., 39 ஆசனங்களை வென்றது -கடந்த சனிக்கிழமை நடந்த தேர்தல் வரை அதன் உச்சபட்ச தேர்தல் வெற்றி இதுவாகும். 3 அமைச்சரவை ஆசனங்களைப் பெற்றுக்கொண்டு, பெருவணிகத்தால் உருவாக்கப்பட்ட சிக்கன நடவடிக்கை திட்டத்தை அமல்படுத்தியது. ஆனால், 2004 டிசம்பர் சுனாமியின் பேரழிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதில் புலி கிளர்ச்சியாளர்களின் நிர்வாகத்துடன் ஒத்துழைப்பதை அது கடுமையாக எதிர்த்ததால் அது அரசாங்கத்தில் இருந்து விலகிக்கொண்டது.
தொழிலாள வர்க்கம் எதிர்கொள்ளும் அரசியல் சவால்
தொழிலாளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சமீபத்திய ஆண்டுகளில், ஜே.வி.பி. தனது தமிழர் விரோத பேரினவாதத்தை பகிரங்கமாகத் தணித்து வருகிறது. ஆனால் தேசியவாதமும் இனவாதமும் அதன் எலும்பில் ஓடிக்கொண்டிருக்கின்றன. முன்னாள் இராணுவம் மற்றும் பொலிஸ் படைவீரர்களை கொண்டு தேசிய மக்கள் சக்தி 'கூட்டுக்களை' நிறுவுதல் உட்பட, இராணுவ-பாதுகாப்பு எந்திரத்தை அரவனைத்துக்கொள்ளும் அதன் நீண்டகால முயற்சிகளில் பேரினவாத அறைகூவல்கள் உயிர்ப்பித்துள்ளது.
அதிகரித்து வரும் வெகுஜன எதிர்ப்பை எதிர்கொள்ளும் ஜே.வி.பி., தன்னுடையதும் ஆளும் வர்க்கத்தினதும் சொந்த பிற்போக்கு மரபுகளை பயன்படுத்தி, பேரினவாத பிற்போக்குத்தனத்தை தூண்டிவிட்டு, பொலிஸ்-இராணுவ அடக்குமுறையை நிலைநிறுத்தும்.
இலங்கையின் அபிவிருத்திகள் அடிக்கடி உலக சூழ்நிலையில் கூர்மையான மாற்றங்களை முன்வைக்கின்றன அல்லது வெளிப்படுத்துகின்றன.
இலங்கையின் 'அரசியல் அதிர்ச்சி' வேறு இடங்களிலும் மீண்டும் மீண்டும் நிகழும். ஆளும் வர்க்கம், அது இதுவரை கைக்கெட்டும் தூரத்தில் வைத்திருந்த அரசாங்க நிர்வாக அதிகாரிகள் உட்பட, தேசியவாத மற்றும் போலி-இடது கட்சிகளில் மேலும் மேலும் தங்கியிருக்க நிர்ப்பந்திக்கப்படும். ஐரோப்பாவில், தொழிலாள வர்க்கம் ஏற்கனவே அதிகாரத்தில் உள்ள இத்தகைய சக்திகளின் அனுபவங்களை மீண்டும் மீண்டும் பெற்றுள்ளது. இதில், கிரேக்கத்தில் சிரிசா அமைப்பு, சமூக செலவினங்களை வெட்டுவதை எதிர்ப்பதாக வாக்குறுதி கொடுத்து தேர்லில் வென்ற பின்னர், மிகக் கொடூரமான ஐரோப்பிய ஒன்றிய சிக்கன நடவடிக்கைகளை உடனடியாகத் திணித்தமை, பேர்போன விடயமாகும்.
இந்த அல்லது அந்த தொழிலாள வர்க்க விரோத சக்தியின் திடீர் எழுச்சியால் ஈர்க்கப்பட்டு, தொழிலாள வர்க்கம் அத்தகைய இயக்கங்களை ஆதரிக்கச் செய்யவோ அல்லது வேறுவிதமாக அடிபணியச் செய்யவோ முற்படும் சந்தர்ப்பவாதிகளுக்கு பஞ்சமில்லை.
தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்கான தீவிரமான அரசியல், தத்துவார்த்த மற்றும் அமைப்பு ரீதியான போராட்டத்தின் ஒரு பகுதியாக, இத்தகைய சக்திகள் மீது அரசியல் போர் நடத்தப்பட வேண்டும். இதற்கு, சோசலிச-சர்வதேச வேலைத்திட்டம் மற்றும் கடந்த ஒன்றரை நூற்றாண்டுகளின் மாபெரும் வர்க்கப் போராட்டங்களின் தீர்க்கமான படிப்பினைகளுடன் தொழிலாளர்களை ஆயுதபாணியாக்குவதற்கு, அவர்களின் அனைத்துப் போராட்டங்களிலும் ஆற்றலுடன் தலையிடுவது அவசியமாகும்.
இந்தக் கொள்கையின் அடிப்படையிலேயே, சோசலிச சமத்துவக் கட்சி, ஓய்வு பெற்ற ஆசிரியரும் நீண்டகால கட்சித் தலைவர்களில் ஒருவவருமான பானி விஜேசிறிவர்தனவை இலங்கைத் தேர்தலில் நிறுத்தி ஒரு சக்திவாய்ந்த தலையீட்டை முன்னெடுத்தது.
இந்த அடிப்படையில்தான், சோசலிச சமத்துவக் கட்சி இப்போது தொழிலாள வர்க்கத்தை ஒரு சுயாதீன அரசியல் சக்தியாக ஐக்கியப்படுத்தி அணிதிரட்டவும், கிராமப்புற மக்களையும் ஏனைய ஒடுக்கப்பட்ட மக்களையும் அதன் பின்னால் அணிதிரட்டி, வரவிருக்கும் ஜே..வி.பி. அரசாங்கத்தின் தாக்குதல்களை எதிர்கொள்ளவும், போருக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைக்கும் எதிராக, சமூக சமத்துவத்திற்கான —அதாவது புரட்சிகர சோசலிசத்திற்கான— போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கும் போராட்டத்தை அபிவிருத்தி செய்யும்.