மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
விக்கிலீக்ஸ் நிறுவனரான ஜூலியன் அசான்ஜ் செவ்வாயன்று பிரான்சின் ஸ்ட்ராஸ்பேர்க்கில் ஐரோப்பிய கவுன்சிலின் நாடாளுமன்ற சபையின் (PACE) 90 நிமிட அமர்வின் போது ஒரு சக்திவாய்ந்த உரையை வழங்கினார். அமெரிக்காவும் பிரிட்டனும் தனக்கு எதிராக 14 ஆண்டுகள் நீதித்துறைக்கு புறம்பான துன்புறுத்தல், சட்ட நடவடிக்கை மற்றும் சிறைவாசம் அனுபவித்ததையும், அத்துடன் உலகெங்கிலும் உள்ள ஊடக சுதந்திரத்தில் அதன் கொடூரமான விளைவுகளையும் அவர் விவரித்தார்.
ஐரோப்பிய கவுன்சிலின் நாடாளுமன்ற சபை (PACE) முன் நேரில் ஆஜராக அசான்ஜ் ஆஸ்திரேலியாவில் இருந்து பயணித்திருந்தார். அவர் தனது மனைவி ஸ்டெல்லா (Stella) மற்றும் விக்கிலீக்ஸ் (WikiLeaks) தலைமை ஆசிரியர் கிறிஸ்டின் ஹ்ராஃப்சன் (Kristinn Hrafnsson) ஆகியோருடன் அமர்ந்திருந்தார். அமெரிக்க நீதித்துறையுடனான ஒரு மனு உடன்படிக்கைக்குப் பின்னர் நான்கு மாதங்களுக்கு முன்னர் பெல்மார்ஷ் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் அசான்ஜ் ஆற்றிய முதல் பொது உரை இதுவாகும்.
இந்த உடன்படிக்கை குறித்து அசான்ஜ் கூறுகையில், இரகசிய ஆவணங்களைப் பெறுவதற்கும் வெளியிடுவதற்கும் அமெரிக்க இராணுவ உளவுத்துறை ஆய்வாளர் செல்சியா மேனிங்குடன் சதி செய்ததாக அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார், இந்த உடன்படிக்கை குறித்து அசான்ஜ் கூறுகையில்: “பல ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டு, பயனுள்ள தீர்வு எதுவும் இல்லாமல் 175 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பின்னர் நான் இறுதியாக அடைய முடியாத நீதிக்கு பதிலாக சுதந்திரத்தைத் தேர்ந்தெடுத்தேன்.” அவர் இவ்வாறு வலியுறுத்தினார்: “இந்த அமைப்புமுறையானது சரியாக செயல்பட்டதால், நான் இன்று சுதந்திரமாக இருக்கவில்லை, மாறாக பல ஆண்டுகள் சிறைவாசத்திற்குப் பிறகு நான் இன்று சுதந்திரமாக இருக்கிறேன், ஏனெனில் நான் பத்திரிகைத்துறையில் ஈடுபட்டதற்காக குற்றவாளி என ஒப்புக்கொண்டேன்.”
செயற்பாட்டாளர்கள், குடிமக்கள், சட்ட மற்றும் மருத்துவத்துறை நிபுணர்கள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் முன்னெடுத்த தனது விடுதலைக்கான முன்னெப்போதும் இல்லாத உலகளாவிய பிரச்சாரம் இல்லாமல், “நான் ஒருபோதும் வெளி உலகைக் கண்டிருக்க மாட்டேன்” என்று அவர் கூறினார்.
அசான்ஜ், தனது தடுப்புக்காவல் மற்றும் தண்டனை குறித்து சிறப்பாக கூட்டப்பட்ட நாடாளுமன்ற அமர்வில் சமூகமளித்திருந்தார். ஐரோப்பிய கவுன்சிலின் மனித உரிமைப் பாதுகாவலர்களின் நிலைமை குறித்த பொதுப் பொறுப்பாளரும், பிரேட் கட்சியின் (Pirate Party) உறுப்பினருமான ஐஸ்லாந்து பிரதிநிதி தோர்ஹில்தூர் சுன்னா எவர்ஸ்டோட்டிர் (Thórhildur Sunna Ævarsdóttir) இதை அறிமுகப்படுத்தினார். புதன்கிழமை, ஐரோப்பிய கவுன்சிலின் நாடாளுமன்றச் சபையானது (PACE), “ஜூலியன் அசான்ஜின் தடுப்புக்காவல் மற்றும் தண்டனை, அவற்றின் மனித உரிமைகள் மீதான அச்சுறுத்தும் விளைவுகள்“ என்ற அவரது அறிக்கையை விவாதிக்கவுள்ளது.
விக்கிலீக்ஸிற்கு எதிரான அமெரிக்க தலைமையிலான பழிவாங்கும் நடவடிக்கையால் அசான்ஜிற்கு ஏற்பட்ட தனிப்பட்ட பாதிப்பு தெளிவாக வெளிப்பட்டிருந்தது. அசான்ஜ், ஐரோப்பிய கவுன்சிலின் நாடாளுமன்ற சபையிடம் (PACE) பின்வருமாறு கூறினார்:
ஒரு சிறிய அறையில் பல ஆண்டுகளாக தனிமையில் இருந்த அனுபவத்தை வெளிப்படுத்துவது கடினம். இது ஒருவரின் சுய உணர்வை அகற்றி, வாழ்வின் வெறும் அடிப்படை சாரத்தை மட்டுமே விட்டு வைக்கிறது. உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் உயிருடன் இருப்பதற்கான இடைவிடாத போராட்டத்தைப் பற்றி பேச நான் இன்னும் முழுமையாகத் தயாராக இல்லை. எனது சக கைதிகளின் தூக்கு, கொலை மற்றும் மருத்துவ அலட்சியம் காரணமான இறப்புகள் குறித்தும் நான் இன்னும் பேச இயலவில்லை.
அவர் இவ்வாறு தொடர்ந்து கூறினார்:
தனிமைப்படுத்தல் என்னைப் பெரிதும் பாதித்துள்ளது, அதிலிருந்து மீள நான் முயன்று வருகிறேன். இந்தச் சூழலில் என்னை வெளிப்படுத்துவது ஒரு சவாலாக உள்ளது. எனினும், இந்த நிகழ்வின் முக்கியத்துவமும், கையாளப்பட வேண்டிய விடயங்களின் தீவிரமும் எனது தயக்கங்களை ஒதுக்கி வைத்துவிட்டு உங்களிடம் நேரடியாகப் பேச என்னைத் தூண்டுகின்றன.
அசான்ஜ், தனது வருகையைப் பயன்படுத்தி, உளவுச் சட்டத்தின் (Espionage Act) கீழ் தன் மீதான வழக்கின் விரிவான தாக்கங்கள் குறித்து எச்சரித்தார். இச்சட்டமானது பத்திரிகைத்துறையை குற்றமாக்கி, “நாடு கடந்த ஒடுக்குமுறை” என்ற ஆட்சியை உருவாக்கியுள்ளதாகக் கூறினார். அவரது தண்டனை என்பது, உலகின் எந்த மூலையிலிருந்தாலும், அமெரிக்க அரசாங்கத்தின் போர்க் குற்றங்களையும் பிற மனித உரிமை மீறல்களையும் வெளிப்படுத்தும் எந்தவொரு பத்திரிகையாளரும் குற்றம் சாட்டப்பட்டு, நாடு கடத்தப்பட்டு, சிறையிலடைக்கப்படலாம் என்பதைக் குறிக்கிறது என்றார்.
பிரித்தானியாவில் 14 ஆண்டுகள் சிறைவாசம், வீட்டுக் காவலில் இலண்டனில் உள்ள ஈக்வடோர் தூதரகத்தின் உள்ளேயே தங்கியிருந்தது, பின்னர் சிறை ஆகியவற்றிற்குப் பிறகு, அசான்ஜ் “பெல்மார்ஷ் சிறையின் நிலவறையிலிருந்து” வெளியே வந்ததை விவரித்தார். அவர் கண்டறிந்ததை இவ்வாறு விவரித்தார்: “அந்தக் காலகட்டத்தில் எவ்வளவு தளம் இழக்கப்பட்டுள்ளது... உண்மையை வெளிப்படுத்துவது எவ்வாறு சீர்குலைக்கப்பட்டு, தாக்கப்பட்டு, பலவீனப்படுத்தப்பட்டு, குறைமதிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. நான் அதிக தண்டனையையும், அதிக இரகசியத்தன்மையையும், உண்மையைச் சொல்வதற்கு அதிக பழிவாங்கலையும், அதிக சுய தணிக்கையையும் காண்கிறேன்.”
“அமெரிக்க அரசாங்கம் எனக்கு எதிராக தொடுத்த வழக்கிற்கும், பத்திரிகைத்துறையை சர்வதேச அளவில் குற்றமாக்கி ஒரு முக்கியமான எல்லையைக் கடப்பதும், தற்போது நிலவும் கருத்து சுதந்திரத்தின் அடக்கப்பட்ட நிலைக்கும் இடையே ஒரு தொடர்பை காணாமல் இருப்பது கடினம்.”
அசான்ஜ் கூறியதாவது, விக்கிலீக்ஸானது “போரின் பத்தாயிரக்கணக்கான மறைக்கப்பட்ட உயிரிழப்புகள் மற்றும் பிற கண்ணுக்குத் தெரியாத கொடூரங்கள், படுகொலைத் திட்டங்கள், சட்டவிரோத கடத்தல்கள், சித்திரவதை மற்றும் பெருந்திரளான மக்கள் கண்காணிப்பு திட்டங்கள் பற்றிய உண்மைகளைப் பெற்று வெளியிட்டுள்ளது. இவை எப்போது, எங்கு நடந்தன என்பதை மட்டுமல்லாமல், அடிக்கடி இவற்றின் பின்னணியிலுள்ள கொள்கைகள், ஒப்பந்தங்கள் மற்றும் கட்டமைப்புகளையும் நாங்கள் வெளிப்படுத்தினோம்.”
அவர் இவ்வாறு நினைவுகூர்ந்தார், 2010-ல் வெளியிடப்பட்ட விக்கிலீக்ஸின் “கொலைக்களத்தின் கூட்டுப் படுகொலை” (Collateral Murder) காணொளியானது - அமெரிக்க அப்பாச்சி ஹெலிகாப்டர் குழுவானது “ஈராக்கிய பத்திரிகையாளர்களையும் அவர்களை மீட்க முயன்றவர்களையும் உற்சாகத்துடன் கொன்று சிதறடிப்பதைக்” காட்டியது - அதாவது எவ்வாறு நவீன போரின் உண்மை நிலையை வெளிப்படுத்தி “உலகை அதிர்ச்சியடையச் செய்தது” என்பதையாகும்.
அசான்ஜ், CIA இன் இரகசிய நடவடிக்கைகள் உட்பட, தொடர்ந்து நடந்த துன்புறுத்தல்களை பின்வருமாறு விவரித்தார் :
[CIA இயக்குநர் மைக் பொம்பியோ]வின் வெளிப்படையான உத்தரவின் பேரில், இலண்டனில் உள்ள ஈக்வடோர் தூதரகத்திலிருந்து என்னைக் கடத்தி கொலை செய்வதற்கு CIA திட்டங்களை வகுத்தது என்பதும், எனது ஐரோப்பிய சகாக்களைத் துரத்துவதற்கு அனுமதியளித்தது என்பதும், இதன் மூலம் நாங்கள் திருட்டு, கணினி ஊடுருவல் தாக்குதல்கள் மற்றும் பொய்யான தகவல்களைப் பரப்புதல் ஆகியவற்றிற்கு உள்ளாக்கப்பட்டோம் என்பதும் இப்போது பொதுவெளியில் அறியப்பட்ட உண்மையாக உள்ளது.
“எனது மனைவியும் குழந்தையும் கூட இலக்கு வைக்கப்பட்டனர். என் மனைவியைத் தொடர்ந்து கண்காணிக்க ஒரு CIA உளவாளி நிரந்தரமாக நியமிக்கப்பட்டார். எனது ஆறு மாத வயது மகனின் டயப்பரில் இருந்து DNA ஐ எடுப்பதற்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. இது 30-க்கும் மேற்பட்ட தற்போதைய மற்றும் முன்னாள் அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகளின் சாட்சியமாகும்.”
அவர் முடிவுரையாக பின்வருமாறு கூறினார்:
“CIA ஆனது என்னையும், எனது குடும்பத்தையும், எனது சகாக்களையும் கடுமையான, சட்டத்திற்குப் புறம்பான மற்றும் எல்லை கடந்த வழிமுறைகளைக் கொண்டு இலக்கு வைத்துள்ளது. இது வலிமை மிக்க உளவு அமைப்புகள் எவ்வாறு நாடு கடந்த ஒடுக்குமுறையில் ஈடுபடுகின்றன என்பதற்கான அரிய பார்வையை வழங்குகிறது.”
அதைத் தொடர்ந்த கேள்வி நேரத்தின் போது, அசான்ஜ் எதிர்காலத்திற்கான அவரது திட்டங்கள் குறித்த ஒரு கேள்விக்கு பதிலளித்தார். விக்கிலீக்ஸ் முகங்கொடுத்து வருகின்ற மாறிவரும் அரசியல் சூழல் குறித்து அவர் பின்வருமாறு கூறினார்:
கடந்த காலத்தில் பொது விவாதத்தைத் தூண்டிய முக்கியமான போர் குற்றக் காணொளிகளை நாம் பிரசுரித்திருந்த நிலையில், இன்று, ஒவ்வொரு நாளும், உக்ரேன் மற்றும் காஸா போர்களின் உள்ளடக்கத்தில் பயங்கரங்கள் நேரடியாக ஒளிபரப்பப்படுகின்றன. காஸா மற்றும் உக்ரேனில் நூற்றுக்கணக்கான பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். தண்டனையிலிருந்து விலக்களிப்பு அதிகரித்து வருவதாகத் தெரிகிறது, அதைப் பற்றி நாங்கள் என்ன செய்ய முடியும் என்று எங்களுக்கு இன்னும் தெரியவில்லை.
ஐரோப்பாவில் விக்கிலீக்ஸுக்கு எவ்வளவு குறைவான சட்டப் பாதுகாப்புகள் உள்ளன என்பதை தொடக்கத்திலேயே அவர் அறிந்திருந்தாரா என்று கேட்கப்பட்டபோது, அசான்ஜ் தான் சட்டரீதியான துன்புறுத்தலை எதிர்பார்த்திருந்ததாகவும், அதை எதிர்த்துப் போராடத் தயாராக இருந்ததாகவும் கூறினார். ஆனால் அவர் மேலும் இவ்வாறு கூறினார்:
சட்டத்தை நம்பியது என் அப்பாவித்தனமாக இருந்தது. விஷயங்கள் முற்றிப்போகும்போது, சட்டங்கள் வெறும் காகிதத் துண்டுகளாகிவிடுகின்றன, மேலும் அரசியல் சௌகரியத்திற்காக அவற்றை மறுவிளக்கம் செய்ய முடியும். இவை பொதுவாக ஆளும் வர்க்கத்தால் உருவாக்கப்பட்ட விதிகள், அந்த விதிகள் அவர்கள் செய்ய விரும்புவதற்குப் பொருந்தவில்லை என்றால், அவர்கள் அவற்றை மறுவிளக்கம் செய்கிறார்கள்.
PACE-இன் மற்றொரு பிரதிநிதி, பின்னோக்கிப் பார்க்கும்போது, அசான்ஜ் ஏதேனும் வேறுவிதமாகச் செய்திருப்பாரா என்று கேட்டார். அதற்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்: நான் ஐக்கிய இராச்சியத்தில் சிக்கிக்கொண்டபின், பிரிட்டிஷ் சமூகம் எப்படிப்பட்டது என்பதைப் புரிந்துகொள்ள எனக்கு நேரம் பிடித்தது - யாரை நம்பலாம், யாரை நம்ப முடியாது, அந்தச் சமூகத்தில் நடைபெறும் பல்வேறு வகையான சூழ்ச்சிகள் ஆகியவற்றைப் புரிந்துகொள்ள வேண்டியிருந்தது. நாங்கள் வேறுவிதமாகத் தேர்ந்தெடுத்திருக்கக்கூடிய பல்வேறு ஊடகப் பங்காளிகள் இருந்தனர்.
அசான்ஜின் அப்போதைய ஊடகப் பங்காளிகளாக இருந்தவர்களான, கார்டியன் பத்திரிகை மற்றும் நியூயார்க் டைம்ஸ் தலைமையில், விக்கிலீக்ஸின் அதிர்ச்சியூட்டும் வெளிப்படுத்தல்களை வெளியிட்ட பின்னர் உடனடியாக அசான்ஜுடனான உறவுகளை துண்டித்துக் கொண்டனர். அவர்கள் பென்டகன், CIA மற்றும் பிரிட்டிஷ் அரசுடன் இணைந்து அசான்ஜை அழிப்பதை நோக்கமாகக் கொண்ட பத்தாண்டு கால அவதூறுப் பிரச்சாரத்தில் சதி செய்தனர். ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவின் ஏகாதிபத்திய சக்திகளால் ஆயுதபாணியாக்கப்பட்டு, நிதியளிக்கப்பட்டு மற்றும் இயக்கப்பட்டு, காஸாவிலும் அதற்கு அப்பாலும் பத்திரிகையாளர்கள் மீதான துல்லியமாக இலக்கு வைக்கப்பட்ட படுகொலைகள் மற்றும் அரசு பயங்கரவாதம் ஆகியவற்றின் “அச்சுறுத்தும் சூழலுக்கு” அவை நேரடியாகப் பங்களிப்பு செய்துள்ளன.