நான்காம் அகிலம் (1990): ட்ரொட்ஸ்கி படுகொலை செய்யப்பட்டு 50 ஆண்டுகள்

ரோஹன விஜேவீரவின் அரச படுகொலை குறித்து

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

ஜே.வி.பி.யின் தலைவரான ரோஹண விஜேவீர, 12 நவம்பர் 1989 அன்று இலங்கை அரசாங்கப் படைகளால் படுகொலை செய்யப்பட்டார். தொழிலாள வர்க்கம் இதை எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ள வேண்டும்: ஜே.வி.பி. பாசிச அரசியல் பண்பைக் கொண்டிருந்தாலும், இந்தப் படுகொலையானது தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக பயன்படுத்துவதற்காக ஐ.தே.க. ஆட்சியின் அடக்குமுறை சக்திகளைக் கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த கட்டுரை 1990இல் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு அப்போது வெளியிட்ட நான்காம் அகிலம் சஞ்சிகையில் முதலில் 8 டிசம்பர் 1989 அன்று வெளியிடப்பட்டது.

12 நவம்பர் 1989 அன்று, இலங்கை முதலாளித்துவ அரசின் பாதுகாப்புப் படையினர், பாசிச மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) முதன்மைத் தலைவரான ரோஹண விஜேவீரவைக் கைது செய்து பின்னர் படுகொலை செய்தனர். பல மணித்தியாலங்களின் பின்னர், விஜேவீரவின் பிரதான உதவியாளரான உபதிஸ்ஸ கமநாயக்க கைது செய்யப்பட்டு விரைவில் கொல்லப்பட்டார். ஜே.வி.பி.யின் தலைமைத்துவத்தின் மூன்றாவது உறுப்பினரான எச்.பி. ஹேரத், பாதுகாப்புப் படையினரால் உடனடியாக சுட்டுக் கொல்லப்பட்டார். மூன்று பேரின் உடல்களும் அவசர அவசரமாக தகனம் செய்யப்பட்டன.

ரோஹண விஜேவீர (Photo: Facebook)

விஜேவீர மற்றும் அவரது கூட்டாளிகள் அனைவரும் தொழிலாள வர்க்கத்தின் பரம எதிரிகள் ஆவர். கடந்த ஆண்டு காலப்பகுதியில் தொழிலாளர் மற்றும் தமிழ் தேசிய விடுதலை இயக்கத்திற்கு எதிராக நடத்தப்பட்ட நூற்றுக்கணக்கான படுகொலைகளுக்கு ஜே.வி.பி. பொறுப்பாகும். ஜே.வி.பி.யால் படுகொலை செய்யப்பட்டவர்களில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பிரிவான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் மூன்று உறுப்பினர்களும் அடங்குவர்.

எவ்வாறாயினும், ஜே.வி.பி.யின் அரசியல் பிற்போக்கானதாக இருந்தபோதிலும், விஜேவீர மற்றும் அவரது கூட்டாளிகளின் படுகொலையானது, முதலாளித்துவ அரச எந்திரத்தின் கரங்களை வலுப்படுத்துவதையும், ஆட்சிக்கு எதிரான அனைத்து அரசியல் எதிர்ப்பையும் அச்சுறுத்துவதையும் இலக்காகக் கொண்ட அரச பயங்கரவாதச் செயல்கள் என்பதை, இலங்கையில் உள்ள வர்க்க உணர்வுள்ள தொழிலாளர்கள் தெளிவாக புரிந்துகொள்கிறார்கள்.

படுகொலைக்கு முந்தைய மாதங்களில். ஜனாதிபதி பிரேமதாச அடிக்கடி ஜே.வி.பி. மீதான தனது ஆழ்ந்த அபிமானத்தையும் அதன் பிற்போக்கு நோக்கங்களுக்கான அனுதாபத்தையும் வெளிப்படுத்தினார். இந்த குட்டி முதலாளித்துவ பாசிச இயக்கத்தை, முதலாளித்துவ அரசாங்கத்தின் கீழ் வைத்திருக்க ஜே.வி.பி.யுடன் ஒரு உடன்பாட்டை எட்ட முடியும் என்று தான் நம்புவதாக அவர் தெளிவுபடுத்தினார். எவ்வாறாயினும், பிரேமதாச ஜே.வி.பி.யுடன் ஒரு உடன்பாட்டுக்கான பேச்சுவார்த்தையை நடத்துவது சாத்தியமில்லை என்பது நிரூபனமானது; அதனால் விஜேவீரவை அழிக்க முடிவு செய்யப்பட்டது.

திட்டமிடப்பட்ட ஈவிரக்கமற்ற தன்மையை காட்சிப்படுத்துவதன் மூலம், பிரேமதாச தனது எதிரிகள் அனைவருக்கும் இரத்தக்களரி பாடத்தை கொடுக்க விரும்புகிறார். 'கட்டுக்கடங்காத எனது பாசிச நண்பர்களுடன் நான் எவ்வாறு நடந்துகொண்டேன் என்பதை இப்போது நீங்கள் பார்த்திருக்கிறீர்கள்,' 'எனது புரட்சிகர தொழிலாள வர்க்க எதிரிகளை நான் எவ்வாறு சமாளிக்க விரும்புகிறேன் என்பதை நீங்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்,' என்று அவர் கூறுகிறார்.

இராணுவ-பொலிஸ் மற்றும் பாசிச சர்வாதிகாரத்தின் ஆபத்துக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்ட புரட்சிகரப் போராட்டத்தின் முன்னணியில் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் இருந்து வருகிறது. கடந்த ஆண்டில், ஜே.வி.பி.யின் பாசிச பயங்கரவாதிகளுக்கு எதிராக தொழிலாளர் இயக்கத்தின் பாதுகாப்பை மேற்கொள்வதற்காக, தொழிலாள வர்க்க அமைப்புகளின் ஐக்கிய முன்னணியை அபிவிருத்தி செய்வதற்கு இடைவிடாது போராடியது.

தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக புரட்சிகரமாக அணிதிரட்டுவதை அடிப்படையாகக் கொண்டு அது ஜே.வி.பி.க்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்ததால், கடந்த மாதம் நடந்த அரச படுகொலைகளின் முற்றிலும் பிற்போக்கு தன்மையை புரிந்து கொள்ளுமாறு தொழிலாளர்களை அது இப்போது எச்சரிக்கிறது.

பாசிசத்திற்கு எதிரான போராட்டம் தொழிலாள வர்க்கத்தின் பணியே தவிர முதலாளித்துவ அரசின் பணி அல்ல. இந்தப் போராட்டம், முதலாளித்துவத்திற்கு எதிரான புரட்சிகரப் போராட்டத்துடன் பிரிக்க முடியாத வகையில் பிணைக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், லங்கா சமசமாஜக் கட்சியின் அதிகாரத்துவம் மற்றும் அவர்களது ஸ்ராலினிச சகாக்கள் போன்ற கடும்போக்கு சந்தர்ப்பவாதிகள் மட்டுமே, பிரேமதாசவின் போனபார்ட்டிச ஆட்சி பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தை நடத்துகிறது என்று கூறத் துணிவார்கள். நேற்று, பிரேமதாசவின் இராணுவத் தலைவர்கள், விஜேவீரவையும் கமநாயக்கவையும் வரிசையாக சுவருடன் நிறுத்திவைத்து சுட்டுக் கொன்றனர். தொழிலாள வர்க்கம் மற்றும் சோசலிச எதிர்ப்பாளர்களுக்கு எதிராக அவர்கள் அதே வேலையை இன்னும் ஆர்வத்துடன் நிறைவேற்றுவார்கள்.

மேலும், ஜே.வி.பி. தலைவர்கள் கொல்லப்பட்டமை, பாசிசத்தின் ஆபத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை. பாசிச இயக்கங்கள் 'கவர்ச்சிமிக்க' தலைவர்களின் விளைபொருளல்ல, மாறாக குட்டி முதலாளித்துவ பிரிவினரை வெறித்தனத்திற்குள் தள்ளுகின்ற, முதலாளித்துவத்தின் பாரிய சமூக முரண்பாடுகளின் விளைவாகும். இந்த சமூக முரண்பாடுகள் பாட்டாளி வர்க்கப் புரட்சி மூலம் தீர்க்கப்படாவிட்டால், அவை பாசிசத்தின் அடிப்படையிலேயே தீர்க்கப்படும். ஜே.வி.பி.க்கு அடி விழுந்துள்ள நிலையில், விஜேவீரவின் இடத்தைப் பிடிக்க மற்றவர்கள் முன்வருவார்கள். இதற்கிடையில், பாசிச இயக்கத்தின் எச்சங்களை தனது போனபார்ட்டிச ஆட்சியின் கீழ் கொண்டு வருவதற்கு பிரேமதாச முயற்சிக்கிறார்.

இந்த நிலைமைகளின் கீழ், இலங்கை தொழிலாள வர்க்கம் ஐக்கிய முன்னணிக்கான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் அழைப்பிற்கு செவிசாய்ப்பதும் இரத்தக்களரி பிரேமதாச ஆட்சிக்கு எதிராக அதன் பெரும் பலத்தை அணிதிரட்டுவதும் முன்னெப்போதையும் விட மிகவும் அவசியமானதாகும்.

Loading